சீதளம் 22
மேகாவிடம் செல்வரத்தினம்,
“உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ சொல்லலாம்மா” என்று அவர் கேட்க அவளோ அங்கு உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்,
“அங்கிள் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்” என்று சொல்ல வேந்தன் உட்பட அங்கு உள்ள அனைவருமே அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
மீண்டும் மேகாவோ,
“இந்த தாலி எனக்கு விருப்பம் இல்லாமல் என் சம்மதம் இல்லாம நான் என்னென்னு சுதாரிக்க முண்ணமே என் கழுத்தில ஏறினதுதான் அதுக்காக கழுத்துல ஏறிய தாலிய கழற்றி போடுற அளவுக்கு நான் கெட்டவ எல்லாம் கிடையாது.
இந்த தாலிய என் கழுத்துல இருந்து கழற்றதுக்கு நான் சென்னையில இருந்து இங்க உங்க வீடு வரைக்கும் வரணும்னு அவசியம் இல்லையே எனக்கு. நான் நினைச்சிருந்தா இதை அவர் என் கழுத்துல கட்டுன உடனே கழட்டி அவர் மூஞ்சில வீசி இருக்க முடியும். ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்லை என் கழுத்துல தாலி இவர் கையாலதான் ஏறணும்னு இருக்கு அத மாத்துறதுக்கு நீங்களும் நானும் ஆளில்லை. இதை கடவுள் கொடுத்த வாழ்க்கையா நினைச்சுக்கிறேன் இனி இது தான் என் வாழ்க்கைன்னு முடிவெடுத்து வந்திருக்கேன் இப்போ நீங்க சொல்லுங்க உங்க மருமகளா என்னை ஏத்துக்கிறீங்களா” என்று கேட்க அப்பொழுது தான் அவர்களுக்கு இருந்த குற்ற உணர்வு மறைந்து அங்கு உள்ள அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
உடனே அன்னலட்சுமி அவளை தன் அருகே அழைத்தவர்,
“ரொம்ப சந்தோஷம்மா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மனசு ரொம்ப நிறைவா இருக்கு. எப்படியெல்லாம் நடக்கணும்னு எதிர்பார்த்த கல்யாணம். ஆனா இப்படி யாருக்குமே தெரியாம நடந்துருச்சுன்னு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. உன்னோட அப்பா முதல்லயே சம்மதம் சொல்லி இருக்கலாம் நாங்க வந்து கேட்டா போதே” என்று அன்னலட்சுமி கூற மேகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன ஆன்ட்டி சொல்றீங்க அப்பாக்கிட்ட என்னை பொண்ணு கேட்டீங்களா” என்று அவள் கேட்க செல்வரத்தினமோ,
“அன்னம் என்ன பண்ற” என்றார்.
“இல்லங்க அது வந்து ஏதோ வாய் தவறி வந்துட்டு” என்றார் அன்னலட்சுமி.
“மேகாவோ,
“ஆன்ட்டி சொல்லுங்க நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க அப்பா கிட்ட என்ன பொண்ணு கேட்டீங்களா” என்று அவள் மீண்டும் கேட்க செல்வரத்தினமோ,
“அம்மாடி அதெல்லாம் விடுமா இப்ப எதுக்கு அதெல்லாம் வேண்டாம்”
“எனக்கு தெரியணும் நீங்க சொல்லுங்க என்ன நடந்ததுன்னு” என்று அவள் கேட்க அறிவழகியோ, நான் சொல்றேன் என்றவள் மேகாவை வேந்தனுக்கு கட்டிக் கொடுக்க ஆசைப்பட்டதும் அதை மொத்த குடும்பமும் ஆமோதித்ததும் பின்பு மேகாவின் தந்தையிடம் அவளை பெண் கேட்டு சென்று அவர்கள் பட்ட அவமானத்தையும் எடுத்து கூறினாள். அதைக் கேட்ட மேகாவுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
‘என்ன இவ்வளவு நடந்து இருக்கா ஓ அதனாலதான் அப்பா அன்னைக்கு எனக்கு போன் பண்ணி நான் யாரையாவது விரும்புறேனான்னு கேட்டாங்களோ’ என்று யோசித்தவள்,
“ஐயோ சாரி அங்கிள் வெரி வெரி சாரி எங்க அப்பா ரொம்ப நல்லவர் தான் ஆனால் உங்க கிட்ட நடந்து கிட்டது ரொம்ப பெரிய தப்பு எனக்கு இது சத்தியமா தெரியாது. நீங்க பொண்ணு கேட்டு வந்ததும் கூட அப்பா என்கிட்ட சொல்லல என்கிட்ட கால் பண்ணி கேட்டாங்க நான் யாரையாவது விரும்புறேனான்னு நான் இல்லைன்னு சொல்லிட்டேன். ஆனா அதுக்கு பின்னாடி நீங்க எல்லாரும் பொண்ணு கேட்டு வந்திருப்பீங்கன்னு எனக்கு அப்ப தெரியாது அங்கிள். எல்லாரும் மன்னிச்சிடுங்க எங்க அப்பா சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்” என்று அவர்கள் முன்பு கையெடுத்துக் கும்பிட்டாள்.
உடனே செல்வரத்தினமா,
“ஐயோ அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லமா” என்றார்.
“புரியுதுமா எங்க மேலையும் தப்பு இருக்கு நாங்க தான் தப்பா நினைச்சுட்டோம் நீயும் என் பையனும் விரும்புறதா தப்பா நினைச்சுட்டோம்மா அங்க வந்த பிறகு தான் நீ என் பையன விரும்பலன்னு தெரிஞ்சது. ஆனா என் பையனுக்கும் உன்ன புடிச்சதால தான் நாங்க அங்க பொண்ணு கேட்டு வந்தோம்” என்றதும் அவளுடைய பார்வையோ வேந்தனின் மீது விழுந்தது.
