மலர்னிகா மாம்பழ மஞ்சள் நிறத்தில் ஒரு சேலையை எடுத்து ஒன் பிளீட்டில் விட்டு அணிந்து கொண்டாள். பின்னர் கொஞ்சம் முடிகளை எடுத்து ஒரு கிளிப் போட்டுக் கொண்டு, ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள். அவ்வளவு தான் ரெடியாகி விட்டாள்.
காமாட்சியும் நிஷாவும் பாவாடை தாவணி அணிந்து, காதுக்கு ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளையல்கள் அணிந்து, தலையில் குண்டுமல்லி சரம் வைத்துக் கொண்டு மலர்னிகா அறைக்குள் வந்தனர். “அண்ணி ரொம்ப அழகா இருக்கிறீங்க, ஆனால் ஏதோ குறையுதே.” என்று யோசித்தவள், ஒரு நிமிடம் அண்ணி என்று கீழே சென்று அவளுக்கும் ஒரு குண்டுமல்லி சரத்தை எடுத்து வந்து தலையில் வைத்து விட்டாள்.
நிஷா அவளிடம், “மேடம் பார்க்க கல்யாணப் பொண்ணு மாதிரி ரொம்ப அழகா இருக்கிறீங்க. இருந்தாலும் உங்ககிட்ட இருக்கிற அந்த கம்பீரம் மிஸ்ஸிங் மேம். அதுவும் கூடிய சீக்கிரம் உங்ககிட்ட வந்திடும்னு நம்புறன்.” என்று சிரித்தாள். பின்னர் நிஷாவின் போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்.
அவர்களுக்கு முன்னே செல்ல, புடவை தடுக்க கொஞ்சம் நின்று அதை சற்று தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தாள் மலர்னிகா. காளையனும் இவர்கள் பின்னே வந்ததால் மலர்னிகாவுடன் சேர்ந்து வந்தான். காளையனும் மலர்னிகாவும் சேர்ந்து வருவதைப் பார்த்து வீட்டினருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சபாபதியும் இவர்களது பொருத்தத்தைப் பார்த்து அதிசயித்தான். படிக்காத இவனுக்கு படித்த இந்த பொண்ணு மனைவியா? என்று எள்ளலாக நினைத்தான். பின்னர் எல்லோரும் சேர்ந்து கோயிலுக்குச் சென்றனர். அங்கே காத்திருந்த பூசாரி வாசல் வரை சென்று அவர்களை அழைத்து வந்தார்.
காளையன் கதிருடன் பேசிக் கொண்டே நடந்தவனுக்கு ஏதோ ஒன்று தப்பாகப் பட்டது. மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. அவனது கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தது. அவனை பார்த்த கதிர் என்னவென்று விசாரித்தான். அதற்கு காளையன், “இங்க ஏதோ தப்பாக இருக்கு கதிர், கொஞ்சம் என்னனு பார்த்துட்டு வா.” என்றான். அவனும் அங்கிருந்து கோயிலின் வெளிப்பக்கம் சென்றான்.
பூசாரி, “ஐயா முதல்ல பூஜையை முடிச்சிடலாம். அதுக்கு அப்பறம் அன்னதானத்தை குடுக்க ஆரம்பிக்கலாம்.” என்றார். பெருந்தேவனாரும் அதற்கு ஒத்துக் கொண்டார். எல்லோரும் அம்பாளுக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்குளிர பார்த்துக் கொண்டு, இரு கைகளையும் கூப்பி வணங்கிக் கொண்டு இருந்தனர்.
மலர்னிகா மட்டும்,” என்னோட வாழ்க்கையில என்ன நல்லது நீ பண்ணியிருக்க? பாசமாகவும் பாதுகாப்பாகவும் இருந்த அப்பாவை எங்கிட்ட இருந்து பறிச்சிட்ட, அப்புறம் கஸ்டப்பட்டு முன்னுக்கு கொண்டு வந்த கம்பனியை என்கிட்ட இருந்து பறிச்சிட்ட, இப்போ ஒரு கல்யாண வாழ்க்கையில என்னை கொண்டு வந்து சேர்க்கப் போற, என்னோட நிலமை யாருக்குமே குடுத்திடாத. “என்று அம்பாளுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
முகேஷ் அறைக்குள் இருந்தவாறு மதுவில் மூழ்கி இருந்தான். மறுபடியும் ஒரு புது பாட்டிலை எடுத்து திறந்தவன், அதை வாயில் வைத்து சரித்தான். அப்போது அவனது போனுக்கு, காளையனின் நம்பரை அவனது அடியாள் ஒருவன் அனுப்பி இருந்தான். அதைப் பார்த்தவனின் முகம் பிரகாசித்தது, “ஏய் மலர்னிகா எங்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காத, உன்னை விடவே மாட்டேன்.
நான் குடுக்கிற தொல்லைகளை தாங்க முடியாமல் நீ தற்கொலை பண்ணிக்கிட்டு சாகப் போற, அதை பார்த்து நான் ரசிக்கப்போறன்.” என்று மனசுக்குள் பேசிக் கொண்டவன் ஒரு வீடியோ ஒன்றை காளையனின் நம்பருக்கு அனுப்பி விட்டு, அவனுக்கு போன் பண்ணினான்.
பூஜை நேரத்தில் போன் வர, அதை எடுத்துப் பார்த்தான். புது நம்பரில் இருந்து போன் வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவன், அழைப்பை ஏற்றான்.” ஹலோ யாரு பேசுறது?” என்றான். அதற்கு மறுபக்கம் இருந்த முகேஷ், “நான் யார்னு உனக்கு தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லை. அதுக்கு உனக்கு தகுதியும் இல்லை. வீணா என்னை பேச வைக்காத, எனக்கு டைம் இல்லை.
நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ, நீ கல்யாணம் பண்ணிக்க போறியே மலர்னிகா,அவளை பற்றி உனக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறன். அதை பார்த்திட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திடுற, இல்லன்னா உனக்கு அனுப்பி வச்சதை உன்னோட வீட்டில இருக்கிற எல்லோரோட போனுக்கும் அனுப்பி வைச்சிடுவன்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
காளையனும் என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு போனில் அவன் அனுப்பிய வீடியோவை ஆன் பண்ணினான். அதில் முகேஷ் மும்பையில் மலர்னிகாவை எடுத்த வீடியோ இருந்தது. அதைப் பார்த்த காளையன் உடனே அதை நிறுத்தி வைத்து விட்டான்.
அவனது உடல் பதைத்தது. மலர்னிகா இதனால்தான் அழுத்தமாக இருக்கிறாளா? அத்தைக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் அத்தை நிச்சயமாக உயிரோடவே இருந்திருக்க மாட்டாங்க. மலர் புள்ளை இதை நினைச்சு எவ்வளவு வேதனைப்படும்? கடவுளே இந்த வீடியோவை மட்டும் வீட்டில இருக்கிறவங்க பார்த்தால் என்னவாகும்?” என்று பயந்தான் காளையன்.
எனக்கு கால் பண்ணினவன் யாரு? அவனுக்கும் மலருக்கும் என்ன சம்மந்தம்? ஒருவேளை நிஷா சொன்ன முகேஷ் இவன்தானா? அப்பிடினா மலரை கொலை பண்ணப் பார்க்கிறவன் இவனோட ஆளா?” என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் கதிர் வந்தான். அவனிடம், “கதிர் நான் ஒண்ணு கேப்பேன் உண்மைய சொல்லுவியா? ” என்றான்.
கதிரும்,” கேளுங்க அண்ணா”என்றான். அதற்கு காளையன்,” கதிர் ஒரு பொண்ணை தப்பா வீடியோ எடுத்துப் போட்டா, அதை அந்த பொண்ணோட குடும்பம் எப்படி ஏத்துக்கும்?” என்றான். காளையன் காரணமில்லாமல் எதுவும் கேட்கமாட்டான் என்று அவனுக்கு தெரியும்.
“அண்ணா என்னோட சித்தப்பா ஒருத்தரு சென்னைல இருந்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. அதில் மூத்த பொண்ணு அவள் ஒருத்தன் கடத்தி, அவளை தப்பாக வீடியோ எடுத்து வச்சி சித்தப்பாகிட்ட பணம் கேட்டு மிரட்டினான். அவங்க பொண்ணை போட்டு அடிக்க, அவள் அவமானம் தாங்காமல் தற்கொலை பண்ணிக்க போனாள். அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்திட்டு தனியே விட்டுட்டு, அவங்க ரெண்டாவது பொண்ணை கூட்டிட்டு சென்னையை விட்டே போயிட்டாங்க. “என்றான்.
இதைக் கேட்ட காளையன்,” ஏன் கதிர் அந்த பொண்ணுமேல தப்பு இல்லையே. அவகூட நின்னிருக்கலாமே அவங்க. ” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட கதிர்,” இல்லை அண்ணா, அதை எப்படி அண்ணா அவங்க ஏத்துக்குவாங்க? இந்த உலகத்தில யாரு தப்பு பண்ணாலும் பொண்ணுங்க மேலதானே பழி வரும் அண்ணா.” என்றான்.
டவுன்ல இருக்கிறவங்களே இப்படி ஒரு முடிவு எடுத்தால், நம்மளோட வீட்டில இருக்கிறவங்க என்ன முடிவு எடுப்பாங்கனு தெரியலையே. என்று யோசித்தவன் கதிரை அனுப்பி விட்டு ஒரு முடிவுடன் பூஜை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
Super divi