அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று ஒருவன் கைதட்டி ஆரவாரம் செய்ய. “பன்னாட நான் நல்லா தான் தம் கட்டுற.. நீ ஒழுங்கா எண்ணு..”என்று கத்தியவளோ தன்னுடைய ஒட்டு மொத்த பலத்தையும் காட்டியவாறே புஷ்ஷப் எடுக்க.. “இன்னாடா இந்த பையன் இப்டிக்கா புஷ்ஷப் எடுக்குறானே.. பாக்கவே ஜோரா இருக்கிதே..”என்று ஒருவன் சிலாகித்தவாறே கூற “நல்லா பாருடா கூமுட்ட அது பையன் இல்ல பொண்ணு..”என்றான் ஒருவன் அதில் ஆச்சரியப்பட்ட இன்னொருவனோ “அட இன்னா அண்ணாத்த சொல்லிக்கினு இருக்க..”என்றவனோ அப்போது தான் அவளை ஒழுங்காக பார்த்தான். கழுத்து வரையிலான முடியை தூக்கி பின்னால் சிண்டு போட்டுக்கொண்டு, புஷ்ஷப் எடுப்பதில் நெற்றி எல்லாம் வியர்க்க, அப்படியே பளப்பளப்பான நிறத்தில், உயரம் கொஞ்சம் குறைவில், பார்க்க சிறு வயது பெண் போல கருப்பு நிற ட்ராக் ட்ரவுசரும், தொல தொல வெள்ளை நிற டீசர்ட்டும் போட்டுக்கொண்டு மை வைக்காத கருவிழிகளை ஒரே இடத்தில் வெறித்தவாறே,கை நரம்புகள் புடைக்க புஷ்ஷப் எடுத்துக்கொண்டிருப்பவளை பார்க்க யாருக்கும் ஆண் என்று தான் தோன்றும்.. ஆனால் அவன் இல்லை அவள் அவள். அவளின் பெயர் மின்மினி.. குமுதா பெருசு என்று அழைக்கும் இல்லை இல்லை பெருசு மட்டும் அல்ல தடிமாடு, விளங்காதது, ரெளடி என அனைத்திற்கும் பெயர் போனவள். “என்னடா இவ பாக்க நாலு எலும்ப ஒட்டி வச்ச மாறி இருக்கா.. ஆனா பண்றது எல்லாம் புரூஸ்லி வேலையால இருக்கு..” என்று ஒருவன் பயத்திலேயே நின்று கொண்டிருக்க. “நாதாரி இதெல்லாம் மட்டும் நல்லா வக்கைனையா பேசிக்கின்னு இரு.. போய் புஷ்ஷப் எடுக்க சொன்னா.. அப்பாலிக்கா நாலு புஷ்ஷப்ல மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கிக்கினு நிக்க வேண்டியது..” என்று இன்னொருவன் திட்ட அவனை முறைத்தவாறே நின்றவனோ”டேய் சோமாரி நேத்து நைட்டுக்கா நீ வாங்கிக்கினு வந்து தந்த குவாட்டர் தாண்டா என்ன புஷ்ஷப் எடுக்க முடியாம பண்ணிக்கின்னு இருக்கு..”என்று அவன் மீசையை திருகியவாறே கூற “ஆமா ஆமா இல்லாக்காட்டினா மட்டும் அப்படியே புஷ்ஷப் எடுத்து கிழிச்சிக்கினுவாறு தொர.. எத்துக்குன்னு இருக்குறது பிச்ச இதுல ஸ்டைலு வேற..”என்றவன் அவன் தலையில் நங் என்று கொட்ட.. “ஆஆஆஅ…”என்று கத்தியவாறே அவனை முறைத்து பார்த்தான் அவன்.. “இந்த முறைச்சக்கு மட்டியும் ஒன்னியும் கொறச்சல் இல்ல..அங்க பாரு உடம்புல நாலு எலும்ப ஒட்ட வச்ச மாதிரி இருந்துக்கினு.. அந்த மினி எப்டிக்கா புஷ்ஷப் எத்திக்கினு இருக்கானு..” என்று கூற அவனோ முறைத்தவாறே மினியை பார்த்தான்.. அவளோ பல்லை கடித்தவாறே தொடர்ந்து புஷ்ஷப் எடுத்துக்கொண்டிருந்தாள்.. “அப்டிதா அப்டிதா.. வந்துக்கினே இருக்கா நீ..”