லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 21
அந்த இடத்தை விட்டு வெளியே வந்த மதி ரகசிய குரலில் “தீரன் சார்.. என்னை கூட்டிட்டு போய் எங்க வீட்ல விட்டுடறீங்களா..?” என்று கேட்க முகத்தில் ஒரு குழப்ப முடிச்சுடனேயே “ஓகே மதி..” என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு நினைவு வந்தவனாக “சாரி.. மதி மேடம்.. வாங்க போலாம்..” என்றான்..
தான் வந்த டாடா சுமோ கார் கதவை திறந்து விட அவளும் ஏறி அமர்ந்தாள் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தவன் வண்டியை வேகமாக எடுத்துக் கொண்டு அங்கு இருந்த நகர்ந்தான்..
சிறிது தூரம் அந்த நெடுஞ்சாலையிலீ பயணித்ததும் ஒரு இடத்தில் ஓரமாக வண்டியை நிறுத்த சொன்னாள் மதி..
“என்ன மதி மேடம்? என்ன ஆச்சு? ஏதாவது உடம்பு சரியில்லையா? வாமிட் ழர மாதிரி இருக்கா?” என்று அவன் கேட்க “இல்ல உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் சார்.. வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டுங்க..”
அவள் சொன்னதை கேட்டவன் வண்டியை ஓரமாய் நிற்க வைத்து தன்னிருக்கை விட்டு இறங்கவும் அதற்குள் மதியழகியும் வண்டியை விட்டு இறங்கி இருந்தாள்..
அது ஒரு ஏரி கரை அருகே இருந்தது.. அந்த ஏரியை வெறித்து பார்த்தபடி எதிர் பக்கம் திரும்பி கையை கட்டி நின்றவள் “நான் பாட்டுக்கு வந்து ஒரு லவ்வர் மாதிரி உங்களோட ஆக்ட் பண்ணி என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களான்னு நேரா கேட்டு இருக்கேன்.. நீங்களும் சரின்னு சொல்லி இருக்கீங்க.. அதுக்கப்புறம் வண்டி ஏறி நம்ப இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.. உங்களுக்கு நான் ஏன் இப்படி எல்லாம் சொன்னேன்னு கேக்கணும்னு தோணவே இல்லையா?”
“இப்போ நான் கேட்காததுனால நீங்க சொல்லாம இருந்துட்டீங்களா? அதை சொல்றதுக்கு தானே இறங்கி வந்து இருக்கீங்க? நீங்களே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்துதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. சொல்லுங்க.. இந்தர் என் தம்பின்னும் என்னை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்த பொண்ணு உங்க தங்கச்சி தான்னும் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.?”
அவன் நேரடியாக கேட்க அவள் ஒரு சிறிய புன்னகையோடு “சனிக்கிழமை சாயந்திரம்.. நீங்க அந்த பீச்சுக்கு போயிருந்தப்ப நானும் அங்க தான் இருந்தேன்.. மனசு அமைதியா இல்லாம இருந்தது.. உங்களோட நடிக்க முடியாம வீட்டுக்கு வந்தப்பறம் என்னால எதிலயுமே கான்சென்ட்ரேட் பண்ண முடியல.. மன அமைதிக்காக தான் நான் அங்க வந்தேன்.. ஆனா அங்க வந்த நேரம் என்னோட அமைதி மொத்தமாக தொலைஞ்சு போச்சு..”
குரல் தழுதழுக்க கலங்கிய கண்களோடு அவள் சொல்லவும் அந்த கண்ணீரை துடைத்து விட அவன் கை பரபரக்க கையை எடுத்தவன் அதை பின்னால் இழுத்துக் கொண்டான்..
தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கை குட்டையை எடுத்து அவளிடம் நீட்டி “அழாதீங்க.. அதை பார்த்தப்போ உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்திருக்கும்ன்னு எனக்கு புரியுது.. ஆனா அதுக்காக நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது எனக்கு புரியல..”
