15. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.5
(2)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 15

 

“அண்ணா…!!” தன்யாவின் அழைப்பில், அவன் விழிகள் மலர்ந்தன.

 

“நீ மட்டும் இல்லை டா. நீயும் வந்திருக்கலாம்ல தனு?” மேகலை கேட்க, “என்னமோ பெத்தெடுத்த மாதிரி பேசுறாங்க. அண்ணா, அம்மானு சொன்னா உடனே அவளையும் குடும்பத்தில் ஒருத்தியா பார்த்துட வேண்டியது” தேவனின் முனகல் ரூபனை மட்டும் வந்தடைய, அவனை முறைத்துப் பார்த்தான்.

 

“நான் தான் படிச்சிட்டு இருக்கேன்லம்மா. சரியா நாளைக்குன்னு பார்த்து செமஸ்டர் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. இல்லன்னா நான் தான் முதல் ஆளா வந்திருப்பேன்” என்றவள் வீடியோ காலில் அனைவர் முகத்தையும் பார்த்தாள்.

 

தேவன் மட்டும் கடுகடுப்பாக நிற்க, “தேவ்..!!” என்றழைத்தவளை இடைமறித்து, “அவங்க கூட வேணா உறவு கொண்டாடு. என்னை பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்க குடும்ப சந்தோஷத்தைக் கெடுத்தவ நீ. என்னமோ உத்தமி மாதிரி உறவு கொண்டாட வர்ற” அடக்கி வைத்த கோபத்தைக் கக்கி விட்டான் அவன்.

 

“வேண்டாம் தேவா. இதோட நிறுத்திக்க” சத்யாவுக்கு கோபம் பெருகியது.

 

“அண்ணா! அவரை எதுவும் சொல்லாதீங்க” எனும் போது அவளது பின்னால் வந்து நின்றான் ஒரு ஆடவன்.

 

“அண்ணா! இது கார்த்திக். மை க்ளோஸ் ஃப்ரெண்ட்” என்று அறிமுகப்படுத்த, “ஹாய்” பல்வரிசை தெரியச் சிரித்தான் கார்த்திக்.

 

“க்ளோஸ் ப்ரெண்ட் வீடு வரைக்கும் வருவானா? இவளை நம்பி நீங்களும் செலவழிச்சு மலேசியா அனுப்பி படிக்க வைக்கிறீங்க. அங்கே என்ன கூத்து போடுறாளோ யாருக்குத் தெரியும்?” என்று தேவன் சொல்ல,

 

“டேய்ய்” அவனை அடிக்கக் கை ஓங்கி விட்டான் சத்யா.

 

யுகன் பயத்தில் கண்களை மூடிக் கொள்ள, “சத்யா வேண்டாம். யுகி பயப்படறான்” என்று ரூபன் கூறிட, பின்னந்தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவனுக்கு ஆத்திரம் தீரவில்லை.

 

“நா..நான் அப்பறமா பேசுறேன்” என்ற தன்யா, தேவ்வை எதுவும் சொல்ல வேண்டாம் என்பதாக சத்யாவிடம் கண்களால் கெஞ்சி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

“யாரோ ஒருத்திக்காக என்னை அடிக்க வந்துட்டல்ல சத்யா?” கோபமாகக் கேட்டான் தேவன்.

 

“அவ யாரோ ஒருத்தி இல்லை. உனக்கு அவ கூட பேச இஷ்டம் இல்லைனா அமைதியா இரு. அதை விட்டுட்டு தனுவைக் காயப்படுத்த உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல” அழுத்தமாக சொன்னான் சத்யா.

 

“அவளால தான் உன் வாழ்க்கையே அழிஞ்சுது. இனியும் என்னெல்லாம் அவமானம் வரப் போகுதோ தெரியல. தலையில் தூக்கி வெச்சு ஆடு. அவ ஒரு நாள் உன் மூஞ்சுல கரியைப் பூசத் தான் போறா” விறு விறுவென்று சென்று விட்டான் அவன்.

