12. ஜீவனின் ஜனனம் நீ…!!

4
(1)

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕

 

ஜனனம் 12

 

லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றது. யுகனின் தாய்க்கான ஏக்கம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

 

லேப்டாப்பை மூடி வைத்தவன் மகனைத் தேடிச் செல்ல, “யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான்.

 

“தேவ் கூட இருந்தான். போய் பாருங்கண்ணா” அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே தேவ்வின் அறை நோக்கி நடந்தான்.

 

யுகி உறங்கிக் கொண்டிருக்க, அவனருகில் சாய்ந்து தலை கோதி விட்டபடி இருந்தான் தேவன்.

 

“தேவ்” தயக்கம் துறந்து அழைக்க, “யுகி தூங்குறான்” என்றான் மெல்லிய குரலில்.

 

அவனைத் தூக்க எத்தனிக்கும் போது மெல்ல சிணுங்க, “எழுப்ப வேண்டாம். தூக்கம் கலைஞ்சிடும். என் கூட தூங்கட்டும் இன்னிக்கு” அவனைப் பாராமல் கூறினான் தேவன்.

 

“எழும்பி என்னைத் தேடுவான். நான் கூட்டிட்டு போறேன்” அவனைத் தூக்கிக் கொள்ள,

 

“ரொம்ப பண்ணாத சத்யா. அவன் என் கூட தூங்கினா உனக்கு ஒன்னும் ஆகிடாது” தேவ்வின் குரலில் அத்தனை கோபம்.

 

“அவன் என் பையன். என் கூட தான் இருப்பான். உனக்கு ஆடு பகை குட்டி உறவு இல்ல?” அவன் கேட்க, “அவன் எதுவும் பண்ணலயே” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

 

“நான் என்னடா பண்ணேன்? எதுக்கு என்னை வேற யாரோ மாதிரி நடத்துற?” ஆக்ரோஷமாக சீறினான் சத்யா.

 

“உனக்கு தெரியும் நீ என்ன பண்ணிட்டு இருக்கேனு. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லுறேன், அந்த விஷயம் தெரிஞ்சு என் அம்மா கவலைப்பட்டா உன்னை சும்மா விட மாட்டேன்” விரல் நீட்டி எச்சரிக்க, “நீயும் ஒன்னு தெரிஞ்சுக்க. அவங்க உனக்கு முன்னால எனக்கு அம்மா. அவங்களை கஷ்டப்படுத்துற மாதிரி விஷயத்தை நான் பண்ண மாட்டேன்” என சென்று விட்டான்.

 

கட்டிலில் அமர்ந்து கொண்ட தேவ்விற்கு ஏதேதோ ஞாபகங்கள்.

 

“என் வாழ்க்கையில் உன்னைத் தவிர யாரும் வேண்டாம் தேவ்! யூ ஆர் மை எவ்ரிதிங்” காதல் சிந்தும் குரலில் கானம் பாடினாளே அந்தப் பெண்.

 

பின் என்னவானாள்? போ என்ற ஒற்றை வார்த்தையில் அவன் வாழ்விலிருந்து தொலைந்தே போனாள்.

 

அவளோடு அமர்ந்து காதல் பேசிய பொழுதுகள், தேவ் தேவ் எனும் அழைப்பு அனைத்தும் பொய் தானா? காதல் எனும் வார்த்தையே கசந்தது அவனுக்கு.

 

“ஏன் டி என்னை விட்டுப் போன?” மெல்ல முணுமுணுத்தான் தேவன்.

 

மறுபுறம் ரூபனிற்கு ஒரு மேசேஜ் வந்தது.

“ரூபி” அவ்வழைப்பில் புருவம் சுருக்கினான் ரூபன்.

 

“யார் நீ?” வந்த கோபத்தில் பதில் அனுப்ப, “அய்ம் யூர் எக்ஸ் லவ்வர்” எனும் வார்த்தையில் எழுந்தே விட்டான்.

 

“எனக்கு எக்ஸ் லவ்வரா? நான் யாரை லவ் பண்ணுனேன்” அவன் யோசிக்கும் போது அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

 

“என்ன சார்? எக்ஸ் லவ்வர்னு சொன்னதும் பயந்துட்டீங்களா? நான் மகி” எனும் பெண் குரல் கேட்டது.

