காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️

4.7
(9)

உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கொண்ட தனியார் வைத்தியசாலை. அதில் மேல் மாடியில் விஷேடமான பராமரிப்புடன் தனது சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தாள் யூவி என்கிற ஸ்ரீ தானியா வியூஷிகா. இருபத்து இரண்டு வருடங்கள் கொண்ட இளம் பெண் அவள்.  புன்னகையின் அரசி அவள். எப்போதும் புன்சிரிப்புடனேயே இருப்பாள். இரு குட்டி விழிகளும் கரிய நிற இடையிடையே பழுப்பு நிறம் சார்ந்த அளவான இடையைத் தொட்டு ஆடும் கூந்தலும் பால் நிற முகத்தில் வில்லாய் வளர்ந்து காணப்படும் கரும் புருவங்களும் மெல்லிய இளம் ரோஜா இதழ்களும் கொண்ட அழகே ஸ்வரூபமாய் திகழும் குறும்புத்தனமும், பொறுப்பும் நிறைந்தவள்

 

கல்லூரியில் படித்து வருகிறாள். பணத்துக்கும் ஆடம்பரத்துக்கும் எல்லை இல்லை. ஆனால் என்னதான் பலன்? பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்பார்கள். ஆனால் இங்கு குணம் இருந்தும் நிம்மதி இல்லையே.

 

யூவி வீட்டின் ஒரே பெண் பிள்ளை. செல்லமாக வளர்ந்தவள். அவளை பொத்திப் பாதுகாத்து நற்குணங்களை ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் அவளது பெற்றோர்களான ஆதித்ய வர்மாவும் ஸ்வேதா லக்ஷ்மியும். அவளுக்கு ஒன்று என்றால் துடித்துப் போவார்கள்.

 

அப்படி பொத்திப் பாதுகாத்து வளர்த்த தனது உயிர் மகள் இவ்வாறு அனு அனுவாய் சித்திரவதை அனுபவித்துக் கொண்டு இருப்பதை காண நல்லவேளை அவர்கள் உயிரோடு இல்லை. இல்லையென்றால் அவளின் இந் நிலையைப் பார்த்து ஆதித்யாவும் ஸ்வேத்தாவும் தினம் தினம் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும்.

 

ஆதித்யா விஜயேந்திரா எனும் அழகிய கிராமத்தில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். செல்வமும் செழிப்பும் நிறைந்த ஒரு அழகிய கூட்டுக் குடும்பம்.

 

ஆனால் அவர்கள் காலாதி காலமாக வீட்டின் பெண் பிள்ளை வாரிசும் ஆண் பிள்ளை வாரிசுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் ஆதித்ய வர்மாவோ வெளிநாட்டில் படிக்கச் சென்ற போது ஸ்வேதாவின் மீது காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

 

அதில் அந்த குடும்பமே ஆதித்ய வர்மாவையும் அவனது வம்சாவழியில் வரும் வாரிசுகளையும் எந்த சந்தர்ப்பத்திலும் உறவு எனும் பந்தத்தில் ஈடுபடுத்திக் கொள்ள மாட்டோம் என்று தலைமுழுகி விட்டது. இதனால் கடந்த இருபத்து ஐந்து வருடமாக ஆதித்ய வர்மாவுக்கும் ஸ்வேதா லக்ஷ்மிக்கும் அந்த குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை.

 

இப்போது சில வாரங்களுக்கு முன்பு தான் ஒரு விபத்தில் ஆதித்ய வர்மாவும் ஸ்வேதா லக்ஷ்மியும் இறைபதம் அடைந்தார்கள். அதில் தப்பித்தது யூவி மட்டும்தான். ஆனால் என்ன பயன்? ப்ரைன் டியூமர் நோயினை அள்ளி அவள் மீது தெளித்து விட்டார் அந்தக் கடவுள்.

