அத்தியாயம் 7

4.5
(13)

நிவர்த்தனன் பேசியதை கேட்ட இயலாமையில் விரக்தியாய் பெருமூச்சு விட்ட சோமசுந்தரமோ, அப்பொழுதே கவனித்தார் தன் கையில் இருந்த அலைபேசியில் இன்னும் இணைப்பில் இன்னுழவன் இருக்கின்றான் என்பதையே…!

பேசிய அனைத்தையும் அறிந்து கொண்டான் என அவர் அறிந்தபோதும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவராய், “ஹலோ இன்னுழவன்ங்களா என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.” என்றார் அவரின் இன்னு என்ற ஒருமை அழைப்பை மாற்றி.

இன்னுழவனோ அதையும் அவதானித்தவன் “ம்ம்… சொல்லுங்க, உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம். எந்த தேதியில கல்யாணம் வச்சிருக்கீங்க?” கேட்டான் குரலில் கடுமை பரவியிருக்க…

சோமசுந்தரத்திற்குகோ அவ்வளவு நேரம் அவனின் மாமா என்ற உரிமை அழைப்பு இப்பொழுது இல்லாது போனதை எண்ணி நெஞ்சுக்குள் சுருக்கென்று வலி ஊடுருவ தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டவர்,

“இன்னும் நாலு நாள்ல கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கு. நாங்க நாளைக்கு இல்லன்னா நாளை மறுநாள் அங்கு வரலாம் முடிவு எடுத்து இருக்கோம். உங்க ஊர்ல என் பொண்ணுக்கு கல்யாணம் வைக்கிறதுல்ல பிரச்சனை எதுவும் வராதுல்ல. அதனால வேற யாரும் பிரச்சனை பண்ண மாட்டாங்களே!” கேட்டார் தயக்கதுடன் பரிவாக.

“இது என்னோட ஊர் அப்படிங்கறதுக்கு முன்னாடி உங்களுக்கு சொந்தமான ஊர் அப்படிங்கிறது ஞாபகம் இருக்கட்டும். ரொம்ப சந்தோஷம் இத்தனை வருஷமா இந்த ஊரை மறந்துட்டு, இப்போ இந்த ஊரோடு உறவு வெச்சிக்க நீங்க நினைச்சதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்.

இங்க உங்க பொண்ணோட கல்யாணத்த தாராளமா நடத்தலாம், நானே முன்ன நின்னு நடத்திக் கொடுக்கிறேன். குரலில் அழுத்தம் குடியேற ஊர் தலைவரா அது என்னோட கடமை” என்றான் தாடை இறுக.

தாடை இறுக்கினாலும் மனமது அலைப்பாய்ந்தது மாமனவன் மறைத்து தவிக்கும் சூழ்நிலை எண்ணியவனுக்கு. அச்சூழ்நிலைக்கு காரணமானவனே தான் தான் என்றால் மாமனவன் தவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பானோ என்னவோ!

“இல்ல மாப்புள்ள சா…” என அவர் கூறும் முன், இன்னுழவனோ “நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியுது. சாதி என்ற அவ்வார்த்தைக்கு தடை விதித்தவன், இங்க அதெல்லாம் எதுவும் பார்க்கிறது இல்லைங்க”

மேலும் நிவர்த்தனனுடன் பேசியதை கூர்ந்து… “அப்புறம் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்கு அப்படினாலே இங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும் எந்தவித தடையும் இல்லாம. நானே நடத்தி வைப்பேன், அதுக்கு எதிர்க்க எந்த கொம்பன் வந்தாலும் என்ன தாண்டி எதுவும் பண்ண முடியாது.” என்றான் மீண்டும் குரலில் அழுத்தம் குடியேற, அதே நேரம் சோமசுந்தரத்தின் தவிப்பையும் புரிந்து கொண்டவனாய் சாடினான்.