என்று கூச்சலிட்டவனோ.. “அக்கா 42,43,45,46 என்று புஷ்ஷப்பை எண்ணிக்கொண்டே இருக்க.. புஷ்ஷப் எடுத்துக் கொண்டிருப்பவளோ தன் ஒல்லி பெல்லி இடுப்பை வைத்துக்கொண்டு கைகளை தரையில் ஊற்றி சர்வ சாதாரணமாக தன் உடலை தூக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் கொஞ்சமும் இறைப்போ, எதுவுமே இல்லாமல் புஷ்ஷப் எடுத்துக் கொண்டிருந்தாள்.. அதிலையே அவளுக்கு இதெல்லாம் பலநாள் பழக்கம் என்று நன்றாக தெரிந்து போனது. “ஆஆ எழுவது..அக்கா இன்னாக்கா நேத்த வுட இன்னிக்கி ஸ்பீடா போய்க்கின்னு இருக்கு..”என்று அவன் கத்த “பல்லி.. நீ இன்னிக்கி என்னான்ட செமையா வாங்கிக்கினு போவ போற.. பேசாம எண்ணிக்கின்னு இருடா சோமாரி..” என்று அவள் திட்டினாள். “சரிக்கா சரிக்கா இப்ப என்னாத்துக்கு திட்டிக்கின்னு இருக்க… சும்மாக்காச்சும் கோவப்பட்டா அப்பாலிக்கா எப்டி புஷ்ஷப் எடுத்து ஆயிரம் ரூவா வாங்கிக்கின்னு போ முடியும்..” என்று அவன் அடக்க பார்க்க.. அதற்குள் அவள் நூறு புஷ்ஷப்பை எடுத்து முடித்தாள்.. தன் கையை தட்டியவாறே எழ..“ஹேய்ய்ய்ய் அக்காதான் வின்னு..”என்று வேகமாக குதித்து எழுந்த மினியின் கையை பிடித்து அவன் குதிக்க.. அவளோ கையை தட்டிக்கொண்டு தெனாவட்டாக நின்றாள்.. இதை பார்த்துக் கொண்டிருந்த ஜிம் ஓனர் திலீப்போ கைகளை கட்டிக்கொண்டு அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. இல்லை இல்லை முறைத்துக் கொண்டிருந்தான். பின்னே ஜிம்மை துடைத்து சுத்தம் செய்பவளே 100புஷ்ஷப்பை எடுத்திருக்க.. மாதம் மாதம் 8000, 9000ரூபாய் கட்டி ஜிம்மில் சேர்ந்திருப்பவர்களோ வெறும் 20,25 புஷ்ஷப்பில் கழண்டு விட்டார்கள்.. “இவனுங்க எல்லா இன்னாத்துக்கு ஜிம்முக்கு வரானுங்கனே தெரியலையே.. சைட் அடிக்க தான் வரானுவோ போலக்கிது.. அப்டினு பாத்தா பொண்ணுங்களே நம்ம ஜிம்ல யாருமே இல்லையே.. பொண்ணு பாத்தா இவ ஒருத்திதான்.. ஆனா இவக்கிட்ட வச்சிக்கின்னா தலைய திருப்பிடுவாளே.. ம்ச் தெனோ வந்து தடிமாடு கணக்கா தின்னுகிட்டு சுத்துவானுவொலே தவிர ஒரு எழவுக்கும் இலாயக்கு இல்ல.. இவனுங்கள வெச்சி நான் என்னமோ வேர்ல்ட் ரெக்கார்டு பண்ற மாதிரி சுத்திகின்னு இருக்கே.. சரியான கேப்மாறிங்க..” என்று அந்த ஜிம் ஓனர் திலக் கத்தி கொண்டு இருக்க.. அதனைக் கேட்டவாறே நின்று இருந்தான் அந்த ஜிம்மில் வேலை பார்க்கும் இன்னொருவன். “ஹக்காண்ணே அதனால தான் நான் சொல்ற.. இந்த மாறியான அரக்காப்படி எல்லாம் உள்ள சேத்துக்கின்னு இருக்காதனு..” என்று அவன் ஏற்கனவே மினியின் மீது உள்ள பொறாமையில் கூற.. அதனைக் கேட்டு அவனை திரும்பி பார்த்த திலக்கோ.. “இன்னா அவ மேல துறக்கி பொறாமயோ.. உன்ன விட லேட்டா வந்தவ தான் அவ.. ஆனா இப்போ எவ்ளோ புஷ்ஷப் எடுத்துக்கின்னு இருக்கா பாத்துக்கினியா.. நீ இன்னும் ஜிம்ம தொடச்சிகின்னு சுத்திட்டு இருக்க.. ம்கூம் வெளங்கிடும் நீ வேலை பாக்குறதும் ஜிம்மில வந்து ப்ராக்டிஸ் பண்றதையும் பாத்துக்கின்னு தான் குந்தின்னு இருக்கே..” என்று அந்த திலக் கத்தி கொண்டிருக்க.. அதனைக் கேட்டவனோ.. “வேணாண்ணே பப்ளிக்..”