 

“நீங்க ரெண்டு பேரும் எதுக்காக கீரியும் பாம்புமா சண்டை போடுறீங்க? எனக்கு பார்க்கவே கஷ்டமா இருக்கு” மேகலை வருத்தத்தோடு கூற, “அவன் பேசினது சரியா? தனுவை எவ்ளோ கேவலமா பேசினான்? அதுவும் அந்தப் பையன் முன்னாடி‌. நாம அவ கூட பழகுறது பிடிக்கலனா இப்படியா பண்ணுவான்? யாரும் இல்லாத பொண்ணு அவ” தனுவிற்காக பரிதாபப்பட,

 

“அவன் பேசினது பிழை தான் அண்ணா. ஆனால் தனுக்காக அவனை அடிக்க வந்தது அவனை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. இனி அப்படி பண்ணாதீங்க” ரூபன் தேவனைத் தேடிச் செல்ல, தலையில் கை வைத்து அமர்ந்தான் சத்யா.

 

“டாடி! கோபப்படாதீங்க. சிரிங்களேன்” என்ற யுகனின் வேண்டுகோளில், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு புன்னகைக்க, அச்சம் துறந்து அவனைக் கட்டிக் கொண்டான் மைந்தன்.

 

பல்கோணியில் கோபமாக நின்ற தேவனை நோக்கி ஓடி வந்த ரூபன் யார் மீதோ மோதி கீழே விழ எத்தனிக்க, “பார்த்து பார்த்து” அவனது கையைப் பிடித்தாள் மகிஷா.

 

“பண்ணுறதையும் பண்ணிட்டு பார்த்து கோர்த்துனு சொல்லுறியா? அன்னிக்கு உன்னை விழ வெச்சதுக்கு பழி வாங்குற தானே?” முறைத்துப் பார்த்தான் அவன்.

 

“அய்யய்யோ அப்படி எதுவும் இல்லேங்க. எனக்கு சத்தியமா அது ஞாபகமே இல்லை. சாரி ரூபி” காதைப் பிடித்துக் கெஞ்ச, “நான் உன் கால்ல வேணா விழுறேன். அப்படி மட்டும் சொல்லாத தாயே” கையெடுத்துக் கும்பிட்டான்.

 

“சரி சரி. இனிமேல் உங்களை அப்படிக் கூப்பிடவே மாட்டேன்னு சொல்ல மாட்டேன்‌. அப்படியே தான் கூப்பிடுவேன். வரட்டா ரூபி?” கையசைத்து சிட்டாகப் பறந்தவளை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான் ரூபன்.

 

“ஹலோ ப்ரதர்! என்னை சமாதானப்படுத்த வர்றேன்னு சொல்லிட்டு இங்கே கடலை போடுறியா?” அவன் தோள் தட்டினான் தேவன்.

 

“யார் கூட வேணா கடலை போடலாம். ஆனால் இந்த குட்டி ராட்சசி கூட ஒன்னும் பண்ண முடியாது. ரூபி ரூபினு உயிரை வாங்குறா” அலுத்துக் கொண்டான் அவன்.

 

“ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டு யுகி டார்லிங். உன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு ஈசியா நிக் நேம் வெச்சு வேலையை மிச்சம் பண்ணிருக்கான். இல்லையா ரூபி?” சிரிப்போடு கேட்டவனுக்கு, தோளில் அடி கொடுத்தான் ரூபன்.

 

அன்றைய நாள் இப்படியே கழிந்தது. அடுத்த நாள், புதியதொரு புரட்சியை ஒருசிலர் வாழ்வில் நிகழ்த்தவே பாரில் வந்துதித்தான் பகலவன்.

 

அன்றைய விடியல் நந்திதாவுக்கு கொடுமையாக இருந்தது. எழிலோடு வாழ, வண்ணமயமான கனவுகள் ஆயிரம் கண்டாளே? அனைத்தும் கலைந்து போய் விடுமா?’ என்று நினைக்கவே நெஞ்சம் படபடத்தது.

