அந்த கல்லூரி வாசலில் தன் புல்லட்டில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் உதிரன்எழிலமுதன். யூனிபார்மில் சார் செம்ம மாஸ்ஸா கைகட்டி பைக்கில் சாய்ந்து நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் நின்ற அழகைக் கண்ட எந்த பெண்ணும் அவனை பார்க்காமல் செல்ல மாட்டாள். ஆனால் இந்த குந்தவைக்கு மட்டும் ஏன் தான் அவனை பிடிக்கவில்லையோ. குந்தவை தன் தோழி பானுமதியுடன் வெளியே வந்தாள். அது ஒரு கல்வியியல் கல்லூரி குந்தவை அங்கு பி.எட். படித்துக் கொண்டிருந்தாள்.
யூனிபார்ம் புடவை அணிந்து வந்து கொண்டிருந்த தன் வருங்கால மனைவியை சைலண்ட்டா சைட் அடித்துக் கொண்டிருந்தார் நம் நாயகன் காக்கிச் சட்டை போட்ட மன்மதனாக. அவனை முறைத்து விட்டு முகத்தை வேறுபுறம் திருப்பி பஸ் ஸ்டாப்பிற்கு நடையை கட்டினாள் நம் நாயகி குந்தவைதேவி. குந்தவி உன் ஆளு செம்ம டி என்ற பானுவை முறைத்தவள் அவன் ஒன்றும் என் ஆளு கிடையாது வாயை மூடு என்றாள். என்ன மச்சி இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் இப்படி சொல்ற என்ற பானுமதியிடம் கல்யாணம் நடந்தால் தானே வேலையைப் பாரு என்ற குந்தவை பஸ்ஸிற்காக காத்திருக்க அவள் முன்பு தன் பைக்கை நிறுத்தினான் உதிரன். அவள் கண்டு கொள்ளாமல் நிற்கவும் கடுப்பானவன் இவளை என்ன செய்றது என்று நினைத்துக் கொண்டு குந்தவி இப்போ வரப்போறியா இல்லையா என்றான். அவள் அவனை கண்டு கொள்ளாமல் இருக்கவும் தன் மாமா வாசுதேவனுக்கு போன் செய்தான்.
சொல்லுங்க மாப்பிள்ளை என்ற வாசுதேவனிடம் மாமா வேலை முடிச்சுட்டு குந்தவி காலேஜ் வழியா வந்தேன். அவளை வெளியே அழைச்சுட்டு போகலாம்னு பார்த்தேன். உங்க பர்மிசன் இல்லாமல் வர மாட்டேன்னு சொன்னாள் அதான் என்றான் உதிரன். சரி மாப்பிள்ளை நான் குந்தவிகிட்ட பேசுறேன் என்றவர் போனை வைத்தார்.
குந்தவையின் போன் இசைக்க அப்பா என்று வரவும் உதிரனை முறைத்துக் கொண்டே போனை அட்டன் செய்தாள். சொல்லுங்க அப்பா என்றவளிடம் மாப்பிள்ளை கூட வெளியில் போயிட்டு வாமா என்றார். அப்பா எனக்கு அசைன்மென்ட் எழுதனும் என்றவளிடம் அதெல்லாம் அப்பறம் எழுதலாம் அப்பா சொல்றதைக் கேளு என்ற வாசுதேவனிடம் சரிங்கப்பா என்றவள் போனை வைத்தாள்.
எதிரே கூலிங்க்ளாஸ் அணிந்து நின்ற காக்கியை முறைத்துக்கொண்டே வந்து அவனது பைக்கில் அமர்ந்தாள். என்ன குந்தவி நான் கூப்பிட்டதுமே வந்திருக்கலாமே என்றவனை முறைத்தவள் அமைதியாக இருக்க அவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
என் மேல ஏன்டி உனக்கு இவ்வளவு கோபம் என்றவனிடம் எனக்கு போலீஸ்னாலே பிடிக்காது போதுமா என்றாள் . அதுதான் ஏன் என்றவனிடம் உங்களால எனக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை கொடுக்கவே முடியாது எப்ப பாரு டியூட்டி டியூட்டினு ஓடனும். நான் ஆசைப்பட்ட நேரம் ஆசைப்பட்ட இடத்துக்கு அழைச்சுட்டு போக முடியாது . குறிப்பா என் கூட வெளியில் வரும் போது இப்படி காக்கி யூனிபார்ம் போட்டுட்டு வருவது பிடிக்காது. பார்மல் ட்ரஸ் போட்டு என்னை வெளியில் கூட்டிட்டு போகனும். இப்ப கூட ஒன் அவர் பர்மிசன் போட்டு வந்திருப்பிங்க அப்படி இல்லையா என்கூட வெளியில் சுத்திட்டு நைட் டியூட்டிக்கு போவிங்க எனக்கு இது பிடிக்கலை. எனக்கு புருசனா வருகிறவன் ஒரு நார்மல் லைப் வாழனும். ஒரு டீச்சர், பேங்க்ஸ்டாப், இஞ்சினியர் இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் வேண்டும் ஒரு இன்ஸ்பெக்டர் வேண்டாம் என்றாள்.
என்ன பண்ண சொல்ற உன் தலையெழுத்து இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை தான் கிடைச்சுருக்கான் என்ற உதிரனிடம் அதான் சொல்றேன் அப்பா கிட்ட சொல்லி நம்ம கல்யாணத்தை நிறுத்துங்க என்றாள். முட்டாளா நீ இல்லை என்னை பார்க்கும் போது கேனையன் மாதிரி இருக்கா கொன்னுருவேன் ஒழுங்கா மணமேடைக்கு வந்து நான் கட்டுற தாலியை கழுத்தில் வாங்கிக்கோ என்றவன் ஏன்டி இந்த யூனிமார்ம்க்குனு ஒரு மரியாதை இருக்கு அது உனக்கு புரியாதா என்றாள். ஹான் இருக்கு என்கவுண்டர் அப்படிங்கிற பேர்ல கொலை பண்ணுற கொலைகாரன் அதனால பயம் இருக்கு அதுக்கு மரியாதைனு அர்த்தம் சொன்னா எனக்கு புரியலை என்றாள். அப்போ உன்னோட பிரச்சனை நான் பண்ணுன அந்த இரண்டு என்கவுண்டர் தான் என்றான். ஆமாம் நீங்க ஒரு கொலைகாரன் உங்களை எப்படி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும் என் கண்ணு முன்னாடியே ஒருத்தனை சுட்டுக் கொன்னிங்களே என்றாள். அவன் ஒரு ரவுடி ,கொலைகாரன் அவனை கொலை பண்ணுனதில் தப்பு என்னடி என்றவனிடம் கடவுள் படைத்த உயிரை எடுக்க அந்த கொலைகாரனுக்கும் உரிமை இல்லை உங்களுக்கும் உரிமை இல்லை என்றாள்.
கடவுளே மனித அவதாரம் எடுத்து வதம் பண்ணிருக்கே அதற்கு என்ன சொல்லுற என்றனிடம் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். சரி விடு வா இறங்கு என்றவன் அவள் கையைப் பிடித்து கடற்கரைக்கு அழைத்து வந்தான்.
இங்கே எதற்காக வந்தோம் என்றவளிடம் சினிமா பார்க்க கேட்கிறாள் பாரு கேள்வி சும்மா காத்து வாங்க தான் வந்தோம் என்றவன் ஓரிடத்தில் அமர்ந்து அவளையும் தன்னருகே அமர வைத்தான். அவள் கடுகடுவென இருக்க ஐ லவ் யூ குந்தவி என்றவனிடம் ஐ ஹேட் யூ எழில் என்றாள். ஐ ஹேட் யூ னு சொல்லுற மகாராணி எழில்னு செல்லமா கூப்பிட்டால் என்ன அர்த்தம். அப்போ உன் மனசுக்குள்ள நான் இருக்கேனு தானே அர்த்தம் என்றான். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றவளிடம் இரு சுண்டல் வாங்கிட்டு வரேன் என்று எழுந்தவனிடம் ப்ளீஸ் வேண்டாம் வீட்டுக்கு போகலாம் என்றாள். ஏன் குந்தவி எனக்கு இருக்கிற இந்த சின்ன சின்ன சந்தோசத்தை கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிற இன்னைக்கு தான் எனக்கு வொர்க் சீக்கிரம் முடிஞ்சது வீட்டுக்கு போயி பார்மல் ட்ரஸ் போட்டுட்டு வருவதற்குள்ள நீ காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போயிருவ அதான் யூனிபார்மோடவே வந்துட்டேன் இதை கூட புரிஞ்சுக்க மாட்டியா குந்தவி என்றான். அவள் அமைதியாக நிற்க சரி வா வீட்டுக்கு போகலாம் என்றவனிடம் உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது எழில் நமக்குள்ள சின்ன சின்ன விசயம் கூட ஒத்துப் போக மாட்டேங்குது நாம எப்படி வாழ்க்கை முழுக்க சந்தோசமா இருக்க முடியும் என்றாள் குந்தவை. ஏன்டி முடியாது உனக்காக நான் எதையும் விட்டுக் கொடுப்பேன் குந்தவி என்றான்.
சரி வா உன்னை வீட்டில் விட்டுடுறேன் என்றவன் கிளம்ப அவன் பின்னே சென்றாள். அவளது வீட்டு வாசலில் அவளை இறக்கி விட்டவன் கிளம்ப பார்க்க உதிரன் என்று தேவகி அழைக்க வேறு வழி இல்லாமல் வீட்டிற்குள் சென்றான் உதிரன்.
அவள் நேராக தன்னறைக்கு செல்ல உதிரன் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தான். என்ன குந்தவி மாப்பிள்ளை ஹாலில் இருக்காரு நீ பாட்டுக்கு உன் அறைக்கு போற என்றார் தேவகி. எழில் ஐந்து நிமிடம் ட்ரஸ் மாத்திட்டு வரேன் என்று கூறி விட்டு அவள் சென்றாள். அவள் வந்த பிறகு இருவருக்கும் காபி, ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு மாடியில் உள்ள பால்கனிக்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
நான் கிளம்புறேன் என்றவனிடம் ஐயம் சாரி எனக்கு புரியுது நீங்க என்னை விரும்புறிங்க எனக்கும் உங்களை பிடிக்கும் ஆனால் இந்த வேலை எனக்கு பிடிக்கலை என்றாள். குந்தவி உனக்காக இந்த வேலையை விட மாட்டேன். அதே சமயத்தில் உன்னையவும் விட மாட்டேன் எனக்கு நீயும் வேண்டும் வேலையும் வேண்டும் என்றவன் அவளை இழுத்து சுவற்றில் தள்ளி அவளிதழில் தன் முத்திரையை பதித்தான். அவள் அவனது சட்டையைப் பிடித்திருக்க அவளை விலகியவன் என்னை பிடிக்கலைனா இந்நேரம் என்னை தள்ளி விட்டுருப்ப இப்படி என் சட்டையை பிடிச்சுருக்க மாட்ட இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் மறந்திராதே பொண்டாட்டி என்று கூறி கண்ணடித்து விட்டு கிளம்பினான்.
அவள் தான் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள். என்ன அக்கா யோசனை என்ற சங்கவியிடம் எழில் பத்தி தான் என்றாள். என்னை காக்கி உன்னை ஏதும் கலாட்டா பண்ணிட்டாரா சொல்லு கேஸ் போட்டுருவோம் என்ற சங்கவியிடம் போடி பைத்தியம் என்று கூறி விட்டு எழுந்து சென்றாள்.
அவன் சொன்னபடி இரண்டு நாட்களில் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மணமேடைக்கு வந்து அமர்ந்த பொழுதிலுமே அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். என்னடி முகம் ரொம்ப ப்ரைட்டா இருக்கு என்று வம்பு செய்த உதிரனிடம் பதில் பேசாமல் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவன் சந்தோசமாக அவள் கழுத்தில் தாலி கட்டினான். அவளுக்கு அவனை பிடிக்கும் ஆனால் அவனது வேலை பிடிக்காது அதை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே அது தான் மேடத்துக்கு கோபம்.
திருமணத்திற்கு வந்திருந்த சாம்பவி, அதிரன்புகழினியன் இருவரையும் கண்ட வாசுதேவனுக்கும் , நெடுஞ்செழியனுக்கும் எரிச்சலாக இருந்தது. உறவினர்கள் முன்பு மரியாதையாக இருக்காது என்று அமைதி காத்தனர் இருவரும்.
நம் நாயகி ஹீரோவை வேண்டாம் என்று சொல்வதற்கு இவர்கள் இருவரும் கூட ஒரு காரணம். முதலில் உதிரன், சாம்பவி இருவருக்கும் தான் திருமண ஏற்பாடு நடந்தது. நிச்சயதார்த்தம் அன்று சாம்பவி உதிரனின் தம்பி அதிரனை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றாள். அதில் வாசுதேவன், நெடுஞ்செழியன் இருவருமே நொந்து போய் விட்டனர். வேறு வழி இல்லாமல் அன்றே உதிரன், குந்தவை இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து விட்டனர். அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளைக்கு தன்னை திருமணம் செய்து வைக்க நினைப்பது அவளுக்கு பிடிக்காமல் இருந்தது. எல்லாம் சேர்த்து தான் அம்மணிக்கு இந்த திருமணம் பிடிக்காமல் போனது.
ஆனால் அவளது அப்பா வாசுதேவன் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசி பழக்கம் இல்லாத நாயகி வேறு வழி இல்லாமல் உதிரனை திருமணம் செய்து கொண்டாள்.
திருமணம் முடிந்து மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பால் , பழம் எல்லாம் கொடுக்கும் நிகழ்வு எல்லாம் முடிந்தது.
இரவு சடங்கிற்காக குந்தவையை பானுமதியும், உதிரனின் தங்கை மகிழ்வதனியும் அலங்கரித்தனர். அண்ணி செம்மையா இருக்கிங்க என்ற மகிழ்வதனி கிளம்பிட குந்தவை ஏன்டி முகத்தை தூக்கி வச்சுகிட்டு இருக்க என்றாள் பானுமதி. புரிஞ்சுக்கோ குந்தவை அவருக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்ச வேலை. உனக்காக வேலையை விடச் சொல்றது நியாயமே இல்லை . உனக்கு கல்யாணம் பிடிக்கலைனா உன் அப்பா கிட்ட சொல்லி இருக்கனும் அப்பா மேல பயமா, மரியாதையா அவர் கிட்ட மண்டையை ஆட்டி வச்சுட்டு இப்போ பீல் பண்ணுனா என்ன அர்த்தம் என்றவள் இது தான் உன் வாழ்க்கை வீணாக்கிறாதே என்று கூறினாள். குந்தவை தன் தோழி கூறிய விசயங்களை யோசித்துக் கொண்டே பால் சொம்புடன் கணவனின் அறைக்குள் நுழைந்தாள்.
…..தொடரும்…