பூஜை அறைக்குள் விளக்கு வைத்துவிட்டு அவள் தொடுத்து வைத்திருந்த பூ மாலையை சுவாமி படங்களுக்கு சூட்டிய கணத்தில் எதிர்பாராத விதமாக அவளுடைய புடவை முந்தானையில் தீப்பற்றிக் கொண்டது.
அது ஒரு எதிர்பாராத விபத்து அல்லவா..?
அதற்கு அவள் என்ன செய்வாள்..?
அதற்குள் சகுனம் சரியில்லை வீட்டுக்கு மருமகள் வந்த நேரம் சரியில்லை என கூறும் உறவினரின் வார்த்தைகள் அவளைக் கத்தி இன்றி வெகுவாக காயப்படுத்தியிருந்தன.
ஏற்கனவே பதறித் துடித்துப் பயந்து போயிருந்தவள் அந்த வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் மேலும் கண்ணீரை சிந்த,
தன்னுடைய கரங்களுக்கு உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வெளியே வந்தவனின் நடையோ கூட்டத்திலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளில் அப்படியே நின்று போனது.
“வாட் நான்சென்ஸ்..” என அவன் சத்தமாகக் கேட்டு விட முணுமுணுத்துக் கொண்டிருந்த அனைவரின் வாயும் இறுக மூடிக்கொண்டது.
“இதோ பாருங்க.. இது ஜஸ்ட் ஆக்சிடென்ட்.. நெருப்புக்கு சகுனமெல்லாம் பார்க்கத் தெரியாது.. யாரோட புடவை நெருப்புல பட்டாலும் எரியத்தான் செய்யும்… வேணும்னா இப்போ பேசினவங்களே உங்களோட புடவையை நெருப்புல போட்டு பாருங்க எரியுதா இல்லையான்னு பார்த்துடலாம்… அதை விட்டுட்டு என்னோட பொண்டாட்டி வந்த நேரம் சரியில்லைன்னு சொல்ற கதை எல்லாம் என்கிட்ட வேணாம்..”
என அவன் கொஞ்சம் காட்டமாகவே கோபத்தோடு கூறி விட கலாதான் பதறிப் போனார்.
அவருக்கும் அவருடைய அக்கா பேசிய வார்த்தைகள் பிடிக்கவில்லைதான். ஆனால் வயதில் மூத்தவருக்கு சற்றும் மரியாதை கொடுக்காமல் சாஷ்வதன் எதிர்த்துப் பேசியதும் தன்னுடைய கரங்களைப் பிசைந்தவர்,
“சாஷ்வதா நீ வைதேகியக் கூட்டிட்டு உள்ள போ. உன்னோட காயத்துக்கு முதல்ல மருந்து போடு..” என்றார்.
“அம்மா இவங்க எல்லார்கிட்டேயும் சொல்லுங்க அவ இந்த வீட்டுக்கு வந்த நேரம் ரொம்ப நல்ல நேரம்தான்னு.. என்னோட பிஸ்னஸ் மீட்டிங் எல்லாமே சக்சஸ் ஆயிடுச்சு.. தேவை இல்லாம வார்த்தையை விட வேணாம்னு சொல்லுங்க.. அப்புறம் இப்படி பொறுமையா பேசிகிட்டு இருக்க மாட்டேன்..” என எச்சரித்து விட்டு அழுது கொண்டிருந்த வைதேகியின் கரத்தைப் பற்றி அழைத்தவாறு அவன் அங்கிருந்து சென்றுவிட வந்தவர்களின் முகமோ சுருங்கிப் போனது.
“என்ன கலா உன்னோட பையன் இப்போவே பொண்டாட்டிக்கு கொடி பிடிக்கிறான்..?” என ஒருவர் கேட்க
“விளக்கைக் கூட ஒழுங்கா ஏத்தத் தெரியல.. எங்க இருந்து புடிச்ச இந்த மருமகளை..?” என இன்னொருவர் கேட்க கலாவுக்கோ தலைவலிக்கத் தொடங்கியது.
ஒருவாறாக அவர்கள் அனைவரையும் சமாளித்து அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட தங்களுடைய அறைக்குள் நுழைந்த வைதேகிக்கோ கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லை.
“சாரி வைதேகி.. அவங்ளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்..” என இறுகிய குரலில் சாஷ்வதன் கூற அவளோ பதறிப்போய் அவனை நெருங்கி அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டவள்,
“இதெல்லாம் சின்னச் சின்ன காயம் தானே..? ஆட்டோமேட்டிக்கா சரி ஆயிடும்.. நீ ரிலாக்ஸா இரு..” என்றவன் தீக்காயங்களுக்குரிய முதலுதவியை தனக்குத்தானே செய்யத் தொடங்க அவளுக்கோ குற்ற உணர்ச்சி குத்தத் தொடங்கியது.
தான் கவனமாக அந்த வேலையை செய்திருந்தால் புடவையில் நிச்சயமாக தீப்பற்றி இருக்காது அல்லவா..
கவனயீனமாக வேலை செய்து சாஷ்வதனுக்கும் கரங்களில் காயத்தைக் கொடுத்து விட்டோமே என எண்ணி துடித்துப் போனாள் அவள்.
சற்று நேரத்தில் அவன் அவள் அருகே வர,
“சாரி… சாரி சாஷு..” என அழுதவாறே கூற அவனோ அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டவன் அவளுடைய உடலில் வேறு எங்கேயும் தீக்காயம் பட்டிருக்கின்றதா என வேகமாக ஆராய்ந்தான்.
“உனக்கு எங்கேயாவது காயம் பட்டுருக்கா..?”
“இல்ல.. என்னால உங்களுக்குத்தான் காயம் பட்டுருச்சு..”
“இது ரெண்டு நாளுல சரியாயிடும் டி..” என்றான் அவன்.
சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைந்தாள் வைதேகி.
அப்போதுதான் அவனுடைய ஷர்ட்டினை அணிந்தவாறு நிற்கின்றோம் என்ற நிதர்சனம் புரிந்தது.
“நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துரட்டுமா..?” என மெல்லிய குரலில் கேட்டாள் அவள்.
“ஹ்ம்.. போய்ட்டு வா..” என்றவன் “வைதேகி.. ஒன் செக்…” என அவளை அழைத்தான்.
அவளோ என்ன என்பதைப் போல கலங்கிய விழிகளோடு அவனைப் பார்க்க,
“நீ இப்போ ஸ்டேபிளா இருக்க தானே..? இல்லன்னா இப்போ டென்ஷனா இருக்கியா..? டென்ஷனா இருந்தா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணு… பொறுமையா ட்ரெஸ் மாத்தலாம்..” என்றான் அவன்.
“இல்ல ஐ அம் ஓகே நவ்..” எனத் தன்னைத் திடப்படுத்தியவளாக அவள் கூற,
“சரிமா.. போ.. போய் ட்ரஸ் மாத்திட்டு வா..” என்றான் அவன்.
உள்ளே சென்று அவனுடைய ஷர்ட்டினை கழட்டியவள் தன்னுடைய ஆடைகளையும் களைந்து விட்டு சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.
கரங்கள் நடுங்கிய வண்ணமே இருந்தன.
வெகு நேரம் வெளியே செல்லாது சுயம் இழந்து ஆடை மாற்றும் அறைக்குள்ளேயே நின்றிருந்தாள் வைதேகி.
அவனோ சற்று நேரத்தில் அவள் வந்து விடுவாள் என காத்திருந்தவன் 15 நிமிடங்களுக்கு மேலாகியும் வரவில்லை என்றதும் பதற்றத்தோடு அந்த ஆடை மாற்றும் அறையின் கதவருகே நெருங்கி வந்தவன் மெல்ல அந்த அறைக் கதவைத் தட்டி,
“வைதேகி ஆர் யு ஓகே..?” என அழுத்தமாகக் கேட்க,
அந்த அழுத்தமான குரலில் மீண்டும் சுயமடைந்தவள் தடுமாறி வேகமாக அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
“என்னாச்சு ஏன் இவ்வளவு நேரம்..? உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருந்த..?” என அவன் கேட்க,
“சாரி எனக்கே தெரியலை..” என அவள் கூறி முடிப்பதற்குள் அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீர் மீண்டும் வழிந்து விட்டிருந்தது.
உருகிப் போனான் அவன்.
அவள் மிகவும் பயந்து போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன்,
“ஹேய் என்னடி நீ சின்னக் குழந்தை மாதிரி இப்படி அழுதா நான் என்னதான் பண்றது..? ப்ளீஸ் க்ரை பண்றத ஸ்டாப் பண்ணு வைதேகி.. எனக்கு கஷ்டமா இருக்கு..” என அவன் உணர்ந்து கூற தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள் அவள்.
சற்று நேரத்தில் அவள் இலகு நிலைக்குத் திரும்பி விட அதன் பின்னரே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“சரி வாங்க கீழ போகலாம்..” என அவள் அவனை அழைக்க அவனுடைய முகமோ இறுகிப் போனது.
“வேணாம் நீ இங்கேயே இரு… நீ கீழ வர வேணாம்..’ என அழுத்தமான குரலில் கூறினான் சாஷ்வதன்.
“ஏன்..? எதுக்காக என்ன வர வேணாம்னு சொல்றீங்க..?”
“அவங்க உன்ன அப்படிப் பேசினது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல வைதேகி.. அவங்ககிட்ட வந்து நீ பேசணும்னு எந்த அவசியமும் கிடையாது… நான் அவங்கள பாத்துக்குறேன்..” என அந்த அறையை விட்டு வெளியேற முயன்றவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டவள்,
“ரொம்ப தூரத்துல இருந்து நம்மள பாக்குறதுக்காக தானே வந்திருக்காங்கன்னு சொன்னீங்க… அவங்க பெரியவங்க அப்படித்தான் பேசுவாங்க… எங்க அம்மா இருந்தா கூட இப்படித்தான் என்னத் திட்டிருப்பாங்க..
எனக்கு அந்த நிமிஷம் அவங்க பேசுனது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. பட் நீங்க என்னை விட்டுக் கொடுக்காம பேசினதே போதும்… இதுக்கு மேல நான் கீழ வராம இருந்தா அவங்களுக்கு மரியாதை கொடுக்காத மாதிரி போயிடும். அத்தையும் வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் கீழே போகலாம் வாங்க..” என அவள் மெல்லிய குரலில் அழைக்க,
“என்ன விட நீதான் கோபமா இருப்பேன்னு நினச்சேன்.. நீ எப்படி இவ்வளவு ஈஸியா எடுத்துகிட்ட..?” என அவர்கள் திட்டியதை சுட்டிக்காட்டி அவன் கேட்க,
“புடவைய எரிய விட்டது என்னோட மிஸ்டேக் தானே… அதோட எங்க வீட்லையும் டெய்லி இப்படித் திட்டு வாங்கி திட்டு வாங்கி எனக்குப் பழகிருச்சு..’ எனச் சிரித்தாள் வைதேகி.
“பட் இனி யாராக இருந்தாலும் என் முன்னாடி உன்னைத் திட்டினா நடக்கிறது வேற..” என அவன் சற்றே சினத்தோடு கூற அவனுடைய வார்த்தைகளில் உடலில் உள்ள அத்தனை செல்களும் புத்துயிர் பெற்றது போல சிலிர்த்துப் போனவள்,
மெல்ல அவனை நெருங்கி அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தில் மென்மையாக தன்னுடைய முதல் முத்தத்தைப் பதித்து
“தேங்க்யூ சாஷு..” எனக் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே செல்ல நம்ப முடியாமல் தன் கன்னத்தில் பதிந்த அவளுடைய உதடுகளின் ஸ்பரிசத்தில் விழிகளை மூடி ஒரு கணம் உறைந்து போய் நின்று விட்டான் நம் நாயகன்.
அவனுடைய இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறி குதித்துத் துடிக்கத் தொடங்க பெரிய பெரிய மூச்சுக்களாக எடுத்துவிட்டு தன்னை சமப்படுத்திக் கொண்டவன் தன் தலையை உலுக்கிக் கொண்டவனாக தன்னவளோடு கீழே சென்றான்.
அவளுடைய ஒற்றை முத்தம் அந்த சூழ்நிலையை அவனுக்கு மொத்தமாக மாற்றி மகிழ்ச்சிப் பூக்களை பரப்பி விட்டிருந்தது.
கோபத்தில் மகனும் மருமகளும் கீழே வர மாட்டார்களோ என எண்ணி சற்றே பதற்றமாக இருந்த கலாவோ அவர்கள் இருவரும் புன்னகை முகத்துடன் மீண்டும் கீழே இறங்கி வருவதைக் கண்டதும்தான் நிம்மதியானார்.
ஏதேனும் குறை கூறினால் சாஷ்வதனிடம் இருந்து சாட்டையடி போன்ற வார்த்தைகள் நிச்சயம் கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவர்கள் எதுவும் குறை கூறாது சாதாரணமாக பேசியவாறு உணவை உண்ணத் தொடங்க எந்தக் கலவரமும் இன்றி அந்தப் பொழுது இனிதே கழிந்தது.
ஒரு வாரம் தங்கி இருந்து விருந்து முடித்து களிப்போடு செல்லலாம் என வந்திருந்த உறவினர் கூட்டமோ சிறிதும் மரியாதை இன்றி பேசிய சாஷ்வதனின் வார்த்தைகளில் கோபம் கொண்டு அடுத்த நாளே காலையில் கிளம்பிச் சென்று விட எதுவும் கூற முடியாது தவித்துப் போய்விட்டார் கலா.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் வைதேகிக்கும் சாஷ்வதனுக்கும் இடையேயான நெருக்கம் இன்னும் அதிகரித்துப் போனது.
இருவருக்கும் ஒருவர் மீதான மற்றையவரின் பிரியம் வரைமுறை இன்றி வளரத் தொடங்கியது.
Super and intresting sis 💞