விஷ்வ மித்ரன்
💙 அத்தியாயம் 15
திடீரென கேட்ட காலடி ஓசையில் அதிர்ந்தவர்களுக்கு “சபாஷ் மாம்! சபாஷ்” என்ற விஷ்வாவின் குரல் கேட்டதில் மயக்கம் வராத குறை தான்,
அதிலும் தன் குட்டு வெளிப்பட்டதில் இதயம் படபடக்க, கால்கள் வெடவெடக்க நின்றார் நீலவேணி.
அருகில் வந்தவன் கழுத்து நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க நின்ற தோற்றத்தில் எட்டி அவன் கையைப் பிடித்துக் கொண்டான் மித்ரன். திரும்பி அவனை பார்க்க “விஷு! ப்ளீஸ் கோபப்படாத டா” என்று கெஞ்சும் குரலில் சொல்ல,
“நீ பேசாத. இவங்க சொன்னாங்கன்னு நீயும் இந்த விஷுவ கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம போயிட்டல்ல?” என்ன உறுமியவனின் வார்த்தைகளில் வலி தெரிந்தது.
பதில் சொல்ல முடியாமல் அவன் திணற, கனல் கக்கும் விழிகளை தாயின் புறம் நிலைநாட்டினான் விஷ்வா.
“ஏன்மா நீயா இப்படி பண்ணே? உனக்கு ஏன் இந்த புத்தி?” என்று வினவியவனால் இது தன் தாயின் செயல் என்பதை இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியாது தான் போயிற்று.
அவன் முகத்தைக் கூட பார்க்க சக்தியற்ற தலையை குனித்துக் கொண்ட நீலவேணியின் மனமோ குற்ற உணர்ச்சியில் மரித்துப் போகலானது.
வெறுப்பில் தலையை இரு புறமும் ஆட்டிய விஷ்வா, மித்ரனின் முகத்தை பார்க்க அதில் உள்ள செய்தியைப் படித்தவனோ அன்று நடந்ததை சொல்லத் தொடங்கினான்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு :
“டேய் மாப்ள..!!” என கத்திக் கொண்டே நண்பனை தேடிக் கொண்டிருந்தான் விஷ்வா.
அவனது அறையில் குப்புறப் படுத்து இருந்த மித்ரனைக் கண்டு கடுப்பாகியவன், அவன் முதுகில் ஒரு அடி போட அதற்கும் அசையாமல் இருந்தவனுக்கு மேலும் ஒரு அடி வைக்க நீட்டிய கையைப் பற்றி இழுத்திருந்தான் மித்ரன்.
அதில் அவன் மேலே தடுமாறி போய் விழ “தூங்காம நடிச்சிட்டு இருந்தியா பக்கி?” என அவனை கட்டிப்பிடித்து முடியை இழுக்க, “எஸ் மை டார்லிங்” வசீகர சிரிப்பை உதிர்த்து கண்ணடித்தான் தோழன்.
“உன் ஆளுன்னு நினைச்சு கண்ணடிக்காத! ஏன்னா அதுல நானே மயங்கிப் போய் உன்ன கிஸ் பண்ணிட போறேன் ஜாக்கிரதை” என எச்சரித்த விஷ்வாவை “அவனா நீ?” எனும் கேள்வியுடன் பார்த்து வைத்தான் அருள்மித்ரன்.
அவனை முறைத்து “எழுந்து வாடா சோம்பேறி. எங்கேயாச்சும் போலாம்” என அழைத்துக் கொண்டே எழுந்து கலைந்திருந்த முடியை சரி செய்து கொண்டான் விஷ்வா.
“ஓகே டூ மினிட்ஸ்” என்றவன் உடைமாற்றி வந்து விட “வா மாப்ள” என அவன் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான் விஷு.
“இரு. பைக் எடுத்துட்டு வரேன்” என்று நகர போனவனைத் தடுத்து “வேணாம் என் பைக்லயே ரெண்டு பேரும் போகலாம்” என்றவனை ஓர் நொடி புருவம் சுருக்கி பார்த்துவிட்டு தோளைக் குலுக்கிக் கொண்டு விஷ்வாவின் பைக்கில் ஏறிக் கொள்ள, அவன் பின்னால் அமர்ந்தான் நண்பனும்.
கண்ணாடி வழியாக விஷ்வாவையே பார்த்தபடி வண்டியை கிளப்பிய மித்ரனுக்கு அவன் முகம் சரியில்லாதது போல் தோன்றியது. இல்லை என்றால் தான் வாயாடிக் கொண்டும் வம்பு வளர்த்தும் வாய் மூடாது வந்திருப்பானே? இப்போது முகத்தில் சோக ரேகைகள் படர, வாயைத் திறக்காமல் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவனின் அமைதி இவனை தாக்கிச் செல்ல பைக்கை சட்டென நிறுத்தினான்.
