Episode – 10
சொர்ணா மயங்கி விழவும், தாங்கிப் பிடித்தவன், “மறுபடியும் மயக்கமா?, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பயப்பிடுற ஆள் போல. பேச்சு மட்டும் தான் ஜான்சி ராணி போல. ஓஹோ…. அம்மணி ஐயர் வீட்டுப் பொண்ணு இல்லை. அதான் இப்படி தயிர் சாதம் மயங்கி விழுந்து வைக்குது.” என முணு முணுத்தவன்,
“இப்படியே வெளில தூக்கிட்டுப் போனா…. நமக்கு தான் ஆபத்து. என்னோட பிரஸ்ட்டீஜ் பாதிக்கும். யாராச்சும் பார்த்தா…. அடுத்த ஹெட் லைன் இது தான். இவ கண் முழிக்கும் வரைக்கும் இங்கயே இருக்கிற ரூம்ல அவ இருக்கட்டும்.
நானும் இங்கயே இருப்பம். முழிடி அப்போ இருக்கு உனக்கு.” என முடிவு எடுத்தவன்,
அவளை அங்கிருந்த ஓய்வு அறையில் படுக்க வைத்து விட்டு, அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தனது லேப்பில் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
சுமார் அரை மணி நேரம் கழித்து, சொர்ணா கண் விழித்து அசைய ஆரம்பிக்க,
அவளை நோக்கி ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.
மெதுவாக கண் விழித்த சொர்ணா, அப்போது தான் இருக்கும் நிலை அறிந்து, பட் டென எழுந்து அமர்ந்து கொண்டாள்.
சுற்றி வர ஒரு முறை பார்த்தவள்,
“நான் மயங்கி விழுந்தன், அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?” என கேட்க,
“ஒண்ணும் ஆகல, உயிரோட தான் இருக்காய். வழக்கம் போல மயங்கி விழுந்திட் டாய். என்ன செய்ய தலை விதின்னு தூக்கிக் கொண்டு வந்து போட்டு இருக்கேன்.” என வாயை சுளித்த படி கூறியவன், தொடர்ந்தும் வேலை செய்ய,
அவனை வெறித்துப் பார்த்து விட்டு,
“என்ன தைரியம் இருந்தா என்ன தொட்டுத் தூக்கி இருப்பீங்க?” என சீறினாள்.
அவளது சீறலில் ஒரு நொடி, புருவம் சுருக்கி விரித்தவன்,
அடுத்த நொடி, செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, எழுந்து அவள் அருகே வந்தான்.
அவளோ, அவன் அருகில் வரவும், தனது பலவீனத்தை காட்டாது பட்டென எழும்பி நின்றாள்.
சொர்ணாவை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,
“எப்படி தூக்கலாம்ணு தானே கேட்டாய்?, இதோ இப்படித் தான்டி.” என கூறியபடி,
அடுத்த நொடி அவளைக் கைகளில் அதிரடியாக தூக்கிக் கொண்டான்.
அவன் அப்படி தூக்கக் கூடும் என எதிர் பார்க்காதவள்,
“என்ன பண்றீங்க?, சே…. சே…. முதல்ல என்ன கீழ விடுங்க.” என அவனின் கைகளில் இருந்து துள்ள,
அவனோ, மேலும் பலமாக அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,
“என்கிட்ட பேசும் போது பார்த்து யோசிச்சுப் பேசணும்ணு சொல்றது இதுக்கு தான். வீணா வாய கொடுத்தா அதனோட விளைவுகள் இப்படி தான் இருக்கும். புரியுதா?” என கேட்டு இன்னும் அவளது கைகளில் அழுத்தம் கொடுக்க,
ஆணின் அதிகார தொடுகையில் வியர்த்து விறு விறுத்துப் போனாள் சொர்ணா.
“ப்ளீஸ் இறக்கி விடுங்க சார்….” என வேறு வழி இல்லாது அவள் கெஞ்ச,
அவளைத் தூக்கி அப்படியே கட்டிலில் எறிந்தவன்,
“அந்த பயம் இருக்கட்டும். ஒழுங்கா எழும்பி மீதி வேலையை முடிச்சக் கொடுத்திட்டுப் போ. சும்மா உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.” என கூறியவன்,
கதவை அடித்து சாற்றி விட்டு, செல்ல, கண் கலங்கிப் போய் அமர்ந்து இருந்தவள்,
அவன் கை தொட்ட இடங்களை அழுந்த தேய்த்தாள்.
முதன் முறை ஒரு அந்நிய ஆணின் இறுகிய தொடுகை அவளை என்னவோ செய்வது போல் இருக்க,
மீண்டும் மீண்டும் அழுந்த தேய்த்தவள்,
வாய்க்குள் ஆரண்யனை திட்டிய படியே,
உடனே சென்று வாஷ் ரூமில் முகத்தையும், கைகளையும் தேய்த்து கழுவி விட்டு வந்து அமர,
அவளது போனில் மீண்டும் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.
“அச்சோ, அப்பா மறுபடியும் தேட ஆரம்பிச்சு இருப்பார்.” என முணு முணுத்து விட்டு,
“அப்பா, இன்னும் வேலை முடியல, வர கொஞ்சம் லேட் ஆகும். என்னோட பிரன்ட் அருணாவும் கூட இருக்கா. நீங்க யோசிக்காம சாப்பிட்டு தூங்குங்க.” என மெசேஜ் ஒன்றை அனுப்பி விட்டு எழுந்து வெளியே சென்றாள்.
