பனிச்சாரல் -3

4.6
(11)

பனிச்சாரல்-3

“வில் யூ ஷட் அப்…” என்ற சித்தார்த்தின் குரலில் அதிர்ந்துப் போன மகிழினி படக்கென்று ஃபோனை வைத்து விட்டாள்.

 ‘ச்சே! என்ன வார்த்தைகளைச் சொல்லிட்டா.’ என்று எண்ணிய சித்தார்த்திற்கு அவமானமாக இருந்தது. அங்கிருந்தவர்களை நிமிர்ந்துப் பார்க்கச் சங்கடப்பட்டவன், முயன்று தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

சாஹித்யாவும் அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தாள்.

அவன் அமைதியாக ஃபோனை அவளிடம் நீட்ட. நடுக்கத்துடன் அதை வாங்கினாள்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பித் தவிக்க.

அவர்களுக்கு உதவுவது போல அங்கு வந்து சேர்ந்தாள் ஸ்வேதா.

“என்ன ஃபங்ஷன் வச்சுக்கிட்டு ரிலாக்ஸா பேசிட்டு இருக்கீங்க. இன்னும் ரெடியாகவில்லையா?” என்று வினவியவள், அங்கிருந்த எல்லோரையும் பார்த்தாள்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட சாந்தினி, “நாங்க எல்லாரும் ரெடியாத் தான் இருக்கோம்.நீ இன்னும் தயாராகலையா? மூஞ்சுக்கு ஏதேதோ பெயிண்ட் போடுவியே! ஒன்னையும் காணோமே.” என்றார்.

“பாட்டி! கிண்டல் பண்றீங்களா?” என்று சிணுங்கினாள் ஸ்வேதா.

“இல்லைமா! மேக்கப் போடக் காணுமேன்னு தான் கேட்டேன்.”

“பாட்டி! பியூட்டிஷன் வர்றாங்க. எனக்கு, ரூபாவுக்கு, அப்புறம் மகி, சஹி நாலு பேருக்குமே அத்தை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ரூபாவோட ட்ரெஸ் இன்னும் வரலையேன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் பாட்டி.” என்று அவள் வந்ததற்கான காரணத்தைச் சொன்னாள்.

“ சஹிட்ட குடுத்து விடுறேன்.” என்றார் சாந்தினி.

“ மகி எங்க அவளையும் வரச் சொல்லுங்க பாட்டி.” என்றாள் ஸ்வேதா.

“அவ என்னைக்கு மேக்கப் போட்டுருக்கா?”என்று ஸ்வேதாவை ஆழப் பார்த்துக் கொண்டே வினவினார் பத்மா.

“அதில்லை பெரியம்மா! அவ வரலைன்னா அத்தை வருத்தப்படுவாங்க.” என்று குரலைத் தழைத்துக் கூறினாள் ஸ்வேதா.

அதுவரை அங்குப் பார்வையாளராக இருந்த சித்தார்த்,”அண்ணி! அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றான்.

“ ஓகே சித்து!” என்ற ஸ்வேதா, சாஹித்யாவைப் பார்த்து, “சஹி! சீக்கிரமா வா.” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

சித்தார்த்தும் அங்கிருந்து நகர.

“மாப்பிள்ளை!” என்று தயக்கமாக அழைத்தார் பத்மா.

“பயப்படாதீங்க அத்தை! உங்க பொண்ணு ஓடிப் போனதை யார் கிட்டேயும் சொல்லமாட்டேன்.” என்றுக் கூற.

அடிபட்டப் பார்வைப் பார்த்தார் பத்மா.

வசந்தியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

இருவரையும் பார்த்தவன், ‘ ப்ச்! இவங்க பொண்ணு பண்ண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க. தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டுட்டோமே!’ என்று எண்ணியவன், லேசாகத் தலையசைத்து,” சாரி அத்தை!” என்று மன்னிப்புக் கேட்டான்.

“பரவாயில்லை மாப்பிள்ளை!” என்றார் பத்மா.

எப்பொழுதும் கம்பீரமாகவே பார்த்துப் பழகிய பெண்மணியை, இவ்வாறு பார்கக அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.

‘எல்லாம் அந்த அவசரக்குடுக்கையால வந்தது. அவளுக்கு அவ சந்தோஷம் மட்டும் தான் முக்கியம். மத்த யாரும் அவளுக்கு முக்கியம் கிடையாது. நான் திட்டினதுக் கூட அவளுக்கு உரைச்சிருக்காது. தூசு போலத் தட்டி விட்டு அவ சந்தோஷமா தான் இருப்பா. அவளுக்கு நான் எல்லாம் ஒரு பொருட்டேக் கிடையாது. ’என்று மனதிற்குள் மகிழினியை திட்டியவனின் நெஞ்சம் தகித்தது. அங்கே இருப்பது மூச்சு முட்டுவதுப் போல இருக்க, விறுவிறுவென வெளியேறினான்.

***************************

சித்தார்த் நினைத்ததுப் போலத் தான் நடந்தது.

சித்தார்த் திட்டியதும், பதறிய மகிழினி போனைக் கட் பண்ணியது மட்டும் அல்லாமல், ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, மீண்டும் இயற்கை காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தாள்.

பிறகு அவளது இருக்கைக்குப் பக்கத்து இருக்கைக்கு ஆட்கள் வர, அவர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

கோவை செல்லும் வரை, வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

ஜங்ஷனில் இறங்கியதும் தான், தன் தோழிக்குக் கோயம்புத்தூருக்கு வருவதை இன்னும் தெரிவிக்கவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது.

“ ஓ காட்! அந்த மிலிட்டரி ஃபோன் பண்ணதும், ஸ்விட்ச் ஆஃப் செய்து போட்டதும் இல்லாமல் அவனை நினைக்கக் கூடாதுன்னு நினைச்சு முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேனே.”என்று தலையில் அடித்துக் கொண்டவள் தனது தோழிக்கு அழைத்தாள் ‌

ரிங் போய் கொண்டே இருந்தது. அந்தப் பக்கம் ஃபோன் எடுக்கவில்லை.

‘இந்த ரேகாவை நம்பி கிளம்பி வந்துட்டோம். ஃபோனை எடுக்க மாட்டேங்குறாளே. ஒருவேளை தூங்கிட்டு இருக்காளோ. இருந்தாலும் இருக்கும். சரி வீட்டுக்குப் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.’ என்று எண்ணியவளின் முகத்தில் லேசாகப் பதற்றம் எட்டிப் பார்த்தது.

கோயம்புத்தூர் அவள் பழகிய ஊர். அதனால் பயமின்றி தன் தோழியின் வீடு இருக்கும் சிவானந்த காலனியை நோக்கிச் சென்றாள். மதிய உணவை ட்ரெயினிலே முடித்திருந்தாள்.

 தோழியின் வீட்டில் இறங்கியவள், காலிங் பெல்லை அழுத்த. கதவு திறக்கவில்லை.

கதவு திறக்கவில்லை என்றதும் மீண்டும் தன் தோழிக்கு அழைத்தாள் மகிழினி.

“ஹலோ!” என்று தூக்க கலக்க குரலில் கூறினாள் ரேகா.

“எங்கடி இருக்க எருமை? எத்தனை தடவை ஃபோன் பண்ணுவது?” என்று மகிழினி படபடக்க.

“ நான் காஷ்மீர்ல இருக்கேன்டி. ஒரே குளிரு.”என்றவளின் குரல் குளிரால் நடுங்கியது.

“என்னது! காஷ்மீர்ல இருக்கியா?” என்ற மகிழினியின் முகம் வாடியது.

“ஆமாம் டி! ஹனிமூனுக்கு வந்திருக்கிறேன்.” என்ற ரேகாவின் குரலில் இப்பொழுது வெட்கம் எட்டிப் பார்த்தது.

“கல்யாணம் ஆயிடுச்சா?” என்று அதிர்ச்சியாக மகிழினி வினவ.

“கல்யாணமா? எனக்கா? அதுவும் உன் கிட்ட சொல்லாமலா? நெவர்?” என்று தெளிவாகக் குழப்பினாள் ரேகா.

“என்னடி உளர்ற? உன் வீட்டு வாசல்ல நான் நிற்கிறேன்.” என்றவளுக்கு அழுகை வராது ஒன்றுதான் குறை.

‘ எதையுமே யோசிச்சு செய்ய மாட்டீயா? எப்ப பார்த்தாலும் அவசரம் தான். எதையும் திட்டமிட்டு செய்யணும். இல்லைன்னா பிரச்சனை வரும்.’என்று அடக்கப்பட்ட கோபத்துடன் உதிர்த்தவனின் வார்த்தைகள் காதுக்கருகே ஒலித்தது.

தலையைக் குலுக்கி அந்தக் குரலை அலட்சியப்படுத்தியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

 மகிழினியை காப்பது போல் அந்த வீட்டின் கதவு திறந்து, “யாரு?” என்று முகத்தைச் சுருக்கியபடியே வினவினார் அந்த வீட்டின் பெண்மணி. மதிய நேர தூக்கம் தடைப்பட்டதன் விளைவு. அவரது முகத்தில் லேசான எரிச்சல்.

“ஹாய் ஆன்ட்டி!” என்றாள் மகிழினி.

வெளியே நின்றவளை பார்த்ததும் முகம் ஆச்சரியமாக மாற,“ ஹேய் மகி! நீ தானே.” என்று வினவினார் சுமதி.

“ஆமாம் ஆன்ட்டி!”என்றவளோ, ‘ரேகா இல்லைன்னா என்ன? அது தான் ஆன்ட்டி இருக்காங்களே. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் வரை இங்கேயே தங்கிக்க வேண்டியது தான்.’என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

“உள்ள வா மகி! அடையாளமே தெரியலை. பார்த்து அஞ்சாறு வருஷம் இருக்கும் இல்ல. ஸ்கூல் பைனல் படிக்கும்போது பார்த்தது.”

“ ஆமாம் ஆன்ட்டி.”

“ ஆள் தான் அடையாளமே தெரியாமல் மாறிட்டேன்னு பார்த்தா, உன்னோட துறுதுறுப்புக் கூட இப்ப மாறிடுச்சு. சின்ன வயசுல வாயே ஓயாமல் பேசிட்டு இருப்ப. இப்ப அமைதியா இருக்குற.” என்றார் சுமதி.

“அப்படி எல்லாம் இல்லை ஆன்ட்டி. அப்போ எப்படி இருந்தேனோ, அப்படியே தான் இருக்கேன். நான் அமைதியா மாறிட்டா இந்த உலகம் தாங்குமா? நான் ரேகாவுக்கு ஃபோன் பண்ணேன். அவ எங்கோ டூர் போயிருக்குறதா சொன்னா. அதான் கொஞ்சம் டென்ஷனாயிடுச்சு.”

“ டூரா? அடுத்த வாரம் தான் போறோம்‌. அந்தக் கழுதை, இங்கே தான் தூங்கிட்டு இருக்கா.” என்று மூடியிருந்த அறையைக் காண்பிக்க.

“இங்கே தான் இருக்காளா? அப்புறம் ஏன் அப்படி சொன்னா?” என்று குழப்பத்துடன் வினவினாள் மகிழினி.

“ஏன் அவ இருந்தா தான் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பியா? சின்ன வயசுல இங்கே தானே சுத்திட்டு இருப்ப”

“அதையெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் ஆன்ட்டி. ரேகாவும் படிக்கிறதுக்காக வெளிநாட்டுக்கு போயிட்டா. நாங்களும் சென்னைக்கு போயிட்டோம்.”

“ ஆமாம்! சரி இப்போதாவது வந்தியே. இரண்டு, மூன்று நாளாவது இருந்துட்டு தான் போகணும். நீ போய் அவளை எழுப்பு. ரெண்டு பேருக்கும் காஃபி போட்டுக் கொண்டுட்டு வர்றேன்.” என்றவர் கிச்சன் பக்கம் செல்ல.

ரேகாவின் அறைக்குச் சென்றவளது மனமோ சஞ்சலத்தில் ஆழ்ந்தது.

‘ஒரு வாரமாவது இங்கே தங்கிட்டு போகணும்னு நினைச்சோமே. அப்போது தான் அந்த ஹிட்லருக்கு என் உணர்வு புரியும். என் விருப்பம் இல்லாமல் எந்த வித முயற்சி செய்யப் பயப்படணும். இப்படி உடனே போனால் என் கோபத்திற்கு மதிப்பே இருக்காது. ஆனால் இவர்கள் டூருக்கு செல்கிறார்களே. வேற எங்க தங்கறது?’ என்று மனதிற்குள் மகிழினி குழம்பிக் கொண்டிருக்க,

ரேகாவோ அயர்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவளைப் பார்த்ததும், ஹனிமூனில் இருப்பதாகக் கூறி தன்னை கலங்கடித்தது நினைவுக்கு வர. “அடியே எருமை! என்னை டென்ஷனாக்கிட்டு நிம்மதியா தூங்கிட்டு இருக்கியா?”டேபிளிலிருந்து தண்ணீர் ஜக்கை பார்த்தவள்,’அவள்மேல் ஊற்றுவோமா?’ என்று யோசிக்க. மெத்தை வீணாகிவிடும் என்று எண்ணி அதைத் தவிர்த்தாள்.

அவளது காலுக்கு அருகில் கீழே விழுந்து கிடந்த தலையணையை எடுத்து அவளை மொத்தினாள்.

“ஐயோ ஐஸ் கட்டி!” என்று உளறிக்கொண்டிருந்தாள் ரேகா.

“ஹேய் எருமை! எழுந்திருக்கிறியா இல்லையா?” என்று மகிழினி அவளை உலுக்க.

தூக்கத்திலிருந்து கண் விழித்தவள்,” மகி டார்லி! நீயும் காஷ்மீருக்கு வந்துட்டியா… மிஸ் யூ டியர்.” என்று அவளது கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுக்க முயல.

 பதறி விலகிய மகிழினியோ, “எருமை என்னடி பண்ற? முதல்ல கனவுல இருந்து வெளியில வா? நான்சென்ஸ்! ” என்றவள், தன் கன்னத்தில் கை வைத்து மறைத்துக் கொண்டாள்.

“கனவா? அப்போ காஷ்மீருக்கு நீ வரலையா? நான் மட்டும் தான் போயிருக்கேனா? ஐ மிஸ் யூ” என்று ரேகா புலம்ப.

“அடிப்பாவி! என்னை விட்டுட்டு இவ்வளவு நாளா வெளிநாட்டுல இருந்துட்டு பேசுற பேச்ச பாரு.” என்றவள், அவளை நன்கு உலுக்க

கனவிலிருந்து விழித்தவள், கண்களைக் கசக்கி, தன் முன் இருப்பவளை உத்துப் பார்த்தாள்.

“ மகி! எப்ப வந்த?” என்று ஆச்சரியமாக வினவினாள்.

“ நான் இந்தக் கோயம்புத்தூர்ல கால் வச்சு இரண்டு மணி நேரம் ஆகுது. ஆமாம் நீ எப்போ காஷ்மீர்ல இருந்து வந்த?”

“ஹேய் அதெல்லாம் கனவா! நிஜம் போலவே இருந்துச்சே! எருமை நல்ல நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டே! ச்சே! கனவுல கூட நினைச்சதுப் போல இருக்க முடியலை.” என்று ரேகா புலம்பிக் கொண்டிருக்க.

“என்னடி ஆச்சு உனக்கு? ஏன் உளறிட்டு இருக்க? ஹனிமூனுக்கு போற மாதிரியெல்லாம் கனவு கண்டுட்டு இருக்கியா? லவ்வா? யாரடி அது? என்கிட்டயே மறைக்கிற?” என்று மகிழினி படபடவென வினவ.

 “உனக்குத் தெரியாததா? எல்லாம் நம்ம ஆளு மகேஷ் பாபு தான்.”என்றுக் கூறி வெட்கப்பட.

தலையில் அடித்துக் கொண்டாள் மகிழினி.

“கொஞ்ச நேரத்தில என்ன கதி கலங்க வச்சுட்டத் தெரியுமா? எனக்குத் தெரியாமல் உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு போல. காஷ்மீர்ல இருக்க போல. இவ்வளவு தூரம் வந்துட்டோமே. இனி என்ன பண்றதுன்னு பயந்துட்டேன்.” என்று கூறி சிரித்தாள் மகிழினி.

“ நீ பயந்துட்ட? என்னை நம்ப சொல்றீயா?”

“ப்ச்! பயப்படலை. ஆனால் கொஞ்சம் டென்ஷனாகிட்டேன்.”

“அதெல்லாம் இருக்கட்டும், இன்னைக்கு கேஷ் அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் தானே. அங்க இல்லாமல் இங்கே என்ன பண்ற?” என்று வினவினாள் ரேகா.

“ப்ச்!” என்று அசட்டையாகக் கூறினாள் மகிழினி.

“ ஹேய் மகி! ஏன்டி இப்படி இருக்க? கேஷ் அண்ணா நிச்சயத்தார்த்துல நீ இல்லைன்னா பிரச்சனை வராதா?” என்று அக்கறையாக வினவினாள் ரேகா.

“அதெல்லாம் ஒன்னும் வராது. வந்தாலும் அந்தப் பாசமலர் பார்த்துப்பான்.”

“ யாரை சொல்ற கேஷ் அண்ணனையா?”

“ப்ச்! என் அண்ணனைச் சொல்லலை. அந்த மிலிட்டிரியைத் தான் சொல்றேன்.” என்று எரிச்சலுடன் மகிழினி கூற.

“ நீ மாறவே இல்லை மகி! இன்னும் கேஷ் அண்ணனை நம்ப மாட்டேங்குற. அவரும் உன் மேல அன்பா தான் இருக்கார்.”

“ப்ச்! அதெல்லாம் தெரியும் ரேக்ஸ். ஆனால் அண்ணாவால அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியாது. ஆனால் அந்த நெடுமரத்தால சமாளிக்க முடியும்.”

“அடியே மகி! பிடிக்கலை! பிடிக்கலைன்னு சொல்லிட்டு உன் ஆளுக்கு இத்தனை செல்லப் பேரு வச்சுருக்க. நான் அவரைப் பார்த்தே ஆகணுமே!” என்று கண் சிமிட்டி சிரித்தாள் ரேகா.

“அடியே எருமை! உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற மகிழினி, தோழியை அடிக்க முயல, ரேகாவோ அவள் கையில் சிக்காமல் ஓடினாள்.

அங்கோ மகிழினி சொன்னதைப் போலத்தான் நடந்தது.

பெரும் பிரளயம் நடக்க இருந்ததை, ஒற்றை ஆளாகச் சமாளித்தான் சித்தார்த். ஆனால் அதன் விளைவுகள், பலரின் மனதில் அழுத்தமான வடுவாக பதித்திருந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!