லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 17
“சாரி ஸ்டூடண்ட்ஸ்.. அம் நாட் ஃபீலிங் ஓகே.. நீங்க உங்க ப்ராஜெக்ட் வேலையை பாருங்க.. நான் நாளைக்கு கிளாஸ் எடுக்கிறேன்..” என்ற மதி தன் இருக்கையில் வந்து தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்..
இந்த கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து பாடம் எடுக்க முடியாமல் அவள் தடுமாற்றம் அடைந்தது இதுவே முதல் முறை.. மாணவர்களுக்கே அவள் அப்படி தடுமாறியது ஆச்சரியமாக இருந்தது..
அந்த வகுப்பு முடிந்து விரிவுரையாளர் அறைக்கு வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்து விட்டாள்.. அடுத்த வகுப்புக்கு கூட செல்லாமல் வேறு ஒரு ஆசிரியரை அந்த வகுப்பை எடுக்க சொல்லி அனுப்பிவிட்டு அப்படியே அந்த மேஜையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..
மாலை தன் வகுப்புகளை முடித்துவிட்டு அந்த அறைக்குள் நுழைந்த பார்கவி மதியழகியை பார்த்து “ஹேய்.. என்னடி ஆச்சு? இப்போ உனக்கு கிளாஸ் இருக்குல்ல? போகலையா?” என்று கேட்க “இல்லடி.. என்னவோ மனசு சரியில்ல அதான் இங்க வந்து படுத்துட்டேன்..”
அவள் சொல்லி முடிக்கும் நேரம் அந்த அறைக்குள் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லியபடி நுழைந்தான் இந்தர்..
அவனைப் பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டு “வந்துடுச்சு.. அடுத்த தலைவலி..” எனவும் அவனோ “மதிக்கு தலை வலிக்குதா? நான் வேணா ஏதாவது மெடிசன் வாங்கிட்டு வரட்டுமா வெளியில் போய்..”
அவன் பார்கவியை கேட்க “ம்ம்ம்.. இந்த தலைவலி எந்த மெடிசினாலயும் சரியா போகாது.. இவன் என்னை விட்டு ஒரேடியா போயிட்டான்னா தன்னால இந்த தலைவலி காணாம போயிடும்.. ஏன் தான் இப்படி என்னை துரத்துறானோ தெரியலை.. நான் தான் சொல்றேன் இல்ல..? என்னால அவனை லவ் பண்ண முடியாதுன்னு.. தயவு செஞ்சு என்னை விட்டுட சொல்லு பார்கவி.. என்னை கேம்பஸ்க்குள்ள தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொன்னவன் இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கான்..?”
அவள் கேட்கவும் அவனோ “நான் யாரையும் தொந்தரவு பண்ண வரல.. இந்த அசைன்மென்ட்டை சப்மிட் பண்ணலாம்னு தான் வந்தேன்.. இந்தாங்க.. இதை மதி கிட்ட கொடுத்துடுங்க..”
பார்கவி கையில் அந்த காகிதக் கற்றையை கொடுத்தவன் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தான்..
மதியின் மேஜையில் அவன் கொடுத்ததை வைத்த பார்கவி “என்ன ஆச்சுடி உனக்கு? ஏன் இப்படி இருக்க? அதான் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு இல்ல?” என்று கேட்க “என்னடி நல்லபடியா போயிட்டு இருக்கு? எனக்கு ரொம்ப பயமா இருக்கு பார்கவி.. இந்த சின்ன பையனால ஏதாவது பெரிய பிரச்சனை வந்துருமோன்னு ரொம்ப கவலையா இருக்குடி.. நிச்சயமா அப்படி ஏதோ நடக்க போகுதுன்னு என் மனசுல தோணிக்கிட்டே இருக்கு.. அந்த தீரனோட என்னால நடிக்கவும் முடியலடி.. ஏதோ ஒரு மாதிரி இருக்குடி..”