“இப்ப நம்மளுக்கு வேற வழி இல்ல சார்.. உங்க தம்பி நல்லா படிக்கணும்.. என் தங்கச்சியும் நல்லா படிக்கணும்.. நிச்சயமா நம்ப ரெண்டு பேரும் அவங்களுக்கு சரியான ஜோடிங்க கிடையாது.. அவங்களுக்கு இப்போ வெறும் அவங்களோட அட்ராக்சன் மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.. ஒரு பத்து வருஷம் போன அப்புறம் ரெண்டு பேருக்கு நடுவுல இருக்குற ஜெனரேஷன் கேப் பூதாகரமா தெரியும் அவங்க கண்ணுக்கு.. அப்போ வாழ்க்கை ரணமா ஆயிடும்.. வாழ்க்கையில எதுவும் பிடிக்காம எதுலயும் மனசு போகாம தற்கொலை வரைக்கும் போனவங்க கூட இருக்காங்க.. அவங்க அந்த வாழ்க்கை வேணான்னு விவாகரத்து பண்ணிட்டா கூட அது ஓகே தான்.. ஆனா தன்னை கல்யாணம் பண்ணிட்டவங்களை மறக்காம முடியாம மன்னிக்கவும் முடியாம.. சுத்தி இருக்கிறவங்க என்ன சொல்லுவாங்கன்ற நினைப்புல வேற ஏதாவது முடிவுக்கு போயிட்டாங்கனா அது எவ்வளவு பெரிய ஆபத்தாயிரும்.. அது நடக்காம கூட இருக்கலாம்.. ஆனா ஒவ்வொரு நாளும் அது நடந்திருமோன்னு நம்ம ரெண்டு பேரும் தான் செத்து செத்து பொழைக்கணும்.. அது வேண்டாம்.. அதனாலதான் அந்த முடிவை விட இந்த முடிவு ஈஸியா இருக்கும்ன்னு எனக்கு தோணுச்சு..”
“ஆனா நான் ஒரு படிக்காதவன்.. நீங்க நல்லா படிச்சவங்க.. என்னோட பழக்க வழக்கம் உங்களோட பழக்க வழக்கம் இதெல்லாம் ஒத்தே போகாது.. அப்படி இருக்கும் போது நாம் இரண்டு பேரும் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவும் விபரீதம் தானே..?”
தீரன் கேட்க “உங்க கேள்வி சரியா தான் இருக்கு.. ஆனா நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் வாழ்க்கையை அவங்கள விட அதிகமாக பார்த்திருக்கோம்.. அனுபவம் அதிகம்.. அதனால எல்லா விஷயத்தையும் கொஞ்சம் மெச்யூர்டா ஹேண்டில் பண்ணலாம்.. இந்த கல்யாணம் கூட என் தங்கையும் உங்க தம்பியும் ஒரு நிலைக்கு வர வரைக்கும் தான்.. அதுக்கப்புறம் விவாகரத்து பண்ணிட்டு நம்ப நம்ப வழியை பார்த்து போயிடலாம்.. எனக்கு இதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்கனும்னு எந்த எண்ணமும் இருந்ததில்லை.. நான் இப்படியே இருந்துட்டு எங்க அப்பாவை பாத்துக்கிட்டு என் தங்கை வாழ்க்கையை செட்டில் பண்ணிட்டு அவ நல்லா வாழறதை சந்தோஷமா பார்த்துட்டு தனியாவே இருந்திடலாம்னு தான் முடிவு பண்ணி இருந்தேன்.. இப்போவும் அதே முடிவு தான்.. ஆனா நடுவுல கொஞ்ச காலம் உங்க மனைவின்கிற பேரில உங்களோட வாழ வேண்டியதா போகப்போகுது.. நான் உங்களைப் பத்தி யோசிச்சேன்.. நீங்க ஒரு ஆஞ்சநேயர் பக்தர்.. அதுவும் நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னும் பிரம்மச்சாரியா தான் இருக்கணும்னும் முடிவு எடுத்து இருக்கிறதா பாண்டி அண்ணா சொன்னதுனால தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.. இல்லன்னா உங்களுக்கும் சேர்த்து நான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டேன்.. என் தங்கையும் உங்க தம்பியும் ஒரு நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் நம்ம இந்த கல்யாணம் நாடகத்தை நடத்துவோம்.. ஏன்னா அவங்க மனசு மாறுறதுக்கு காதல் நாடகம் மட்டும் போதல.. கல்யாண நாடகமும் வேண்டி இருக்கு.. அவங்க நல்ல நிலைமைக்கு வந்ததும் நம்ம ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிக்கிட்டு அவங்க அவங்க வழியை பார்த்து போயிடலாம்.. இது உங்களுக்கு ஓகேவா?”
அவள் தன்னை விரும்புகிறேன் என்று சொல்லி அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொல்லி விட மாட்டாளா என்ற ஒரு நப்பாசை அதுவரை தீரனுக்கு இருந்தது.. அந்த நப்பாசை இப்பொழுது கை நழுவி போய் இருக்க ஒரு தீர்க்கமான குரலில் “புரியுது.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. நாம அப்படியே பண்ணிடலாம்.. நாளைக்கு எங்க அத்தையை கூட்டிட்டு நான் உங்க அப்பா கிட்ட எனக்காக உங்களை பொண்ணு கேட்க வரேன்.. சரி.. நம்ம கிளம்பலாமா..?” அவன் கேட்க தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் சட்டென காரில் ஏறி அமர்ந்தாள்..
முன்பக்கமாய் கவிழ்ந்து படுத்து வீடு வரை குலுங்கி குலுங்கி அழுது கொண்டே வந்தாள் அவள்.. தீரனுக்கு அவள் வலியை கண்டு மனம் ஏகத்துக்கும் வலித்தது.. அவளை சமாதானப்படுத்த இரண்டு மூன்று முறை அவளை அணைத்து ஆறுதல் படுத்துவதற்காக கைகளை எடுத்துக் கொண்டு போனவன் ஏதோ தடுக்க தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்..
அவன் கண்களும் அவள் நிலை கண்டு கலங்கி தான் போயிருந்தன.. அவள் வீடு வந்தவுடன் “மதி, மதி” என்று அவள் தோள் தட்டி அழைக்கவும் தடாலென நிமிர்ந்தவள் “சொல்லு தீரா..” என்று சட்டென கேட்டவள் பிறகு தன் தலையை உதறி “சாரி சாரி.. சொல்லுங்க தீரன் சார்..” என்க அவன் “பரவால்ல.. நீங்க என்ன தீரானே கூப்பிடுங்க.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நீங்க சொன்ன அட்ரஸ் வந்துடுச்சு.. இங்க உங்க வீடு எங்க இருக்கு?”
“அதோ இந்த வீட்டுக்கு பக்கத்துல இருக்கே.. அந்த வீடுதான்.. நான் இறங்கி போயிடறேன்.. ரொம்ப தேங்க்ஸ் தீரா.. நீங்க பண்ணிட்டு இருக்குற இந்த விஷயத்தை எல்லாம் என்னால எந்த ஜென்மத்திலயும் மறக்க முடியாது..”
“இதுல என் சுயநலமும் இருக்கே மதி.. நான் உங்களை அப்படி கூப்பிடலாமா? என்று அவன் கேட்கவும் “தாராளமா.. நான் உங்களை விட சின்னவதான்.. நீங்க என்னை பேர் சொல்லி தாராளமா கூப்பிடலாம்..” என்று ஒரு சிறிய கண்களை எட்டா புன்னகையோடு சொல்ல “நாம ரெண்டு பேருமே நம்ம கூட பிறந்தவங்களுக்காக தான் இதை பண்றோம்.. அதனால இந்த தேங்க்ஸ் சாரி இதெல்லாம் வேண்டாமே..” என்றான் தீரன்..
“ஓகே டன்.. என்னதான் நம்ம வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிக்க போறோன்னாலும் கல்யாணத்துக்கு நம்ம குணங்கள் ஒத்துப்போகாதுனாலும் நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருக்குறதுக்கு நம்ம எப்படி இருந்தாலும் ஓகே தானே..? நம்ம ஃபிரண்ட்ஸா இருக்கலாம் இல்ல..?” அவள் கேட்க “தாராளமா..” என்றவன் தன் கையை அவளுக்கு முன் நீட்ட அவளோ அவன் கையைப் பிடித்துக் குலுக்கி “இனிமே ஃபிரண்ட்ஸ்..” என்று விரிந்த புன்னகையோடு கூறினாள்..
அவள் வீட்டிற்குள் செல்வதை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் சென்றதும் வண்டியில் ஏறி தன் வீட்டிற்கு பயணப்பட்டான்.. இது ஒரு நாடக கல்யாணம் என்றாலும் அவள் இன்னும் சில வருடங்கள் தன்னோடு ஒரே கூரையின் கீழ் இருப்பாள் என்ற நினைவு அவனுக்கு தித்திப்பாக தான் இருந்தது..
தன் வீட்டிற்கு வந்த மதி தன் அன்னையின் படத்தை கையில் எடுத்து வைத்து தன் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்து தன் அன்னை முகத்தைப் பார்த்து அன்று நிகழ்ந்த அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள்..
அன்றும் கடற்கரையில் தீரனோடு இந்தரையும் தன் தங்கையையும் பார்த்தபோது இப்படித்தான் வீட்டுக்கு வந்தவுடன் தன் அன்னையிடம் புலம்பித் தீர்த்து இருந்தாள்..
தீரனிடம் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு வந்ததிலிருந்து அவனைத் தான் விரும்புகிறோமோ என்ற சந்தேகம் அவளுக்குள் அதிதீவிரமாய் ஊடுருவி இருக்க அதற்கு விடை கிடைக்காமல் குழப்பத்தில் மன அழுத்தம் அதிகமாகி சற்று தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொள்ள கடற்கரைக்கு சென்று இருந்தாள் அவள்..
கடற்கரை மணலில் அமர்ந்தபடி அந்த சில்லென்ற உப்பு காறறில் தன்னை தானே மறந்தபடி கண்ணை மூடி அமர்ந்திருந்தவள் கண் முன் தீரன் தான் வந்து நின்றான்.. திடுக்கிட்டு கண் விழித்தவள் இன்னும் குழப்பத்துக்குள் செல்ல அப்போது சோதனையாக தீரனின் குரல் கேட்டு சட்டென குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள்..
20 அடி தள்ளி தீரன் அமர்ந்திருந்தான்.. ஆனால் அவனோடு கூட யாரது..? இந்தர்..?! இவன் எப்படி தீரனோடு..! யோசனையில் இருந்தவள் அவன் “தம்பி அலையில் போய் கொஞ்சம் ஆடலாமா?₹ என்று கேட்ட கேள்வியில் உண்மையை விளங்கிக் கொண்டாள்.. சட்டென தன் புடவை தலைப்பை எடுத்து தலை மேல் சுற்றி தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்..
தீரனின் உடன் பிறந்த சகோதரன் இந்தர்.. ஐயோ கடவுளே இது என்ன விளையாட்டு.. இந்தரை சமாளிக்க அவன் அண்ணனுடன் காதலியாய் நடிக்க இருந்தேனா? நிஜமாகவே அப்படி நடித்திருந்தால் இந்தர் எவ்வளவு உடைந்து போய் இருப்பான்? ஆனால் இப்போது தான் தீரனை விரும்புகிறோமோ என்ற சந்தேகம் இன்னும் வலுக்க அவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது..
தன் மனதை கட்டுக்குள் வைக்காமல் அது தீரன் பின்னால் செல்வதை தடுக்க முடியாமல் இப்படி இருதலைகொள்ளி எரும்பாய் மாட்டிக் கொண்டிருப்பதை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டாள் மதியழகி..
அண்ணன் தம்பி இருவரும் அலையில் ஆடுவதற்காக எழும்ப எதிரில் வந்து நின்ற மலரழகியை பார்த்தவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்று போனது.. ஏற்கனவே அவளை பார்த்த அதிர்வில் கல்லாய் சமைந்திருந்தவள் அவள் பேசிய பேச்சில் உயிர் வெறுத்துப் போனாள்..
என் கூட பிறந்த தங்கையா இப்படி? அவள் இன்னொரு ஆண் பின்னால் படிக்கும் காலத்தில் அதுவும் தன்னைவிட 10 வயது மூத்தவனிடம் காதலை சொல்லி திரிந்து கொண்டிருக்கிறாள்.. அவன் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் அவனை வற்புறுத்தி தன் காதலை ஏற்க சொல்லி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. அங்கேயே கடலுக்குள் புகுந்து செத்து விடலாமா என்று தோன்றியது மதிக்கு..
அதற்கு மேல் அந்த காட்சியை காண சகியாமல் கடல் அலை பாய்ந்தது போல் அவள் மனதிலும் துன்ப அலைகள் பாய்ந்து கொண்டிருக்க எழுந்து வீட்டிற்கு வந்திருந்தாள் மதி..
அன்றும் இப்படித்தான் தன் அன்னையின் படத்தை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு கதறி கதறி அழுது கொண்டிருந்தாள்..
“அம்மா.. நான் என்னம்மா பண்ணுவேன்..? எங்கம்மா என் வளர்ப்பு தப்பா போச்சு? நீ போன அப்புறம் அழகிக்கு ஒரு அம்மாவா இருந்து அவளை கண்ணும் கருத்துமா பார்த்து பார்த்து தானே வளர்த்தேன்.. அவ எங்கம்மா இப்படி பாதை மாறி போனா.. இந்த வயசுல படிப்புல திறமைல கவனம் செலுத்த வேண்டியவ இப்படி காதல் கத்திரிக்கான்னு சிக்கி கிட்டு தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்காளேம்மா.. அவ மனசை எப்படி மா மாத்த போறேன்..? தலைகீழ நின்னாலும் அவ நினைச்சது நடக்காதுமா.. தீரன் நிச்சயமா அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டார்.. அப்படி அந்த காதலும் கிடைக்காம இந்த ஸ்டேஜ்ல அவ படிப்பும் பாழாயிட்டா அவ லைஃப் என்னம்மா ஆகும்? எனக்கு ரொம்ப பயமா இருக்குமா.. எப்படி மா அவளை சரி பண்ணுறது? பாவம்.. அந்த தீரனுக்கு அவர் தம்பியை பத்தி இன்னும் விஷயம் தெரியாது.. என்னை தொந்தரவு செய்ற ஆளு அவர் தம்பி தான்னு தெரிஞ்சா என்னை விட அதிகமா உடைஞ்சு போயிடுவாரு.. எனக்காவது அப்பான்னு ஒருத்தர் இருக்காரு.. அவருக்கு அதுவும் கிடையாது.. ஒத்தையா தம்பியை பார்த்து பார்த்து கவனிச்சு அப்படியே தலையில தூக்கி வெச்சு கொண்டாடி வளர்க்கிறார்.. அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா ரொம்ப வலிக்கும்மா.. அந்த வலியை தான்மா நானும் அனுபவிச்சிட்டு இருக்கேன்.. பாவம் அவர்.. அம்மா ஒரு விஷயம் தெரியுமா? தீரனை நான் விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.. என்னால அவரோட லவ்வரா நடிக்க முடியாதுமா.. ஏன்னா நான் நிஜமாவே அவரை மனப்பூர்வமா விரும்புறேன்.. நான் அப்படி அவரோட லவ்வரா நடிச்சு எல்லாம்ஸசரியான பிறகு அவரை விட்டு விலகணும்னா என் மனசு ரெண்டா உடைஞ்சிடும்மா.. ஏற்கனவே அழகி அவரை விரும்பறதா சொல்லி அவருக்கு ரொம்ப பிரச்சினையை கொடுத்துக்கிட்டு இருக்கா.. இதுல நானும் போய் நானும் அவரை விரும்புறேன்னு நின்னா என்னை அவர் எப்படி பார்ப்பாரு.. நான் என்னம்மா பண்றது? சொல்லுமா.. இதுக்கு என்னமா முடிவு..?”
அன்னையின் படத்தின் மேலேயே கவிழ்ந்து கதறிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென ஏதோ பொறி தட்டியது.. அவர் தம்பின்னு சொன்னாரு.. ஆனா கூட பொறந்தவங்களை தான் தம்பின்னு சொல்லனுமா என்ன? ஏன் நமக்கு தெரிஞ்சவங்க யாரையோ பார்த்தா கூட தான் தம்பின்னு சொல்லுவோம்..” என்று வேகமாக தன் கண்ணை துடைத்துக் கொண்டு கைபேசி மூலம் பார்கவியை அழைத்தாள்..
அவள் அழைப்பை ஏற்ற பார்கவி “சொல்லு மதி.. என்ன.. தீரன் அண்ணாவோட நடிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? இப்ப கூட சொல்லு.. அவரு நாளைக்கு உன்னோட அங்க நடிக்க ரெடியா இருக்காரு..”
அவள் சொன்னதை கேட்டவள் “இல்லடி.. உன்னை ஒரு விஷயம் கேக்கணும்னு தான் ஃபோன் பண்ணேன்.. எனக்கு தீரன் சாரோட தம்பி பேர் என்னன்னு கேட்டு சொல்றியா?”
“சரிடி கேக்குறேன்.. அவர் எங்கேயோ வெளில போயிருக்காரு.. நைட்டு தான் வருவாரு.. நான் கேட்டுட்டு காலைல உனக்கு ஃபோன் பண்றேன்..”
இந்த விவரம் தெரிவதற்கு காலை வரை காத்திருக்க வேண்டுமே என்று தோன்றினாலும் இந்தர் தீரனின் தம்பி இல்லை என்று தெரிந்தால் கிடைக்கப் போகும் நிம்மதிக்காக அந்த அமைதி இல்லாத காத்திருப்பை சமாளிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு..
அடுத்த நாள் மதியம் வரை பார்கவியிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.. மதியழகியோ தவிப்போடு காத்துக் கொண்டிருந்தாள்.. சரியாக 3:00 மணிக்கு பார்கவி அவளை அழைத்து இருந்தாள்..
“சொல்லு பவி.. கேட்டியா..?”
அவள் அவசரமாய் கேட்க அவளை விட பதட்டம் நிறைந்த குரலில் “அந்தப் பையன் பேரு இந்தர் டி.. அந்த இந்தரா அவன்.. தெரிஞ்சி தான் கேட்டியா நீ..?” என்று அவள் கேட்க அப்படியே இருந்த இடத்திலேயே தரையில் மடிந்து தொப்பென அமர்ந்தாள் மதி..
எதைக் கேட்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ அந்த செய்தி காதில் விழவும் சுக்கு நூறாய் உடைந்து போனாள் அவள்.. அவளுக்கு மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது..
“நான் உன்னோட அப்பறம் பேசுறேன்டி..” என்று சட்டென கைபேசியை இணைப்பை துண்டித்து இருந்தாள்..
வெகு நேரம் அப்படியே எதிரில் இருந்த சுவற்றில் உறுத்து பார்த்தபடி விரக்தியாய் அமர்ந்து இருந்தவள் ஏதோ தோன்ற கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வேக வேகமாய் தன்னையே அழகாய் தயார் செய்து கொண்டு தீரனோடு தான் காதலியாய் நடிக்கவிருந்த உணவு விடுதிக்கு கிளம்பிச் சென்றாள்..
அங்கு நிகந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இப்போது அவளுக்கும் தீரனுக்கும் திருமணம் என்ற நிலையில் வந்து அவர்களை நிறுத்தி இருக்கிறது விதி..
தொடரும்..