எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே!

4.5
(4)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 எபிலாக்

 

ஐந்து வருடங்களின் பின்,

 

ருத்ரனின் வீட்டு‌ போர்டிகோவில் வழுக்கி வந்து தன் மூச்சை நிறுத்தியது அந்த கார். காரிலிருந்து இறங்கி வீட்டு வாயில்படியில் நின்று “நிதி குட்டி” என்று குரல் கொடுத்தார் செல்வன்.

 

பாதி மூடியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு “தாத்தா” என‌ ஓடி வந்த ஐந்து வயது சிறுமியை அள்ளித் தூக்கிக் கொண்டார் செல்வன்.

 

அச்சத்தத்தில் அஞ்சனா, ருத்ரன் மற்றும் சித்ராவும் அவ்விடத்தே ஆஜராகி இருந்தனர்.

 

“தங்கச்சி பாப்பா எங்கடா?” என்று கேட்க, “இறக்கி விடுங்க” அவரது கையிலிருந்து துள்ளி இறங்கி குடுகுடுவென நடக்கத் துவங்கினாள் அவள்.

 

“எங்க போற யாழ்?” மகளின் முழங்கையைப் பற்றி நிறுத்தினான் ருத்ரன்.

 

“விளையாட போறேன். அவரு நிதினு என்னைக் கூப்பிட்டார்னு நெனச்சி ஓடி வந்தேன். தங்கச்சியை தானே தேடி இருக்கார்” கம்மிய குரலில் சொன்னவளின் அருகில் மண்டியிட்டு,

 

“உன்னை தான்டா பேசினேன். பாப்பாவை காணலனு தேடினேன் அதுக்கு கோவிச்சிட்டு போவியா?” அவளின் கன்னத்தைப் பிடித்து ஆட்டினார் செல்வன்.

 

“ஏன்மா எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி பெயர் வெச்சீங்க? யாரைக் கூப்பிடறாங்கனே கண்டுபிடிக்க முடியல” முகத்தை உப்பிக் கொண்டு தாயிடம் வினாத் தொடுத்தாள்.

 

“அதை உன் அப்பா கிட்ட கேளுமா. அவர் தானே வெச்சது?” கணவனை கை காட்டினாள் அஞ்சனா.

 

“நீங்க ரெண்டு பேரும் எப்போவும் சத்தோஷமா ஒற்றுமையா இருக்கனும்னு ஒரு எண்ணத்தில் அப்படி வெச்சேன் யாழ்” அவளைத் தூக்கிக் கொள்ள,

 

கோபமெல்லாம் பறந்து போக‌ தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு தலை சாய்த்துச் சிரித்தாள் ருத்ரன் அஞ்சனா தம்பதியின் மூத்த புத்திரி.

யாழ் எனும்‌ யாழ்நிதி!

 

அதேநேரம் “ப்பா” எனும் அழைப்போடு கைகள் இரண்டையும் விரித்து தன்னையும் தூக்குமாறு தளர்நடை போட்டு வந்தாள்‌ அவனது இரண்டு வயது மகள். ஸ்ரீ! ஸ்ரீநிதி!

 

“மூத்தவளை தூக்கினதும் எங்கே மூக்கு வேர்த்து வரலையேனு நெனச்சேன். அதுக்குள்ள வந்துட்டா” பேத்தியைக் கண்டு சிரித்துக் கொண்டார் சித்ரா.

 

தாயின் கூற்றில் புன்னகைத்து விட்டு “வாடா குட்டிமா” மலர் மொட்டை அள்ளிக் கொண்டான் ருத்ரா.

 

“ஸ்ரீ மா” என்ற அழைப்பில் “தாத்தா” என்று செல்வனிடம் தாவிய பேத்தி அங்குமிங்கும் அலசி ஆராய, “இந்தா பாப்பா” பஞ்சு மிட்டாய் கொடுத்தார்.

 

“ஹய் தாத்தா எனக்கும்” ருத்ரனிடமிருந்து குதித்து இரண்டே கால் பாய்ச்சலில் செல்வனை அடைந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு தனக்குரிய பங்கை உண்ணத் துவங்கினாள் பெரியவள்.

 

“இனிப்பை கண்டா எறும்புங்க மொய்க்கிற மாதிரி தாத்தாவை ஒட்டிட்டு இருக்கிறதை பாரு” வாயில் கை வைத்த சித்ராவின் விழிகள் பேத்திகளின் மீது நேசம் மீதூறப் படிந்தன.

