பகலவன் எழும் பொழுதில் அவன் கதிர்கள் பூமியை அணைத்துக் கொள்ளும் நேரம் மஞ்சள் போர்வையை போர்த்தியது போல காட்சியளித்தது பூமி.
அந்த அழகிய காலைப் பொழுதில் பச்சைப் கம்பளம் விரித்தது போல படர்ந்திருந்த வயல் வெளியில் உள்ள சிறு பறவைகள் கதிரவன் ஒளிப்பட்டு பறந்து செல்ல பனித்துளிகள் உருகி சிறு புற்களையும் நீராட வைத்தது.
கையில் கலப்பையும் கட்டுச்சோற்றையும் ஏந்திக் கொண்டு வயலில் பலர் வேலை செய்து கொண்டிருக்க, எங்கோ தொடங்கி எங்கோ முடிவடையும் நீரோடையின் நீர் அவ் அழகிய வயலின் நடுவே பாய்ந்தோடியது.
ஆம் அது எழில் கொஞ்சும் முல்லை குக்கிராமமே ஆகும்.
அந்த அழகிய கிராமத்தில் உள்ள வயலின் உள்ள மேடையில் அமர்ந்து கொண்டிருந்தாள் நம் நாயகி.
வழிந்தோடும் நீரில் தன் இரு கால்களையும் வைத்து மாறி மாறி விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்.
ஓடி வரும் நீர் மங்கையின் மேனியில் தஞ்சம் புகுந்து சற்று ஓய்வெடுக்க நினைத்து அவள் தேகத்தை ஈரமாக்கியது. ஆனால் அவளைத் தீண்டி விட்டு தாண்டி செல்லும் நீரோ நங்கையை விலகிச் செல்லும் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டே சென்றது.
செந்நிற நிறமுடைய மெல்லிய மேனியுடையவள் இள நீலநிற தாவணி அணிந்து அமர்ந்திருந்தாள்.
கண்களில் ஓர் ஈர்ப்பு விசையும் ரோஜா இதழ்களை ஒத்த நிறமுடைய மென்மையான உதடுகளையும், கை வைத்தால் வழுகிச் செல்லும் மென்மையான தேகத்தையும் வழிந்தோடும் நீரோடை போல ஒடுங்கிய மெல் இடையையும்,
தாவணியை முழங்கால் வரை உயர்த்தி மடித்து கட்டியவாறு இருக்க வெற்றுப் பாதம் வரம்பில் பட அமர்ந்திருந்தவளை பார்த்தால் எவருக்கு தான் பிடிக்காமல் போகும்.?
வானில் செல்லும் வானவர் கூட தம் இடத்தில் உள்ள மங்கை வழிதவறி இங்கே வந்து விட்டாளோ…? என எண்ணிக் கொள்ளும் அளவுக்கு அழகிய பதுமை அவள்.
வானளவு தூரத்தில் இருந்தாலும் தன் மன்னவனின் குரல் காற்றைக் கிழித்துச் செல்லும் பானம் போல அவளது காதுகளுக்கு வந்து சேர்ந்தது.
தன் காதல் நாயகன் தன்னை அழைக்கின்றான் என அறிந்தவளின் கால்களோ அனுமதியின்றி எழுந்து ஓடத் தொடங்கியது.
அவனிடம் வேகமாக செல்ல வேண்டும் என நினைத்தவள் தன் தாவணியின் முந்தானையை இடையில் சொருகிக் கொண்டு பின்னம் கால் பிடரியில் படும் அளவுக்கு வேகமாக ஓடினாள்.
அவளோ மன்னவனின் அருகே வருவதற்கு முன்னரே, “கட்….. கட்…. கட்…..” எனும் ஒலி உரத்தக் குரலில் ஒலித்தது.
அந்தக் கம்பீரமான கர்ஜனைக் குரலில் ஓடிவந்த படத்தின் நாயகி முகம் சுருங்க சட்டென அதே இடத்தில் நின்று கேள்வியுடன் கட் எனக் கத்திய டிரக்டரை பார்த்தாள்.
ஆம் அந்த சத்தத்திற்கு சொந்தக்காரன் வேறு யாரும் அல்ல. தமிழ் நாட்டில் ஒட்டு மொத்த பெண்களின் மனதையும் திருடிய சினிமா நடிகன் ருத்ரதீரனே.
தமிழ் சினிமாவில் வந்து நான்கு வருடத்திற்குள் பல சாதனைகளுக்கும் அனைவரது பாராட்டுக்கும் சொந்தக்காரனான இளவயது தயாரிப்பாளரும் நடிகனுமான ருத்ர தீரனேதான்.
சினிமா துறையில் இவனைத் தெரியாது எனக் கூற எவரும் இல்லை.
ஏனெனில் வாரத்தில் ஒருமுறையாவது அவனது பெயர் சமுக வலைத்தளங்களில் வராமல் இருக்காது. அவனது சாதனைகள் மற்றும் படம் தொடர்பாகவும் அவன் மீது எழும் சர்ச்சைகள் கிசுகிசுக்கள் எனவும் மாறி மாறி தீரன் பற்றி வந்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் இவனோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தது. ஏனெனில் அவனுடன் நடித்தால் மிக குறுகிய காலத்தில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஆர்வத்தில் ருத்ரதீரனின் பட வாய்ப்பை பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள்.
தீரனோ அவனது கதைக்களம் சிறப்பாக அமைய வேண்டும் என ஒவ்வொரு காட்சியையும் செதுக்குபவனாக இருப்பான்.
அவனுடைய இயல்பான நடிப்பும் கடினமான முயற்சியும் அவனுடைய திறமை அனைத்துமே படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனவே அவனோடு சேர்ந்து பணியாற்ற பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு எதிர்பார்த்து காத்துக் கிடந்த நடிகைகளில் ஒருத்தி தான் ரேஷ்மா. ரேஷ்மா கடந்த ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற ஓர் அழகி ஆவாள்.
அதன் பின் சிறு சிறு விளம்பரங்கள், இரு படங்கள் என நடித்து தனக்கென ஓர் இளவயது கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருந்தாள்.
ஆம் இவள் தான் தற்போது ருத்ரதீரன் எடுக்கும் படத்தின் நாயகி. தன் கேரியரில் முதன் முதலாக கிராமப் புறத்தை தழுவிய கதைக்கருவைக் கொண்டு படம் எடுக்க தயாராகி முல்லை எனும் கிராமத்திற்கு தன் படப்பிடிப்புக் குழுவோடு வந்திருந்தான் தீரன்.
அவனது முதலாவது நாள் சூட்டிங்கிற்காகவே இந்த காட்சியை எடுக்க நினைத்து காலைப் பொழுதே வந்தவனுக்கு ரேஷ்மாவின் நடிப்பு பெரிதும் அவனை திருப்திப் படுத்தாததால் “கட்.. கட்…” என சத்தமிட்டான்.
அவனுடைய முகத்திலோ எரிச்சல் விஞ்சிப் போனது.
“ஷிட் இவளுக்கு வில்லேஜ் லுக்கே வருதில்லை எப்படி என்னால இவளை வெச்சு படம் எடுக்க முடியும்” என தன் கையில் இருந்த ஸ்கிரிப்ட் பைலை கீழே எறிந்து தன்னருகே இருந்த ப்ரோடியூஸரிடம் கூறியபடி கோபத்துடன் எழுந்தான் ருத்ரதீரன்.
அவனது ஒற்றை விழி சுளிப்பதைப் பார்த்தாலே அங்குள்ள அனைவரும் அச்சத்தில் ஆடிப் போவார்கள். தற்போது ருத்ரதீரனின் கோபம் கண்ட அனைவரும் அச்சத்தில் உறைந்து போய் நின்றார்கள்.
அவனது செயலைப் பார்த்து ரேஷ்மா அருகில் ஓடி வந்து, “என்னாச்சு சார்…., ஏதும் தப்பா ஆக்ட் பண்ணிட்டேனா….?” என பதற்றத்தோடு கேட்டாள்.
சுற்றி ஆட்கள் இருக்கின்றார்கள் என்று கூட பார்க்காமல் ரேஷ்மாவை பார்த்து திட்டத் தொடங்கினான் ருத்ரதீரன்.
“ப்ச் இடியட் நீ ஆக்ட் பண்ணியா….?, இதுவா ஆக்டிங் ? இதுக்கு பேர் தான் ஆக்டிங்கா….? ஹாங்…?
வில்லேஜ் கேர்ள் மாதிரி நடந்து வர சொன்னா என்னவோ பேஷன் ஷோ ல கேட் வால்க் மாதிரி வர்ற,
ஒழுங்கா நடிக்க வரலைன்னா என்னதுக்கு இங்கே வர்றீங்க முடியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே” என அலற ரேஷ்மாவோ மௌனமாக ஒதுங்கி நின்றாள். அவளுள்ளே கோபம் கனன்று கொண்டிருந்தது.
அவன் அருகே இருந்த ப்ரோடியூஸரோ,
“சார் சார் கொஞ்சம் பொறுமையா இருங்க இன்னொருவாட்டி ரியஷல் பார்ப்போம்” என மெதுவாக அவனது காதில் கூறினார்.
அவருக்கு ரேஷ்மா தூரத்து உறவாயிற்றே. இந்தப் படத்தில் நடிக்க உதவுவதாக வேறு வாக்குறுதி கொடுத்து விட்டதால் தவித்துப் போனார் அவர்.
தீரனோ “நோ சான்ஸ் இனிமேலும் என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாது இவள் என்னோட படத்துக்கு சரிப்பட்டு வர மாட்டாள்.” என்றவன் சீற்றத்தோடு அங்கிருந்து செல்ல முயன்றான்.
ருத்ரதீரனை நம்பி பல கோடிக்காக முதலீடு செய்த ப்ரோடியூஸர் அவன் வெளியே செல்வதாக கூற திகைத்து போனார்.
“தீரன் சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ப்ளீஸ் எனக்காக இன்னொருவாட்டி ட்ரை பண்ணிப் பார்ப்போம்” என கெஞ்ச அவனுக்கோ சலிப்பே ஏற்பட்டது. பின் அவருக்காக மனமிறங்கி சரியென பதிலளித்தான் அவன்.
“மேடம் இந்தவாட்டி கொஞ்சம் சாருக்கு பிடிச்ச மாதிரி பண்ணுங்க, அவர் கோபப்பட்டு போனா ஒன்னும் பண்ண முடியாம போய்டும்” ரேஷ்மாவுக்கு அறிவுரை கூறி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தார் ப்ரோடியூஷர்.
மீண்டும் அவன் மனதில் நினைத்து வைத்திருந்த காட்சியை வெளிக் கொண்டு வர வேண்டும் என பெரும் முயற்சி செய்து ரேஷ்மாவை தயார்படுத்தினான் ருத்ரதீரன்.
அதேபோல மீண்டும் காட்சியை நடிக்க தீரனின் மனமோ அதை ஏற்கவில்லை.
“இனாஃப்….., கிராமத்து பொண்ணுங்கன்னா பார்க்கும் போதே புரியனும், உன்னைப் பார்த்த அப்படி ஒரு ஃபீலிங் கூட எனக்கு வரலை,
நீ எவ்வளவு பெரிய அழகியா இருந்தாலும் இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட. என்னமோ குச்சிக்கு சேலை கட்டின மாதிரி இருக்குற பொண்ணை வைச்சு என்னால படம் எடுக்க முடியாது……., பேக் அப்…..” என அனைவரின் முன்னும் ரேஷ்மாவை திட்டிய பின், தன் பீஏவை அழுத்தமாக பார்த்தவன்,
“இன்னும் இரண்டு நாள்தான் உனக்கு டைம் அதுக்குள்ள ஒழுங்கான ஹூரோயினை தேடிக் கண்டு பிடி.
எனக்கு எல்லாம் பர்ஃபேக்ட்டா இருக்கனும், மைன்ட் இட்” என அந்த இடமே அதிரக் கத்தினான்.
சினிமாத்துறையில் உள்ளவர்கள் ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள் என அனைவரின் முன்னும் அவமானப்பட்டு நின்றாள் ரேஷ்மா.
தான் நினைத்தவாறு எதுவும் நடக்கவில்லை என நினைத்து வெறுப்புடன் சென்றான் ருத்ரதீரன். தீரனின் எதிர்ப்பார்ப்பை நம் கிராமத்து பைங்கிளி நிறைவேற்றுவாளா..?