திடீரென பிரேக் அடித்ததில் நிமிர்ந்த விஷ்வா பீச் அருகில் நிறுத்தப்பட்டிருந்தைக் கண்டு மெலிதான புன்னகை பூக்க, இறங்கிக் கொள்ள தானும் இறங்கி அவனோடு சேர்ந்து நடந்தான் மித்ரன்.
“விஷு! அங்கால போகலாம்” என்றவன் ஓரமாக இருந்த பெரிய கல்லில் ஏறி அமர்ந்து கொள்ள, விஷ்வாவும் அவ்விடத்தே அமர்ந்து விட்டான்.
“என் மனசு சரியில்லன்னு உனக்கு தெரியுதுல்ல?” என கேள்வியாக பார்த்த விஷ்வாவை நோக்கி ஆமோதிப்பாகத் தலை ஆட்டிட,
“என்னன்னு தெரியல மாப்ள! இன்னைக்கு கெட்ட கெட்ட கனவா வருது. நீ என்னை விட்டுப் போற மாதிரி எல்லாம் தோணுது” என்றிட அவன் வாயில் கை வைத்துத் தடுத்தான் மித்ரன்.
“என்ன பேச்சு டா பேசுற? ஒரு பேச்சுக்கு கூட இப்படி எல்லாம் சொல்லாத விஷு. பிரிவு என்கிற வார்த்தை நம்ம வாழ்க்கையில மட்டும் இல்ல, வாயில கூட தப்பி தவறி வந்துடக் கூடாது. நான் எதுக்கு உன்னை விட்டுப் போகப் போறேன்?” என்று சிறு பதற்றத்துடன் தான் வினவினான்.
விஷ்வாவோ இன்னும் தெளியாமல் இருக்க அவன் தாடையை பற்றி “விஷு! என்ன இது சின்ன பிள்ளை மாதிரி? எதுக்குமே கலங்காம இருக்கிறவன் தானே நீ. எதையும் போட்டு குழப்பிக்காமல் ஃப்ரீயா விடு” என்று கெஞ்சினான் மித்து.
நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு “ஏதோ மனசு படபடன்னு அடிச்சுக்குது மித்து! நான் எதுக்குமே கலங்காமல் இருப்பேன் தான். ஏன்னா என் கூட நீ இருக்கிறதால! என் சந்தோஷம் தைரியம் வாழ்க்கை எல்லாமே நீ தான்டா. நீ என் பக்கத்தில் இல்லாத வாழ்க்கையை ஒரு செகண்ட் கூட நினைச்சு பார்க்க முடியாது. எப்போவும் கை போட்டு சாஞ்சுக்க உன் தோள் வேணும் மாப்ள” கரகரத்த குரலில் சொன்னான் விஷ்வா.
நண்பனின் முகத்தையே இமை சிமிட்டாமல் பார்த்தான் மித்ரன்.
முடிக்கற்றைகள் நெற்றி தீண்டிட, எடுப்பான நாசி. சிவந்த அழுத்தமான உதடுகள். சற்றே நீண்ட இமைகள். குத்தீட்டியாய் துளைக்கும் பார்வை என பார்ப்போர் இமைகளை பசை போட்டு ஒட்டிக் கொள்ளச் செய்யும் பேரழகன் அவன்.
ஆனால் குணத்திலும், பாசத்திலும் அன்று ‘பிரண்ட்ஸ்’ என கேட்டு கை நீட்டிய குட்டி விஷ்வாவாகத் தான் மித்ரனின் கண்களுக்கு தெரிந்தான். அன்றும் இன்றும் துளி கூட மாறாமல் இவன் நட்பு கிடைத்திட, தான் கோடான கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் தோன்றிற்று.
பொதுவாக ஆண்களுக்குள் நட்பு மலர்ந்தாலும் தம் உணர்வையும் பாசத்தையும் வெளிப்படையாக காட்டுவதில்லை! மனதினுள் தான் அத்தனையையும் பூட்டி வைத்திருப்பர்.
ஆனால் விஷ்வ மித்ரர்களின் நட்பு அத்தகையது அல்ல! மனதிலுள்ளதை வெளிப்படுத்தி விடுவர், உணர்வு பூர்வமாக!
அப்படித்தான் இன்றும் கூட தன் சில கனவுகளின் தாக்கத்தால் மித்ரன் தன்னை விட்டும் பிரிந்து சென்று விடுவானோ என அஞ்சினான்.
“இதெல்லாம் நீ சொல்லவே வேணாம். உன் சந்தோஷம் நான் உன் பக்கத்துல இருக்குறதுல தான் இருக்குன்னா அதுக்காகவே எப்போவும் உன் கூட இருப்பேன்” என்றான், பிணைத்திருந்த கரங்களில் அழுத்திக் கொடுத்தபடி.
நண்பனின் வாக்கில் முகம் மலர இதழ்களில் கீற்றாய் புன்னகை அரும்பிட “இந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும் டா” மனம் நிறைய மொழிந்தான் காளை.
“ஹப்பா! எப்படியோ சிரிச்சுட்ட. உன்னை சமாதானப்படுத்துறது லவ்வர சமாதானப்படுத்துறத விட கஷ்டம் தான்” என பெருமூச்சு விட்டான் மித்ரன்.
விழி விரித்து அவனைப் பார்த்து “துரைக்கு லவ்வர சமாதானப்படுத்துறது கை வந்த கலை போல இருக்கே?” கிண்டலாக புருவம் உயர்த்தினான் விஷ்வா.
“உன்ன வச்சுட்டு நான் படுறதே பெரும் பாடா இருக்கு. இதுல லவ்வர் ஒன்னு தான் குறைச்சல்” நொடித்துக் கொண்ட மித்ரனைத் தீயாய் முறைத்து “அப்படினா நான் உனக்கு கஷ்டமா இருக்கேன்னு சொல்லுறியா?” எனக் கேட்டான் விஷ்வா.
“அப்படியே வச்சுக்க. கஷ்டம்னு சொன்னா என்ன பண்ணப் போறே?” பதில் கேள்வி கேட்டான் மித்ரன்.
விஷ்வா “உன்ன விட்டுப் போவேன்னு மட்டும் நினைச்சுக்காத. உன் கூடவே இருந்து இன்னும் டபுள் மடங்கு கஷ்டத்தை கொடுத்துட்டே இருப்பேன்” என பழிப்பு காட்ட, மித்ரனோ “தட்ஸ் மை விஷு” அவன் தோளில் தட்டினான்.
“மித்து! பைக்ல ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்” என சொல்ல, “அதுக்குத்தான் நானும் வந்தேன். நீ என்னடான்னா மூஞ்ச செவன் முழம் தூக்கி வச்சிட்டு சோக கிரியேட் பண்ணிட்ட” என சிரிக்க,
“உன் கிட்ட சொன்னேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கணும்” என்று எழுந்து செல்ல, கிளுக்கிச் சிரித்த மித்ரன் பைக் ஓட்ட அவன் பின் உட்கார்ந்து அவன் தோளைப் பற்றிக் கொண்டான் விஷ்வா.
“மாப்ள! இன்னும் ஃபாஸ்ட்டா ஓட்டு” என்க, அவனும் வேகம் எடுக்க சீண்டல்களும் ஆட்டமும் பாட்டமுமாக பைக்கில் சுற்றிவந்து ஒருவாறு வீட்டை அடைந்தனர்.
“மித்து உள்ள வாயேன் என்று” விஷ்வா அழைக்க, “இல்லடா டாடிக்கு டேப்லெட்ஸ் கொடுக்கணும். நாளைக்கு காலையிலே டான்னு இங்க ஆஜர் ஆயிடுவேன்” என்று சொன்னான் மித்ரன்.
இரு பக்கமும் தலையாட்டி “சரி பிழைச்சு போ… ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ” என்று விட்டு சென்றவனுக்கு என்ன தோன்றியதோ, திரும்பி வந்து மித்ரனை இறுக அணைத்துத் கொண்டான்.
இவனது செய்கை வழமைக்கு மாறாக தோன்றினாலும் எதுவும் பேசாமல் அவன் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்த மித்திரன் “விஷு” என அழைக்க அவனிடமிருந்து விலகி “அய்ம் ஃபைன் மித்து” எனக் கூறி, அவன் முடியை செல்லமாக கலைத்துவிட்டு சென்றான் விஷ்வஜித்.
அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பிச் செல்ல “மித்ரன்” எனும் அழைப்பு செவி தீண்ட, “அம்மா” என்றவாறே திரும்பினான் அவன்.
அவனது எதிர்பார்ப்பை பொய்ப்பிக்காமல் அங்கு நின்று இருந்தார் நீலவேணி.
“என்னமா? சொல்லுங்க” என்று மித்ரன் கேட்க, “நான் ஒன்னு சொன்னா நீ கேட்பியா?” மெதுவாக வினாவினார்.
அவரது தயக்கத்தை பார்த்து “என்ன இப்படி கேட்டுட்டீங்க? நீங்க சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா. இப்படி எல்லாம் கேட்கவே தேவையில்லை, இத செய்னு அதிகாரமா சொன்னா என்ன ஏதுன்னு கேட்காமல் செய்யப் போறேன்” என்று புன்னகை முகமாக சொன்னவனுக்கு தெரியவில்லை, அவர் கேட்பது அத்தனை சுலபமான விடயம் அல்லவென்று.
அவனை நேராக நோக்கி “நீ விஷுவ விட்டுப் போகணும் மித்து” என்ற ஒற்றை வரி அவனுள் ஆயிரம் ஆயிரம் அதிர்வலைகளை உண்டு பண்ணியது.
