மைவிழி – 03

4.4
(17)

தனக்கு பிடித்த மற்றும் தான் எதிர்பார்த்ததை போல இருந்த பெண்ணை தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு ஆசைக் கொண்டான் ருத்ரதீரன்.

ஆனால் அவளோ சிறுப்பிள்ளை தனமாக பேசிவிட்டு ஓடிச் செல்ல என்ன செய்வது என அறியாமல் தனது காரை சரி செய்ய வந்த மெக்கானிக்கிடம் அவளைப் பற்றிக் கேட்டான்.

மைவிழியின் வீடியோவை காட்டி யார் என்றும் அவளை தன்னோடு அழைத்துச் செல்ல உதவினால் பணம் தருவதாகவும் கூற அந்த மெக்கானிக் கோபம் கொண்டு அவனது சட்டையை பிடித்து இழுத்து,

“அது என்னோட பொண்ணு, எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டேயே அவளை கொண்டு வந்தா பணம் தர்றேன்னுவ….?” எனக் கொதித்தார் மைவிழியின் தந்தையான குகன்.

மகளை தன்னோடு அனுப்பி வைத்தால் பணம் தருவேன் என்று கூறினால் எந்த தந்தைக்கு தான் கோபம் வராது.

ருத்ரதீரனின் சட்டையை பிடித்து இருந்த குகனைக் கண்டு கோபம் கொண்ட  அவனது ட்ரைவர் குகனின் அருகே வர, தன் கையின் அசைவால் தன் ட்ரைவரை நிறுத்தினான் ருத்ரதீரன்.

அவனது சட்டையில் இருந்த கையினை பிடித்த ருத்ரதீரன்,

“யார் மேலே கை வைச்ச. உன் உடம்புல கையே இல்லாத மாதிரி பண்ணிருவேன் ஜாக்கிரதை.?” எனக் கூறியபடி தன் வலுவான கரத்தினால் தள்ளி விட்டான்.

அவனுடைய சீற்றத்தில் அதிர்ந்து நின்ற குகனைப் பார்த்தவன் அவர் தொட்ட தன்னுடைய ஷர்ட்டை கழற்றி எறிந்தான்.

“நான் ஒன்னும் உன்னோட பொண்ணு கூட ப**** காசு தர்றேன்னு சொல்லலை  நடிக்கத்தான் கூப்பிட்டேன், முடியுமா… முடியாதான்னு மட்டும் சொன்னா போதும் அதை விட்டுட்டு ஓவரா சீன் க்ரியேட் பண்ணாத” என்றான் ருத்ரதீரன்.

தன்னால் ருத்ரதீரனுடன் சண்டையிட முடியாது என நினைத்த குகன் தரையில் இருந்து எழுந்தவாறே “நடிக்கவா…?, எங்கே……?, நீ யாரு” எனக் கேட்டான்.

அவனும் தன்னைப்பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்ட ருத்ரதீரன் தான் யார் என்பதையும் மைவிழியை நாயகியாக வைத்து படம் தயா‌ரிக்க விரும்புவதாகவும் கூறினான்.

அவன் கூறியதில் சற்று தெளிந்த குகன், “நீ படம் எடுத்தா என் பொண்ணுக்கு வேலை கொடுப்பியா..?” என சம்மந்தமே இல்லாமல் கேட்டார் குகன்.

மைவிழியைப் போல அவளது தந்தையும் மூளை வளர்ச்சி குறைந்தவராக தான் இருக்கக் கூடும்  என இகழ்ச்சியாக நினைத்த ருத்ரதீரன்,

“எஸ் உன்னோட பொண்ணுக்கு வேலை கிடைக்கும் அதுக்கு நான் சம்பளமும் தர்றேன்” எனக் கூறினான்.