ஆனாலும் அவள் மனதுக்குள்ளோ,
‘என்ன இந்த ஏலியனுக்கு என் மேல விருப்பமா ஓஓ அதனாலதான் நம்மள பார்க்கும் போதெல்லாம் அப்படி நடந்துக்கிட்டானா’ என்று அவள் நினைத்துக் கொண்டாள். வடிவுக்கரசியோ,
“ஐயா எல்லாம் நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு நம்ம திருப்பி திருப்பி பேசுவதனால எதுவும் மாறப் போறது இல்ல. ஐயா இனி நடக்கிற காரியத்தை பார்ப்போம். ஒரு நல்ல நாள் பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் மாதிரி வச்சுருவோம் சொந்தக்காரங்களை கூப்பிட்டு” என்று சொல்ல, வேந்தனோ,
“அப்பத்தா அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நான் இவளோட அப்பா மூக்க உடைக்க தான் இவ காலத்தில தாலி கட்டினேனே தவிர வேற எந்த ஆசையும் இல்லை. இவளை அவங்க அப்பா கிட்டே போக சொல்லுங்க” என்றான்.
உடனே மேகாவோ, ‘இந்த ஏலியனக்கு கொழுப்ப பாத்தியா’ என்று நினைத்துக் கொண்டவள்,
“ஓஓ அப்படியா எங்க அப்பாவ மூக்க உடைக்கிறதற்காக என் கழுத்துல தாலி கட்டுனீங்களா. சரி நான் இங்க இருக்கல நீங்க நினைச்ச மாதிரி அங்க எங்க அப்பாவோட மூக்கை உடைச்சிட்டிங்க தானே. அதே மாதிரி இப்போ என் கழுத்துல இருக்குற இந்த தாலிய உங்க கையாலே கழட்டுங்க நான் இங்க இருக்கல நான் எங்க வீட்டுக்கு போயிடுறேன்” என்று அவன் முகத்திற்கு முன்னால் தாலியை தூக்கிப் பிடித்தாள்.
அவனோ,
‘உனக்கு உடம்பு முழுக்க கொழுப்பு டி’ என்று நினைத்துக் கொண்டவன்,
“என்ன விளையாடுறியா அதெல்லாம் முடியாது” என்று அவன் சொல்ல,
“முடியாதுல்ல அப்போ நானும் இங்கிருந்து போக முடியாது இனி நான் தான் உங்க பொண்டாட்டி இதை யாராலயும் மாற்ற முடியாது” என்று அவள் சொல்ல, இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களோ தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள்.
அப்பொழுது செல்வரத்தினம்,
“இங்கு பாரு வேந்தா நடந்த கல்யாணம் நடந்தது தான் அது எந்த சூழ்நிலையில வேணா நடந்திருக்கட்டும் இனி இந்த பொண்ணு தான் எங்க வீட்டு மருமக அதனால ஊர் அறிய உங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து ரிசிப்ஷன் வைக்க தான் போறோம்” என்று அவர் சொல்ல,
“அப்பா அது” என்று அவன் அதை தடுக்க நினைக்க,
“நீ ஒன்னும் பேச வேண்டாம் இது தான் என்னோட முடிவு” என்றார்.
“ஐ சூப்பர் பா” என்ற அறிவழகியோ,
“அண்ணி வாங்க நான் உங்களுக்கு வீட்ட சுத்தி காட்டுறேன்” என்றவள் அவளை கைப்பிடித்து அழைத்துச் செல்ல அவளுடைய விழிகளோ வேந்தனை நக்கலாக பார்த்தது.
“மவனே இனி இருக்குடா உனக்கு” என்று மனதில் சொல்லிக் கொண்டாள் மேகா.
வேந்தனுக்கு அவளுடைய இந்த நடவடிக்கையில் சற்று ஆச்சரியமாகவே இருந்தது. அன்று ஆத்தங்கரையில் பூங்கொடியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சொன்னதற்கு முடியவே முடியாது என்றாள்.
இன்று அவள் விருப்பமே இல்லாமல் தான் தாலி கட்டினோம் தான் கட்டிய தாலியை கழட்டி வீசி விடுவாள் என்று நினைத்தால் இவள் என்ன இப்படி தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டாள். இது தான் மஞ்சள் கயிறு மேஜிக் என்று சொல்வார்களோ, இல்லை அவள் மனதில் வேறு ஏதும் திட்டம் ஓடுகிறதா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவர்கள் சென்று சிறிது நேரம் ஆகியும் வேந்தன் அதே இடத்தில் அசையாமல் நிற்க அவன் அருகில் வந்த அப்பத்தாவோ,
“என்னடா பேராண்டி என்ன யோசிச்சிட்டு இருக்க நீ ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்தோஷம் தானே” என்று அவர் கேட்க,
“அய்யோ அப்பத்தா ஏன் நீ வேற அவளுக்கு என்ன சுத்தமா பிடிக்காது ஆனா இப்ப என்னடான்னா என் பொண்டாட்டின்னு உரிமை கொண்டாடுறா எனக்கு ஒண்ணுமே புரியல அப்பத்தா” என்றான்.
“டேய் பேராண்டி என்னதான் ஒரு பொண்ணு ஒருத்தன பிடிக்கல பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும் அவன் கையால தாலிய வாங்கிட்டா அவனை பிடிக்க ஆரம்பிச்சிடும் டா அதுதான் தாலிக்கு உள்ள மகிமை” என்றார் அப்பத்தா.