அரண் 34.
துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க,
எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது.
“இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன் பொல்லாதவன் இவன உயிரோட விட்டால் எங்களோட கதை முடிஞ்சிடும் அதனால இவன உடனே கொள்வது தான் நம்மளுக்கு நல்லது இதோ இந்த துப்பாக்கியால் அவனோட நெஞ்ச குறி பார்த்து சுடு இங்க பக்கத்துல இருக்கிற காட்டுல தூக்கி போட்டுட்டு போயிடுவோம் அங்க நரி சிங்கமெல்லாம் சாப்பிடட்டும் அவன்ட உடம்பு கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது…”
****************
வள்ளியின் அழுகை ஓய்ந்த பாடில்லை. அந்தத் திடமான கரம் அவளது தோளினை தீண்டியதும் பயந்தவள் திரும்பிப் பார்த்த உடன் அந்த உருவத்தை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள்.
“வசுந்தரா அத்தை நீங்களா..? அவர… அவர..” என்று விம்மி விம்மி அழத் தொடங்கினாள் வள்ளி.
அவளது அழுகையைப் பார்த்து மனம் கலங்காமல் மிகவும் தைரியமாக,
“எனக்கு எல்லாம் தெரியும் வள்ளி..” என்று கூறியதும் அழுது கொண்டிருந்த அற்புத வள்ளி அழுகையை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் வசுந்தராவை நிமிர்ந்து பார்த்தவள், இமைக்க மறந்த கண்களுடன்,
“என்ன சொல்றீங்க..? எல்லாம் தெரியும்னா..?” என்று அவள் புரியாமல் வினவ,
வசுந்தரா வள்ளியின் முகத்தை தவிர்த்து நேரே பார்த்து,
“துருவன காணல அதைத்தானே நீ சொல்ல வந்த..” என்றதும்,
வசுந்தராவின் இரு கைகளையும் பிடித்து உலுப்பியபடி,
“ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்..? சொல்லுங்க தயவு செய்து சொல்லுங்க..?” என்று அழுகையுடன் கெஞ்சினாள்.
அவளது கெஞ்சலையும், அழுகையையும் பார்த்து கருணை பொங்கிய வசுந்தரா,
“வள்ளி இப்போ அழுவதற்கு நேரமில்லை நான் எல்லாம் சொல்றேன் கொஞ்சம் பொறுமையா கேளு முதல் அழுகையை நிறுத்து நான் எல்லாத்தையும் இங்கு மறைந்திருந்து பார்த்துட்டு தான் வந்தேன்..” என்று வசுந்தரா கூற தன்னை அறியாமல்,
‘கடவுளே என்னோட கணவருக்கு எதுவும் விபரீதமான நடந்திருக்கக் கூடாது..’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டது வள்ளியின் அன்பு மிகுந்த நெஞ்சம்.
“என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு சீக்கிரமா என்ன நடந்தது என்று சொல்லுங்க வசுந்தரா அத்தை சத்தியமா என்னால முடியல..” என்று கூறியபடி மீண்டும் அருகில் இருக்கும் மின் கம்பத்தை கொழுகொம்பாகப் பற்றிக் கொண்டாள்.
அவளது முகத்தை கனிவாகப் பார்த்த வசுந்தரா,
“நீ என் கூட போன் பேசிட்டு இருக்கும்போதே நான் கார்ல வந்து கொண்டு தான் இருந்தேன் வந்து ஓரமா கார நிப்பாட்டிட்டு உன்னோட கால்ல இருந்தபடியே சர்ப்ரைஸா அப்படியே உள்ள வருவோம் என்று இருக்கும்போது துருவன யாரோ இரண்டு பேர் தோளில் கை கொடுத்து தூக்கிக் கொண்டு வந்து ஒரு கருப்பு கார்ல ஏற்றினார்கள் எனக்கு அப்படியே அதிர்ச்சி ஆயிட்டு, நீ பக்கத்துல இருக்கியான்னு நான் கண்களால் தேடிப் பார்த்தேன் ஆனா உன்னையும் காணல துருவன் அன்கான்ஷியஷா இருந்தான்.
டிஅவர்களுக்கு பின்னுக்கு ஒரு பொண்ணும் வந்தாள் அவளைப் பார்த்தால் தமிழ் பொண்ணு மாதிரி தான் இருந்துச்சு. அந்த பொண்ணு கை கொடுத்து இருவருடனும் சிரித்து ஏதோ பேசி விட்டு அதே காரில் ஏறிச் சென்றார்கள் அவர்கள் ஏதோ அவர்களுக்குள் மர்மமாக பேசிக்கொண்டார்கள் ஆனால் நான் அவங்கள தூரத்தில் இருந்து என்னால அவங்க பேசியதை கேட்க முடியவில்லை..”