 

“எந்த மகி? நர்ஸ் மகிழினியா? இல்லனா எந்த மங்கி மூஞ்சு மகிஷாவா?” என்று கேட்க, “ஏய்ய்” புசு புசுவென மூச்சு விட்டாள், மறுமுனையில் இருந்த மகிஷா.

 

“எனக்குத் தெரியும் நீ தான்னு. என்ன விஷயம்? எதுக்கு எனக்கு கால் பண்ணிருக்க?” 

 

“உங்க மேல எனக்கு காதல் நெருப்பு பத்திக்கிச்சு. அதான் சூடு தாங்காம கூப்பிட்டேன்” என்றவள், “அவ்ளோ கனவு காண வேண்டாம். மேகலை ஆன்ட்டி அவங்க நம்பர் வேலை செய்யலனு இந்த நம்பர் கொடுத்தாங்க. ஆன்ட்டி இருக்காங்களா?” என்று கேட்டாள்.

 

“அம்மா மாத்திரை போட்டு தூங்கிட்டாங்க. அவசரம் இல்லனா நாளைக்கு பேசுறியா?” என்று வினவ, “ஓஓ! பரவாயில்லை. அவங்க தூங்கட்டும். நான் வெச்சிடுறேன்” என்றாள்.

 

“ஹேய் வெயிட் வெயிட். கால் எடுத்தது தான் எடுத்த. சும்மா பேசிட்டு இரு” 

 

“உங்க கிட்ட பேச எதுவும் இல்லை. அப்பாவுக்கு கேட்டா தோலை உரிச்சிடுவார். நாளைக்கு கால் எடுக்கிறேன்” படபடத்து விட்டு அழைப்பைத் துண்டிக்க, “நோட்டி கேர்ள்” என்றவனுக்கு அவளை எண்ணி ஒருவகை சுவாரசியம்.

 

மறு நாளும் விடிந்தது. கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்தன. 

 

“டாடி! நானும் வார்கிங் போக வரட்டுமா?” ஷூவை எடுத்துப் பார்த்தவாறு கேட்டான் யுகன்.

 

“வரலாமே. என் கண்ணா அவ்ளோ பெருசாகிட்டானா?” புன்னகையோடு அவனுக்கு ஷூ போட்டு விட்டான் சத்யா.

 

இருவரும் படிகளில் இறங்கி வர, மேகலை ஹாலில் அமர்ந்திருந்தார். அடுக்களையில் ஒரே சத்தமாக இருக்க, எட்டிப் பார்த்தான் சத்யா.

 

தேவன் காய்கறி வெட்ட, ரூபன் தோசை செய்து கொண்டிருந்தான்.

 

“நீங்க எதுக்கு வேலை பார்க்கிறீங்க?” யுகன் கேட்க, “இல்லனா அம்மா பண்ணுவாங்கள்ல. அதான் டா” தேவன் பதில் சொன்னான்.

 

“இன்னிக்கு பாட்டிக்கு தலை வலியா இருக்குனு சொன்னாங்க. அதனால நாங்க குக் பண்ணுறோம்” என்றான் ரூபன்.

 

“என்னாச்சும்மா? டாக்டர் கிட்ட போகலாமா?” தாயின் அருகில் அமர்ந்து கொண்டான் சத்யா.

 

“சத்யா….!!” அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

 

“ம்மா! ரொம்ப வலியா இருக்கா?” 

 

“நான் அதனால அழல டா. நீ கொஞ்ச நாளா என் கூட பேசவே இல்லல்ல? தலை வலின்னா மட்டும் தான் பேசுவியா?” அவர் கவலையோடு கேட்க, “நான் என்ன பண்ணுறேன்னு எனக்கே புரிய மாட்டேங்குது. சாரிம்மா” அவர் கண்களைத் துடைத்து விட்டான் மூத்தவன்.

 

……………..

மாரிமுத்துவின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. மூத்த மகளின் திருமணத்தை தாம் தூம் என்று செய்ய திட்டமிட்டு விட்டார் அவர்.

 

சொந்தக்காரர்கள் வீட்டில் கூடியிருந்தனர். ஜெயந்தி காஃபி பரிமாறிக் கொண்டு வர, அவர் கை தவறி மாரிமுத்துவின் மீது கொட்டியது.

 

“ஏய்! கண்ணு எங்கடி இருக்கு உனக்கு? ஒரு வேலையை உருப்படியா செய்ய துப்பில்ல” எல்லோர் முன்னிலையிலும் சத்தமிட, ஜெயந்தி அழுகையை அடக்கிக் கொண்டு சமயலறைக்குள் நுழைந்தார்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனனிக்கு உள்ளம் கொதித்தது. அவரை நோக்கிச் செல்ல, ஜெயந்தி சோகமாக நின்றிருந்தார்.

 

“ம்மா! ஒரு காஃபி கப் கொடுங்க. நான் கொண்டு போய் உங்க ஹஸ்பண்ட் மேல அபிஷேகம் பண்ணிட்டு வர்றேன்” என்று கேட்க, “சும்மா இரு டி” மறுத்து விட்டார் ஜெயந்தி.

 

“தெரியாம தானே கொட்டுச்சு. அதுக்கு ஏன் இந்த கத்து கத்துறார். அதுவும் சுத்தி ஆட்கள் இருப்பதைக் கூட கண்டுக்காம. இன்னும் ஒரு நாளைக்கு அப்படி சொன்னா பதிலுக்கு நாலு வார்த்தை கேட்டு வாங்கம்மா”

 

“அப்படிலாம் இருக்க முடியாது ஜானு. பேசினா சண்டை வரும். அதுக்கு இதுவே பரவாயில்லை”

 

“அமைதியா இருக்கும் வரை அடக்கிட்டே தான் வருவாங்கம்மா. உங்களுக்கு ஏதாவது சொன்னா நான் மறுபடி பார்த்துட்டு இருக்க மாட்டேன். பாய்ஞ்சு எழுந்துடுவேன். என் அம்மாவை யாரும் எதுவும் சொல்லக் கூடாது” அவரை அணைத்துக் கொண்டாள் மகள்.

 

“சரிடி செல்லம். நீ என்னைப் பத்திரமா பார்த்துட்டே இரு” அவளது பேச்சில் பூவாய் மலர்ந்து போனது தாயுள்ளம்.

 

அறையினுள் இருந்த நந்திதாவுக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது‌. அதைத் துண்டித்து விட்டவளுக்கு மனம் படபடத்தது.

 

மீண்டும் அழைப்பு வரவே அதை எடுத்து காதில் வைத்து, “என்னைக் கூட்டிட்டு போயிடுங்க. சத்தியமா என்னால முடியலங்க” என விம்மி அழுதாள்.

 

“நந்து! உன் அப்பா கேட்டப்போ நீ வேண்டாம்னு சொல்லி இருக்கனும். நான் தான் அப்போவே சொன்னேனே என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்காமல், என்னால கல்யாணம் பண்ண முடியாது. இன்னும் ஒரு வருஷம் டைம் வேணும் எனக்கு” என்றான் எழிலழகன்.

 

“அப்பா கேட்கும் போது என்னால மறுக்க முடியல. அவரைப் பார்க்கும் போது பயமா இருக்கு. எனக்கு நீங்க இல்லாமல் வாழ முடியாது” உடைந்து அழுதாள் அவள்.

 

“புரிஞ்சுக்க நந்து! நாம லவ் பண்ணும் போதே உன் கிட்ட இந்த கன்டிஷனை சொன்னேன். நீயும் சரின்னு சொன்ன. ஆனால் இப்போ கல்யாணம் பண்ணிக்கோனா என் வீட்டு நிலமையை யோசிக்கனும்ல?” 

 

“யோசிங்க யோசிங்க. உங்களுக்கு என்னைப் பற்றி எந்த யோசனையும் இல்லல்ல. அதான் என்னை சந்தோஷமா இருக்க சொல்லி வாழ்த்திட்டீங்கள்ல? விட்டது தொல்லைன்னு இருக்கீங்க தானே?” கோபமாக பேசினாள் நந்திதா.

 

அமைதியான சுபாவம் கொண்டவள் தான் நந்து. எனினும் கோபம் வந்தால் ஒன்றும் யோசிக்க மாட்டாள் அவள்.