“என்னடி இப்படி சொல்ற நீ? ஏற்கனவே நம்ம காலேஜ் ஆனுவல் டேல டீச்சர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு டிராமா ஆக்ட் பண்ணும் போது அந்த சேகரோடையே ஜோடியா நடிச்சவ தானடி நீ? அப்பெல்லாம் உனக்கு அது ஒன்னும் கஷ்டமா இல்லையே.. தீரன் அண்ணாவோட நடிக்கறதுக்கு உனக்கு என்னடி அவ்வளவு தயக்கம்? அவரு பார்க்க பழக ஒரு மாதிரி இருக்காரே தவிர ரொம்ப நல்ல மனுஷன் டி.. அந்த சேகர் மாதிரி ஆளு கூட நடிச்ச உனக்கு அவரோட நடிக்கிறதுல தயக்கமே இருக்க வேண்டாம்..”
“எனக்கு புரியுதுடி.. இன்ஃபேக்ட் அவர் ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்.. ஆனா அவரை பார்த்தாலே எனக்கு கை கால் எல்லாம் உதறுதுடி.. உனக்கு அதை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியலை.. என்னால அவர் கண்ணை பார்த்து பேச கூட முடியல டி..”
அவள் சொன்னதைக் கேட்ட பார்கவி யோசனையாய் புருவம் சுருக்கினாள்.. மனதிற்குள் “இல்லையே.. இது வேற ஏதோ பிரச்சனை போல தெரியுது.. ஒருவேளை இவளுக்கு தீரா அண்ணன் மேல..” என்று யோசித்தவள் “ம்ஹூம்.. நம்பளா இந்த மாதிரி ஏடாகூடமா எதுவும் நினைக்க வேண்டாம்.. அப்படி இருந்தா அது தெரியாமயா இருந்திருக்கும் அவளுக்கு.. அதுவும் தீரன் அண்ணன் மாதிரி படிக்காதவர்.. முரட்டு ஆள்கிட்டலாம் இவளுக்கு அப்படி எல்லாம் எந்த எண்ணமும் வராது..”
தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டவள் “அதெல்லாம் இந்த ரெண்டு நாள் அவரோட சேர்ந்து நடிச்சா அதெல்லாம் சரியாயிடும் டி.. நீ கவலைப்படாத.. சரி.. நான் ஒன்னு சொல்லவா.. வா.. கேண்டீன் போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்.. எல்லாம் சரியா போயிடும்..” என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு கேன்டினுக்கு சென்றாள் பார்கவி..
அன்று மாலை மறுபடியும் நால்வரும் பார்கவியின் வீட்டில் குழும தீரன் கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தான்.. ஆனால் மதியழகி முகத்திலோ குழப்பம் மற்றும் கவலைகளின் கலவையான ரேகைகள்..
பார்கவி சமையல் அறைக்கு சென்று அவர்களுக்கு சிற்றுண்டியும் குடிக்க காப்பியும் தயார் செய்ய.. பாண்டி அவளுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவளுக்கு சின்ன சின்ன காதல் சீண்டல்கள் மூலம் உபத்திரவங்கள் செய்து கொண்டிருந்தான்..
வரவேற்பறையில் படபடப்போடு அமர்ந்திருந்த மதியழகியின் முகத்தை பார்த்த தீரனுக்கு அவள் ஏதோ பெரிய குழப்பத்தில் இருக்கிறாள் என்பது புரிந்து தான் போனது..
அவள் அருகே வந்தவன் “ஏதாவது பிராப்ளமா? உங்களால முடியலனா நம்ம இதை விட்டுடலாம்.. வேண்டாம்.. உங்களை கஷ்டப்படுத்தி நடிக்க வைக்கிறதுல எனக்கும் விருப்பம் இல்லை.. நான் அந்த பொண்ணை வேற எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்.. உங்களை தொந்தரவு பண்ற பையன் யாருன்னு சொல்லுங்க.. என் ஸ்டைல்ல அவனுக்கு நாலு காட்டுகாட்டி மிரட்டி அடக்கி வைக்கிறேன்..”
அவளிடம் காதல் சொல்லி அவளுக்கு வலியை கொடுப்பவன் தன் தம்பி தான் என்று அறியாது பேசிக் கொண்டிருந்தான் தீரன்..
அவ்வளவு தூரம் தீரன் பேசிய பிறகு அவளால் அதற்கு மேலும் பிடிவாதமாய் இருக்க முடியவில்லை..
“எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புதுசா இருக்கு.. வேற ஒன்னும் இல்ல.. பரவால்ல.. நம்ப நடிச்சு பார்க்கலாம்.. பார்கவி சொல்ற மாதிரி இந்த மூணு நாள் பிராக்டிஸ் பண்ணா ஒரு வேளை நம்ப நல்லா நடிச்சுருவோமோ என்னவோ.. இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை.. அதனால கொஞ்சம் சங்கடமா இருக்கு..” அவன் முகத்தை பார்க்காது தலை குனிந்தபடியே பேசினாள் மதியழகி..
அவனுக்கோ அவள் அப்படி அவன் முகம் பாராமல் பேசியதே மனதில் எங்கோ ஒரு மூலையில் வலித்தது..
“இன்னிக்கு ட்ரை பண்ணி பார்ப்போம்.. முடியலைன்னா விட்டுடுவோம்.. ஓகேவா? நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இன்னிக்கு இது முடியலன்னா நான் அந்த பையனை மிரட்டி ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.. சரியா?”
அவன் அவளுக்காகவே பார்த்து பார்த்து தன் இயல்பான பாஷை நடுவில் தப்பி தவறி கூட நுழைந்து விடாமல் தயங்கி தயங்கி ஆறுதல் சொல்லி அவளை ஊக்கப்படுத்துவது போல் பேச அதற்கு மேலும் அவனை நிமிர்ந்து பாராமல் இருக்க மனம் வராமல் ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.. அவன் கண்களை பார்த்த நொடி அதிலேயே தொலைந்து போனாள் பெண்ணவள்..
அவனுடைய இரண்டு விழிகளையும் சந்தித்த நொடி அவளுடைய இரு கருவிழிகளும் பெண்டுலம் போல இடவலமாய் ஆடிய படி அந்த ஆழ்ந்த பார்வையில் இருந்து மீள முடியாமல் போக தவித்து போய் இமைகள் படபடத்து மறுபடியும் அவசரமாய் விழி தாழைத்து தலை குனிந்து அமர்ந்தாள் அவள்.. அவள் இதயமோ எக்ஸ்பிரஸ் வேகத்தில் படபடவெனா அடித்துக் கொண்டிருந்தது அந்த நொடி..
“என்ன நடக்குது எனக்கு?” புரியாமல் தவித்து போனாள் அவள்.. அவனுக்கும் ஒரு நொடி தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் குழப்பமே மேலோங்கி நின்றது..
சட்டென அவன் அங்கிருந்து நகர்ந்து சற்று தள்ளி அமர அவளுக்கோ அப்போதுதான் கொஞ்சம் சீராக மூச்சு விட முடிந்தது.. நினைவு தெளிவாகி தன் பையில் இருந்து ஒரு தாளை எடுத்தவள் “இந்த பேப்பர்ல எனக்கு என்ன என்ன பிடிக்கும்னு எழுதி வெச்சிருக்கேன்.. இந்தாங்க.. இதை பார்த்து படிச்சுக்கோங்க..”
அவள் அப்படி சொல்லவும் அந்த காகிதத் துணுக்கை வாங்கியவன் “அப்படின்னா நானும் எனக்கு என்ன பிடிக்கும்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. நல்லா கவனிச்சுக்கோங்க..” தனக்கு பிடித்த உணவு.. தனக்கு பிடித்த உடை.. தனக்கு பிடித்த நிறங்கள்.. என பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தான் அவன்..
அதை கேட்டு நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டவள் தனக்கு பிடித்தவைகளும் அவனுக்கு பிடித்தவைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதை எண்ணி வியந்து போனாள்..
“மதி மேடம்.. இதோட நம்ம ஃபேமிலில யார் யார் இருக்காங்க.. அவங்க என்ன பண்றாங்க.. இதெல்லாமும் தெரிஞ்சுக்குவோம்… எனக்கு ஒரு தம்பி இருக்கிறான்.. அவனை தவற குடும்பம் சொல்லிக்க எனக்கு வேற யாரும் கிடையாது..”
அவன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து வந்த பாண்டி “என்ன தீரா ரெடியா? அடுத்த சீன் எப்படின்னு பாக்கலாமா?” என்று கேட்க இருவரும் தாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து அவன் புறம் திரும்பினார்கள்..
