💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 14
‘ராஜ் மஹால்’ திருமண மண்டபம் அலங்கார தோரணங்களில் எழிலுடன் திகழ்ந்தது.
“வாவ் அழகா இருக்குல்ல டாடி?” அதன் வாயிலில் நின்று ஆச்சரியமாகப் பார்த்தான் யுகன்.
சத்யாவுக்கு அவற்றை ரசிக்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை. அவன் வாழ்வில் அனைத்தும் தன் கை மீறி நடப்பது போல் இருக்க, வெறுத்துப் போயிருந்தான் சத்யா.
“டாடி! இந்த அலங்காரங்களைப் பாருங்க. செம்ம இல்ல?” என்று மீண்டும் அவன் கேட்க, சட்டென தன்னை மீட்டுக் கொண்டு, “ஆமாடா. சூப்பரா இருக்கு” என்று புன்னகை சிந்தினான்.
“அழகா இருக்காங்கள்ல டா?” ரூபன் அங்கிருந்த பெண்களை சைட்டடிக்க, “ரொம்ப வழியுது டா. துடைச்சிக்க” கைக்குட்டையால் அவனது வாயோரம் துடைத்து விட,
“நீ என்னவோ ரொம்ப நல்லவனாட்டம் நிற்கிற? இந்த கிராமத்து குத்து விளக்குகளைப் பாரு. நம்ம ஊர்ல எல்லாம் பேன்ட்டு ஷர்ட்டு போட்டு சுத்துற ஆட்கள் தான். இப்படி பாவாடை தாவணியில் இருக்கிற பைங்கிளிகள் ரொம்ப அருமை” புருவம் தூக்கினான் ரூபன்.
“எல்லாரையும் அப்படி சொல்லாத. ட்ரெஸ்ஸ வெச்சு ஒருத்தரை எடைபோட முடியாது. மார்டனா இருக்கிற சிலரைக் கூட நம்பிடலாம். ஆனால் இப்படி கமுக்கமா இருக்கிற ஆட்களுக்குள்ள விஷம் இருக்கக் கூட வாய்ப்பிருக்கு” ஏதோ நினைவில் சொன்னான் தேவன்.
“தேவா! இங்கே பார். நாம அண்ணன் கல்யாணத்துக்கு வந்திருக்கோம். தேவை இல்லாத குப்பைகளைக் கிளறி உன் மனசை நீயே டிஸ்டர்ப் பண்ணாம, சந்தோஷமா இரு டா” அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான் ரூபன்.
“ஓகே ஓகே டா. நான் எதையும் யோசிக்கல” அவனது சொல்லுக்காக பெருமூச்சை வெளியேற்றி தன்னைத் தேற்றிக் கொண்டான், உடன்பிறந்தவன்.
யுகனைத் தூக்கிக் கொண்டு மேல் மாடிக்குச் சென்றான் சத்யா. அங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கு ஒரு இடம் இருக்க, அதில் விளையாடத் துவங்கினான் யுகன்.
பல்கோணியில் நின்று வானைப் பார்த்த சத்யாவுக்கு பழைய நினைவுகள் வந்தன.
“உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு இனியா. உன்னோட அமைதியான சுபாவம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. நீ பேசவே வேண்டாம். உனக்கும் சேர்த்து நான் பேசிக்கிறேன். நான் பேசுறதைக் கேட்டுட்டே இரு. அது போதும்” என்று அவன் சொன்னதைக் கேட்டு புன்னகை சிந்திய அவள் முகம் மனதில் உதித்தது.
தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு இதை எப்படி மறப்பது என்று தெரியவில்லை. இன்றெல்லாம் அவள் நினைவு அதிகமாக வந்தது. அவளை எவ்வளவு காதலித்தான்? ஆனால் அவளுக்கு ஏன் என் மீது காதல் இல்லாமல் போனது?