வசுந்தரா கூறுவதை நன்றாக காதைத் தீட்டி கேட்டவள், துருவன் கடத்தப்பட்டு விட்டான் என்பதே அவர் கூறிய செய்தி என்பதை அவளது மூளைக்கு உரைக்க சில நிமிடங்கள் ஆனது.
உரைத்த பின்பும் அதனை நம்ப முடியாமல் அதனை உள்வாங்க மாட்டேன் என்று மூளையும், மனமும் தவித்தது.
‘சில நிமிடங்களின் முன் சிரித்து பேசி என்னுடன் மகிழ்ந்த என்னோட கணவரை யாரோ கடத்திச் சென்று விட்டார்களா..?’
தலையைப் பிடித்துக் கொண்டு தனக்குத்தானே,
“இல்லை இல்லை அவருக்கு ஒண்ணும் ஆகி இருக்காது இல்லை இல்லை..” என்று மீண்டும் மீண்டும் பித்துப் பிடித்தவள் போல உளறிக் கொண்டிருந்தாள்.
அங்கு நடுவீதியில் வாகனங்கள் போய் வர சிலரது நடமாட்டமும் இருக்க இவ்வாறு பிரபல உணவகத்திற்கு முன் நின்று வள்ளி பைத்தியக்காரி போல உளறிக் கொண்டிருப்பதை பார்க்க வசுந்தராவிற்கு கோபம் ஒரு பக்கம் பரிதாபம் மறுபக்கம் என அவளைத் தேற்றுவது எவ்வாறு என்று புரியாமல் ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியிருந்தாள்.
வசுந்தரா நிலைமையை கைக்குள் கொண்டு வர எண்ணி துருவன் பற்றிய சிந்தனைகளில் மாட்டிக்கொண்டிருக்கும் வள்ளியின் தோளைப் பிடித்து,
“வள்ளி.. வள்ளி..” என உலுப்பினார்.
உடனே வசுந்தராவை நிமிர்ந்து பார்த்த வள்ளி,
“ஐயோ நான் இப்போ என்ன செய்வேன் என்னால நீங்க சொல்றத நினைச்சுக் கூட பார்க்க முடியல அவர அப்படி யாரு கடத்திட்டு போயிருப்பா இந்த இடம் தெரியாத மொழி தெரியாத ஊர்ல நான் அவரை எங்கன்னு தேடிக் கண்டுபிடிப்பேன்..” என்று மீண்டும் வசுந்தராவை இறுக்கி அணைத்து உடைந்து அழத் தொடங்கினாள் வள்ளி.
இப்படி சிறுபிள்ளை போல் துன்பத்தில் ஊழல்பவளைத் தேற்றி தேற்றி தோற்றுப்போன வசுந்தரா அவளது போக்கில் சிறிது நேரம் அழுது தீர்க்கட்டும் என்று தலையை வருடிய படி சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு அழுது ஓய்ந்ததும்,
“வள்ளி இங்கே பார் இப்போதான் நீ ரொம்ப தைரியமா இருக்கணும் இப்போ அழுது எந்த பிரயோசனமும் இல்லை எப்படியும் துருவனை கண்டுபிடித்துவிடலாம் நீ கவலைப்படாத..” என்று வசுந்தரா கூறியதும்,
திக்கற்ற இருளில் தென்படும் அகல் விளக்காக வசுந்தராவின் சொற்கள் அவளது மனதைத் தீண்ட தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்த வள்ளி எழுந்து வசுந்தராவின் முகம் பார்த்து,
“உண்மையாவா சொல்றீங்க அவரை கண்டுபிடித்து விடலாமா..? எப்படி..?” என்று வள்ளியின் வதனம் பிரகாசிக்க துருவனை எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையிலும், ஆர்வத்திலும், ஒரு உத்வேகத்திலும் வசுந்தராவைப் பார்த்து கேட்டாள்.
சிரித்தபடி” ஆமா கண்டுபிடிச்சிடலாம் ஆனா நீ இப்படி அழுது கொண்டு நேரத்தை வீணாக்கினால் கொஞ்சம் கண்டுபிடிக்கிறது கஷ்டம் தான்..” என்று வசுந்தரா கூற,
“அப்படி நீங்க அவர கண்டுபிடிக்கிறதுக்கு உதவி செஞ்சீங்கன்னா உங்கள என் குலசாமியா நினைச்சு கும்பிடுவேன் அத்தை..” என்று கண்களில் நீர் பெருக இரு கைகளையும் கூப்பி வசுந்தராவை வணங்கினாள்.