 

“நானே என்‌ அப்பாவை கண்டு பயத்தில் ஓரடி தள்ளி நிற்பேன். ஆனா இதுங்க ரெண்டும் அவர் தலையில் ஏறி மிளகாய் அரைக்கிறாங்க டி” மனைவியின் காதில் கிசுகிசுத்தான் ருத்ரன்.

 

“அவங்க தலையில் ஏறினா நீங்க மாமா மடியில் போய் உட்கார்ந்துக்கங்க. உங்க அப்பா தானே?” அவனைப் போலவே ரகசியக் குரலில் மொழிந்தாள் மாது.

 

“அங்கே என்ன ரகசியம்?” பெரிய மனுஷியாகக் கேட்டாள் யாழ்நிதி.

 

“எனக்கும் அம்மு குட்டிக்கும் நடுவில் ஆயிரம் ரகசியம் இருக்கும். நீ சும்மா இரு” மகளுக்கு அழகு காட்டிய ருத்ரனைப் பார்த்து கழுத்தை வெட்டிக் கொண்டாள் மகள்.

 

செல்வனும் சித்ராவும் இவர்களின் சேட்டையில் புன்னகையுடன் நகர்ந்து விட,

 

தந்தையின் வாயிலிருந்து வந்த பெயரைக் கேட்டு தாயை நினைவு வந்தவளாக “மம்மு குட்டி” என்று அழைத்தாள் ஸ்ரீ.

 

“அம்மா சொல்லு! அம்மு குட்டினு நான் தான் சொல்வேன்” மகளுக்கு இணையான குழந்தைத் தனத்துடன் சண்டையிடும் கணவனைப் பார்க்கையில் அஞ்சனாவுக்கு அவன் மீது காதல்‌‌ மென்மேலும் ஊற்றெடுக்கத் தான் செய்தது.

 

இன்று நேற்றல்ல, அவன் மீது காதல் சுரந்த நாள்‌ முதற்கொண்டு இன்று வரை அக்காதல் வளர் பிறையாக வளர்ந்து வரும் மாயம் அவள்‌‌ அறயாததல்ல.

 

அது அவளது காதல் மன்னனின் மாயக் காதல் அல்லவா?

காதலை, அக்கறையை திகட்டத் திகட்ட தந்து அவளை காதல் ஆழியின் ஆழத்தில் தள்ளிக் கொண்டே செல்பவன் இந்த ருத்ரன் அபய்.

 

கர்ப்பம் தரித்ததை கேட்டதும் கூறியது போல் அவளைக் கண்ணினுள் வைத்துப் பார்த்துக் கொண்டான் அவன். கேட்குமுன் அனைத்தையும் கொண்டு வந்து காலடியில் சமர்ப்பித்தான். அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தான்.

 

இவன் அன்பிற்கு‌ முன் ஒரு போதும் தன்‌ அன்பால் வெற்றி கொள்ள முடியாது என்று நினைத்தவளுக்கு அவன்‌‌ மீதான நேசமும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

 

அன்று தன்னைக் கண்ட நொடி அணைத்து கண்ணீர் துளியொன்றை அவள் மீது தவழ விட்ட ருத்ரன், பிரசவ வலியில் துடிக்கையில் பற்றிக் கொண்ட கையை கண்ணீரால் அபிஷேகம் செய்தான்.

 

அந்த வலியிலும் கூட அவனுக்குத் தன்‌ மீதுள்ள அளவற்ற காதலை எண்ணிப் பூரித்துப் போனாள் ருத்ரனின் ஆருயிர் அம்மு.

 

குழந்தையின் அழுகுரல் கேட்டு அதனைக் கூட கையில் வாங்காமல் தன்னைப் பார்க்க அவன் துடித்த துடிப்பை சித்ரா சொல்லக் கேட்கையில் மெல்லிய விசும்பல் அவளில்.

 

அவளைப் பார்த்து கண்களால் அன்பு பொங்க வருடிய பின்னரே மனம் அமைதியடைந்து தன் உயிர் நீரில் ஜனித்த மகளை வாங்கிக் கொண்டான்.

 

அவளின் ஒவ்வொரு அசைவிலும் மகிழ்ந்து போய் தன்னிடம் சொல்லிச் சிரிக்கும் கணவனை அன்புடன் பார்ப்பாள் அஞ்சனா.

 

எத்தனை குழந்தை பிறந்தாலும் தனக்கு‌ மனைவியே முதல் குழந்தை என்பதை ஸ்ரீ பிறந்த பிறகும் நிரூபித்துக் காட்டினான் அன்பானவன்.

