அத்தியாயம் 09
ஒரு வாரம் கடந்திருந்தது.
விஹானுக்கு என தினமும் ஒரு கொரியர் அவனுக்கு வந்து கொண்டே இருந்தது.
அவன் செய்யும் ஏதாவது ஒரு செயலை குறித்து ஒரு வரைபடம் அவனுடைய கைகளில் வரும்.
முதல் நாள் மட்டுமே அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தினமும் ஒவ்வொரு வரைபடம் அவனுக்கு வர அவனும் அவனை அறியாமலேயே அதை ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.
அந்த விழி யார் என்று அறிய அவனுடைய மனமும் ஏங்கிக் கொண்டிருந்தது.
இதோ எப்பொழுதும் விழி அனுப்பும் அந்த வரைபடத்தைக் காண கொரியர் காரர் எப்பொழுது வருவார் என்று தன்னுடைய அறையின் பால்கனியில் இருந்து ஆவளாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறான்.
‘என்னடா இது? எவ்வளவு நேரம் தான் நம்ம காத்துக்கொண்டே இருக்கிறது இந்த விழிக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல இவ்வளவு நேரமா என்ன காக்க வச்சிக்கிட்டு இருக்க.
யாருடி நீ எங்க இருந்து என்ன பார்த்துகிட்டு இருக்க உன்னுடைய ஒவ்வொரு வரைபடமும் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்னை எப்படி எல்லாம் பார்த்து ரசித்து வரைஞ்சி இருக்கன்னு என்னால் உணர முடியுது.
எப்போ என் கண் முன்னாடி வரப்போற எப்ப நான் உன்னை பார்ப்பேன்னு ஆவளா காத்துகிட்டு இருக்கேன் விழி யூ ஆர் கில்லிங் மீ’ என்றவாறு தன்னுடைய இடது பக்க நெஞ்சை தடவிக் கொண்டான் விஹான்.
அவனுடைய எதிர்பார்ப்பை வீணாக்காமல் அந்த கொரியர் காரர் இவர்கள் வீட்டின் அருகே வர அவரைக் கண்ட விஹானோ சற்றும் தாமதிக்காமல் நேராக அந்த கொரியர் காரரிடம் வந்தவன் தனக்கு ஏதும் கொரியர் வந்திருக்கிறதா என்று விசாரித்தான்.
அவரும் இவனுடைய பெயரை விசாரித்துவிட்டு அவனுடைய பெயரில் ஏதேனும் கொரியர் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க ஐயோ பாவம் அவனுக்கு எந்த கொரியரும் வரவில்லை.
“ இல்ல சார் உங்களுக்கு எந்த கொரியரும் வரல” என்று சொல்ல மலர்ந்திருந்த விஹானினுடைய முகமோ சட்டென வாடியது.
“ என்ன சொல்றீங்க கொஞ்சம் நல்லா தேடிப் பாருங்க தினமும் இதே நேரத்துக்கு என் பெயருக்கு ஒரு கொரியர் வரும் இன்னைக்கு வரலைன்னு சொன்னா எப்படி இன்னொரு தடவை நல்ல செக் பண்ணி பாருங்க” என்று சொன்னான்.
அவரும் ஒருவேளை தன்னுடைய கவனக்குறைவினால் சரியாக பார்க்கவில்லையோ என்று நினைத்தவர் மீண்டும் ஒருமுறை தன்னிடம் இருக்கும் கொரியர்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு அவனிடம்,
“ சார் நான் நிஜமா தான் சொல்றேன்”
“ இன்னொரு தடவை நல்லா பாருங்க சார் கண்டிப்பா எனக்கு வந்திருக்கும் அப்படி வராமல் இருக்காது”
“ ஐயோ என்ன சார் உங்களுக்கு வந்து இருந்தா நான் கொடுக்க போறேன் வரலன்னு நான் ஏன் சார் பொய் சொல்லணும்” என்று சொல்லியவர் அவ்விடம் விட்டு சென்றார்.
விஹானின் முகமோ சொல்லவே வேண்டாம் அப்படி வாடிப்போய் இருந்தது.
‘ஏன் தனக்கு இன்று கொரியர் வரவில்லை. இங்கு வந்ததிலிருந்து தினமும் தனக்கு விதவிதமாக கொரியர் அனுப்பியவள் இன்று ஏன் தனக்கு அனுப்பவில்லை.
என்னவாக இருக்கும் அவளுக்கு ஏதேனும் ஆகி இருக்குமா?’ என்று அவனுடைய யோசனை முழுவதுமே விழியே வியாபித்து இருந்தாள்.