என்ன கேட்டுவிட்டார்? இல்லை இல்லை தனக்குத் தவறாக கேட்டிருக்கும் என நினைத்தவன், “என்ன சொன்னீங்க? சரியா கேட்கல” என்று குழப்பமாக கேட்டவனுக்கு இன்னும் பதற்றம் குறையவில்லை.
“உனக்கு சரியா தான் கேட்டிருக்கு. நீ இனிமே விஷ்வா கண்ணு முன்னாடி வரவே கூடாது. அவன விட்டு எங்கேயாவது தூரமா போயிடு! அவனும் நீயும் பிரியனும்” என்று உறுதியாக சொன்னார் நிலவேணி.
மித்ரனுக்கு வலித்தது! சாதாரணமாக ‘பிரியனும்’ என்று விட்டார். அவனைப் பிரிவது தன் உயிரையே பிரிவது என்பதை யார் உணர்வார்?
அதுவும் இத்தகைய ஒரு வார்த்தையை, தான் தாயாக நினைக்கும் நீலவேணியே சொன்னது பல மடங்கு வேதனையைக் கொடுத்தது. அவர் ஒன்றும் விளையாட்டாக சொல்லவில்லை என்பது அவ் வார்த்தைகளில் இருந்த உறுதியிலேயே தெரிந்தது.
“ஏன்மா? நீங்க இப்படி சொல்ல காரணம் என்ன?” என்று இயலாமையில் கரகரத்த குரலில் தான் கேள்வி எழுப்பினான் ஆடவன்.
“நீ அவன் கூட இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நீ எப்போ வந்தியோ அப்போல இருந்து அவனுக்கு என்னை விட நீ தான் முக்கியமா போயிட்ட. அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல! அவனை விட்டு நீ போறது தான் எனக்கும் நல்லது. உனக்கும் நல்லது” என்றவர் குரலில் வன்மம் அப்பட்டமாக தெரிந்தது.
மடிசாய்த்து தலை வருடி, பாசத்தில் முக்குளிக்க வைத்த நீலவேணியா இது? மித்து என்று அழைப்பிலேயே அவர் பொழியும் அன்பும் எங்கே தான் போனது?
“நான் போனா விஷு நல்லா இருப்பான்னு நினைக்கிறீங்களா? அவன் சந்தோஷமா இருப்பானா?” என்றவனின் கண்களும் கலங்கிப் போயிற்று.
நீலவேணி “அதெல்லாம் நான் சரி பண்ணிக்கிறேன். எனக்கு வேண்டியது ஒன்னு தான்! நீ இன்னைக்கே அவன விட்டு போயிடனும். நாளைக்கு அவன் பர்த்டே! நாளைல இருந்து அவன் புது லைஃப் வாழனும். அந்த வாழ்க்கை அத்தியாயத்துல உன் பெயர் வரவே கூடாது. மீறி நீ அவன் கண்ணில் பட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று பேசப் பேச வலி நிறைந்த பார்வையை செலுத்திய மித்து, இறுதி வார்த்தையில் உறைந்து போய் நின்றான்.
“என்ன அப்படி பார்க்கிற? இதோ பாரு” என்று கையில் இருந்த நஞ்சு போத்தலைக் காட்டி “இதை குடிச்சிட்டு செத்துப் போயிடுவேன். உன்ன மாதிரி அம்மா இல்லாத அனாதையா அவனும் வளரனும்னு நினைக்கிறியா?” வார்த்தைகளில் அமிலத்தை அள்ளித் தெறித்தார்.
துடி துடித்துப் போனான் அருள் மித்ரன்.’உனக்கு அம்மாவா நான் இருப்பேன் கண்ணா’ என்று கூறியவரின் அதே வாயால் இன்று அனாதைப் பட்டம் பெற்றுக் கொண்டான்.
தான் விஷ்வாவை விட்டுச் செல்லாவிட்டால் தன் உயிரினும் மேலான விஷ்வா தாயை இழந்து விடுவான் என்று நினைக்க நினைக்க மனம் தாளவில்லை.
கண்களை இறுக மூடி தன்னை சமன் செய்து கொண்டவன் “சரி! நான் விஷுவ விட்டுப் போறேன். அவனை நல்லா பாத்துக்கங்க. அவனை விட்டு பிரிஞ்சாலும் என் மனசு அவனை மட்டும் தான் எப்பவும் நினைச்சுட்டு இருக்கும். அவனை என்னிடம் இருந்து உங்களால மட்டும் இல்லை, யாராலையுமே பிரிக்க முடியாது. ஏன்னா என் ஒவ்வொரு அணுவுலயும் அவன் கலந்து இருக்கான். நான் வெறும் அருள் மித்ரன் இல்ல. ஐ அம் விஷ்வ மித்ரன்!” என்று கர்வமாக கூறியவனின் கண்களில் கண்ணீர் உருண்டோட, சுட்டு விரலால் அதைச் சுண்டி விட்டவன் விறு விறுவென நடக்க அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நீலவேணிக்கோ முகத்தில் வெற்றிக் களிப்பு!