பழையதை நினைத்து எந்த விதப் பயனும் இல்லை என அமைதியானான். இந்த நிலையில் இன்னொரு பெண்ணை எப்படித் திருமணம் செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
மறுபுறம் அதே மண்டபத்தில் மணமகள் அறையில் அமர்ந்திருந்தாள் நந்திதா. எழிலுக்கு அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை.
மீண்டும் மீண்டும் அழைக்க, ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்றவன் “கால் ஆன்ஸ்வர் பண்ணலனா ஏதாவது டென்ஷன்ல இருப்பான்னு யோசிக்க முடியாதா உன்னால? நானே பல யோசனைல உட்கார்ந்திருக்கேன் நீ வேற” என கத்தினான் அவன்.
“நான் கால் பண்ணுறது உங்களுக்கு அவ்ளோ டென்ஷனா இருக்கா? நான் என்ன மாதிரி நிலையில் இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்ல? தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ணுறீங்க? என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்க எழில்”
“எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ண முடியாது நந்திதா. உன் வீட்டுல வந்து பேசுறேன்னு சொன்னேன் தானே? நீயும் வேண்டாம். மூனு வருஷம் கழிச்சு அப்பா பேசும் போது பார்த்துக்கலாம்னு சொன்ன. ஆனால் நீ கல்யாணத்துக்கு சம்மதத்தைச் சொல்லிட்டு என்னை இப்படி டார்ச்சர் பண்ணுறியே” அவனுக்கு தலை வலித்தது.
“எனக்கு அப்பாவை நெனச்சு பயமா இருக்கு எழில்” அவள் அழத் துவங்க, “பயமா இருக்குன்னா எதுக்கு லவ் பண்ணனும்? லவ் பண்ணுனா தைரியமா இருக்கனும்” அவன் சொல்ல,
“தப்புத் தான் எழில். ஆனால் என்னால முடியலங்க. மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. எனக்கு நீங்க வேணும். வந்து கூட்டிட்டு போங்க”
“கூட்டிட்டு போங்கன்னா இப்போ நான் உன்னை ஹாஸ்பிடல்ல தான் கூட்டி வந்து வெச்சுக்கனும். ஏன்னா அம்மாவுக்கு ப்ரெஷர் அதிகமாகி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டோம். நான் எதுவும் யோசிக்கிற மனநிலையில் இல்ல நந்திதா. அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் நான் தான் இருக்கேன். சாரி நந்திதா” அழைப்பைத் துண்டித்து விட்டான் எழிலழகன்.
செய்வதறியாது திகைத்துப் போய் நின்றாள் நந்திதா. விடிந்தால் திருமணம். கல்யாணம் நடந்து விடுமா? அந்தக் கேள்வி அவளுள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திற்று.
சற்று மணி நேரங்கள் கழித்து,
மேல் மாடிக்கு ஓடிய ஜனனியிடம் “நான் நந்திதா கிட்ட பேசனும்” என்றிருந்தான் சத்யா.
“அக்கா வர மாட்டா” உடனடியாக மறுத்தாள் அவள்.
“அதை நீங்க சொல்ல வேண்டாம். அவ சொல்லட்டும். என்னவோ நீங்களா ஒரு முடிவு எடுத்து பேசுறீங்க” அவனுக்கு ஜனனி மீது ஒருவகை கோபம்.
“ஹலோ மிஸ்டர். என் இஷ்டத்துக்கு ஒன்னும் சொல்லல. அவளும் உங்க கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னா. இப்போ மாப்பிள்ளையும் பொண்ணும் பார்த்துக்க கூடாதுன்னு அம்மா சொன்னாங்க. அதனால தான் சொன்னேன்” அவனது பேச்சில் அவளுக்கும் கொந்தளித்தது.
“ம்ம்” என அவன் நகர, “ஏதாவது அவசரமா? என் கிட்ட சொல்லுங்க. நான் சொல்லிடுறேன்.இல்லன்னா அவ நம்பர் கொடுக்கிறேன்” அவள் படபடவென்று கேட்க,
“நோ தாங்க்ஸ்! நானே அப்பறமா பேசிக்கிறேன்” தலையசைப்போடு செல்ல நினைத்தவன், “ராஜ்” எனும் ஜனனியின் அழைப்பில் திரும்பிப் பார்த்தான்.
