சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 51
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மாதேஷ்.. சைத்ரா சுந்தர் மற்றும் அவனது நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த உரையாடலை கேட்டு அப்படியே இடிந்து போய் ஸ்தம்பித்து நின்றாள்.. சுந்தரி..
சுந்தரி ஷாலினியுடன் தன் சேலையில் படிந்திருந்த கரையை சுத்தப்படுத்த சென்றிருந்த வேளையில் அதற்காகவே காத்திருந்த மாதேஷ் “டேய் சுந்தர்.. உனக்கும் சுந்தரிக்கும் ஜோடி பொருத்தம் அமர்க்களமா இருக்குடா.. ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் செஞ்சு வச்ச மாதிரி அவ்வளவு பொருத்தமா இருக்கீங்க..” என்று பேச்சை தொடங்கினான்..
சுந்தருக்கோ அவன் சொன்னது உள்ளுக்குள் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்க “தேங்க்ஸ்டா மாதேஷ்..” என்றான் மனமாற..
சைத்ராவும் மாதேஷ் ஏதோ நல்ல விதமாகத்தான் சொல்ல வருகிறான் என்று எண்ணி “ஆமாம் சுந்தர்.. சுந்தரி தான் உனக்கு பெஸ்ட் ஜோடி.. ரெண்டு பேரும் அங்க மேடையில நிக்கும் போது ஏதோ உங்க ரெண்டு பேரையும் ஜோடியா செஞ்சே கடவுள் இந்த பூமியில படைச்ச மாதிரி இருந்துது..” என்று வெள்ளந்தியாய் சொன்னாள்..
இதற்குள் சுந்தரி தன் சேலையை சுத்தப்படுத்தியவள் திரும்பும் வேளையில் ஷாலினியிடம் “என்ன ஷாலினி.. ஜூஸ் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தீங்க? நான் எதிர்பார்க்கவே இல்லை..” என்க
“அது ஒன்னும் இல்ல.. அங்க சாப்பிட்டுட்டு வந்தப்போ ஜூஸ் போட்டு வச்சிருந்தாங்க.. நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடல இல்ல.. சரி உங்க ரெண்டு பேருக்கும் பசிக்குமேன்னு ஜூஸ் கொண்டு வரலாம்னு நினைச்சேன்.. அப்படியே அங்க சுத்தி பேசிக்கிட்டிருக்கறவங்களுக்கும் கொடுக்கலாமேன்னு எடுத்துட்டு வந்தேன்..” என்றாள்..
“அப்பப்பா.. இந்த சுந்தரிகிட்ட ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்.. என்னோட ஒவ்வொரு மூவையும் சந்தேக பார்வையோடயே பாத்துக்கிட்டு இருக்கா..” என்று பெருமூச்சை விட்டவள்.. சுந்தரி சுந்தர் அமர்ந்து கொண்டிருந்த இடத்திற்கு போக அவளை பின் தொடர்ந்தாள்..
அதற்குள் மாதேஷ் இந்த பேச்சை ஆரம்பித்து சைத்ரா சொன்னதை கேட்டவன் “அப்படி சொல்லு சைத்ரா.. இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிட்டு இருந்தேன்.. இவனுக்கு ஏத்த மாதிரி இவனை மாதிரியே காம்ப்ளெக்ஷனோட சிம்பிளா இருக்கிற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணா வாழ்க்கை நல்லா இருக்கும்னு.. இவன்தான் அதை எல்லாம் புரிஞ்சுக்காம எங்க கிட்ட என்னவோ பெரிசா சவால் எல்லாம் விட்டான்.. வெள்ளையா மாடர்னா ஒரு ரிச் பேக்ரவுண்ட் இருக்கற பொண்ணை கல்யாணம் கட்டிக்கிறேன்னு.. இப்போ நான் சொன்ன மாதிரி தானே ஒரு பொண்ணை கல்யாணம் கட்டி இருக்கே நீ..” என்று கேட்டான் மாதேஷ்..
அதை கேட்ட சுந்தரிக்கோ அப்போதுதான் சுந்தரின் சவால் ஞாபகத்திற்கு வந்தது..