‘நம்ம பொண்ணு வீட்டிலேயே ஒரு வேலையும் பண்ண மாட்டா ஆனா அவளை கூட்டிட்டு போய்ட்டு இவன் வேலை கொடுக்கப் போறானாம் அதுக்கு சம்பளம் வேற கொடுப்பானாம் சரியான லூசுப் பயலா இருக்கானே,

சரி சும்மா வீட்டில இருக்குறதுக்கு வேலைக்கு போனா பணமாவது கிடைக்குமே’ என தனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்த குகன்,

“சரி அப்படின்னா நீ சம்பளம் எவ்வளவு கொடுப்ப, ஒரு அஞ்சாயிரம் தருவியா” எனக் கேட்டார் மைவிழியின் தந்தை.

“நோ என்னோட படம் பண்ற ஒவ்வொரு மாதமும் டூ லேக்ஸ் கொடுப்பேன் அன்ட் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் டென் லேக்ஸ் கொடுத்து செட்டில் பண்ணுவேன்” என்றான் ருத்ரதீரன்.

குகன் கேட்டதோ ஐந்தாயிரம் ரூபாய் ஆனால் ருத்ரதீரன் கூறியதன் படி அதன் மதிப்போ பல லட்சம் ரூபாய் இதைக் கேட்ட குகன் இவ்வாறு பதிலளித்தான்.

“இல்லைப்பா இந்த பணத்துக்கு முடியாது…., மாசம் அஞ்சாயிரம்ன்னா சரி இல்லைன்னா என்னோட பொண்ணு வேலைக்கு வர மாட்டாள்” என்றார் குகன்.

ருத்ரதீரனோ குகன் பேசுவதை கேட்டு அதிர்ந்து போய் அருகில் இருந்த ட்ரைவரின் முகத்தை பார்க்க அவனும் புரியாமல் தலையை சொறிந்தப்படி குழம்பிப் போய் நின்றான்.

“நீ வேற யாரையும் வேலைக்கு எடுத்துக்கோ, உன்னோட வண்டியை ரெடி பண்ணிட்டேன் அதுக்கு நூறு ரூபா கூலியைக் கொடு நான் போறேன்” என்றார் குகன்.

“ஹே உனக்கென்ன லூசாயா பிடிச்சிருக்கு…., அஞ்சாயிரம் தானே கேட்ட நான் உனக்கு ரெண்டு லட்சம் தர்றேன்னு சொல்றேன் நீ வேணாம்னு போற” என சினத்தை வெளிக் காட்டினான் ருத்ரதீரன்.

“என்னது ரெண்டு லட்சமா……?” என உள் நாக்கு தெரியும் படி வாயைப் பிளந்து சிலைப்போல நின்றார் குகன்.

ஆம் ருத்ரதீரன் பேசியதை புரிந்துக் கொள்ளாமல் தன் மகளை அனுப்ப மறுத்த குகன் பின்னர் அவன் கொடுக்கும் பணம் பற்றியும் அவள் தன் படத்துக்கு தேவை என்பது பற்றியும் கூற அனைத்தையும் விளங்கிக் கொண்டார்.

‘நம்ம பொண்ணை நடிக்க அனுப்பி வைச்சா இவ்வளவு பணம் வரும்னு தெரியாம போய்ட்டே, இனி நான் வேலைக்குப் போகவே தேவையில்லை நினைச்ச நேரம் நல்ல சோக்கான சரக்கு வாங்கியெல்லாம் குடிக்க முடியும்.

இவனை பார்த்தாலும் பெரிய மனுஷன் மாதிரி தான் இருக்கு. வீட்டில சும்மா இருந்துட்டு இருக்கிற நம்ம பிள்ளையை அனுப்பி வைப்போம்’ என பண ஆசை குகனின் கண்ணை மூடிக் கொள்ள நாய்க்குட்டி வாலை ஆட்டிக் கொண்டு செல்வதை போல ருத்ரதீரனின் அருகே சென்ற குகன்,

“மன்னிச்சுடுங்க ஐயா நீங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியாம தப்பா நடந்துகிட்டேன்.

இப்பவே என்கூட வாங்க நான் என் மகளை அனுப்பி வைக்கிறேன், அப்புறம் பணம் எப்போ கொடுப்பீங்க….” என தலையை சொறிந்தப்படி நிற்க,

“வெயிட் நான் என் பீஏ க்கு கால் பண்ணி அட்வான்ஸ் பணத்தை கொண்டு வர சொல்றேன் அன்ட் அதுக்கு அப்புறம் ஒவ்வொரு மாதமும் உன் பொண்ணோட சம்பளம் வீடு தேடி வரும்” என்று கூறிக் கொண்டே சந்துருவுக்கு ஃபோன் செய்து பணத்தை கொண்டு வரச் சொன்னான் ருத்ரதீரன்.

ஃபோன் செய்து பத்து நிமிடத்துக்குள் சந்துரு வர அவனிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கி குகனிடம் கொடுத்த ருத்ரதீரன்,

“இதுல ரெண்டு லட்சம் ரூபா பணம் இருக்கு இந்தப் பணத்தை அட்வான்ஸா வெச்சிக்கோ மீதிப் பணம் உனக்கு மாச கடைசியில கையில கிடைக்கும்” என குகனிடம் கொடுக்க தன் வாழ்க்கையில் இவ்வளவு பணத்தை பார்க்காத குகன் ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷத்தில் பணத்தை வாங்கி தன் இடுப்பில் சொருகினார்.

அப்போது குகனின் பார்வையில் ருத்ரதீரன் கடவுளாகவே தெரிந்தான். அவன் அறிந்த வகையில் இலட்சுமி தெய்வம் செல்வத்தை வழங்குபவர் ஆக இருந்தார் ஆனால் இப்போது ஆண் வடிவில் பேன்ட் சர்ட் அணிந்து வந்த  இலட்சுமி தெய்வமே தன் கண் முன்னே நிற்கின்றது என நினைத்து கை கூப்பி நன்றி தெரிவித்தார் அவர்.

“அன்ட் இன்னொரு விஷயம் இந்தப் பணத்தை வாங்கிகிட்டு எங்கேயாவது ஓட நினைச்ச உன்னை தேடி பிடிச்சு கொலைப் பண்ணிடுவேன்” என ருத்ரதீரன் மிரட்ட,

“நான் ஏன் சார் ஓடப் போறேன் இப்படி பணம் தர்ற உங்களை விட்டுட்டு போனா நான் மிகப்பெரிய முட்டாள்.” எனக் கூறி தன் வீட்டு விலாசத்தை கொடுத்து வரச் சொல்லிவிட்டு தானும் வீட்டுக்கு சென்றார் குகன்.

பழைய தகரங்கள் கொண்டு மூடப்பட்ட ஓர் சிறிய வீட்டில் தான் மைவிழி அவளது தந்தை மற்றும் தந்தையின் தாய் என மூவரும் வசித்து வருகின்றார்கள்.

மைவிழியின் தந்தையான குகனோ மெக்கானிக் வேலை செய்பவர் ஆனால் உழைப்பதற்கு மேலாக மதுவருந்தி பணத்தை செலவு செய்யக் கூடிய குடிமகன் ஆவார்.  தினமும் போதையில் குளித்துவிட்டே வீட்டுக்கே வருவார்.

மைவிழி தன் அம்மாச்சி என அழைக்கும் குகனின் தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வருகின்றாள். அவர் உணவுப் பண்டங்கள் செய்து விற்று தன்னையும் தன் பேத்தியையும் கவனித்துக் கொள்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் கையில் பணத்தோடு வீட்டுக்குள் நுழைந்த குகன்,

“அம்மா இங்கே பாரு பணத்தை, நாம இனி கஷ்டப்பட தேவையில்லை” என்றவாறு தன் கையில் இருந்த பணத்தை இருவர் முன்னும் காட்டினார்.