இத்தனை நாட்கள் தனக்கு கொரியர் அனுப்பியவள் இன்று ஏன் அனுப்பவில்லை என்று யோசித்துக் கொண்டே நடந்து வந்தவன் முன்னே தன் வலது கையை ஆட்டினாள் லல்லு.
அதையும் கண்டு கொள்ளாமல் அவன் பாட்டிற்கு சென்று கொண்டிருக்க,
‘என்ன இவரு நம்மள கண்டுக்காம போறாரு’ என்று நினைத்தவள்,
“விஹான் ஹலோ கொஞ்சம் நில்லுங்க”
“…….”
அவனிடம் எந்த பதிலும் இல்லை.
“ விஹான்” என்று சத்தமாக அழைத்தாள்.
அப்பொழுதும் அவனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
“ என்ன இவரு கூப்பிட கூப்பிட இவர் பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்காரு” என்று அவனைக் கடந்து அவன் முன்னே வந்தவள் அவன் கைபிடித்து நிறுத்தினாள்.
“ ஹலோ என்ன பகல் கனவா அதுவும் இப்படி நடந்துக்கிட்டே” என்று கேட்க,
அவளுடைய பேச்சில் திடுக்கிட்டவன் அவளைப் பார்த்து,
“ஹான் அப்படி எல்லாம் இல்ல” என்று சமாளித்தான்.
“அப்படியா உங்களை பார்த்தா அப்படி தெரியலையே எதுக்கோ எதிர்பார்த்து அது கிடைக்காம போன மாதிரி உங்க முகம் இப்படி வாடி போய் இருக்கு” என்று நக்கலாக கேட்டவள் அவனுடைய முகத்தை ஆராய்ந்தாள்.
“ இல்ல இல்லையே அப்படி எல்லாம் எதுவும் இல்லை நீ பாட்டுக்க ஏதாவது சொல்லாத” என்றவன் அவளைக் கடந்து தன்னுடைய நடையைத் தொடர்ந்தான்.
‘ இவள் என்ன தன்னை மறைந்திருந்து பார்த்தது போல் சொல்கிறாள் நம் முகம் அப்படி வெளிப்படையாகவா தெரிகிறது இல்லை ஒரு வேளை அந்த விழி இவளா இருப்பாளா’
என்று யோசித்தவாறு நடந்தவன் சட்டென பின்னால் திரும்பி லல்லுவை பார்க்க அவளோ இவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவள் அவனைக் கடந்து உள்ளே சென்றாள்.
இவனுடைய கண்களோ பெரிதாக விரிந்தன.
‘ ஒரு வேளை உண்மையில் அந்த விழி இவளாகத்தான் இருக்குமா தன்னை இப்படி காக்க வைத்து வேடிக்கை பார்க்கிறாளா இருக்கட்டும் அந்த விழி இவளா அல்லது வேறு யாருமா என்று கண்டுபிடிக்கிறேன்.
எவ்வாறு கண்டுபிடிப்பது ஒரு சிறிய குழு கிடைக்கட்டும் அப்புறம் தெரியும் இந்த விஹான் யாருன்னு. கண்டுபிடிக்கிறேன் அந்த விழி யாருன்னு கூடிய சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்’ என்ற உறுதி எடுத்துக் கொண்டான் விஹான்.
அன்றைய நாள் முழுவதும் என்னதான் அவன் எல்லோரிடமும் நார்மலாக இருந்தாலும் ஒரு பக்கம் ஏன் இன்று தனக்கு கொரியர் வரவில்லை என்று நினைத்துக் கொண்டுதான் இருந்தான்.
இப்படியே ஒரு வாரம் கடந்தது.
இந்த ஒரு வாரத்தில் தினமும் அவனுடைய எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருந்ததே தவிர குறையவே இல்லை.
இந்த விழி யாராக இருக்கும் என்று யோசித்தவனுக்கோ விடை தான் கிடைத்த பாடு இல்லை.
அவனுக்கு வரும் கொரியரில் இவனுடைய வீட்டு அட்ரஸ் மட்டுமே இருக்கும்.
விழியை பற்றிய எந்த ஒரு அடையாளமும் இருக்காது.
இவனுக்கோ இங்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.
நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தேன். திடீரென இவள் என்னை படம் வரைந்து அனுப்பினாள். தொடர்ச்சியாக அனுப்பியவள் என்னுடைய நினைவு முழுவதையும் இப்படி திருடிச் சென்று விட்டாளே.
மறைந்திருந்து கண்ணாமூச்சி ஆடும் இவளை எவ்வாறு நான் கண்டுபிடிக்க போகிறேன் என்று தலைய பீய்க்காத குறையாக இருந்தான் விஹான்.
