ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும் வேங்கையாக நின்றிருந்தான் புகழ். வேகமாக வந்த புகழ் அவனின் சட்டையை பிடித்து, “ஏன்டா நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா? ஒரு பொண்ணை லவ் பண்ணுவீங்க அதே பொண்ணு உங்கள விரும்பலனா ஆசிட் அடிக்கிறது இப்ப வரைக்கும் இருக்குல்ல.. ஏன்டா நீ லவ் பண்ண பொண்ணு முகத்து மேல ஆசிட் அடிக்க உனக்கு எப்பிடிடா மனசு வந்துச்சு இது? இப்ப புரியுதா இதெல்லாம் காதலே இல்லனு? உன்னை அன்னைக்கு நான் எதுவும் பண்ணாம விட்டுப் போய் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. உன்னை அப்பவே போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருந்தேன்னா இன்னைக்கு நீ இந்த வேலை பார்த்து இருக்க மாட்ட.. நான் கொஞ்சம் லேட்டாகி வந்து இருந்தா கூட மதுவோட முகத்துல நீ அசிட்டை ஊத்தி இருப்ப.. உன்னை இன்னைக்கு சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காதே..” என்று அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான்.
கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும், மதுராவின் செவிகளிலே புகழின் குரல் கேட்க, கண்களை மெல்லத் திறந்தாள். அங்கே ஆகாஷை நிலத்தில் போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தான் புகழ். புகழின் அருகில் சென்று அவனது கையைப் பிடித்து இழுத்தாள் மதுரா. அவனும், “என்னை விடு மது.. இவனை இன்னைக்கு கொல்லாம விட்டா என் ஆத்திரம் அடங்காது.. என்ன வேலை பார்த்து இருக்கான் இந்த பொறுக்கி..” என்று அவனை மீண்டும் அடிக்க பாய்ந்தான் புகழ்.
“விடு புகழ்.. ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு முதல்ல இங்க இருந்து என்னை கூட்டிட்டு போ..” என்று மறுபடியும் அவன் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.
“விடு மது என்னை.. என்று மீண்டும் அந்த ஆகாஷிடம் பாயப் போனவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். “ப்ளீஸ் புகழ் எனக்கு பயமா இருக்கு..” என்று அழ ஆரம்பித்தவளுக்காக அந்த ஆகாஷிடம் திரும்பிய புகழ் தனது கையை நீட்டி, “இதுதான் உனக்கு நான் குடுக்கற லாஸ்ட் வார்னிங்.. ஆனால் இந்த விஷயத்தை நான் தீஷிக்கிட்ட சொல்லியே தீருவேன்.. அவன் உன்னை என்ன பண்றான்னு பொறுத்து இருந்து பாரு..” என்று மீண்டும் அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டு தனது கையணைப்பிலையே மதுவை அழைத்து சென்றான்.
மது அழுது கொண்டே புகழுடன் வீட்டிற்கு வந்தாள். இதைப் பார்த்ததும் ஹாலில் இருந்த பரந்தாமன், “மது என்னாச்சிமா? ஏன் அழுதிட்டே வர்ற?” என்று கேட்க, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக ஓடிச் சென்று தந்தையை அணைத்துக் கொண்டு கதறி அழ தொடங்கினாள் மதுரா. இதைப் பார்த்த தீக்ஷிதன் புகழிடம், “புகழ் என்னாச்சு? மது எதுக்காக இப்படி அழுகிறா?”
“சொல்லுப்பா என்னாச்சு என்னோட மதுக்கு?” என்றார் பரந்தாமனும் மிகுந்த பதற்றத்துடன்.
“சொல்றேன் அங்கிள்.. இருங்க முதல்ல மதுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுப்போம்..” என்று சொல்லி தண்ணீரை எடுத்து வந்து மதுவிடம் குடிக்க கொடுத்தான் புகழ்.
அங்கிருந்து சோபாவில் தன் மகளை தன்னோடு உட்கார வைத்துக் கொண்டார் பரந்தாமன். இந்த உலகத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் தந்தையின் நெஞ்சுக்குள் அடங்கிக் கொண்டாள் மதுரா.
மதுரா இப்படி இருந்து அவர்கள் இதுவரை ஒரு நாளும் பார்த்ததில்லை. தீஷிதன் மெல்ல மதுரா அருகில் வந்து அமர்ந்து அவள் தலையில் வருடி கொடுத்தான். “மது எதுக்கு இப்படி பயப்படுற? ஒன்னும் இல்ல எல்லாம் சரியாயிடும்..” என்று அவள் தலையை வருடி கொடுத்தவன் புகழை கேள்வியாக நோக்கினான். புகழும் அன்று தான் அவளை அழைத்து வரச் சென்றது, ஆகாஷ் அவளிடம் தவறாக நடந்து கொள்ளப் பார்த்தது, இன்று அசிட் ஊற்ற வந்தது என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். அவன் அதை சொல்லும் போதே தீக்ஷிதனின் கண்கள் சிவந்து கைகள் இறுகின.
புகழ் அந்த ஆகாஷை பாத்துட்டு வரலாம் வா என்றவாறு எழுந்தான் தீஷிதன். எழுந்த அவனின் கரத்தை இறுக்கிப்பிடித்தால் மதுரா. “அண்ணா வேண்டாம் அண்ணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. ப்ளீஸ் அண்ணா எனக்கு இங்க இருக்க வேணாம்.. என்னை எங்கேயாவது பத்திரமான இடத்துக்கு அனுப்பி வை அண்ணா.. என்னால முடியல..” என்று விம்மி விம்மி அழுதாள். தங்கையின் அழுகுரலை கேட்டதும் மேலும் கோபம் வந்தது தீஷிதனுக்கு. ஆனால் அதை இப்போது காட்டுவது சரியல்ல. முதலில் தங்கைக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் புகழிடம் கண்ணைக் காட்டிவிட்டு, மதுவின் அருகிலேயே உட்கார்ந்தான்.
“மது இப்போ எதுக்கு நீ இப்பிடி பயப்படுற? உன் அண்ணன் நான் இருக்கிறன்.. உன் அப்பா இருக்கிறாங்க.. இதோ புகழ் வேற இருக்கிறான்.. உன்னை யாரும் எதுவும் பண்ண முடியாது.. நீ பயப்படாத..” என்று முடிந்த அளவு அவளுக்கு ஆறுதல் சொன்னான். இருந்தாலும் அவள் அந்த பயத்தினால் விட்டு வெளியே வரவும் முடியவில்லை. இப்படியே நாட்கள் செல்ல வீட்டை விட்டுக்கூட வெளியே வருவதற்கு கூட பயந்தாள் மதுரா.
எங்கே ஆகாஷ் மீண்டும் வந்து விடுவானோ? தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் அவளுக்குள் அதிகம் வர தொடங்கியது. இதைப் பார்த்து தீஷிதன் இதை இப்படியே விட்டால் சரியில்லை என்று தன் தந்தையிடம் பேச நினைத்தான். அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. அந்த மாவட்டத்திலேயே மூன்றாம் இடத்தை பெற்றாள் மதுரா. அவளை அனைவரும் பாராட்டினார்கள். பாடசாலையில் இருந்து வந்து அனைவரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்லி சென்றார்கள். பள்ளிக்கூடத்தில் பாராட்டு விழா கூட இடம் பெற்றது. ஆனால் அனைத்திக்கும் தந்தையும் தமையனும் புகழும் உடன் வரவே வந்தாள் மதுரா. தனியாக செல்வதற்கு அவள் மிகவும் பயந்தாள். இதைப் பார்த்துவிட்டு இதற்கு மேலும் பொறுமையாக இருக்கக் கூடாது என்று நினைத்த தீஷிதன் தந்தையை அழைத்து, “டேட் மது இப்படியே இருக்கிறது நல்லது இல்ல.. நம்ம வேணும்னா நம்ம அத்தை வீட்டுக்கு மதுவ அனுப்பி வைக்கலாமா? அவ காலேஜ்ஜ அங்கேயே படிக்கட்டுமே..”
“என்ன தீஷி சொல்ற மலேசியாவுக்கா அனுப்ப?” என்று யோசனையாகக் கேட்டார் பரந்தாமன்.
“ஆமாப்பா என்ன இங்க இருந்தா மது நடந்ததையே தான் யோசிச்சிட்டு இருப்பா.. கொஞ்ச நாள் வேற இடத்தில் இருந்து பாக்கட்டுமே.. அத்தையும் அவள பாத்துப்பாங்கல்ல..” என்றான். அவன் சொல்வது சரிதான் என்று யோசித்துப் பார்த்த பரந்தாமன், மலேசியாவில் இருக்கும் தனது தங்கைக்கு கால் பண்ணினார். அண்ணனின் அழைப்பைப் பார்த்ததும் துள்ளிக் குதித்துக் கொண்டு முகம் முழுதும் மகிழ்ச்சியோடு போனை எடுத்தார் தமயந்தி.
“அண்ணா..”
“தமயந்தி நல்லா இருக்கியாமா?” “ஆமா அண்ணா ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? தீஷி, மது, புகழ் எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க டா.. அங்க மாப்பிள்ளை.. விக்ராந்த் எல்லோரும் நலமா?”
“ஆமா அண்ணா அவங்களுக்கு என்ன ரொம்ப ஜாலியா நல்லா சந்தோஷமா இருக்காங்க.. என்ன அண்ணா திடீர்னு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க.. எதுவும் அவசரமா?” என்றார் தனது தமையனிடம்.
“ஆமாம் தங்கச்சி ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” என்றவர் மதுவுக்கு நடந்த அனைத்தையும் கடகடவென்று கூறி முடித்தார்.
இதை கேட்டதும் மறுபக்கத்தில் இருந்த தமயந்தி ஆடிப் போய்விட்டார். “அண்ணா அந்த ஆகாஷை சும்மாவா விட்டிங்க?” என்று கோபத்துடன் கேட்டார்.
“அது எப்படிம்மா விட முடியும்? தீக்ஷிதா யார் மூலமோ பேசி அவனுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்திருக்கிறான்.. மது தான் எதுவுமே பண்ண வேணாம்னு சொல்லிட்டா.. ரொம்ப பயத்தில் இருக்காம்மா.. எங்கேயும் தனியா போறது கூட இல்லை.. இப்போ கூட காலேஜ் போக மாட்டேன்னு பிடிவாதம் வேற பிடிக்கிறா.. தீஷிதான் சொன்னான் மலேசியாவில் இருக்க அத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் அப்பா.. கொஞ்சம் நாளைக்கு இடம் மாறி இருந்தா நல்லா இருக்கும்னு.. உனக்கு மது அங்க வர்றதுல எதுவும் பிரச்சனையிலேயேமா?” என்று பரந்தாமன் தயங்கிக் கொண்டு தமயந்தியிடம் கேட்க,
“அண்ணா என்ன இது இப்படி கேக்குறீங்க? மது என்னோட பொண்ணு அண்ணா.. நீ தாராளமா அவளை அனுப்பி வை.. நான் அவளை பத்திரமா பாத்துக்குறேன்..” என்று சொன்னார் தமயந்தி.
“அம்மாடி மாப்பிள்ளை கிட்டயும் எதுக்கு ஒரு வார்த்தை கேட்டுக்கோ அம்மா..”
“அண்ணா அவரும் இதுக்கு சம்மதம் தான் சொல்லுவாரு.. உங்க மாப்பிள்ளை பத்தி உங்களுக்கு தெரியாதா? நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. அப்புறம் மது என்ன படிக்கப் போறான்னு சொல்லுங்க.. நான் இங்கே காலேஜ் பற்றி விசாரிச்சு வைக்கிறேன்.. அப்போ அவள் வரவும் காலேஜ் போகவும் லேசா இருக்கும்ல..” என்று மேலும் அவருடன் பேசிவிட்டு போனை வைத்தார் தமயந்தி.
தமயந்தி சொன்னதை தீக்ஷிதனிடமும் புகழிடமும் சொன்ன பரந்தாமன் இதை மதுவிடம் எப்படி சொல்வது என்று நினைக்க, தீஷிதன் தான், “நான் மது கிட்ட பேசிக்கிறேன் அப்பா..” என்றான்.
மது தனது அறைக்குள் இருக்க கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் தீக்ஷிதன். “மது என்ன பண்ணிட்டு இருக்க?”
“ஒன்னும் இல்லன்னா சும்மா தான் இருக்கேன்..” என்றாள். அவளின் அருகில் வந்து உட்கார்ந்தவன், “மதுமா அண்ணா சொல்லுறதை நீ கேட்பாதானே..” என்றான். “சொல்லுங்க அண்ணா.. நான் என்ன பண்ணனும்? “ என்று மதுரா தீஷிதனிடம் கேட்க,
“அதுவந்து மதுமா நீ இங்க இருந்தா ரொம்ப பயப்படுற.. உனக்கு அந்த ஆகாஷால எந்த பிரச்சனையும் வராது இனிமேல்.. ஆனால் நீ நடந்ததையே நினைச்சிட்டு இருக்க.. கொஞ்ச நாள் அத்தை கூட போய் இருக்கிறயா?”
“அத்த கூடவா? எங்க அண்ணா மலேசியாக்கா?”
“ஆமாடா நீ காலேஜ் வந்து மலேசியாவில் படிச்சுக்கோ.. நான் அப்பா எல்லாம் அடிக்கடி உன்னை வந்து பார்த்துட்டு வருவோம்.. அங்கிருந்தா உனக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்ல்ல.. அத்தை, மாமா விக்ராந்த் எல்லாரும் உன்ன நல்லா பாத்துக்குவாங்க..”
“ஆனா அவங்க யாரும் நீ என்னை பாத்துக்கிற மாதிரி பாத்துக்க மாட்டாங்கல்ல அண்ணா..” என்றாள் மதுரா அவனின் தோளில் சாய்ந்தவாறு.
“இங்க பாருடாம்மா, அண்ணா எது செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்காகத் தான்னு உனக்கு தெரியும்ல..”
“சரி அண்ணா நீ சொல்றதனால நான் அங்க போறேன்.. ஆமா அண்ணா அங்க போய் நான் என்ன தான் படிக்கட்டும்?” என்று கேட்ட தங்கையிடம், “நம்ம பிஸ்னஸை பாத்துக்குற மாதிரி பிஸ்னஸ் ஸ்டடீஸ் படிடா.. அதுதான் உனக்கும் நல்லது.. எதிர்காலத்துல நீ நம்ம கம்பெனியை பொறுப்பேற்கும் நிலை வந்தால் உனக்கு அது ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்..”
“சரி அண்ணா நீ சொல்ற மாதிரி அதையே படிக்கிறேன்..” என்ற தங்கையை அனைத்து நெற்றியில் பாசமாக முத்தம் ஒன்றை வைத்தான் தீஷிதன். என்று தனது கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்த மதுராவை நிறுத்தினாள் நாம் நாயகி சம்யுக்தா.
“என்ன அண்ணி கதை போர் அடிக்குது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் மதுரா.
“இல்லை மது.. நீ உன்னோட லவ் ஸ்டோரி சொல்ல வந்த இதுல எங்க உன் ஆள் வந்தாங்க?”
“அண்ணி இதுக்கப்புறம் தான் கதையே இருக்கு..” என்று சிரித்தாள் மதுரா. அவள் சிரிப்பதைப் பார்த்து சம்யுக்தா முறைக்க, “சரி அண்ணி கவலைப்படாதீங்க இப்ப சொல்லிடுறேன்..” என்றவள் மீண்டும் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊 20 ரேட்டிங் வந்தா நைட் ஒரு எபி தர்றேன் பட்டூஸ் 😍
Very interesting divima