வேந்தன்… 61, 62,63
மக்களே படிச்சுட்டு உங்க கமெண்ட் சொல்லலாமே, and லைக் தரலாம்.
ஆரியன் காரை ஓட்டிட, பின் இருக்கையில் மிராவும் நளிராவும் அமர்ந்திருந்தனர். வாடிய மலராக படுத்திருந்தாள் நளிரா. வாந்தியும் சோர்வும் அவளைப் பாடாய்ப் படுத்தியெடுக்க, சற்று நேரம் சேர்ந்தாற் போல அமர்ந்திருக்க முடியவில்லை அவளால்.
“நளிம்மா நம்ம வீட்டுலயே இருந்திருக்கலாமேம்மா. நான் பக்கத்துலயே இருப்பேன்ல” மிரா அவளது சோர்வான முகத்தைக் கவலையோடு வருடி விட்டுக் கேட்டாள்.
“இல்லத்த. எனக்கு அங்கே இருக்கறதில் எந்தப் பிரச்சனையும் இல்லைதான். அவர் மேலயும் எனக்கு கோபம் எதுவும் இல்லதான். சொல்லப் போனால் அவர் மாதிரி யாராலும் லவ் பண்ணவே முடியாது. ஆனால் அவரோட அந்தக் குணம் ரொம்பத் தப்பு அத்தை. எனக்கு பயமா இருக்கு. இப்படியே போனா நாளைக்கு உங்க பேரன் பேத்தின்னு வந்தா இன்னும் பாதிக்கப்படுவார். இவரோட மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு அத்த” நளிரா மிராவுக்கும் வேதனையான முகத்துடன் காரை ஓட்டும் ஆரியனுக்கும் சேர்த்தே சொன்னாள்.
ஆரியன் ஒரு இளநீர் கடையின் முன் காரை நிறுத்தினான்.
“மிரா லெமன் கலந்து வாங்குறேன். வாமிட் நிற்கும் நளிராவுக்கு” சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கினான். பெண்கள் இருவரும் தனித்துப் பேசட்டுமே என்ற எண்ணத்தில். தவிரவும் இவனுக்குமே கைகால்களை அசைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
“என்னம்மா என்னென்னமோ சொல்லுற? அவன் நல்லாத்தானே இருக்கான்” மிராவுக்கு கவலை பிடித்தது.
“நல்லாத்தான் அத்தை இருக்கார். ஆனால் எங்கிட்ட அவர் அளவுக்கு அதிகமாவே பொசசிவ்வா இருக்கார். அவருக்கு கொஞ்சம் டைம் தரேன். முடிஞ்ச அளவுக்கு மாறட்டும். நானும் இதை சாக்கா வச்சுக்கிட்டு எங்க ஊர்ல அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கன்னு எல்லோரையும் மீட் பண்ணி பேசிட்டு வரேன். கொஞ்சம் வெளி மனுஷங்களையும் பார்த்துட்டு வரேன்”
நளிரா புலம்புவதைக் கேட்ட மிராவுக்கு, யாருக்குன்னு பேச? என்று புரியவில்லை. மகனுக்காகப் பேசினால் மருமகளுக்கு அநியாயம் செய்தது போலாகி விடும். இவளுக்காகப் பேசினால் மகனை விட்டுப் பிரிந்து செல்ல ஊக்குவிப்பது போலாகும். மீரா தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
.. .. .. .. ..
“வாங்க வாங்க” அவர்களை உள்ளே வரவேற்ற ராஜன் இருக்கைகளில் அமரச் சொன்னார்.
“மாப்பிள்ளை இப்பதான் போன் பண்ணார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” மலர் சிரித்த முகமாக சொல்லவும்.
என்ன சொன்னான்? ஆரியன் மிரா நளிரா மூவருமே கேள்வியோடு பார்த்துக் கொண்டார்கள் ஒருவரை ஒருவர்.
அது சமயம் நளிராவின் மொபைல் ஒலித்தது, எடுத்துப் பார்க்க சிபின்தான். அதை அப்படியே மீராவிடம் தந்தாள்.
“ம் சொல்லுப்பா”
“மாம் அவளுக்கு அம்மா பக்கத்துல இருக்கணும்னு தோணுது. அப்புறம் வளைகாப்புக்கும் சேர்ந்தே இருந்துட்டு வரட்டும்னு நளிரா கேட்டுகிட்டதால அனுப்பிட்டேன்னு சொல்லிட்டேன். அதையே சொல்லி வைங்க” அவனிடம் எப்போதும் போல அதே அழுத்தம்.
“சரிப்பா” சொன்னவர் நளிராவிடம் தந்தார்.
அவன் குரலை கேட்க வேண்டுமே என்ற தவிப்பு எழுந்தாலும் அடக்கிவிட்டு, மொபைலை அங்கே இருந்த மேஜையின் மீது வைத்தாள். அங்கே அவனும் அவளது குரலைக் கேட்க ஆவலாக இருந்து ஏமாந்து போனவனாய் போனை அணைத்தே வைத்துவிட்டான்
.
சற்று நேரம் பொதுவாய் பேசிவிட்டு, சாப்பாட்டு வேலையையும் முடித்தவர்கள், இருக்கையில் அமர்ந்துகொள்ள.
“வளைகாப்பு விஷயமா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் சம்மந்தி” ராஜன் அவர்களுக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தார்.
“சொல்லுங்க” ஆரியன் அவர்களை யோசனையாகப் பார்த்தான்.
