தன் வாழ்வில் சில நிமிடத்தைக் கூட வீணாக்காமல் இருக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் தான் ருத்ரதீரன்.
தனது படத்தில் தனக்கு தேவையான திருப்தி கிடைக்கும் வரை விடாது முயற்சி செய்யும் காரணமாகத்தான் அவன் வந்த குறுகிய நாட்களில் மிகப்பெரிய நாயகனாக உருவாகினான்.
ரேஷ்மா சிபாரிசில் நடிக்க வந்தாலும் கூட தான் எதிர்பார்த்ததை போல நாயகி அமையாததால் டென்ஷனாக அங்கிருந்து சென்றான் ருத்ரதீரன்.
ஒழுங்காக வடிவமைக்காத குன்றும் குழியுமாக உள்ள வீதியில் கார் சென்று கொண்டிருக்கையில் திடிரென அவனது கார் நின்றது.
காரின் ட்ரைவரோ வண்டியை ஸ்டார்ட் செய்தும் ஸ்டார்ட் வராததால் கீழே இறங்கி என்ன பிரச்சனை என பார்த்துக் கொண்டிருந்தார்.
கார் நிறுத்தப்பட்டு அரைமணி நேரம் வரை கடந்தது. ஆனால் வண்டியை சரி செய்ய முடியாததால் ருத்ரதீரனின் அருகே வந்த ட்ரைவர்,
“சார் வண்டி ஸ்டார்ட் வரலை, என்னால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன் பட் முடியலை,
நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் ஊருக்குள்ள போய் மெக்கானிக் ஒருவரை கூட்டிட்டு வர்றேன்” எனக் கூற தீரனும் “கெட் லாஸ்ட் இடியட்.” என்ற கர்ஜனையோடு அவனை அனுப்பி வைத்தான்.
காரில் இருந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த ருத்ரதீரனுக்கு சலிப்பு ஏற்பட காரில் இருந்து வெளியே வந்து நின்றான்.
சூரியனை காரிருள் சூழ்ந்துக் கொள்ள வானில் திடிரென ஓர் மாற்றம் தோன்ற வான் மட்டுமில்லாமல் அவனைச் சூழ்ந்து அனைத்துமே இருளாகிப்போனது.
தன் இருபக்கமும் உள்ள வயல் வெளிகளின் பச்சை நிறமோ கரிய மை மேலே பூசியது போல மாற்றமடைந்தது.
இடையிடையே தோன்றிய மின்னலும் இடியும் தாளம் இசைத்தது போல இருந்தது. இவற்றை பார்க்கையில் அழகாக இருந்ததாலும் மழையின் சீற்றம் அதிகமாக ஏற்பட இருப்பாதாகவும் தான் இன்னும் வீதியில் காத்திருப்பதை நினைத்தும் சினத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவனது காதுகளுக்கு வந்த சத்தமோ அவனுடைய மனதை குழையச் செய்தது.
“ஹா ஹா ஹா ஹே பட்டு ஓடாதே நில்லு…,” என சில்லறைக் குற்றிகளை உருட்டி விடுவது போன்ற சிரிப்புச் சத்தம் கேட்க அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான் ருத்ரதீரன்.
ஆம் அந்த சிரிப்புக்கு சொந்தக்காரி தான் நம் கதையின் நாயகி மைவிழி.
பெயரைப் போலவே இயற்கையாகவே மை பூசிய கண்களை கொண்ட மங்கையின் அழகோ ருத்ரதீரனின் மனதை பார்த்த கணமே பறித்துச் சென்றது.
அடர்ந்து அவள் மார்பில் படர்ந்த கூந்தல் காற்றில் ஆடியது.
சந்திரன் தேய்வது கூட மங்கையை பார்த்துதான் போல, ஏனெனில் மைவிழியின் நெற்றியை பார்த்து தானும் அவ்வாறு வர வேண்டும் என்ற நினைத்துக் கொண்டது போலும் இருந்தும் தன் அழகை விஞ்சிய அழகு மங்கையின் நுதழில் உள்ளதே என பிறையும் சோர்ந்து போனது.
பார்வையால் சுட்டெரிக்கும் வேல் போன்ற கூரிய விழிகளைக் கொண்ட நங்கை அவனைப் பெரிதும் கவர்ந்தாள்.
வானில் உள்ள நிலவில் கூட குழிகள் காணப்படும் ஆனால் அவளது வதனத்திலோ எவ்வித குறைகளுமின்றி சிறப்பாக செதுக்கப்பட்டிருந்தது.
பால்நிற சங்கைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கழுத்தையும்,
அனைத்தும் அளவெடுத்து செய்யப்பட்டது போல எந்தவித குறையுமின்றிய மார்பழகையும் சற்று பெருத்த தேகம் கொண்ட மங்கையை பார்த்த ருத்ரதீரனின் கண்களுக்கு இருளில் ஒளிரும் நிலவைப் போல மைவிழி தென்பட கண்களை விரித்து அவளை இமை மூடாமல் இரசித்துக் கொண்டிருந்தான்.