 

ஸ்வேதாவின் தாய் தந்தையர் இறந்து விட்டார்கள். சித்தியுடனான சொத்து பிரச்சினையில் தன் கோடிக் கணக்கான சொத்துக்கள் அனைத்தையும் அவருக்கு எழுதி வைத்துவிட்டு ஆதித்யாவுடன் வந்துவிட்டார். அதனால் யூவி சிறு வயதில் இருந்தே தனியாக வளர்ந்து வந்தாள். தாயும் தந்தையும் யூவியும் மாத்திரமே அவர்கள் வீட்டில். அவளுக்கு சொந்த பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஏக்கம் தினம் தினம் அதிகரித்து கொண்டே வந்தது.

 

அவர்களிடம் ஆதித்ய வர்மாவின் குடும்ப புகைப்படம் ஒன்று மாத்திரமே இருந்தது. அதைப் பார்த்து தினம் பல பல கனவுகளை உருவாக்கிக் கொள்வாள். இன்னொரு வழியில் பார்த்தால் ஆதித்ய வர்மாவுடைய அக்கா மகளான அபிநயா ஸ்ரீதேவியும் யூவி படித்த கல்லூரியிலேயே படித்து வந்தாள். அவள் ஒரு நாள் தனது குடும்ப புகைப்படத்தில் இருப்பவர்களைக் காட்டி யூவிக்கு அறிமுகப்படுத்த யூவி அபியை அடையாளம் கண்டு கொண்டாள். அதனால் அபியிடம் அவள் பாட்டியையும் குடும்பத்தையும் பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வாள்.

 

என்னதான் தனக்கு யூவி அத்தை மகள் என்றாலும் அபிநயா மனதில் இவள்தான் தனது உயிர்த் தோழி என்று தெரிந்தால் வீட்டில் பூகம்பம் வெடிக்கும் என்ற பயம் ஒரு பக்கம். இதுதான் யூவியின் குடும்பக் கதை. இப்போது யூவியின் சொந்தக் கதையைப் பற்றி பார்ப்போம்.

 

நீல நிற நோயாளிகளுக்கே உரித்தான உடையுடன் சுவரையே வெரித்து வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யூவி எனும் வியூஷிகா. அப்போதுதான் மருத்துவர் அவள் அருகே வந்து அமர்ந்து அவளிடம் பேச ஆரம்பித்தார்.

 

“நீங்க தானே மிஸ். வியூஷிகா? நான் சொல்லப்போற விசயம் ரொம்ப கஸ்டமாதான் இருக்கும். ஆனால் நீங்க இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும் யூவி. உங்களுக்கு டிசோர்டர் ரொம்ப டீப்பா போய்டுச்சு. இனிமேல் உங்களை குணப்படுத்த முடியாது. சேர்ஜரி பண்ணாலும் பிழைக்க சான்ஸ் இல்ல. 0.01% தான் வாய்ப்பிருக்கு. அதனால ரிஸ்க் எடுக்க வேணாம். இன்னும் ஆறு மாசத்துல நீங்க இந்த உலகத்தை விட்டே போய்டுவீங்க. ஐம் சோரி.”  என்று ஒரே தொனியில் சொல்லி விட்டார்.

 

கூர்மையான விழிகளும், அவ் விழிகளை விழிகளை மறைக்கும்படி போடப்பட்ட கறுப்பு நிற கூலிங் க்ளாஸும் அதற்கு மேல் காணப்படும் வாள் போன்று  வளைந்திருக்கும் கரும் புருவங்களும் கைகளின் இறுக்கமாக உள் மணிக்கட்டில் திருப்பிக் கட்டப்பட்டிருந்த கைக் கடிகாரமும் மெல்லியதாக சவரம் செய்யப்பட்டு தங்க நிறத்தில் காணப்படும் வதனமும் தான் யாருக்குமே அடங்க மாட்டேன் என சொல்லாமல் சொல்லிவிடும் பரிசாரமும் கொண்ட அழகும் ஆணவமும் கலந்த நியூயோக் நகரத்தில் இளம் பொறியியலாளர் துறையில் வலம் வந்து கொண்டு இருப்பவனும் இருபத்து நான்கு வயதை தனதாக்கிக் கொண்டவனுமான நம் கதையின் நாயகன் ஆதிஷேஷ கார்த்திக்கேயனை பற்றி பார்க்கலாம்.