“நளிராவும் இப்ப மாசமா இருக்கா. கொஞ்சம் பொறுத்து மூணு வளைகாப்பையும் ஒண்ணாவே வைக்கலாம்னு யோசிச்சோம். இந்த யோசனை கூட பெரிய சம்மந்தி சொன்னதுதான்” ராஜன் முகத்தி எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
“மூணும் பொண்ணுங்களா இருக்கே ராஜா. கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்ள ஒருவழி ஆக்கிடுவாங்க போப்பா” என்று அனைவரும் ஏளனம் செய்திருக்க.
அதையெல்லாம் கண்டு கொள்ளாது ஒவ்வொரு மகளுக்கும் என்ன விருப்பமோ அதைத் தட்டிக் கழிக்காமல் அவர்களின் போக்கிலேயே பெற்றவர்களும் சென்றனர்.
மூன்று பெண்களையும் இளவரசியாகவே நடத்தினார்கள்.
மூன்று பெண்களுமே இப்பொழுது நல்லபடியாக வாழ்கிறார்கள்.
அதுமட்டுமா, முதலில் ஒரே ஒரு அறை மட்டுமே இருந்தது. ஆர்த்தியும் சைத்ராவும் ஒரே நேரத்தில் தாய் வீட்டிற்கு வர மாட்டார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் வருவார்கள். புகுந்த வீட்டிலும் ஒருவர் இருப்பது போல கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.
மனோகரியையும் தனித்து விடமாட்டார்கள் எப்போதுமே. அதனால் அப்போதெல்லாம் ஒரு அறை மட்டுமே போதுமானதாக இருந்தது.
நளிரா அன்று வரும் பொழுதுதான் அவர்களுக்குமே உரைத்தது. ஒரு ரூம் மட்டுமே போதுமானதாக இருக்காதென்று.
அதனால் மூன்று பெண்களுமே தங்கள் சேமிப்பில் இருந்து வீட்டின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் மூன்று ரூம் வருவது போலக் கட்டிவிட்டார்கள். சொல்லப் போனால் அவரவர் அறைகளை அவரவர் கட்டிக்கொண்டது போலத்தான்.
கட்டி முடித்த பின்தான் பெரியவர்களுக்கும் நிம்மதி ஆகிற்று. மூன்று பெண்களுமே ஏதாவது விசேஷம் என்றால் தங்கள் கணவனோடு வந்து தங்கி இருக்கலாமே என்று. மகள்களை நினைத்துப் பூரித்தும் போவார்கள்.
“அப்போ இவளுக்கு ஏழும் அவங்களுக்கு ஒன்பது மாசமும் ஆகும்தானே. உங்களுக்கு சரின்னா எங்களுக்கும் சரிதான்ப்பா. அப்படியே பண்ணிக்கலாம். எங்க பக்கமிருந்து நாங்க என்ன செய்யணும்னு சொல்லிடுங்க. பண்ணிடுறோம்” மிரா சம்மதித்து விட்டாள்.
நளிராவுக்கு மறுப்புமில்லை விருப்புமில்லை. கடினப்பட்டு சிரித்தது போலவே நடிக்க வெகுவாக கஷ்டப்பட்டு அமர்ந்திருந்தாள். மாமனார் மாமியார் சென்றதும், சுபி வீட்டிற்கு செல்ல வேண்டும் அவளுக்கு. ஏன் எதற்கு என்று எதையும் ஆராயாது அரவணைக்கும் தோழி அவள்.
இங்கே முகம் வாடினால் கூட, மிரளும் பெற்றோர்களிடம் சுதந்திரமாக கண்ணீர் கூட விடமுடியாது அவளுக்கு. மனதில் உள்ள கவலைகள் தீரும் மட்டும் அழுதால் ஒழிய, தன் முகத்தில் தெளிவு வராது என்று நம்பினாள்.
சுபிக்கு கால் பண்ணியவள் தான் அங்கே வருகிறேன் என்று கூறிவிட்டாள். பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்கவும், இவள் குளித்து உடை மாற்றிவிட்டு வந்துவிட்டாள். சுபியின் உடைகள் இவளுக்குப் பத்தாது என்பதால் ஒரு செட் உடைகளும் எடுத்துக் கொண்டாள்.
“சரிங்க சம்மந்தி என்ன ஏதுன்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க. நாம அப்படியே பண்ணிடுவோம்” ஆரியனும் மிராவும் கிளம்ப.
“அம்மா நான் இவங்களோடவே கிளம்பி சுபி வீட்டுல இறங்கிக்கறேன்” நளிரா தானும் அவர்களோடு கிளம்பினாள்.
மிரா அவர்கள் விடவில்லை என்றால் நளிரா வருத்தப்படுவாளே என்று கவலையாகப் பார்க்க. அவர்கள்தான் மகள்கள் விருப்பயம்தான் தன் விருப்பம் என்று நினைப்பார்களே அதனால்,
“சரிம்மா. அண்ணா கூட கார்ல வந்திடுவியா. இல்ல சுபி கூட வரியா? அக்காகிட்ட நீ வந்த விஷயம் சொல்லணும் அதான் கேட்கறேன்” மலர் கேட்டார்.
“அம்மா இன்னைக்கு சுபி வீட்டுலயே இருந்துக்கறேன். நாளைக்கு நைட் இங்க வந்துருவேன். அக்கா ஆர்த்திகிட்ட சுபி வீட்டுக்கு போயிட்டேன். நாளைக்கு நைட் அவங்களை இங்க வரச்சொன்னேன்னு மட்டும் சொல்லிக்கங்க” நளிரா தாயிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
“அப்ப நாங்க வறோம் சம்மந்தி” மிரா மலர் செய்து தந்த பலகாற பைகளோடு கிளம்பினாள். தாய் வீட்டுக்கு வரும் மகளை பலகாரம் இனிப்பு வகைகள் செய்து தருவது போலவே மிராவுக்கு பிடித்தது அனைத்தையும் செய்து தந்தார்.