 

நேற்று அவளுக்கு தூக்கமே வரவில்லை. தனக்காக அவன் வந்து விட மாட்டானா? என நினைத்தவள் அவனுக்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை. உடைந்து போனாள் நந்திதா.

 

“கடவுள் எனக்குனு என்ன எழுதி இருக்காரோ அது தான் நடக்கும் போல” என நினைக்கும் போது அங்கு வந்தாள் ஜனனி.

 

நந்திதாவின் கண்ணீரைப் பார்த்து, “எங்களை விட்டுப் போறேனு ஃபீல் பண்ணுறியா அக்கா? அடுத்த ஊர் தானே? நீ கூப்பிட்டா நான் ஓடோடி வந்துட போறேன்” என்று சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள் நந்திதா.

 

அனைத்தையும் ஜனனியிடம் கொட்டித் தீர்த்து அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அனைத்தையும் மனதில் பூட்டி வைத்தே பழகிப் போனவளுக்கு, இப்போது எதையும் சொல்ல வரவில்லை.

 

“இப்படி அழுதா நல்லாவா இருக்கு? அதான் நீயே இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டல்ல. இனி சந்தோஷமா இருக்கனும். என் நந்து சிரிச்சிட்டே இருக்கனும் எப்போவும்” அவளது கன்னத்தைப் பிடித்து இழுத்தாள் தங்கை.

 

அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ஜனனி செல்ல, நந்திதாவை சிலர் அலங்காரம் செய்தனர்.

 

முகூர்த்த நேரமும் நெருங்கியது. வேஷ்டி சட்டையில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டான் சத்ய ஜீவா. அக்னியின் முன்னால் அமர்ந்தவனது அகத்திலும் அக்னிப் பிழம்பொன்று கொழுந்து விட்டெரிந்தது.

 

யுகன் தேவனின் கையைப் பிடித்துக் கொண்டு தந்தையைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனைப் பார்த்து கண்களால் புன்னகையை அளித்தான் சத்யா.

 

“அக்கா! நந்து நம்மள விட்டு போகப் போறாள்ல. நீயும் இன்னும் கொஞ்ச காலத்தில் என்னை மட்டும் தனியா விட்டுட்டு போயிடுவியா?” ஏக்கத்துடன் கேட்டாள் மகி.

 

“நான் எங்கே டி போகப் போறேன். எனக்கு கல்யாணம் எதுவும் வேண்டாம். உங்க கூடவே இருக்கேன்” அவளுக்கு கல்யாணம் மீது இருந்த ஆசையே ராஜ்ஜுக்குப் பின் சிதைந்து போயிருந்தது.

 

“இங்கே மசமசன்னு நிற்காம தேவ் கிட்ட போய் இருடி. அவனையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு” நீலாம்பரி நீரஜாவின் காதில் ஊத, “நீ வேறம்மா. தேவ் அத்தான் என்னை கண்ணாலேயே சுட்டுப் பொசுக்குறார்” தாயிடம் முனகினாள் அவள்.

 

மாரிமுத்து முகத்தில் மகிழ்வோடு நின்றிருந்தார். அவர் ஆசைப்படி மூத்தவளின் திருமணம் நடைபெறப் போகின்ற கர்வம் அவருக்கு.

 

தனது மகனின் வாழ்வு இனியாவது மகிழ்வோடு பயணிக்க வேண்டும் என்று தன் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தார் மேகலை.

 

“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” ஐயர் சொன்னதும், மகிழ்வோடு மகளைத் தேடிச் சென்ற ஜெயந்தி வெற்று அறையைக் கண்டு திகைத்துப் போனார்.

 

“நந்து! நந்து எங்கே டி இருக்க?” சுற்றும் முற்றும் தேடியவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

 

“ஜானு…!!” ஜனனியை அழைக்க, அந்த சத்தத்தில் அங்கு ஓடி வந்த ஜனனிக்கும் நந்திதா இல்லாததைக் கண்டு இதயம் இடம் மாறித் துடித்தது.

 

மேசையில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தை எடுத்து கைகள் நடுங்க படிக்கத் துவங்க, அங்கு வந்து விட்டனர், மாரிமுத்து மற்றும் மேகலை குடும்பத்தினர்.

 

“என்னாச்சு ஜெயா? நந்திதா எங்கே?” கோபமும் ஆத்திரமுமாகக் கேட்ட மாரிமுத்துவிற்கே மனம் கலங்கித் தான் போனது.

 

“அதில் என்ன இருக்கு? படிங்க ஜனனி” ரூபன் கூற, சத்தமாகப் படிக்க ஆரம்பித்தாள் அவள்.

 

“அப்பா!

நான் ஒரு பையனை காதலிக்கிறேன். உங்க மேலுள்ள பயத்தினால இதை சொல்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். எனக்கு இதில் கொஞ்சமும் இஷ்டம் இல்ல. என்னால அவர் இல்லாம வாழ முடியாது. 

 

உங்களுக்கு ஏமாற்றத்தை தந்துட்டு போறேன். ஆனால் அவரும் என்னை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார். நான் எங்கேயாவது போயிடுறேன். யாரும் என்னைத் தேட வேண்டாம். என்னை யாருமே மன்னிக்க மாட்டீங்கனு தெரியும். ஏன்னா நான் பண்ணுற தப்பு அப்படி. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்கிறதால நான் போறேன்.

 

சாரிப்பா. அம்மா, ஜானு, மகி! எல்லாருக்கும் சாரி” 

 

ஜனனி படித்து முடிக்க, அங்கு குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு மௌனம் நிலவியது.

 

“அய்யோ நந்து! இப்படி பண்ணிட்டியே டி” கதறி அழத் துவங்கினார் ஜெயந்தி.

 

“என் பையன் வாழ்க்கை அவ்ளோ தானா?” மேகலைக்கு தலை சுற்றிப் போனது.

 

“ம்மா! இப்படி உட்காருங்க” நிலமை உணர்ந்து ரூபன் அவரைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.

 

“நாம போயிடலாம் மா” ஒற்றை வார்த்தையை உதிர்த்த சத்யாவுக்கு அதற்கு மேல் அங்கிருக்க துளியும் பிடிக்கவில்லை.

 

“இன்னிக்கு கல்யாணம் நடந்தே ஆகனும்னு ஜோசியர் சொன்னார். அதற்குப் பிறகு அவனுக்கு பொண்ணு அமையுறது கஷ்டம்னும் சொன்னார். இப்போ என்ன பண்ணுறது?” மேகலைக்கு நெஞ்சுக் கூடு நடுங்கியது.

 

இந்தக் கல்யாணத்திற்கு அவனை சம்மதிக்க வைக்கவே அவர்கள் இரு வருடம் கஷ்டப்பட்டு விட்டனர். எப்படியோ கரணமடித்து இதைச் செய்தால் மணமேடை வரை வந்து கல்யாணம் நின்று விட்டதே.

 

இத்தனை நேரம் அமைதியாக இருந்த மாரிமுத்து வாய் திறந்தார்.

“அப்படி நடக்காது சம்மந்தியம்மா. உங்க பையனுக்கு கல்யாணம் நடக்கும். அதுவும் என் பொண்ணு கூட” அவர் சொன்னதைக் கேட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை.

 

ஜனனி இந்த அதிர்ச்சியில் இருந்து சற்றும் மீண்டு வரவில்லை. நந்திதா இப்படி செய்வாள் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை அல்லவா? அவள் மட்டுமல்ல, அந்த வீட்டில் அனைவரும் தான்.

 

“என்ன சொல்லுறீங்க?” மேகலை, ஜெயந்தி இருவரும் ஒரே சமயத்தில் கேட்க, மாரிமுத்துவின் பார்வை மகிஷா மீது படிந்தது.

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!