“உனக்கு கொஞ்சமாவது எங்க மேல அக்கறை இருக்கா..? அப்படி அக்கறை இருந்திருந்தா நான் சொன்னத பண்றதுக்கு நீ இவ்வளவு தயங்க மாட்ட..” என்ற அன்னையை வெறித்துப் பார்த்தாள் செந்தூரி.
“ஏன்மா இப்படி பேசுறீங்க..? உங்க மேல அக்கறை இல்லாம இருக்குமா..? என்னோட உலகமே நீங்களும் அப்பாவும்தானே.. தயவு செஞ்சு இப்படி பேசாதீங்கம்மா.. மனசுக்கு கஷ்டமா இருக்கு..” என கலங்கிய குரலில் கூறினாள் செந்தூரி.
“பொய் சொல்லாதடி… நிஜமாவே அக்கறை இருந்தா இப்படி நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு இருப்பியா..? ஒவ்வொரு மாசமும் இஎம்ஐ, வீட்டு வாடகை நம்ம வீட்டு செலவுக்குன்னு காசு புரட்டவே நான் எவ்வளவு சிரமப்படுறேன்னு உனக்கு நல்லாவே தெரியுமே.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இப்படி அமைதியா இருந்தா நான் என்னதான் நினைக்கிறது..?”
“அம்மா ப்ளீஸ்.. என்ன வேற என்னதான் பண்ண சொல்றீங்க..? வீட்ல இருக்குற கஷ்டத்துல இவ்வளவு பெரிய டிவி ரொம்ப முக்கியமா..? முன்னாடி இருந்த டிவி நல்லாதானே இருந்துச்சு.. அது சின்னதுன்னு தூக்கிப் போட்டுட்டு இவ்வளவு பெரிய டிவியை இஎம்ஐல வாங்கி வச்சிருக்கீங்க…
வாஷிங் மெஷின் வேணாம்.. நான் கையாலேயே துணி துவைக்கிறேன்னு சொன்னேன்.. இல்ல அதெல்லாம் வீட்டுக்கு வந்தாதான் நல்லதுன்னு அதையும் வாங்கி வச்சிட்டீங்க.. போன மாசம்தான் புதுசா பிரிட்ஜ் வாங்கினோம்… எல்லாத்தையும் ரெடி கேஷ் கொடுத்து வாங்கினா கூட பரவால்ல.. இஎம்ஐ ல வாங்கிக் குவிச்சா எப்படிமா சமாளிக்க முடியும்..?
“நான் பாக்குற டைப்பிங் வேலைக்கு மாசம் பதினையாயிரம் கிடைக்கிறதே பெரிய விஷயம்.. அதுல இஎம்ஐ கட்டவே காசு பத்த மாட்டேங்குது.. என்னால முடிஞ்ச அளவுக்கு நம்ம குடும்பத்தை நல்லாதானே பாத்துக்குறேன்..” என்றாள் அவள்.
செந்தூரி கூறிய வார்த்தைகளில் அவளுடைய அன்னை மேகலாவின் முகமோ கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது.
“என்னடி சொல்லிக் காமிக்கிறியா..?” என ஒரு மாதிரி குரலில் மேகலா கேட்டு விட பதறிப் போனாள் செந்தூரி.
“ஐயோ அம்மா நான் எதையும் சொல்லிக் காமிக்கல.. நாம இருக்க நிலைமைக்கு கடன் பட்டு எதுக்காக திங்க்ஸ் வாங்கணும்..? இதெல்லாம் வீண் செலவுதான்மா.. உங்க துணியையும் நானே கையால துவைச்சு கொடுத்துருப்பேனே..” என்றவளுக்கு எப்படி தன்னுடைய அன்னைக்கு சொல்லி புரிய வைப்பது என்று தெரியவே இல்லை.
ஏதாவது ஒன்றைப் பார்த்ததும் கடனை வாங்கியாவது அதை வாங்கி வந்து வீட்டில் வைக்கும் பழக்கமுடைய தன் அன்னையை குற்றம் சொல்லவும் முடியாது சமாளிக்கவும் முடியாது திணறினாள் அவள்.
தந்தை நன்றாக இருந்த வரைக்கும் இதைப் பற்றி எல்லாம் அவள் சிந்தித்ததே இல்லை. அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார்.
ஆனால் அவருடைய உடல்நிலை சரியில்லாது அவர் படுக்கையில் விழுந்த போது குடும்பத்தின் மொத்தப் பாரமும் அவளுடைய தலை மீது விழுந்தது.
“பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க… என்னோட புருஷன் உழைக்கும் வரைக்கும் என்ன ஒரு வார்த்தை சொன்னது கிடையாது.. நான் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்திடுவாரு.. ஏன் உனக்கு மட்டும் குறையா வச்சாரு.. நீ கேட்ட எல்லாத்தையும் வாங்கி குவிச்சாரே… இப்போ படுத்த படுக்கைல மட்டும் இல்லைன்னா இப்போவும் இந்த வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் அவரே பண்ணி இருப்பாரு.. நான் எதுக்கு உன்கிட்ட கேட்டுட்டு இருக்கப் போறேன்..”
“புரியாம பேசாதம்மா.. அப்பா மாசம் 50 ஆயிரத்துக்கு மேல சம்பாதிச்சாரு.. இரவு பகலா அந்த ஹோட்டல்ல வேலை பார்த்து நாங்க கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாரு.. ஆனா இப்போ அதே நிலைமை நம்ம வீட்ல இல்ல.. என்னோட சம்பளம் சாப்பாட்டுக்கே சரியா இருக்கு..”
“போதும்டி… உன்னால முடியலன்னா முடியலைன்னு சொல்லு.. நான் ஏதாவது வேலை தேடிப் போறேன்…” என்றதும் தன் தலையைப் பிடித்துக் கொண்டாள் செந்தூரி.
“ஐயோ.. இப்ப நான் என்னதான் பண்ணனும்..?”
“தெரியாத மாதிரி கேக்காத.. உன்கிட்ட எத்தனையோ நாளா இதப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்கேன்..” என சலிப்போடு கூறினார் மேகலா.
“அம்மா நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் சின்ன விஷயம் கிடையாது.. சினிமால அவ்வளவு சீக்கிரமா வாய்ப்பும் கிடைக்காது… எனக்கு பயமா இருக்கும்மா.. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க… இன்னும் நாலு மாசத்துக்க அப்புறம் என்னோட சம்பளத்தை மேனேஜர் சார் அதிகமாக்கி தரேன்னு சொல்லி இருக்காருமா… எல்லாத்தையும் சமாளிக்கலாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க…”
“இங்க பாருடி பொறுமை பொறுமைன்னு நல்ல வாய்ப்பு எல்லாத்தையும் இழந்துடாத.. அதிர்ஷ்டக் காத்து எப்பவுமே நம்ம வீட்டு வாசல்ல வந்து கதவைத் தட்டாது.. இந்த முறை உன்னை கட்டிக்கப் போறவன் மூலமா வந்திருக்கு.. அந்த வாய்ப்பை விடாம கெட்டியா பிடிச்சுக்கோ..”
எரிச்சலோடு இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் செந்தூரி.
சினிமா துறை என்பது என்ன சாதாரண விடயமா..?
சினிமா துறையைப் பற்றி எத்தனை எத்தனை விதமான விடயங்களை எல்லாம் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.
அம்மாடியோ அதையெல்லாம் எண்ணும்போதே அவளுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது.
‘இந்த சேகருக்கு அறிவே இல்ல.. நான் அவ்வளவு சொல்லியும் எங்க அம்மாகிட்ட வந்து இதப் பத்தி பேசி இருக்கானே.. சே..’ என தன் மனதிற்குள் தன்னுடைய வருங்காலக் கணவனை திட்டிக் கொண்டவள் சமையல் அறைக்குள் நுழைய முயன்ற கணம்,
“அடியே நான் உன்கிட்டதான் பேசிகிட்டு இருக்கேன்.. எனக்கு பதில் சொல்லாம நீ பாட்டுக்கு எழுந்திருச்சு போனா என்ன அர்த்தம்..? வரவர இந்த வீட்ல எனக்கு மரியாதையே கிடையாது.. சாப்பாட்டுக்கு உங்க கையை எதிர்பார்க்கிறதாலதானே இவ்வளவு திமிரா நடந்துக்கிறீங்க..? நான் எங்கேயாவது ரோட்ல போய் பிச்சை எடுக்கிறேன்.. நீ ஒன்னும் எனக்கு சோறு போட வேணாம்..” என மீண்டும் ஆரம்பித்த அன்னையை அழுது விடுவேன் என்பதைப் போல பார்த்தாள் செந்தூரி.
“ம்மா ஒரு மணி நேரமா நாம ரெண்டு பேரும் பேசிகிட்டே இருக்கோம்… அப்பாக்கு சாப்பாடு கொடுக்கணும்..”
“அரை மணி நேரம் லேட்டா சாப்பிட்டா உங்க அப்பா ஒன்னும் செத்துட மாட்டாரு.. வீட்ல வெட்டியா படுத்துக்கிடக்குறவருக்கு…” என அவர் சொல்லி முடிப்பதற்குள் “அம்மா…..” என அதட்டலாக அழைத்தாள் செந்தூரி.
“ப்ச்… இப்போ நான் கேட்டதுக்கு முடிவு சொல்லு..” என்ற தாயை வெறுப்பு கலந்த பார்வை பார்த்தாள் அவள்.
“தயவு செஞ்சு கொஞ்சம் மெல்ல பேசுங்க.. இது அப்பா காதுல விழுந்தா எவ்வளவு வருத்தப்படுவாரு.. ஏன்மா இப்படி எல்லாம் பண்றீங்க..?”
“சேகர் என்ன டைரக்ட்டரா இல்லன்னா ப்ரொடியூசரா..? அவன் சாதாரண மேக்கப் ஆர்டிஸ்ட் அவ்வளவுதான்.. அதோட நான் நடிக்கப் போறேன்னு சொன்னதும் வாம்மா இந்த படத்துல நடின்னு யாரும் படத்தை தூக்கிக் கொடுத்துற மாட்டாங்க.. எவ்வளவோ திறமையானவங்க கூட இப்போ வரைக்கும் வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும்போது எனக்கெல்லாம் சான்சே இல்லம்மா.. சொன்னா புரிஞ்சுக்கோயேன்..”
“அதான் நம்ம சேகர் உனக்கு படத்துல நடிக்க வாய்ப்பு வாங்கித் தரேன்னு சொல்லிட்டானே.. அப்புறம் நீ எதுக்கு இவ்வளவு தயங்குற..? சாதாரண மேக்கப் ஆர்டிஸ்ட் அவனே அறுபதாயிரம் துக்கு மேல சம்பாதிக்கும் போது நீ மட்டும் படத்துல நடிச்சா கோடி கோடியா சம்பாதிக்கலாம்டி.. நம்ம கஷ்டம் கடன் எல்லாமே இல்லாம போயிரும்.”
“நீங்க நினைக்கிற மாதிரி வாய்ப்பு எல்லாம் அவ்வளவு சீக்கிரமாக கிடைக்காதுமா..”
“நான் ஒன்னும் முட்டாள் கிடையாது செந்தூரி.. சேகர்தான் உனக்கு எப்படியாவது சினிமால நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டான்ல.. ஏற்கனவே அவன் அந்த ஃபீல்டுல தானே இருக்கான்.. அவன் நினைச்சா ஈஸியா உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்..” என்றவர் தன்னுடைய மகளை கண்ணாடியின் முன்பு அழைத்து வந்து நிறுத்திவிட்டு
“உன்னை நீயே நல்லா பாரு.. நீ எவ்வளவு அழகு தெரியுமா..? இப்படிப்பட்ட அழகிய வேணாம்னு சொல்ல எவனுக்குத்தான் மனசு வரும்..? நீ மட்டும் அழகா ரெடியாகி டைரக்டர் சார் கண்ணு முன்னாடி போய் நின்னேன்னா அவரோட அடுத்த படத்துல நீதான் ஹீரோயின். சேகருக்கு கால் பண்ணி படத்துல நடிக்க சம்மதம்னு சொல்லிரு..”
செந்தூரிக்கோ வெறுத்துப் போனது.
“அவன் ஒன்னும் சும்மா வாய்ப்பு வாங்கித் தரேன்னு சொல்லல. டைரக்டருக்கு ப்ரொடியூசருக்கு லஞ்சம் கொடுக்கணுமாம்… என்ன விட அழகும் திறமையும் இருக்கவங்களே வாய்ப்பு இல்லாம காத்துக்கிட்டு இருக்காங்க நான் போனதும் எனக்கு கிடைச்சிடுமா..?”
“10 லட்சம் தானே நான் கொடுக்கிறேன்.. அந்தப் பணத்தை வெச்சு நீ நடிகையாயிடு..”
“என்னம்மா சொல்றீங்க..? மாசம் இஎம்ஐ கட்ட பத்தாயிரம் ரூபாயே நம்மகிட்ட இல்ல.. நீங்க எப்படி 10 லட்சம் தரப் போறீங்க..? உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா..?”
“அத பத்தி எல்லாம் நீ கவலைப்படாத.. நான் இன்னும் ரெண்டு நாள்ல அந்தப் பணத்தை ரெடி பண்ணிக் கொடுத்துடுறேன்..”
“ஐயோ.. இதுவரைக்கும் நீங்க வாங்கி வச்ச கடனே போதும்.. அதையே என்னால இன்னும் கட்டி முடிக்க முடியல… தயவு செஞ்சு லட்சக்கணக்குல கடன் வாங்கி வச்சிராதீங்க.. ப்ளீஸ்மா நிம்மதி போயிடும்.. சொன்னா புரிஞ்சுக்கோங்க..”
“ஓஹ்… என்னாலதான் உனக்கு நிம்மதி இல்லைன்னு சொல்ல வர்றியா? இப்படி கஷ்டத்துல வாழ்றதுக்கு ஒரு முயற்சி பண்ணி பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு..? நான் என்ன உன்ன பாழங்கிணத்துலையா விழ சொல்றேன்… நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு.. முயற்சி பண்ணி பாருன்னு நல்ல வழிதானே காட்டுறேன்… நீ ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குற..?” என மேகலா அழத் தொடங்கி விட அவளுக்கோ பேசிப் பேசி வாய் வலித்து விட்டது.
“ப்ளீஸ்மா அழாதீங்க உங்களுக்கு பிரஷர் வேற இருக்கு.. இப்பவும் நமக்கு கஷ்டம் இல்ல.. மூணு வேளை சாப்பாட்டுக்கு எனக்கு வர்ற சம்பளமே நல்லா போதும்.. ஆடம்பர செலவு இல்லைன்னா சந்தோஷமா வாழலாம்மா..”
“இப்போ நான்தான் ஆடம்பரமா செலவு பண்ணி உனக்கு கடன் இழுத்து வைக்கிறேனா..? எனக்கு தெரியும்டி.. இந்த பிள்ளைங்கள நம்பக் கூடாதுன்னு பக்கத்து விட்டு கார்த்திகா என்கிட்ட அப்பவே சொன்னா.. அவளோட பொண்ணு கூட இப்படித்தான் கல்யாணம் பண்ணிட்டு அவளை அப்படியே விட்டுட்டு புருஷன் கூட போயிட்டாளாம்.. கஷ்டப்பட்டு வளக்குற எங்கள பார்த்தா உங்கள மாதிரி பிள்ளைங்களுக்கு எப்படித் தெரியுது..? நன்றி கெட்ட ஜென்மங்க..” என திட்டிவிட்டு மேகலா எழுந்து சென்றுவிட விக்கித்துப் போனாள் செந்தூரி.
என்ன விதமான வார்த்தைகள் இவை..?
விஷத்தில் தோய்த்து அல்லவா அவை வெளி வருகின்றன.
அன்னையின் வார்த்தைகள் சுருக்கென அவளுடைய மனதைக் காயப்படுத்தின.
கலங்கிய விழிகளைச் சட்டென துடைத்துக் கொண்டவள் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து சூடாக்கி வைத்திருந்த கஞ்சியை சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தந்தை படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.
வெளியே எதுவுமே நடக்காதது போல தன் முகத்தை சிரித்த முகமாக வைத்துக் கொண்டவள் பக்கவாதத்தில் செயலிழந்து படுத்திருந்த தந்தையை நெருங்கினாள்.
அவருடைய விழிகள் சிவந்து கலங்கி இருப்பதை கண்டவளுக்கு வெளியே நடந்த அனைத்தையும் அவர் கேட்டு விட்டார் என்பது புரிய மனம் நொந்து போனது.
அவருடைய தலையை பாசமாக வருடியவள் “சாப்பிடலாமா அப்பா..?” எனக் கேட்க மறுக்காது தலை அசைத்தார் அவர்.
கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சியை அவருக்கு ஊட்டி முடித்துவிட்டு சிறிது நேரம் தந்தையோடு பேசி முடித்துவிட்டு வெளியே வந்தவளுக்கு அந்த வீட்டுக்குள் இருக்கவே மூச்சடைப்பது போல இருந்தது.
சிறு குழந்தை போல அல்லவா அன்னை பிடிவாதம் பிடிக்கிறார்.
சினிமா ஒரு புதைக்குழி போல என்பதை எப்படி அவருக்கு விளக்கிக் கூறுவது.?
ஏதோ தவறாக நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டவளின் நெஞ்சம் பதைபதைத்துப் போனது.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 79
No votes so far! Be the first to rate this post.
Post Views:2,240
2 thoughts on “01. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?”
Startingey supero super sis
Nijama ava amma than a athu
Avanga appa ipdi irukka kuda Avanga than reason a iruppanga
Sendhoori 😔😔😔😔