முகவரி அறியா முகிலினமே..! – 2

5
(4)

முகில் 2

விடுமுறை கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தவன் உடனே அன்னையைத் தேடி சமையல் அறைக்குள் புகுந்தான்.

அங்கு ஆதிரனின் அன்னை சிவகாமி பாத்திரங்களை அலசிக்கொண்டிருந்தார். உடனே அவரை பின் இருந்து அனைத்து கொள்ள,

அந்தத் தாய்க்கு தெரியாதா தனது மகனின் ஸ்பரிசம். சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பிப் பாராமல்,

“இப்போ தானே வேலைக்குப் போன அதுக்குள்ள என்னடா வந்துட்டே..” என்று கேட்க,

“அதுவாம்மா… இன்னைல இருந்து ஒரு மாசத்துக்கு எனக்கு லீவு…” என்று பாட்டு பாடுவது போல் ஆதிரன் கூற ஆறு மாத கர்ப்பிணியான ஆதிரனின் அக்கா ராதிகா சமையலறைக்குள் புகுந்த படி

“ஒரு மாசம் லீவு போட்டு என்னடா பண்ணப் போற..?”

“அந்த ஒரு மாசம் எனக்கு பிடிச்ச படி நான் இருக்க போறேன்..”

அவன் கூறுவதைப் பார்த்து இருவரும் அதிர்ந்தபடி,

“என்னடா சொல்ற..?” என்ற

“அச்சோ பயப்படாதீங்க நான் என்னோட போட்டோகிராபியைப் பத்தி தான் பேசினான் பேசினேன் இந்த அழகான நேச்சுரல் உலகத்தை நான் என்னோட கேமராவில் படம் பிடிச்சு ஒரு சூப்பர் போட்டோகிராபராகுறது தான் என்னோட பெரிய கனவு…” என்று கண்களில் கனவு ஜொலிக்க அவன் படம் வரைவது போல காற்றில் கைகளை அசைத்து அதனை ரசித்து கூற ராதிகாவோ அவன் முன் வந்து நின்று

“நீ இப்போ ஒரு மாசத்துக்கு 5 லட்சம் உழைக்கிற அந்த காசை அந்த கேமரா உனக்கு தந்திடுமா..? ஒரு மாசம் சும்மா லீவு போட்டு வர்ற காச கரியாக்காம ஒழுங்கா வேலைக்கு போ..” என்று ஆதிரனை கைநீட்டி மிரட்ட,

“அம்மா ராதிகாவ சும்மா இருக்க சொல்லுங்க எனக்கு ஒரு மாசம் கம்பெனியில லீவு தந்துட்டாங்க இவளை வாய மூடிட்டு அவளோட வேலையை பார்த்துட்டு இருக்க சொல்லுங்க என்னோட விஷயத்தில் தலையிட வேண்டாம்…”

சிவகாமியும் இருவரின் சண்டை பார்த்து,

“அச்சோ ரெண்டு பேரும் சின்னப்பிள்ளை மாதிரி சண்டை போடாதீங்க அதுதான் அவனுக்கு ஒரு மாசம் கம்பெனில லீவு கொடுத்துட்டாங்க தானே நீ சும்மா இரு ராதிகா அவன் ஒரு மாசத்துக்கு போயிட்டு வரட்டும் புள்ள பாவம் ரொம்ப வேலை செஞ்சி கம்பெனிக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்து நம்மள பெருமைப்பட வச்சிருக்கான் இந்த நேரம் விஷ் பண்ணாம பேசிக்கிட்டு இருக்கியே வாப்பா உனக்கு புடிச்ச பால் பாயாசம் செஞ்சு தாரேன் நீ போய் குளிச்சிட்டு வா..” என்று கன்னம் வலித்து முத்தமிட அந்நேரம் அவன் தனது அன்னைக்கு 5 வயது சிறுவன் போலவே தெரிந்தான்.

“ஓகே உன்னோட வக்கேஷன் லீவ என்ஜாய் பண்ணு..”

“ஓஹ் ஷிட் ராதிகா அது வக்கேஷன் இல்ல வெக்கேஷன் ஒழுங்கா சொல்லு பாப்போம்…”

“வெ… லொ.,. லொகேஷன்…”

“ஸ்டாப் இட் நீ ஒண்ணுமே சொல்லத் தேவையில்லை ஆள விட்டா காணும்…” என்று மாடிப்படிகளில் ஏறி பாய்ந்து பறந்து விட்டான் நமது நாயகன் ஆதிரன்.

அவனது நினைவுகள் அனைத்தும் நாளைய பொழுது அவனுடனான ஒன்றாக வேலை புரியும் பிரகாஷின் சொந்த ஊருக்குச் சென்று எவ்வாறு அங்குள்ள இயற்கை காட்சிகளை படம் பிடிப்பது என்று அதிலேயே நினைவுகள் தொக்கி நின்றன.

பிரகாஷ் ஆதிரனுடன் ஒன்றாக வேலை புரியும் மிகவும் நெருங்கிய நண்பன். பிரகாஷுக்கு அவனது ஊரில் நடந்த விடயங்களை அங்குள்ள இயற்கை காட்சிகளை கிராமத்தின் அமைப்பை ஒவ்வொரு முறையும் ஆதிரனுடன் பேசிப் பழகும் போது அதனை சுவாரசியமாக கதை போல கூறுவான்.

அவன் கூறும் விடயங்களை கேட்டு கேட்டு ஒரு கட்டத்துக்கு மேல் ஆதிரனுக்கு அங்கு சென்று அந்த அழகிய இயற்கை கொஞ்சும் எழில்களை படம் பிடித்து வைத்துக் கொள்ள ஆசை.

சிறுவயதில் இருந்து அதிரனுக்கு போட்டோகிராபியில் அவ்வளவு விருப்பம். சிறிய வயதில் இருந்தே அவன் இயற்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அதனை படம் பிடித்து வைப்பது அவனது பொழுதுபோக்கு. அதுவே பின்பு மிகவும் பெரிய கனவாகவும் மாறியது.

ஆதிரன் ஒரு நடுத்தரமான வசதி வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்.

அதனாலேயே ஆதிரன் காலேஜ் படிப்பை முடித்தவுடன் வெளிநாடு சென்று போட்டோகிராபி படிப்பை படிக்கப் போகின்றேன் என்று அடம் பிடிக்க, ஆதிரனின் தந்தை மனோகரன் ராதிகாவின் திருமணத்தை எண்ணி அதற்கு தடா விதித்தார்.

தனது மகன் விரும்பி கேட்கும் ஒன்றை செய்ய முடியவில்லை என்று மனதில் சிறு சோகம் எழுந்தாலும் மகளுக்காக அனைத்தையும் மூடி மறைத்து விட்டு ராதிகாவிற்கு பெரிய இடத்தில் அதிகபட்ச சீர்வரிசை கொடுத்து திருமணம் முடித்து விட்டார்.

மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை புரிபவர் என்பதால் அவர்களது வீட்டில் வீடு வாசல் நகைகள் என ஏகப்பட்ட வரதட்சணை கேட்கத் தொடங்கினர்.

இருந்தும் வரன் சரி வராது வேறு வரன் பார்ப்போம் என்று இருக்க அதற்குள் ராதிகாவும் ராதிகாவுக்கு பேசியிருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை சந்தோஷும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் பிடித்து போய் பேசவும் ஆரம்பித்துவிட்டனர்.

அதன் பின்பு எவ்வாறு இதனை நிறுத்துவது என்பது புரியாமல் மனோகர் கட்டாயத்தின் பேரில் ஊர் முழுக்க கடன்களை வேண்டி மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பப்படி பெரிதாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

இதனால் மனோகரின் குடும்பத்தில் சில கடன் பிரச்சினைகளும் கடன் தொல்லைகளும் ஏற்படத் தொடங்கின.

 நடுத்தர குடும்பம் என்றாலும் இதுவரை கடன் என்றாலே என்ன என்று தெரியாமல் தான் மனோகரன் குடும்பத்தை நடாத்தி வந்தார்.

அவருக்கேற்றாற்போல் சிவகாமியும் பெரிதாக ஆடம்பர செலவுகள் செய்யாமல் சிக்கனமாகவே குழந்தைகளையும் வளர்த்து வேறு தேவைகளையும் நிறைவேற்றி வந்தார்.

இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனோகரன் அனைத்தையும் சமாளித்து வர இவை அனைத்தும் தெரிந்த ராதிகா தனது கணவன் சந்தோஷ் மூலம் அவனின் நண்பனின் கம்பெனியில் வேலைக்கு கேட்டு ஆதிரனுக்கு ஒரு நல்ல வேலையும் எடுத்துக் கொடுத்தார்.

வெப் டிசைனிங் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்க தொடங்கி ஒரு வருடத்திலேயே சிறந்த வெப் டிசைன்களை உருவாக்கத் தொடங்கினான்.

அவனுக்கு இந்த வேலையில் விருப்பம் இல்லாவிட்டாலும் அதனை ஆராய்ந்து படித்து புதுவிதமாக ஒன்றை உருவாக்குவதில் ஒருவித ஆர்வம் துளிர் விட அதனையே பற்றாகக் கொண்டு அவ்வேலையில் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கினான்.

அதனாலேயே தான் இப்போது சிறந்த படைப்புக்களை ஆதிரன் மூலம் கம்பெனியால் வெளியிட்டு அதன் மூலம் பல மில்லியன் லாபங்கள் கிடைத்துள்ளன.

அவனது திறமையினாலேயே அவனுக்கு கம்பெனியில் அளவற்ற நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.

அதில் ஒருவன் தான் பிரகாஷ். அந்த நட்பினாலும் அவன் கூறும் கதைகளை சுவாரஸ்யமாக கேட்பதாலும் அவனது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு ஆர்வம் மனதினுள் எழத் தொடங்கியது.

அவனுக்கு எப்போதும் ஏதாவது ஒரு இயற்கை காட்சிகளை படம் பிடிப்பது மிகவும் விருப்பம்.

எப்பொழுதாவது கம்பெனியில் லீவு கொடுத்தால் மூன்று நாட்கள் நான்கு நாட்கள் வனப்பகுதிகளுக்கு சென்று அங்குள்ள விலங்குகளையும், பறவைகளையும் சிறு உயிரினங்களையும் படம் பிடித்து வைத்துக் கொள்வது வழக்கம்.

இன்று அவனுக்கு பெரிய அளவில் விடுமுறை கிடைத்ததால் அதனை அந்த கிராமத்தில் கழிக்கவே அவன் ஆசை கொண்டான்.

அத்துடன் இந்த நகரங்களுக்குள் வேலைப்பழு, அதீத டென்ஷன் இரைச்சல், சத்தம் இதற்கு நடுவில் அவனது வாழ்க்கை மூன்று மாதங்களில் சிக்குண்டு வேலைகளுக்கு நடுவில் மிகவும் மனதளவில் சோர்ந்து போய்விட்டான்.

அதனை புத்துணர்ச்சியுடன் ஒரு கிராமத்தில் பழைய முறைப்படி அங்கு எந்த வசதிகளும் அற்றே அவன் சாதாரண முறையில் அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அறிவதற்காகவுமே அவன் அங்கு அவசியமாக செல்ல விரும்பினான்.

அவனது அழகான விடியல் அவனது கனவுகளை எண்ணியே விடிந்தது.

காலையில் நேரத்திற்கு எழுந்து உடைகளை எடுத்து ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டு கீழே இறங்கி வர ராதிகா, காலை உணவு உண்டு கொண்டு,

$அம்மா உங்க அருமை மகன் புறப்பட்டார் போய் வழியனுப்பி வச்சிட்டு வாங்க..” என்று கூறியதும் ஆதிரன் ராதிகாவை பார்த்து முறைத்து விட்டு அன்னையிடம் சென்று,

“அம்மா நான் ஒரு மாசம் என்னோட ஃப்ரெண்ட் பிரகாஷ் ஊருக்கு போய் தங்கிட்டு வந்துருவேன் அதுவரைக்கும் நீங்க நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரை போடணும் சரியா நான் டெய்லி உங்களுக்கு கால் பண்ணுவேன் ஓகேயா..” என்று கூறிவிட்டு கடைக் கண்ணால் ராதிகாவை பார்த்தபடி,

“அதோட என்னோட ராட்சசி அக்காவையும் குட்டி மருமகனையும் கவனமா பார்த்துக்கோங்க..” என்று மெதுவாக ராதிகாவுக்கு கேட்காத வண்ணம் கூறிவிட்டு திரும்ப இந்த உலகமே இடிந்து விழுந்தாலும் நமக்கு சோறு தான் முக்கியம் என்று ராதிகா தனது உணவிலேயே கவனமாக உண்டு கொண்டிருந்தாள்.

அருகே சென்று ராதிகாவைப் பார்த்து,

“ஓய் என்னோட மருமகனை கவனமாக பார்த்துக்கொள் பாப்பா இருக்கிறதுக்கும் வயித்துல கொஞ்சம் இடம் வை இப்படி ஓவரா சாப்பிட்டு வாந்தி எடுக்கப் போற பாரு..” என்று ஆதிரன் அக்கறையுடன் கூற,

“நான் டயட்டுல தான் இருக்கேன் நீ இன்னும் கிளம்பலையா..” என்று அவள் வீம்பாகப் பேச,

தன் தலையிலே தானே அடித்தபடி, அன்னையைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு அன்னையிடமிருந்து விடைபெற்றான்.

சிறிது நேரத்திலேயே கிராமத்துக்கு செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி பயணம் செய்தான்.

சென்னையில் இருந்து அது மிகவும் தூரத்தில் இருந்ததால் இரண்டு பேருந்துகள் மாறி பயணம் செய்து பொழுது சாயவே கிராமத்தை அடைந்தான்.

பேருந்தில் இருந்து இறங்கி உள்ளே ஒரு மைல் தூரம் நடந்து சென்றால் தான் கிராமத்தை அடையலாம்.

அந்த இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் திக்கு தெரியாத காட்டில் இருப்பது போல விழி விரித்து யாராவது கண்களில் பட்டார் அவர்கள் துணையுடன் கிராமத்திற்குள் செல்லலாம் என சிந்தித்து கொண்டு இருக்கும்போது அவனது அவஸ்தையை மேலும் கூட்ட மழையும் துணை சேர்ந்தது.

இருளில் மழையில் நனைந்தபடி ஏதோ கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தவன் இதுதான் சரியான வழியாக இருக்க வேண்டும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் அந்த காட்டு வழியே ஆள் அரவமற்று இருள் மூழ்கிய ஒத்தையடி பாதையில் தன்னைத் திறப்படுத்திக் கொண்டு வேகமாக நடை பயின்றான் ஆதிரன்.

அவ்வேளை கொலுசு சத்தம் கேட்க அவனது நடை உடனே தடை பட்டது. நான் கேட்கும் சத்தம் உண்மையிலேயே கேட்கின்றதா இல்லாவிட்டால் ஏதாவது பூச்சியின் சத்தமா என்று சற்று நின்று நிதானமாக காதை தீட்டி கிரகித்தான்.

ஆனால் வெட்டுக்கிளிப்பூச்சியின் சத்தத்தை விட எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.

மீண்டும் நடக்க மீண்டும் அதே போல் கொலுசு சத்தம் அவனைத் துரத்தி வந்தது மிகவும் வேகமாக தனது பையனை தூக்கிக்கொண்டு ஓடத் தொடங்கியவன் எதிரில் நின்ற பனையில் மோதி அப்படியே கவிழ்ந்து விழுந்தான்.

அந்தக் கொலுசு சத்தத்திற்கு சொந்தக்காரர் யாராக இருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!