பாண்டிக்கோ அவர்கள் இருவரும் அப்படி சகஜமாக பேசிக் கொண்டிருந்த விதத்தில் நிச்சயம் அவர்கள் இரண்டு நாட்களில் நன்கு பழகி ஓரளவுக்கு இந்த நாடகத்தை சிறப்பாக நடத்தி விடுவார்கள் என்று நம்பிக்கை வந்தது..
“ரெண்டு பேரும் ஏதாவது முக்கியமா பேசிகிட்டு இருக்கீங்களா? அது.. டிஃபன் ரெடி ஆயிடுச்சு.. நீங்க ரெண்டு பேரும் வந்தீங்கன்னா நம்ம டிராமா பிராக்டிஸ் பாத்துக்கிட்டே அப்படியே டிஃபன் சாப்பிட்டு முடிச்சிடலாம்..” என்று அவன் சொல்லவும் “முக்கியமால்லாம் ஒன்னும் இல்ல பாண்டி.. எங்க ஃபேமிலி பத்தி தெரிஞ்சுக்கணும் இல்ல..? அதுதான் ஒருத்தருக்கு ஒருத்தர் அதை பத்தி பேசிகினு இருந்.. சாரி பே..சி..க்..கிட்டு இருந்தோம்..” அவனுடைய இயல்பான பாஷை நடுவில் வந்துவிட மிகவும் சிரமப்பட்டு அதை திருத்திக் கொண்டான்..
“அதை பத்தி பேசலாம்னு தொடங்கச்சே தான் நீ வந்துட்டே..”
“ஹோ.. நானே அதை பத்தி பேச சொல்லணும்னு நெனச்சேன்.. ஆனா இப்போ டிஃபன் சூடு ஆறிடும்.. அதனால முதல்ல நம்ம பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டே அதையெல்லாம் காலி பண்ணிட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஃபேமிலி பத்தி எல்லாம் பேசிடலாம்.. ஓகேவா?”
அவன் சொன்னதும் இருவரும் சரி என தலையாட்டி விட்டு அவனோடு உணவறைக்கு நடந்தார்கள்..
முதல் நாள் செய்தது போலவே தீரன் உணவறையில் அமர்ந்திருக்க மதியழகி வரவேற்பறையில் இருந்து மெல்ல நடந்து உள்ளே வந்து கண்களால் தீரனை தேடுவது போல் நடித்து அவன் முகத்தில் தன் பார்வையை கொண்டு வந்து நிலை படுத்தினாள்..
அவனோ எந்த உணர்வையும் தவறவிடாமல் இயல்பாகவே அவளைக் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட முகமலர்ச்சியை வெளிப்படுத்தி வேகமாக எழுந்து வந்து “ஹாய் கண்ணம்மா.. வந்துட்டியா?” என்றபடி அவள் தோளில் பட்டும் படாமல் அணைத்தாற் போல் கை வைத்து தன் இன்னொரு கையால் அவள் வல கையை பிடித்து அழைத்துப் போகவும் அவளுக்கோ எதோ மூச்சு அடைத்தது போல் திணறலாய் இருந்தது அவன் அணைப்பில்..
அவனுடைய அந்த மெல்லிய அணைப்பிலேயே அவள் தேகம் நடுங்கி நெளிந்து கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.. மேஜைக்கு அருகில் வந்ததும் அவளை விட்டு அவன் விலகவும் அவளையும் அறியாமல் ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது..
அதைக் கண்ட பாண்டி தலையை இடவலமாய் ஆட்டி “ஐயோ பாண்டி.. உனக்கு ரொம்ப பெரிய சேலஞ்சா இருக்கும் போல இருக்கே இது.. இவங்க ரெண்டு பேரையும் லவ்வர்ஸா நடிக்க வச்சுட்டா இந்த ஊர்லயே நீ தாண்டா பெரிய டைரக்டர்..” தனக்குள் சொல்லிக் கொண்டான்..
தீரனோ சற்றுக் குழப்பமான முகத்துடனேயே நாற்காலியை பின்னால் இழுத்து அவள் விழி பார்த்து அமரச் சொல்ல அவளும் முதல் நாள் செய்தது போலவே பட் என அமர்ந்திருந்தால் அந்த இருக்கையில்.. இவ்வளவு நேரமும் அவன் முகம் பார்க்க கூட அவளுக்கு துணிவு வரவில்லை.. அவளுடையடைய நடவடிக்கைகளில் தீரனும் கொஞ்சம் கலங்கித் தான் போனான்..