……………………..
அலங்கார விளக்குகள் ஜொலி ஜொலிக்க, விஷ்வாவின் வீடே கோலாகலமாக இருந்தது. சின்னஞ் சிட்டுக்கள் அங்கும் இங்கும் ஓட நட்பு வட்டாரங்களும் லூட்டி அடித்து அனைவரும் மகிழ்வுடன் இருக்க, பிறந்தநாள் விழாவின் நாயகனோ தனது அறையில் கலக்கமாக அமர்ந்திருந்தான்.
வேறு பிறந்த நாட்களுக்கு அவன் தான் முதலிலேயே அணைத்து வாழ்த்துவான்! இன்று மாலையாகியும் அவன் வாழ்த்தையும் காணவில்லை, மித்ரனையும் காணவில்லை.
“ஏய் கொரில்லா” என கத்திக்கொண்டே வந்த அக்ஷரா அண்ணனின் தோற்றம் கண்டு புருவம் சுருக்கினாள்.
“விஷு! யேன் டல்லா இருக்க? எனி ப்ராப்ளம்?” என்று அவன் தோள் தொட, “மித்து வர்ல டி. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன்டி இப்படி பண்ணுறான்?” என்றவனுக்கு ஏனோ இதயம் தாறுமாறாக துடித்தது.
தனக்கும் அந்த கேள்வி உள்ளுக்குள் நெருடினாலும் “அவன் இல்லாம உன் பர்த்டே பார்ட்டி நடக்குமா? கண்டிப்பா வருவான் தோஸ்த்து. உன் மொக்க ப்ரெண்ட்ஸ் உன்னைத் தேடுறாங்க” என்று விஷ்வாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.
நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் விஷ்வாவின் கண்கள் மித்ரனைத் தான் தேடின.
அவனது தேடலுக்குக் காரணமானவனோ யன்னல் வழியாகக் குதித்து விஷ்வாவின் அறைக்குள் நுழைந்தான். கையில் இருந்த காகிதத்தை மடித்து அவனது மேசையில் வைத்துவிட்டு சுவரில் மாட்டப்பட்டு இருந்த அவன் புகைப்படத்தை வருடினான்.
“சாரி விஷு! எனக்கு தெரியும் நீ ரொம்ப ஃபீல் பண்ணுவேனு. ஆனாலும் என்னால எதையுமே யோசிக்க முடியல. அம்மா இல்லாத லைஃப் எவ்வளவு கொடுமையானதுன்னு அதை அனுபவிச்சு எனக்கு தெரியும். என் விஷுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட நான் விடவே மாட்டேன்.
உன்னை விட்டு போகவே மனசு இல்லடா. ஆனாலும் போறேன். நம்ம நட்புக்குள்ள இப்படி ஒரு பிரிவு வரும்னு நினைக்கவே இல்ல. உன்னை விட்டு போக மாட்டேன்னு கொடுத்த உறுதியையும் உடைச்சுட்டு போறேன். பாய் டா” என்றவன் வந்த வழியே இறங்கிச் சென்றான்.
ஹாலில் இருந்த விஷ்வாவுக்குள் ஏதோ உள்ளுணர்வு உந்த படபடவென படிகளில் ஏறிச் செல்ல, அவனைத் தொடர்ந்து அக்ஷராவும் சென்றாள்..
தனது அறையினுள் நுழைந்தவன் கண்களில் மித்ரன் வைத்து சென்ற காகிதம் பட்டுவிட, அதை கைகளில் எடுத்தவன் மனமோ வேகவேகமாக அடித்துக் கொண்டது. மெல்ல அதனை பிரித்துப் பார்த்தான்.
அன்புள்ள விஷுவுக்கு! இதை நீ படிக்கும் போது நான் உன்னை விட்டு தூரமா போயிட்டு இருப்பேன். உன் பர்த்டேக்கு இந்த வருஷம் நான் தர கிஃப்ட் பிரிவு. ஆமாடா! நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அத பத்தி உன் கிட்ட இன்னைக்கு சப்ரைஸ்ஸா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள அவளுக்கும் எனக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்!
எனக்கு நீயா அவளா முக்கியம்னு கேட்டுட்டா. எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல விஷு. அவ தான் என் உலகமே. என் காதலுக்காக இத்தனை வருஷ நட்பை தூக்கி போட்டுட்டு போறேன். எனக்கு தெரியும் உன்னால இதை நிச்சயமா தாங்கிக்க முடியாதுன்னு. ஆனாலும் போய்த்தான் ஆகனும். போறேன் மாப்ள. உன்ன விட்டு தூரமா போறேன்.
என் மேல உனக்கு பாசம் இருக்குனா என்னைத் தேடி வரவே கூடாது. அப்பறம் இன்னிக்கு பர்த்டேவ கண்டிப்பா செலிப்ரேட் பண்ணனும்! விதி நம்மள சேர்க்கனும்னு எழுதி இருந்தா திரும்ப சந்திப்போம். குட் பை மாப்ள! மிஸ் யூ அன்ட் ஹேப்பி பர்த்டே டு யூ” என்று எழுதியிருந்ததை வாசித்தவனுக்கு உலகமே நின்று விட்ட உணர்வு!
அதைக் கேட்ட அக்ஷராவோ உயிரோடு செத்துப் போனாள். தன் காதலன் அருள் இன்னொருத்தியைக் காதலிக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
விஷ்வாவோ பாறையென இறுகிப் போய் எங்கோ வெறித்திருந்தான். “வி…விஷு” என்று அக்ஷு தோள் தொட, இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கவலை அழுகையாய் வெடிக்க “அ…அக்ஷு! அவன் என்னை விட்டுப் போய்ட்டான். எப்படி டி அவனுக்குப் போக மனசு வந்துச்சு? முடியல டி செத்துடனும் போல இருக்கு. ஆனால் நான் சாக மாட்டேன். திரும்ப அவன் என் கிட்ட வருவான்னு நம்பிக்கை இருக்கு” என்ற விஷ்வாவின் உள்ளத்தில் வலி,வேதனை, விரக்தி,இயலாமை,கோபம்,ஏமாற்றம் என பல தரப்பட்ட உணர்வுகள்.
மித்ரனின் ஒற்றை வார்த்தைக்காக மனதில் வலியை மறைத்து புன்னகை முகமூடி அணிந்து கேக் வெட்டினான். வழமையாக மித்ரனுக்கே முதலில் ஊட்டி விடுபவன் இப்போது அதைத் தானே உண்டு மற்றவர்களுக்கும் ஊட்டி விட்டு தனது அறைக்குள் அடைந்து கொண்டான்.
“ஏன்டா போன? போய்ட்டல்ல இந்த விஷு வேணானு போய்ட்டீல? எனக்கும் நீ வேணாம் போடா. போடா ராஸ்கல் போ” என குஷனை மித்ரனாக நினைத்து குத்தியவன் அதனை அணைத்து “மிஸ் யூ டூ டா” என்றான் அழகையோடு.
அவனின் அழுகைக்குக் காரணமான நண்பனோ கண்களில் வழியும் நீரைக் கூட துடைக்க மறந்து, பெங்களூர் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
நட்பு தீபம் உள்ளத்தில் ஏறிய பிறகு இருவரும் கண்ணீர் விடும் முதல் தடவை இது!
காதலில் மட்டுமா பிரிவு வலியைக் கொடுக்கும்? நட்பிலும் தான் கொடுக்கும். அது மிகக் கொடுமையானது. இருவருமே ஒன்றாக இருந்த நிமிடங்களை நினைத்து அழுது கதறினார்கள்.
இனி……!
நடந்ததை சொல்லி முடித்த மித்ரன் அன்றைய நினைவுகளில் கலங்கிப் போய் நின்றான். விஷ்வாவோ இறுகிப் போய் அவனை உணர்வற்று பார்த்தான்.
நீலவேணியோ எதுவும் பேச இல்லாமல் “விஷு கண்ணா” என கூப்பிட, “ஷட் அப் மாம்! டோன்ட் கால் மீ லைக் தட். பெரியவங்கனு பார்க்குறேன் இல்லனா நடக்குறதே வேற. தயவு செஞ்சு இனிமேல் என் முன்னாடி வராதீங்க. உங்கள அம்மானு நெனக்கவே கேவலமா இருக்கு. என் மித்துவ அநாதைனு சொல்லிருக்கீங்க! நானும் இத்தனை நாளா அநாதையா தான் இருந்தேன், இவன் இல்லாம” என கடுமையாக சொன்னான் விஷ்வா.
அவனை நெருங்கிய மித்து “மாப்ள! அம்மா..” என ஆரம்பிக்கும் போதே, “நீ பேசாத” என எரிமலையாக வெடித்தான் விஷு.
அவனது கோபத்தின் அளவைப் புரிந்து கொண்ட நண்பன் அமைதியாக இருக்க, “உனக்கு என்னை விட இவங்க முக்கியமா போய்ட்டாங்கள்ள? எனக்கு அப்போவே தெரியும் டா லெட்டர்ல எழுதியிருந்த மாதிரி நீ யாரையும் லவ் பண்ணலேனு. ஒரு சின்ன விசயத்த கூட மறைக்காத நீ, இந்த பெரிய விஷயத்தை எப்படி மறைச்சு இருப்ப? இதுக்கு பின்னாடி ஏதோ மர்மம் இருக்குன்னு நம்பினாலும் உன்னோட ஒரு வார்த்தைக்காக தான் தேடி வராம இருந்தேன். ஆனா நான் ரொம்பவே பாசம் வெச்சவங்க தான் இதுக்கு காரணம்னு நெனக்கவே இல்லை” கோபம் ஆத்திரமாக மாறியது அவனுக்கு.
இதற்கு மேல் அங்கு நிற்கும் சக்தியில்லாது நீலவேணி சென்று விட, குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் நண்பனை இழுத்து அமர வைத்துத் தானும் உட்காரந்தான் மித்ரன்.
சட்டென அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டான் விஷ்வா. அவன் மனப்பாரம் நீங்கும் வரை ஓயாமல் தலையைக் கோதி விட்டபடியே இருந்தான் மித்ரன்.
சிறிது நேரத்தில் எழுந்து கொண்ட விஷ்வாவின் கோபம் இப்போது சற்றே குறைந்திருக்க அவனை முறைத்துக் கொண்டே சென்றான் தோழன்.
“உன்ன பத்தி எனக்கு தெரியாதா? போடா போ. எத்தனை நாளைக்கு என் கிட்ட கண்ணாமூச்சி ஆடப் போறேனு நானும் பார்க்குறேன்” என்று கூறி சிரித்துக் கொண்டான் விஷ்வாவின் மித்திரன்!
……………….
மொட்டை மாடியில் நின்று கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. விஷ்வாவின் நம்பரை பார்த்து அவனுக்கு அழைப்பதாக வேண்டாமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் அவள்.
“நானா கால் பண்ணா ஏதாச்சும் நினைச்சுப்பாரோ? அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா” என நினைக்கும் போதே ஏதேதோ உணர்வுகள் அவளுக்குள்.
“இருந்தா என்ன இல்லனா என்ன? அவர தப்பா பேசினது நீ. சோ மானம் ரோஷம் எதுவும் பார்க்காமல் சாரி கேட்று” என்றது மனசாட்சி.
“நீ எதுக்கு இடையில வந்து குட்டைய குழப்ப பாக்குற?” என அவள் அதனிடம் எகிற, “நீ மட்டும் இப்போ தெளிவா இருக்க பாரு. ஏற்கனவே குழம்பிட்டு நான் குழப்புறேனாம். விஷ்வா பாவம் டி” என்று அவனுக்கு பரிந்து பேசியது.
“நீ எதுக்கு அவருக்கு வக்காலத்து வாங்குறே? என் மனசாட்சினா என்னை மட்டும் பாரு” என சிலிர்த்தாள் வைஷு.
“க்கும் ரொம்பத்தான்” என நொடித்துக் கொண்டு மறைந்தது அது.
“இதுவும் கரெக்டு தான். நாமலே பேசிடலாம்” என்று நினைத்தாலும் ஏதோ ஒரு தயக்கம் அவளுக்கு.
திடீரென அவள் தோளில் ஒரு கை விழ, விலுக்கென நிமிர்ந்தவள் முன் புருவ முடிச்சுடன் நின்றிருந்தாள் பூர்ணி.
“ஹே பூரி! எப்போ வந்த” என்று கேட்க, “எப்போவோ வந்துட்டேன். அது கூட தெரியாத அளவுக்கு என்ன யோசனை? இது புலம்பல் வேற. நான் கூட காத்து கருப்பு ஏதாவது புகுந்திருச்சோனு ரொம்பவே பயந்துட்டேன்” பயப்படுவது போல் நடித்த பூர்ணியை பார்த்து அசடு வழிந்தாள் பெண்.
“அப்படியெல்லாம் இல்லடி ச்சும்மாதான்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்து “இந்த ச்சும்மாக்கு பின்னால உன் மாமா தான் இருப்பார் இல்லையா?” என காதில் கிசு கிசுத்தாள் பூர்ணி.
‘மாமாவா’ என்று யோசித்தவள் “அது யாரு” என்று கேட்க “என் மக்கு மாங்காவே! வேற யாரு விஷ்வா தான்” என கண்ணடித்தாள் அவள்.
விஷ்வாவின் பெயரைக் கேட்டவளுக்கோ தன்னைச் சுற்றி ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பது போல் தோன்ற “ஆமாடி அவர்கிட்ட கொஞ்சம் பேசணும். ஆனா தயக்கமா இருக்கு “என இழுவையாகக் கூறிய பெண்ணவள் சிவந்த முகத்தை மறைக்க அரும்பாடுபட்டாள்.
“அப்படி போடு! நம்ம வைஷூவா இது? புதுசா வெட்கமெல்லாம் படுறா. தயக்கம்னு வேற சொல்லுறா” என்று கிண்டலடித்தவள் “எதுக்கு டி தயக்கம்? உன் ஹஸ்பண்ட் தானே அவர். தைரியமா பேசு வைஷு. விஷு எதுவும் நினைக்க மாட்டார்..
