அத்தியாயம் 5
“ஹேய் ஹலோ எழுந்திரு” என்று தன்னுடையக் கரங்களுக்குள் இருந்த மீனுவை பஞ்சு போன்ற அவளுடையக் கன்னத்தை மிருதுவான அவனுடைய கரங்களால் தட்டி எழுப்பினான் விஹான்.
அவளோ மிக அருகில் விஹானை பார்த்ததும் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தவள் இவனுடைய அந்த சிறு தொடுதலுக்கு இமைகளைத் திறக்கவில்லை.
“ஓ காட் என்ன ஆச்சு இந்த கேர்ளுக்கு” என்று தன்னுடைய தலையை இருபுறமும் ஆடியவன் பக்கத்தில் இருந்த டேப்பை திறந்து தண்ணீரை சிறு துளி கையில் ஏந்தியவன் அவளுடைய பளிங்கு முகத்தில் தெளித்தான்.
சற்று நேரமே ஆனாலும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவளோ முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் சட்டென பதிரி எழுந்தாள்.
பதறி எழுந்தவளுக்கோ கால்கள் தடுமாற பிடிமானத்திற்கு விஹானுடைய சட்டை காலரை தன்னுடைய இரு கரங்களாலும் பற்றிக்கொள்ள, ஆண்மகனோ அவளுடைய இழுப்பில் இன்னும் அவளுடைய முகத்தின் அருகே தன்னுடைய முகத்தைக் கொண்டு சென்றான்.
“ என்ன பண்ற?” என்று அவளுடையச் செய்கையில் அவன் அதிர்ந்து கேட்க, அவளும் திடுக்கிட்டவளாய் அவனைப் பார்த்து தங்களுக்குள் இருக்கும் இடைவெளியைக் கண்டவள் சட்டென அவனுடைய காலரை விட்டவள் இரண்டடி அவனை விட்டு தள்ளி நின்று கொண்டாள்.
“ஐயோ சாரிங்க மன்னிச்சிடுங்க சாரி சாரி சாரி” என்று அவளுடைய அந்த ரோஜா பூ இதழ்களோ ‘சாரி மன்னிப்பு’ இந்த இரண்டு வார்த்தையைத் தவிர அவளுடைய உதடுகள் வேறு எந்த வார்த்தையையும் உதிர்க்கவில்லை.
விஹானோ அவளை மேலும் கீழும் பார்த்தவன் சரியான பைத்தியம் போல என்று எண்ணிக் கொண்டு, “ப்ளீஸ் மூவ்” என்று அவளுக்குப் பின்னால் இருக்கும் சிங்க்கை கைகாட்டினான்.
அவள் சற்று தள்ளி நின்று கொள்ள அவனோ வந்த வேலையை செவ்வனே செய்து கொண்டு அவளைத் திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.
இங்கு இவளுக்குத் தான் இதயத் துடிப்பு சீரான வேகத்திற்கு வருவேனா என்று அடம் பிடித்தது.
இவ்வளவு நேரமும் இல்லாமல் இப்பொழுது அவளுடைய அடி வயிறு சில்லென்று இருக்க சற்று குனிந்து தன்னுடைய வயிற்றைப் பார்த்தவளுடைய முகத்திலோ புன்னகை அரும்பியது.
விஹான் அவள் மயக்கம் போட்டு விழுந்திருக்கும் பொழுது அவனுடைய சட்டையில் ஜூஸ் கொட்டி ஈரம் படிந்து இருக்க அந்த ஈரம் இவளுடையத் தாவணியிலும் ஒட்டி இருந்தது.
அதைத் தடவி பார்த்தவள் உடனே தன்னுடைய அறைக்குச் சென்று அந்த தாவணியை மெதுவாக தன் மேனியில் இருந்து அகற்றியவள் அழகாக அதை மடித்து அந்த ஈரம் படிந்திருந்த இடத்தில் முத்தம் வைத்தவள் அதை அப்படியே உள்ளே பத்திரப்படுத்திவிட்டு வேறு ஒரு தாவனையை அணிந்து கொண்டாள்.
வீட்டிற்கு வந்த தனது தங்கையையும் மருமகனையும் ராமச்சந்திரன் குடும்பம் நல்லபடியாக வரவேற்று இத்தனை வருட காலம் அவர்களைப் பிரிந்து இருந்த தங்களுடைய ஏக்கங்களை பூர்த்தி செய்து கொண்டனர் ராமச்சந்திரனின் குடும்பம்.