“ஐயோ பாவம் சுந்தர் சார்.. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறாரோ? இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமைக்கு அவரை கொண்டு வந்துட்டேனே..” என்று கவலை கொண்டாள்..
ஆனால் சுந்தரோ அமைதியாக மாதேஷிடம் “ஏய் மாதேஷ்.. அதெல்லாம் நான் அப்ப சொன்னது டா.. ஆனா இப்ப அந்த சவாலுக்கெல்லாம் அர்த்தமே இல்லன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்.. நான் இப்போ மனசோட அழகை பாக்க கத்துக்கிட்டேன்.. நம்ம சந்தோஷமா வாழறதுக்கு வெளியில அழகா இருந்தா மட்டும் போதாது.. மனசு அழகா இருக்கணும்.. மனசு அழகா இருந்ததுன்னா வெளியில எப்படி இருந்தாலும் அவங்க அழகா தான் தெரியுவாங்கடா..”
தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக சொன்னான் சுந்தர்..
“அப்படி சொல்லி நீ சமாளிச்சுக்கலாம் டா.. ஆனா நீ போட்ட சவால்ல தோத்தது தோத்தது தானே..? நான் அப்பவே சொன்னேன் வெள்ளையா இருக்கிற எந்த பொண்ணும் உன்னை பார்த்து ஆசை பட மாட்டான்னு.. அப்படியே அதிசயமா ஷாலினி மாதிரி யாராவது ஓகே சொன்னாலும் உன்னால அவங்களுக்கு ஈடு கொடுத்து அவங்களை சந்தோஷமா வாழ வைக்க முடியாதுன்னு சொன்னேன்ல..?”
அவன் பேச பேச அங்கிருந்த அனைவருக்குமே அவன் பேச்சு சங்கடத்தை கொடுத்திருந்தது.. அன்று அவன் பேச்சால் என்ன என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்ற கவலையும் பயமும் எல்லோர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது..
“அந்த மாதிரி கர்ள்ஸூக்குன்னு ஒரு கனவு ஆசை இது எல்லாம் இருக்கும் இல்ல..? இப்போ என்னை மாதிரி ஹேண்ட்ஸமா ஜெனரேஷன் ஜெனரேஷனா ரிச் பேக்ரவுண்டில் இருந்து வர்றவனுக்கு அவங்களோட மேனரிசம் அவங்களோட எக்ஸ்பெக்டேசன்ஸ் அவங்களுக்கு மேட்ச் ஆகுற மாதிரி எங்களோட பிஹேவியர்.. பிஸினஸ் ரிலேஷன்ஷிப்ஸ்.. ஹைஃபை சொசைட்டி.. ஃப்ரெண்ட்ஸ்.. இது எல்லாமே இருக்கும்.. அதனால எங்கள மாதிரி பசங்களுக்கு அவங்கள வச்சு மெயின்டைன் பண்றதுல ப்ராப்ளம் ஒண்ணும் இருக்காது.. ஆனா நீ..?”
அவனை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தவன் “நீ ஒரு வில்லேஜ் ல இருந்து வந்தவன்.. பட்டிக்காட்டான்.. அந்த மாதிரி ஒரு ரிச் பேக்ரவுண்டில் இருந்து வர்ற பொண்ணு என்ன எல்லாம் உன்கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்ணுவான்னு கொஞ்சமாவது உனக்கு ஏதாவது ஐடியாவாவது இருக்கா..? அதெல்லாம் இருக்குறதுக்கு சான்சே இல்ல.. இதை தான் உனக்கு புரிய வைக்க முதல் இருந்தே நான் முயற்சி பண்ணேன்.. ஆனா நீ தான் என்னவோ பிசினஸ்ல பெரிய ஆளா வந்துட்டா எப்பேர்பட்ட பொண்ணையும் உன்னோட வைஃப் ஆக்கி அவளோட பெஸ்ட் பேரா வாழ்ந்து காட்டுறேன்னு சொன்னே.. இப்போ உனக்கேத்த மாதிரி சுந்தரியை தான் நீ கல்யாணம் பண்ணிக்க முடியும்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..”