ஹீ இஸ் ஸச் அ ஸ்வீட் பர்சன்! அவர் மேல யாராவது அன்பு வெச்சாங்கனா அதை என்னிக்குமே அலட்சியப்படுத்த மாட்டார்” என்று தனக்குத் தெரிந்த விஷ்வாவின் குணத்தை குறிப்பிட்டாள் அவள்.
பூர்ணியின் கைகளைப் பற்றிக் கொண்ட வைஷ்ணவி “ரொம்ப தேங்க்ஸ் பூரி. இப்போதான் மனசு தெளிவா இருக்கு. ஆமா நீ ரோஹன் அண்ணா கூட பேச போறேன்னு சொன்னியே என்னாச்சு” என்று விசாரிக்க,
“நாளைக்கு காலையில வந்து கூட்டிட்டு போவார்” என்று பதிலளித்தவளுக்கு இவர்களைப் பிரிவது கவலையைக் கொடுத்தது.
இத்தனை நாள் மித்ரன், வைஷ்ணவி என ஒன்றாக இருந்து விட்டு தனியாக செல்வதில் முகம் வாடி விட, “என்ன பூரி ஃபீல் பண்ணுறியா? நீ மூஞ்ச இப்படி வச்சுக்கிட்டா மித்துணா ரொம்ப கஷ்டப்படுவார்” என்று கூற, தலையாட்டி மெலிதாக புன்னகைத்தாள் பூர்ணியும்.
“அது மட்டுமில்ல. என் பொண்டாட்டிய நல்லா பாத்துக்க மாட்டீங்களானு ரோஹன் அண்ணாவும் கோச்சுக்க போறார். அவர் கிட்ட என்னால திட்டு வாங்க முடியாது” என வைஷு சொல்ல,
“உன்னை திட்டுனா நான் பார்த்துட்டு இருப்பேனா? அவன பொளந்து கட்டிட மாட்டேன்” என்றவளைப் பார்த்து, “என்னம்மா வில்லி ரேஞ்சுக்கு பேசுறே. எங்க ஹீரோ அண்ணா பாவம்” என உச்சி கொட்டினாள் வைஷ்ணவி.
காளி அவதாரம் எடுத்த பூரியோ “எதே? நான் வில்லி, அவன் ஹீரோவா?” என்று கடுப்பாக, “இல்ல தாயே! நீ அந்த ஹீரோக்கு ஏத்த ஹீரோயின் தான் போதுமா” என்க, “அது” என இல்லாத காலரை தூக்கி விட்டாள் பூர்ணி.
பூர்ணியின் தோள்களைப் பற்றி தன் பக்கம் திரும்பிய வைஷு “பூரி! நீ உண்மையாகவே சந்தோஷமா தான் போறியா?” என்று கேட்க, “ஏன் இந்த கேள்வி” புரியாமல் கேட்டவளுக்கும் இதயம் தடதடவென துடிக்க,
“நான் சந்தோஷமாகத்தான் போறேன் டி. நீ எதுவும் குழப்பிக்காத சரியா” என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கூறினாள்.
“ரோஹன் அண்ணா பண்ணது தப்புதான். ஆனாலும் அன்னைக்கி அவர் கண்ணுல நான் உண்மையான காதலைப் பார்த்தேன். அதை உதாசீனப்படுத்தி அவர காயப்படுத்தாத. நீயும் காயப்பட்டு இருக்கே, நான் இல்லைன்னு சொல்லல. அதே காயத்தை என் பூரி யாருக்கும் கொடுக்க மாட்டானு நம்புறேன்” என்று கூறியவளை கண்கள் அகல நோக்கினாள் பூர்ணி.
“என்ன பார்வை?” என புருவம் தூக்க, “நீயா இப்படி கிழவி மாதிரி பேசுறேன்னு பார்த்தேன்” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தாலும், அவள் சொன்னதிலிருந்த உண்மையும் அக்கறையும் பூர்ணியின் மனதில் ஆழப் பதிந்தது.
பூர்ணி “மேடத்துக்கு ரோஹன் அண்ணா மேல ரொம்பத்தான் பாசம் பொங்குது” என்று சிலுப்பிக் கொள்ள, “யாஹ் யாஹ். அவர் யாரு எங்க பூரியோட புருஷன் ஆச்சே? வா வா உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணலாம்” என்று அழைக்க,
“ஓகே” என்ற பூர்ணி முன்னே செல்ல, விஷ்வாவுக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நினைப்பையே மறந்தவளாய் பூர்ணியைத் தொடர்ந்து செல்லலானாள் வைஷ்ணவி..
நட்பு தொடரும்………!
ஷம்லா பஸ்லி