அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 95🔥🔥

5
(5)

பரீட்சை – 95

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

எவளிடமிருந்து 

என்னவளை 

காக்க வேண்டும் 

என்று

 

இல்லாத பாரம் 

எல்லாம் 

நெஞ்சில் சுமந்து

என் இனியவளை 

பிரிந்து வந்தேனோ..

 

அவள் மீண்டும் 

வஞ்சம் கொண்டு

என்னவளுக்கு 

இடர் கொடுக்க

எங்கிருந்தோ 

வந்தாள்..

என்ன செய்வேன்

நான்..?!

 

######################

 

வஞ்சம் கொண்ட நஞ்சவள்..!!

 

“நான் அவார்ட் வாங்கி முடிச்சு கீழே இறங்கவும் என்கிட்ட வந்தா நித்திலா.. “ஹாய் அருண்.. எப்படி இருக்க?”ன்னு கேட்டா.. “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”ன்னு நான் சொன்னேன்.. நான் பொய் சொல்லல என் அஸ்வினி, நிம்மதியா சந்தோஷமா ராமோட ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான்னு சந்தோஷமா தான் இருந்தேன்.. ஆனா நித்திலா அதை நம்பல..” என்றான் அருண்..

 

அதைக் கேட்ட இருவருக்கும் இப்படியும் ஒரு காதலன் பூமியில் இருக்க முடியுமா என ஆச்சரியமாக இருந்தது.. 

 

“நான் சொன்னதை நம்பாம நித்திலா “ஏன் அருண் பொய் சொல்ற? உன் உயிருக்கு உயிரான உன் அஸ்வினி உனக்கு கிடைக்கல.. நீ எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?”ன்னு கேட்டா அவ.. நான் சிரிச்சிட்டேன்..” என்றான்..

 

“சிரிச்சீங்களா?” என்று கேட்டாள் வைஷூ..

 

“ம்ம்ம்ம்.. ஆமா.. நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லி என்னோட ஃப்ரெண்ட் ஆகணும்னு என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்து அதுக்கப்புறம் நான் உன்னை ஃப்ரெண்டா கூட அக்சப்ட் பண்ணாம இருந்தப்போ கோவத்துல என் மேல இல்லாத பழி எல்லாம் போட்டு என்னை பழி வாங்கணும்னு நினைச்ச.. அதுக்கப்புறம் சரண் மூலமா என்னை கொல்றதுக்கும் நீ ட்ரை பண்ண.. இதுக்கு பேரு காதலா நித்திலா..? இல்லை.. உனக்கு என் மேல இருந்தது ஆசை.. காம வெறி.. உன்னை பொறுத்த வரைக்கும் நானும் நீ ஆசைப்பட்டு வாங்குற ஏதோ ஒரு பொருள் மாதிரி.. அது உனக்கு கிடைக்கணும்கற பிடிவாதம் மட்டும் தான் உன்கிட்ட இருந்தது.. அந்த பொருள் உனக்கு கெடச்ச அப்புறம் நீ அடுத்த பொருளைத் தேடி போக ஆரம்பிச்சிருப்ப.. ஆனா எனக்கு அஸ்வினி மேலயும் அஸ்வினிக்கு என் மேலயும் இருந்தது உண்மையான காதல்.. நேர்மையான காதல்.. அவ சந்தோஷமா இருக்கணும்னு மட்டும் தான் என் காதல் மனசு நினைக்கும்.. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. அவளும் அப்படித்தான் என்னை மனசில வெச்சிருந்தப்போ நெனைச்சிருப்பா.. இப்போ அவ மனசுல இருக்கற அவளோட ராமும் சந்தோஷமா இருக்கணும்னு தான் அவ நெனைப்பா.. அதுக்காக என்ன விலை வேணா குடுக்குறதுக்கு அவ தயாரா இருப்பா.. அது அவ உயிராவே இருந்தாலும்.. அவ அவளோட பிள்ளைகளோட…. அவளோட ராமோட சந்தோசமா இருக்கா.. எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. என் கூட அவ இருந்திருந்தாலும் நானும் அதைத்தான் ஆசைப்பட்டு இருப்பேன்.. என் தேவதை என்னிக்கும் சந்தோஷமா இருக்கணும்னு.. இப்பயும் நான் அவளை காதலிக்கிறேன்.. அவ எங்கயோ சந்தோசமா இருக்கான்ற நெனைப்புலயே சந்தோஷமா இருக்கேன்.. அதனால நீ எவ்வளவுதான் திட்டம் போட்டு எவ்வளவு தான் எங்களை கொடுமைப்படுத்தினாலும் நாங்க மனசால நாங்க விரும்பனவங்க நல்லா இருக்கணும்ற நினைப்புல மட்டும் தான் இருப்போம்..”ன்னு நான் சொன்னதை கேட்டு அவ ரொம்ப கடுப்பாயிட்டா.. அவ முகத்தில எள்ளும் கொள்ளும் வெடிச்சது..” என்று புன்னகை முகமாய் சொன்னான் அருண்..

 

“என்ன நீங்க? சிரிச்சுக்கிட்டே சொல்றீங்க அதை..?” என்று ராம் கேட்க “அது ஒன்னும் இல்ல.. அவ முகத்தில அவளால எங்க ரெண்டு பேரையும் எதுவும் பண்ண முடியலையேன்ற அந்த கோபத்தை பாக்குறப்போ எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்தது.. அதான் சிரிச்சேன்.. ஆனா அவளால அதை ஏத்துக்க முடியல.. இவ்வளவு கொடுமை பண்ணியும் நான் எப்படி இப்படி சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சிருப்பா போல இருக்கு..” என்றவன் தன் நெற்றியை கை விரலால் நீவி விட்டு கொண்டான்..

 

வைஷு “என்ன சார்? தலைவலிக்குதா?” என்று கேட்க “இல்ல இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..” என்றான்..

 

பிறகு எச்சிலை விழுங்கியவன் முகத்தில் சிறு வலியின் பிரதிபலிப்பு தெரிந்தது.. ராம் ஏதோ சொல்ல வர கையால் அவனை அமர்த்தி “இல்லை நான் சொல்லி முடிச்சுடறேன் ராம்… நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது.. கவலைப்படாதீங்க..” என்றவன் தொடர்ந்தான்..

 

“அதுக்கப்புறம் நித்திலா “எனக்காக சமாளிக்காத அருண்.. உனக்கு தேஜூவை கல்யாணம் பண்ணிக்க முடியலையேன்னு வருத்தமே இல்லையா?”ன்னு கேட்டப்போ நான் இதே போல தான் சிரிச்சேன்..”

 

ராமுக்கோ அங்கு நிகழ்ந்த அந்த காட்சி கண்ணுக்கு முன் தோன்றியது.. சிரித்து சிரித்தே நித்திலாவை வெறுப்பேற்றி இருக்கிறான் அருண் என்று புரிந்தது அவனுக்கு..

 

“நான் அவகிட்ட “வருத்தம் இருந்திருக்கும்.. ஒருவேளை ராம் அவளை ஒழுங்கா சந்தோஷமா வெச்சுக்காம இருந்திருந்தா எனக்கு வருத்தமா இருந்திருக்கும்.. ஆனா என்னை விட அதிகமா அவ மேல காதலையும் நேசத்தையும் பாசத்தையும் கொட்டி சந்தோஷத்தில அவளை மூழ்கடிச்சு அவரோட காதலால தெனம் தெனம் அவளை திக்கு முக்காட வச்சிட்டு இருக்காரு அந்த ராம்.. அவ இந்த உலகத்தோட உச்சியில் இருக்கிற மாதிரி சந்தோஷமா இருக்கா.. வாழ்க்கையில அவ சந்தோஷத்தோட எல்லையில் இருக்கா.. அப்படி இருக்கும்போது நான் எதுக்கு கவலைப்படணும்? என்னோட நோக்கமும் அதுதான்.. அவ எனக்கு கெடைக்கணும்னு நான் பிடிவாதம் பிடிக்கல.. அப்படி நான் செஞ்சா அது அவளுக்கு வலிக்கும்..  அவளை சந்தோஷமா வச்சிருக்கணும்னு தான் நான் நினைச்சேன்.. தெரிஞ்சோ தெரியாமலோ அவ ராம் கூட போய் சேர்ந்தாலும் சந்தோஷமா இருக்கா.. எனக்கும் அதுதான் வேணும்.. மத்தபடி என் பிசினஸ்ல நான் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கேன்.. என்னோட சின்ன பையனை நான் படிக்க வச்சிக்கிட்டிருக்கேன்.. வேற என்ன வேணும் எனக்கு?”ன்னு நான் ரொம்ப கேஷுவலா கேட்டப்போ அவளால நான் அவ்வளவு அமைதியா ஒரு பதில் சொன்னதை தாங்கிக்கவே முடியல.. அவ கண்ணுல கோவம் பத்திகிட்டு எரிஞ்சுது..” என்றான் அருண்..

 

“எரியும் எரியும்.. அவ செஞ்ச வேலைக்கு அவளை அன்னிக்கு பார்த்தப்போ எனக்கு கூடத்தான்  உடம்பு எல்லாம் பத்திக்கிட்டு எரிஞ்சுது.. அப்படியே அவ கழுத்தை நெறிச்சு கொன்னுடலாம் போல இருந்தது.. அன்னைக்கு அதை பண்ணி இருக்கணும் நான்.. அவளை உயிரோட விட்டுட்டு வந்து இருக்க கூடாது..” என்றாள் வைஷூ.

 

“ம்ம்ம்ம்.. ஆனா அதைவிட நல்ல விஷயம் ஒன்னு பண்ணிட்டு வந்து இருக்கேன் நான்.. அதனால கவலைப்பட வேண்டாம்.. இனிமே அவ அஸ்வினி கிட்ட வாலாட்ட மாட்டா.. இது எல்லாத்துக்கும் காரணம் அவளுக்கு அஸ்வினி மேல இருந்த பொறாமை.. அஸ்வினி வாழ்க்கையில அவளை சந்திச்சவங்க எல்லாருமே அவளுக்கு அன்பை மட்டும் தான் கொடுக்கணும்னு நினைச்சு இருக்காங்க.. அந்த நித்திலாவை தவிர.. அந்த சரண் கூட அஸ்வினி தனக்கே தனக்குன்னு கிடைக்கலைன்ற கோவத்துல தான் அவளுக்கும் எனக்கும் அவ்வளவு கொடுமையை பண்ணான்.. ஆனா அஸ்வினியை பார்த்து அவ மேல பொறாமை பட்டு அவளுக்கு கெட்டது பண்ணனும்னு நினைச்ச ஒரே ஆளு அந்த நித்திலா தான்.. அன்னைக்கு அவ பேசின வார்த்தைல அது எனக்கு நல்லாவே புரிஞ்சது..” என்று சொன்னவன் லேசாய் மூச்சு வாங்க ஆரம்பிக்க சற்று நிறுத்தி பிறகு தொடர்ந்தான்..

 

“உன் கண்ணுல நிஜமாவே சந்தோஷம் தான்டா தெரியுது.. இப்படி கூட ஒருத்திய ஒருத்தனால லவ் பண்ண முடியுமா? இந்த காதல் எனக்கு கிடைக்கலையேன்னு கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு.. ஆனா இந்த சந்தோஷத்தை நான் அழிச்சு காட்டுறேன்.. இப்போவும் ஒன்னு கெட்டு போகல.. தேஜுக்கு அவ உன்னை காதலிச்சானு தெரிஞ்சதுன்னா ஏற்கனவே உன்னை கல்யாணம் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சுதுன்னா அவ அந்த நிமிஷமே ராமுக்கு அவ பண்ண துரோகத்தை நெனச்சு உயிரை விட்டுடுவா இல்ல?”ன்னு என்னை கிண்டலா பாத்துக்கிட்டே கேட்டா.. எனக்கு ஒரு நிமிஷம் என் இதய துடிப்பே நின்னுடுச்சு..” என்றவன் கண்களில் அப்போது இருந்த அதே பதட்டம் இப்போதும் தெரிந்தது..

 

“நித்திலா வேண்டாம்.. விபரீதமா எதுவும் பண்ணி வைக்காத.. உன்னால அவளுக்கு ஏதாவது தொந்தரவு வந்ததுன்னு தெரிஞ்சது நானே உன்னை கொன்னுடுவேன்..”ன்னு நான் அவளை மிரட்டுனப்போ அவ சத்தமா சிரிச்சா.. அவ என் கண்ணு ரெண்டையும்  விரலால காட்டி “இதோ.. இந்த பயம் உன் கண்ணுல தெரியுது பாரு.. ரொம்ப புடிச்சிருக்கு டா எனக்கு.. இதுக்காகவே நான் இதை பண்ண தான் போறேன்.. உன் அஷ்வினி தன்னோட பழைய வாழ்க்கையை பத்தி தெரிஞ்சு ராமுக்கு துரோகம் பண்ணிட்டோமேன்னு  நினைச்சு நினைச்சு துடிச்சு செத்துப் போயிட்டான்னு தெரியறப்போ நீ துடிப்ப பாரு.. அதையும் பார்த்து ரசிக்க நான் வருவேன்.. உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன் டா.. எனக்கு நடந்த ஒவ்வொரு அவமானத்துக்கும் உங்களை பழி வாங்கியே தீருவேன்.. நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில சந்தோஷமா எந்த காலத்திலும் இருக்க முடியாது..”ன்னு அவ சொன்னப்போ அது ஒரு கான்ஃபரன்ஸ்னு கூட பாக்காம நான் அவ கன்னத்துல அடிச்சிட்டேன்..” என்றவன் கண்களில் அப்போதும் அன்று இருந்த அதே அளவு கோவம் தெரிந்தது..

 

“அடிச்சிட்டீங்களா? அவ சும்மாவே இருந்திருக்க மாட்டாளே.. குட்டி கலாட்டாவே பண்ணி இருப்பாளே.. சும்மாவே அந்த ஆட்டம் ஆடுவா அவ..” என்று கேட்டாள் வைஷு.

 

“ம்ம்ம்ம்.. ஆமா.. அவ அழுது என்னை எல்லார் எதிரேயும் திட்டி சண்டை போட்டு பெரிய ட்ராமாவே போட்டா.. ஆனா அங்க இருந்தவங்களுக்கெல்லாம் என்னை பத்தி நல்லாவே தெரியும்.. அது மட்டும் இல்லாம எனக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தவரு அவ பேசுனதை எல்லாம் கேட்டுட்டு இருந்தாரு போல இருக்கு.. அவர் வந்து நித்திலா என்னை ரொம்ப மரியாதையே இல்லாம வாடா போடான்னு பேசுனது பத்தி அவங்க எல்லார்கிட்டயும் சொன்னாரு.. என்னை பத்தி அவங்களுக்கும் தெரிஞ்சதுனால அவளைதான் அவங்க நிக்க வெச்சு கேள்வி கேட்டாங்க.. அப்போவும் அவளுக்கு தான் அவமானமா போச்சு.. அந்த அவமானத்தினால அவ முகத்தில இன்னும் பழி உணர்ச்சி அதிகமா தான் ஆச்சு..” என்றவன் தொடர்ந்து இருமவும் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.. அதை கண்ட ராமும் வைஷூவும் பதறி போனார்கள்.. 

 

வைஷு ஓடிப்போய் மருத்துவரை கூப்பிட அவர் அவசர அவசரமாய் வந்து ஏதோ ஒரு மருந்தை ஊசி மூலமாய் செலுத்தினார்.. அப்படியே வலி குறைந்து உறங்கிப் போனான் அருண்..

 

ராமின் கண்களோ அருணின் நிலையை நினைத்து கண்ணீர் சொரிந்தபடி இருந்தது.. அப்போது சரியாக அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வர எடுத்தவன் திரையில் தேஜுவின் பெயரை பார்த்தான்.. அந்த அழைப்பை ஏற்றால் அவள் அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்பாள்.. அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்…

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!