 

ஒரு‌ நாளுக்கு நூற்றுக்கு மேல் “அம்மு குட்டி” என்ற அழைப்பு அவன் வாயில் உதித்து விடும்.

 

“ஓய்ய் அம்மு” சொடக்கிடும் ஓசையில் சிந்தை கலைந்து தன்னவனைப் பார்க்க, “அம்மு குட்டி” என்ற‌ அழைப்பில் மூக்கு விடைக்கத் திரும்பி ஓடி வரும் சிறுவனை அவளிடம் செல்ல விடாது தடுத்தான் ருத்ரன்.

 

“வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா சண்டையை?” மகனிடம் கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் நிதின்.

 

“போடா! உன் பையன் என்னை கடுப்பேற்றவே கிளம்பி வரான்” அவனிடம் குறைப்பட்டுக் கொண்டான் நண்பன்.

 

“அவனுக்கு இந்த காஞ்ச பிஸ்கட்டை மாதிரி வாய் அதிகம் மாமா” ஒரு வயது மகள் நித்யாவை தோளில் போட்டுக் கொண்டு வந்தாள்‌ ஆலியா.

 

“வாங்கண்ணா! வா ஆலி! உட்காருங்க” அவர்களை வரவேற்று அமர வைத்தாள் அஞ்சனா.

 

“அஞ்சு அத்தை” அம்மு குட்டியைக் கைவிட்டு அத்தைக்கு மாறி அவளிடம் ஒட்டிக் கொண்டான் ஆலியா நிதினின் ஐந்து வயதுப் புதல்வன் ஆதிஷ்.

 

“ஆது! விளையாடலாம் வா” என்று யாழ் அழைக்க, “நான் வர மாட்டேன்” முகத்தைத் திருப்பிக் கொண்டான்‌ அவன்.

 

“நீ ஸ்கூல்ல நான் கூப்பிட்டும் வராம அந்த அஷ்வின் கூட போனல்ல. என்னோட பேசாத” கோபத்திற்கான காரணத்தையும் முன்வைத்தான் ஆதிஷ்.

 

இருவரும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படிக்கிறார்கள். ஆதிஷுக்கு யாழ் யாருடனாவது சேர்ந்தால் இப்படித்தான் மூக்கிற்கு மேல் கோபம் வந்து விடும். அவள் வேண்டுமென்றே இவனை கடுப்பேற்ற மற்றவர்களுடன் ஒட்டிக் கொண்டு திரிவாள்.

 

“அவன் பர்த்டேனு ஐஸ்கிரீம் தர கூப்பிட்டான் போனேன்”

 

“அப்போ அவனோடவே பேசிக்க. என்னை விளையாட கூப்பிடாத” மூக்கை சுருக்கினான் சின்னவன்.

 

“இப்படி சொன்னா விட்றுவேனா உன்னை. யார் கூட போனாலும் நீ தான் என் பெஸ்ட்டு ப்ரெண்டு. பந்தா பண்ணாம வாடா” அவன் தோளில் கை போட, சிரித்தவன் அவளோடு சென்றான்.

 

“எப்படி சண்டை போட்டாங்க. இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி போறாங்க” சிரிப்பினூடு கூறினான் நிதின்.

 

“பின்ன ஆலியா நிதின் மாதிரி சண்டையிலேயே தொங்கிட்டு இருப்பாங்களா” அவன் தோளில் அபய் தட்ட, 

 

“நான் இல்லைடா. உன் மாமா பொண்ணு தான் சண்டைக் கோழி.‌ சரியான ராட்சசி” என்றவனை முறைத்துத் தள்ளினாள் ஆலியா.

 

“மறுபடியும் சண்டையா?” தலையில் கை வைத்தாள் அஞ்சனா.

 

“நான் ரெடி தான் வரவானு சண்டை போட பாட்டு பாடிட்டா இருக்கேன். இவன் தான் ஏதாச்சும் பண்ணி என்னை கடுப்பேற்றிட்டு இருக்கான்” கடுகாகப் பொரிந்தாள் ஆலியா.

 

“மாமாவோட ஆபிஸ் போனப்போ ஒரு பொண்ணு கூட சும்மா பேசினேன். நான் யாருன்னு தெரியாம மேக்ஸ் இவ கிட்டயே போய் ஹேண்ட்ஸம் வெர்ரி ஸ்வீட்னு சொல்லிருக்கா. அதுக்கு நான் என்ன செய்வேன்? இவ என் கூட சண்டைக்கு வரா மச்சான்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான் நிதின்.