“சரி சரி வாங்க வாங்க இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே பேசிக்கிட்டு இருக்கிறது உங்களுக்காக அங்க பெரிய விருந்தே காத்துக்கிட்டு இருக்கு நம்ம அப்புறமா பொறுமையாக பேசிக்கலாம்” என்று பாட்டி அனைவரையும் அழைக்க அனைவரும் சாப்பிட சென்றார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் அவரவர்கள் தங்களுடைய அறைக்குச் செல்ல சித்ராவுக்கும் விஹானுக்கும் பிரத்தியேகமாக ரெடி செய்யப்பட்ட அறையில் தங்கச் சொல்ல சித்ராவோ மகனை மட்டும் ஒரு அறையில் தங்க சொல்லியவர் தான் தன் அன்னையுடன் இருப்பதாக சொல்லிவிட்டார்.
இத்தனை ஆண்டு காலம் அவரை விட்டுப் பிரிந்து இருந்ததற்கு இங்கு இருக்கும் சொச்ச நாட்கள் தன்னுடைய அன்னையுடன் இருக்க விருப்பப்பட்டார்.
இங்கு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்த விஹானோ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு என்னதான் தன்னுடைய அன்னைக்காக இங்கு வந்திருந்தாலும் அவனுக்கு இங்கு இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனாலும் வேறு வழி இல்லையே என்று நினைத்தவன் தன்னுடையத் தந்தைக்கு வீடியோ கால் செய்து பேசினான்.
“ஹலோ டேட் என்ன டேட் இது? எனக்கு இங்க இருக்க சுத்தமா பிடிக்கவே இல்லை நான் அங்க வாரேன் நீங்க வந்து உங்க பொண்டாட்டி கூட இருந்துக்கோங்க” என்று தன்னுடைய பிடித்தமின்மையை தன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்க அவரோ,
“என்ன மை சன் அங்க போன பஸ்ட் நாளே உங்க அம்மா உன்னை தனியா விட்டுட்டாளா அவ குடும்பத்தை பார்த்த உடனேயே அப்படியே அவ மூஞ்சில பல்பெரிஞ்சிருக்குமே” என்று சொல்ல இவனோ பல்லை கடித்துக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்க, அவனுடைய செயல்களில் அங்கு நடந்திருப்பதை யூகித்தவர் சிரித்துவிட்டு,
“இங்க பாரு மை சன் எனக்காக அம்மா கூட இருந்துட்டு வாடா அவளைக் கல்யாணம் முடிச்சதுல இருந்தும் இங்க ஆஸ்திரேலியா வந்ததுக்கு அப்புறமும் கூட அவளை ஒரு நாள் கூட நான் பிரிஞ்சி இருந்ததில்லை. அவளும் அப்படித்தான் முதல் தடவையா என்ன விட்டு பிரிஞ்சி ஒரு இடத்துக்கு போகிறாள்னா அது அவளுடைய பிறந்து வீட்டுக்குத் தான்.
அவளுடைய ஏக்கம் எனக்குப் புரியுது ஆனாலும் என்னால அங்கு வர முடியாது அதுக்கு தான் எனக்கு பதிலா உன்னை நான் அனுப்பி இருக்கேன். அப்பாவுக்காக கொஞ்சம் பொறுத்துக்கோடா” என்று தன் மகனிடம் எப்படி பேசினால் அவன் சம்மதிப்பானோ அதற்கு ஏற்றார் போல பேசினார்.
“ஓகே டாட் சரி உங்களுக்காக இங்கே இருக்க நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் பட் ஒன் கண்டிஷன் எனக்கு இங்க எப்போ சுத்தமா இருக்க பிடிக்கலையோ நான் உடனே கிளம்பிடுவேன் அப்புறம் என்ன சொல்ல கூடாது நீங்களாச்சு உங்க பொண்டாட்டி ஆச்சு” என்று சொல்ல அவரும் சரி என தலையை அசைத்தவர் அதன்பிறகு பிசினஸ் சம்பந்தமாக பேசியவர்கள் தங்கள் அழைப்பை துண்டித்து விக்ரம் உறங்க சென்று விட்டார்.
இங்கு விஹானுக்கோ சிறிது நேரம் உறக்கம் இல்லாமல் அந்த அறைக்குள் நடை பயின்று கொண்டிருந்தவன் பின்பு உறக்கத்தை தழுவினான்.
