முகவரி அறியா முகிலினமே..! – 5

4.9
(9)

முகில் – 5

வரதராஜனின் கர்சனையில் அந்த இடமே எதிரொலித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும் வரதராஜனின் இச்செயலை பார்த்து உடல் அதிர ஒரு நொடி தங்களை அறியாமலேயே கால்களை பின் நோக்கி வைத்து  நகர்ந்து நின்றனர்.

பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருக்கும் வரதராஜன் எப்பொழுதும் மக்கள் முன் மரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றும் எண்ணங்களை சிறிதளவு கூட வெளிக்காட்டியதே இல்லை.

பஞ்சாயத்திலும் தீர்ப்பு வழங்கும் போது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்று அவர் எவ்வளவோ முயற்சித்து தான் தீர்ப்பை வழங்குவார்.

அப்படிப்பட்டவர் இன்று தன்னை அறியாமலேயே கோபத்தின் உச்சியில் வார்த்தைகளை தீயாக கக்க அது மக்களுக்கோ பெரும் ஆச்சரியம் தான்.

அதை எண்ணி ஒரு நிமிடம் கண்களை இறுக மூடித் தன்னை சமப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய அருகில் இருந்த பஞ்சாயத்து தலைவர்களுள் ஒருவர் எழுந்து,

“என்ன வரதராஜா இது நீயே இப்படி கோபப்பட்டு பேசினா எப்படி..? கொஞ்சம் பொறுமையாக இரு.. யாருன்னு விசாரிச்சிட்டு அதுக்கப்புறம் கோபப்படுவோம்

என்ன இருந்தாலும் பொண்ண பெத்தவன் இல்லையா அதுதான் கண் கலங்கி மனசில இருக்கும் ஆதங்கத்தையும், கோபத்தையும் வாய் வார்த்தைகளாக வெளி விட்டுட்டான்

அவன் சொல்ற விஷயமெல்லாம் இப்ப நீ காதுல போட்டுக்கொண்டு இப்படி பேசினா அப்புறம் பஞ்சாயத்தை எப்படி நடத்த முடியும் வா வந்து இரு..” என்று வரதராஜனை சமாதானப்படுத்தி இரண்டு அடி தள்ளி விழுந்த கதிரையை ஒருவன் எடுத்து வந்து அதே இடத்தில் போட்டு தனது தோளில் உள்ள துண்டால் அதில் இருக்கும் மண்ணைத் தட்டி விட வரதராஜன் அமைதியாக உட்கார்ந்து முடிந்தவரை தனது கோபத்தை கட்டுக்குள் வைத்தபடி ஒரு முடிவோடு மல்லிகாவின் தந்தை ராசுவைப் பார்த்து,

“இங்க பாரு ராசு உன் பொண்ணு கெட்டுப் போயிட்டா அது உண்மைதான் ஆனால் என் இடத்துக்கு வந்ததால தான் கெட்டுப் போயிட்டான்னு சொல்லாதே

உன் பொண்ண நீ ஒழுங்கா வச்சிருக்க முடியல என் தோப்புல எத்தனை வருஷமா உன் பொண்ணு வேல செய்ற இத்தனை வருஷம் நடக்காதது நேத்து நடந்திருக்கு

இத்தன வருஷமா பாதுகாப்பா தானே இருந்தா என் இடத்துக்கு வேலைக்கு வந்ததால தான் இப்படி நடந்தது என்று சொல்ல வாரியா..?  

அதோட என் தோப்பு, பண்ணை, வயல் இப்படி பல இடங்களில் எவ்வளவு பொண்ணுங்க வேலை செய்றாங்க உன் பொண்ண விட சின்ன பொண்ணுங்க கூட வேலை செய்றாங்க அவங்களுக்கெல்லாம் நடக்காது உன் பொண்ணுக்கு மட்டும் எப்படி நடந்துச்சு..” என்று அவன் கூறிய வார்த்தைகளை வைத்தே அவனுக்கு கொக்கி போட்டான் வரதராஜன்.

“இ..இல்லையா இல்ல நான் அப்படி சொல்ல வரல..” என்று ராசு தடுமாற,

“சரி விடு உன் பொண்ணு உத்தமின்னா யார்  செய்ததுன்னு கேட்டு சொல்லு சொன்னாத்தான் என்னால தீர்ப்பு வழங்க முடியும்

இன்னும் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம் தருவேன் அதுக்குள்ள நீ கேட்டு சொல்லலைன்னா

பஞ்சாயத்தில நாங்க எல்லாம் பேசி ஒரு முடிவு பண்ணிடுவோம் அதுக்கப்புறம் ஐயா எனக்கு நியாயம் வேணும் தர்மம் வேணும் என்று சொல்லி என் வீட்டு வாசல் பக்கம் நீ வந்து நிற்க கூடாது…” என்று கூறியதும் ராசு மல்லிகாவைப் பிடித்து அடித்து,

“யாருன்னு சொல்லுடி பொட்டக் கழுதை என் உயிரை வாங்காதே என் மான மரியாதை எல்லாத்தையும் இப்படி குழி தோண்டி புதைச்சிட்டியே இதுக்குத்தான் அஞ்சு வருஷமா தவமிருந்து காடு மேடு அலஞ்சி உன்ன பெத்தோம் நாசமா போனவளே சொல்லுடி..” என்று அவளுக்கு அனைவரும் முன்னிலையில் அடித்து துவைத்தெடுத்தார் ராசு.

அவளை அவ்வளவு அடித்தும் அவள் வாய் திறக்கவே இல்லை.

“என்ன ராசு உன் பொண்ணு சொன்னாளா..?” என்று வரதராஜன் கிண்டலாக கேட்க,

ராசு தலை குனிந்தபடி இல்லை என்று மறுப்பாகத் தலை அசைத்தார்.

“அப்போ உன் பொண்ணு விரும்பித்தான் இதை செஞ்சிருக்கா சின்னப் பொண்ணுன்னு சொன்ன ஆனா இந்த வயசுலயே ஆம்பள சோக்கு கேக்குது பாத்தியா..” என்று கூறியதும் மல்லிகா நிமிர்ந்து அவரைப் பார்த்து முறைத்து விட்டு மீண்டும் அழத் தொடங்கினாள்.

செந்தாழினி உட்பட அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் மல்லிகாவை பார்க்க பரிதாபத்துடன் கோபமும் எழுந்தது.

‘யார் என்று ஏன் இந்த பொண்ணு சொல்லாம இப்படி எல்லார் முன்னுக்கும் அடி வேண்டி புழுவா துடிக்குது அந்தக் கயவன் யார் என்று சொல்லித் தொலையலாம் தானே..’ என்று அனைவர் மனதிலும் எரிச்சல் உண்டாகியது.

வரதராஜன் உடனே கதிரையில் இருந்து எழுந்து,

“என்ன ராசு உன் பொண்ண வச்சு நாடகம் ஆடுறியா எனக்கு என்னவோ அப்படி ஒன்னு நடக்கவே இல்ல நீங்க எல்லாம் சேர்ந்து நாடகம் ஆடுற மாதிரி இருக்கு

தெரியும் தானே பஞ்சாயத்து நடவடிக்கை எப்படி இருக்கும்னு பொய்யான பிராது கொடுத்தா அதுக்கு வேற தண்டனை பஞ்சாயத்து நேரத்தை வீணடிச்சதுக்கு உங்களுக்கு தனியா 500 ரூபா அபராதம் கட்டணும்..” என்று வரதராஜன் கூறிக்கொண்டே போக,

நாடகமா ஆடுறீங்க என்று கூறியதும் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்த மல்லிகாவுக்கு எல்லை மீறிய கோபம் எழுந்தது.

தன்னை இவ்வாறு கேவலமாக ஊர் மக்களுக்கு முன் வைத்து பேசும் வரதராஜனை பார்த்ததில் ஏதோ விஷப் பாம்பை பார்த்தது போல அருவருத்தாள் மல்லிகா.

ஏதோ முடிவெடுத்தவளாக தாவணி முந்தானையால் கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு,

“ஐயா..!” என்று கோபமாக குரலை உயர்த்தி,

“யாருன்னு சொன்னா நீங்க அவங்களுக்கு மறுக்காம தண்டனை வழங்குவீங்களா?..” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு துணிவுடன் கேட்டாள்.

அனைவருக்கும் பேரதிர்ச்சி இவ்வளவு நேரமும் தலை கவிழ்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த பெண்ணா இவ்வாறு வரதராஜனை எதிர்த்து கத்தியைப் போல வார்த்தைகளை வீசுகின்றாள் எனத் தோன்றியது.

உடனே அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு சற்று நிலை தடுமாறிய வரதராஜன்,

“நி.. நிச்சயமா அ..து அதுக்குத்தானே பஞ்சாயத்து இருக்கு..” என்று கூற,

உடனே அவனது வார்த்தையை கேட்டு இகழ்ச்சி புன்னகையை உதிர்த்து விட்டு தனது வலது கரத்தைத் தூக்கி ஆள்காட்டி விரலால் செந்தூரன் இருக்கும் திசையை நோக்கி நீட்டினாள்.

இதனை எதிர்பார்க்காத பண்ணியாரின் மகன் செந்தூரன் அதிர்ச்சி என்னும் சுழலில் மாட்டிக்கொண்டவனாக அவள் தன்னை நோக்கி விரல் நீட்டுகின்றாள் என்று அறிந்ததும் இவ்வளவு நேரமும் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் உடனே எழுந்து நின்றான்.

அந்த நேரம் தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தேறியது.

செந்தூரனின் பின் நின்ற ஒருவன் ஓடிவந்து பஞ்சாயத்தின் முன் நின்று,

அனைவரும் இவன் ஏன் வந்து முன்னால் நிற்கின்றான் என்று புரியாமல் பார்க்க அவனும் கைகளை முன் கட்டி கொண்டு தலை குனிந்தபடி,

“ஐயா நான் தான் இப்படி செய்தேன் என்னை மன்னிச்சிடுங்க பொண்ணு பார்க்க அழகா இருந்துச்சு அதான் ஐயா பம்பு செட்டுக்குள்ள வச்சு  பலவந்தமா…” என்று சிரித்துக் கொண்டு தலையை சொரிந்தான்.

கை வச்ச பிறகு தான் தெரிஞ்சுச்சு நான் அத்து மீறி தப்பு பண்ணிட்டேன்னு அந்த பொண்ணு அவ்வளவு கத்துச்சு ஆனாலும் நான் இப்படி செஞ்சது தப்புதான் கொஞ்ச நேரத்துல எனக்கு என்ன ஆச்சுன்னு புரியல நான் செஞ்சது பெரிய தப்பு தான் ஐயா எனக்கு என்ன தண்டனை வேணா தாங்க நான் அதை முழு மனசா இந்த பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு ஏத்துக்கொள்றேன்..” என்று அவன் கூறியதும்,

மல்லிகா முதல் முறை தான் அவனைப் பார்ப்பது போல மேலிருந்து கீழ் வரை கண்களால் அளவெடுத்தாள்.

மல்லிகாவை பார்த்து வரதராஜன்,

“என்னம்மா சொல்ற இவனா உன்ன கெடுத்தது ஆமாவா இல்லையா சொல்லு..” என்று கேட்க,

“இவன் சொல்றது உண்மைதானா சொல்லு..” என்று ராசு அதட்டினார்.