இன்னுழவன் கூறியதை கேட்டு கடந்த காலத்தை நினைத்து பெருமூச்சு விட்டவர், “சரிங்க அப்ப நாங்க நாளைக்கு அங்கு வந்துருவோம்” என்றார் ஊர் தலைவரிடம் பேசும் விதமாய் சோமசுந்தரம்.

சரி என்ற இன்னுழவன் குரலில் இப்போது இறுக்கம் தளர்ந்தது.

“மாமா…”

“இன்… இன்னு…”

“ஏதும் பிரச்சனை இல்லையே? ஏதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் பார்த்துகிறேன்.”

“இல்ல… இல்ல இன்னு… பிரச்சனை ஏதும் இல்ல. நான் வைக்கிறேன்” என அவனுடம் மேலும் பேசினால் அனைத்தையும் உடைத்து கூறிவிடுவோம் என வேகமாக அலைபேசியை துண்டித்திருந்தார் சோமசுந்தரம்.

யோசனையுடன் கவலையுடனும் வீட்டுக்குள் நுழைந்த இன்னுழவனை பார்த்து குரலை செரும்பினார் சக்திவேல்.

இன்னுழவனும் புருவம் உயர என்ன என்னும் விதமாய் அவரைப் பார்க்க, “சீக்கிரம் சாப்பிட்டு வா முக்கியமான ஒரு விஷயம் பேசணும்” என்றவராய் தொலைக்காட்சியில் தன் பார்வையை பதித்துக் கொண்டார்.

“என்னவாம்” என கோதாவரிடம் கேட்டவனாய் சாப்பிட அமர்ந்தான்.

 கோதாவரியும் தெரியலை என்ற பாவனையில் உதட்டை சுழிக்க, ஏதும் பேசாது சாப்பிட்டு முடித்தான் இன்னுழவன்.

சாப்பிட்டு முடித்தவன் சக்திவேலுக்கு எதிர் புறத்தில் அமர, அவன் அருகில் அப்பத்தாவும் வந்து சேர்ந்து கொண்டார்.

“சொல்லுங்க என்ன முக்கியமான விஷயம் பேசணும்?”

 தொலைக்காட்சியை அனைத்தவர், “இனிதுழனிக்கு ஒரு வரன் வந்திருக்கு. நல்ல இடமா தெரியுது பேசி முடிச்சிடலாம்” என்றவர் சொல்லிக் கொண்டிருக்க,

“யாருக்கு யார பேசி முடிக்க போறேண்ணா…” என்று முந்தானை தலைப்பை இடுப்பில் சொருகி குரல் கொடுத்து உள்ளே வந்தார் சக்திவேலின் இரண்டாம் தங்கை தங்கமணியும் அவரின் புதல்வி நந்தனாவும்.

“வந்துட்டா டா வைப்ரேஷனு…” அப்பத்தா கவுண்டர் கொடுக்க, மௌனமாய் நகைத்துக் கொண்டான் இன்னுழவன் உதட்டுக்குள்.

“இந்தாங்க மாமா உங்களுக்கு பிடிக்கும்னு பால் கொடுக்கட்டை அம்மா காலைலயே செஞ்சாங்க” என்று பால் கொழுக்கட்டையை நீட்டியிருந்தாள் நந்தனா இன்னுழவனிடம்.

மென்னகையுடன் “வை மா அப்புறம் சாப்பிட்டுக்குறேன்” என்றவன் கூற…

சரி என்ற அவள் திரும்பப் போக “ஏண்டி இவள உன் மாமனுக்கு மட்டும் தானக்கும். ஏன் எங்களுக்கெல்லாம் வகுறு இல்லையாக்கும் கொண்டாடி அத” அவள் கையில் இருந்த பாத்திரத்தை வெடுக்கென புடுங்க எத்தனித்தார் அம்பிகாமா.

“அப்பத்தா உனக்கு யாரு இல்லன்னு சொன்னா… இரு நான் போய் முதல்ல கிண்ணதுல வைச்சிட்டு வரேன்” என கோதாவரி நோக்கிச் சென்றாள் நந்தனா அடுப்படிக்கு.

இங்கு பேச்சு தொடர்ந்தது…

“சொல்லுண்ணா யாருக்கு யார பேசி முடிக்கப் போற” தங்கமணி மீண்டும் சாட…

“நம்ம இனிதுழனி ஒரு வரன் வந்திருக்குத்தா, அதான் பேசி முடிச்சிடலாம்னு இன்னுழவன் கிட்ட பேசிட்டு இருந்தேன் நல்ல வேலை நீயும் வந்துட்ட” என்றார் சக்திவேல்.

சக்திவேலுக்கு தங்கமணி என்றால் கொள்ளை பிரியம். ஏனென்றால் சக்திவேலின் கொள்கைகளை அச்சு பிசறாமல் அப்படியே போற்றுபவரே தங்கமணி. சக்திவேல் பேச்சு இன்னுழவனிடம் எடுபடாதது போல் இவரின் பேச்சும் இன்னுழவனிடம் எடுபடாது.

“ஹிம்… அதான பாத்தேன், நான் கூட இன்னுழவனுக்கு தான் வேற யாரையோ பேசி முடிச்சிட்டியோன்னு ஒரு நொடி பதறிட்டேன்ணா…” தங்கமணி சாட

“பதறுத மூஞ்சியாடா இதெல்லாம்…” மீண்டும் அப்பத்தா கவுண்டர் கொடுத்தார். “அப்பத்தா கொஞ்சம் நேரம் அமைதியா இரு என்ன தான் பேசுறாங்க முதல்ல கேட்போம்” என அப்பத்தா காதை கடித்தான் இன்னுழவன்.

“அது எப்படித்தா என் மருமகள விட்டுட்டு வேற ஒரு பொண்ண நான் என் மகனுக்கு கட்டுவேன். என்னைக்கு இருந்தாலும் என் மருமகள் நந்தனா தான் இந்த வீட்டுக்கு மூத்த மருமக” என்றார் சக்திவேல் வாயெல்லாம் பல்லாக.

“ஆமா இது பெரிய ஐநா சபை ஒப்பந்தம், அது பறிபோயிடும்னு ஒரு நாட்டுத் தலைவர் கவலைப்படுறதும்… அப்புறம் இல்லன்னு இருநாட்டு தலைவர்களும் பெருமைப்பட்டுறதும் ஐயோ முடியல…” அப்பத்தா சிலுப்பிக் கொண்டவர்

“ஏன் டா… பேராண்டி நீ தினமும் காலையில கடலை போட்டே காதல வளர்த்துக்கிட்டு இருக்கது உன் அப்பனும் உன் அத்தகாரிக்கும் தெரியாது போல”

“ப்ச்… அப்பத்தா… கொஞ்ச நேரம் அமைதியா இருக்க போறியா இல்லையா?” இங்கு இருவரும் மௌனமாய் வாதாடி கொண்டிருக்க, அவர்களின் முன் பால் கொழுக்கட்டையை நீட்டியிருந்தாள் நந்தனா.

 இதழ் விரியா புன்னகையுடன் இன்னுழவன் எடுத்துக் கொள்ள, “இத வச்சுட்டு வர உனக்கு இம்புட்டு நேரமாக்கும் கொடு” என அப்பத்தா பெற்றுக்கொள்ள…

அதை உண்ணாது கீழே வைத்த இன்னுழவனோ குரலை செருமியவனாய், “பேச வந்த விஷயத்தை முதல்ல பேசுறீங்களா? மனுஷனுக்கு 1008 வேலை கிடைக்குது. நீங்க சாவகாசமா பேசி முடிக்கிற வரைக்கும் என்னால இங்க வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது.” என்றவன் சக்திவேல் மற்றும் தங்கமணியின் தனது கல்யாண சம்பாஷனையை கத்தரித்தான் அழுத்த குரலில்.

சக்திவேலுக்கும் தங்கமணிக்கும் கொடுத்துவிட்டு சக்திவேல் அருகில் அமர்ந்த நந்தனாவோ இன்னுழவன் பேச்சில் ஒரு நிமிடம் அவனை ஏறெடுத்து பார்க்க… சக்திவேலே பேச்சை தொடர்ந்தார்.

“அதான் மேலூர்ல ராமசாமி கேள்விப்பட்டு இருப்ப தான அவரோட பையனுக்கு தான். வசதியிலயும் பெயர்லையும் நம்ம குடும்பத்துக்கு ஒப்பானவங்க தான். முக்கியமா நம்ம இனம் நம்ம, சாதி பய…” என சக்திவேல் கூறி முடிக்க சூடு வைத்தது போல் இருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றான் கூர் விழிகளுடன் இன்னுழவன் தாடைக்குள் பற்கள் அரைப்பட.

“ரைட்டு வேலியில போன பாம்ப வேட்டிக்குள்ள தூக்கி விட்டுக்கிட்டான் என்ற மகன்” என்றவராய் அப்பத்தா முணுமுணுக்க…

“அப்புறம் என்ன அண்ணா. நம்ம அந்தஸ்துக்கும் அஸ்திக்கும் ஒத்த, எல்லாத்துக்கும் மேல நம்ம இனம் பயலா இருந்தா தான் சட்டுப்புட்டுன்னு கட்டி வைக்க வேண்டிய தான அண்ணா” தங்கமணி அவருக்கு வசை பாட…

 சக்திவேலை குறித்தவர் “அவனுக்கே என் பேரன் முதல்ல ஸ்செம்ப “(ஸ்டெம்ப்) உருவ கணக்கு போட்டான், இதில இவ வேற குறுக்கால அமயர்(அம்ப்பயர்) மாதிரி நின்னுக்கிட்டு. இன்னைக்கு செதறு தேங்கா தான். முதல்ல யாரு மண்ட உடையும்?” மீண்டும் அப்பத்தா கேலியாய் நகைத்து கொழுக்கட்டையை மென்று ஆர்வமாய் இருக்க… நந்தனாவோ ஏதும் பேசாது மௌனம் காத்தாள் இன்னுழவனை பார்த்தவளாய்.

எழுந்து நின்றவன் ஏதும் பேசாது இரண்டடி எடுத்து வைக்க, “என்ன இன்னுழவா ஏதும் சொல்லாம போற பேசி முடிச்சிடலாமா?” சக்திவேல் கேட்க,

“என் தங்கச்சிக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்து எப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு தெரியும். உங்க வேலை ஏதோ அதை மட்டும் நீங்க பார்த்தா போதும்” என்றான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்.

“அப்போ என் பொண்ணு மேல எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றியா?” சக்திவேல் ஆதங்கமாய் எழுந்து கொள்ள…

 கைகளை மார்புக்கு இடையில் கட்டி அவரை அடி முதல் நுனிவரை பார்வையால் எரித்தவன், “ஆமா உங்களுக்கு உரிமை இல்லை” என்றான் சர்வ சாதாரணமாக.

“இன்னுழவா… என்ன வார்த்தை சொல்லிட்ட அதுவும் அண்ணன பார்த்து. நம்ம பிள்ளை கிட்ட குறை இருக்கு…. ” தங்கமணி குறுகிட

அவ்வளவு நேரம் பொறுமை காத்தவன் மடை கடக்க “ஏய்….” ஒற்றை விரல் நீட்டி அவர் மீது கார பார்வை தெளித்தவன், “என் தங்கச்சிய பத்தி குறை கிறன்னு ஏதாவது பேசினீங்க, அத்தைன்னு கூட பாக்க மாட்டேன் வகுந்துருவேன். என் அப்பாவுக்கே உரிமை இல்லைனு சொல்லிட்டேன், குறுக்க நீங்க யாரு. அத்தைங்கிற மரியாத மனசுல இருக்கு அத கெடுத்துக்குற மாதிரி நடந்துக்காதீங்க.”

“அப்பாடா என் பேரன் ருத்ர அவதாரம் எடுத்துட்டான்.” என இன்னுழவன் சாப்பிடாது வைத்த கொழுக்கட்டையையும் அம்பிகாமா குதூகலமாய் உண்ண…

தங்கமணியோ இன்னுழவன் சீற்றலில் விதிர்விதிர்த்து நிற்க, சக்திவேல் புறம் திரும்பியவன் “அப்புறம் உங்களுக்கு, என் தங்கச்சிக்கு நல்லவனா இருக்கவன தான் நான் பார்ப்பேனே தவிர நம்ம சாதிக்கார பையனா ஆஸ்தி அந்தஸ்து இருக்குற பையன்னான்னு பார்க்க மாட்டேன்.

எல்லாத்துக்கும் மேல முக்கியமா அவளுக்கு புடிச்சிருக்கான்னு பார்ப்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா அவன் எப்பேர்ப்பட்டவனா இருந்தாலும் யாரு ஏதிர்த்தாலும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்”

“நீங்க சொன்னீங்களே ராமசாமி பையன், அவன் நம்ம சாதிக்கார பையன்னு பாத்தீங்களே அவன் நல்லவனான்னு பார்த்தீர்களா. ஒரு நல்ல அப்பா தான் பொண்ணுக்கு 24 மணி நேரமும் குடியும் குட்டிகளோடையும் சுத்துறவன தான் மாப்பிள்ளையா பார்ப்பாரா…?” சினத்தின் உச்சத்தில் இன்னுழவன் கத்த…

“அதெல்லாம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சரி ஆயிடப் போறான். இதெல்லாம் ஒரு குறையா” என கொஞ்சமும் யோசிக்காது சக்திவேல் வினவ…

தாடை வருடியவன், “ஓ அப்படி வரீங்களா… அப்ப நானும் 24 மணி நேரமும் குடியும் குட்டியுமா சுத்துனா உங்க தங்கச்சி அவங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்களா?”

“இன்னுழவா…” சக்திவேல் கத்த

“சும்மா கத்தாதிங்கப்பா உங்களுக்குனா ஒரு நியாயம் என் தங்கச்சிக்கு என ஒரு நியாயமா. சாப்பிட்டமா தூங்குனோமா ரெஸ்ட் எடுத்தமான்னு இருங்க. அதவிட்டு தேவையில்லாம என் வாழ்க்கையிலும் என் தங்கச்சி வாழ்க்கையையும் குறுக்கிட்டீங்கனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.

ஊருக்குள்ளேயே சாதிய ஒழிக்கணும் நான் இருக்கேன். நீங்க என் வீட்டுக்குள்ள சாதிய கொண்டு வரீங்களா. அது இனி ஜென்மத்துக்கும் நடக்காது பார்த்து நடந்துக்கோங்க” என்றவன்,

தங்கமணியை நோக்கியவனாய், “அவர்கிட்ட சொன்னது எல்லாம் நந்தனாவின் மீது பார்வையை பதித்து மீட்டவன் உங்களுக்கும் தான். பார்த்து நடந்துக்கோங்க” என தீர்க்கமாக எச்சரித்து நகர்ந்தான் கை காப்பை ஏத்தி விட்டவனாய் இன்னுழவன்.

வாசல் வரை சென்றவன் மனம் கேளாது திரும்பி பார்த்தான் கோதாவரியை.

அவன் பார்வையோ தாயை நாட… அவரோ அடுப்படியில் விழிகளில் நீருடன் நின்று கொண்டிருந்தார் மனம் முழுவதும் ரணமாய்.

செங்கோதை மணம் வீசும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!