அவள் அருகில் அமர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என பாண்டியை கேள்வியாய் பார்க்க “என்ன தீரா பாக்குற? அதான் இங்க ஒரு வெயிட்டர் ரெடியா இருக்கனே.. கூப்பிட்டு ஆர்டர் குடு.. ஆர்டர் கொடுக்கும் போது மதி சிஸ்டருக்கு என்னென்ன பிடிக்குமோ அதைத்தான் நீ ஆர்டர் பண்ணனும்.. சரியா?”
அவள் கொடுத்த தாளில் இருந்த அவளுக்கு பிடித்த உணவுகளை அப்போதுதான் படித்து பார்த்தவன் ஆச்சரியத்தில் விழி விரித்தான்.. கிட்டதட்ட அவளுக்கும் அவனுக்கும் ஒரே உணவு வகைகள் தான் பிடித்திருந்தன..
அவன் ஒவ்வொரு உணவின் பெயரையும் சொல்லவும் “தீரா.. உனக்கு பிடிச்சதை சொல்லாத.. மதி சிஸ்க்கு புடிச்சது சொல்லுன்னு தானே சொன்னேன்.. நீ எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுறதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கே..?” பாண்டி சொன்னதை கேட்டு தன் இதழுக்குள் சிரித்து கொண்டாள் மதியழகி..
பாண்டி அவர்களை புதிராய் பார்க்க “பாண்டி.. அவங்களுக்கும் இதுதான் புடிக்கும்.. அதனாலதான் இதெல்லாம் கொண்டு வர சொன்னேன்..” தீரன் சொல்ல இப்போது பாண்டிக்கு வியப்பில் புருவங்கள் உயர்ந்தன..
அவனுக்கு என்னவோ இந்த சந்திப்பு தங்களால் எதுவும் நிகழவில்லை.. இவர்கள் இருவரும் சந்தித்ததே இறைவனின் விளையாட்டுதானோ என்று தோன்றியது..
“சரி.. நான் போய் எடுத்துட்டு வரேன்.. நீங்க அன்னைக்கு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணும்போது இது எல்லாமே கிடைக்கும்.. எங்க வீட்ல என் அருமை பொண்டாட்டி என்ன பண்ணி வச்சிருக்காளோ அதைத்தான் கொண்டு வருவேன்.. ஓகேவா.. அவ இப்போ வாழைக்காய் உருளைக்கிழங்கு பஜ்ஜி மட்டும் தான் போட்டு இருக்கா.. ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணி அதையே நீங்க ஆர்டர் பண்ண ஐட்டங்களா நெனச்சு சாப்பிடணும்.. சரியா?”
பொறுப்பான கணவனாய் அவன் சொன்னதைக் கேட்ட இருவருமே மனம் விட்டு சிரித்தார்கள்.. “பவிக்கண்ணூ.. அந்த பஜ்ஜியும் காபியும் எடுத்துட்டு வாம்மா..”
பாண்டி சமையலறைக்குள் எட்டி பார்த்து அழைக்க பார்கவி உள்ளிருந்து “இதோ.. இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம்.. அது வரைக்கும் ரெண்டு பேரையும் ஏதாவது ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க சொல்லுங்க..”
கண்ணடித்து அவள் சொல்லவும் அவனும் இதழ் விரித்து சிரித்தபடி வெளியே வந்து “என்னப்பா பார்கவி சொன்னது காதுல விழுந்துதில்ல..? அடுத்த சீனை ஆரம்பிங்க..”
என்க என்ன செய்ய வேண்டும் என்பது போல் பார்த்தான் தீரன்..
“லவ்வர்ஸ் எல்லாருமே ஒரு சின்ன கேப் கிடைச்சா கூட ஒருத்தர் கைய இன்னொருத்தர் புடிச்சுகிட்டு ரொமான்டிக்கா லுக்கு விட்டுகிட்டு ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக்கிட்டு தான் இருப்பாங்க.. இப்ப நீங்களும் அதைதான் பண்ணனும்.. அப்புறம் தீரா.. சட்டுனு நீயா அவங்க கைய புடிக்க கூடாது.. நீ உன் கையை நீட்டி அவங்க கைய குடுக்க சொல்லு.. அவங்க அவங்க கையை கொடுத்த அப்புறம் அந்த கைய இதமா வருடி அவங்களை ரொமான்டிக்கா பார்க்கணும்..”