எழுந்து நின்ற செந்தூரன் இப்பொழுது துண்டைத் தூக்கி கதிரையில் மீண்டும் தூசி தட்டுவது போல தட்டி விட்டு கிறக்கமாக மல்லிகாவை பார்த்து விட்டு அப்படியே இருக்கையில் அமர்ந்து புன்னகையுடன் நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

வரதராஜன் உடனே,

“அப்போ சரி பஞ்சாயத்து நல்லபடியா முடிவுக்கு வந்துட்டு இனி தீர்ப்பு சொல்லலாமா..?” என்று மக்களை பார்த்துக் கேட்டுவிட்டு வரதராஜன் பஞ்சாயத்து சபை நால்வருடன் இரகசியமாக கலந்துரையாடினார்.

நடப்பதை யாவற்றையும் அமைதியாக ஒரு ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கு அவ்வளவு கோபம் எழுந்தது.

இருந்தும் அனைத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் ஆன வரதராஜன் இதற்கு என்ன தீர்ப்பு வழங்குகின்றார் என்று பார்ப்போம் என அனைத்தையும் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

10 நிமிடங்களில் பஞ்சாயத்து குழு ஒரு முடிவை எடுத்து முன்னால் நிற்கும் அந்தக் கயவனைப் பார்த்து,

“உன்னோட பேரு என்னடா..?”

“மயில்சாமி ங்க..”

“மயில்சாமி ஒரு பொண்ண அத்து மீறி தொட்டது மகா தப்பு நீ செஞ்ச தப்புக்கு பெரிய தண்டனை கொடுக்கணும் ஒரு பொண்ணுட சம்மதம் இல்லாமல் அவளை தொட்டு தாலி கட்டாமல் ஒரு பொண்ணோட கற்ப சீரழிச்சதுக்கு உன்ன வெட்டிக் கொன்னாலும் தப்பில்லை

ஆனா பஞ்சாயத்து சட்டத்தில் ஏன் இங்கே இந்த ஊரிலேயே கொலை பண்ற அளவுக்கு சட்டங்கள் இன்னும் வரல

அதனால வளமை போல தான் நீ 2000 ரூபா அபராதத்தை பஞ்சாயத்தில் கட்டிட்டு 50 சவுக்கடி அந்த பொண்ணு கையால வாங்கணும் அதோட அந்த பொண்ணு வார வெள்ளிக்கிழமை அம்மன் கோயில் வைத்து கல்யாணம் முடிச்சு அந்த பொண்ண மனைவியா ஏத்துக்கணும் என்ன நான் சொல்றது இதுக்கெல்லாம் சம்மதமா.”

“சரிங்கய்யா..” என்று ஆடு மாறி தலையாட்டினான் மயில்சாமி.

“என்னப்பா என்ன நான் சொல்றது இந்த தீர்ப்புக்கு ஊர் மக்களாய் இருக்கிற நீங்க என்ன சொல்றீங்க எல்லாரும் சம்மதிக்கிறீங்களா..?” என்று ஊர் மக்களை பார்த்து வரதராஜன் கேட்க,

ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக “தீர்ப்ப ஏத்துக்கிறோம் ஐயா..” என்று கூறினார்.

தீர்ப்பினை கேட்டதும் ஆதிரன் கொதித்து எழுந்து விட்டான் இதெல்லாம் தீர்ப்பா ஒரு பெண்ணின் கற்பு பறிபோனதற்கு விலை பேசியது போல அல்லவா இருக்கின்றது பெண்ணின் கற்புக்கு மதிப்பு அவ்வளவுதானா

இப்படி என்றால் ஊரில் இருக்கும் பணம் படைத்தவன் எவ்வளவோ பேர் எத்தனையோ பெண்களை கெடுத்து விட்டு பணம் கட்டிவிட்டு அந்த சவுக்கடியை வாங்கிவிட்டு எத்தனையோ பெண்களை திருமணம் செய்து கொள்ளலாமே..!

தீர்ப்பு என்பது தவறை மீண்டும் செய்யாதிருக்க வழங்கும் தண்டனை தவறை செய்ய தூண்டுவதற்கு அல்ல.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!