மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ் படிக்கும் போது நிறைய லவ் ஸ்டோரீஸ் படிச்சிட்டு இருந்தேன்.. அதெல்லாம் அழகிய காலம்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு லவ் ஸ்டோரி கேக்கப் போறேன்ல அதுதான் இந்த செட்டப்..”
“அண்ணி ஆனால் நீங்க எதிர்பார்க்கிற சீன் எல்லாம் இருக்காது.. அப்புறம் வீணா ஏமாந்து போகக்கூடாது..”என்றவள் தனது காதல் கதையை சம்யுக்தாவிடம் கூற ஆரம்பித்தாள்.
மதுரா பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் தீஷிதன் முதலில் மதுராவை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு செல்வான். இப்படியாக நடந்து கொண்டு இருந்தது. மதுராவை ஒருதலையாக அவள் வகுப்பு மாணவன் ஒருவன் காதலித்து வந்தான். இது மதுராவிற்கு தெரியாது. ஒருநாள் காலேஜ் முடிந்ததும் தீஷிதனுக்கு ஃபுட்பால் ப்ராக்டிஸ் இருந்ததால் அவனது தோழன் புகழை அழைத்து மதுவை வீட்டில் விட்டுவிடுமாறு சொன்னான். புகழும் சரி என்று சொல்லிவிட்டு மதுரா படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். அங்கே மதுவைக் காணவில்லை. உள்ளே சென்று பார்க்க, அங்கேயும் மதுராவைக் காணவில்லை. ‘என்ன மதுவை எங்கேயும் காணவே இல்லை.. ஒருவேளை வீட்டிற்கு போயிருப்பாளா?’ என யோசித்தவன், அங்கிருந்த காவலாளியிடம் கேட்க, அவரோ நான் பாக்கலைங்க என்றார்.
புகழ் அவரிடம் மதுவின் வகுப்பறையை கேட்டு அறிந்து கொண்டு அங்கே வந்தான். அவளது வகுப்பறையை புகழ் நெருங்கும் போது, அவனுக்கு மதுராவின் குரல் கேட்க, வேகமாக ஓடி வந்தான்.
மதுரா அழுதழுது கண்கள் சிவந்திருந்தன. “இங்க பாரு ஆகாஷ் நான் இங்க படிக்கத்தான் வந்திருக்கேன்.. எங்க அண்ணனுக்கு மட்டும் நீ இப்பிடி எங்கிட்ட நடந்துக்கிறது தெரிஞ்சா அவரு என்ன பண்ணுவாருன்னு தெரியாது என்னை விட்டுடு எனக்கு உன்னைப் பிடிக்கல..” என்று ஆகாஷ் முன்னால் கையெடுத்துக் கும்பிட்டு கதறினாள் மதுரா. ஆனால் அவனோ இவளை வக்கிரமாகப் பார்த்து, “உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.. நீ என்னை லவ் பண்ற அவ்வளவுதான்.. உன்னை மாதிரி அழகிய என்னோட லவ்வர்னு நான் மத்தவங்ககிட்ட சொல்லணும்.. மரியாதையா என் காதலை ஏத்துக்க இல்லைனு வையேன்.. நைட்டுக்கு இங்கதான் இருப்போம்.. நாளைக்கு மார்னிங் யாராவது வந்து க்ளாஸ்ரூமைத் திறக்கட்டும்.. அப்போ உன் மானம் மரியாதை எல்லாம் போயிடும்..” என்று அவன் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அவனெ பேசுவதைக் கேட்ட புகழுக்கு கோபம் வர அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து பூட்டை உடைத்து, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
புகழைப் பார்த்ததும் தனது கையைப் பிடித்துக் கொண்டு இருந்த ஆகாஷின் கையை தன் பலம் கொண்ட மட்டும் உதறிவிட்டு ஓடி வந்து புகழை அணைத்துக் கொண்டு அழுதாள் மதுரா. அவளை சமாதானப்படுத்திய புகழ் அந்த ஆகாஷ் பக்கம் திரும்பினான். மதுராவை அங்கிருந்த சேரில் உட்கார வைத்து விட்டு அவனிடம் வந்தவன், அவனைப் போட்டு அடி வெளுத்து விட்டான். “படிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாக்கணும் அத விட்டுட்டு பொண்ணுக்கிட்ட இப்படி தப்பா பேசிட்டு இருக்க.. இங்க நடந்தது எல்லாம் மதுவோட அண்ணனுக்கு தெரிஞ்சிதுனு வையேன் அப்புறம் உன் உயிர் உங்கிட்ட இருக்காது.. ஏதோ படிக்கிற பையன் வயசுக் கோளாறுல இப்படி பண்ணிட்ட இந்த ஒரு தடவை உன்னை மன்னிச்சு விடுறேன்.. இதுக்கு அப்புறம் மது பக்கம் வந்த அப்புறம் உனக்கு நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை மது வா..” என்றவன் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
மதுராவிற்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் புகழின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவன் தோளில் சாய்ந்தவாறு நடந்து வந்தாள். அவளின் உடல் நடுங்குவதிலேயே அவளின் பயத்தை உணர்ந்த புகழ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ பயத்திலேயே இருந்தாள். தனது பைக்கில் அவளை ஏற்றிக்கொண்டு வந்தவன், வீட்டிற்கு போகும் வழியில் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தினான். புகழ் பைக்கை நிறுத்த அவனைப் பார்த்தாள் மதுரா.
“இங்க பாரு மது இப்போ எதுக்கு நீ இப்பிடி பயந்துட்டு இருக்க? நீ பயப்படற அளவுக்கு எதுவும் நடக்கல..”
“இல்ல ஒரு வேளை அந்த ராஸ்கல் என்னை ஏதாவது பண்ணியிருந்தா என் வாழ்க்கையே போயிருக்கும்.. அண்ணா என்னை பற்றி என்ன நினைக்கும்?”
“மது அதுதான் எதுவும் தப்பா நடக்கல.. அதையே யோசிச்சிட்டு இருக்காத.. படிக்கிற வேலையை பாரு.. இது தீஷிக்கு தெரிஞ்சா அந்த ஆகாஷை என்ன பண்ணுவான்னு தெரியாது.. வீட்டில இதை சொல்லாத அங்கிள் பயந்திடுவாங்க.. மது நீ இந்த விஷயத்தை நினைச்சிட்டு இருக்காத..” என்று பலவாறு அவளிடம் பேசி அவள் மனதை மாற்றினான். புகழ் பேசியதைக் கேட்ட மதுராவின் குழப்பமடைந்திருந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்ததை பார்த்த புகழுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. மதுராவை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டான்.
இப்படியாக நாட்கள் நகர்ந்து சென்றன. அன்று ஆகாஷிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய புகழ் மீது மதுராவிற்கு ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. அது நன்றிய்ணர்வா? இல்லை பாசமா? எதுவென்று அவளால் சரியாக இனங்காண முடியாமல் இருந்தாள். அவள் மனம் புகழைப் பார்க்க துடித்தது. அவனைப் பார்த்தால் பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. இந்த நிலையில் அவளின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதிப் பரீட்சை நிறைவடைந்தது. தனது தோழிகளுடன் பேசிக் கொண்டு தீஷிதனுக்காக காத்திருந்தாள் மதுரா. அப்போது அவளின் முன்னால் வந்த ஆகாஷ் அவளின் தோழிகளைப் பார்த்து, “நான் மதுகூட கொஞ்சம் தனியாக பேசணும்.. நீங்க கொஞ்சம் அந்தப் பக்கம் போறீங்களா?” என்றான். அதற்கு அவர்கள் மதுராவைப் பார்க்க அவளோ, “நீங்க எதுக்கு எங்கூட தனியா பேசணும்? எனக்கு உங்ககூட பேச எதுவும் இல்லை..” என்று ஆகாஷைப் பார்த்து கேட்டவள், தோழிகள் பக்கம் திரும்பி, நீங்க இங்கேயே இருங்கடி..” என்று தோழிகளிடம் சொன்னாள். இதைக் கேட்ட ஆகாஷிற்கு கோபம் வர, மதுராவின் கையைப் பிடித்து கலாட்டா செய்தான். “என் கையை விடுடா.. இதை மட்டும் என் அண்ணா பாத்தாங்க உன்னை உயிரோடவே விடமாட்டாங்க..” என்று சொல்லிக் கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்க முயன்றாள் மதுரா. அதைக் கேட்டு சிரித்த ஆகாஷ், “உன் அண்ணன் என்னை என்ன வேணாலும் பண்ணட்டும்.. ஆனால் அதுக்கு முன்னாடி நான் உன்னை இன்னைக்கு ஒருவழி பண்ணாம விடமாட்டேன்.. உன்ன லவ் பண்றேன்னு சொல்ற என்னை லவ் பண்ண மாட்ட.. உன் அண்ணன் ப்ரெண்டோட மட்டும் சுத்தித்திரிவல?”
“ஏய் வார்த்தையை அளந்து பேசு..”
“எல்லாம் நீ அழகா இருக்கிற திமிருதானே.. உன் திமிர இன்னைக்கு அடக்கல என் பேரு ஆகாஷ் இல்லடி..” என்று சொல்லியபடி யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது பையில் இருந்த அசிட் பாட்டிலை எடுத்தான். அதைப் பார்த்தும் மதுராவிற்கு உதறல் எடுத்தது.
“ஆகாஷ் நீ எதுக்கு இப்போ அசிட் பாட்டிலை எடுத்த? ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத..” என்று பயத்துடன் கெஞ்சினாள் அவனிடம். அவளைப் பார்த்து கொடூரமாக சிரித்தவன்,
“இந்த அழகான முகம் இருக்கிறதனாலதானே நீ இப்பிடி திமிரா இருக்க.. எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது..” என்றவன் அந்த அசிட்டை அவள் முகத்தில் ஊற்றச் செல்லும் போது மதுரா பயத்தில் அழ ஆரம்பித்தாள். ஆனால் அவனை அவளின் அழுகை நிறுத்தவில்லை. மதுரா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். அசிட்டை ஊற்றும் நேரத்தில் அவன் கையில் கட்டை ஒன்று வந்து விழ, அவன் கையில் இருந்த அசிட் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. தன்னை அடித்தவனை திரும்பிப் பார்க்க அங்கே சினம் கொண்ட வேங்கையாக நின்றிருந்தான் புகழ்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divi