.. .. .. .. ..
அன்று இரவு அவனின் குறுஞ்செய்திக்காக மொபைலை எடுக்க, அதில் நேற்று இரவு செய்தி மட்டுமே இருந்தது.
தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு வியப்பு என்ன இது எதுவுமே அனுப்பாம இருக்காரு, ஒன்றும் புரியாமல் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நிதர்சனம் உரைத்தது. அவனை உயிரோடு சாகடித்துவிட்டு வந்துவிட்டோம் என்பதும் உரைக்க, அவளுக்கு அவனில்லாத தனிமை பிடிக்கவே இல்லை.
“ஆஆ.. ஆ!” ஆவேசமாய் மொபைலை சுவற்றில் எரிந்து உடைத்தவள் வாய்விட்டுக் கதறி அழுதாள்.
தான் செய்த காரியத்தினால் சுக்கு நூறாக உடைந்த மனதை தேற்றும் வழி புரியாது அழுது கரைந்தாள்.
சுபிதான் அவளைத் தேற்ற முற்பட்டாள். தோழியின் கண்ணீர் சுபியை வேதனைக்குள்ளாக்கியது. அவளாகத் தேறி வந்து சொல்வதை சொல்லட்டும் என்று அவளது கண்ணீரை தன் விரல்களால் துடைத்துவிட்டாள்.
ஆம் வந்ததில் இருந்து இப்பொழுது வரைக்கும் அவளிடம் எதுவும் பேசாமல் நளிரா அழுது கொண்டே இருந்தாள். நல்லவேளை சுபியின் பெற்றவர்கள் வீட்டில் இல்லை என்பதால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காரணம் காட்டி அவளை இரண்டு இட்லி உண்ண வைப்பதற்குள் போதும் போதுமென்றானது அவளுக்கு.
தன் மடியில் படுத்து, தலையணையை மார்போடு இறுக கட்டிக்கொண்டு அழுபவளை, எப்படித் தேற்றுவது என்றரியாமல் திணரிப் போனாள் சுபி.
அவளது ஒரு செக்கன் அழைப்பு பார்த்த சிபினுக்கும் புரிந்தேதான் இருந்தது. தூக்க கலக்கத்தில் அவளை அறியாது அவனைத் தேடியிருக்கிறாள் என்று, அவனது இதழ்களில் ஒரு வெறுப்பான புன்னகை உதயமாக,
தன்னை நினைத்தே அசிங்கமாய் இருந்தது அவனுக்கே. எவ்வளவு தூரம் அவளைத் தேடியிருக்கிறான், அவள் மீதான பித்தில், தன்னோடு தன் தாய் தந்தையையும் அல்லவா தலை குனிய வைத்துவிட்டோம்.
தன் அருகாமை காதல் இதெல்லாம் அவளுக்கு திகட்டுகிறது அவ்வளவுதானே. ஓகே இனி அவளை எதற்காகவும் தொந்தரவு செய்யவே மாட்டேன். இந்த நினைப்பே கசந்தது அவனுக்கு.
வேந்தன்… 61
விடிய விடிய தூங்காது அழுதவாறே இருந்த நளிரா, விடியலுக்குப் பிறகுதான் அனத்தல் குறைந்து உறங்க ஆரம்பித்தாள்.
மடியில் படுத்திருக்கும் தோழியையே வேதனையாகப் பார்த்திருந்தாள் சுபி. தன் தோழியைப் பற்றி தனக்கு எல்லாமே தெரியும் என்று பெருமைப்படுவாள் சுபி. ஆர்த்திக்கு இதில் பொறாமையே உண்டு.
“அதெப்படி உன்கிட்ட மட்டும் எல்லாமே சேர் பண்ணிக்குவா?” என்று வெடுக்கெனக் கேள்வி கேட்பவளுக்கு எப்படிப் பதில் சொல்வதாம். ‘தோழி என்பவள் உறவு என்ற எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவள்’ என்று.
நளிராவுக்கும் சுபிக்கும் அப்படியொரு நட்பு இருந்தது. சுபியின் பெற்றோரும் நளிராவின் பெற்றோர்களும் அதில் தலையிடவே மாட்டார்கள்.
இதோ இப்பொழுது கூட வீட்டுக்கு வந்தும் வராமல் தோழியைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பியவளை மலர்விழி எந்தக் கேள்வியும் கேட்காமல் அனுப்பி வைத்துவிட்டார்.
ஏனோ சிபினை சந்தித்ததில் இருந்து இன்று வரைக்கும் நளிராவிடம் கேட்கலாமா கேட்க வேண்டாமா என்று தள்ளிப் போடும் கேள்விகள் சில சுபியிடம் இருக்கத்தான் செய்தது.
கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கியே கேள்விகளை நெஞ்சுக்குழிக்குள் அப்படியே அழுத்திக் கொள்வாள் சுபி. ஒருவேளை தான் கேட்டு அதற்காக தன்னிடம் பேசாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று தவிர்ப்பாள்.
காலிங்பெல் அடிக்கவும்தான் அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்கியவள், கதவைத் திறக்க எழுந்துப் போனாள்.
அவர்களின் கடையில் வேலை செய்யும் பையன்தான் நின்றிருந்தான். நளிராவின் வீட்டிற்குப் பக்கத்தில் வசிக்கிறான்.
“என்னடா?” கேட்ட சுபிக்கு ஆண்ட்டி சாப்பாடு தந்துவிட்டிருப்பார் என்று தோன்றியது. நேற்றும் அப்படித்தான் சாதமும் இட்லியும் அதற்கு சாம்பார் ரசமும் தந்துவிட்டிருந்தார்.
