Episode – 37
குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்து போகும் வரையிலும் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லாது அவர்களது வாழ்க்கை சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது.
கோடீஸ்வரன் கூட, “இவங்கள நாம பேசாம இப்படியே விட்டுடலாமா? தொல்லை இல்லாம தான் இருக்காங்க. எனக்கும் பாதிப்பு ஒண்ணும் நடக்கலயே….” என்று பலமுறை யோசிக்கும் அளவுக்கு அவரது தொழிலில் எந்த விதமான மாற்றங்களும், இறக்கங்களும் ஏற்படாது சீராக சென்று கொண்டு இருந்தது.
தீரன் வேறு ஆதியுடன் அட்டாச் ஆக இருப்பதைக் கண்டு சற்று யோசித்தவர் தீரன் தனக்கு முக்கியம் என்பதால் ஆதியின் பக்கம் பெரிதாக போகாது அமைதி காத்தார்.
இப்படி இருக்கும் பொழுது தான் அவருக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது.
ஆம் அவர் நாடாத்திக் கொண்டு இருந்த தொழில்களில் ஒன்று மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து இருந்தது.
அதுவும் வெறும் ஒன்று அல்லது இரண்டு கோடிகள் அல்ல.
பல கோடிகளை அந்தத் தொழிலில் அவர் போட்டு இருக்க அத்தனையுமே காணாமல் போகும் சூழ்நிலை தான் வந்து இருந்தது.
அந்த செய்தி காதுக்கு வந்து சேர்ந்ததும்,
“ஓஹ் ஷிட்….” என தலையில் கை வைத்து, இடிந்து போய் உட்கார்ந்து கொண்டவருக்கு முதலில் மனக்கண்ணில் தோன்றியது என்னவோ ஆதியின் உருவமும், அவரது மனைவியின் உருவமும் தான்.
உண்மையிலேயே அவரது தோல்விக்கு காரணம் என்ன என்றால் அவரது அகலக்கால் வைக்கும் பழக்கம் தான்.
ஒரு தொழிலில் அல்லாது அனைத்து தொழில்களிலும் பணத்தைப் போட்டு, பணத்தை பெருக்க வேண்டும் என்று எண்ணியவர்,
அவற்றை சரியாக கவனிக்காது போனதன் விளைவு தான் இந்த பெரும் நஷ்டத்திற்கு காரணம்.
ஆனால் பழி விழுந்தது என்னவோ எதுவுமே அறியாத அந்தப் பச்சிளம் பாலகன் ஆதியின் மீது தான்.
நஷ்டத்திற்கான காரணத்தை தேடாது, காரணத்தை தானே உருவாக்கி ஆதியின் மீது பழியைப் போட்டவர், அதே கோபத்துடன் நேரடியாக வீடு நோக்கி சென்று, நடு ஹாலில் நின்று மனைவியின் பெயரைக் கூறி கத்தி அழைத்தார்.
அவர் வீட்டுக்கு வருவதே அரிதாக இருந்த நேரத்தில் இப்படி நடு ஹாலில், வந்து நின்று கத்தவும் சிவகாமி அம்மாவும் பயந்து போய்,
“என்ன பிரச்சனை?, எதுக்கு இப்படி கத்துறார்?” என எண்ணிக் கொண்டு ஹாலுக்கு வந்து சேர்ந்தார்.
அமைதியாக வந்து நின்றவரைக் கண்டு பல்லைக் கடித்தவர்,
“உன்னால, எனக்கு இன்னைக்கு எவ்வளவு நட்டம் தெரியுமாடி?” என பேச ஆரம்பித்து,
சிவகாமி அம்மாவை அனைவருக்கு முன்பாகவும் அவமானப்படுத்தும் வகையில் கண்டபடி பேசத் தொடங்கினார்.
அதுவரை காலமும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் பேசிக் கொள்வது, கத்துவது…. முழுவதும் தமது ரூமிற்குள் தான்.