பிரம்மன் இவளை படைப்பதற்கு முன்னர் சிற்பியாக இருந்தானோ…..?
அவ்வளவு அழகையும் அள்ளிக் கொண்டு வந்து அவளுடைய உடலில் அல்லவா செதுக்கி உள்ளான் என தனக்குள் நினைத்த ருத்ரதீரன் தனது செல் ஃபோனை எடுத்து அவள் ஓடி வருவதை ஒரு நிமிடம் வீடியோ எடுத்து அதை தன் பீஏ சந்துருவுக்கு அனுப்பினான்.
“சந்துரு உனக்கு ஒரு வீடியோ ஒன்னு அனுப்பி இருக்கேன் அந்த வீடியோவில வர்ற பொண்ணு மாதிரி ஒருஆள்தான் எனக்கு வேணும் சோ இதை மாதிரி நடிகையைத் தேடு” என ஃபோன் செய்து கட்டளையிட்டான் ருத்ரதீரன்.
“ஓகே சார் இதே மாதிரி ஒரு நடிகையை தேடுறேன்” எனக் கூறினான் சந்துரு.
ஃபோனை வைத்ததன் பின்னர் ருத்ரதீரனின் மனதில்,
‘இதே போல ஒரு நடிகையை தேடிக் கண்டு பிடிச்சு அவளை எஸ் சொல்ல வைச்சு அப்புறம் நடிக்க வைக்கிறதை விட இவளையே நான் நடிக்க வைக்கக் கூடாது.?
ஃபில்ம் இண்டஸ்ட்ரி இருக்குற ஆட்களை விட புதுசா வர்றவங்களுக்கு எப்பவுமே எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாகவே இருக்கும்.
அன்ட் என்கூட படம் பண்றதுக்கு எவ்வளவோ பேர் காத்துக்கிட்டு இருக்காங்க சோ நான் போய் இவளை நடிக்க கூப்பிட்ட அடுத்த செக்கனே இவ எனக்கு எஸ் சொல்லுவா’ எனும் ஓர் எண்ணம் அவன் மனதில் தோன்ற மைவிழியை நோக்கி எந்தவித தயக்கமும் இன்றிச் சென்றான்.
துள்ளிக் குதித்துக் கொண்டு வந்த ஆட்டுக்குட்டியை கையில் அள்ளிக் கொண்ட மைவிழி அதனோடு பேசத் தொடங்கினாள்.
“பட்டு அம்மாவை விட்டுட்டு எங்கே ஓடி வர்ற நீ, மழை வரப் போகுது பிறகு உங்க அம்மா உன்னைத் தேடும்ல நாங்க வேகமாக வீட்டுக்கு போவோம் வா” என ஆட்டுக்குட்டியின் தலையை தடவிக் கொண்டே பேசினாள் மைவிழி.
‘இவள் என்ன ஆட்டை பிடிச்சு வைச்சு பேசிக்கிட்டிருக்காள்’ என நினைத்துக் கொண்டே மைவிழியின் முன் வந்து நின்றான் ருத்ரதீரன்.
‘வாவ் தீரன் சார் நீங்களா….?, அச்சோ என்னால நம்பவே முடியாம இருக்கு, நான் உங்களோட மிகப்பெரிய ரசிகை நீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்ற பதில் வரும் என நினைத்து சென்றவனுக்கு,
“யாரு நீங்க ஏன் இங்கே தனியா நிக்கறீங்க வழி மாறி வந்துட்டீங்களா…?” என்று ருத்ரதீரனை பார்த்து கேட்க அதிர்ந்து போய் நின்றான் அவன்.
அவளது முதலாவது பேச்சே அவனின் ஆணவத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது போல இருக்க,
‘என்னை யார்னு கூட தெரியாம இருக்காளே, அதுசரி இந்த கிராமத்தில டீவி இருக்கிறதே பெரிய விஷயம்’ என தன் அவமானத்தை மறைத்து தனக்குத்தானே ஆறுதல் வார்த்தைகளை கூறிக் கொண்டான் ருத்ரதீரன்.
“உங்களை தான் கேட்கிறேன் புரியலையா….? ஒரு வேளை ஊமையா இருப்பாரோ இல்லைன்னா காது கேட்காம இருக்குமோ” என ருத்ரதீரனுக்கு விளங்கும் வகையில் மைவிழி கேட்க,
“ஹேய் கேர்ள் எனக்கு காதும் கேட்கும் நல்லா பேசவும் வரும்” என சட்டென பதிலளித்தான் அவன்.
“அப்படின்னா கேட்கும் போது பதிலை சொல்லுங்க” என்றாள் அவள்.
“என்னோட பேரு தீரன், நான் சென்னைல இருந்து வர்றேன், நான் ஒரு…..” என கூறி முடிக்க முதலே,
“சென்னைன்னா பட்டிணம் தானே, அங்க இருந்தா வந்திருக்கீங்க, ஓ அப்படின்னா அந்த கார் உங்களோடதா…?, அங்கே வானம் அளவு வீடுலாம் இருக்குமாமே உண்மையா..?” என ஆர்வத்துடன் மைவிழி கேட்டாள்.
“ப்ச் இடியட் நான் சொல்றதை கேள் உனக்கு மூவிஸ் பார்க்குற பழக்கம் இல்லையா….?” எனக் பொரிந்தான்.
அவன் அவளை திட்டியதை கூட உணராத மைவிழி “இடியப்பம் வேணுமா…? அது ஊருக்குள்ள வாங்கலாம் ஆனா அந்த மூவுன்னா என்னன்னு தெரியலையே,” என பதிலளித்தாள் அவள்.
மைவிழியின் பேச்சில் அவனுக்கு புரிந்தது உண்மையில் அவள் வெளி உலகம் அறியாமல் வளர்ந்தவள் என்று, இடியட்டை இடியாப்பமாகவும் மூவியை மூவ்னும் எண்ணும் இவளை வைத்து நடிக்க வைப்பது கடினம் என உணர்ந்தாலும் அவளது அழகோடு சேர்த்து இந்த வெள்ளந்தித் தனமான பேச்சும் அவனை மேலும் கவர்ந்தது.
மைவிழிக்கு புரியும் வகையில் நான்கு வயது குழந்தையோடு பேசுவது போல பேசத் தொடங்கினான் ருத்ரதீரன்.
“நான் ஒரு சினிமா நடிகன், உனக்கு சினிமாவுல நடிக்குறதுக்கு விருப்பமா…?” எனக் கேட்டான்.
“சினிமாவா நான் அதுலாம் பார்த்தது இல்லையே அதுல எப்படி நடிக்கிறீங்க” என மைவிழி கேட்க,
“நீ என்கூட வா நான் எல்லாத்தையும் சொல்லித் தர்றேன்” என்றான் ருத்ரதீரன்.
இனம்தெரியா ஆண் ஒருவன் தன்னோடு வரச் சொல்வதால் சற்று கோபமடைந்த மைவிழி,
“நீங்க யார்னு எனக்கு தெரியலை நான் உங்களோட வர மாட்டேன். எனக்கு எதுவும் பண்ண விருப்பம் இல்லை” என சட்டென பின்வாங்க,
மைவிழி அச்சம் கொள்வதை உணர்ந்த ருத்ரதீரன்,
“பயப்படாத கேர்ள் நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்” என முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
அவன் தன்னருகே வருவதைப் பார்த்த மைவிழி,
“ஆளை விடுடா சாமி என்னோட அம்மாச்சி சொல்லியிருக்கா தனியா இருக்குற ஆம்பிளைங்க கூட பேசக் கூடாது” என ஆட்டுக்குட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தாள் மைவிழி.
அவள் சிட்டாய் பறக்க தனக்குள் மெல்லியதாக புன்னகைத்தவன் எவ்வாறாவது ஊருக்குள் சென்று அவளை தன்னோடு நடிக்க வைக்க வேண்டும் என எண்ணினான்.
ருத்ரதீரன் அவளின் வீடியோவை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கையில் அவனது ட்ரைவர் மெக்கானிக் ஒருவருடன் வந்தான்.
காரினை சரி செய்து கொண்டிருந்த மெக்கானிக்கு அருகில் சென்ற ருத்ரதீரன்,
“ஹேய் மெக்கானிக் நீ இந்த ஊர்க்காரன் தானா…?” எனக் கேட்டான்.
“ஆமா சார் நான் இந்த ஊர்தான்” என பதிலளித்துக் கொண்டே காரினைப் பார்த்தான் அவன்.
ஒரே ஊரில் இருப்பதால் தான் சந்தித்த பெண்ணை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என நினைத்த ருத்ரதீரன் மைவிழியின் வீடியோவைக் காட்டி,
“இந்தப் பொண்ணை உனக்கு தெரியுமா…..?, அப்படி தெரியும்னா அந்தப் பொண்ணோட வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போ,
அதுமட்டுமில்லை அந்தப் பொண்ணை சமாதானப்படுத்தி அவங்க வீட்டுக்காரங்ககிட்ட பேசி என்னோட அனுப்பி வெச்சா உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்” எனக் கூறினான்.
அந்த மெக்கானிக்கோ ருத்ரதீரனின் சட்டையை பிடித்து,
“என்னடா சொன்னா உன்கூட அனுப்பி வைக்கனுமா….., அது என்னோட பொண்ணு மைவிழி டா” என்று அவனை இழுத்தார் மைவிழியின் தந்தை குகன்.
அவரின் செயலில் தீரனின் முகமோ இறுகிப் போயிருந்தது.