என்று கூறிக் கொண்டு ஜிம்மை கிளீன் செய்ய ஆரம்பித்தான். “ம்ம் துறக்கி அசிங்கமா இருக்கிதோ.. இதுக்கு பேருதான் தேவை இல்லாம வாய குடுத்துக்குன்னு டேஷ புண்ணாக்கிக்கிறது.. அங்குட்டு ஓடிப் போயிடு மரியாதையா..” என்று திலக் கத்த.. “ம்ச் நல்லது சொன்னா எவன் கேட்டுக்கின்னு இருக்கான்..”என்று அவனும் புலம்ப.. “டேய் நாதாரி..”என்று திலக் கத்த.. அவனின் சத்தை கேட்டவன் அங்கிருந்து நழுவிக் கொண்டான்… போகிற போக்கில்.. “திலக்ண்ணே.. கூர மேல ஒரே ஒட்டடையா இருந்துக்கின்னு இருக்கு.. நா போய் அத என்னன்னு பாத்துக்கின்னு வரேன் சரியா…” என்றவாறே அவன் ஓடிப் போக “ம்ச் தம்மு.. அடி அடி நல்லா அடி.. ச்சை இதெல்லாம் எங்க தேற போது..” என்று தலையில் அடித்துக் கொண்டவனோ.. பெட் கட்டியவர்கள் நீட்டிய ஆயிரம் ரூபாயை வாங்கி தன் டவுசர் பாக்கெட்டில் சொருகியவாறே அவர்களுக்கு தன் ஆர்ம்ஸை காட்டி அதனை பற்றி பெருமை பேச.. அதனை பார்க்க பார்க்க திலக்கிற்கு கடுப்பானது.. “என் ஜிம்முல வேல பாத்துக்கின்னு எனக்கே போட்டியா வந்துடும் போல இந்த மினி..”என்று பல்லை கடித்தவன். திலக் தன்னையே இமைக்காமல் பார்ப்பவனை பார்த்தவளோ தன்னிடம் ஆர்ம்ஸ் பற்றி டவுட் கேட்டவர்களிடம்.. “ஒருநிமிஷம் இருங்க மாஸ்டர் ரொம்ப நேரமா என்னியே நோட்டம் வுடுறாரு.. போய் இன்னான்னு கேட்டுக்கின்னு வந்துடுறேன்.”என்றவள் திலக்கை பார்த்தவாறே வர.. திலக்கின் முகம் இன்னும் கடுப்பை காட்டியது.. “இன்னா மாஸ்டரு நம்ம புஷ்ஷப்ப பாத்து மெர்சல் ஆயிக்கினியா…”என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வர. அவனோ அவளை மேலிருந்து கீழாக ஸ்கேன் செய்தான்..ரொம்பவும் ஒல்லி பெல்லி என்று கூறிவிட முடியாது சரியான உயரத்திற்கு சரியாக எடையாகத்தான் இருப்பாள். “இப்படித்தான் வந்து என் பசங்கள எல்லாத்தையும் தோக்கடிச்சுக்கின்னே இருந்தா நான் எல்லாம் எப்டி ஜிம்மு நடத்துறது..” என்று திலக் கேட்க அதனைக் கேட்டவளோ தோளை குலுக்கியவாறே கையை ட்ரவுசருக்குள் விட்டுக்கொண்டு.. “ம்ச் ஜம்முல வந்து சேந்துக்கவானு கேட்டதுக்கு நீ இன்னா சொன்ன.. ஒன்ன எல்லாம் ஜிம்ல சேத்துக்க முடியாது.. ஜிம்முல வந்து ப்ராக்டிஸ் பண்ணவும் விட முடியாதுன்னு சொன்ன இல்ல.. சரி அதுக்காகவாவது ஜிம்ம தொடச்சி சுத்தம் பண்ற வேலைக்காவது வந்துக்கின்னு இருக்கேனு சொன்னேன்.. நீயும் அதுக்கு ஒத்துக்கின்ன.. வெறும் ஜிம்ம மட்டும் சுத்தம் பண்ணா அப்பாலிக்கா உனக்கு என்ன மரியாத மாஸ்டரு.. அதான் உன் மரியாதய காப்பாத்தனும்ன்ற அப்படிங்கிறதுக்காக நானும் தம்மாதுண்டு கத்துக்கின்னேன் மாஸ்டரு..”என்றவள் மறுபடி தன் பாக்கெட்டில் இருந்த ஆயிரத்தை எடுத்து நீட்டி.. “ம்ச் உனக்காக கத்துக்கின்னதுனால தான் பாரு இன்னிக்கி எனக்கு ஆயிரம் ரூபா லாபம்..” என்று காட்ட அதனை பார்த்த பிறகு அவளை இன்னும் முறைத்தவன்.. “இப்படியே காலம் பூரா ஜிம்ம தொடச்சிக்கின்னே இருக்கலாம்னு இருக்கியோ..”என்று அவன் கேட்க “ம்ச் அண்ணாத்த யாரு உன்னாண்ட அப்டி சொன்னா.. வெட்டியா சுத்தப் போறேன்னு.. நானு ஆபிஸு வேலைக்கு போக போறேன் மாஸ்டரு..” என்று மினி கூற.. “ஓ அப்பிடி..”என்று கிண்டலாக கேட்டவன்.. தன் தாடையில் கை வைத்தவாறே.. “இன்னா வேலைக்கு போக போற..” என்று அவன் தெனாவட்டாக கேட்க அவனின் எகத்தாளம் அவளுக்கு கோவத்தை கொடுத்தது.. ஆனாலும் தன்னை நிதானித்தவாறே அமைதிக்காத்தவள் “என்ன மாஸ்டரு இப்படி கேட்டுகின்ன..நான் படிச்சதுக்கு தான் வேலக்கி போ போற..” என்று கூற. அதில் அவளை நக்கலாக பார்த்தவன் “இப்போ இன்னா சொல்ல வர நீ.. நீ ஒரு உருப்புடாத டிகிரி முடிச்சிக்கின்னியே.. அது என்னமோ பேரு…”என்று அவன் யோசிக்க.. அவளோ கையை முறுக்கியவாறே “கம்யூனிகேஷன் அன்ட் அட்வர்டைசிங் டிகிரி கோர்ஸ்..”என்று முடிக்க “ஹான் அதேதா அதேதா.. ம்ச் அதுக்கு தோதா வேலைக்கு போக போறேன்னு சொல்க்கின்னியா..”என்று கூற அவளும் பல்லை கடித்தவாறே ஆம் என்று வேகமாக தலையாட்டினாள்.. இதை எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பல்லவன் என்ற பல்லி.. “அய்யோ அக்கா இன்னாத்துக்கு இப்போ கைய முறுக்கிக்கின்னு இருக்கு.. இந்த மாஸ்டரு மொக வேற சரி இல்லயே..”என்றவன் யோசனையுடன் நிற்க. “இன்னா இப்டி கேட்டுக்கின்னு இருக்கீங்க மாஸ்டரு.. ம்ச் வேலக்கி போக தான படிச்சேன் நானு.. நீங்க இன்னான்னா இப்டி கேட்டுக்குன்னு இருக்கீயே.. ம்ச் பின்ன நா இன்னா வேலக்கி போகாம டம்மி பீஸா சுத்திக்கின்னு இருப்பேன்னு நெனச்சிக்கின்னியா.. உனக்கே தெரியும் என்னோட ஆசை இன்னான்னு..ஒரு பெரிய கம்பெனில வேலக்கி சேந்து, கை நிறைய சம்பளத்தோட போயீ என் அம்மா முன்னாடி நின்னுக்கின்னு.. “ம்மோய்ய்ய் இந்த குடிச இனி நமக்கு வேணாம்மா.. நாம இந்த சேரில இருந்து ஓடிக்கின்னே இருப்போம்னு சொல்ல வேணாமா…”என்று கண்களில் கனவு மின்ன கூற அதில் ஹாஹா என்று கேலியாக சிரித்தவனோ.. “இன்னாமா கனவு கண்டுக்கின்னு இருக்கன்னு பாரு.. நீ போய் நின்னதும் அப்டியே வேலய தூக்கிக்கின்னு குடுத்தடப்போறானுவோ.. உன்ன மாறியான ஆளுக்கு அம்மாம்பெரிய கம்பெனில வேல குடுக்க அவனுக்கு இன்னா லூசா..”என்றவன் சொல்ல.. அதில் பொலுக்கென ஒரு குத்துவிட்டாள் அவன் முகத்தில்.. அதனை கண்டு அனைவரும் அதிர.. அவளோ அவனை கண்களால் எரித்துக்கொண்டிருந்தாள்.