 

தான் நினைப்பதை நடத்தியே காட்டுவேன் என்ற பிடிவாதத்தின் உச்சக் கட்ட எல்லையை தனக்குள் புதைத்துக் கொண்டு வாழ்பவன். நல்லவனுக்கு நல்லவன். வல்லவனுக்கு வல்லவன். பின்விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டான். நினைப்பதை செய்திடுவான். ஆனால் எதிலும் பற்றில்லாமல் வாழ்க்கையே வெறுமையாக அர்த்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவன். தனக்கு ஒரு விடயத்தை சாதிக்க வேண்டும் என்றால் மரணத்தின் எல்லை வரை கூடச் செல்லத் தயாராக உள்ளான். தான் நினைத்ததை நடத்திக் காட்டாமல் அவன் ஓய்ந்ததில்லை. அவன் விரும்புபவர்களுக்காக உயிரையும் கொடுப்பான். ஆனால்… அவன் இலகுவாக எவரையும் விரும்பி விடவும் மாட்டான்.

 

முன்னாள் இருந்த சுவரை பார்த்துக் கொண்டு இருந்தவள் வலியுடன் மருத்துவரை பார்த்து,

 

“நோ… நான் சாக மாட்டேன். என்னால முடியாது. நான் வாழனும். எவ்ளோ பணம் வேணாலும் எடுத்துக்கோங்க. தயவு செஞ்சு என்னை காப்பாத்துங்க. என் சொத்து மொத்தத்தையும் எழுதி வெக்கிறேன். ப்ளீஸ் டோக்டர். என்னை காப்பாத்துங்க” என்று அத்தனையையும் பிய்த்து எறிந்து பைத்தியம் போல அறையே அதிரும் அளவு கத்திக் கொண்டிருந்தாள் யூவி.

 

மருத்துவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவளைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. “சோரி. என்னை மன்னிச்சிடுங்க. அவ்வளவுதான். உங்கள இனிமேல் எங்களால மட்டும் இல்ல. யாராலையும் காப்பாத்த முடியாது. அப்படிக் காப்பாத்தனும்னாலும் ரிஸ்க்தான்.” என்று கூறிவிட்டார்.

 

அவ்வளவுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது அவளுக்கு. அவள் விழிகளில் நீர் ஊற்றெடுக்க தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். வெளியில் இருந்த அபிநயா சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்து கதறி அழும் யூவியை கட்டிப் பிடித்து சமாதானம் செய்தாள்.

 

“அபி… நான் செத்துடுவேன்னு சொல்றாங்க… நான் செத்துடுவேனா? என்ன காப்பாத்து அபி. இதை விட என் உயிரையும் சேர்த்து எடுத்திருக்கலாமே கடவுளே.” என்று தலையில் அடித்துக் கொண்டு கத்தினாள்.

 

அவள் தலையைத் தொட்டு ஆதரவாக வருடியவள் “நான் இப்போ வந்துடுவேன் யூவி. பயப்படாம இரு.” என்று கூறிவிட்டு மருத்துவரிடம் சென்று நடந்ததை கேட்டு அறிந்து கொண்டாள். என்னதான் இருந்தாலும் உயிர் தோழி ஆகிவிட்டாள். அவள் வாழ வேண்டிய வயதில் இப்படி இறந்து விடுவாள் என கூறுவதை அபியால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் எப்படி அதை ஏற்றுக் கொள்வாள் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

 

“இதுக்கு வேற வழி இல்லையா டோக்டர்? அவ என்னோட பெஸ்ட் ப்ரண்ட். அவளுக்கு இப்படியா? அவளால இத தாங்கிக்க முடியாது.” அவள் அழுகையை அடக்க முயல

 

“ஐம் சோரி. வேற வழி இல்லை. சேர்ஜரி பண்ணாலும் காப்பாத்துறது கஸ்டம். ரிஸ்க் எடுக்க ஆசப்படுறீங்களா? இன்னும் ஆறு மாசம்தான் டைம் இருக்கு. அதுக்குள்ள அவங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க. பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போங்க. முடிஞ்ச வரைக்கும் அவங்கள சந்தோசமா வெச்சிக்க பாருங்க.” என்று கூறிவிட்டார்.

 

அதைக் கேட்டவளுக்கு இன்னும் கவலை அதிகமானது. கடவுள் முன் நின்று மண்டியிட்டு தன் நண்பிக்கு நடந்த கொடுமைக்காக அழுதாள்.

 

“ஏன் இப்படியெல்லாம் நடக்குது? அவ ரொம்ப நல்லவ. யாருக்கும் கனவுல கூட தீங்கு நினைச்சிருக்க மாட்டா கடவுளே. அவளுக்கா இப்படி நடக்கணும்? தயவு செஞ்சு ஏதாவது மந்திரம் போட்டு அவளை காப்பாத்துங்க.” அபி அழுது கண்ணீர் விட்டாள்.

 

அதே சமயம் அங்கே வந்த தாதி அபியை அழைத்தார். “அவங்க உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க. கொஞ்சம் வர்ரீங்களா?” என்று அவர் கேட்க கண்ணைத் துடைத்துக் கொண்டு பின்னாலேயே சென்றாள் அபி.

 

உள்ளே சென்று யூவியின் அருகில் எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவள் கையைப் பற்றிக் கொண்டு அமர்ந்தாள். யூவி கண்ணை துடைத்துக் கொண்டு தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறினாள்.

 

“எனக்காக ஒரு விசயம் பண்றியா? சத்தியம் பண்ணு.” என உணர்ச்சியே இல்லாது கேட்டாள் மனவலியுடன்.

 

“என்ன விசயம் யூவி?” கேட்டாள் அவளை உற்று நோக்கி.

 

“நீ இத எனக்காக பண்ணுவேன்னு சத்தியம் பண்ணு. சொல்றேன்.” என்று அவள் கையை நீட்ட

 

“சரி. சத்தியம். உனக்காக என்ன வேணாலும் பண்றேன்.” என்று அவள் கையில் சத்தியம் செய்தாள் அபி.

 

“எனக்கு எல்லாமா இருந்த என் அம்மா அப்பாவே இப்போ என்கூட இல்லை. நான் அநாதையாகிட்டேன். நான் உசுரோட இருக்க போற இந்த ஆறு மாசமும் என் குடும்பத்தோட சந்தோசமா வாழணும் அபி. அவங்க கூட ஒன்னா இருந்து சாப்பிடணும். ஒன்னா விளையாடணும். நீ பண்ண வேண்டியது ஒரே ஒன்னுதான். என்னை ஊருக்கு கூட்டிட்டு போகணும். எனக்காக இத பண்றியா?” என்று அவள் கேட்ட கேள்வியில் அபி அதிர்ச்சியின் உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டாள்.

 

இங்கு ஆதிஷேஷ கார்த்திக்கேயன் முக்கியமான ஒரு மீட்டிங்கில் கைகளால் கன்னத்தை தாங்கியபடி கூர்ந்து விளக்கக் காட்சியை அவதானித்தபடி இருந்தான். பாட்டி பார்வதியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. முதலில் யோசித்தவனுக்கு அவர் ஏன் அழைக்கிறார் என்று நன்றாகவே தெரிந்தது. அவன் முகத்தில் வெற்றுப் புன்னகை. வெறுமைதான் இருந்தது. இருந்தாலும் எடுத்து போனை காதில் வைத்தான்.

 

“ஹலோ. பாட்டி…” என்று மெதுவாக போனை கையால் மறைத்துக் கொண்டு கேட்டான் விளக்கக் காட்சியை பார்த்தவாறே.

 

“இங்க ஒருத்தி உனக்காக காத்துட்டு தவிக்கிறாடா. இவ எப்பவுமே உன் நினைப்பாதான் இருக்கா. நீ அவளைப் பத்தி கொஞ்சமாவது  நினைச்சு பாக்குறியா? உனக்கும் பல்லவிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சாதான் எனக்கு நிம்மதி. சந்தோசமாப் போய் சேர்ந்துடுவேன்.” என்று அவர் கூறியதும் அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. தேவைக்காக தேடி வரும் உறவுகளை என்னவென்று சொல்வது…

 

இருந்தாலும்… ஒரு மரியாதை கருதி “பாட்டி… நான் தான் சொன்னேனே. எனக்கு தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு. இருந்தாலும்… நீங்களும் நிறைய நாளா இததான் கேட்டுட்டு இருக்கீங்க. அதனால வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கே ஊருக்கு வந்துர்ரேன். சரியா?” என அவன் கேட்க

 

“நான் சந்தோசப்படுறது இருக்கட்டும். நீ வரேன்னு சொன்னதும் இங்க ஒருத்தி தலைகால் புரியாம ஆடிட்டு இருக்காடா. இனி அவளை கையிலேயே பிடிக்க முடியாது.” என்று கூறி சிரித்துக் கொண்டார்.

 

ஆதற்கு மேலும் அவரிடம் பேச விருப்பம் இல்லாதவன் “சரி பாட்டி. நான் பிறகு பேசுறேன். இப்போ முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். வெச்சிர்ரேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டான்.

 

ஆம். ஆதிஷேஷ கார்த்திகேயனுக்கும் அவனது மாமா மகள் பல்லவி ஸ்ரீதேவிக்கும் திருமணம். சிறு வயதிலிருந்து உனக்கு அவன். அவனுக்கு நீ என்று ஆசையை ஊட்டி ஊட்டி வளர்த்து விட்டார்கள். அதனால் ஏற்பட்ட தாக்கமே பல்லவி ஆதியை ஏற்கனவே தான் திருமணம் செய்து கொண்டதாக மனதார நினைத்துக் கொண்டு வாழ்கிறாள்.

 

ஆனால் பல்லவிக்கு தான் நாம் எட்டாத கனிக்கு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தெரியவில்லை. இந்த ஆதி எனும் பைத்தியத்திற்கு யூவி எனும் மெண்டல் தான் என்று முடிச்சு போட்ட கடவுளுக்குத்தானே தெரியும். அது தெரியாமல் இவ்வாறு எல்லாரும் பல்லவியின் மனதில் ஆதியை புதைகுழியில் வைத்து புதைத்து விட்டார்கள்.

 

“என்ன சொல்ற யூவி? உனக்கு பைத்தியமா? எங்கண்ணன் பத்தி உனக்கு தெரியாது. அவனுக்கு மட்டும் தெரிஞ்சது… நாக்க அறுத்துடுவான். பழைய கார்த்திக்னா கூட பரவால்லை. அவன் கிடக்குறான் லூசுன்னு போய்ட்டே இருக்கலாம். இப்போ எல்லாம் அவன் ரொம்ப ரூட். இதுல நீ ஆள்மாறாட்டம் பண்ண சொல்ற? இதெல்லாம் நடக்காது.” அவள் சற்று கோபமான தொனியில் அபி கூற

 

“நீ சத்தியம் பண்ணிருக்க அபி. நீ இதை பண்ணிதான் ஆகணும். எப்படியோ சாக போறேன்னு தெரிஞ்சிடுச்சு. என் குடும்பத்தோட நான் சந்தோசமா வாழணும் அபி. தயவு செஞ்சு கெஞ்சி கேட்குறேன். என் கடைசி ஆசை. இதை நிறைவேத்து அபி. இல்லனா நீயே என்ன கென்னுடு.” என்று அவளிடம் கெஞ்சிக் கேட்க அபிக்கு வேறு வழி தெரியவில்லை.

 

“சரி. ஆனால் இந்த ரகசியம் யாருக்கும் தெரியாம பாத்துக்குறேன்னு சத்தியம் பண்ணு யூவி. உன்னப் பத்தின உண்மை கடைசி வரை யாருக்குமே தெரியக் கூடாது.” என்று கையை நீட்டினாள்.

 

“ப்ரோமிஸ். நான் என்னோட அடையாளத்தையே மாத்திக்கிறேன். உனக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது அபி.” என்று அபியின் கையில் தனது கையை வைத்து நம்பிக்கையுடன் சத்தியம் செய்து கூறினாள் யூவி.

 

“சரி. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணுறேன் யூவி. நாளையன்னைக்கு காலையில நாம அங்க போறோம். நீ டிஸ்சார்ஜ் ஆகி ஒருநாள் ரெஸ்ட் எடு.” என்றிட

 

“அதெல்லாம் தேவையில்லை. நாளைக்கே நாம போகலாம். என் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் இனிமேலும் நான் வேஸ்ட் பண்ண விரும்பல. அதனால ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.

 

“சரி… சரி…” என்று சொல்லி விட்டு நடக்க வேண்டியதை பார்க்க ஆரம்பித்தாள் அபிநயா.

 

மறுநாள் சூரியன் தனது தூக்கத்தை கலைத்து செங்கதிர்கள் வீசிக்  உதித்திடவே அபிநயாவும் யூவியும் குடும்பத்தாரிடம் தாங்கள் வருவதாக தெரிவித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள். இரு பக்கங்களிலும் வானைத் தொட்டது போல் காணப்பட்ட மலைக் குன்றுகள், அவ்விரண்டுக்கும் மத்தியில் செழிப்பாக பச்சை கம்பளம் போல ஆடி அசைந்து வளர்ந்திருக்கும் நெற்கதிர்கள். இடையில் குறுக்காக சல சலவென ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகள். அவற்றில் நீரை அருந்தி தாகத்தைத் தனிக்க வந்திருக்கும் பட்சிகள். மெல்லமாக இதமாக உடம்பில் பட்டுச் செல்லும் புத்துணர்வூட்டும் தென்றல் காற்று என அத்தனையும் ரசித்தும் இயற்கைக் காற்றை சுவாசித்து வயல் வெளிகளின் அழகை பார்க்கவே சிட்டியில் உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மத்தியில் ஆடம்பரமாக வாழ்ந்தவளுக்கு மெய் சிலிர்த்துத்தான் போனது. அந்த ஊரின் அழகிலேயே பாதி குணமடைந்து விட்டாள் யூவி. அவ்வளவு சந்தோசம் அவளுக்கு. காரிலிருந்து இறங்கியவளின் சந்தோசத்தின் வெளிப்பாடாக

 

🎶🎶🎶

 

பூப்பறிக்க நீயும்

போகாதே உன்னப்

பாத்தாலே பூக்களுக்குள்

கத்திச் சண்டையடி

 

தந்தானே தந்தானே

 

பொட்டு வைக்க

நீயும் போகாதே உன்னப்

பாத்தாலே கண்ணாடி

கைகள் நீட்டுமடி

 

தந்தானே தந்தானே

 

🎶🎶🎶

 

என்று ஆடிப் பாட ஆரம்பித்து விட்டாள். யூவி வாழ்க்கையில் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருந்திருக்க மாட்டாள். அந்த அளவு அவள் மனது சந்தோசத்தில் மூழ்கியிருந்தது. நீரோடையில் கால் நனைத்துக் கொண்டும் வயல் வெளிகளின் வரம்புகளில் ஓடித் திரிந்து கொண்டும் கூட்டமாக பறந்து சொல்லும் பறவைகளை ரசித்துக் கொண்டும் அவள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளை பிடித்து நிறுத்தத்தான் அபிநயாவுக்குத்தான் பெரும் பாடாகி விட்டது.

 

“ஏய் நில்லுடி. ஏன்டி இப்படி பண்ணி என் உசுர வாங்குற? இனி 6 மாசம் இங்கேதானே இருக்க போற. இதெல்லாத்தையும் பிறகு பாத்துக்கலாம். முதல்ல வீட்டுக்கு போகலாம் வா. பாட்டி தேடுவாங்க. நாம ஏற்கனவே ரொம்ப லேட்டாகிட்டோம்.” அபி காட்டுக் கத்து கத்தினாள்.

 

“இப்படி ஒரு சுவர்க்க பூமியை விட்டுட்டா நான் இவ்ளோ நாளும் சிட்டில வாழ்ந்துட்டு இருந்தேன்.” என்று ஆச்சரியமாக வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டவாறே சப்பலை கையில் எடுத்தவாறு அபியின் தோளைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் யூவி.

 

“என்னவோ போ. இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்ளவோ இருக்கு. சரி. நான் போய் முகம் கழுவிட்டு வந்துர்ரேன். நீ எங்கேயும் போகாம கார்லயே இருக்கணும் சரியா?” என்று கேட்டுக் கொண்டு முகம் கழுவப் புறப்பட்டு விட்டாள் அபி, நடக்கப் போகும் சம்பவம் தெரியாது.

 

கைகள் இரண்டையும் இடையில் வைத்தவாறு ஊரின் அழகை சுற்றியும் முற்றியும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் யூவி. ஆனால் திடீரென்று அவள் முகத்திலும் வெண் நிற உடையிலும் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு ஒரு கார் வேகமாக செல்ல, எரிச்சலாகி

 

“யூ இடியட்.” என்று அந்த காரைக் கை காட்டி திட்டி விட்டாள். சேற்றை அடித்த கார் அவளைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்று ப்ரேக் போட்டு நின்றது.

 

காரின் முன்னால் உள்ள கண்ணாடியைத் திறந்து அதில் கையை வைத்து போட்டிருந்த கூலிங் க்ளாஸை கழட்டி பக்க கண்ணாடியால் யூவியை தெனாவெட்டாக நோக்கிவிட்டு மறுபடியும் காரின் யன்னலை மூடிவிட்டு காரை எடுத்தான் அந்த காரின் உரிமையாளர்.

 

“சேத்த அடிச்சிட்டு தெனாவெட்டா ஒரு சோரி கூட சொல்லாம போறான் பாரு இடியட். என்ன திமிரு இருக்கணும் இவனுக்கு. இவனெல்லாம் சும்மாவே விட கூடாது. இரு வரேன்…” என்று ஒரு கல்லை எடுத்து அவனது காரின் பின் கண்ணாடியை பதம் பார்த்து விட்டாள் யூவி.  தவறு… ஒரு கல்லினால் அல்ல பல கற்கலாள்.

 

சொடக்கு போட்டவாறு பல்லைக் கடித்துக் கொண்டு “இப்ப வாடா வெளில. நீ வந்து தானே ஆகணும். யாருக்கிட்ட? யூவி…” எனத் தனக்குத் தானே புகழ் பத்திரிகை வாசித்துக் கொண்டாள் யூவி. அதில் எரிச்சலான ஆதி காரை நிறுத்திவிட்டு கீழிறங்கிப் பார்த்தான்.

 

ஆனால் இங்கே நடப்பது ஒன்றும் தெரியாமல் முகம் கழுவ என்று ஒரு பாவப்பட்ட ஜீவன் சென்றதே. அதை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

 

 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!