அவனுடைய வன்ம புன்னகை இன்னும் விரிய சைத்ரா அவனை பார்த்து சுறுசுறுவென கோவத்தோடு கத்த ஆரம்பித்தாள்..
“ஏய் மாதேஷ்.. என்னடா பேசுற நீ..? அவன் கல்யாண ரிசப்ஷன்க்கு வந்துட்டு அவனை பத்தியும் அவன் வைஃபை பத்தியும் கேவலமா பேசற..? உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா..? சுந்தரிக்கு என்னடா குறைச்சல்..? அந்த பொண்ணு இன்னைக்கு தேவதை மாதிரி இருந்தாடா.. சும்மா எதாவது தேவையில்லாம பேசி அவன் மனசை கஷ்டப்படுத்தாதே.. உனக்கு எப்பவும் இதே வேலை தான்.. சுந்தரோட வம்பு பண்ணிட்டே திரியவேண்டியது..”
சுந்தருக்கு ஆதரவாக பேசினாள் சைத்ரா..
“ஏய்.. சைத்து.. நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்ப நீ இப்படி பொங்கிட்டு வர்ற.. நான் சுந்தரியை ஏதும் குறை சொல்லலையே.. நான் சுந்தருக்கு புரிய வைக்கிறேன்.. அவன் சவால் விட்டபடி எல்லாம் நடக்காது.. வாழ்க்கையில நம்மளுக்கு சில விஷயங்கள் மேட்சிங்கா இருக்கும்.. அதுதான் நடக்கும் அப்படின்னு.. அவன் தானே என்கிட்ட சொன்னான்.. ஃபேரா ஹைலி எஜூகேட்டட் குவாலிஃபைடு பொண்ணா கல்யாணம் பண்ணி வாழ்ந்து காட்டுறேன்னு.. அவன் என்கிட்ட சவால் விட்டபடி இப்ப நடக்கல தானே..? சவால்ல தோத்துட்டான் தானே.. சுந்தரி கிட்ட இதுல எந்த குவாலிபிகேஷனும் இல்லல்ல..? அவ இவன் வீட்ல வேலை செய்ய வந்தவ தானே..?” என்று மாதேஷ் சொல்ல சுந்தர் “மாதேஷ்.. போதும் நிறுத்து” என்று கத்தினான்..
“ஏன் சுந்தர் உண்மைய சொன்னா உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது? நான் இப்ப உன்னையும் அந்த பொண்ணையும் எதுவும் கேவலமா பேசலையே… இருக்குறதை தானே சொன்னேன்…”
ஏதோ அவன் சொன்னதில் எதுவுமே தவறில்லை என்பது போல் மாதேஷ் பேசிக் கொண்டிருந்தான்..
இங்கே சுந்தரியின் கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிந்து கொண்டிருந்தது.. தன்னால் சுந்தருக்கு எவ்வளவு அவமானம் நிகழ்ந்திருக்கிறது என்று உணர்ந்து மௌனமாக அங்கு நிகழ்ந்ததை பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்..
சுந்தர் மாதேஷை பார்த்து “எல்லாருமே வாழ்க்கையில யாரோ ஒருத்தர்கிட்ட வேலை செஞ்சிட்டு தான்டா இருக்கோம்.. ஏன்..? ஷாலினி கூட தான் என்கிட்ட காஸ்ட்யூம் டிசைனரா வேலை செஞ்சா.. உன் ஃபிரண்டு தானே அவ.. அப்போ அவளை கூட அப்படித்தான் சொல்லுவியா நீ..?”
சுந்தர் கேட்க சத்தமாக சிரித்தான் மாதேஷ்..
“தன்னோட கரியர்ல ஒரு நல்ல இடத்துக்கு வரணும்ங்கிறதுக்காக வொர்க் பண்ற ஷாலினியும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே இல்லாம உன்கிட்ட வந்து கேவலம் ஒரு சமையற்காரியா வேலை செஞ்சு பிச்சை காசுக்கு கையேந்துன சுந்தரியும் ஒன்னா..?”