தீரன் அவன் சொன்னதைக் கேட்டு மதியழகியின் முகத்தை தான் பார்த்தான்.. அவள் முகமோ பாண்டி சொன்னதைக் கேட்டு வெளுத்து போய் இருந்தது பயத்தில்.. ஆனால் பாண்டியோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “சிஸ்டர் தொடங்கலாமா?” என்றவன் “ஸ்டார்ட் பண்ணு தீரா.. அப்புறம் டிஃபன் வேற ஆறி போயிடும்.. நல்லா இருக்காது.. இப்போ பஜ்ஜி வர்ற ரெண்டு நிமிஷத்துக்குள்ள நீங்க என்ன பண்றீங்கன்னு நான் பார்க்கிறேன்..”
அவன் சொல்லவும் தீரன் மெதுவாக அவள் முகம் பார்த்தான்.. அவளோ கலங்கிய விழிகளோடு அவனை பார்க்க அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக கண்ணை மூடித் திறந்தவன் தன் கையை எடுத்து மேஜை மேல் வைத்து அவள் கையை தருமாறு கேட்க அவளும் வேகமூச்சு எடுத்துக் கொண்டே நடுங்கும் விரல்களை அவன் விரல்கள் மீது மெல்ல லேசாக தீண்டுவது போல் வைக்க அந்த ஒரு நொடியில் மொத்தமாய் விதிர்விதிர்த்துப் போனாள் அவள்..
அந்த ஒரு தீண்டல் அவளுள் என்ன என்னவோ மாற்றங்களை கொண்டு வந்தது.. இதயம் அடுத்தவருக்கு வெளியே தெரியும்படி அதிர்ந்து கொண்டிருக்க பாதத்திலிருந்து தலைவரை நாடி நரம்புகளில் ஓடிய ரத்தம் சூடு ஏறி பிரஷர் குக்கரில் இருக்கும் நீராய் கொதிக்க ஒரே நொடியில் சரேலென தன் கையை அவன் கையில் இருந்து எடுத்துக் கொண்டவள் “இல்லை.. இல்லை.. இது என்னால முடியாது.. சார்.. ரொம்ப சாரி சார்.. நீங்க வேற ஏதாவது பொண்ணை பாத்து வர சொல்லி உங்க லவ்வர்ன்னு சொல்லி உங்க பின்னாடி வர்ற அந்த பொண்ணை சரி பண்ணிக்கோங்க.. நான் வேற ஏதாவது வழி பாத்துக்குறேன்.. என்னால இது முடியாது.. நான் கிளம்புறேன்.. பார்கவி கிட்ட சொல்லிருங்க..” என்று படபடப்பாக சொல்லிவிட்டு அவசரமாய் அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள் மதியழகி..
தீண்டாய்
மெய் தீண்டாய்..
தாண்டாய்
படி தாண்டாய்..
ஒரு விரல் வந்து
என்னைத்
தீண்டியதே..
என் நரம்போடு
வீணை
மீட்டியதே..
மனம் அவன்தானா
இவன் என்று
திடுக்கிட்டதே….
விழியோடும்
தீண்டல் உண்டு
விரலோடும்
தீண்டல் உண்டு
இரண்டோடும்
பேதம் உள்ளது..
விழித்தீண்டல்
உயிர் கிள்ளும்
விரல் தீண்டல்
உள்ளம் கிள்ளும்
அதுதானே
நீ சொல்வது…
உனைத் தேடி
மண்ணில் வந்தேன்
எனைத்தேடி நீயும்
வந்தாய்
உன்னை நானும்
என்னை நீயும்
கண்டு கொண்டோம்..
பல பேர்கள்
காதல் செய்து
பழங்காதல்
தீரும்போது
பூமி வாழப்
புதிய காதல்
கொண்டு வந்தோம்..
உறவின் உயிரே
உயிரே..
என்னைப் பெண்ணாய்ச்
செய்க…
அழகே அழகே
உன் ஆசை வெல்க..
தொடரும்..