ஏற்கனவே தனக்குள் இறுக்கமாக இருந்தவனின் மனநிலை விதுஷா உடனான திருமண பேச்சுக்கு பிறகு மேலும் இறுகியது. அவளிடமிருந்து இன்னும் கொஞ்சம் விலகி நிற்க தொடங்கினான்.
அது அரவிந்திற்கு தான் வசதி ஆகிப் போனது. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் விதுஷாவின் மனதை தேற்றுகிறேன் என்ற பெயரில் அவளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருந்தான்.
வீட்டில் நடந்த திருமண நிராகரிப்பு பேச்சு பற்றியும் விதுஷா அரவிந்த்திடம் கூறி இருக்க..
“விடு விது.. நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல.. பாரி உன்னை நல்ல பிரண்டா பார்க்கிறான். அவனால் எப்படி உன்னை அதை தாண்டி பார்க்க முடியும். தேவையில்லாம ஆசையை நீ உன் மனசுல வளர்த்துக்கிட்டா அது உனக்கு தான் கஷ்டம்னு நான் உன்கிட்ட இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன். சரி விடு எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்கோ”.
அவனுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தாலும் அவளுக்குள் பாரியின் பாராமுகம் பெறும் வேதனையை தான் ஏற்படுத்தியது.
அதன் பிறகு அப்படியே நாட்கள் நகர மூவரும் அவரவர் வேலையில் கவனத்தை செலுத்தினர். விதுஷாவும் வேலை விஷயமாக இடைப்பட்ட காலத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்தாள். இப்பொழுது தான் மீண்டும் இந்தியா திரும்பி இருக்கிறாள்.
இனியாள் கிடைத்த பிறகு பாரிவேந்தனின் மனமும் சற்று அழுத்தம் நீங்க.. மீண்டும் அவன் பழைய நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினான்.
அதன் வெளிப்பாடு தான் நண்பர்கள் இருவரையும் இன்று அவன் வீட்டிற்கு வெகு நாட்கள் கழித்து விருந்திற்கு அழைத்து இருப்பதும்.
முதலில் விதுஷாவிற்கும் அரவிந்திற்கும் கூட ஆச்சரியம் தான். விதுஷாவிற்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.. மீண்டும் பாரி பழையபடி மாறுவதை எண்ணி உள்ளம் மகிழ்ந்து போனாள்.
ஆனால் அரவிந்த்திற்கோ குழப்பம், ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.. எங்கே மீண்டும் பழையபடி இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்று.
மூவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பழையபடி கதைகளை பேசிக்கொண்டே உணவருந்தி கொண்டிருந்தனர்.
ஹால் சோபாவில் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்திருந்த முத்துலட்சுமி அவர்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். மெல்லமாக அவரின் கண்களில் நீர் கோர்க்க தொடங்கியது.
அவரை கவனித்த இனியாள், “என்னாச்சு மேடம் ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?”.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் என் பையன் சிரிச்சு சந்தோஷமா பேசுறதை பாக்குறேன்” என்றார் தொண்டையை அடைக்கும் குரலில்.
அவரின் வார்த்தையில் இனியாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பார்க்கும் காட்சியை தான் இனியாளும் பார்த்தாள்.
ஆம், பாரிவேந்தன் தன் முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்த வண்ணம் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
நன்கு வசீகரமான புன்னகை அவனுடையது..
பார்ப்போர் அனைவரையும் தன் ஒற்றை சிரிப்பினாலேயே ஈர்த்து தனக்குள் சுருட்டி கொள்ளும் வசீகரமான புன்னகை..
முதல் முறை அவனின் விரிந்த புன்னகையை காண்கிறாள். இதற்கு முன்பும் சிரித்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் மிகவும் மெல்லிய சிரிப்பாக இருக்கும்.
சிரித்த முகமாக அவனை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. அவளின் விழிகள் ஓரிரு நொடி தன்னையும் மீறி அவனில் படிய.. அப்பொழுது எதேர்ச்சையாக அவனின் விழிகளும் அவளை எதிர்நோக்கின.
அதில் சட்டென்று தான் செய்யும் காரியத்தை உணர்ந்தவள் வெடுக்கென்று தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
எங்கே தன்னை பற்றி ஏதேனும் தவறாக பாரிவேந்தன் எண்ணி விடுவானோ என்ற பதட்டத்தில் அவளின் இதயம் சில நொடிகளுக்குள்ளாகவே படபடக்க தொடங்கி விட்டது.
அதே போல் தான் விதுஷாவின் பார்வையும் நொடிக்கு ஒரு முறை பாரிவேந்தனிலேயே நிலைத்தது. இதை பார்க்கும் பொழுது அரவிந்திற்கு தான் மீண்டும் கோபம் துளிர்விட தொடங்கியது.
