16. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 16

 

மாரிமுத்துவின் பார்வை மகிஷா மீது படிய, அதிர்ந்து போனது அவளுள்ளம். இருபது வயது இளஞ்சிட்டு அவள். திருமணம் என்பதை அவள் என்றென்றும் நினைத்துப் பார்த்ததில்லையே.

 

“மகி…!!” என்று அழைக்க, அவ்வழைப்பின் காரணம் புரிந்து போனது அனைவருக்கும்.

 

சத்யாவுக்கு அவர் கொடுக்கப் போகும் புதல்வி மகிஷா என்பதை யூகிக்கும் முன், “அப்பா” என்றழைத்திருந்தாள் ஜனனி.

 

அவரது பார்வை ஜனனி மீது கடுமையாகப் படர்ந்தது. மகிஷாவை எதற்குப் பேசுகிறீர்கள்? நந்திதா சென்றதற்கு அவள் பழியா? அவளது வாழ்வை ஏன் சிதைக்க வேண்டும் என வழக்கம் போல் வாக்குவாதம் செய்யப் போவதாக நினைந்துக் கொண்டார்.

 

தந்தையை நேரிடையாகப் பார்த்தவள், “இவரை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” சத்யாவை நோக்கி விரல் சுட்டிச் சொன்னாள் பெண்ணவள்.

 

அவள் பேச்சில் சகலரும் அதிர்ந்து நின்றனர். எத்தனை இடங்களில் இப்படி திருமணங்கள் நின்று போயுள்ளன. அதிலும் அக்காவிற்குப் பதில் தங்கையைக் கூட மணமுடித்துக் கொடுப்பார்கள். என்றாலும், அது அப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் பெற்றவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அல்லவா நடைபெறும்?

 

ஆனால் இவள் தானாகக் கேட்கிறாள். அவளே கேட்டது அனைவருக்கும் அதிர்ச்சி தான், ஆனால் மாரிமுத்துவுக்கோ பேரதிர்ச்சி.

 

அவருக்கு ஜனனியின் போக்கு என்றைக்கும் பிடிக்காது. தனது பேச்சை மீறி படிக்கச் சென்றது முதல் அவள் மீது நல்லெண்ணம் இல்லை.

 

“இந்த மாதிரி அடங்காப்பிடாரியா சுத்திட்டு இருக்கிறது நல்லதுக்கில்ல. படிக்கப் போற இடத்தில் ஒருத்தனைக் காதலிச்சு கூட்டிட்டு ஓடிப் போனாலும் சொல்லுறதுக்கில்ல” எந்த ஒரு தகப்பனும் சொல்லாத வார்த்தையை அவள் மீது உபயோகித்திருக்கிறார்.

 

அதற்காகத் தான் இன்றும் கூட மகிஷாவைப் பார்த்தார், அவள் தன் பேச்சுக்கு மரியாதை தருவாள் என்று. ஜனனியிடம் கேட்டால் அவள் நிச்சயம் மறுத்து விடுவாள் என்றே நினைத்தார்.

 

இருப்பினும், இன்று அவர் கணக்குகள் யாவும் பிழைத்தன. வாயில்லாப் பூச்சி, வார்த்தையை மீறி நடக்க மாட்டா என்று பெருமைப்பட்ட மூத்த மகள் அவர் முகத்தில் கரியைப் பூசி விட்டாள்.

 

தவறான மனப்போக்கை அவருள் விதைத்திருந்த ஜனனி, அவளாகவே அவரது விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளாள்.

 

“ஜானு! நீ ஏன் இப்படி பேசுற?” ஜெயந்தி அடி நுனி புரியாமல் பார்த்தார்.

 

“மகி சின்னப் பொண்ணு மா. அவளுக்கு இந்த பொறுப்பு எல்லாம் இப்போதைக்கு வேணாம். அவளுக்குப் பதில் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நானும் அவர் பொண்ணு தானே?” மாரிமுத்துவைப் பார்த்தவாறு சொல்ல, அவருக்கு கண்கள் கலங்கின.

 

அவளை மகள் இல்லை என்று சொன்னாரோ, அவள் அல்லவா இன்று அவர் மானம் காக்க முன்வந்துள்ளாள்? 

 

“ரொம்ப நன்றிமா ஜனனி” தனது கைகளைப் பற்றிக் கொண்ட மேகலையைப் பார்த்து உதட்டுக்கும் வலிக்காத புன்னகையொன்றை வழங்கினாள்.

 

அவளையே வெறித்துப் பார்த்த சத்யாவுக்கு உலகமே வெறுத்தது போன்ற உணர்வு.

 

நந்திதா, மகிஷா, ஜனனி என்று தனது வாழ்க்கை ஏன் பந்தாடப்படுகின்றது? நான் ஒரு ஆப்ஷன் தானா எல்லாருக்கும்? செருப்புக் கடையில் ஒவ்வொருவரும் அணிந்து சரி பார்க்கும் செருப்பை விட தனது நிலை கேவலமானது போல் இருந்தது அவனுக்கு.

 

மேகலை மட்டும் கெஞ்சவில்லை என்றால் அவன் அனைத்தையும் உதறி விட்டுச் சென்றிருப்பான். அவன் மறுத்து அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அந்தப் பழியையும் இழப்பையும் ஏற்கும் சக்தி அவனுக்கில்லை. அந்த ஒரு காரணத்திற்காக அமைதியாக இருந்தான்.

 

“என்னடா இப்படி ஆச்சு?” தேவனும் ரூபனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

முகூர்த்தம் கிட்ட நெருங்கி விட்டது. மலர் மாலை ஜனனியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. சத்யாவோடு இணைந்து மணமேடைக்குச் சென்றாள் அவள்.

 

சத்யாவின் கால் ஓர் நொடி நடையை நிறுத்தம் செய்தது, தூரத்தே நின்றிருந்த ராஜீவைக் கண்டு.

 

இதை எப்படி மறந்தேன்? இந்த ஜனனிக்கு அந்தப் பையன் மீது காதல் இருக்கின்றதே. அப்படியிருக்க, எதற்காக தன்னை மணக்க சம்மதித்தாள்? என்று யோசித்தவாறு அவளைப் பார்க்க, ஜனனியும் கண்கள் கலங்க ராஜீவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன அப்படியே நிற்கிறீங்க? சீக்கிரம் மணமேடைக்குப் போங்க” என மேகலை சொல்ல, மணப்பெண் மாறியதை அறிந்து அந்த மண்டபம் சலசலத்தது.

 

“இதென்ன டி கூத்து? அந்த பொண்ணு என்னாச்சு?” நீலாம்பரி மகளின் காதைக் கடிக்க, “எனக்கு என்னம்மா தெரியும்? நானும் உன் கூடத் தானே இருக்கேன்” யோசனையில் ஆழ்ந்தாள் நீரஜா.

 

“எல்லாரும் மன்னிக்கனும். எங்க குடும்பத்துக்குள்ள ஒரு பிரச்சினை. இன்னிக்கு கல்யாணம் நந்திதாவுக்கு இல்லை, என் பொண்ணு ஜனனிக்கு” ஜனனியை ஒருவித அன்போடு நோக்கின, அவர் கண்கள்.

 

அவளுக்கும் கண்கள் கலங்கின. ‘என் பொண்ணு’ எனும் அடைமொழி அவளுக்கு ஆனந்தத் தூறல் தூவியது. எந்தப் பெண்ணுக்கும் தந்தையென்பவர் விசேஷமான உறவு தானே?

 

சலசலப்புகள் ஓரளவு குறையத் துவங்கிற்று. ஐயர் மந்திரம் ஓத, சத்யா இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

 

“டாடி கிட்ட ஏன் ஜானு இருக்காங்க?” யுகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய தேவன், “இனிமே உன் டாடி கூட அவங்க தான் இருப்பாங்க செல்லம்” என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

 

சத்யாவின் கையில் தாலி வழங்கப்பட்டது. மனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது அவனுக்கு. ஜனனியைப் பார்க்க, அவள் அக்னியை வெறித்திருந்தாள்.

 

“இந்தக் கல்யாணம் ஒன்னும் எனக்கு அவசியமில்லை. நான் உன் கூட எப்போவும் வாழ மாட்டேன். சோ விருப்பம் இல்லேனா எழுந்து போயிடலாம்” அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக சொன்னான் அவன்.

 

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு “விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொன்னவளைக் கண்டு அவனுள் வெறுப்பு.

 

அன்று அவள் கண்களில் ராஜீவ் மீதான காதலைப் பார்த்தானே? இதோ இப்போதும் கூட இருவரது பார்வையும் சொல்லிய பிரிவின் வலி அவர்களது உள்ளத்தில் இருந்த காதலைப் பறைசாற்றுகின்றதே. அப்படியிருக்க இவள் ஏன் இப்படிச் சொல்கிறாள்?

 

அவள் நிலமையை அவனறியான் ஆகையால் காதலித்து ஏமாற்றியவளாக, பொய் சொல்பவளாக சத்ய ஜீவாவின் மனதில் ஜனனி என்பவள் பதிந்து போனாள்.

 

“ஓகே. இனி உன் இஷ்டம்” அவன் குரலில் இருந்த வெறுப்பை, வெவ்வேறுபட்ட சிந்தனைகளில் சிக்கியிருக்கும் அவளும் அறியவில்லை.

 

தாலியை அவளருகில் கொண்டு சென்றவன், அவளைப் பார்க்க வெறுமையான விழிகளால் அவனை ஏறிட்டாள்.

 

ராஜீவ்வின் கண்கள் கலங்க, வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

 

கண்களை மூடித் திறந்து, அவள் கழுத்தில் தானே மூன்று முடிச்சுகளையும் இட்டான் சத்யா. அவள் கண்களில் துளி கண்ணீர் உருண்டோடி அவனது கரத்தை முத்தமிட்டது.

 

“என் பையனோட வாழ்க்கை இனியாவது சந்தோஷமா மாறனும் முருகா” கண்ணீரோடு வேண்டுதல் வைத்தவர் அறியவில்லை, அது அவ்வளவு எளிதில் சாத்தியப்படாது என்று.

 

வகிட்டில் குங்குமம் வைக்கும் போது அவனுக்கு உடல் விறைத்தது. அத்தொடுகையில் அவளுள்ளும் ஏதோ மாற்றம்.

 

அடுத்தடுத்து சடங்குகள் நடைபெறலாயின. சத்யா உள்ளுக்குள் முகிழ்த்த கோபத்தை மறைத்துக் கொண்டு அவற்றில் ஈடுபட, ஜனனியோ சிலையென நின்றிருந்தாள்.

 

மேகலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு, மாரிமுத்து மற்றும் ஜெயந்தியின் காலில் விழுந்தனர்.

 

“நூறு வருஷம் சந்தோஷமா வாழனும்” என மனதார ஆசீர்வதித்தார் மாரிமுத்து. ஜெயந்தியும் உள்ளம் உருகி ஆசீர்வதித்தார். 

 

“என்ன ஜானு நீங்க அண்ணியாகிட்டீங்க?” ரூபன் ஆச்சரியமாகக் கேட்க, “எது நடக்கனும்னு இருக்கோ அதான் நடக்கும்” வலியோடு கூடிய புன்னகையை பரிசளித்தாள் அவள்.

 

‘என்னமோ பெரிய தியாகி மாதிரி பேசுறா. இவ மறுத்திருந்தா கல்யாணம் நடந்திருக்கவே வேண்டாம்’ உள்ளுக்குள் கருவிக் கொண்டான் சத்யா.

 

அனைவரையும் பந்தியில் அமர வைத்து சிறப்பாக கவனித்தார் மாரிமுத்து. மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் நேரமும் வந்தது.

 

“ஜானு!” மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கலங்கி நின்றார் ஜெயந்தி.

 

மற்றைய இரு மகள்களையும் விட, ஜனனி என்பவள் சற்று வித்தியாசமானவள். மாரிமுத்து அவரை ஏதாவது சொன்னால், பதிலுக்கு ஏதாவது பேசி விடுவாள். அதே சமயம் ஜெயந்தியிடம் வந்து அவரை அணைத்து ஆறுதல்படுத்துவாள். 

 

அவளது முதல் சம்பளத்தில் அவருக்கென்று ஒரு தொகையை கவரில் போட்டுக் கொடுத்து ஒரு பிடவையும் வாங்கிக் கொடுத்திருந்தாள். இன்று அவர் அணிந்து வந்தது கூட அந்தப் பிடவையைத் தான். இதில் அவளுக்கு கல்யாணமானதை அவரால் இன்னமும் நம்ப இயலவில்லை.

 

“என்னைப் பற்றி யோசிக்காதீங்க. எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன் மா. ஹேப்பியா இருங்க” அவரை அணைத்துக் கொள்ள, “கவலைப்படாதீங்க. நான் ஜனனியை என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன்” என வாக்களித்தார் மேகலை.

 

“அக்கா….!!” என்று ஜனனியை இறுகக் கட்டிக் கொண்டாள் மகிஷா.

 

“ஹேய் அழாத மகி! நீ அழுதா நல்லாவா இருக்கு?” அவளது கண்ணீரைத் துடைத்து விட, “எனக்காக தானே இந்த கல்யாணத்தை நீ ஏத்துக்கிட்ட. எனக்கு தெரியும்கா. ஆனால் நீ இல்லாம நான் எப்படி இருக்க போறேன்‌?” என அழுதாள்.

 

“அம்மா இருக்காங்கள்ல? அப்பா அம்மாவை பார்த்துக்க. அவங்க கூடவே இரு. முக்கியமா, அக்காவையும் என்னையும் போல நீ லவ் பண்ணிடாத டி. அவங்க தலை குனியுற விஷயங்களை நெருங்கவும் வேண்டாம்” என்று கூற, தலையாட்டி வைத்தாள் மகிஷா.

 

“ஜானுவுக்கு ட்ரெஸ் எதுவும் எடுக்கலல்ல? மறு வீட்டுக்கு வர்றப்போ எல்லாம் குடுத்து விடுறோம். இப்போதைக்கு ரெண்டு செட்டு துணி இருக்கு” ஜெயந்தி மேகலையிடம் சொல்ல, “இருக்கிறது போதும். மத்ததை நாங்க எடுத்து கொடுக்கிறோம். நீ கவலைப்படாத” என்றார் மேகலை.

 

இறுதியாக தந்தையிடம் சென்று, “நான் போயிட்டு வர்றேன்பா” என்றாள் ஜனனி.

 

“உன்னை நான் புரிஞ்சுக்கலயோனு இருக்கு. எப்போவும் நல்லா இருக்கனும்மா” அவளது தலையை வருடி விட, அவளுக்கோ கண்கள் கலங்கின.

 

எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவரது அன்பான வார்த்தையும் தொடுதலும் அவளுக்குக் கிட்டியுள்ளது?

 

“நான் ஒன்னு கேட்டா பண்ணுவீங்களா அப்பா?” அவரிடம் கேட்க, என்ன என்பதாகப் பார்த்தார்.

 

“மகி படிக்கனும்னு ஆசைப்படுறா. படிக்க முடியலையேனு அவளுக்குள்ள நிறைய ஏக்கம் இருக்கு. ப்ளீஸ்பா! அவளை மேற்கொண்டு படிக்க விடுறீங்களா?” கெஞ்சலுடன் அவள் கேட்ட போது அவரால் மறுக்க முடியவில்லை.

 

“யோசிக்கிறேன்” என்று சொல்லி விட, அதுவே அவளுக்குப் பெரிய வெற்றியாக இருந்தது.

 

“கிளம்பலாமா டா?” மேகலை கேட்க, தலையசைத்தவளது முன்னால் வந்து நின்றான் ராஜீவ்.

 

“ஹேப்பி மேரீட் லைஃப் ஜனனி! சந்தோஷமா இரு” என்றிட, வலியோடு இதழ் விரித்தாள் வஞ்சி.

 

இதைக் கண்ட சத்யாவின் மனதில் அணுகுண்டு வெடித்தது.

“ம்மா! போகலாம்” யுகனின் கைப்பிடித்து முன்னால் நடக்க, மேகலை மருமகளை அழைத்துக் கொண்டு சென்று காரில் ஏறினார்.

 

தன்னைப் பார்த்தவாறு நிற்கும் குடும்பத்திற்கு கையசைத்து விடைகொடுத்து, தன் வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பித்தாள் ஜனனி.

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!