 

“என்ன பேசுற நீ? நான் சொல்லுறதைப் புரிஞ்சுக்க” அவன் கெஞ்ச, “நான் உங்களைப் புரிஞ்சுக்கனும். என்னை நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்கள்ல? புரியும் போது என் வாழ்க்கை என்னாகி இருக்குமோ எனக்குத் தெரியல” அழைப்பைத் துண்டித்து விட்டாள் நந்திதா.

 

எழிலழகன் மிடில் க்ளாஸ் பையன். அவனது தந்தை அவன் சிறு வயதாக இருக்கும் போது இறந்து விட்டார். அவனுக்கு ஒரு தங்கை மலர். அவனை விட மூன்று வருடங்கள் இளையவள். தாய் அன்னம்மாள். 

 

தாயும் தங்கையுமே உலகமென வாழ்ந்தவன், ஒரு ஆசிரியன். அவனது மனதில் நந்திதா மீது அரும்பிய காதல் மிகவும் ஆழமானது. காதலித்தவன், அவளிடம் தன் காதலைக் கூறினான்.

 

“நந்து! நான் உன்னை லவ் பண்ணுறேன். ஆனால் எனக்குனு நிறைய பொறுப்புகள் இருக்கு. ஒரு அண்ணனா என் தங்கச்சிக்கு சொத்து சேர்த்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டு தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அது வரை எனக்காக காத்திருப்பியா?” என்று கேட்டான்.

 

அவளுக்கும் எழிலைப் பிடித்தது. அவனது குணமும், குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பும் நந்திதாவைக் கவர்ந்தது.

 

ஒருநாள் கோவிலில் வைத்து அவனிடம் காதலைக் கூறினாள்.

 

“எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு எழில். ஆனால் எனக்கு அப்பாவை நெனச்சு பயமா இருக்கு” என்றவளுக்கு அப்பாவின் மீதான பயத்தையும் மீறி காதல் முளைத்தது.

 

“உங்கப்பாவை எதிர்த்து நான் ஒரு போதும் பேச மாட்டேன். அவரை சம்மதிக்க வைப்பது உன் பொறுப்பு. என் வீட்டில் நான் சம்மதம் வாங்குவேன். நாம பேசிக்கிட்டு இருக்க வேண்டாம். அது தெரிஞ்சா வீணான பிரச்சினைகள் வரும். மூனு வருஷத்தில் உன் வீட்டில் வந்து பேசுவேன்” என வாக்களித்தான் எழில்.

 

“என் கூட பேச மாட்டீங்களா எழில்?” அவள் ஒரு மாதிரியாக வினவ, “பேசிட்டு இருக்கிறது மட்டும் காதல் இல்லை நந்து. நாம அமைதியா காதலிப்போம். மனசார நெனச்சிட்டு இருப்போம். உன்னைத் தவிர நான் யாரையும் மனசுல நெனக்க மாட்டேன் நந்து. இட்ஸ் மை ப்ராமிஸ்” அவளது நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.

 

“நானும் உங்களைத் தவிர யாரையும் நினைக்க மாட்டேன். உங்களுக்காக காத்திருப்பேன் எழில்” இதழ் பிரித்துப் புன்னகைத்தாள் நந்திதா.

 

அதன் பிறகு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. எதிரெதிரே கண்டால் கண்டால் கூட சாதாரணமாக கடந்து விடுவர். நந்திதா இதை சகோதரிகளிடமாவது கூறவில்லை.

 

நந்துவுக்கு மூன்று வருடங்களின் பின்னர் கல்யாணம் செய்வதாகத் தான் மாரிமுத்து கூறியிருந்தார். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காமல் இரண்டு வருடங்களேயான நிலையில் சத்யாவைக் கொண்டு வந்து நிறுத்தினார்.

 

தந்தைக்குப் பயந்து நந்திதா ஒப்புக் கொண்டாலும், எழிலிடம் வந்து பேசச் சொல்ல அவனது மறுப்பு அவளுக்குப் பேரிடியாக விழுந்தது.

 

“என் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்?” தனக்குத் தானே கேட்டுக் கொண்ட நந்திதாவுக்கு தனது வாழ்வில் இருள் சூழ்ந்தது போல் தோன்றியது.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!