வள்ளியின் வார்த்தைகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட வசுந்தரா,
“ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி என்னை வயசானவளா ஆக்கிடாத எனக்கு உன்ன விட ஜஸ்ட் இரண்டு வயசு தான் கூட ஓகே யா..? சில் பேபி.. நீ தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு நல்ல வேலை செஞ்சிருக்க என்ன தெரியுமா..?” என்று பசுந்தரா கேட்க இல்லை என தலையாட்டினாள் வள்ளி.
“துருவனுக்கு தெரியாம எனக்கு கால் பண்ணி இந்த பார்ட்டிக்கு கூப்பிட்டது தான் நீ செஞ்ச நல்ல வேலை இப்போ நான் இங்க வராட்டி உன் கதி அதோ கதி தான் இங்கு யாரிடம் போய் உதவி கேட்டு இருப்ப நல்லவேளை சரியான நேரத்தில் நான் வந்தது. நான் உனக்கு கட்டாயம் ஹெல்ப் பண்றேன் கவலைய விடு முதல் துருவன கண்டுபிடிப்போம்..”
“எப்படி வசுந்தரா அத்தை அவர கண்டுபிடிக்கிறது”
“இவ்வளவும் என் கண்முன்னே நடக்கும் போது நான் சும்மா இருப்பேனா அந்த கார் கிளம்புறதுக்கு முன்னுக்கு வேகமாக நடந்து வந்து அந்த காருக்குள்ள என்னோட போனை போட்டுட்டேன் அதுல..” என்று அவர் எதையோ கூற வர,
“சூப்பர் அத்தை அந்த போனுக்கு கால் அடிங்க..” என்று வள்ளி ஆர்வமாகக் கூற,
“வள்ளி இப்படி அதிக பிரசங்கித்தனமா நடந்துக்காத அதை நான் சைலன்ட்ல தான் போட்டுட்டு தான் காருக்குள்ள போட்டேன் கால் பண்ணினா அந்த இருட்டுல அந்த போனோட வெளிச்சமே அதை காட்டிக் கொடுத்திடும் அத எடுத்து அங்கு இருக்கிறவங்க யாருடையாவதா என்று பார்ப்பான் அது அவங்களோடது இல்லன்னு தெரிஞ்சதும் தூக்கி எறிஞ்சிடுவான் அப்போ எப்படி அவனை நீ கண்டுபிடிப்ப..? கொஞ்சம் மூளையை டெக்னிக்கலா யோசி..”
“மன்னிச்சிடுங்க அத்தை இப்போ என்ன அத்தை செய்றது..?”
“ஓகே விடு என்கிட்ட ஒரு நல்ல பிளான் இருக்கு அதன்படி பக்காவா செய்தா துருவனை காப்பாற்றலாம் ஆனா அதுல நிறைய சிக்கல் இருக்கு ரெண்டு பேரும் கவனமாய் இருக்கணும் கொஞ்சம் மிஸ் ஆயிட்டேன்னா நாங்களும் துருவனோட சேர்ந்து மாட்டிடுவோம் அதனால ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும் இதுல மூணு பேரோட உயிரும் சம்பந்தப்பட்டிருக்கு..” என்று வசுந்தரா தனது பிளானை ஒவ்வொன்றாக ஆதி முதல் அந்தம் வரை வள்ளிக்கு விளங்கப்படுத்தினார்.
துருவனைக் காப்பாற்றுவதற்காக வசுந்தரா போட்ட திட்டத்தை கேட்டதும் வள்ளிக்கு எப்படியும் துருவனை கண்டுபிடித்து காப்பாற்றி விடலாம் என்ற முழுமையான நம்பிக்கை வந்து விட்டது.
அப்போதுதான் வள்ளியின் முகத்தில் கவலையால் சூழ்ந்திருந்த கருமேகங்கள் கலைந்து நம்பிக்கையுடன் தெளிவான வானம் தென்படுவது போல அவளது முகத்தில் சோகம் மறைந்து நம்பிக்கை என்னும் எழில் சூழ்ந்து கொண்டது.
“வாங்க வசந்தரா அத்தை அவங்கள உண்டு இல்லைன்னு பண்ணுவோம்..” என்று இருவரும் துருவனைத் தேடி வீறு நடை போட்டு சிங்கப்பெண்களாகப் புறப்பட்டனர்.
இருவரும் சேர்ந்து துருவனைக் கண்டுபிடிக்கின்றனரா..? இல்லை அல்லது தானாக சென்று ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனரா என்று பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்…