கோயிலில் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றிவிட்டு ராகவியும் வைதேகியும் குமுதாவின் உதவியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த நேரம் நல்ல நேரம். அதனால் சுந்தரத்தின் கண்ணிலோ குசேலனின் கண்ணிலோ இவர்கள் படவில்லை.
அப்பாடா என்று மூச்சினை இழுத்து விட்டுக் கொண்டவர்கள், அவரவர் அறையில் சென்று ரெஸ்ட் எடுத்தார்கள். வெற்றிமாறன் வீட்டில் இருக்கவில்லை. அவனை காலையில் நேரத்துக்கே வந்து கோயில் வேலையாக வெளியே அழைத்துச் சென்று இருந்தனர். அதனால் அவனும் வீட்டில் இருக்கவில்லை. பெரியவர்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் வெற்றிமாறனை சமாளிக்கவே முடியாது. அதை நினைத்துதான் அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
மாலையில் தீ மிதிக்கும் சடங்கு ஆரம்பமாகியது. பக்தர்கள் தங்களின் மன வேண்டுதல்களை அந்த அம்மாவிடம் முறையிட்டு விட்டு அவரை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு அந்த தீயில் இறங்கினார்கள். நிறைய பேர் அங்கே வரிசையாக இருந்து தீ மிதிப்பதற்கு தயாராகினர். அங்கே நின்று வெற்றிமாறனும் அவனினு நண்பர்களும் அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். வினிதாவும் அவள் தோழிகளுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் அருகில் இருந்த பெண்மணி ஒருவர், அருகில் நின்ற பெண்மணுடன் பேசிக் கொண்டிருந்தார். “இந்த தீ மிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது மல்லிகா…”
“என்ன சொல்ற அக்கா….?”
“ஆமா நான் போன வருஷம் இந்த மிதிச்சேன்… மூணு வருஷமா பேசாம இருந்த என் பையன் பேசணும்னு வேண்டிக்கிட்டே தீ மிதிச்சேன்… நீ சொன்னா நம்ப மாட்டே இது மிதிச்சு மூணே மாசத்துல என்னோட பேசிட்டான்…. எல்லா இந்த மாரியம்மனோட அருள் தான்….” என்றார். இதை கேட்டும் கேட்காமல் நின்றிருந்த வினிதாவிற்கு யோசனை வந்தது. எதையும் யோசிக்காதவள் சட்டென்று வரிசையில் வந்து நின்றாள்.
அவள் தீ மிதிப்போர் வரிசையில் வந்து நிற்பதை பார்த்த தோழிகளும் எதிர் பக்கம் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த வெற்றிமாறனும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“வினி என்ன பண்றடி… இங்க வா அங்க வரிசையில நிற்கிறவங்க தீ மிதிக்கிறவங்க…” என்றாள் அவளின் தோழி.
“எனக்கு தெரியும்டி…. நானும் தீ மிதிக்க போறேன்….”
“ஐயோ வினி உனக்கென்ன பைத்தியமா…. வா இந்த பக்கம்…. அதெல்லாம் வேண்டுதல் வச்சி செய்றது டி…. விளையாடாத அம்மனோட கோபத்துக்கு ஆளாகிடுவ….”
“அதெல்லாம் ஒன்னும் நடக்காது…. நானும் ஒரு வேண்டுதலை நினைச்சுகிட்டு தான் தீயில இறங்கப்போறேன்…. நீங்க சத்தம் போடாம இருங்கடா….” என்றாள்.
அதே நேரத்தில் எதிர் பக்கம் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வெற்றிமாறன்.
“டேய் என்னடா இவ இப்படி பண்றா….?”
“அது தானே மாப்ள… இப்போ எதுக்கு தீயில இந்த புள்ள இறங்க போறா…?”
“எனக்கும் அதான் தெரியல மாப்பிள்ளை…. இவளுக்கு எதுல விளையாடனும்னு ஒரு வெவஷ்தையே இல்லை…. சாமி விஷயத்துல போய் யாராவது விளையாடுவாங்களா…. இவளை என்ன பண்றேன்னு பாரு…” என்று அவள் அருகே செல்ல முற்பட்ட வெற்றிமாறனை தடுத்தார்கள் அவனின் நண்பர்கள்.