என்ன தான் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பது போல் அரவிந்த் காட்டிக்கொண்டாலும் விதுஷாவின் பார்வை பாரியில் படிவது அவனுக்குள் ரத்த அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட முத்துலட்சுமி, “என் பையன் இப்படி மாறுவானானு எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா.. நான் ஆசைப்பட்டது போலவே என் பையன் இப்போ மாறி இருக்கான். பாக்கவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா.. இந்த மகாலட்சுமி எங்க வீட்டுக்கு வந்த பிறகு எல்லாமே நல்லதாவே நடக்குது” என்று தன் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் இனியாளின் குழந்தையை காட்டினார்.
அவளும் அவரை நோக்கி மெல்லிய புன்னகையை உதிர்த்தாள்.
“சரி மா நான் போய் கொஞ்ச நேரம் படுக்கிறேன். ரொம்ப நேரம் காலை தொங்க போட்டு உட்கார்ந்ததுல காலெல்லாம் வலிக்குது” என்றவாறு அவர் எழ முற்படவும்.
அவரிடம் இருந்த குழந்தையை தான் பெற்றுக் கொண்டாள்.
அவரும் மெதுவாக எழுந்து அறைக்குள் செல்ல முற்பட அவரை கை தாங்கலாக பிடித்துக் கொண்டு அவருடன் நடந்தாள் இனியாள்.
விதுஷாவின் பார்வை பாரிவேந்தனையே தழுவி இருக்க.
அரவிந்தோ கோபத்தோடு இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான் என்றால் சற்று நேரத்திற்கு ஒருமுறை பாரிவேந்தனின் பார்வை ஹாலில் படிந்து மீள்வதை உணர்ந்த விதுஷா அவளும் அவன் பார்வை செல்லும் திசையை நோக்கினாள்.
அங்கே இனியாள் தான் முத்துலட்சுமியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். பாரி வேந்தன் இனியாளை பார்க்கும் பார்வையில் விதுஷாவின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட.
இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த அரவிந்தின் பார்வையில் இருந்தும் இக்காட்சி தப்பவில்லை. அவர்கள் இருவரும் அறியா வண்ணம் அவர்கள் பார்க்கும் திசையை தான் பார்த்தான். அவனுக்குமே முதலில் ஒன்றும் புரியவில்லை யோசனையுடன் தான் அவனின் விழிகள் பாரியின் மேல் படிந்தன.
அதிலும், பாரியின் பார்வை ரசனையாக இனியாளின் மேல் படிவது போல் விதுஷாவிற்கு தோன்றவும் அதிர்ந்து விட்டாள்.
பாரி இப்படியெல்லாம் கிடையாதே என்ற எண்ணத்தோடு குழப்பமும் அதிர்ச்சியும் அவளை ஆட்கொள்ள.. அதற்கு மேல் ஒரு வாய் கூட அவளுக்கு தொண்டைக் குழியில் உணவு இறங்கவில்லை.
இத்தனை நேரமும் பாரிவேந்தன் பழையபடி மாறிவிட்டான் என்று எண்ணி மகிழ்ந்து போன அவளின் மனமோ இப்பொழுது அவனின் இத்தகைய மாற்றத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியாமல் அல்லாடியது.
‘இவனோட பார்வையே சரியில்லையே.. அதுவும் இந்த பொண்ண இப்படி பாக்குறான். இது வரைக்கும் இவன் இப்படி யாரையுமே பார்த்து நான் பார்த்ததில்லை. ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ண இப்படி பார்க்கிறான்னா இதுல சம்திங் என்னவோ இருக்கு. அதுவும் ஆல்ரெடி குழந்தை இருக்க பொண்ண போய் இப்படி பார்க்கிறான்’ என்று எண்ணிய அரவிந்திற்கும் அவனின் மனதில் ஓடும் எண்ணத்தை சற்றும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
முத்துலட்சுமியுடன் இனியாளும் அவரின் அறைக்குள் நுழைந்த பிறகு தான் பாரி வேந்தனுக்கு தன் கவனத்தை இவர்களின் பக்கம் திரும்ப இயன்றது.
அனைத்துமே அரவிந்த்தின் பார்வையிலிருந்து தப்பவில்லை. அரவிந்திற்கும் பாரிக்கும் தெரியாமல் நாம் கவனிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு விதுஷா பார்க்க..
அவளுக்கே தெரியாமல் அரவிந்த் அனைத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.
இனியாள் அறைக்குள் சென்று மறைந்ததும் பாரி வேந்தனின் விழிகளில் ஏதோ ஒரு ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.
“என்ன மச்சான் இங்க என்ன நடக்குது?” என்று கிண்டலாக பாரியை பார்த்து அரவிந்த் கேள்வி எழுப்பவும்.
“என்னடா என்ன கேக்குறன்னு புரியலையே.. என்ன நடக்குது?” என்றான் சட்டென்று அவனின் கேள்வி பிடிபடாமல்.
“உன்னோட பார்வையே சரியில்லையே.. என்ன அந்த பொண்ண இப்படி பாக்குற” என்று ஹாலை நோக்கி தன் பார்வையை காட்டவும்.
தன்னை அவன் கண்டு கொண்டதில் திகைத்த பாரிவேந்தன், “அது.. நத்திங்.. சும்மா தான் பார்த்தேன்” என்றான் ஒருவித தடுமாற்றத்தோடு.
“இந்த கதை விடுற வேலை எல்லாம் வேண்டாம். உன்னை பத்தி எங்களுக்கு தெரியாதா என்ன.. நீ இப்படி எல்லாம் கிடையாது. அதுவும் இந்த அளவுக்கு நீ எந்த பொண்ணையும் பார்த்து நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன், விதுஷா கூட சின்ன வயசுல இருந்து நீ பிரண்டா பழகுற அவளை கூட நீ இப்படி பார்த்து நான் பார்த்ததில்லையே” என்று தன் கேள்வியில் விதுஷாவையும் உள்ளே இழுத்து விட்டவாறு ஓர கண்ணால் அவளை பார்த்தான்.
விதுஷாவும் பாரிவேந்தனின் பதிலுக்காக தான் காத்துக்கொண்டிருந்தாள். அவளுக்குள் இருக்கும் அதே கேள்வியை அரவிந்த் கேட்டு விட அவளுக்கு இன்னும் இலகுவாகி போனது.
இவனின் கேள்வியில் என்றும் இல்லாதவாறு ஒரு பிரகாசம் பாரிவேந்தனின் முகத்தில் தோன்றி மறைய.. ஒருவித பொலிவுடன் வெட்க புன்னகை அவனின் இதழில் படர்ந்தது.
அவனின் இத்தகைய செயலில் மற்ற இருவருமே அவனை வியந்து பார்த்தனர். இப்படி எல்லாம் நடந்து கொள்பவன் கிடையாதே பாரிவேந்தன்..
“எஸ்.. ஷீ இஸ் நாட் லைக் அதர் கேர்ள்ஸ் ஷீ இஸ் சம்திங் ஸ்பெஷல் டு மீ” என்ற அவனின் வார்த்தைகள் அத்தனை பூரிப்புடன் வந்தது.
‘என்ன கூறுகிறான் இவன்.. என்னை விட இவள் அவனுக்கு முக்கியமானவள் என்று கூறுகிறானா’ என்று எண்ணும் பொழுதே அவளுக்குள் எதுவோ உடைந்த உணர்வு.. ஒற்றை வரையில் அவளை எட்ட நிறுத்தி விட்டானே..
“டு யூ லவ் ஹர்?” என்ற அரவிந்தின் வார்த்தைகள் ஒருவித சந்தேகத்தோடு சடுதியில் வந்து விழ.
“என்ன சொல்ற பாரி அந்த பொண்ணுக்கு ஆல்ரெடி குழந்தை இருக்கு!” என்று அதிர்ச்சி கலந்த பரிதவிப்போடு கேட்டாள் விதுஷா.
“எஸ் ஐ நோ.. பட் ஐ டோன்ட் கேர்.. ஐ லவ் ஹர்” என்றதும் இருவருமே அதிர்ந்து விழித்தனர்.
“உனக்கு என்ன பைத்தியமா பாரி.. ஆல்ரெடி குழந்தை இருக்க பொண்ண போய் லவ் பண்றேன்னு சொல்ற.. அவ புருஷனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவ லைஃப் என்ன ஆகுறது”.
விதுஷாவின் கேள்வியில் அவளை பார்த்து புன்னகைத்தவன், “யு நோ சம்திங்.. இதுவரைக்கும் நான் இதை யார்கிட்டயும் ரிவீல் பண்ணல இன்குலூடிங் ஹர். இதுக்கு மேலயும் இதை மறைக்க நான் விரும்பல. அவ குழந்தையோட அப்பாவே நான் தான். பட், அந்த விஷயம் இன்னும் அவளுக்கே தெரியாது”
விதுஷா மட்டுமல்ல இதை அரவிந்த்தும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“என்ன சொல்ற?” என்று ஒரு வித குரல் நடுக்கத்தோடு கேட்டாள் விதுஷா.
Super pa
Thank you 😊