அதேபோல இன்றும் தன்னுடைய பால்கனியில் நின்று வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த விஹானினுடைய பார்வையோ அவ்வழியே வந்த கொரியர் காரரின் மேல் விழுந்தது.
ஆனாலும் முன்பு போல அவரிடம் அவன் சொல்லவில்லை.
ஏனென்றால் இந்த ஒரு வாரமும் அவன் தினமும் போய் அவரிடம் கொரியர் வந்திருக்கிறதா என்று கேட்டு சோகத்துடனே திரும்புவான். அந்த அளவுக்கு விழி அவனை ஏங்க வைத்திருந்தாள்.
எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் அவன் ஆஸ்திரேலியாவில்.
ஆனால் இங்கு வந்ததன் பிறகு அவனை ஒரு கொரியருக்காக இப்படி அழைய வைக்கிறாள் இந்த முகமறியா விழி.
இன்றும் அவரிடம் கேட்டு தன்னுடைய மனநிலையை மேலும் கெடுத்துக் கொள்ள விரும்பாதவன் தன் வேலையை செவ்வினே செய்து கொண்டிருந்தான்.
வேறென்ன அந்த வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த ஒரு வார காலமும் இவர்கள் வீட்டை கடந்து சென்ற அந்த கொரியர் காரரோ இன்று அவர்களுடைய வீட்டு வாசலில் நின்றவர்,
‘ என்ன இந்த ஒரு வாரமா அந்த பையன் இந்த வழியை என்ன க்ராஸ் பண்ண விடாம எனக்கு கொரியர் வந்திருக்கான்னு கேட்பான். இன்னைக்கு என்னடான்னா ஆளையே காணோம்’ என்று யோசித்தவர்,
“ தம்பி உங்களைத் தான் உங்களுக்கு கொரியர் வந்திருக்கு”
என்று இங்கிருந்து பால்கனியில் நிற்பவனை பார்த்தவாறு கத்தி அழைத்தார் அந்த கொரியர் காரர்.
அங்கு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஹானின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழ சட்டென இவர் புறம் திரும்பியவன் அவர் கையில் தனக்கான கொரியரைக் கண்டதும் அவனுடைய முகமோ பிரகாசமாக மின்ன நொடியும் தாமதியாமல் வேக வேகமாக விரைந்து வந்தான் அந்த கொரியர் காரரை நோக்கி.
அவனினுடைய வேகத்தை கண்ட கொரியர் காரரும் எங்கே அவன் தடுமாறி கீழே எங்கும் விழுந்து விடுவானோ என்று பயந்தவர்,
“ தம்பி மெதுவாப்பா” என்று சொல்ல மூச்சு வாங்க அவர் முன்னே வந்து நின்றவன்,
“ அதெல்லாம் விடுங்க குடுங்க” என்று கையை நீட்ட அவரும் அவனுடைய முகத்தின் பிரகாசத்தை கண்ட கொரியர் காரரோ,
“ இத்தனை நாளா கொரியர் வரலைன்னு சொன்னதும் உங்க முகம் அப்படியே தொங்கிப் போயிடும் ஆனா இன்னைக்கு இவ்வளவு பிரகாசமா ஜொலிக்குது கண்டிப்பா இந்த கொரியர் ஏதோ உங்களுக்கு முக்கியமான ஆள் கிட்ட இருந்து வந்திருக்கிறதுன்னு நினைக்கிறேன் அப்படித்தானே சந்தோஷமா இருங்க”
என்று சொல்லியவர் அவனுடைய கையில் அந்தக் கொரியரை கொடுக்க இவனோ தன்னுடைய முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும் அளவிற்கு அவரைப் பார்த்து சிரித்தவன் அசடு வழிய நின்று கொண்டிருந்தான்.
பின்பு அந்த கொரியரை கையில் வாங்கியவன் நேரங்களை வீணடிக்காமல் அதைப் பிரித்து பார்க்க அதிலோ அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போல நின்றவனை அழகாக வரைந்திருந்தாள் விழி.
அந்த வரைபடத்தின் கீழே எப்பொழுதும் போல அவனுக்கான வரிகளை செதுக்கி இருந்தாள் விழி.
“ இத்தனை நாட்களாக தங்களை காக்க வைத்த இந்த பேதையை மன்னிப்பீர்களா..
விழியோடு விழி காண ஆசை.. ஏக்கம் மிகும் உன் காந்த விழிகளில் தொலைந்து போகும் நாள் என்னாளோ ” என்று முடித்து இருந்தாள் விழி.