ஆம்! திருமணத்திற்கு ராஜீவ் வந்து கொண்டிருந்தான். அவன் வருவது அவளுக்கே தெரியாது. அவன் இவளைக் காணவில்லை. பல்கோணி வழியாக அவனைக் கண்டவளுக்கு கண்களில் கண்ணீர்.
“மேடமோட காதலன் வந்துட்டார். இனி கையில் காதல் கடிதம் எழுத ஆரம்பிச்சிடுவாங்க” என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சத்யா.
ராஜ் பார்க்க முன்பு, அறையினுள் ஓடியவளுக்கு அவன் கண்களில் படக் கூடாது என்ற எண்ணம். அவனோடு பேசிய பொழுதுகள், சந்தோஷமாகக் கழித்த தருணங்களை நினைக்க நினைக்க அழுகை பொங்கியது.
வாயிலில் நண்பிகளோடு கதையளந்து கொண்டிருந்த மகிஷாவுக்கு, அங்கு வந்த ராஜீவைக் கண்டு ஒரு மாதிரிப் போனது.
அவளை அழைத்து “மகி! ஜானுவைப் பார்த்தியா?” அவன் கேட்க, “எதுக்கு ஜானு? இல்ல எதுக்குனு கேட்கிறேன். அவளைத் தான் வேண்டாம்னு விட்டுட்டீங்கள்ல” என்று கேட்டாள் மகி.
“மகி! நா..நான்” அவன் பேச முடியாமல் தடுமாற, “அதான் வேற கல்யாணம் பண்ணிக்க போறீங்கள்ல. சந்தோஷமா பண்ணிக்க வேண்டியது தானே? எதுக்காக மறுபடி அவ கண்ணு முன்னாடி வர்றீங்க? அவளுக்கு பழையதை ஞாபகம் காட்டி திரும்பத் திரும்ப அழ வைக்கவா?” மகிஷாவுக்கு அத்தனை கோபம்.
“மகீஈஈ” எனும் அழைப்பில் இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கு கோபமாக நின்றிருந்தாள் ஜனனி.
“நீ என்ன பேசிட்டு இருக்க மகி? அக்கா கல்யாணத்துக்கு அவர் வந்திருக்கார்” அவள் கேட்க, “மகி சொல்வதில் எந்த தப்பும் இல்ல ஜானு. நானும் வர இருக்கல. அம்மா கூப்பிட்டாங்க. அவங்களைத் தனியா விட முடியாம வந்தேன்” என்று ஒரு மாதிரிக் குரலில் சொன்னான் ராஜீவ்.
“எந்த தப்பும் இல்ல ராஜீவ். அம்மாவை நல்லா பார்த்துக்கங்க. அது போதும்” அங்கிருந்து சென்று விட, அவளை வெறித்துப் பார்த்திருந்தான் அவன்.
தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தான் சத்யா. கண்ணாடியில் முகத்தைப் பார்த்தவனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது.
“சத்யா…!!” அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் மேகலை.
தாயைக் கண்டவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வெகு சிரமப்பட்டுத் தான் போனான்.
“நீ நல்லாருக்கியா?” ஏனோ கேட்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு.
“இவ்ளோ நாள் யூ.எஸ்ல நல்லா இருந்தேன்னு தோணுது. அந்தளவுக்கு இங்கே வந்ததில் இருந்து என் வாழ்க்கை நரகம் மாறிடுச்சு. அவ்ளோ ஸ்ட்ரெஸ்ல இருக்கேன். பேசாம என் உசுரு..” என்று அவன் சொல்ல, “சத்யா” அவசரமாக இடையிட்டு அவனைப் பேச விடாமல் தடுத்தார் தாய்.
