அடிமை- அன்புக்கா? அதிகாரத்திற்கா?

5
(7)

 

அடிமை- அன்புக்கா? அதிகாரத்திற்கா?

சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

 

” எங்கே போயிருந்த அருணா? இவ்வளவு நேரம் கழிச்சு வர்ற? மணி என்ன பார்த்தியா? ” என்றான் கிரீஷ்.

 

” நான் தான் சொல்லிட்டுப் போயிருந்தேனே, அகிலா பையனோட பர்த்டே பார்ட்டி இருந்தது.  கொஞ்சம் லேட்டா வருவேன்னு” என்றாள் அருணா கலக்கத்துடன்.

” இதுதான் கொஞ்சம் லேட்டா? 6 மணிக்குள்ள வருவேன்னு சொன்ன? மணி என்ன பாரு.. 6.30 ஆயிடுச்சு.” என்றான் உரத்த குரலில்.

 

” அதனால என்ன? என்னிக்கோ ஒருநாள் தானே இந்த மாதிரி நான் வெளிய போறேன். அங்க கேக் கட் பண்ண லேட்டாயிடுச்சு. ஒரு அரை மணிநேரம் தானே லேட்டாச்சு” என்றாள்.

 

” அரைமணிநேரம் தானா? ஏற்கனவே 5 மணிக்கு காஃபி குடிக்கறவன் 6 மணி வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணலாம். அதுக்கும் மேல அரைமணிநேரம்னா இங்க யாரு இருக்கா எனக்கு  காஃபி குடுக்க? 6.30 மணி வரைக்கும் ஒரு காஃபி கூட குடிக்காம நான் இங்க பட்டினியா கிடக்கறேன். நீ என்னடான்னா கேக் சமோசான்னு வயிறு முட்ட கொட்டிகிட்டு என்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம நிதானமா ஆடி அசைஞ்சுக்கிட்டு வர்ற?” என்று மேலும் கத்தினான்.

 

“உங்களுக்குத் தான் டிகாக்க்ஷன் போடவும் தெரியும். காஃபி கலக்கவும் தெரியும். போட்டு குடிக்கவேண்டியதுதானே? இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி கத்தி அமர்க்களம் பண்ணறீங்க?” என்றாள் அருணா.

 

” என்ன? நான் காஃபி கலந்துக்கணுமா? எதுக்கு? மகாராணி ஊர் சுத்திட்டு வருவீங்க! இங்க வேலை எல்லாம் நாங்களே செஞ்சுக்கணுமாக்கும். அப்பறம் உன்ன எதுக்கு கட்டிக்கிட்டேன் எல்லா வேலையும் நானே செய்யறதுக்கு. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒரு வேல செஞ்சதில்ல. காஃபியக் கூட எங்கம்மா நான் இருக்கற இடத்துலே தேடி வந்து கொடுப்பாங்க. ஆனா இப்ப?  இதுல உங்க அண்ணன் அண்ணி வேற வந்திருக்காங்க. வந்த உடனே உங்க அண்ணி உள்ளப் போனாங்க காஃபி போடறேன்னு. நான் தான் நீ ஆறு மணிக்கு வந்திருவேன்னு அவங்களயும் வெயிட் பண்ண சொன்னேன். இப்ப அவங்களும் பட்டினி” என்று படபடத்தான் கிரீஷ்.

 

அதுவரை அமைதியாக சமையலறை வாயிலிலிருந்து இவர்கள் பேசுவதைப் கேட்டுக்கொண்டிருந்த அருணாவின் அண்ணன் சேகரும் அண்ணி லதாவும் அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் வெளியே வந்தார்கள்.

 

லதா ஆவேசமாக,” நிறுத்துங்கண்ணே!! இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கத்தறீங்க அருணாவ? அவ என்ன உங்க  அடிமையா? அரைமணிநேரம் லேட்டானதுக்கு நிக்க வச்சு கேள்வி கேக்கறீங்க? தெனமும் “டாண்”ணு  அஞ்சு மணிக்கு வந்து கையெழுத்து போடணும் இல்ல? 

 

நீங்க இப்படி எல்லாம் கெடையாதே. அவ எவ்ளோ ஃப்ரீயா அவ இஷ்டத்துக்கு சந்தோஷமா இருந்தா? நீங்க ஒருநாள் கூட அவளைத் திட்டி நான் பார்த்ததில்லை. எல்லா வேலையும் அவளோட ஷேர் பண்ணி செஞ்சு, அவ ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து அதை எல்லாம் நிறைவேத்துவீங்களே!! அவளுக்கு எவ்ளோ சர்ப்ரைஸ் கிஃப்ட் செல்லாம் வாங்கி கொடுப்பீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? நான் உங்க மச்சான் கிட்ட கூட எவ்வளவோ நாள் சொல்லி பெருமைப்பட்டிருக்கேன், நீங்க ஒரு உதாரண புருஷன்னு..நீங்க ஏன் இப்படி மாறிட்டிங்க? என்றாள்.

 

உடனே சேகரும்,” ஆமாம் மாப்ள!! என் முன்னாடியே என் தங்கச்சிய இப்படி திட்டறீங்களே.. எங்க வீட்டு இளவரசி அவ…அவள இப்படி பார்க்கிறது என்னால தாங்க முடியல.. மனசே உடஞ்சிடுச்சு” என்றான்.

 

எல்லாவற்றையும் கேட்டு கிரீஷ்,” ஐயோ.. என்ன மச்சான் இப்படி சொல்றிங்க? இவ்வளவு நாளா முட்டாள்தனமா ஒரு புருஷனா கெத்தா இல்லாம இருந்த நான் இப்பத்தான் உங்கள பார்த்து திருந்தியிருக்கேன். நீங்க என்ன இப்படி சொல்றீங்க? 

 

உங்களுக்கு ஞாபகம் இருக்கா? போன மாசம் நானும் அருணாவும் உங்க வீட்டுக்கு வந்தப்ப, லதா அவங்க ஆஃபீஸ் ல யாருக்கோ அடிப்பட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காங்கன்னு அவங்கள பாத்துட்டு வீட்டுக்கு அரைமணிநேரம் லேட்டா வந்தாங்கன்னு நீங்க எப்படி எல்லாம் திட்டினீங்க? அப்பதான் யோசிச்சேன். ஓ.. இப்படித்தான் பொண்டாட்டி ய அடக்கி வெச்சுக்கணும் போல் இருக்குனு,அன்னிலேருந்து உங்கள அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதுக்கு நீங்க பாராட்டுவீங்கன்னு பார்த்தா வருத்தப்படறீங்க. இத்தனைக்கும் உங்கள மாதிரி ஹாஸ்பிடல் போயிட்டு வந்தவங்களையா திட்டினேன்?  பார்ட்டிக்கு போயிட்டு சொன்ன டைம விட லேட்டா வந்தான்னுதானே திட்டினேன். இத்தனைக்கும் லதா உங்களுக்கு டிகாக்க்ஷன் போட்டு பாலையும் காய்ச்சி வச்சிட்டு தான் போறாங்க தெனமும். உங்க தங்கச்சி அதெல்லாம் கூட செய்யறதில்ல” என்று சொல்லி மேலும் லதாவைப் பார்த்து தொடர்ந்தான்.

 

” ஏம்மா லதா!! உங்க நாத்தனார திட்டறேன்னு இன்னிக்கு இவ்வளோ ஆவேசமா சப்போர்ட் பண்ணி பேசறீங்களே!! அன்னிக்கு மச்சான் உங்கள அவ்ளோ தாறுமாறா திட்டினாரு. ஒரு வார்த்தை கூட பேசலியே நீங்க!! ஆனா பாவம் நீங்க!! அருணாக்கு இப்ப அவங்க அண்ணன் அண்ணி யா சப்போர்ட் பண்ணி பேச நீங்க ரெண்டு பேரும் இருக்கற மாதிரி அன்னிக்கு யாருமே இல்ல உங்களுக்கு சப்போர்ட்டா பேசறதுக்கு.” என்று சில நொடிகள் மௌனமானான்.

 

” ஐயோ.. மாப்ள!! நான் செஞ்சது தான் தப்பு.. எவ்ளோ தங்கமா என் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா கெடச்சீங்க. இப்ப இந்த பாவியால நீங்களும் மாறிட்டிங்க. மாப்ள.. நீங்க இருந்தது தான் சரி.. தயவு செஞ்சு என் தங்கச்சியை பழையப்படி சந்தோஷமா வச்சுக்கோங்க மாப்பிள” என்று அழுதான் சேகர்.

 

” அண்ணா!! இப்ப எனக்கு கஷ்டம்ன உடனே இவ்வளவு கஷ்டப்படறியே. அன்னிக்கு அண்ணியோட அண்ணன் அண்ணி அங்க இருந்திருந்தாங்கன்னா அவங்க மனசும் இப்படித்தானே கஷ்டப்பட்டிருக்கும். அவங்களும் ஒருத்தருக்கு மக தானே.. ஒருத்தருக்கு தங்கை தானே. உன் தங்கைக்கு வந்தா ரத்தம். பொண்டாட்டிக்கு வந்தா தக்காளி சட்னி யா? ஏன் இப்படி அண்ணா? ” என்றாள் அருணா.

 

லதாவின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது.

 

அருணா தொடர்ந்தாள். ” கவலைப்படாதே அண்ணா!! அவர் ஒண்ணும் மாறல. அன்னிக்கு நீ நடந்துக்கிட்டதப் பார்த்து வீட்டுக்கு வந்ததும் அண்ணிக்காக ரொம்ப ஃபீல் பண்ணினார். உனக்கு உன் தப்பை உணர வெக்கணும்னு தான் அண்ணிக்கு நீ செஞ்சத, தெனமும் செய்யறத உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவ்வளவுதான். மத்தபடி என்னை அவர் நல்லாத் தான் பார்த்துக்கறார். நம்ம வீட்ல இருந்தா மாதிரி இங்கேயும் ராணி மாதிரி தான் இருக்கேன் நான். என்ன புருஷா?” என்றபடி கிரீஷின் தோளில் தன் தோளால் இடித்தாள்.

 

” ஆமாம் மகாராணி!! தங்கள் சித்தம் என் பாக்யம்!!” என்றான் தலையைக் குனிந்து கைகளைச் சேவகன் போல் குறுக்கே கட்டியபடி. ” சரி!! நான் போய் எல்லாருக்கும் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் ” என்று சமையலறைக்குள் செல்ல எத்தனித்தான்.

 

 

” இருங்க மாப்ள!! நானும் வர்றேன் உங்களோட.. காஃபி மட்டும் இல்ல ..இன்னிக்கு டின்னரும் நம்மளே செய்யலாம் ரெண்டு பேருக்கும்” என்றபடி  கிரீஷுடன் கைகோர்த்துக்கொண்டான் சேகர். லதா ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்.

 

” ஷ்யூர்..வாங்க.. இன்னிக்கு நளபாகம்.. ஜமாய்ச்சுடலாம்” என்றவனைப் பார்த்து இரு பெண்களும் மனம் விட்டு சிரித்தார்கள்.

 

” லதாவுக்கு வெஜிடபிள் பராத்தா வித் கோபி மசாலான்னா ரொம்ப பிடிக்கும். காலிஃப்ளவர் இருக்கா மாப்ள?” என்றான் சேகர்.

 

” இல்லன்னா என்ன மச்சான்? பத்தே நிமிஷத்தில அண்ணாச்சி கடைல வாங்கிட்டு வந்து செஞ்சுடலாம். இப்ப மொதல்ல காஃபி போடலாம் வாங்க!!” என்றான் கிரீஷ்.

 

  1. ” அட அண்ணி!! பரவாயில்லையே.. இவ்வளவு நாளாக டொக்கு வச்சிட்டிருந்தாலும் அண்ணன் ஒரே பால்ல சிக்ஸர் அடிச்சிட்டாரு” என்றாள் கேலியாக அருணா

.

 

லதா வெட்கத்துடன் தலையை குனிந்து சிரித்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!