இரவு நளிரா எதை சாப்பிட நினைக்கிறாளோ அதுவே உண்ணட்டும் என்ற அக்கறையில் தந்துவிட்டிருந்தார்.
“சுபிக்கா! நளிரா அக்கா வீட்டுல இருந்து சாப்பாடு தந்துவிட்டாங்க. அப்புறம் இன்னைக்கு கடையில் சரக்கு வருது. அதுக்கு பணம் தரணும். நான் கால் பண்ணிச் சொல்லும் போது வந்துருங்கக்கா” அவன் குடுத்து விட்டுச் செல்ல.
“டேய் தாங்க்ஸ்டா” சுபியின் நன்றி அவன் முதுகுக்குப் பின் காணாது போனது.
“ஆண்ட்டி தாங்க்ஸ்” மலருக்கு கால் பண்ணி நன்றியைத்தெரிவித்தாள் சுபி.
“அடிக்கடி நானும் சொல்லிட்டுதான் இருக்கேன். நன்றி சொல்லாதன்னு. சொன்னாக் கேக்குறியாம்மா” மலர் அவளைச் செல்லமாய்க் கண்டித்தார்.
ஆம் சுபியின் பெற்றோர் திருப்பதி சென்றிருந்தனர். சுபி நளிராவின் வீட்டில்தான் இந்த ஒரு வாரமும் இருக்கிறாள். நேற்று மதியம்தான் கடைக்கு வந்தவள் அப்படியே வீட்டிற்கும் வந்திருக்க, எதிர்பாராத வருகை நளிராவுடையது.
அவள் இருக்கும் நிலையில் அங்கே செல்வதும் சரிவராது என்று இங்கேயே தங்கிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.
“நளிரா எங்க சுபி?” மலர் விசாரித்தார்.
“அவ தூங்குறா ஆண்ட்டி. நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அதான் லேட் ஆகிருச்சு”
“மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறாளாம்மா. இரும்புச் சத்து மாத்திரை போடமாட்டேன்னு அடம்பிடிக்கறான்னு மிரா சொன்னாப்புல. முழுங்குனாளா?” மலர் விசாரிக்க.
“அச்சோ எனக்கு நினைப்பே இல்லையே. சுத்தமா மறந்துட்டேன்” சுபி பதட்டமாக நெற்றியில் அடித்துக் கொண்டாள்.
“பரவால்லம்மா ஒரு நேரம் தவறிப் போனா குத்தமில்ல. இப்ப முழுங்க வைச்சுரு. ஒழுங்கா சாப்பிடுறாளான்னு பாத்துக்க. பாட்டில்ல மாதுளை ஜுஸ் இருக்கு. உனக்கும்தான். ரெண்டு பேரும் குடிங்க” மலர் அடுக்கிக். கொண்டே செல்ல.
“அச்சோ அம்மா. நாங்க மதியம் வந்துருவோம்” அம்மாவின் அன்பில் அவளுக்கு ஆண்ட்டி என்ற அழைப்பு விட்டே போனது.
“உன்கிட்டே ஏதாவது சொன்னாளாம்மா?” மலர் அவளிடம் விசாரிக்க.
“ஆண்ட்டி?” சுபி கேள்வியாய் அழைத்தாள்.
“எதுவா இருந்தாலும் அவளுக்குள்ள வச்சுக்கிட்டு வருந்துவா சுபி. இவ அக்காங்களைப் பத்தி எங்களுக்கு கவலையே இருக்காது. இவளைப் பத்திதான் அத்தனை கவலையும். வாய்விட்டு வெளிய சொல்லவே மாட்டா. நாமளா புரிஞ்சுகிட்டு ஆறுதல் சொன்னாத்தான் உண்டும்மா” மலர் குரலில் வருத்தம் தொனிக்கச் சொன்னார்.
மகளின் முகம் பார்த்தே கணித்துவிட்டவருக்கு, அவளுடைய மாமனார் மாமியார் போன பிறகு விசாரிக்கலாம் என்று நினைத்திருக்க, அவளோ சுபியின் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். அதனால் எதுவும் பேச முடியாது போனது.
“எனக்கும் தெரியலையே ஆண்ட்டி” சுபி சொல்ல.
“சரிம்மா. மதியம் போல ஆர்த்தி சைத்ரா இங்க வரேன்னு சொன்னாங்க. கிளம்பி வந்துருங்க. மதிய சாப்பாடு இங்கயே சாப்பிட்டுக்கலாம். வெளிய சுத்துறது எல்லாத்தையும் நாளைக்குப் பார்த்துக்கங்க” அவளிடம் அறிவுறுத்திவிட்டு போனை வைத்தார் மலர்.
“யாருடி போன்ல?” நளிரா குளித்து தயாராகி வர.
திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள், “மலர் ஆண்ட்டி டி. சாப்பாடு தந்துவிட்டாங்க. மதியம் அங்க வரச் சொன்னாங்க” என்று தோழியை ஆராய்ந்தவளுக்கு, அவள் முகம் சற்றே தெளிந்திருக்கவும், திருப்தியாக இருந்தது.
“இப்பதான் எங்க அத்தை பேசினாங்கடி. நேத்து என்னை விட்டுட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் கால் பண்ணியிருக்காங்க போல. அப்ப இருந்த சூழ்நிலையில் நான் எடுக்கவே இல்லை” நளிரா தகவல் சொன்னாள் தோழிக்கு.
“ஆர்த்தியும், அக்காவும் வராங்கலாம்டி. நம்மளை வரச் சொன்னாங்க” சுபி தோழியை கேள்வியாகப் பார்க்க.