பணத்தை பார்த்த அவனது தாயோ,

“உனக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைச்சிச்சு ஏதும் தப்பான வழியில வந்ததா..?” எனக் கேட்க,

“இல்லைம்மா எல்லாமே என்னோட ஆசைப் பொண்ணு மைவிழியால கிடைச்சதுதான்” என அருகில் இருந்த மைவிழியின் தலையை தடவியவாறு பாசமாக பேசினார்.

வழமையாக குடித்து விட்டு அடிக்கும் தந்தை வழமைக்கு மாறாக பாசமாக பேச எதுவும் புரியாமல் நின்றாள் மைவிழி.

“நம்ம பொண்ணா என்னடா சொல்ற நீ” என பாட்டி கேட்க,

“அது ஒன்னும் இல்லைம்மா நம்ம பொண்ணை யாரோ பெரிய சினிமாக் கம்பனியொன்னு நடிக்க சொல்லி கேட்டாங்க, அதுக்கு நிறைய பணமும் தர்றேன்னு சொன்னாங்க அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்.

இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்க வந்து இவளைக் கூட்டிக்கிட்டு போய்டுவாங்க அப்புறம் நம்ம பொண்ணு பெரிய ஆளாகிடுவா” என்று குகன் கூற,

“அடப்பாவி யார்ன்னே தெரியாதவங்களோட நம்ம பொண்ணை எப்படி தனியா அனுப்ப முடியும் அவள் சின்னப் பொண்ணுடா,

இதை நான் ஒத்துக்க மாட்டேன் வாங்கின பணத்தை திருப்பி கொண்டு போய் கொடுத்துரு” என திட்டத் தொடங்கினார் பாட்டி.

“இல்லைம்மா நான் நல்லா விசாரிச்சிட்டேன் ஒரு பிரச்சினையும் வராது நம்ம பொண்ணு நல்லா இருந்தா அது நமக்கு சந்தோஷம் தானே” என குகனும் சமாளிப்பதற்காக ஆயிரம் பொய் சொல்லத் தொடங்கினான்.

அவனது வார்த்தைகளை இறுதி வரை பாட்டி நம்பாமல் இருக்க கடைசியில் தன் மகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் இல்லாவிடின் இருவரும் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என மிரட்டலாக குகன் கூற மைவிழியோ அதிர்ந்து போனாள்.

“என்னோட பொண்ணு இன்னும் சின்ன பிள்ள இல்ல. அவளுக்கு எல்லாமே புரியும். படத்துல நடிச்சு பெரிய ஆளா விரும்புவாளா இல்லைன்னா வயசான காலத்தில  அம்மாச்சியோட வீட்டை விட்டு வெளியே போய் கஷ்டப்படுவாளா….” என்றவாறு மைவிழியை உறுத்து விழித்தார் அவர்.

தான் இதற்கு ஆம் என கூறாமல் போனால் அம்மாச்சியுடன் எங்கு செல்வது என்ற பயத்துடன் இருந்தாள் மைவிழி.

வீட்டை விட்டு வெளியே சென்று கஷ்டப்படுவதை விட தன் தந்தை சொல்லும் வேலையை செய்வதே சிறந்தது என முடிவெடுத்து ஆம் என பதிலளித்தாள் மைவிழி.

அவளை பொறுத்த வரையில் நடிப்பது என்பது சாதாரண வேலை ஒன்றுதான் எனும் எண்ணமே இருந்தது. அதனுள் உள்ள நன்மை தீமை பற்றி எதையும் அறியாமல் செல்லத் தயாரானாள் நம் நாயகி.

அவளுடைய  ஒற்றைச் சம்மதம் அவளுடைய வாழ்க்கையை மாத்திரம் அல்லாது அவளுடைய கற்பையும் சிதைக்கப் போவதை அறியாது போனாள் அவள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!