லல்லுவோ தன்னுடைய அறைக்குள் வந்தவள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“இந்த குடும்பத்தை நான் என்னன்னு சொல்றது. பெரிய ஊருல உலகத்துல இல்லாத பொண்ணு, தங்கச்சி, மருமகன். அப்பப்பா இந்த கிழவிக்கும் என்னைப் பெத்தவங்களுக்கும் கொஞ்சம் கூட மூளையே இல்லை. இவங்களுக்காக என்னோட ஒரு நாள் வேஸ்டா போச்சு ச்சை” என்று அவள் உள்ளே புலம்பி கொண்டிருக்க, அவளுக்குக் குடிக்க என பால் டம்ளருடன் உள்ளே வந்த மீனுவோ தங்கையின் புலம்பலைக் கேட்டு புன்னகைத்தவள் அவள் அருகில் வந்து,
“என்னடி லல்லு என்ன பேசிக்கிட்டு இருக்க” என்று கேட்க இவளோ,
“என்ன இப்ப நீ வந்து அவங்களுக்கு சப்போர்ட் பண்ண போறியா” என்று லல்லு கேட்க மீனுவோ,
“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது லல்லு எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவங்க இங்க வந்திருக்காங்க அவங்களைப் போய் இப்படி நீ திட்டிக்கிட்டு இருக்கலாமா?”
“இங்க பாரு மீனு பெத்தவங்களைப் பத்தி கொஞ்சம் கூட யோசிச்சு பாக்காம வீட்டை விட்டு ஓடி போனவங்க அவங்க. இப்போ அவங்க வீட்டுக்கு வராங்கன்னு இவங்க இவ்வளவு ஆர்ப்பாட்டம் செஞ்சு கொண்டாடுறாங்க. நம்ம வீட்ல ஒன்னும் யாரும் காதலுக்கு எதிரி கிடையாது.
அப்படி இருந்தும் இவங்க வீட்ல இருக்கிற யாரைப் பத்தியும் யோசிக்காமல் போயிட்டாங்க.
இப்போ இவங்க வந்ததுனால இங்க இருக்குறவங்க தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுறாங்க இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கடுப்பா இருக்கு” என்றால் லல்லு.
மீனுவோ, “இங்க பாரு பலசெல்லாம் பேசி இப்ப என்ன செய்யுறது சொல்லு அதுக்காக வீட்டை விட்டு ஓடி போனதுனால அவங்க நம்ம பாட்டிக்கு பொண்ணு இல்லன்னு ஆயிருமா இல்ல அவங்களுக்குத் தான் நம்ம பாட்டி அம்மா இல்லன்னு ஆயிடுமா? இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவங்க குடும்பத்தோட கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்னு வந்துருக்காங்க நீ இப்படி இங்க நமக்குள்ள பேசுற மாதிரி அவங்க போற வரைக்கும் அவங்க முன்னாடி மட்டும் இப்படி பேசிறாத லல்லு பாவம் ரொம்ப கஷ்டப்படுவாங்க” என்று சொல்ல லல்லுவோ பல்லைக் கடித்துக் கொண்டு வந்தவள்,
“இங்க பாரு மீனு நீ எப்படி வேணா இருந்துக்கோ என்ன அப்படி இரு இப்படி இருன்னு சொல்லாத இதுக்கப்புறம் நான் எதுக்கு அவங்க கிட்ட பேச போறேன் இன்னிக்கு ஒரு நாள் நான் அவங்களுக்காக இங்க வீட்ல இருந்ததே என்னோட டைம் வேஸ்ட்டா நினைச்சுகிட்டு இருக்கேன்.
இதுக்கப்புறம் அவங்கள நான் மீட் பண்ணா பாக்கலாம் சரியா” என்றாள் லல்லு.
லல்லு பேஷன் டிசைனிங் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருப்பதுடன் அவளுக்கென சிறிய பொட்டிக் ஒன்றை ரெடி செய்து தன்னுடைய முழு நேரப் பொழுதையும் அங்கே கழித்துக் கொண்டிருப்பாள்.
அதனால் அவள் எப்பொழுது வீட்டில் இருப்பாள் என்று யாருக்குமே தெரியாது.
வீட்டிற்கு வந்தால் பார்த்துக் கொள்வார்கள் அவ்வளவே.