அவளது மனம் இருக்கும் நிலைக்கு, தந்தையுடன் போன் பேசினால், முற்றிலும் உடைந்து விடுவாள் என தெரிந்து தான் அவள் மெசேஜ் பண்ணி இருந்தாள்.
அவள் எண்ணியது போலவே, அடுத்த நொடி அவளின் தந்தை,
“ஓகேடாம்மா சொர்ணா. எனக்கு பசிக்கல. நீ வந்த பிறகு சேர்ந்து சாப்பிடலாம். நீ கவனமா வாம்மா. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வரப் பாரு.” என மெசேஜ்ஜில் கூறி இருக்க,
ஒரு பெரு மூச்சுடன் அந்த மெசேஜ்ஜை படித்து முடித்தவள்,
“சே…. ஒருத்தனோட சுயநலத்துக்காக எத்தன பேர் பாதிக்கப்படுறாங்க. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத சாடிஸ்ட்.” என திட்டிக் கொண்டவள்,
விறு விறுவென வெளியே சென்று, அவனின் முன்பாக நின்று,
“சார், என்னால இதுக்கு மேல லேட்டா வீட்டுக்கு போக முடியாது. அதனால, இந்த வேலைய இதுக்கு மேல செய்ய முடியாது. நான் வீட்ட போகணும்.” என பட படவென கூறி முடித்து விட்டு, ஆரண்யனைப் பார்க்க,
அவனோ, தனது கதிரையில் இருந்து எழும்பி, அவளின் முன்பாக வந்து நின்று,
“மேடம், கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க. நீங்க இருக்க வேண்டிய இடம் இது இல்லை அது. என்னோட சீட்ல உட்காருங்க. ஏன்னா, நீங்க தான் எனக்கே அட்வைஸ் பண்றீங்ளே. நீங்களா போற டைம் வர்ற டைம் டிசைட் பண்றதுன்னா…. நான் எதுக்கு இங்க உட்காரணும்?” என வழக்கம் போல எகத் தாளம் நிரம்பிய குரலில் வினவ,
அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது வாயடைத்துப் போனவள், அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டாள்.
ஆரண்யனோ, அவளின் தவிப்பை ரசித்த படியே,
“அப்பா மேல அவ்வளவு அக்கறை இருக்கிறவ, நான் சொன்னத செய்ய வேண்டியது தானே.” என காலைக் காட்ட,
அவளோ, “என்ன செய்வது?” என புரியாது கைகளைப் பிசைய,
“யோசி…. யோசி…. உனக்கு பத்து நிமிஷம் தான் டைம். ஒன்னு காலுல விழு. இல்ல…. வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போ. அது இரவு பன்னிரண்டு மணின்னாலும் சரி தான். எனக்கு எந்த ஆட்சே பனையும் இல்லை.” என கூறியவனை அதிர்ந்து பார்த்தவள்,
அப்படியே நிற்க, விசில் அடித்தபடி, அங்கிருந்த மேசை யில் அமர்ந்து, காலுக்கு மேலே காலைப் போட்டு ஆட்டிக் கொண்டு இருந்தவனின் கண்களில் கொஞ்சமும் இரக்கம் என்பது இல்லை.
“அடுத்து என்ன செய்வது?” என யோசித்துக் கொண்டு இருந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்க்க,
அதற்குள் நேரம் தன் பாட்டில் ஓடி, பத்து நிமிடங்கள் பத்து வினாடிகள் போல கடந்து இருந்தது.
அதே நேரம், ஆரண்யனின் பொறுமையும் கரையைக் கடந்து இருந்தது. இந்த நேரத்தை விட்டால், அவளை மண்டியிட வைக்க முடியாது என எண்ணிக் கொண்டவன்,
“டைம் அப். உன்னோட நேரம் முடிஞ்சுது. ஒழுங்கா மன்னிப்பு கேள்…. இல்லன்னா இரவு முழுக்க இங்க தங்க வேண்டி இருக்கும்.” என ஒரு விதமான குரலில் கூற,
அதற்கு மேலும் பயம் கொள்ளாது ஒரு பெண்ணால் இருக்க முடியுமா என்ன?
“நான் மன்னிப்பே கேட்கிறேன்.” என கூறியவள்,
கலங்கிய கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவனின் அருகே சென்று குனிய ஆரம்பிக்க,
ஆரண்யனோ, தான் எதிர் பார்த்த தருணம் நெருங்கி வருவதை புளகாங்கிதத்துடன் பார்க்க ஆரம்பித்தான்.
அவள் குனிந்து கையை அவனது காலை நோக்கி கொண்டு சென்ற நேரம்,
படார் என கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் ஆரண்யனின் தந்தை ஆதித்ய சக்கரவர்த்தி.
சொர்ணாக்கு ஆரண்யனின் தந்தையின் ஆதரவு கிடைக்குமா?
ஆரண்யன் தந்தைக்கு கூறப் போகும் பதில் என்ன?
மூவரின் சந்திப்பும் மாற்றங்களை உருவாக்குமா? இல்லை குழப்பங்கள் இன்னும் நீளுமா?