தன்னைக் காப்பாற்ற முயன்று தன் கைகளை சேதப்படுத்திக் கொண்ட சாஷ்வதனை எண்ணி பெரும் கவலை கொண்டவள் அவனுக்கான வேலைகள் அனைத்தையும் அவளே செய்தாள்.
“ஹேய் இதெல்லாம் நீ எதுக்கு பண்ற..? நானே பாத்துப்பேன்.” என்றவனை செல்லமாக முறைத்தவள்,
“ஏன் நான் உங்களுக்குப் பண்ணக் கூடாதா..?” என்றவளின் உரிமையான ஒற்றைக் கேள்வியில் அவனோ அப்படியே அடங்கிப் போனான்.
மனைவியின் செல்லமான முறைப்பை எந்தக் கணவனுக்குத்தான் ரசிக்கத் தோன்றாது..?
அதற்கு மேல் அவளை மறுத்து எதுவுமே அவன் கூறவில்லை.
அன்றும் அப்படித்தான் இரவு உணவை அவன் கரண்டி மூலம் உண்ண முயற்சிக்க அவனிடமிருந்து கரண்டியை வாங்கி வைத்தவள் தானே தன் கரங்களால் உணவைப் பிசைந்து அவனுக்கு ஊட்டி விட அக்கணங்கள் யாவும் தித்திப்பாய் அவனுடைய மனதில் சேர்ந்து கொண்டன.
அவனுக்குத் தேவையான ஆடைகளை எடுத்து வைப்பதோடு அவன் அணிவதற்கு உதவுவது முதல் குட்டி போட்ட பூனை போல அவனின் பின்னாலேயே சுற்றி வந்து சிறுசிறு தேவைகளைக் கூட அவள் பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவது என அவனுடனேயே தன் நேரத்தை செலவழித்தாள்.
கரத்தில் இருந்த சிறுசிறு காயங்கள் வலிக்காத போதிலும் கூட அவளின் அருகாமைக்காக வலிப்பது போல நடித்துக் கொண்டிருந்தான் அந்தக் கள்வன்.
இப்படியே மூன்று நாட்கள் கழிந்து விட சாஷ்வதனின் கரங்களிலிருந்த காயங்களோ நன்றாக காய்ந்து மாறிப் போயிருந்தன.
கலாவோ டயபடீஸ் இருப்பதால் இரவு உணவை நேரத்திற்கே உண்டு மாத்திரை போட்டு படுத்து விடுவதால் இரவு நேரத்தில் தங்களுடைய விருப்பப்படி உணவு நேரத்தை அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் மாற்றிக் கொள்வர்.
சாஷ்வதனும் வைதேகியும் இரவு உணவை தங்களுடைய அறையில் உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்தியிருக்க அன்றும் அவனுக்கான இரவு உணவை எடுத்து வந்தவள் அவனுடைய கரத்தில் தட்டைக் கொடுத்துவிட்டு அவனுக்கு அருகே தானும் அமர்ந்து கொண்டாள்.
“சொல்லியிருந்தா நானே வந்து ப்ளேட்டை எடுத்திருப்பேனே, ரெண்டு பேரோட தட்டையும் எதுக்காக நீ தூக்கிட்டு வந்த..?” என அவன் கேட்க,
“ஏங்க இந்த பிளேட்ஸ் என்ன 20 கிலோ வெயிட்டா… இதுல என்ன இருக்கு..? இட்ஸ் ஓகே சாப்பிடலாமா..?” என அவனைப் பார்த்துக் கேட்க,
இன்றும் அவளுடைய கரத்தால் உணவு கிடைக்காதா என்பதைப் போல ஏக்கமாகப் பார்த்தான் அவன்.
அந்த ஏக்கப்பார்வையில் தடுமாறிப் போனவள்,
“என்னாச்சு..? என்னோட பிளேட்ல இருக்க பூரியும் வேண்டுமா..?” என்பதைப் போல அவள் கேட்க,
சட்டென வேகமாக மறுத்து தன் தலையை இடம்வலம் அசைத்தவன்,
“நத்திங் நீ சாப்பிடு..” என்றான்.
“நீங்களும் சாப்பிடுங்க…” என்றவள் உணவின் ஒரு கவளத்தை தன் வாயில் வைத்து மெல்லத் தொடங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அடுத்த கவளத்தை தன்னுடைய வாய்க்கு அருகில் கொண்டு செல்ல முயன்ற கணம் அவளுடைய கரத்தைப் பற்றி தன் வாய்க்கு அருகே கொண்டு வந்தவன் ஆ என வாயைத் திறந்து தனக்கு ஊட்டும்படி செய்கையால் கூறிவிட திணறிப் போனாள் வைதேகி.
கடந்த மூன்று நாட்களும் அவனுக்கு இயலாததால் உதவியாக இருக்கும் என ஊட்டி விட்டவளுக்கு இன்றோ எந்தக் காரணமும் இன்றி உணவு ஊட்ட சற்றே சங்கடமாக இருந்தது.
சங்கடம் என்பதைவிட கூச்சம் எனக் கூறுவது சாலப் பொருந்தும்.
இருந்தும் அவன் கேட்டதால் மறுக்க முடியாது உணவை அவனுக்கு ஊட்டியவள் அவனுடைய உதடுகள் தன் விரல்களை கவ்விச் சுவைப்பது போலத் தீண்டி விட்டு விலக சிவந்து போனாள்.
அவனோ சிறுபிள்ளை போல அவள்தான் அனைத்தையும் ஊட்ட வேண்டும் என அடம்பிடிக்காத குறையாக அவளுடைய தட்டில் இருந்த உணவு முழுவதையும் உண்டு முடித்தவன் தன் தட்டில் இருந்த உணவை அவளுடைய வாய்க்கு அருகில் கொண்டு போக மீண்டும் படபடத்துப் போனாள் அவள்
“சாஷு நா.. நானே சாப்பிட்டுக்கிறேனே..” என கூச்சத்துடன் நெளிந்தவாறு அவள் கூறி முடிப்பதற்கு முன்னரே அவளுடைய வாய்க்குள் உணவை ஊட்டி இருந்தான் அவன்.
அதற்கு மேல் அவளுக்கும் மறுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. நன்றாகத்தான் இருந்தது.
வாகாக தலையை அவன் முன்னே சாய்த்து அவன் கொடுக்கும் உணவு முழுவதையும் உண்டு முடித்தவள் காலித் தட்டுகளை எடுத்துக்கொண்டு வேகமாக கீழே சென்றுவிட,
இருவரும் இணைந்து தட்டுகளை எல்லாம் கழுவி வைத்து விட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தனர்.
ஏனோ நட்பு எனும் எல்லையைத் தாண்டி பயணிக்கத் தொடங்கி விட்டதைப் போல இருவருக்குமே தோன்றத் தொடங்கி விட்டிருந்தது.
அவளோ எதுவுமே பேசாது மௌனமாகவே படுக்கையில் சென்று படுத்துக் கொள்ள அவளின் அருகே நெருங்கிப்படுத்தவன் இம்முறை அவளுடைய கரத்தைப் பற்றி தன்னுடைய மார்பில் பதித்துக் கொள்ள அதிர்ந்து அவனுடைய விழிகளை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.
“சீக்கிரமாவே உன்ன லவ் பண்ணிடுவேன்னு தோணுதுடி..” என நேரடியாகவே அவன் கூறி விட இவளுக்கும் அதே எண்ணம் தான்.
அதீத வேகத்தில் இதயம் துடிக்க அவனைப் பார்க்காது தன் விழிகளை மூடிக்கொண்டாள் வைதேகி.
அவனோ சற்றே அவளை நெருங்கி அவளுடைய வெற்றியில் தன்னுடைய உதடுகளைப் பதித்து மென்மையான முத்தம் ஒன்றை அவளுக்கு வழங்க அவளுடைய உடல் சிலிர்த்து அடங்கியது.
அவளுடைய சிலிர்ப்பில் அவனுக்கு ஆண்மை பொங்கியது.
“குட் நைட்மா..” என்றவன் அவளுடைய கரத்தை விடுவிக்க இப்போது விழிகளைத் திறந்தவளோ அவனுடைய கரங்களை எடுத்து தன் மார்போடு அணைத்தாற் போல வைத்து விழிகளை முடி மீண்டும் உறங்கத் தொடங்கி விட அக்கணமே அவளை இழுத்து இறுக அணைக்க வேண்டும் போல இருந்தது சாஷ்வதனுக்கு.
காதலைக் கூறி அவளுடைய சம்மதத்தை பெற்றதன் பின்னரே அதீத காதலோடு அளவற்ற மோகத்தோடு அவளை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என எண்ணிக்கொண்டவன் மகிழ்ச்சியோடு விழிகளை மூடி உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
அடுத்த நாள் காலையில் வெகுநேரம் கழித்தே துயில் நீங்கி எழுந்து கொண்டாள் வைதேகி.
முதலில் எழுந்ததும் நேரத்தை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
விடியற்காலை நேரம் 10 என கடிகாரம் காட்ட பதறிப் போய்விட்டாள் அவள்.
அதே கணம் சாஷ்வதனும் அவள் அருகே அசந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவள் இன்னும் அதிர்ந்தாள்.
‘ஓஹ் காட்.. ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்டா எழுந்தேன்..?
கல்யாணம் முடித்து வந்த முதல் நாள் இப்படித்தான் அவள் தாமதமாக எழுந்திருந்தாள். அதற்கு பின்னர் எப்பவும் போல ஆறு மணிக்கு முதலே எழுந்து கொள்பவள் இன்று மீண்டும் மிக மிக தாமதமாக எழுந்ததன் காரணம் புரியாமல் குழம்பிப் போனாள்.
முதலில் சாஷ்வதனை எழுப்பி விடலாம் ஆஃபீஸ்க்கு நேரம் ஆகிவிட்டதல்லவா என எண்ணி அருகே படுத்திருந்தவனின் தோளில் கரம் பதித்து “சாஷு..” என அவள் அழைக்க மெல்ல விழிகளைத் திறந்தவன்,
“குட் மார்னிங் வைதேகி..” என புன்னகையோடு கூறினான்.
“என்னங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. இப்பவே டைம் பத்து..” என அவள் கூறியதும் பதறிப் போனவன்,
“வாட்… ஓ மை காட் 10 மணி ஆயிடுச்சா..? எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன்..?” எனக் கேட்டவாறு வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் செல்ல இவளுக்கோ தலை மிகவும் வலிப்பது போல இருந்தது.
தன் மீது கிடந்த போர்வையை விலக்கி விட்டு படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயன்றவள் சுரீரென்று வலித்த அடி வயிற்றில் தன் கரத்தைப் பதித்தவாறு அப்படியே மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள்.
அப்போதுதான் உடலில் ஆங்காங்கே சில இடங்களில் மிகவும் வலிப்பது போலத் தோன்ற அவளுக்கோ உள்ளம் பதறியது.
யாரோ அழுத்தியதைப்போல மார்பகங்கள் வலித்தன.
அடிவயிறு மிக மிக வலித்தது.
பயந்து போனாள் வைதேகி.
என்ன இதெல்லாம்..?
ஏன் இந்த வலி..?
யாரோ எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை அடித்தது போல அல்லவா உடல் முழுவதும் வலிக்கின்றது.
ஒருவேளை தூக்கத்தில் எழுந்து நடக்கும் வியாதி தனக்கு இருக்கின்றதோ..?
தூக்கத்தில் நடந்து சென்று எங்கேனும் பலமாக மோதிக் கொண்டேனோ..?
தலை வெடிப்பது போல இருக்க குளித்துவிட்டு வெளியே வந்த தன்னுடைய கணவனை குழப்பமாகப் பார்த்தாள் வைதேகி.
கணவன் தான் தன்னை இறுக்கமாக அணைத்து உறங்கி இருப்பானோ..?
சே.. அப்படி இருக்காது.. என எண்ணிக்கொண்டவள் மெல்ல எழுந்து நின்றாள்.
நிஜமாகவே வலிக்கின்றதா இல்லை நான்தான் கற்பனை செய்கின்றேனா..?
ஏதாவது மனநோய் வந்து விட்டதோ..?
கடவுளே என தன் தலையைப் பற்றிக் கொண்டு அவள் அப்படியே நின்றுவிட,
குளித்துவிட்டு வெளியே வந்தவனும் அவளைப் பார்த்து திகைத்து “என்னாச்சு வைதேகி..?” என வேகமாக அவள் அருகே வர
“அப்போ எதுக்காக எழுந்த..? இன்னும் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு.. பொறுமையா எழுந்துக்கலாம்..”
“இல்ல நான் போய் உங்களுக்கு பிரேக்பாஸ்ட் எடுத்து வைக்கிறேன்..” என்றவளின் கரத்தைப் பிடித்து மீண்டும் அவளை படுக்கையில் அமர வைத்தவன்
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடுமா..” என்றவன் அவளுடைய முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவளைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு அலுவலகத்திற்கு தயாராகி கீழே சென்றான்.
சற்று நேரம் படுத்திருந்து சிந்தித்து சோர்ந்து போனவள் எதுவும் புரியாது குளித்து ஆடை மாற்றி விட்டு கீழே செல்ல மனமின்றி தன்னுடைய அறையிலேயே அமர்ந்து கொண்டாள்.
அன்றைய நாள் முழுவதும் அவளுக்கு குழப்பத்திலேயே கழிந்து போனது.
Pavam vaidehi