“டேய் எதுக்குடா என்ன புடிக்கிறீங்க விடுங்கடா….”
“மாப்ள எல்லாரும் இங்கதான் பார்க்குறாங்க…. ஒருவேளை நீ போய் அந்த பொண்ணு கூட சண்டை போட்டா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியும்… பேசாம அமைதியா நில்லு… அவளா விரும்பி தானே போனா அவளால முடியும்….”
“அட நீங்க வேற போங்கடா….” என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்றான் வெற்றிமாறன். தனக்கு வந்த கோபத்தை கையை அடக்கி கொண்டு அமைதியாக நின்றான் அவன்.
இப்போது மட்டும் வினிதா அவன் கையில் சிக்கினாள் என்றால் அவளை கண்டந்துண்டமாக வெட்டி போடும் அளவுக்கு கோபம் வந்தது அவனுக்கு. வெற்றிமாறன் வினிதா விளையாட்டுக்காகவே இதை செய்வதாக நினைத்தான் அதனால் அவன், அவள் மீது கோபப்பட்டான்.
வினிதாவும் கண்ணை மூடிக்கொண்டு கையை கட்டிக் கொண்டு, மனதில் வேண்டுதலை வேண்டிக் கொண்டு தீயில் இறங்கினாள். இங்கே வெற்றிமாறனின் மனமும் அவளுக்கு இது நடந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தது. வினிதா மிகவும் மெதுவாக பயபக்தியோடு அந்த தீயினை கடந்து வெளியே வந்தாள். அவள் அருகில் வந்த அவளது தோழிகள் அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த கோயில் மண்டபத்திற்குள் சென்றனர்.
வெற்றிமாறனும் அவனது தோழர்களுடன் அந்த பக்கம் வந்தான். வினிதாவுக்கு கால் எல்லாம் வலித்தது. அந்தக் கோயில் தூணில் சாய்ந்து காலை ஒரு பக்கம் நீட்டிக்கொண்டு இருந்தாள். வெற்றி மாறன் கையில் மருந்துடன் வந்தான். அங்கே அவளது தோழிகள், “வினி என்னாச்சுடி உனக்கு…. ஏன் திடீர்னு இப்படி பண்ணிட்ட…. எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல…”
“ஆமாடி… எனக்கு பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாங்களே அவங்க தான் சொன்னாங்க… ஏதோ அவங்க பையனாம் அவங்ககூட மூணு வருஷமா பேசலையாம்… போன வருஷம் இந்த தீ மிதிச்சாங்களாம்… அடுத்த மூணே மாசத்துல அவங்க பையன் அவங்க கிட்ட பேசிட்டானாம்…”
“ஏய் அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்…?”
“அப்படி சொல்லாதீங்கடி… அம்மாக்கு அவங்க அண்ணன் குடும்பத்தோட சேர்ந்து ஒண்ணா சந்தோஷமா இருக்கணும்னு ஆசை…. அதுதான் ஏதோ என்னால முடிஞ்சதைப் பண்றேன்…. அவங்க போட்டோ கிழிஞ்சிட்டுனு எப்படி துடிச்சாங்கன்னு தெரியுமா…. அவங்க துடிப்பு இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு…. அதுதான் அவங்க அண்ணன் குடும்பத்தோட அம்மாவை சேர்த்து வைக்கணும்…. எனக்கு என்ன பண்றேன்னு தெரியல அதான் இந்த அம்மனை நினைச்சுகிட்டு தீயில இறங்கிட்டேன்….” என்றாள்.
இதை மறுபக்க தூணருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
“என்ன மச்சான் ஏதோ இந்த பொண்ணு விளையாடிட்டு இருக்குனு பார்த்தால் எப்படி பேசுது…..”
“அவளை பற்றி தெரியாதாடா… அவள் வெளியில தான் இப்படி இருப்பா… ஆனால் உள்ளுக்குள்ள குழந்தை மனசு….”
“என்ன மச்சான் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுது….”
“சரி சரி ஓட்டாதீங்க… ஓட்டாதீங்க…” என்றவன் தனது கையில் இருந்த மருந்தை அவள் அருகில் கொண்டு வந்து வைத்தான்.
அதைப் பார்த்த வினிதா, “மாமா நீ எப்ப வந்த….?” என்றாள்.
“ஏன்டி உனக்கு அறிவு இல்லை…?”
“என்ன மாமா இப்படி கேக்குற…. பின்ன எப்படி கேட்கணும்…? சட்டுனு வந்து தீயில இறங்கிட்ட…. ஏதாவது தெய்வ குத்தமானா என்னடி பண்ணுவ….?”
“அதை விடு மாமா அதெல்லாம் பார்த்துக்கலாம்…. ஆமா இந்த மருந்து யாருக்கு….?”
“ஆஆஆ உங்க அப்பன் சங்கரநாதனுக்கு….” என்றான்.
தந்தையின் பெயரை இவன் எடுத்ததும். வினிதாவிற்கு கோபம் வந்து விட்டது. “இதோ பார் மாமா… நீ என்னைப் பற்றி என்ன வேணாலும் பேசு…. ஆனால் என் அப்பாவைப் பற்றி மட்டும் ஏதாவது பேசினா… அப்புறம் நடக்கிறதே வேற சொல்லிட்டேன்…..”
“இதோ பாருடா அவரைப் பற்றி பேசினா இவளுக்கு கோவம் வருது….”
“பின்னே வராம இருக்குமா…. அவரு என்னோட அப்பா… என் அப்பா பற்றி யாரு தப்பா பேசுனாலோ காமெடி பண்ணாலோ எனக்கு கோவம் வரும்….” என்று முகத்தை சுருக்கினாள்.
“அம்மா தாயே உன் அப்பனை பத்தி நான் எதுவும் பேசலை சரியா…. இந்தா மருந்து வாயடிச்சிட்டு இருக்காமல் மருந்தை போடு…”
“தேங்க்ஸ் மாமா….” என்று கண்களை சிமிட்டினாள்.
“உன் தேங்க்ஸை நீயே வச்சுக்கோடி குண்டம்மா….”
என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். அவன் சொன்னதைக் கேட்ட வினிதாவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும் அவன் மருந்து எடுத்து வந்து தந்ததால் அவனை மன்னித்து விட்டாள்.
“அடியே புள்ள வினிதா… என்னடி நடக்குது இங்க…”
“ஏன்டி அப்படி கேக்குற….?”
“இல்லை நீ அண்ணனை மாமா…. மாமான்னு சொல்றதும்…. வெற்றி அண்ணே உனக்கு ஒண்ணுனா துடிச்சு போய் வாறதும்…. மருந்து கொடுக்கிறதும்…. இது நல்லா இல்லையே புள்ள….”
பின்னர் ஒரு தோழி அவளை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு சென்றாள். வீட்டுக்குச் சென்றதும் வினிதா நேரே சென்று குளித்துவிட்டு வந்தாள். அப்போது அவளது அறைக்கு வந்தார் ரேணுகா. “வினி இங்க வா….”
“என்னம்மா நீ கோயில தீ மிதிச்சியா….”
“அது…..அது……”
“சொல்லு வினி நான் கேக்குறேன் இல்லை தீ மிதிச்சியா….?”
“ஆமாம்மா….”
“என்ன ஆமாவா…” என்ற ரேணுகா வினி கன்னத்தில் அறைந்தார்.
“அம்மா எதுக்கு இப்போ என்னை அடிச்ச….?”
“பின்னே உனக்கு அடிக்காமல் என்னடி பண்றது….? அது எப்படிப்பட்ட சடங்குன்னு தெரியுமா…? நீ போய் உன் இஷ்டத்துக்கு முடிச்சிட்டு வர…. அதுக்குன்னு சில சம்பிரதாயம் இருக்குடி… அதை ஒழுங்கா செய்த அப்புறம் தான் இந்த தீயிலே இறங்கனும்…. நீ உன் விளையாட்டுத் தனத்தை அதிலேயா காட்டுவ….?”
“அம்மா சரி மா அதுதான் தீ மிதிச்சிட்டேன்ல விடு… விடு….”
“சரி இந்த தடவை மன்னிக்கிறேன்… இதுக்கு மேல இப்படி பண்ணாத… நீ வீட்டிலேயே இரு…. நாங்க நைட்டுக்கு வான வேடிக்கை பார்க்க போயிட்டு வந்திடுறோம்….”
“இது நல்லா இருக்கே… நீங்க எல்லாரும் வான வேடிக்கை பார்க்க போவீங்களாம்…. நான் மட்டும் வீட்ல இருக்கணுமா… அதெல்லாம் முடியாது…. நானும் உங்க கூட வான வேடிக்கை பார்க்க வருவேன்…”
“வினி சொன்னா கேளுடி… இந்த காலோட உனக்கு நடந்து வர்றது கஷ்டமா இருக்கும்…. நீ ரெஸ்ட் எடு….”
“அதெல்லாம் முடியாதும்மா… நான் வருவேன்… நான் வான வேடிக்கை பார்க்கணும் அவ்வளவுதான்….”
“நீ எப்போ தான் என் சொல் பேச்சு கேட்டிருக்க இப்போ கேட்குறதுக்கு…. சரி இந்தா இதுல புது துணி இருக்கு இதை போட்டுட்டு வா…”
“வாவ் சூப்பரா இருக்குமா…. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….”
“சரி சரி… இதை போட்டுட்டு ரெடியாகு…”
“அம்மா எனக்கு ஒரு காபி கிடைக்குமா….?”
“இந்த டைம்ல காப்பியா….”
“ஆமாம்மா ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் குடிச்சா நல்லா இருக்கும் போல இருக்கு…. தாயே ஒரு காபி போட்டுக் கொடுங்க…”
“சரி சரி இரு எடுத்துட்டு வரேன்…” என்று அங்கிருந்து சென்றார் ரேணுகா.
ராகவியும் சுந்தரமும் வெற்றிமாறனையும் குமுதாவையும் அழைத்தனர். இருவரும் வந்ததும், அவர்களது உடைகளை அவர்களிடம் கொடுத்தார்கள்.
“நான் என்னம்மா சொல்லப் போறேன்…. நீங்க எது எனக்கு எடுத்து கொடுத்தாலும் அது அழகுதான்….”
“சரி ரெண்டு பேரும் இதை போட்டுட்டு ரெடி ஆயிட்டு வாங்க கோயிலுக்கு போகலாம்…”
“சரி அம்மா… தாத்தா பாட்டி நீங்க வரலையா….?”
“இல்லை வெற்றி… நாங்க வரலை… நீங்க போயிட்டு வாங்க எல்லாரும்…”
“சரி அம்மா நான் ரெடியாக போறேன்…” என்ற குமுதா அறைக்குள் ஓடினாள். வெற்றிமாறனும் சிரித்துக் கொண்டு ரெடியாகச் சென்றான்.
தனது அறையில் குமுதா அந்த தாவணி பாவாடையில் அழகாக தெரிந்தாள். அழகாய் ஜடை பின்னி அதில் மல்லி பூ வைத்து கண்ணுக்கு மை, கழுத்துக்கு செயின்,காதில் பெரிய ஜிமிக்கி என்று பார்க்க அழகாக இருந்தாள். தனது கண்ணாடியில் தெரிந்த தனது விம்பத்தைப் பார்த்து தானே நெட்டி முறித்துக் கொண்டாள்.
‘ஐயோ குமுதா…. நீ எம்புட்டு அழகா இருக்க… பார்க்கவே அத்தனை அம்சமா இருக்க…. இந்த அழகை பார்க்கும் பாக்கியம் அவருக்கு இருக்கான்னு தெரியலையே….’ என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
பின்னர் ‘எப்படியும் அவங்க கோயிலுக்கு வருவாங்க. அவங்க கண்ணுல படுற மாதிரி. நடந்துட்டு வந்தா போச்சு…’ என்று திட்டம் போட்டுக் கொண்டாள் குமுதா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