ஆனால் இன்று அதைக் கூட மறந்து நடு ஹாலில் வைத்து,
தாலி கட்டிய மனைவி என்றும் பார்க்காது,
நோகடிக்கும் வார்த்தைகளாலும், கெட்ட வார்த்தைகளாலும் பேசியவரைக் கண்டு எதுவும் கூறாது அமைதி காத்தார் சிவகாமி அம்மா.
அவராலும் வேறு என்ன தான் செய்ய முடியும்?
தலை குனிந்து நின்றவர் அமைதியாகவே கணவனின் பேச்சுக்களை வாங்கிக் கொண்டார்.
தாயை இப்படி கேவலமாக பேசுவதைக் கண்டு தீரனின் உள்ளம் கொதித்தாலும் தாயின் கட்டளைக்கு இணங்க,
அமைதியாக கைகளை மடக்கியபடி நின்று கொண்டு இருந்தான்.
சிவகாமி அம்மாவை பேசி முடித்த கோடீஸ்வரன்,
அடுத்ததாக, “நீ பெத்து வச்சிருக்கீயே இரண்டாவதா ஒன்னு….” என ஆரம்பித்து ஆதியைப் பற்றி கேவலமாக பேச ஆரம்பித்தார்.
ஒன்றுமே அறியாத ஒரு வயதுக் குழந்தையை பேசவும்,
அதுவரையும் பொறுமையாக நின்று இருந்த சிவகாமி அம்மா,
அதற்கு மேலும் பொறுக்க முடியாது, ஒரு விரலை தனது கணவனை நோக்கி நீட்டியவர்,
“போதும் இதுக்கு மேல என்னோட பிள்ளய பத்தி ஒரு வார்த்தை நீங்க பேசக்கூடாது. உங்களோட தொழில்ல நஷ்டம்னா அதுக்கு முழுக்க முழுக்க நீங்க தான் காரணமே தவிர என்னோட பிள்ளை இல்லை. அவன பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல. பேசவும் கூடாது.” என முதல் முறை வெடித்து தள்ளினார் அவர்.
சாது மிரண்டால் காடு தாங்காது என்பதற்கு சிறந்த உதாரணமாக கணவனின் முன்பாக நின்று கொண்டு இருந்தார் சிவகாமி அம்மா.
அவரின் இந்த புது அவதாரத்தில் மொத்தமாய் அதிர்ந்து போய் நின்று விட்டார் கோடீஸ்வரன்.
கல்யாணமாகி இத்தனை நாட்களில், மனைவி இப்படி கோபப்பட்டு பார்த்தே இராதவருக்கு முதல் முறை மனைவியின் கோபம் சற்று அச்சத்தை விளைவித்தது என்னவோ உண்மைதான்.
ஒரு பெண்மணி மனைவி என்கிற ரீதியில் பொறுமை காத்தாலும், தாய் என்கிற ரீதியில் பொறுமை காக்க மாட்டாள் அல்லவா.
எப்போதும் தனது பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னிலையில் வந்து நிற்பது தாய் அன்றி வேறு யார் ?, முதலில் பிள்ளைகளுக்காக துடிக்கும் மனம் தாய் மனம் அன்றி வேறு ஏது?
அந்த வகையில், தான் அடக்கி வைத்த கோபம் அனைத்தையும் சேர்த்து பொங்கி விட்டார் சிவகாமி அம்மா.
ஒரு கணம் அவரது கோபத்தில் தயங்கி நின்ற கோடீஸ்வரன்,
மறுகணம், “யார எதிர்த்துப் பேசுறாய் நீ?” என கத்திக் கொண்டு, சிவகாமி அம்மாவை நோக்கி அடிக்க கையை நீட்டினார்.
அவ்வளவு நேரமும், அவருக்கு, தனது மனைவியை அவமானப்படுத்தும் போது வேலைக்காரர்கள் சுத்தி வர இருப்பது தெரியவில்லை.
தன்னை அவர் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசியதும் தான்,
சுற்றி வர இருந்தவர்களும், அவமானமும் பற்றிப் புரிந்தது அவருக்கு.
நீட்டிய அவரது கை சிவகாமி அம்மாவின் கன்னத்தை தீண்டும் முன்பாகவே அவரது கையை தடுத்துப் பிடித்திருந்தான் தீரன்.
எப்போதும் தாய்க்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு வந்து தூணாய் தாங்கும் அன்பான புதல்வன் அல்லவா அவன்.
இப்பொழுதும், தனது தந்தையால் தாய் காயப் பட்டு விடக்கூடாது என ஓடி வந்து தாங்கிப் பிடித்தவன்,
“அம்மா பேசினது எல்லாமே சரிதான். அம்மா மேல உங்க கை படக் கூடாது அப்படி பட்டுச்சு நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” என பெரிய மனிதன் போல பேசினான்.
அவனின் செய்கையைக் கண்டு கோடீஸ்வரனுக்கு கோபம் வந்தாலும் அவன் தங்க முட்டை இடும் வாத்து என்பதால் அமைதி காத்தார் அவர்.
ஒருவாறு, அடுத்தடுத்த நொடிகளுக்குள் தன்னை சமன் செய்து கொண்டவர்,
ஒரு கணம் கண்களை மூடித் திறந்தபடி, “உங்க அம்மாவ நான் அடிக்கலப்பா.” என பல்லைக் கடித்துக் கொண்டு கூறினார்.
அடுத்த நொடியே சிவகாமி அம்மாவையும், அங்கு சற்று தள்ளி நின்று விளையாடிக் கொண்டிருந்த ஆதியையும் நோக்கி அனல்ப் பார்வை ஒன்றை வீசி விட்டு, கட கடவென வெளியேறி சென்றார் அவர்.
சென்றவர் நேராக போய் நின்றது என்னவோ தனது ஆஸ்தான ஜோசியரிடம் தான்.
அங்கு சென்றவர் நேரடியாக ஜோசியரைப் பார்த்து கேட்ட கேள்வி,
“எப்போ என்னோட இரண்டாவது மகனையும், மனைவியையும் போட்டுத் தள்ளலாம்னு சொல்லுங்க.” என்பது தான்.
அவரின் கேள்வியில் ஜோசியரே ஒருகணம் ஜெர்க்காகி விட்டார்.
“இவர் என்ன பகோடா சாப்பிடுறது போல பாட கட்டுறதுக்கு இவ்வளவு ஆர்வமா இருக்கார்?, ரொம்ப டேஞ்சரான ஆளு தான்.” என யோசித்தவர்,
“ஒரு நிமிஷம் பொறுங்க.” என கூறி விட்டு,
சோழியை அப்படியும் இப்படியும் நாலு தரம் உருட்டிப் பார்த்து விட்டு, விரல்களை அப்படியும் இப்படியும் பத்து தரம் மடக்கிப் பார்த்து விட்டு,
“ஓகே இப்போதைக்கு ஒண்ணுமே செய்ய முடியாது மிஸ்டர் கோடீஸ்வரன். அப்படி ஏதும் செய்தா…. உங்களுக்கு இன்னும் ஆபத்து அதிகமாகுமே தவிர குறையாது. உங்க ரெண்டாவது மகனுக்கு ஆறு வயசு ஆகும் போது தான் உங்களுக்கு இருக்கிற கண்டம் டோட்டலா விலகும். அப்ப நீங்க உங்களுடைய மனைவியையும், மகனையும் தாராளமா ஏதும் செய்து கொள்ளலாம்.” என கூறினார்.
“ஓஹ்…. அவ்வளவு நாள் இருக்கா?” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்ட கோடீஸ்வரன்,
அங்குமிங்கும் நடை பயின்று விட்டு,
“சரி, இனி எனக்கு இங்க வேலை இல்லை. நான் போயிட்டு வரேன்.” என கடுமையாக கூறிவிட்டு தனது சொகுசு பங்களா நோக்கி பயணத்தை ஆரம்பித்தார் அவர்.
அங்கே சென்று மது, மாது…. என குதூகலமாக இருந்து தனது அங்கலாய்க்கும் மனதை ஆற்றுப்படுத்தியவர்,
அதற்குப் பிறகு அங்கிருந்த பால்கனியில் நின்று கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்தவாறு,
“என்னோட மகனுக்கும், அருமைப் பொண்டாட்டிக்கும், நான் தான் எமன். அடுத்த அஞ்சு வருஷமும் பல்ல கடிச்சுக் கொண்டு இருப்பம். அதுக்கப்புறம் இரண்டு பேருக்கும் இருக்கு.” என முணுமுணுத்தவாறு பால்கனிக் கம்பியில் ஓங்கி கையால் அடித்துக் கொண்டார்.
“இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா?” என்கிற அளவுக்கு இருந்தது அவரது நடவடிக்கைகள்.
அதன் பிறகு வந்த நாட்களில் வீட்டிற்கு செல்வதை முற்று முழுதாக குறைத்துக் கொண்டவரது நாட்கள் கழிந்தது என்னவோ அவரது சொகுசு பங்களாவில் தான்.
அவருக்கு வேண்டிய சுகங்கள், சொகுசு யாவும் அங்கேயே தேவைக்கு அதிகமாக கிடைப்பதால் கூடுதலான நேரம் அங்கேயே செலவிட்டவர் தொழில்களை கூட பெரிதாக கவனிக்க செல்லவில்லை.
இதில் இன்னும் ஒரு உண்மையான விடயம் மறைந்து இருக்கின்றது.
அவருக்கே தெரியாது அவருடன் கூடவே இருக்கும் பெண்கள் அனைவரும் அவரது சொத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களுடன் இருப்பது அவரது நஷ்டத்தை இன்னுமே அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது.
ஆனால் அதனைப் புரிந்து கொள்ளாது முட்டாளாக சுகபோக வாழ்க்கையில் திளைத்துக் கொண்டு இருந்தார் மிஸ்டர் கோடீஸ்வரன்.
அடுத்தடுத்த வருடங்களில் அவரது தொழில்களில் மேலும் நஷ்டங்கள் அதிகமாக வரத் தொடங்கியது.
ஒவ்வொரு மாதமும் கணக்குப் பார்க்கும் போது நஷ்டக் கணக்குதான் அதிகரித்துக் கொண்டு சென்றதே தவிர லாபக் கணக்கில் பெரிதாக மாற்றங்கள் எதுவுமே இருக்கவில்லை.
சரிவு தான் தொடர்ந்து கொண்டு இருந்தது.
செய்யும் தொழிலில் பக்தி, நேர்மை, கவனம் இல்லாது போனால் ஏறு முகம் எப்படி வரும்?,
இறங்கு முகம் தான் வரும். அப்போதும் அதற்கான காரணத்தை அலசி ஆராயாது நேரடியாக மகனின் மீது தூக்கி அந்தப் பழியைப் போட்டவர் மேலும் மேலும் தனக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.
நாட்கள் யாருக்கும் காத்திருக்காது உருண்டோட, ஆதிக்கு ஐந்து வயது நடந்து கொண்டிருக்கும் காலமும் தீரனுக்கு பதின் மூன்று வயது நடந்து கொண்டிருக்கும் காலமும் வந்து சேர்ந்தது.
அந்தக் காலம் தான், அனைவரின் வாழ்க்கையில் கொடும் காலமாக வந்தும் சேர்ந்தது.
கோடீஸ்வரன் தன் குடும்பத்தை வீழ்த்த போட்ட திட்டம் தான் என்ன?
அவரின் கொடும் செய்கைகளால் எப்படி தீரன் குடும்பம் மற்றும் தமயந்தி குடும்பம் உருக் குலைந்து போனது?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் அடுத்த எபி வரும் மக்காஸ்….
லேட் எபிக்கு மன்னிச்சு 💖💖💖
Kodeshwaran ivvalavu kiduramanavana irukkaann