 

“பார்த்தியா இப்போ கூட அந்தா மேக்கப் போட்ட மொகரக்கட்டைய மேகானு பெயர் சொல்லாம மேக்ஸ் லீக்ஸ்னு கொஞ்சுற” கண்களில் தீயைக் கக்க,

 

“ஆலியா இஸ் ஆன் ஃபயர். எப்படியாச்சும் தண்ணியை ஊத்தி அணைச்சிடு” என்றான் ருத்ரன்.

 

“நான் தண்ணியை ஊத்துறது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ பெற்றோலை ஊத்தி இன்னும் எரிய வெச்சிடாத சாமி” தலைக்கு மேல் கும்பிடு போட்டவனின் செயலில்‌ சிரிப்பு பீறிட்டது நண்பனுக்கு.

 

வெளியில் வேலையாக கிளம்பிய செல்வனைப் பார்த்து “அங்கிள்! ருத்ரா ஸ்டேட்டஸ் வெச்ச போட்டோல கூலிங் க்ளாஸ் போட்டுட்டு செம போஸ் கொடுத்தீங்க” என்று கத்தினான் நிதின்.

 

“ஓஓ தாங்க் யூ நித்தி.‌ என் பேத்தி எடுத்தது. இன்ஸ்டால கூட போடனுமாம்” அவர் மதிப்பாக பார்த்து விட்டுச் செல்ல, 

 

“எதே? இன்ஸ்டாவா? செல்பீ எடுக்க கூப்பிட்டாலே கண்ணால எரிச்சிட்டு போவார். இப்போ எப்படி இந்த மாற்றம்? சித்து கவனிச்சியா நீ? உன்னை விட்டுட்டு வேற பிகரை ஃபேஸ்புக்ல செட் பண்ணிட்டாரோ?” தீவிர மூளைச் சலவையில் ஈடுபட்ட நிதினின் தலையில் நங்கென்று கொட்டினார் சித்ரா.

 

“என் புருஷனை பார்த்தா உனக்கு காமெடி பீஸ் மாதிரி தெரியுதா? கொன்றுவேன் படவா. பிகரும் இல்லை சுகரும் இல்லை. எல்லாம் அவரோட செல்ல பேத்தி யாழ்நிதியால தான். ருத்ரா இவருக்கு கட்டுப்பட்டு இருந்தான். அவன் பொண்ணு அவரையே ஆட்டி வைக்கிறாள். தினமும் இவரை செல்பீ எடுக்கிறேன்னு பண்ணுற அலப்பறை தாங்கலடா” என்று சித்ரா சொல்ல,

 

“அப்போ சிங்கம் சில்வண்டு கிட்ட சிக்கிருச்சு” என்ற நிதினின் கூற்றில்‌ சிரிப்பலை கிளம்பிற்று அங்கே.

 

•••••••••••••

சிறுவர்கள் விளையாட, ருத்ரனின் வீட்டு மொட்டை மாடிக்கு ஆலியாவை இழுத்துக் கொண்டு வந்தான் நிதின்.

 

“எதுக்கு கூட்டிட்டு வந்த?” கடுகடுத்தாள்‌.

 

“சண்டைக்காரி‌. கொஞ்சம் பாசமா தான் பேசேன் டி” 

 

“முடியாது.‌ அந்த மேகி நூடுல்ஸ் கூட பேசிக்கோ”

 

“சரி போறேன்” என்று திரும்பியவனின் கையைப் பிடித்தாள்‌ மனைவி.

 

“சொன்னா போயிடுவியா? போய் தான் பாரேன்” அவள் முறைக்க,

 

“இப்போ நான் போகனுமா இருக்கனுமா?” என்ற கேள்விக்கு, “இரு” என்றாள் சட்டென்று.

 

அவன் அமைதியாக இருக்க அவளும் ஒன்றும் பேசவில்லை.

“ஹேய் தீஞ்ச சோறு” மௌனத் திரையை நிதின் அகற்றி விட,

 

“காஞ்ச பிஸ்கட். என்னடா?” அவன் முகம் பார்த்தவளின் முகத்தில் துளியும் கோபம் இல்லை. மாறாக மென்மையான புன்னகையில் பிரகாசித்தாள்.

 

“இங்கே ஏன் கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா? இந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். உன்னை சந்திச்சது, உன் கூட நட்பா பழகுனது, காதலை உணர்ந்தது, அதை உன் கிட்ட சொன்னது எல்லாமே இங்கே தான்.

