தேவசூரன் அவனது கோபம் தீரும் வரை எதிரில் இருந்தவனை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான். அவன் இங்கு அடிப்பதை வீடியோவில் பார்த்து ஒரு ஜீவன் மகிழ்ச்சி அடைந்தது. பின்னர் அந்த ஜீவனிடம் உடனே கிளம்பி இங்கே வரக் கூறினான். அதுவும் சரி என்று தேவசூரனின் இடத்திற்கு வர புறப்பட்டது.
போலீஸார் முரளியை முழுமூச்சாகத் தேடிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவன் எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் தேடுவதை நிறுத்தவே இல்லை. அவர்களது வேலையை செய்து கொண்டு இருந்தனர். தர்மராஜ் அடிக்கடி அவர்களுக்கு கால் பண்ணி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்டவாறு இருந்தார்.
தேவசூரனின் அரண்மனையின் பின்னால் இருந்த வழி யாருக்கும் தெரியாது. அதன் வழியாக ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கி இரகசிய வழியில் அந்த இருட்டான அறைக்குள் வந்தது.
தேவசூரன், “வைஷ்ணவி….” என்றான். ஆம் அந்த உருவம் வைஷ்ணவி. அவன் பெயரைச் சொன்னதும் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் வைஷ்ணவி. அவனது நெஞ்சில் சாய்ந்து அழுதாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவளை விலக்கியவன். கட்டிப் போட்டவனைப் பார்த்தான்.
“என்ன உன்னை எதுக்கு இப்படி கட்டிப் போட்டு சித்ரவதை செய்தேன்னு உனக்கு புரியலைல… உனக்கு அதுக்கான காரணத்தை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை…” என்றான். சற்று முன்னர் வைஷ்ணவியைப் பார்த்து இறுக்கம் தளர்ந்திருந்த முகம் இப்போது மறுபடியும் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.
“என்னை விட்டுடு…. ப்ளீஸ் என்னை விட்டுடு…” என்றான்.
“உன்னை விடவா இங்க தூக்கிட்டு வந்தேன்… என்ன முரளி உன்னைக் காணோம்னு உன்னோட அப்பாவோட ஆளுங்க இந்த மொத்த ஊட்டியையே புரட்டிப் போட்டு தேடினாங்க… இப்போ போலீஸ் உன்னை தேடுது… கண்டிப்பா நீ அவங்ககிட்ட கிடைப்பா உயிரோட இல்லை… பொணமாத்தான் கிடைப்பா…” என்ற தேவசூரனின் விழிகள் சிவந்தது.
அங்கே மேசையில் இருந்த கத்தியை எடுத்தான். கத்தியின் பளபளப்பே சொன்னது அதன் கூர்மையை. கத்தியை கையால் சுற்றிக் கொண்ட வந்தவன் முரளி எதிர்பார்க்காத நேரம் அவனின் தொடையைக் கிழித்தான். முரளி அலறினான். அவனின் அலறல் தேவசூரனை எதுவும் செய்யவில்லை. அவனது விருப்பப்படி முரளியின் உடலில் கத்தியால் கோடுகளை போட்டான். முரளியால் வலி தாங்க முடியவில்லை.
தேவசூரன் தனது ஆளுக்கு கண்களைக் காட்ட, அவன் சென்று மிளகாய் தூளை எடுத்து வந்தான். அதை வைஷ்ணவியிடம் நீட்டினான் தேவசூரன். அதைப் பார்த்தவள் தனது இரண்டு கைகளாலும் தட்டை வாங்கியவள், அதிலிருந்த மிளகாய் தூளை முரளியின் மீது வீசினாள். தேவசூரன் கத்தியால் போட்ட கோடுகளில் இருந்து இரத்தம் வந்து கொண்டிருக்கும் போது, வைஷ்ணவி வீசிய மிளகாய் தூள் அந்த கோடுகளில் பட்டதும் முரளி அலற ஆரம்பித்தான். அதன் எரிச்சலை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் துடிப்பதைப் பார்த்து அங்கிருந்த எல்லோரும் சிரித்தனர். தேவசூரனின் ஆள் ஒருவன் அவன் துடிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான்.
தனது துப்பாக்கியை எடுத்த தேவசூரன், அதை வைஷ்ணவி கையில் கொடுத்தான். அதை வாங்கிய வைஷ்ணவி, முரளியை குறி வைத்தாள். அவளது கையில் இருந்த துப்பாக்கி நடுங்கியது. உடனே அவளது கையில் இருந்த துப்பாக்கியை தேவசூரனும் சேர்ந்து பிடித்தான். அவனைத் திரும்பிப் பார்த்தாள் வைஷ்ணவி.
“வைஷூ அவனைப் பாரு…” என்றான். அவளும் முரளியை பார்த்தாள். துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு முரளியின் இதயத்தை துளைத்துச் சென்றது. மறுபடியும் ஒரு குண்டு முரளியின் உடலை துளைத்துச் சென்றது. முரளியின் உயிரும் அவனது உடலை விட்டுப் பிரிந்தது. வைஷ்ணவியின் உடல் நடுங்கியது. அதைப் பார்த்த தேவசூரன் அவளை அணைத்துக் கொண்டு, அவள் வந்த வழியால் வெளியே அழைத்து வந்து காரில் இருந்த ஒருவருடன் பார்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தான். மீண்டும் இருட்டறைக்குள் வந்தவன் முரளியின் உடலை என்ன செய்வது என்று யோசித்தான்.
அமிர்தாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்த அகமித்ரா அவரைப் பார்க்கச் சென்றாள்.
“ஆமாடி அம்மாக்கு காய்ச்சல் மித்து.. இப்போ கொஞ்சம் பரவாயில்லை…”
“பிளட் செக் பண்ணதா அமிர்தா…?”
“ஆமா மித்து… செக் பண்ணினோம்.. நார்மல் காய்ச்சல்னு சொன்னாங்க..” என்று சொல்லும் போதே அமிர்தாவின் அம்மா அங்கே வந்தார்.
“வாம்மா மித்ரா… என்ன இந்தப் பக்கமே வர்றதே இல்லை…”
“கொஞ்சம் வேலை அம்மா… உங்களுக்கு காய்ச்சல்னு சொன்னா அமிர்தா… அதுதான் உங்களை பார்த்திட்டு போகலாம்னு வந்தேன் அம்மா….” என்று அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தவள், மாலையானதும் அவர்களிடம், “சரி அமிர்தா இருட்டாகும் முதல் நான் போயிட்டு வர்றேன்…”
“சாப்பிட்டு போலாமே மித்து நான் தம்பிகூட உன்னை அனுப்பி வைக்கிறேன்…”
“இல்லை பரவாயில்லை அமிர்தா இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிட்டு போறேன்… இப்போ லேட்டாயிடுச்சி நான் போயிட்டு வர்றேன் அம்மா… வர்றேன் அமிர்தா…” என்றவள் அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
அகமித்ரா வழமையாக செல்லும் வழிதான் என்றாலும், மழை இருட்டினால் அதிக இருளாக இருந்தது. அவளுக்கு பயமாக இருந்தது. இடையிடேயே மின்னல் வேறு வெட்டியது. லேசான குளிர் காற்று வீச ஆரம்பித்தது. உடனே சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
தேவசூரன் இருட்டு அறையை க்ளீன் பண்ணச் சொல்லிவிட்டு, முரளியின் உடலை எடுத்து தனது ஜீப்பில் வைத்தான். பின்னர் தனது ஆட்கள் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு முரளியின் வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அருகில் வந்து ஜீப்பை நிறுத்தினான். ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை என்பதை பார்த்த பிறகு ஜீப்பில் இருந்து, கீழே இறங்கினான். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனது ஆட்களுக்கு சைகை செய்தான். அவர்கள் முரளியின் உடலை எடுத்து வந்து கீழே வைத்தனர். அப்போது மின்னல் வெட்டியது. தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த அகமித்ராவின் கண்களுக்கு ஜீப் வண்டி நிற்பதும், அதன் அருகில் ஆட்கள் நிற்பதும் தெரிந்தது. ஆனால் யார் நிற்கிறார்கள் என்று அடையாளம் தெரியவில்லை. இன்னும் சற்று வேகமாக நடந்து வந்தாள். தேவசூரனின் ஆட்கள் முரளியின் கழுத்தில் கயிற்றை மாட்டினார்கள்.
தேவசூரன் அவனின் கழுத்தில் நான் ஒரு பொறுக்கி என்ற வசனம் எழுதப்பட்ட அட்டையை மாட்டி விட்டு, முரளியின் உடலை அந்த மரத்தின் கிளையில் கட்டி விட்டான். பார்ப்பதற்கு முரளி தூக்கு மாட்டியது போல இருந்தது. சரியாக தேவசூரன் முரளியின் உடலை மரத்தில் கட்டும் போது மின்னல் மின்னியது. அப்போது ஒரு அலறல் சத்தம் கேட்டது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Ayyayyo parthutta