சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 30 ❤️❤️💞

4.6
(13)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 30

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“இன்னிக்கு காலையில சுந்தரி மேடம் வந்து எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாங்க.. அதனால ஏதோ இன்னிக்கு ஒரு நாள் பட்டினி கிடக்காம நாங்க எல்லாரும் இப்ப நிம்மதியா இருக்கோம்..” 

கணேஷ் சொல்ல “என்ன சுந்தரி அங்க வந்தாளா?” 

ஷாலினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..

சுந்தரியை மரியாதை இல்லாமல் அவள் பேசியது கணேஷூக்கு என்னவோ போல இருந்தது.. 

ஆனால் அவளிடம் வாயை கொடுத்து மீள முடியாது என்று உணர்ந்தவர் “ஆமாம் மேடம்.. சுந்தரி மேடம் வந்து இருந்தாங்க.. அதை ஏன் கேக்குறீங்க? பெரிய கலாட்டாவே ஆகிடுச்சு இங்க.. சுந்தரி மேடம் புடவை மழையில நனைஞ்சிடுச்சின்னு சுந்தர் சார் அவங்களுக்கு ஒரு சுடிதார் குடுத்து மாத்திட்டு வர சொன்னாரு..”

அன்று நடந்ததை சொல்ல தொடங்கினார் கணேஷ்..

“என்ன.. சுந்தரிக்கு புதுசா சுடிதார் குடுத்தாரா..?” பல்லைக் கடித்து கொண்டு கேட்டாள் ஷாலினி..

“ஆமாம் மேடம்..”

அன்று நடந்தது முழுவதும் விவரித்தார்..

“அந்த ஆளு சுந்தரி மேடத்தை அப்படி பார்க்க ட்ரை பண்ணான்னு தெரிஞ்ச உடனே சுந்தர் சாருக்கு ஒரு கோவம் வந்துச்சு பாருங்க.. அவரை மாதிரி அமைதியான ஆளுக்கெல்லாம் இவ்வளவு கோவம் வரும்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை.. இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா அவன் செத்தே போய் இருப்பான் மேடம்.. சுந்தர் சார் இவ்வளவு கோவப்பட்டு நாங்க யாருமே பார்த்ததில்லை.. மிஞ்சி மிஞ்சி போனா எங்களை எல்லாம் திட்டுவாரு அவ்வளவுதான்.. ஆனா இன்னைக்கு அவன் மண்டையை உடைச்சு அவனை ஒரு அடி அடிச்சாரு பாருங்க.. எங்களுக்கெல்லாம் அது சுந்தர் சாரா இல்ல அவர் உடம்புக்குள்ள வேற யாராவது புகுந்துட்டாங்களான்னு சந்தேகமே வந்துடுச்சு..” 

“இந்த சுந்தர் எதுக்கு இவ்வளவு கோவப்படணும்..” என்று யோசித்தாள் ஷாலினி.. 

அதற்குள் சுந்தர் அங்கு வந்துவிட “மேடம்.. சுந்தர் சார் வந்துட்டாரு.. நான் அவர்கிட்ட ஃபோனை கொடுக்கிறேன்..” என்று சொல்லி “சுந்தர் சார்.. ஷாலினி மேடம் பேசுறாங்க..” என்று அவன் கையில் ஃபோனை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் கணேஷ்..

“ஹலோ.. சொல்லு ஷாலினி..” என்று சுந்தர் சொல்லவும் “ஏன் சுந்தர்.. அங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா? பாவம்.. அவங்க வீட்ல எல்லாம் தண்ணி வந்துருச்சுன்னு தானே இங்க வந்து இருந்திருக்காங்க.. சாப்பாடு கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்களே..”  தானாகவே அவனிடம் விசாரிப்பது போல் விசாரித்தாள் ஷாலினி..

அவள் நிஜமான அக்கறையோடு தான் கேட்கிறாள் என்று நினைத்து ” ஷாலினி.. எல்லாரும் சாப்பிட்டாச்சு..  சுந்தரி வந்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டாங்க..” என்றான் சுந்தர்..

“அப்புறம்.. நான் இப்ப போய் இதை பத்தி கேக்கறேனேன்னு தப்பா நெனைக்காதீங்க.. ஒரு க்யூரியாசிட்டிலதான் கேக்கறேன்.. நம்ம கல்யாணம் பண்ணிக்க போற விஷயத்தை வீட்ல சுந்தரி கிட்ட.. பாட்டி கிட்டல்லாம் சொல்லிட்டீங்களா?” 

திடீரென ஷாலினி கேட்கவும் இந்த சமயத்தில் அவள் எதற்கு இதை கேட்கிறாள் என்று புரியாமல் ஒரு நிமிடம் திடுக்கிட்டான் சுந்தர்..

பிறகு சுதாரித்தவன் “சொல்லிட்டேன்..” என்றான்..

” என்ன சொன்னாங்க..? எல்லாருக்கும் ஓகே தானா?” 

“அது… சுந்தரிக்கு சந்தோஷம்தான்.. ஆனால் பாட்டிக்கு கொஞ்சம் இஷ்டம் இல்ல போல.. ஆனா அப்புறம் நான் விரும்புறேன்னு சொன்னதும் சரின்னு அரை மனசா ஒத்துக்கிட்டாங்க.. ஆனா நீ கவலைப்படாத ஷாலினி.. நம்ம கல்யாணத்தப்போ அவங்க நிச்சயமா நல்லபடியா நமக்கு ஆசீர்வாதம் பண்ணுவாங்க..” என்று சுந்தர் சொல்ல “எனக்கு வில்லியே இந்த கெழவிதான்… மொதல்ல அவளை போட்டு தள்ளணும்..” என்று நினைத்தாள் ஷாலினி..

“அப்புறம் சுந்தர்.. இன்னைக்கு கம்பெனியில ஏதோ கலாட்டான்னு கணேஷ் என்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு.. அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க.. என்ன ஆச்சு?” 

ஒன்றுமே தெரியாதது போல் கேட்டாள் ஷாலினி..

சுந்தர் நடந்ததை சொல்ல “நீங்க ஏன் அந்த ஆளை அப்படி அடிச்சீங்க..? ஏதாவது போலீஸ் கேசுன்னு ஆயிடுச்சின்னா என்ன பண்ணறது?” 

சுந்தர் மேல் அக்கறை இருப்பது போல் கேட்டாள்..

“என்ன ஷாலினி இப்படி கேக்குற..? நான் செஞ்சதை கேட்டு ஆக்சுவலா ஒரு பொண்ணுக்கு நடந்த கொடுமையை சரியா தட்டி கேட்டு இருக்கேன்னு நீ சந்தோஷப்படுவன்னு நினைச்சேன்.. நீ என்ன இப்படி பேசுற? சுந்தரி இடத்தில உன்னை வச்சு பாரு.. அப்ப நான் பண்ணது எவ்வளவு சரின்னு உனக்கு புரியும்..” 

“ஆனா நீங்க அவனை போலீஸ்ல புடிச்சு கொடுத்திருக்கலாம் இல்ல..? அனாவசியமா அவனை அடிச்சு அதுல ஏதாவது ஏடாகூடமா அவனுக்கு அடிப்பட்டு உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம் ஆகியிருந்ததுன்னா..? யாரோ ஒரு சுந்தரிக்காக நீங்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்..?” 

ஷாலினி கேட்கவும் சுந்தரியை யாரோ என்று அவள் சொன்னது அவன் மனதில் சுருக்கென தைத்தது..

“சாரி ஷாலினி.. சுந்தரி யாரோ இல்ல.. உண்மையை சொல்ல போனா இப்போ அவங்களும் அந்த வீட்டில ஒருத்தங்களா ஆயிட்டாங்க.. என்னால அவங்களை அப்படி பிரிச்சு பார்க்க முடியல.. இந்த மாதிரி தப்பு உனக்கு நடந்து இருந்தா என்னோட ரியாக்ஷன் எப்படி இருந்து இருக்குமோ அதே மாதிரி ரியாக்ஷன் தான் சுந்தரிக்கும் இருந்தது.. அந்த ஆளோட வைஃப் ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதால நாங்க அந்த ஆளை போலீஸ்ல புடிச்சு கொடுக்கல.. ஆனா அவனை போலீஸ்ல புடிச்சு குடுக்காததுக்கு இன்னொரு ரீசனும் இருக்கு.. அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா அது விஷயமா சுந்தரி போய் போலீஸ் ஸ்டேஷன்ல நின்னு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.. எனக்கு அப்படி அவங்கள நிக்க வைக்கிறதுல இஷ்டம் இல்ல.. என்ன தான் இருந்தாலும் அவங்களும் எங்க வீட்டுல ஒருத்தர் தான்.. அதனாலதான் அந்த ஆளை அடிச்சு கம்பெனியில் இருந்து வேலையை விட்டு எடுத்து விரட்டி விட்டேன்..” 

“அது சரி சுந்தர்.. இப்ப அவரை வேலையை விட்டு எடுத்துட்டீங்களே.. அவர் இல்லனா அந்த வேலையெல்லாம் இப்ப யார் செய்வாங்க? உங்களுக்கு ஒரு ஆளு குறைஞ்சதால வேலை எல்லாம் நின்னுடாதா..? கம்பெனிக்கு அதனால லாஸ் வராதா?” 

“அந்த பொறுக்கி வேலை செஞ்சுதான் என் கம்பெனி ஓடணும்னா என் கம்பெனி லாஸ்லேயே போனாலும் பரவால்ல.. அந்த மாதிரி ஒரு ஆளு இன்னும் ஒரு நிமிஷம் கூட என் கம்பெனியில் இருக்கிறதை பொறுத்துக்க முடியாது என்னால..” 

அவன் பேசிய தொனியில் இருந்தே அவன் எவ்வளவு அந்த ஆளின் மேல் கொலை வெறியில் இருந்தான் என்பது புரிந்தது ஷாலினிக்கு..

சுந்தரோ அன்று சுந்தரியின் இன்னொரு உருவத்தை பார்த்தவன் பிரமிப்பு அடங்காமல் அதை ஷாலினியிடமும் பகிர்ந்து கொண்டான்..

” ஆக்ச்சுவலா சுந்தரி அந்த ஆளை ஒரு மிரட்டு மிரட்டுனாங்க பாரு.. நிஜமா சொல்றேன் ஷாலினி.. அவங்களுக்குள்ள இப்படி ஒரு தைரியமான பொண்ணு இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. அதுக்கப்புறம் அவங்க வைஃப் அவனை வேலைய விட்டு எடுத்தா அவங்களும் அவங்க குழந்தையும் பணம் இல்லாம கஷ்டப்படுவோம்ன்னு சொன்னப்போ அவங்களுக்கு என்ன வேலை தெரியும்னு சொல்லி கேட்டு அதுக்கேத்த மாதிரி யோசிச்சு கேண்டீன் வச்சு கொடுங்கன்னு சொன்னாங்க பாரு.. அதுல அவங்களுக்குள்ள எவ்வளவு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்கில் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சது.. அவங்க பார்க்க தான் ஒன்னும் தெரியாத மாதிரி இருக்காங்க ஷாலினி.. ஆனா அவங்களுக்குள்ள அவ்ளோ திறமை இருக்கு..”  சுந்தரியை நினைத்து பிரமித்து பேசிக் கொண்டே போனான் சுந்தர்..

ஷாலினிக்கு அதைக் கேட்க கேட்க எரிச்சலாய் இருந்தது.. 

அதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்று உணர்ந்தவள்  “சரி சுந்தர்.. நான் உங்களோட அப்பறம் பேசுறேன்.. எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும்..” என்று தொலைபேசி இணைப்பை துண்டித்தாள்..

அவள் அப்படி திடீரென இணைப்பை துண்டித்துவிட்டது எண்ணி சிறிது திடுக்கிட்ட சுந்தர் பிறகு நிஜமாகவே அவளுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும் என தன் வேலையை பார்க்க சென்றான்..

வீட்டிற்கு வந்த சுந்தரி சுந்தர் தந்த சுடிதாரை தன் மார்போடு அணைத்து எடுத்துக் கொண்டு போனவள் அதை தன் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள்..

அதன் பிறகு “இன்னிக்கு அந்த ஆளை போட்டு எப்படி அடிச்சிட்டாரு..? இந்த விஷயம் தெரிஞ்சவுடனே அவருக்கு எவ்வளவு கோவம் வந்தது..? ஒரு பொண்ணுக்கு ஒரு கொடுமை நடந்தா அதை எதிர்த்து கேட்கிற தைரியம் இருக்கற ஆம்பளைங்க கொஞ்சம் பேர் தான்.. சுந்தர் சாரும் அதுல ஒருத்தர்..” என்று எண்ணியவள் அவனை நினைத்தபடி பெட்டிக்குள் இருந்த அந்த சுடிதாரையே பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.. 

பிறகு பாட்டியின் அறைக்கு சென்றாள் அவரை கவனிக்க..

அப்போது வாசலில் திடீரென யாரோ கத்தும் சத்தம் கேட்கவும் விரைந்து வாசலுக்கு சென்றாள் சுந்தரி.. பாட்டியின் அறையில் இருந்து ரதியும் ஓடி வர ஜன்னல் கதவை திறந்து யார் என பார்த்தாள்.. 

அங்கே பாஸ்கர் குடித்துவிட்டு வந்து ரதியை அழைத்து ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பதை பார்த்து “ஐயோ.. மாமா இங்கே எங்க வந்தாரு?” என்று கேட்டாள் ரதியை பார்த்து..

“இந்த ஆளை..!!” என்று ரதி இடுப்பில் புடவை முந்தானையை சொறுகிக்கொண்டு வெளியே செல்ல பார்க்க சுந்தரி அவள் கையை பிடித்து தடுத்தாள்..

“வேணாம் ரதி.. அவர் கத்திட்டு போறதுன்னா போகட்டும்..” என்று சொல்லி அவளை அடக்கினாள்..

பாஸ்கரோ “ஏ ரதி.. யாருமே கல்யாணம் பண்ணிக்காத உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்காக அன்னைக்கு என்னை வீட்டை விட்டு வெளியில தள்ளிட்ட.. இன்னைக்கு வரைக்கும் என்னை அந்த வீட்டுக்குள்ள சேர்க்கல..”

அவன் சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரி ரதியை கேள்வியாய் பார்க்க ரதி ஆமோதிப்பது போல் கண்களை மூடி திறந்து அவள் கையை இறுக்க பிடித்தாள்.. அவளை அப்படியே இழுத்து அணைத்து அழுதுத் தீர்த்தாள் சுந்தரி தன் அக்காளின் துன்பத்தை நினைத்து..

ஆனால் பாஸ்கரோ தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தான்.. “இப்போ ஊரு முழுக்க வெள்ளக்காடா இருக்குது.. நான் எங்கடி போவேன்? இப்ப கூட புருஷனாச்சேன்னு என்னை உன் கூட தங்க வச்சுக்கணும்னு உனக்கு தோணலல்ல..? என்னை விட உன் தங்கச்சி தான் உனக்கு முக்கியமா போயிட்டாளா? அதுக்கு எதுக்கு என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட? எனக்கு என் புள்ளையை பார்க்கணும்.. அவ கூட இருக்கணும்.. என்னை வீட்டுக்குள்ள விடுடி.. கதவை திற..” கத்திக் கொண்டிருந்தான் பாஸ்கர்..

சுந்தரியும் ரதியும் அவன் கத்துவது எதையும் காதில் வாங்காமல் பாட்டியின் அறைக்குள் சென்றார்கள்.. பாட்டியின் அறைக்குள்ளேயும் அவன் கத்துவதெல்லாம் காதில் விழுந்தது.. பாட்டியோ கவலை தோய்ந்த முகத்துடன் சுந்தரியை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அதன் பிறகு மழை இன்னும் வேகமாக பிடித்துக் கொள்ள இடுப்பளவு தண்ணீர் நிறைந்து இருந்தது ஊர் முழுவதும்..

சிறிது நேரம் கத்திக் கொண்டிருந்த பாஸ்கர் அதற்கு மேல் அங்கு மழையில் நிற்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான்..

சுந்தரால் அதன் பிறகு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வர முடியவில்லை.. சுந்தரிக்கு கைபேசியில் அழைத்தான்..

“சுந்தரி.. ரொம்ப தண்ணியா இருக்கு என்னால வீட்டுக்கு இன்னைக்கு நைட்டு வர முடியும்னு தோணல.. நான் இங்க ஆஃபீஸ்லயே இருக்கிறேன்.. நாளைக்கு காலைலக்குள்ள மழை குறைஞ்சிடுச்சுன்னா கொஞ்சம் தண்ணி வடிஞ்சப்புறம் நான் கிளம்பி வரேன்.. பாட்டியை பத்திரமா பாத்துக்கோங்க.. இன்னொரு விஷயம்.. என் ஃபோன் இன்னும் கொஞ்ச நேரத்துல பேட்டரி ஆஃப் ஆயிடும் போல இருக்கு.. இந்த கம்பெனியில பவர் இல்லை.. இங்க நாங்களே ஜெனரேட்டர் போட்டு தான் ஒரு ரூம்ல லைட் போட்டு எல்லாரும் அங்க உக்காந்துட்டு இருக்கோம்.. வீட்ல பவர் இருக்கா?” என்று கேட்டான் அவன்..

“இப்ப இருக்கு சார்.. இங்கே இன்னும் பவர் கட் பண்ணல..” 

சுந்தரி சொல்ல “பார்த்துக்கோங்க சுந்தரி.. ஃபோன் எல்லாம் கொஞ்சம் சார்ஜ் பண்ணி வச்சுக்கோங்க..” என்று சுந்தர் சொல்ல “சரிங்க சார்.. அங்க நீங்க பத்திரமா இருங்க..” என்றாள் சுந்தரி..

அதன் பிறகு அவன் சொன்னபடி தன் கைபேசியில் மின்னேற்றம்(சார்ஜ்) செய்தவள் ரதியுடன் பாட்டியின் அறைக்கு வந்தாள்..

பாட்டி இரவு உணவை கொஞ்சமாகத்தான் உண்டார்.. மழையாக இருப்பதனால் அவருக்கு பசிக்கவில்லையோ என்று எண்ணிக் கொண்டாள் சுந்தரி.. 

” பாட்டி நான் கொஞ்சம் பால் கொண்டு வரேன்.. நீங்க ஒழுங்கா சாப்பிடல.. குடிச்சிட்டு படுங்க..” என்று அவள் சொல்ல பாட்டியோ “இல்லமா.. எனக்கு என்னமோ நெஞ்சை கரிக்குது.. நான் இப்படியே தூங்கறேன்ம்மா” என்றாள் பாட்டி..

“சரிங்க பாட்டி..” என்று சொல்லிவிட்டு பாட்டியை படுக்க வைத்து விட்டு தானும் ரதியுடன் கீழே படுத்துக்கொண்டாள்..

நடு இரவில் திடீரென யாரோ வேகமாக மூச்சு விடும் சத்தம் கேட்க எழுந்து தன் கைப்பேசியில் விளக்கு போட்டு பார்த்த சுந்தரி அப்படியே படபடத்து போனாள்.. பாட்டிக்கு மூச்சு திணறிக் கொண்டிருந்தது..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து

பதிவு பண்ணுங்க..!! 

நன்றி ஃப்ரெண்ட்ஸ்..

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!