சுந்தரோ பொறுமை இழந்து பல்லை கடித்து கொண்டு”மாஆஆஆதேஷ்..” என்று உறும சைத்ரா “மாதேஷ்.. என்ன பேசுற நீ..?” என்று சொன்னவள் இந்த வாக்குவாதம் எங்கு போகிறது என்று அறிந்து சிறிது பயந்தாள்..
ஆனால் மாதேஷோ நிறுத்தாமல் சுந்தரை பார்த்து தன் பேச்சை தொடர்ந்தான்.. அவன் நினைத்தது நடக்கவேண்டுமென வேண்டுமென்றே சுந்தரியை மேலும் மேலும் மட்டம் தட்டி பேச ஆரம்பித்தான்..
“பின்ன என்னடா? ஷாலினி ஒரு கோடீஸ்வரனோட பொண்ணு.. என் ஃப்ரெண்ட் ஷாலினியை உன்னோட வைஃப் ஆஃடர் ஆல் அந்த சுந்தரியோட கம்பேர் பண்ணி பேசாத.. நீயே அதனால தானே ஷாலினியை லவ் பண்ண.. இப்ப அந்த மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னால அவளுக்கு ஈடு கொடுக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்ட.. உன்னோட இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உனக்கு பயத்தை குடுத்துருக்கும்.. உன்னை மாதிரி அடிமட்டத்துலருந்து வந்து பார்த்து பார்த்து செலவு பண்றவனுக்கெல்லாம் அந்த மாதிரி பொண்ணுங்களை மெயின்டெய்ன் பண்ணறதை எல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது.. அந்த மாதிரி பொண்ணு உன்னோட இருந்தா அவளை நீ சந்தோஷமா வச்சுக்க முடியாதுன்னு தானே உனக்கு ஏத்த மாதிரி சுந்தரியை கட்டிக்கிட்ட.. அதுக்காக சுந்தரியையும் ஷாலினியையும் ஒரே மாதிரின்னு சொன்னா எப்படி..?” என்றான் மாதேஷ் நக்கலாக..
சுந்தர் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் அவன் சட்டையை பிடித்திருந்தான்..
“டேய்.. உனக்கு என்னடா தெரியும் சுந்தரியை பத்தி.. அவ எவ்வளவு கஷ்டப்பட்டாலும் யார்கிட்டயும் கையேந்தாம சுயமா உழைச்சு சம்பாதிச்சு அவ அக்கா குடும்பத்தையும் காப்பாத்துறா.. உன்னை மாதிரியும் ஷாலினி மாதிரியும் அப்பன் காசுல உட்கார்ந்து தின்னு உடம்பை வளர்க்கலை.. ஆமாண்டா.. நீ சொன்னது சரிதான்.. சுந்தரியை ஷாலினியோட கம்பேர் பண்ணது தப்புதான்.. என் சுந்தரி மாதிரி தன்மானம் இருக்கற நேர்மையா உழைச்சு சாப்பிடற அழகான மனசு இருக்கிற பொண்ணோட ஷாலினி மாதிரி..”
ஒரு பெருமூச்சை விட்டவன்.. கண்ணை மூடி திறந்து தன்னை தானே நிலைப்படுத்தியவன் “வேணான்டா என்னை பேச வெக்காதே.. சுந்தரி மாதிரி ஒரு வைரத்தை ஒரு தகரத்தோட கம்பேர் பண்ணது என் தப்பு தான்.. இதுக்கு மேல நீ ஏதாவது பேசுன அப்புறம் இங்க நடக்குறதே வேற.. மரியாதையா முதல்ல இங்கிருந்து வெளியே போடா..”
அவன் சட்டையை பிடித்து அங்கிருந்து வெளியே தள்ளினான் சுந்தர்..
அதுவரை பொறுமையாக இருந்த ஷாலினி “சுந்தர்.. போதும்.. அவன் என்ன தப்பா சொல்லிட்டான்..? உண்மையை தானே அவன் சொன்னான்.. சுந்தரி உன் வீட்டில சமையல் வேலை செஞ்சவ தானே..? அவன் என் ஃபிரண்டா எனக்கு சப்போர்ட் பண்ணான்ற ஒரே காரணத்துக்காக அவனை போட்டு அடிச்சு அவமானப்படுத்தி வெளியே தள்ளியிருக்க.. என்னை புடிச்சு போய் தானே நீ என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி என்னோட சுத்துன.. எனக்கு துரோகம் பண்ணிட்டு இதோ இந்த சுந்தரியை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி மாதேஷை அடிச்சு வெளியே தள்ளுற..”
ஷாலினி மாதேஷுக்காக பேச சுந்தர் அவளை முறைத்து பார்த்த படி கையை நீட்டி அவள் பேசுவதை நிறுத்த சொன்னவன் “இங்க பாரு ஷாலினி.. காலைல நீ பேசினதுக்கே உன்னை சாவடிச்சிருக்கணும்.. ரவிக்குமார் சாருக்காக அமைதியா வந்துட்டேன்.. இப்பவும் அந்த வீணா போனவன் பேசின பேச்சுக்கு அவனை கொன்னு போட்டு இருக்கணும்.. அப்படி செய்யாம அவனை வெளியில தள்ளுனேன் இல்ல.. சந்தோஷப்பட்டுக்கோ..” என்றான்..
“ஓஹோ.. இப்போ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட இந்த சுந்தரிக்காக மாதேஷோட தேவையில்லாம சண்டை போடுற.. என்னை அவ்வளவு மட்டமா பேசுற.. என்னை லவ் பண்ணப்போ எங்க போச்சு இந்த புத்தி உனக்கு..?” என்று சொன்னவளை பார்த்தவன் “இங்க பாரு.. இதுக்கு மேலயும் உன் நடிப்பை நம்பி ஏமாற வேற ஆளை பாரு.. அதான் உன்னோட பெஸ்ட்டி போயிட்டான்ல.. மரியாதையா நீயும் கிளம்பு.. இன்னும் ஒரு நிமிஷம் நீ இந்த இடத்துல இருந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. தொலைச்சுடுவேண்டி உன்னை..”
அவளை அழுத்தமாய் பார்த்து அவன் உறுமலாய் அடிக்குரலில் சொல்ல
ஷாலினியோ சுந்தரி பக்கம் திரும்பி
“நான் காலையில கோபப்பட்டப்போ உனக்கு புரியல இல்ல..? இதுக்காக தான் கோபப்பட்டேன்.. இப்போ உன்னால சுந்தருக்கும் அவமானம்.. அவரோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் அவமானம்.. இப்பவே சுந்தரோட நிம்மதி பாதி போயிடுச்சு.. கல்யாண ரிசப்ஷன் அன்னைக்கே உன்னால சுந்தரோட சந்தோஷம் போயிடுச்சு.. இதுல வாழ்க்கை முழுக்க நீ எப்படி அவனை சந்தோஷமா வச்சுக்க போறே.. இதே சுந்தர் என்னை கல்யாணம் பண்ணி இருந்தா அவர் சவால்லயும் ஜெயிச்சிருப்பாரு.. ஃபிரண்ட்ஸ் முன்னாடி தலை நிமிர்ந்து நின்னுருப்பாரு.. இப்போ உன்னை கல்யாணம் பண்ணிகிட்டு அதனால அவமானத்துல எல்லாரோட சட்டையையும் புடிச்சிட்டு சண்டை போட்டுட்டு இருக்காரு பைத்தியக்காரன் மாதிரி.. இதுக்குத்தானே ஆசைப்பட்ட..? நல்லா என்ஜாய் பண்ணு.. விஷ் யு எ வெரி ஹாப்பி மேரீட் லைஃப்..” என்று சொன்னவள் அங்கிருந்து விடுவிடுவென வெளியே சென்றாள்..
அப்போதுதான் சாப்பிட்டு முடித்து வெளியே வந்த ரவிக்குமார் ஷாலினி பேசியதை கேட்டு இடிந்து போய் நின்றார்..
வெளியே வந்த ஷாலினி அங்கே மாதேஷ் நின்று இருக்க அவனோடு போய் கையைத் தட்டி “பெர்ஃபெக்டா முடிச்சிட்டோம் ஷாலினி..” என்று அவன் சொல்வதைக் கேட்டு சிரித்து “சரி.. யாராவது பார்த்துட போறாங்க.. நீ கெளம்பு..” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்துவிட்டு கண்களில் கண்ணீரோடு தன் அடுத்த நடிப்பை தொடர்ந்தாள்..
ரவிக்குமார் நேரே சென்று சுந்தரிடம் “என்னை மன்னிச்சிடுப்பா சுந்தர்.. இந்த பொண்ணை எந்த நேரத்துல பெத்தனோ தெரியல.. நாக்குல தேள் கொடுக்கை வச்சிருக்கா.. நான் இங்க இந்த ரிசப்ஷனுக்கு வந்துருக்கவே கூடாது.. அதுவும் அவளை கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது.. என்கிட்ட வந்து எனக்கு எந்த கோபமும் இல்லப்பா.. நான் எதுவும் கலாட்டா பண்ண மாட்டேன்னு சொன்னதுனால தான் அவளை கூட்டிட்டு வந்தேன்” என்று சொன்னவர்
“முதல்ல நீ சுந்தரியை சமாதானப்படுத்துப்பா..” என்று சொல்ல நிமிர்ந்து பார்த்தவன் சுந்தரி அங்கு இல்லாதது அறிந்து அதிர்ச்சி அடைந்தான்..
சுந்தரியை தேடி போனவன் அவள் ஒரு அறைக்குள் கட்டிலில் கால் மடித்து அதன் மேல் கைகள் கட்டி இருக்க தலையை அதன் மேல் கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. அவள் பக்கத்தில் ரதியும் மேகலாவும் நடராஜனும் அமர்ந்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்..
அவள் உடல் குலுங்க கேவி கேவி அழுது கொண்டிருந்தாள்.. தன் கண்ணை மூடி தன்னையே ஒரு முறை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சுந்தர் மெல்ல உள்ளே நுழைந்து அவள் தோளில் கை வைத்தான்..
சட்டென அவன் கையைத் தட்டிவிட்டவள் “வேணாம்.. என்னை தொடாதீங்க.. ஏற்கனவே நீங்க என்னை பார்த்ததுக்கே உங்க வாழ்க்கையே அழிஞ்சு போச்சு.. நான் ஒரு துரதிஷ்டசாலி.. எனக்கு யார் அன்பு காட்டினாலும் அவங்க அழிஞ்சு போயிடுவாங்க.. அவங்களுக்கு அவமானமும் கஷ்டமும் மட்டும் தான் மிஞ்சும்.. வேண்டாம்.. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் போதும்.. இனிமே நான் உங்க வாழ்க்கையில இருக்க மாட்டேன்.. இருந்தேன்னா உங்க வாழ்க்கை அழிஞ்சு போயிடும்.. இன்னும் உங்க ஃபிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் நீங்க அவமானப்படவேண்டியதா இருக்கும்.. நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம்.. உடனே டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம்”
அவள் இடியை இறக்க சுந்தர் அப்படியே கையை ஓங்கி அவளை அடிக்கவே போய் விட்டான்..
“ஏய்இஇஇஇ.. டிவோர்ஸ் கிவோர்ஸ்னு பேசினே.. அடிச்சு கொன்னுடுவேன்டி உன்னை.. என்ன பேச்சுடி பேசுற..? நீ இல்லைன்னா செத்துருவேன்டி நானு.. கல்யாணம் ஆன அன்னைக்கு பேசற பேச்சாடீ இது..? காலையில கோவில்ல கல்யாணம் பண்ணி ரெஜிஸ்ட்ரேஷன் நடந்திருக்கு… சாயந்திரமே விவாகரத்து பத்தி பேசற ஒரே பொண்டாட்டி நீயா தான்டி இருக்க முடியும்..”
சுந்தர் தன்னை மறந்து கோவத்தின் பிடியில் கத்தினான்..
தொடரும்..
ஹாய்.. ஃப்ரெண்ட்ஸ் ❤️❤️❤️❤️ கமெண்ட்ஸ் போட மறக்காதீங்க..!! என் கதைகளுக்கு சப்ஸ்க்ரைப்
பண்ணுங்க.. உடனே வாசிக்க…
உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி