பெற்றோர்களிடம் கூறியதோடு நில்லாமல் அப்படியே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாள் சாஹித்யா.
மனம் முழுவதும் வேதனை புழுவாய் அரித்தது.
பரிசோதனைக்குத் தயாராக இருந்தவளின் சிந்தனை முழுவதும் ஏன் தன்னுடைய சகோதரி தனக்கு இப்படி ஒரு இழிவான செயலை செய்துவிட்டுச் சென்றுவிட்டாள் என்பதிலேயே சுழன்று கொண்டிருந்தது.
அவளைத் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக தவறே செய்யாதவர்களை பிரச்சனையில் மாட்டி விடுவது தர்மம் இல்லை அல்லவா..?
என் வாழ்க்கையைப் பற்றி அவளுக்கு சிறிதும் கவலை இல்லையா..?
நா கூசாமல் இப்படிப்பட்ட கேவலமான பழியை என் மீது போட எப்படி அவளுக்கு மனம் துணிந்தது..?
நான் இதுவரை அவளுக்கு அன்பைத் தவிர வேறு எதையும் கொடுக்கவே இல்லையே.
ஏன் என்னிடம் இத்தனை வெறுப்பு..?
சிறிய வயதில் இருந்து ஆரம்பித்த வெறுப்பு இன்றுவரை அவளுக்கு குறையவே இல்லையா..?
எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து விட,
அவளுடைய கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் யாஷ்வின்.
“சாஹிம்மா உனக்கு கஷ்டமா இருந்தா விட்டுடு.. உன்ன வருத்தி நீ யாருக்கும் உன்னை நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்லம்மா..” என அவன் ஆறுதல் வார்த்தைகளைக் கூற சாஹித்யாவின் பெற்றோர்களின் வதனமோ கருத்துப் போனது.
“இத நான் பண்ணலைன்னா இந்த பழி கடைசி வரைக்கும் நம்மள தொடரும் மாமா.. இனி யாரும் உங்களை ஒரு வார்த்தை தப்பா பேச நான் அனுமதிக்கவே மாட்டேன்..” என்றாள் அவள்.
அவர்கள் இருவரின் உரையாடலும் வான்மதியின் பெற்றோர் செவிகளில் பாயத்தான் செய்தது.
அப்போதும் அவர்கள் இருவரும் நெருங்கி நிற்கும் நிலையை ஏற்க முடியாது அந்தத் தாய் உள்ளம் கோபத்தில் பதற,
இப்போது வான்மதியின் தந்தையோ சற்றே நிதானம் கொண்டார்.
“கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம கைய புடிச்சுகிட்டு இருக்கிறதை பாருங்க..” என சினந்தார் ராஜி.
“அமைதியா இரு ராஜி..” என அடக்கினார் விமலன்.
தவறு செய்தவர்கள் இப்படி சற்றும் பயம் கொள்ளாமல் நடந்து கொள்வார்களா..?
இதோ தாராளமாக என்னை பரிசோதித்துப் பார் என தன்மகள் தங்களை மருத்துவமனை வரை அழைத்து வந்தது அவரை சற்றே சிந்திக்கச் செய்தது.
எந்த மகளைத்தான் சந்தேகம் கொள்வது..?
இரண்டும் அவருடைய பெண்கள்தானே.
இறக்கும்போது அழுதழுது கூறிவிட்டு இறந்த மகளை நம்புவதா..?
இல்லை கண்முன்னே கதறிக் கொண்டிருக்கும் தன்னுடைய இரண்டாவது மகளை நம்புவதா..?
அவசரப்பட்டு விட்டோமோ..?
தீர விசாரித்து இருக்க வேண்டுமோ என்றெல்லாம் அவருடைய மனம் வெகு தாமதமாக சிந்திக்கத் தொடங்கியது.
சற்று நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவர் சாஹித்யாவை உள்ளே அழைத்துக் கொண்டு பரிசோதனைக்கு சென்று விட வெளியே அவளுக்காக காத்திருந்த அனைவரிடமும் பெரும் நிசப்தம்.
அதே கணம் அவருடைய அலைபேசிக்கு அழைப்பு வர தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாருடனும் பேச முடியாது என எண்ணியவர் அழைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
அடுத்த சில நொடிகளிலேயே அவருடைய அலைபேசி மீண்டும் அலறத் தொடங்க,
எரிச்சலோடு அதனைப் பார்த்தவர் தன் மனைவியிடம் அலைபேசியை கொடுத்து,
“நீயே பேசுமா.. என்னால இப்போ யார் கூடவும் பேச முடியாது..” என்றார்.
விழிகளைத் துடைத்துக் கொண்டு அலைபேசியை காதில் வைத்தவர் “ஹலோ..” என்ற அடுத்த நொடியே,
என மறுமுனையில் இருந்தவர் பேசிக் கொண்டே போக, இவருக்கு இதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
“இ.. இதெல்லாம் யாரு உங்களுக்கு சொன்னது..?” என பதற்றமான குரலில் கேட்டார் ராஜி.
“ஊர்ல பேசிக்கிறாங்க.. நீங்கதான் சொல்லி அழுதீங்கன்னு சொன்னாங்களே.. ஆரம்பத்துல நான் கூட இத நம்பவே இல்லை.. ஆனா என்னோட அண்ணன் பொண்ணுதான் இப்போ உங்கள ஹாஸ்பிடல்ல பார்த்தேன்னு கால் பண்ணி சொன்னா.. சாஹித்யா கர்ப்பமா இருக்காளோ..? அதனாலதான் எல்லாரும் ஹாஸ்பிடல் போனீங்களா..? பொண்ணோட இறப்பு உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்னு தெரியும்.. நீங்க எதுக்கும் வருத்தப்படாதீங்க அடுத்து என்ன பண்ணப் போறீங்க..?” என அவர் பேசிக் கொண்டே போக இவருக்கோ கைகள் கிடுகிடுவென நடுங்கி காதில் வைத்திருந்த அலைபேசி கீழே விழுந்தது.
“என்ன ராஜி..? எதுக்கு ஃபோன கீழ தவற விட்ட..?” எனக் கீழே விழுந்த அலைபேசியை எடுத்து அழைப்பைத் துண்டித்து விட்டுத் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான்.
பின்னே தன்னுடைய மனைவியின் முகம் அரண்டு போய் இருப்பதைக் கண்டவருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
அலைபேசியில் யார் அழைத்தது எனச் சிந்தித்தவர்,
“என்ன ஆச்சு ராஜி..?” என மீண்டும் கேட்டார்.
“எ… என்னங்க ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போ..ச்சு.. பக்கத்து வீட்டு அன்னம்மா கால் பண்ணி சாஹித்யா கர்ப்பமா இருக்காளான்னு கேக்குறா.. அதனாலதான் வான்மதி இறந்துட்டாளான்னு என்கிட்ட கேக்கிறாங்க..” எனக் கதறியவாறே அவர் கூற,
அப்போதுதான் வான்மதி இறப்பதற்கு முன்னர் தகவலைக் கூறியதும் தலையில் அடித்துக் கொண்டு சத்தமாக அழுததன் தவறு அவர்களுக்குப் புரிந்தது.
அக்கம் பக்கத்தினர் வந்து பார்ப்பது கூடத் தெரியாது அழுது புலம்பி அனைவருக்கும் விடயத்தை தாங்களே பரப்பி விட்டோம் என்பதை வெகு தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டார் அவர்.
“இ.. இப்போ என்னங்க பண்றது..? இவளோட வாழ்க்கைக்கு நா… நான் என்ன பண்ணுவேன்..? என் நெஞ்செல்லாம் பதறுதே.. ஐயோ… போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணித் தொலைச்சேனோ..? ரெண்டு பொண்ணுங்கள பெத்துட்டு இப்படி அசிங்கப்பட வேண்டிய நிலைமையா போயிடுச்சு..” என மார்பில் அடித்துக் கொண்டு கதறியவரை அமைதிப் படுத்த முயன்றவருக்கும் விழிகளெல்லாம் கலங்கிப் போயின.
அதே கணம் அமைதியான முகத்துடன் வெளியே வந்தாள் சாஹித்யா.
அவளுடைய விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.
சற்று நேரத்தில் வெளியே வந்த வைத்தியரோ அவளுடைய கன்னித்தன்மை அப்படியேதான் இருக்கின்றது எனக்கூறி விட்டுச் சென்று விட அவர்களுக்கு அந்த விடயம் அடுத்த பேரிடியாக இருந்தது.
அப்படி என்றால் மாப்பிள்ளை கூறியதுதான் உண்மையா..?
தன் மூத்த மகள் தவறு செய்துவிட்டு பழியை இவர்கள் மேல் போட்டுவிட்டு இறந்து விட்டாளா..?
அடுத்த கணம் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விட்டார் வான்மதியின் அன்னை.
விமலனோ பதற,
சட்டென வைத்தியரை அழைத்து அவருக்கான முதலுதவி சிகிச்சைக்கு வழிவகுத்தான் யாஷ்வின்.
அன்னை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்ததும் பதறி விட்டாள் சாஹித்யா.
அடுத்த அரை மணி நேரம் அனைவருக்கும் மிகுந்த பதற்றத்தில்தான் கழிந்தது.
அதே நேரம் விமலனுக்கோ ஊரிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் அவர்.
இப்போது யாருக்கும் பதில் கூறும் நிலையில் அவர் சிறிதும் இல்லை அல்லவா..?
சற்று நேரத்தில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை அதிர்சிதான் காரணம் என வைத்தியர் கூறி விட அப்போதுதான் அவர்களுக்கு உயிரே வந்தது.
குழந்தையை அணைத்து தன் கரத்தில் தூக்கி வைத்திருந்தவனுக்கு மனம் ஆறவே இல்லை.
எத்தனை துயரத்தைதான் சகித்துக் கொள்வது..?
வான்மதியின் இழப்பை எண்ணி வேதனை கொள்வதா..?
இல்லை அவள் செய்த துரோகத்தை நினைத்து மருகும் தவிப்பில் மூழ்குவதா..?
அதைவிட தன் மீது சுமத்திச் சென்ற பழியை எண்ணி கோபம் கொள்வதா..?
அவனால் என்னதான் செய்துவிட முடியும்..?
அனைத்தும் காலம் கடந்துவிட்டது.
இனி சாஹித்யாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்து பிரச்சனையையும் முடித்து அவளைப் பாதுகாப்பாக அவர்களுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்த பின்னர்தான் அவனைப் பற்றியே அவனால் சிந்திக்க முடியும்.
சாஹித்யாவும் விமலனும் ராஜியைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றுவிட, யாஷ்வின் சிறிது நேரத்தில் உள்ளே சென்றான்.
“என்ன மன்னிச்சிடுமா.. இவ இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பாக்கல.. என்னால இந்த அதிர்ச்சியை தாங்கவே முடியல… நடந்தது தெரியாம உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்.. இவ சொன்னத நம்பி எல்லார் முன்னாடியும் அழுது புலம்பி அங்க உன்னோட பேருக்கும் கெட்ட பேரு வர்ற மாதிரி பண்ணி வச்சுட்டேன்.. இனி எல்லார்கிட்டயும் போய் உண்மைய சொன்னா நம்புவாங்களா..? உன்னோட வாழ்க்கைய நாங்களே கெடுத்துட்டமோன்னு பயமா இருக்குடி..” என அழுத அன்னையை வெறித்துப் பார்த்தாள் அவள்.
“மன்னிச்சிடுங்க மாப்பிள..” என இரண்டே வார்த்தையில் முடித்துக் கொண்டார் விமலன்.
அவரால் தலை நிமிர்ந்து தன்னுடைய மருமகனைப் பார்க்கவே முடியவில்லை.
மகள் செய்துவிட்டுச் சென்ற தவறுக்கு அவனை அல்லவா தண்டித்து விட்டோம்.
குற்ற உணர்ச்சி அதிகமாகிப் போனது.
“இல்லங்க பரவால்ல.. இப்படி ஒரு பிரச்சினை வரலைன்னா வான்மதி பத்தி நான் உங்ககிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன்.. எந்த தப்பும் பண்ணாத சாஹி இதுல தண்டிக்கப்படுறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை.. அதனாலதான் நடந்த எல்லா உண்மையும் சொன்னேன்.. அவ குழந்தைங்க.. படிக்கிற பொண்ணு… நல்லா பாத்துக்கோங்க…” என்றவன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான்.
“மாப்ள ஒரு நிமிஷம்..” என்ன அழைத்தார் ராஜி.
“சொல்லுங்க அத்தை..”
“நடந்து முடிஞ்சதுக்கு நீங்கதான் எங்க மேல கோபப்பட்டுருக்கணும்.. ஆனா நாங்க உங்கள ரொம்ப மோசமா நடத்திட்டோம்.. எங்க மேல கோபம் இல்லையா மாப்ள..?”
“உங்க மேல கோபப்பட்டு நான் என்ன அத்தை பண்ணப் போறேன்..? இங்க இருக்க எல்லாருமே சூழ்நிலை கைதிகள்தான்..
உங்க இடத்துல வேற யார் இருந்தாலும் இப்படித்தான் பண்ணி இருப்பாங்க.. ஒருத்தங்களோட இறப்பு எல்லாரையும் பாதிக்கும்தானே..? என்னால புரிஞ்சுக்க முடியுது.. நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க.. ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க.. எல்லாமே சரியாயிடும்..
நடந்து முடிஞ்சத இனி நம்மளால மாத்த முடியாது.. ஆனா இனி நடக்கிறது நல்லதா நடக்க வைக்கலாம்..” என உயிரற்ற சிரிப்பை உதிர்த்தான் அவன்.
அவனை நினைத்து பிரமிப்பாக இருந்தது அவர்களுக்கு.
“எங்க கூடவே வந்துருங்க மாப்பிள்ள.. எப்படி குழந்தையை தனியா வளப்பீங்க..?” என்றார் அவர்.
“நான் இந்த கப்பல் வேலைய விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன் அத்த.. இனி என் பொண்ணுதான் எனக்கு எல்லாமே.. ஏதோ கிடைக்கிற வேலையை பார்த்துக்கிட்டு அவளை என்னால நல்லா வளர்க்க முடியும்..”
“நீங்க வேலைக்கு போனா குழந்தைய யார் பாத்துக்குவா..?” என்றதும் சாஹித்யாவோ,
“இல்லம்மா.. நீ உன்னோட படிப்புல கவனத்த செலுத்து.. உன்னோட வாழ்க்கையை இனி பாத்துக்கோ..” என்றவன் அனைவரிடமும் தலையசைத்து விடைபெற அவன் முன்பு வந்து வழியை மறைத்தாற் போல நின்றார் விமலன்.
அவனுடைய கரங்களை பற்றிக் கொண்டவர்,
“மாப்பிள நீங்க எங்களுக்கு எவ்வளவோ பண்ணி இருக்கீங்க.. இன்னும் ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க..” என்க,
“ஐயோ ஏன் மாமா உதவின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க..? சொல்லுங்க நான் என்ன பண்ணனும்..?” என்றான் அவன்.
“சாஹித்யாவ கல்யாணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை.. தயவு செஞ்சு எனக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க..” என்றவர் அவனுடைய கரங்களைப் பற்றித் தன் முகத்தில் பதிக்க திணறிவிட்டான் அவன்.
As expected. Aanalum oru vartha rendu peraiyum pathi thappa pesum munnadi konjamavadhu yosichirukalam. Waiting for next ud eagerly.👌👌👌👌👌👌👏👏👏👏🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍😍😍
As expected. Aanalum oru vartha rendu peraiyum pathi thappa pesum munnadi konjamavadhu yosichirukalam. Waiting for next ud eagerly.👌👌👌👌👌👌👏👏👏👏🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍😍😍