“வரட்டும்டி. விரக்தியாக சொன்ன நளிரா கையில் இருந்த மொபைலின் கேலரிக்குள் பார்வையை ஓட விட்டாள். அவள் விழிகளில் அத்தனை தேடுதல், ஆவேசம். இப்பொழுதே அவன் அருகில், வலிய அணைப்பில், ஆவேசமான தழுவலில் இருக்க வேண்டும் போல வேகம் பிறக்க, அதற்குமேல் தாள முடியாது உடைந்து போய் அழுதாள் நளிரா.
“நளி அழாதடி” அவளைத் தேற்ற முற்பட்டுத் தோற்றுப் போனாள் சுபி.
“சுபி…” நளிரா சொல்வதற்குத் திணற.
“உனக்கு அண்ணாவை பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிகிட்டியாடி. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவர் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாதிரிதான் இருந்துச்சு. இப்பக்கூட உன்னோட இந்த அழுகை” சுபி சொல்லாது நிறுத்திட.
“அவரைத் தவிர யாரையும் நினைக்கவே முடியாதுன்னு என்னோட மனசுக்குப் பட்டதாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சுபி. அப்போ அதுக்குப் பேர் என்னன்னு எனக்குப் புரியலைடி. ஆனால் இப்போ அவர் மேல அவ்ளோ காதல் எனக்கிருக்கு. ஆனால் அவர் அளவுக்கு என்னால காதலிக்க முடியாதுன்னுதான் தோணுதுடி” நளிரா சிபினின் நினைவில் முகம் மலர புன்னகைக்க..
“அப்போ எதுக்கு இந்த அழுகை?” சுபி கேட்டே விட.
“இதுவும் காதல்தான் சுபி. என்னோட உறவுகளுக்கும் என்கிட்டே உரிமை இருக்குன்னு அவருக்குப் புரிய வைக்க நினைக்கறேன். இதை அவர் புரிஞ்சுகிட்டு என்கிட்டே வருவார்ன்னு நம்பறேன் சுபி. அதுவரைக்கும் இங்கதான்” மலர்ந்த முகம் இப்பொழுது வாடிட.
“இங்க பாரு. நீ சொல்ல நினைச்சா சொல்லு. இல்லையா விடு. ஆனால் உனக்கு ஆதரவா நான் எப்பவும் இருப்பேன்” என்றவள் அவளை அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் போக, அவளை முகம் கழுவ வைத்து சாப்பிட வைத்தாள் சுபி.
“நளி, நாளைக்கு பீச் போலாமா? உன் கூட சுத்தி ரொம்ப நாள் ஆச்சு. உன்னை ரொம்ப மிஸ் பண்னேன்” சுபி சொல்ல.
“கண்டிப்பா போலாம்டி. இப்போ நாம கிளம்பலாமா?” நளிரா தயாரானாள்.
வேந்தன்… 62
காதல்!…
இந்த வார்த்தையை மனதில் நினைக்கும் பொழுதே மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு உண்டாகும். பருவங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு உணர்வையும் தரக்கூடிய வார்த்தை இது.
வார்த்தை?
ம்ஹூம் அவ்வளவு சுலபமாய் “வார்த்தை” என்று சாதாரணமாய் கடந்து போகவும் முடியாது.
வர்ணங்கள் சூழ்ந்த மாயாஜாலமாய் நம்மை ஆட்டி வைக்கும் ஒரு மாயக்கயிறுதான் காதல்…
காதல் காதலர்களுக்குள் மட்டும்தான் வரணும்னு விதி ஏதும் இருக்கா?…
நட்பு, அக்கம் பக்கத்தினர், யாரென்றே அறியாத ஒரு ரயில் சினேகிதத்திடம் ஒரு இனம் புரியாத பாசம் வருமே, அவர்களின் மொபைல் எண்ணைக் கூட வாங்கத் தோன்றாது ஆனால் அவர்களை எப்போதும் மறக்கவே முடியாது. தம்பதிகள், பேரன் பேத்திகளிடம், தாத்தா பாட்டியிடம் இவர்களுக்குள்ளும் வரும்.
மனதின் ஓரத்தில் ஓர் இனிய குறுகுறுப்பு…
மெல்லிய மழைச் சாரலின் நறுமணமாய் ஒரு உணர்வு நெஞ்சுக்குள் சிலீரென்று ஊடுருவும்.
சதாகாலமும் சீற்றமாய் இருக்கும் கடலோரம் செல்லும் பொழுது சாந்தமாய் முகத்தில் படரும் தென்றல் காற்றினைப் போல இதமாய்.
என்றென்றும் இளமையைத் தரும் ஒரு உணர்வுதான் காதல்.
எனில் சில நேரம் சுமையாய்த் தோன்றலாம்,
எல்லையற்ற மகிழ்ச்சியும் தலைகுப்புற மாறிப்போகும் தருணமும் வரும்.
நெஞ்சம் உடைந்து போக அது தரும் வலியானது நேசத்தினை எரித்து கண்ணீரில் கரைய வைத்திடும்.
நேசத்தினை பிறரிடம் விட்டுத் தராது, சிரிப்புக்குப் பின்புறம் அதை ஒலித்து வைக்கச் சொல்லும்…
நொடியில் நம்மை சிதைத்துவிடும் ஆயுதம்…
காதல் உயிரைத் தரவும் செய்யும் எடுக்கவும் செய்யும்…
…..
சிபின் தன் வேலையில் கவனமாய் இருக்க. அவன் எப்பொழுது சாப்பிடுவான் குளிப்பான், தூங்குவான் என்று எதையும் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது போனது. அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவே முடியவில்லை யாராலும்.
அவனது தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. உயிர் மனைவி விட்டுப் போனதன் வலி அவனிடம் சுத்தமாக இல்லை என்பதைப் போலவே காணப்பட்டான். முன்பு இருப்பதைப் போலத்தான் இருந்தான். துருவ் ஆரியன் எவ்வளவோ முறை அவனிடம் பேச முயற்சி செய்தாயிற்று. நின்று ஓரிரு வார்த்தையில் முடித்துக் கொள்வான்.
“என்கூட வந்து வேலையைப் பாருடா. இப்படியே சுத்திட்டு இருக்காதே” துருவ்விடம் எப்பவும் போல கண்டிப்பைக் காட்டுவதும், தாய் தந்தையிடம் பேசுவதும் எதிலும் அவன் மாற்றத்தைக் கொண்டு வரவேயில்லை.
அம்னீசியா எதுவும் வந்துருச்சா? இவர்களுக்கு சந்தேகம் வர, “சிபின் நளிரா யாருன்னு தெரியுமாப்பா?” அவன் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்துக் கேட்டே விட்டார்.
தன் கோபத்தை தாய் தாங்க மாட்டார் என்பதால் கண்களை மூடித் திறக்க, மிரா எதிரே இருக்கவே மாட்டார்.
மிராவோ சிபினின் நிலையை நினைத்து வருந்தித் தன் உடம்பையும் கெடுத்துக் கொள்வார். “அம்மா நீங்கதான் தேவையில்லாம வருத்திக்கறிங்க, அண்ணா எப்பவும் போலத்தான் கல்லைத் தின்ன மாதிரி விரைப்பா இருக்கான். ஐ ஹேட் திஸ் பேட் வைபரேஷன் ம்மா” துருவ்தான் சூழ்நிலையை இலகுவாக்க முயல்வான்.
“நளிரா இருக்கப்ப வீடே நல்லாருக்கும்டா. அத்த அத்தன்னு முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுத்துவா. உங்கண்ணன் அன்புல அந்தப் பொண்ணு மிரண்டு ஓடிட்டா. வீட்டுக்கு ஒரு பொண்ணு வரான்னு அத்தனை சந்தோஷம் எனக்கு. என்னோட விதிடா. நானே தடிமாடுங்களுக்கு ஆக்கிப் போடணும்னு விதிச்சிருக்கு” மிரா புலம்பலை அவனுக்கு காது குடுத்துக் கேட்கவே முடியவில்லை.
சிபின் தன் அறையில் இருந்து வெளியே வர, “ரெடி ஸ்டார்ட்… ம்ம்ம்… ஆரம்பிங்கம்மா. இப்ப நீங்க அவனை சாப்பிடக் கூப்பிடனும். அவன் வேண்டாம்னு போகணும். நீங்க அழுதுட்டு வரணும். இதான் இன்னைக்கு சீன் ஓகேவா” எப்போதும் நடப்பதை அவன் பிசகாமல் கூற.
கேலி செய்யும் அவனைக் கண்டுகொள்ளாது, “சிபின்! கண்ணா நில்லுப்பா” மிரா அவன் பின்னேயே ஓடினார்.
“என்ன மாம்?” தாயின் வார்த்தைகளுக்காக நின்றான்.
மகன் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்குப் புரியாதா? மகனின் கன்னத்தை வருடித் தந்தவர் “சாப்பிடுப்பா. உனக்குப் பிடிச்சதுதான் செஞ்சேன் இன்னைக்கு” கனிவோடு பார்த்தார்.
“பசிக்கல மாம்” அவரைப் பாராது கூறிவிட்டு நடக்க.
“அதெப்படி பசியில்லாம போகும்? கொஞ்சமாவது சாப்பிடு” மிராவின் குரலில் நின்றவன் “பிடிக்கலைம்மா” நறுக்கென சொல்லிவிட்டு நடந்தான் வெளியே.
இது இன்று மட்டுமில்லை கடந்த நான்கு நாட்களாகவே இதுதான் நடக்கின்றது.
மிரா சோபாவில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழவும், துருவ் அவரை எப்படித் தேற்றவென்று அறியாமல் தவித்துப் போனான்.
“நல்ல பொண்ணுடா. இவனோட குணத்துக்கு யாரும் சமாளிக்க முடியாதுன்னு நான் கவலைப்படுறப்ப, இவனா ஒரு தங்கத்தை லவ் பண்ணுறேன்னு வந்து நின்னான்”
“அவனா வந்து நின்னான்?. நாங்க கண்டுபிடிச்சு சொன்னோம்” ஆத்மா ரவிக் இருவரும் அங்கே வருகை தந்தார்கள்.
அழுதவாறு அமர்ந்திருந்த மிராவின் அருகே வந்தமர்ந்தவர்கள் “அண்ணி சீக்கிரமே மனசு மாறி வருவாங்கம்மா. கவலைப்படாதீங்க” அவர் கையைத் தட்டிக் கொடுத்தான் ஆத்மா.
“வீட்டை விட்டுப் போன பொண்ணை அப்படியே விட்டுற முடியுமாடா. நாமதானே போய் பார்க்கணும். அவ கோபத்தைக் குறைச்சு கூட்டிட்டு வரணும். இவனைப் பாரேன் எதுவுமே உரைக்காம சுத்திட்டு இருக்கான். பயமா இருக்குடா. இத்தனை நாளா இவனை நினைச்சுக் கவலை. இவன் ஆரம்பிச்சு வைச்சுட்டான். ஆகமொத்தம் நிம்மதியே இல்லடா எனக்கு” மிரா உடைந்து அழுதார்.
“அம்மா!” ரவிக் ஆத்மா துருவ் மூவருமே திகைத்து அமர்ந்திருந்தார்கள். வேறு வழியே இல்லை தாங்கள்தான் இதில் ஏதாவது செய்ய வேண்டுமென்பதும் புரிந்தது.
“இங்க பாருங்க. அவங்க ஒண்ணு சேருற வரைக்கும் நீங்க எங்கயும் சுத்த நான் விடமாட்டேன் பாத்துக்கங்க. ஒழுங்கா வீட்டோட கிடங்க” மிரா துருவ்கிட்டே மிரட்டலாகக் கூறிவிட்டார்.
என்னடா இது வம்பாப் போச்சு, இவன் பண்ணுற அழும்புக்கு நாமளும் ஊரைச் சுத்த முடியாம போவுதே. இவனை இப்படியே விட்டுட முடியாதே, என்று துருவ் தான் அவர்களை சேர்ந்து வைக்கும் முயற்சியில் இறங்கினான். அவனால் சிரிக்காமல், விளையாடாது ஊர் சுற்றாமல் இருக்கவே முடியாது.
மதியம் மூவரும் சேர்ந்து சிபினைப் பிடித்துக் கொண்டனர்.
தன் முன் நின்றவர்களை முறைத்த சிபின், “என்னடா? வழியை விடுங்க” அதட்டினான்.
“எங்களுக்கு உன் கூடப் பேசனும் மச்சி” ஆத்மாதான் வாய் திறந்து சொன்னான்.
“அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம். போய் வேலையைப் பாருங்க” சிபின் அங்கிருந்து நகர. அவர்கள் பேச வருவது எதைப் பற்றியது என்பதைப் புரிந்தவனாய் தவிர்த்தான் சிபின்.
“பேசணும்னு சொல்றோம் அண்ணா. எங்கக் கூடப் பேசித்தான் ஆகணும்” துருவ் சிபின் கையைப் பற்றி நிற்க வைத்தான்.
“துருவ். விளையாடாதே. வழியை விடு” சிபினின் சீற்றத்தில் பயம் வந்தாலும், துருவ் விலகிப் போகவில்லை. அடிக்கப் போறியா அடிச்சுக்கோ, என்பது போல நின்றுவிட்டான்.
அவன் நிற்கும் தோரணையைப் பார்த்த சிபினுக்கு கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது, “மாம்” ஓங்கிய குரலில் அழைக்கவும், மிரா என்னவோ ஏதோ என்று அங்கே ஓடி வந்தாள்.
“நீ என்ன கத்தினாலும் சரிதான். நாம நின்னு பேசித்தான் ஆகணும். இப்படியே விட முடியாது உன்னை” துருவ் பிடிவாதம் மாறாது சொன்னான்.
“துருவ் என்ன இதெல்லாம். அண்ணாகிட்ட இப்படியா மரியாதை இல்லாம பேசுவ. அவனுக்கு வழியை விடு” மிரா பதறினாள். எங்கே இருவருக்கும் சண்டை வருமோ என்று அஞ்சினாள்.
“அவனோட விருப்பத்துக்கு விட்டுவிட்டு இப்போ பைத்தியம் போல சுத்திட்டு இருக்கான் மா. இவன் பண்ணுறது உங்களுக்குத் தெரியுமா? இவன் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா. முதல் மாதிரி இவன்கிட்ட நம்மால பேச முடியுதா? இவனைப் பார்க்கப் பார்க்க பயமா இருக்கும்மா. இப்படியே விட்டு வச்சா இவன் நமக்கு இல்லாம போயிடுவான்ம்மா” துருவ் ஆவேசமாய்க் கத்தினான். இதற்கும் மேல் இனி பொறுமையாய் இருக்கவே முடியாது என்று தோன்றியது அவனுக்கு.
“என்னால முடியலைம்மா. எப்பப் பாரு நீங்க ஒருபக்கம் சோகமா அழுதுட்டே இருக்கறதும், அப்பா ஒரு பக்கம் பொம்மையா நடமாடுறதும், இதோ இந்தப் பெரிய மனுஷன் ஒருபக்கம் யாருகிட்டயும் ஒட்டாம அவரு பாட்டுக்கு வறதும் போறதுமா இருக்கார். பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும்மா. பேசாம நான் கோமாவுலயே இருந்திருக்கலாம்” தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்
மிரா அதற்கும் மேல் துருவ்வைத் தடுக்கவில்லை.
“கத்தாதடா. உனக்கு நல்லதில்ல” சிபின் இறுக்கம் விடுத்து அக்கறையாகச் சொன்னான்.
“பரவால்ல. என்னாலதான உனக்கு இப்படி ஆச்சு. அப்போ எனக்கு ஏதாவது ஆகட்டும். எனக்கும் கில்ட்டியா இருக்காது பாரு” துருவ் முதல் முறையாக சகோதரனை எதிர்த்து நின்றான்.
“நீ யாருகிட்ட பேசுறேன்னு உனக்கு நினைப்பு இருக்கா துருவ்” சிபின் அவனை அதட்டிட.
“நல்லாவே நினைப்பு இருக்குண்ணா. கிடைச்ச நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கிற நல்ல மனுஷன்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்” துருவ் அவன் அதட்டலுக்கு பயப்படாது சொன்னான்.
“இப்ப என்னடா?” சிபின் மொபைலைப் பார்க்க.
அதைப் பிடுங்கி தன் கையில் வைத்துக்கொண்ட துருவ், “என்கிட்டே பேசணும் நீ” அண்ணனின் முறைப்பையும் கண்டுகொள்ளாது சொன்னான்.
ஒரு மூச்சை இழுத்துவிட்ட சிபின், இருக்கையில் சென்று அமர்ந்தான்.
மிரா ஜூஸ் எடுத்துட்டு வரவும், கூடி என்பதுபோல துருவ் பார்க்கவும், அதையும் ஒரே முடக்கில் குடித்துவிட்டு, திரும்பவும் துருவ் முகத்தையே ஊன்றிப் பார்த்தான்.
அவன் பார்வையில் நடுக்கம் பிறந்தாலும், சமாளித்தவன், “உனக்கு அண்ணி வேணுமா வேண்டாமா?” நேருக்கு நேர் நின்று கேட்க.
“அவளுக்கு நான் வேண்டாமாம்டா” சிபின் முகம் கருக்கச் சொன்னான்.
“அவங்க அப்படிச் சொல்லவே இல்ல” ஆத்மா இடையில் வந்தான்.
“ஆமாமா நானும் கேட்டேன்” ரவிக் குறுக்கிட.
“நாயே மொத்த சம்பவத்துக்கும் நீதான்டா காரணம். எட்டப்பன் வேலையைக் காட்டாம இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல இப்ப” ஆத்மா ரவிக் காதைப் பிடித்து முறுக்க.
“டேய் எப்பப் பார்த்தாலும் அரட்டையே அடிக்காதீங்க. பிரச்சனையைப் பத்தி பேசுங்க” மிராதான் அவர்களை அடக்கினாள்.
“உங்களுக்கு அவங்க வேணுமா வேண்டாமா. இப்படியே விட்டுறப் போறிங்களா அண்ணா” துருவ் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க,
அண்ணனின் முகத்தைப் பார்த்தவனுக்கு அதிர்ந்தே போனது. நான் எதற்கும் கலங்க மாட்டேன் என்பது போலவே காட்டிக்கொண்டாலும், வேதனையின் சுவடுகளை தாங்கி நின்ற விழிகள் அவனது உள்ளக் கொதிப்பை அப்பட்டமாகக் காட்டியது. எப்பொழுது தூங்கினானோ விழிகள் சிவந்திருந்தது.
“அண்ணா எங்க பேச்சை கேக்கறதை விட வேற வழி இல்ல உங்களுக்கு” துருவ் இரக்கமே பாராமல் ஸ்டைலாக தோள்களைக் குலுக்கிச் சொல்ல.
“ப்ச் போடா” சிபின் அலட்சியம் செய்தான்.
“அண்ணா அண்ணி மனசை நாங்க மாத்துவோம் நம்புங்க” துருவ் சொல்ல.
“அதுக்கும் முதல்ல இவன் திருந்தினாவே அவ தானா வீட்டுக்கு வருவாடா” மிரா சொல்லிவிட்டு இரு கரத்தாலும் வாயை மூடிக் கொண்டாள்.
சிபின் அதற்கு எதுவுமே பேசவில்லை. இவர்கள் முயற்சியில் தன்னவள் தன்னுடன் சேர்ந்தால் சரிதான் என்பது போல அவர்கள் சொல்வதைக் கேட்கத் தயாரானான்.
“சிபின் அவன் ஹிஸ்டரி கேவலமா இருந்தாலும், கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்டுத் தருவான். தாராளமா நம்பலாம் அவனை” ஆத்மா துருவ்க்கு சர்ட்டிபிக்கெட் தந்தான்..
“பாத்துடா பழி வாங்கிடப் போறான்” ரவிக் அண்ணன் தம்பி இருவரின் நிலையையும் பார்த்து நினைக்கும் பொழுதெல்லாம் அடக்க முடியாது சிரிப்பான். அப்போதும் சிரிப்பை வாய்க்குள் மறைக்க.
“டேய் நீ வேற” ஆத்மா அவனை முறைத்தான்.
“டேய் அவங்க சண்டையே வேறடா. சிபினுக்கும் அண்ணிக்கும் இருக்க பிரச்சனை பொசசிவ். இதுல நீங்க என்னத்த பண்ணுவீங்க. பேசாம கண்ணு காது வாயின்னு மூணும் ஆப்சென்ட் ஆன பொண்ணா பார்த்துக் கட்டியிருக்கலாம். அவங்களும் விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க” மூவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள.
சிபின் இவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் பொண்டாட்டியை எப்படி திரும்ப அழைத்து வருவது என்றே சிந்திக்க.
இவர்கள் மூவரும் இஷ்டத்துக்கு கலாய்த்தார்கள்.
“இப்ப பேசாம இருக்கறீங்களா இல்லையாடா” துருவ் அவர்களை சப்தம் போட. அனைவரும் கப்சிப்.
“டேய் அண்ணா நாளைக்கே நம்ம நாலு பேரும் தூத்துக்குடி போறோம்” துருவ் சொல்ல.
“நாங்க எதுக்குடா. எங்க மேரேஜ்க்கு பத்திரிக்கை வைக்கணும்” ஆத்மா பதற. ரவிக் அப்போதே எஸ்கெப் ஆகத் தயார்தான்.
“அதுக்கும் முதல்ல எங்க அண்ணா வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கறோம்டா. நண்பர்கள்னு கூடவே சுத்துறீங்க. இப்ப விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?” துருவ் அவர்களிடம் சண்டைக்குப் போய்விட்டான்.
“சரிடா. வறோம். வர்ற இடத்துல நீ ஒரு எட்டு போட்டு வைக்காம இருந்தா சரிதான்” நண்பர்கள் ஒப்புக் கொள்ள. நால்வரும் கிளம்பியாயிற்று.
Post Views: 320