 

இதே வீட்டில்‌ முன்னொரு நாள் ‘என் மாமா பொண்ணு ஆலியா’ அப்படினு ருத்ரா உன்னை அறிமுகப்படுத்தி வெச்சான்.‌ இன்னிக்கு என் பொண்டாட்டியா என் பக்கத்தில் இல்லல்ல, எனக்குள்ள மொத்தமா நீ நெறஞ்சு இருக்க ஆலி” அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

 

அவன் சொன்னதைக் கேட்டவளுக்கும் அதே எண்ணம் தான். இந்த நிதின், தன் வாழ்வில் எத்தனை சந்தோஷங்களை பரிசளித்து விட்டான்? அனைத்திற்கும் மேலாக பேசியும் கிண்டலடித்தும் அவளை சிரிப்பு நீங்காமல் பார்த்துக் கொள்கிறான். சண்டையிடுவது அவளாக இருந்தாலும் சமாதானம் செய்வதில் அவன் முந்திக் கொண்டு அன்பால் வென்று விடுகிறான்.

 

அவனையே பார்த்திருந்தவள், “என் வாழ்க்கையில் சாதாரணமா நுழைஞ்ச. இப்போ என் வாழ்வின் அர்த்தம் நீயாக இருக்க. ஐ லவ் யூ நித்தி” அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் ஆலியா.

 

•••••••••••••••••

சூரியன் தன் இளங்கதிர்களை இருள் விலக்க பாரெங்கும் பரப்பி நின்ற‌ நேரமது. யன்னல் சீலையை ஊடறுத்துக் கொண்டு முகத்தில் தெறித்த வெளிச்சத்தை முழுவதுமாக பெற எண்ணி திரைச்சீலையை விலக்கினாள் அஞ்சனா.

 

புது இடத்தில் இளவெயிலின் கதகதப்பு மேனியை ஸ்பரிஷிக்க ஆழமாய் மூச்செடுத்து விடுவித்தாள் மங்கை.

 

ருத்ரன் வந்து நெல்லை கிராமத்தில்‌ நண்பனின் திருமணத்திற்கு செல்வதாகக் கூறவும் மகள்களுக்கு கொண்டாட்டம் தான்.‌ குடும்பத்திற்கே சொல்லி இருந்ததில் சித்ராவையும் அழைத்து வந்திருந்தனர்.

 

திருமண வைபவம் நேற்று முடிந்ததும் இரவாகி விட, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர்.‌ சித்ராவோடு யாழ்நிதி உறங்கியிருந்தாள்.‌ 

 

எழுந்ததும் எங்கோ செல்ல வேண்டும் என்று ஆயத்தமாகுமாறு கூறிச் சென்றிருந்தான் ருத்ரன்.

 

அஞ்சனாவும் ஆயத்தமாகிக் கிளம்ப, ஸ்ரீயையும் தாயிடம் விட்டு விட்டு வந்தான்.

 

“எங்க தான் போக போறோம்?” என்று கேட்டவளுக்கு இதற்கு முன் இந்த ஊரிற்கு தந்தையோடு திருவிழாவிற்காக வந்திருந்த நினைவு வந்தது.

 

வயலுக்கு அழைத்து வந்தான் அவன். இளந்தென்றலில் நெற்கதிர்கள் அசைந்தாடிச் சிரித்தன. பட்சிகள் இரைதேடும் வேட்கையில் வானுயரப் பறக்கும் காட்சி கண்களுக்கு விருந்தளித்தன.

 

“இந்த நேரத்தில் வானம், வயல்னு எல்லாமே அழகா இருக்குல்ல. பார்த்து ரசிச்சிட்டே இருக்கலாம் போல” தேகம் தீண்டும் குளிர் தழுவிய காற்றின் சூழ்ச்சியை உள்ளங்கை உரசலில் உருவான மெல்லிய சூட்டினால் அகற்றிக் கொண்டாள் அஞ்சனா.

 

“ம்ம் ஆமா. எல்லா வயலையும் ரசிக்கலாம். ஆனால் என்னை சென்டிமென்ட்டா டச் பண்ணுன வயல் இது. ஏன் தெரியுமா?” சற்றே நிறுத்தி அவளைப் பார்த்தவன் பேச ஆரம்பித்தான்.

 

“அழகான ஒரு மாலை நேரம், காற்று முகத்தில் உரசும் யன்னலோரம், ஊளையிடும் ரயில், திடீர்னு பார்வையை திருப்பினா பச்சை பசேல்னு வயல். வயலை ரசிக்க திரும்பின என்னை அவளை ரசிக்க வைக்க, அவளுக்காகவே வாழ வைக்க வந்தா ஒரு தேவதை”

 

“இதே வயல் இதே இடத்தில் நின்னு கையை விரிச்சு ரயிலைப் பார்த்து ஒரு வார்த்தையை சொல்லி என்னை காதல் செய்ய வெச்ச தேவதை நீ இப்போ என் பக்கத்தில் இருக்க. இந்த நிமிஷம் உன்னை பார்த்து அதே வார்த்தையை நான் சொல்ல போறேன்” என்றவன், ஏதோ சொல்ல வர”அபய் இங்கேயே வெயிட் பண்ணுங்க” என்று சொல்லி ஓடினாள்.

 

எங்கே செல்கிறாள் என்று யோசனையோடு பார்த்திருந்தான். சிறிது நேரம் கழித்து பின்னாலிருந்து கொலுசொலி அவன் செவியைத் தொட்டது.

 

ஏதோ நினைவுகள் நிழலாட நின்றவன்‌ “மாமா” எனும் அழைப்பில் சடாரென திரும்ப கண்கள் அகலத் திறந்தன. விரிந்த இமைகள் மூட மறுத்தன.

 

அன்று எந்த உடை அணிந்திருந்தாளோ, அதே பாவாடை தாவணியில் சடையை பின்னலிட்டு கொலுசு ராகமிசைக்க ஓடி வந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.

 

பாவாடையை பிடித்திருந்த இரு கைகளையும் மேலேற்றி விரித்து “ஐ லவ் யூ அபய்” தன்‌ உள்ளங்கையில் முத்தமிட்டு வாயைக் குவித்து பறக்கும் முத்தத்தை பட்டாம்பூச்சியாய் தூது விட்டாள்.

 

உணர்ச்சிகள் தத்தளித்தன ஆடவனுக்கு. இதே போன்று மீண்டும் நிகழும் என்று நினைக்கவில்லை அவன்.

 

அவளின் முத்தத்தை கை நீட்டி பொத்திப் பிடித்து “மீ டூ! லவ் யூ சோ மச் அம்மு குட்டி” என்ற அந்நொடி ஒரு ரயில் தடதடத்து ஓடி ருத்ரனின் ருத்ரக் காதலுக்கு சாட்சியம் கூறிச் சென்றது.

 

“இந்த ட்ரெஸ் எப்படி?”

 

“அப்பா கூட திருவிழாவுக்கு வந்தப்போ குட்டீஸ் வந்து ட்ரெயினை பார்த்து ஏதாச்சும் சொல்ல சொன்னாங்க. நானும் ஏதோ விளையாட்டா அப்படி சொல்லிட்டேன். இந்த ஊரு ஞாபகத்தில் வரும் போது இந்த ட்ரெஸ்ஸையும் கொண்டு வந்தேன். அது யூஸ் ஆகிருச்சு” தோளைக் குலுக்கினாள் அவள்.

 

“நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல மறுபடி இப்படி நடக்கும்னு” அவன் வாயில் கை வைத்து வியக்க,

 

“எதிர்பாராத விஷயங்களால் தானே வாழ்க்கையே சுவாரசியம் ஆகுது. என் வாழ்க்கையில் நீங்க வந்தது, உங்க மேல காதல் வந்ததுனு எல்லாமே எதிர்பார்க்காதது. ஆனால் நினைக்கும் போது ரொம்ப அழகா இருக்கு.

 

அப்பாம்மாவை இழந்து இருக்கும் போது அனுபவிச்ச தனிமை, கஷ்டம், சுகதுக்கங்களை யார் கிட்டவும் பகிர்ந்துக்க முடியாத அந்த வலி இதெல்லாம் சொல்லில் அடங்காது. அப்போ எவ்வளவு கவலையை அனுபவிச்சேனோ இப்போ அத்தனைக்கும் சேர்த்து சந்தோஷத்தை அனுபவிக்கிறேன் உங்களால. என் சந்தோஷத்தின் முகவரி நீங்க தான்” அவனைப் பார்த்த பார்வையில் அடங்காக் காதல்.

 

“எனக்கும் அப்படித் தான் அம்மு. உன் மேல காதல் வந்த அந்த நிமிஷம் நான் புதுசா பிறந்தேன். உன்னை தேடும் போது உருவான ஏக்கம், வெறுமை, தவிப்பு, பிரிவு‌ எல்லாமே ஏதோ இன்பமான அவஸ்தையா இருந்துச்சு. உன்னை மனைவியா கைப்பிடிச்சப்போ உணர்ந்தேன் உலகத்தில் சந்தோஷம்னா என்னனு.

 

அப்பறம் நம்ம பேரன்ட் ஆகப் போறனு தெரிஞ்சது, நம்ம பொண்ணுங்களை கையில் வாங்கினதுன்னு ஏகப்பட்ட அனுபவங்கள், சந்தோஷங்கள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்னு நிறைய இருக்கு. அதில் ரொம்ப பிடிச்ச நாள் உன்னை இந்த வயலில் பார்த்த நாள்” என்றவன் ஓலைச் சுவடி போல் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தாளொன்றைக் கொடுத்தான்.

 

அதனைப் பிரித்தவளுக்கு இனம்புரியா உணர்வு.

அஞ்சனா கைகளை விரித்தபடி வயலில் ஓடி வருவதையும், ருத்ரன் ரயிலின் மிதிபலகையில் கைகளை வைத்து எட்டியவாறு அவளை காதல் வழிய பார்ப்பது போலும் தத்ரூபமாக வரைந்திருந்தான்.

 

“அழகா இருக்கு அபய்! ப்பாஹ் சூப்பர்” துள்ளிக் குதித்து மகிழ்வைத் தெரிவித்தாள் அவள்.

 

“உனக்கு பிடிச்சா சரி அம்மு”

 

பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பிற்கு அவனை அழைத்துச் சென்றாள் அஞ்சனா.‌ அன்றொரு நாள் வந்த போது இங்கும் வந்ததாக கூறினாள்.

 

இருவரும் இணைந்து நடக்க அங்கு மௌனமே ஆட்சி செலுத்தியது.

 

“மாமா!” 

 

“ம்ம் சொல்லு அம்மு” அவளைப் பார்த்தவனுக்கு கண்கள் மின்னின அந்த மாமா எனும் அழைப்பில்.

 

“என்ன கண்ணுல பல்பு எரியுது?”

 

“எப்போவும் கூப்பிட மாட்டியே இப்படி. அதான் திடீர்னு கூப்பிடும் போது நல்லா இருக்கு” 

 

“அது அப்படித்தான். உங்களுக்கு இப்படி கூப்பிட்டா பிடிக்கும்னு தெரியும். ஆனா எப்போவும் கூப்பிட மாட்டேன். அபய்னு தான் கூப்பிடுவேன். அப்பப்போ காதல் ஓவரா எட்டிப் பார்க்கும் போது, இல்லனா உங்க கண்ணுல இந்த ஒளி‌வட்டத்தை பார்க்கனும்னு தோணும் போது மாமானு கூப்பிடுவேன்.‌ திடீர்னு கூப்பிடும் போது அருமையா, ரொம்ப அழகா இருக்கும்னு எனக்கு ஒரு எண்ணம்” இதழ் பிரித்துச் சிரித்தாள் வஞ்சி.

 

“ஆனா நான் தான் உன்னை அம்மு அம்முனு கூப்பிட்டு சலிக்க வைக்கிறேன்ல….?”‌ அவனது கேள்வியில் தலையை இடம் வலமாக அசைத்து மறுத்தாள்.

 

“இது வேற விதம் அபய்.‌ அம்மு அம்முனு மூச்சுக்கு முந்நூறு தடவை நீங்க கூப்பிடறது எனக்கு ரொம்ப இஷ்டம். இது அன்லிமிடட் ஹேப்பினஸ். ஒவ்வொரு வாட்டி நீங்க கூப்பிடும் போதும் அது எனக்கு புதுசா கேட்கிற மாதிரி அப்படி ஒருவிதமான பீலிங்ஸை தரும்.

 

அம்முனு நீங்க கூப்பிடாம இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சி போயிடுவேன். காலம் முழுக்க உங்க வாயில இருந்து இந்த அழைப்பை கேட்டுட்டே இருப்பதே உங்க அம்முவோட ஆசை” அவள் வார்த்தைகளில் மட்டுமல்ல, வானவில் விழிகளிலும் பாரபட்சமின்றி வழிந்தது காதல்!

 

“உன் ஆசை எதுவாயினும் நான் நிறைவேற்றி வைப்பேன் அம்மு குட்டி. உன்னை நினைப்பது, பார்ப்பது, உன்னை கூப்பிடுவதைத் தவிர வேறென்ன வேலை எனக்கு?” ஒற்றைக் கண்ணை சிமிட்டிக் கேட்டான் காளை‌.

 

அவளின் அழகு மாறா புன்னகையில் ஆடவனின் கரை காணா காதலை சுமந்த இதயம் தடையின்றி துடிக்க, அப்புன்னகையை தன்னில் பூசிக் கொண்ட இதழ்கள் அவளுக்காக கவி படிக்க ஆரம்பித்தன.

 

“முதல் பார்வையில் மனம் கொய்து

மாற்றங்கள் மலரச் செய்தவளே!

மலருனக்கு மணவாளனாய் மாற

மாதவம் செய்தேனோ யான்?” அவளின் பட்டுக் கரங்களை, விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

 

அவ்வரிகளில் மணக்கும் காதலை சுகந்தமாய் முகர்ந்த வண்ணத்துப் பூச்சியானவள் அவனைப் பார்த்து,

 

“தவப்பயனளிக்க யான் வரமுமில்லை

உனக்கு‌ கைம்மாறு செய்திட எனக்கு திறமுமில்லை

அன்புக் கடனடைக்கவும் என்னால் இயலவில்லை

சிறைப்படுகிறேன் உன்னிடம் ஆயுள் கைதியாக,

என் வாழ்நாள் முழுவதும் உனக்கே சமர்ப்பணம்” என்றாள் மதிமுகத்தில் காதலை வதிய விட்டு.

 

“ஆஹ்ஹா அம்மு”‌ புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, “இப்போவும் அம்முவா?” வினவினாள் அஞ்சனா.

 

“இப்போதும் அம்மு. எப்போதும் அம்மு. என்றென்றும் என்னவள் நீ தானடி அம்மு குட்டி. என் கூட இனி என்றும் வர உனக்கு சம்மதமா அம்மு?” அவளை மலர்க் குவியலாக கையில் ஏந்திக் கொண்டான் ருத்ரன் அபய்.

 

“உங்க அம்முவுக்கு இதில் முழு சம்மதம். ஓகேவா மாமு?” மகிழ்வு இழையோடும் வதனத்தில் நாணம் கானமிசைத்தது.

 

“மாமு? அடடா இது செமயா இருக்கே அம்மு” அழகாக புன்னகை சிந்தி விசிலடித்தவனின் பார்வை அவள் மீது படிய, இதழ்களோ மென் கன்னத்தில் சற்றே வன்மையாகத் தான் பதிந்தன.

 

இமை தட்டி அவனைப் பார்த்தவளின் விழி மொழி அவனோடு ஆயிரம் வார்த்தைகள் பேசின. தனக்கு மிகவும் பிடித்த அவளது காந்தக் கண்களில் விரும்பியே தொலைந்து போனான் அக்காதல் ஆட்டக்காரன்.

 

அழகிய ஆபத்தில் வீழ்த்திட உபயமளிக்கும், அன்பால் நிதமும் அபயமளிக்கும், கொஞ்சல் மொழி பேசும் அஞ்சன விழியால் அவனை தன்பால் ஈர்த்து நின்றாள் அஞ்சன விழியாள்!

 

அவளின் இதயத்தைத் திருடியதன் காரணமாக, அவ்விழிச் சிறையிலிருந்து அவனுக்கு விடுதலை இல்லை; அபய்க்கு அஞ்சனாவின் அஞ்சன விழியே இனி என்றும் ‌அபயமளிக்கட்டும்…..!

 

முற்றும்.

ஹாய் சகோஸ்!

ஸ்டோரி முடிஞ்சுது. வழக்கம் போல முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எழுதின ஃபீல் குட் ஸ்டோரி தான்.

எப்படி இருந்துச்சு? உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் எது? கதை பற்றிய உங்க கருத்தை மறக்காம பகிர்ந்துக்கங்க. அது எனக்கு இன்னும் கதைகள் எழுத தூண்டுதலா அமையும். 

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை எனக்கு கமண்ட் பண்ணி சப்போர்ட் பண்ணுன எல்லாருக்கும் தாங்க் யூ சோ மச். 🫂✨ 

எபிலாக் எப்படி இருந்ததுனும் சொல்லிடுங்க.

இன்னொரு தொடர் கதையுடன் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன் மக்களே! 😊

 

என்றும்,

நட்புடன்,

🖊️ ஷம்லா பஸ்லி🌼

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!