“எனக்கு வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல. யுகி மட்டும் இல்லேனா நான் என்னவாகி இருப்பேன்னு எனக்கே தெரியாது. உங்களை எதிர்த்துப் பேசி அவனுக்கு தப்பான ஒரு பாடத்தை கத்துக்கொடுக்க நான் விரும்பல. பெரியவங்களை மதிக்கனும்னு சொல்லிக் கொடுத்துட்டு அதுக்கு மாற்றமா என்னால நடக்க முடியாது இல்லையா?
ஆனால் இந்த கல்யாணம் நடந்தா கூட என்னவாகும்னு எனக்கு தெரியல. இப்போ வரை எனக்கு அதைப் பற்றிய ஒரு எண்ணமே இல்லை. மத்தவன் கல்யாணத்துக்கு வந்ததை விட கேவலமா இருக்கு மைண்ட்செட். வாழ்க்கையில் நான் தோத்துட்ட மாதிரி ஃபீல்” தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான் அவன்.
“அப்படி சொல்லாத சத்யா. உன் வாழ்க்கையில் நீ எந்த தப்பும் பண்ணல. இதையெல்லாம் சவாலா நெனச்சிக்க. நீ சந்தோஷமான வாழ்க்கையை வாழுறதுக்கான படிக்கட்டா வெச்சுக்க” அவனது தோள் தொட்டு சமாதானம் கூற,
“நான் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தோணல மா. இன்னும் ஒரு பொண்ணு என் பொறுப்புல வந்துட்டானு பாரமா இருக்குமே தவிர, வேற எதுவும் தோணாது” விரக்தியில் வெந்தது அவன் மனம்.
“உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் இதையெல்லாம் பண்ணுறேன். ஒரு தாய் தன் பிள்ளை கஷ்டப்படனும்னு எதையுமே செய்ய மாட்டா. அப்படியே செய்றதா இருந்தா அது நல்ல விஷயத்துக்காக தான். உன்னைப் பார்க்கும் போது பெத்த வயிறு கலங்குது. ஆனாலும் நான் பண்ணுறேன் சத்யா. நீ எப்போவும் சந்தோஷமா இருக்கனும். நீ இழந்ததெல்லாம் உனக்கு கிடைக்கனும்” அவனது கையைப் பிடித்துக் கொள்ள,
தாயை மறுத்துப் பேசும் சக்தியை இழந்து போனான் அவன். வேறு ஏதாவது பேசி அவரை வேதனைப்பட வைக்க வேண்டாம் என அமைதியாக இருக்க, யுகன் சிரித்தவாறு உள்ளே ஓடி வர அவனைத் துரத்திக் கொண்டு வந்தனர் ரூபனும் தேவனும்.
“இங்கே வந்தும் என்னடா பண்ணுறீங்க? உங்க வயசு என்ன யுகி வயசு என்ன? ஓடியாடி விளையாடுறீங்க” செல்லமாகக் கடிந்து கொண்டார் மேகலை.
“அவனுக்கு விளையாட யாரும் இல்லேனு எங்களை ஓட விடுறான். நாங்களே எந்தப் பொண்ணு கண்ணுலயும் படாம ஓடி வந்தா, நீங்க இப்படி சொல்லுறீங்க” இடுப்பில் கை வைத்து வேகப் பெருமூச்சுகளை வெளியேற்றினான் ரூபன்.
“சித்தா! நான் சூப்பரா ஓடினேன்ல?” என்று தேவனிடம் வினவ, “ஆமா கண்ணா. நீ சூப்பர் மேன்” அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டான்.
அதே சமயம் சத்யாவின் அலைபேசி அலறியது. அதை எடுத்துப் பார்த்தவனது முகம் பூவாக மலர்ந்து போனது.
அலைபேசித்திரையில் விழுந்த பெயரை அவன் உதடுகள் அன்போடு உச்சரித்தன.
“தன்யா….!!”
அவன் சொன்ன பெயரைக் கேட்ட மற்ற முகங்களும் புன்னகை பூக்க, தேவனின் முகம் மட்டும் கோபத்தில் சிவந்தது.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி