விஷ்வ மித்ரன்
💙 அத்தியாயம் 16
வெளியில் சென்று வந்ததில் இருந்தே சோபாவில் சரிந்து அழுது கொண்டிருந்த நீலவேணியைப் புரியாமல் பார்த்தவாறு நின்றிருந்தனர் சிவக்குமாரும், அக்ஷராவும்.
என்ன தான் கண்ணீர் விட்டாலும் மனைவியின் அருகில் கூட செல்லாமல் உறுத்து விழித்தபடி சிவா எதிர் இருக்கையில் அமர்ந்து கொள்ள,
தாயின் அருகில் சென்று உட்கார்ந்த அக்ஷரா “அம்மா என்ன ஆச்சு? எங்க போயிட்டு வந்தே? எதுக்கு அழுவுற?” என பதற்றமாக கேட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
முதல் முதலாக இத்தனை நேரம் அவர் அழுவதை அவளால் தாங்க முடியாது போக “மாம் ப்ளீஸ் டெல் மீ. வாட் ஹேப்பண்ட்?” என கேட்க அவளை பார்த்துவிட்டு கைகளில் முகம் புதைத்து அழுதார் நீலா.
மகனின் வார்த்தைகள் ஒரு புறம் வருத்தியது என்றால், தான் முகம் வாடி விட்டாலே பொறுக்காத கணவனின் பராமுகம் மற்றொரு முகம் வேதனையைக் கொடுக்கலானது.
‘நீ அழுறத பார்க்க முடியல நீலா. ஆனாலும் மித்து, விஷு லைஃப்ல நீ பண்ணத என்னால மன்னிக்கவே முடியல’ என மனதினுள் பேசிக் கொண்டார் சிவக்குமார்.
அவ்வேளை புயலென வீட்டினுள் நுழைந்தான் விஷ்வா. அழும் தாயை வெறித்து விட்டு படிகளில் ஏறப்போனவனின் நடையை நிறுத்தியது “அண்ணா” என்னும் அக்ஷுவின் அழைப்பு.
நடையை நிறுத்தி “சொல்லு டா” என்றான், லேசாக தலை திருப்பி.
அவனை விசித்திரமாக பார்த்து வைத்தவள் “கொஞ்சம் வா விஷு. மாம் எங்கேயோ போய் வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்காங்க. என்னன்னு கேட்டா சொல்லவும் மாட்றாங்க. நீயே கேளு” என்று சொல்ல,
“ஓஹ்ஹோ! அப்போ என்ன நடந்ததுனு சொல்லவே இல்லையா உன் மாம்?” எனக் கேட்டவாறு நிதானமாக கீழே இறங்கி வந்தான்.
“நீ சொல்லுறதை பார்த்தா மாம் எங்க போனாங்கன்னு உனக்கு தெரியும் போல இருக்கே” எனக் கேட்டாள் குழப்பத்துடன்.
அலட்சியமாக தோளைக் குலுக்கி “அவங்க வெளியில போய் பார்த்துட்டு வந்தது மித்துவையும் என்னையும் தான்” என்றான் விஷ்வா.
முதலில் புரியாது திகைத்தவளுக்கு ஏதோ தோன்ற “அப்படினா மாம் அழுறது எதுக்குன்னு உனக்கு தெரியும் தானே? என்ன ரீசன்னு சொல்லு விஷு” என்று கேட்டாள் பெண்.
“என்னால முடியாது. அத உன் மாம் கிட்டயே கேளு” என்று அவன் கூறி விட, “அதத்தான் அப்போலிருந்து கேட்கிறேன். வாயே திறக்க மாட்றாங்க” என சலித்துக் கொண்டாள் அக்ஷரா.
“எப்படி திறப்பாங்க? செஞ்சிருக்க காரியம் அப்படி” என்று வெறுப்புடன் கூறியவனின் இந்த வார்த்தையை கேட்டுத்தான் இத்தனை நேரம் அமைதியாக இருந்த சிவகுமார் என்ற சிலைக்கே உயிர் வந்தது.
“அப்படின்னா உனக்கு எல்லாமே தெரிஞ்சுருச்சா கண்ணா?” என்ற கேள்வி அவரிடம் இருந்து புறப்பட,
சட்டென தலை திருப்பி அவரைப் பார்த்து “ம்ம்ம்” என்று மட்டுமே மொழிந்தான் அவன்.
விஷ்வாவின் வெறுப்புடன் கூடிய பார்வையைக் கண்டு வெகுண்டெழுந்த அக்ஷு “என்ன நடக்குது இங்க? மாம் மேல அப்படி என்ன கோபம் உனக்கு? அதுவும் வந்ததிலிருந்தே பார்க்குறேன் உன் மாம் உன் மாம்னு சொல்லுற. அப்போ அவங்க உனக்கு யாரு?” என்று சீறினாள்.
“அதத்தான் நானும் திங்க் பண்றேன். ஒரு அம்மா தன் பையனுக்கு செய்யாத காரியத்தை பண்ணிட்டாங்களே” என்றான் தங்கையின் புறம் விழிகளை நிலை நாட்டி.
நீலவேணியோ இன்னும் இன்னும் விசும்பி அழ “விஷு! திஸ் இஸ் தி லிமிட்! அவங்க என்ன வேணா பண்ணி இருக்கட்டும். அதுக்காக இப்படி எல்லாம் எடுத்தெறிஞ்சு பேசாத. என்ட் ஒன் மோர் திங்க். மாம் எது பண்ணாலும் அது நம்ம மேல உள்ள பாசத்தினால தான்” என்று தாயின் அழுகையை பொறுக்க முடியாமல் விஷ்வாவிடம் பாய்ந்தாள் அவள்.
பரபரவென விரல்களால் நெற்றியை நீவிக் கொண்டான் அவன். இதை அவளிடம் கூறினால் நிச்சயம் தாங்க மாட்டாள் என்பது புரிந்தாலும், மறைப்பதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதால் அவளிடம் சொல்லிவிடச் சித்தமானான் விஷ்வா.
“மித்து நம்மள விட்டுப் போகக் காரணம் வேறு யாருமில்ல. இதோ கமுக்கமா நிக்கிறாங்களே நம்மள பெத்தவங்க இவங்களே தான்” என்று நீலவேணியை சுட்டிக்காட்ட,
இதுவரை தாயின் தலையை தடவிக் கொடுத்த கரங்கள் அப்படியே வேலை நிறுத்தம் செய்தன. விழிகள் அதிர்ச்சியில் விரிய “விஷு! நிஜமாவா?” என திக்கித் திணறிக் கேட்டவளுக்கோ இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
சற்று முன் அவனும் இதே நிலையில் இருந்தான் அல்லவா? அக்ஷுவின் மனநிலை புரிய அவளை நெருங்கி அமர்ந்து தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அந்தப் பாசக்கார அண்ணன்.
“அக்ஷு மா! ரிலாக்ஸ். என்ன தான் நம்ப முடியலனாலும் மறைக்கப்பட்ட இந்த உண்மையை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகனும்” என்றவன் ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தான்.
அவன் சொல்ல சொல்ல பேச்சிழந்து போய் நின்றாள் காரிகை.
“எ… என் அருள் நம்மளை விட்டுப் போக நீ தான் காரணமா? எப்படிமா உன்னால இதை பண்ண முடிஞ்சது? அவன் இல்லாமல் விஷு துடிக்கும் போது கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி வரலையா உனக்கு? மனசாட்சி உறுத்தலயா? உனக்கு தான் மனசாட்சியே இல்லல்ல அப்புறம் எப்படி உறுத்தும்” என்றவள் குரல் வெறுப்பை அப்பட்டமாகப் பறைசாற்றியது.
மனம் கலங்கிப் போன நிலவேணி “அக்ஷு மா! நான்” எனது சொல்ல ஆரம்பிக்கும் முன் “வேணாம் மா. எதுவும் சொல்ல வேண்டாம்” என கை நீட்டி தடுத்திருந்தாள் அவள்.
மித்ரன் இல்லாமல் அவள் பட்ட கஷ்டங்கள் தான் எத்தனை? அவன் கடிதத்தில் எழுதி இருந்தது போல் யாரையோ கல்யாணம் செய்து விட்டானா இல்லையா என்று கூட தெரியாமல் எத்தனை இரவு தூங்காமல் அழுது இருப்பாள்? காதலில் உருகி, அவன் நினைவுகளில் கரைந்து ஏங்கித் தவித்து இருப்பாள்?
அதிலும் விஷ்வா கூட காரணமே இன்றி அவளோடு பேசுவதை நிறுத்திக் கொண்டதில் மென்மேலும் துடித்துப் போனாள் அல்லவா? இதெல்லாமே உயிராக நேசித்த தனது தாயால் தான் என்பதை கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்க முடியாது தான் போயிற்று அவளுக்கு.
உணர்வற்று அவரைப் பார்த்தவள் “மித்து என் பையன்னு சொன்ன நீங்களே அவன் அநாதைனு சொல்லிட்டீங்கல்ல. அதக் கேட்டு அவன் எவ்வளவு துடிச்சு போயிருப்பான். ஏன் மாம் ஏன்? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? மித்ரன் விஷு மேல வெச்சது பாசம் இல்ல வேஷம்னு அன்னிக்கு சொல்லி கத்தினீங்க. இப்போ யாரோடது வேஷம்?” என்று கரகரத்த குரலில் கேட்டாள் அக்ஷரா.
என்னவென்று பதிலளிப்பார் நிலவேணி? அமைதியாக தலைகுனிய மட்டுமே அவரால் முடிந்தது.
சிவகுமார் “எனக்கு இந்த விஷயம் இரண்டு நாளைக்கு முன்னாலே தெரியும் விஷு. அன்னைக்கு ஏதோ பேச்சு வாக்குல உளறிட்டா. நானும் விடாமல் எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கவும் கோபமா இருந்துச்சு. அத வெச்சு மிரட்டி தான் மித்து, ஹரி வந்த அன்னைக்கு அவளை சிரிச்சிட்டு நிக்க வச்சேன்” என்று கூறியவர் “இப்போ எதுக்கு மித்துவ சந்திக்க போனே?” என மனைவியிடம் பார்வையை செலுத்தினார்.
அவரது பார்வையில் நெஞ்சுக் கூடு சில்லிட்டது நீலவேணிக்கு. “அது…அது” என தடுமாற,
“ஒழுங்கு மரியாதையா சொல்லு நீலா” என்றவரது இந்தக் கோபமுகம் எல்லோருக்குமே புதிது.
புடவை முந்தானை திருகியபடியே “கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிடனும்னு மித்துவ மிரட்டத்தான் போனேன்” என்று மெதுவாக கூறியே விட்டார் நிலவேணி.
கோபம் மேலிட “ஏய்ய்” என அவருக்கு அடிக்க கையையே ஓங்கி விட்டார் சிவக்குமார்.
விஷுவின் கெஞ்சுதல் பார்வையில் ஓங்கிய கையை கீழே இறக்கி மனைவியை அனல் தெறிக்க நோக்கினார்.
“நான் வார்ன் பண்ணியும் இப்படி ஒரு காரியத்தை செய்ய துணிஞ்சிட்டல்ல. என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்க பார்க்குறியா? உனக்கு இதுல விருப்பம் இல்லனா இங்கிருந்து போயிடு. அதை விட்டுட்டு மித்து விஷு அக்ஷு லைஃப்ல ஏதாச்சும் பண்ண பார்த்தே தொலைச்சிடுவேன்” என ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு விடு விடுவென வெளியேறினார் சிவக்குமார்.
நீலவேணியும் தளர்ந்து போய் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“அண்ணா! மாம் யேன் இப்படி நடந்துக்கிறாங்க? கஷ்டமா இருக்குண்ணா. அருள் ரொம்பவே துடிச்சு போயிருப்பான்ல? ஆனாலும் இவங்க சொன்னாங்கன்னு அவங்க எப்படி போனான்” என்றாள் அக்ஷரா.
தோள் வளைவுக்குள் இருக்கும் தங்கையைக் கனிவுடன் நோக்கி “அவனுக்கு ரொம்ப சாஃப்ட்டான மனசு. அதுவும் மாம்னா எவ்வளவு உயிர்னு தெரியும்ல? அவங்களே இப்படி சொன்னது அவன ரொம்பவே பாதிச்சு இருக்கும். நான் அம்மா இல்லாமல் கஷ்டப்படக் கூடாதுன்னு வேற எதையுமே நினைக்காமல் போயிட்டான்” என்றான் விஷ்வா.
நண்பனின் எண்ணங்களை துல்லியமாக கணக்கிட்டு கூறினான் அவன்.
“கல்யாணத்துல மாம்க்கு துளியும் இஷ்டம் இல்ல. அவங்கள மீறியும் கல்யாணம் பண்ணா மித்துக்கு திரும்ப ஏதாவது பிராப்ளம் வருமா?” ஒரு வித பயம் மனதில் சூழ்ந்தது அக்ஷராவுக்கு.
“நீ எதுவுமே ஃபீல் பண்ணாத டா. எந்த ப்ராப்ளம் வந்தாலும் என்ன மீறித்தான் அவனை நெருங்கும். நான் அவன் கூடவே இருப்பேன். சோ நீ ஃப்ரீயா விடு. உனக்கும் அவனுக்கும் எந்த தடங்கலும் இல்லாமல் கல்யாணம் நடக்கும்” என்று உறுதியாக கூற,
“எங்களுக்கு தடங்கல் இல்லாமல் நடந்தால் தானே உன் ரூட்டு க்ளியர் ஆகும். அதனால்தான் சார் ரொம்ப எக்சைட்மென்ட்ல சொல்லுறீங்க” என சிறு சிரிப்புடன் கூறியவளைப் பார்த்து, “இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” அவள் தலையில் நங்கென்று கொட்டினான் காளை.
……………….
“பூர்ணி மா! தங்க குட்டி இங்க பாரேன்” என்று தங்கை மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஹரிஷ்.
ஆனாலும் அவரது செல்ல மருமகளோ சிறிதும் அசையாது முறுக்கிக் கொண்டு நின்றிருக்க, இவர்கள் இருவரது கூத்தையும் சோபாவில் ஹாயாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மித்துவும், வைஷுவும்.
“ஹேய்! எதுக்கு கோபமா இருக்கேன்னு சொன்னா தானே தெரியும். என் முறை பொண்ணுங்க கூட என்னை எவ்வளவு முறைச்சதில்ல” என்றவரைப் பார்த்து, “பின்ன வேற என்ன பண்ணாங்க அவங்க?” என்று வினவினாள் பூர்ணி.
“அவங்க என் பின்னாலயே அத்தான், மாமான்னு வந்துட்டே இருப்பாங்க. எவ்வளவு ஸ்வீட் கைஸ்” என அந்நாள் ஞாபகத்துக்குச் சென்றார் கோகுலக் கண்ணனாய்!
“முடி நரைச்சும் கிழவனுக்கு மன்மதன்னு நினைப்பு. முறைப்பொண்ணுங்க கொஞ்சறத சொல்லும் போது முகத்தில் டார்ச் லைட் அடிக்குது பாரு” என இடுப்பில் கைவைத்து முறைத்தாள் பூர்ணி.
இத்தனை நேரம் வாய் மூடி அடக்கப்பட்ட சிரிப்புடன் இருந்த மித்ரன் “ஏய் பிசாசு! என் டாடிய கிழவன்னு சொல்றியா?” என்று எகிற, “ஆமாண்ணா. இவள விடவே கூடாது. கம்பீரமா ஆணழகனா இருக்குற அப்பாவை கிழவன்னு சொல்லிட்டா” என்று ஒத்து ஊதினாள் வைஷ்ணவி.
“இது எனக்கும் மாம்ஸ்கும் நடக்குற பஞ்சாயத்து. இதுல நீங்க தலையிட்டீங்க பீஸ் பீசா வெட்டிருவேன்” என கடுப்படித்தவளை ஏறிட்டு, “பூரி! எதுக்கு இந்தக் காலங்காத்தால பட்டாசு மாதிரி படபடன்னு வெடிச்சிட்டு இருக்க?” தனது சந்தேகத்தைக் கேட்டு வைத்தான் மித்ரன்.
பூர்ணி “இன்னிக்கு ரோஹன் என்ன கூட்டி போக வரான்ல. அது வரைக்கும் என் கூட இருக்காம, இன்னிக்கும் ஹாஸ்பிட்டல் டியூட்டினு பறக்குறாரு” என்று நொடித்துக் கொள்ள.
“இதுக்கா இவ்ளோ அலப்பறை? அவர் என்ன நர்ஸை சைட் அடிக்கவா போறாரு? டியூட்டிக்கு தானே. எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுறே” என்று மித்ரன் கிண்டல் தொனியில் சொன்னான்.
“அப்பா பாருங்க! நீங்க நர்ஸை சைட் அடிக்க போறீங்கன்னு இன்டீரிக்ட்டா சொல்லுறாரு கிறுக்கு அண்ணா” என்று வைஷு தந்தையிடம் போட்டுக் கொடுக்க,
“அடப்பாவி பயலே! சண்டாளா.நான் உன் அப்பன் டா” என பாவமாக பார்த்தவர், “செல்லக் குட்டி மாமாவுக்கு எமர்ஜென்சி வர்க் இருக்குடா. போய்த் தான் ஆகனும். உன்ன பார்க்க ஈவ்னிங்கே வந்துருவேன் சரியா” பூர்ணியின் தலையை வருடிக் கொடுத்தார்.
மெலிதாக இதழ் விரித்து பூர்ணியும் “நான் சும்மா விளையாடினேன் ஹரி. நீ போயிட்டு வா” என விடை கொடுக்க, தலையசைத்துச் சென்றார் ஹரிஷ்.
தன்னையே கண் சிமிட்டாமல் பார்க்கும் வைஷுவைப் பார்த்து “என்னடி என்ன சைட் அடிக்கிறியா? அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்று கண்சிமிட்ட, “நோ நோ! இந்த அராத்து பொண்ண எப்படித்தான் ரோஹன் அண்ணா சமாளிக்க போறாரோன்னு நினைச்சேன்” என்று கூறினாள் வைஷ்ணவி.
“அதெல்லாம் அவன் பார்த்துப்பான்” என்று தோளைக் குலுக்கும் போது கார் வரும் சத்தம் கேட்க, மூவரும் வாயிலுக்கு சென்று பார்த்தார்கள்.
அதிலிருந்து இறங்கிய ரோஹன் சிறு தயக்கத்தினூடே நடந்து வர “வா ரோஹன்” என புன்னகை தவழ அழைத்தான் மித்ரன்.
அவன் சகஜமாக பேசினாலும் ரோஹனுக்கு ஒரு வித சங்கடம் தெரிய “பழசை மறந்துடு ரோஹன். அது தான் எல்லோருக்கும் நல்லது. எங்க பூரிய கூட்டிப் போய் நல்லா பாத்துக்கோ” என்று அவன் கூற,
ரோஹன் பூர்ணியைப் பார்த்து வா என கண்களால் அழைத்தான். அவளும் அவன் அருகில் வந்து நிற்க “நாங்க கிளம்புறோம் மித்து” என்று ரோஹன் சொல்ல, பூர்ணியோ மித்ரனைப் பார்க்க “சந்தோஷமா போயிட்டு வாடா” என்று அவள் தலையை கோதி விட்டான்.
“ஓகே பாய் மித்து” என்றவள் “வைஷு! வரேன் டி” என வைஷ்ணவியை அணைத்து விடுவித்தாள்.
“அண்ணா! எங்க பூர்ணிய உங்க கிட்ட ஒப்படைக்கிறோம். அவள கண்ணு கலங்காம பாத்துக்கோங்க. ஆனா சேட்டை பண்ணா அடி போடுங்க” என்று ரோஹனிடம் வைஷு சொல்ல, “அடி தானே? தரமா கொடுத்துடலாம்” என சிரித்தவன் இதுவரிடமும் சொல்லிவிட்டு காரில் ஏறி பூர்ணிக்காக கதவை திறந்து விட்டான்.
கார் அருகில் சென்ற பூர்ணி மித்ரன் வைஷுவை திரும்பிப் பார்த்து கையசைத்து ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.
கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள் பெண்ணவள். மீண்டும் ரோஹனுடன் செல்கிறாள். அவளால் அவனை பழையபடி ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்டால் விடையில்லை.
அவனை தவிர்க்க முடியாது அவன் மேல் கொண்ட காதல் துடிக்கிறது. அதே சமயம் அவனது சந்தேகம் அவனை ஏற்கவும் விடாமல் தடுக்கிறது.
அவளது மனப்போராட்டம் அருகில் இருப்பவனுக்கு புரிய “பூ” என்று பூவினும் மென்மையாகத் தான் அவளை அழைத்தான்.
ரோஹன் “எப்போவும் மிளகு மாதிரி காரமா பேசிட்டே இருப்பியே. இப்போ என்னாச்சு? உன் ஹஸ்பண்டுக்கு ஏதாச்சும் கொடுக்கலாம்னு திங்க் பண்ணுறியா” என்று கேட்க, “நான் என்ன தரணும் உனக்கு?” எதிர்க் கேள்வி கேட்டாள் பூர்ணி.
பக்கவாட்டாக திரும்பி அவளைப் பார்த்து “இந்த ஹாட்டான சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஸ்வீட்டா கிக்கா ஒன்னு கொடுக்கலாம்ல” என கண்ணடிக்க, அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.
“ஒன்னு தர முடியாதுன்னா பரவாயில்ல. உன் இஷ்டப்படி ரெண்டு மூணு இல்லனா அஞ்சு தந்தா கூட ஓகே” ஓரக் கண்ணால் பார்த்தவனைக் கண்டு கொலை வெறியாகி பொத் பொத்தென அவன் தோளில் குத்தினாள் பூர்ணி.
இத்தனை நேரம் மனதில் இருந்த சோகம் இல்லாது போய் கோபத்தில் முகம் சிவக்க இருப்பவனைப் பார்த்து மனதினுள்ளே சிரித்துக் கொண்டான் ரோஹன்.
அவன் தனது மனதை மாற்றிடத் தான் இப்படிக் கிண்டல் செய்கிறான் என்று புரிந்து ‘என் மேல இவ்ளோ லவ் இருந்தும் அன்னிக்கு ஏன்டா சிலை மாதிரி இருந்தே? நான் உன்னை நம்புறேன் பூர்ணினு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா மத்தவங்க பேச்சு எல்லாத்தயும் துச்சுமா நினைச்சுட்டு உன் கூட வாழ்ந்து இருப்பேனே. நம்ம குழந்தை என் வயித்துல வளர்ரத சந்தோஷமா உன்ன கட்டி அணைச்சு சொல்லியிருப்பேனே. ஏன்டா இப்படி பண்ணே’ என்று மனதினுள் கதறினாள் பாவை.
காரை நிறுத்தியவன் “இறங்கு” என்று சொல்ல அதிலிருந்து இறங்கியவளோ கேள்வியாக அவனைப் பார்க்க, அவளது லக்கேஜை ஒரு கையில் எடுத்தவன் மறு கையால் அவளது கரத்தைப் பற்றி கொண்டு “இது தான் இனி நம்ம ரெண்டு பேரும் வாழப் போற வீடு” என்றான்.
“ரெண்டு பேரு இல்ல மூனு பேருடா மக்கு புருஷா” என்ற வாசகத்தை மனதினுள் சொல்லிக் கொண்ட பூர்ணி அவனோடு வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.
அவன் கையை விடுவித்துக் கொண்டு வீட்டைச் சுற்றிப் பார்க்க, அவனோ அவனையே ரசித்துப் பார்த்தான்.
மூன்று அறைகள், அளவான சமையலறை, பெரிய ஹால் என்று இரண்டு பேர் வாழ வசதியாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அந்த வீடு.
“வீடு எப்படி இருக்கு?” என்று அவன் கேட்க, “பரவால்ல! ஏதோ உன் டேஸ்ட் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு” என்றாள் பிரிட்ஜில் இருந்த பிஸ்கட்டை எடுத்து கொறித்துக் கொண்டு.
“என்னோட டேஸ்ட் மட்டமால்லாம் இருக்காது. எப்போவுமே தூக்கலா தான் இருக்கும்” என்றவன் பார்வை அவளது மதி வதனத்தை வருடிச் சென்றது.
முகம் சிவப்பதை மறைக்க மறு திரும்பியவள் பல்கோணிக்கு செல்ல, “எத்தனை நாளைக்கு உன் மனச மறக்கிறேனு நானும் பாக்குறேன் டி கள்ளி” என முணுமுணுத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றான் ரோஹன்.
அவனது காலடி ஓசையை வைத்தே அவன் தன் பின்னால் வருவதை அறிந்தவள் “இப்போ எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி என் பின்னாடி வர்ற?” என திரும்பாமல் கேட்டாள் பூர்ணி.
“அத தான்டி நானும் யோசிக்கிறேன். நான் எவ்ளோ அழகா இருக்கேன். என் கிட்ட வச்சு பார்த்தா நீ கொஞ்சம் சுமாரா தான் இருக்கே. ஆனாலும் இந்த பாழாப்போன மனசுக்கு இந்த சுமார் மூஞ்சி சண்டி ராணிய தான் பிடிச்சு இருக்குனு என் பேச்சைக் கேட்காமல் உன் பின்னால் இழுபட்டு வருது” என அவள் தோளில் நாடி பதிக்க,
படக்கென விலகியவளோ “யாரு யாரு நீ அழகா இருக்கியா? மூஞ்சிய பாரு! நான் சுமார் மூஞ்சியா? உனக்கு நான் கிடைச்சதே பெரிசு. இதுல ஐயாக்கு பெருமூச்சு வேற போகுது” என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.
உதட்டுக்குள் சிரித்த ரோஹன் “மேடம்க்கு பொசசிவ்னஸ் ஓவர்லோடட்ஆ” என்று கேட்க,
“ஓவர்லோட்ல இருக்குது தான். பொசசிவ்னஸ் இல்ல கடுப்புனஸ், கொலைவெறினஸ்” என பல்லை நறநறக்க,
“எதுக்கு டி வந்ததுல இருந்தே சூடா இருக்கே. கூல் டவுன் பேபி” என்றான் அவன்.
“கூல் டவுன்னு சொன்னா போதாது சார். ச்சில்லா ஏதாச்சும் கொண்டு வந்து தரவும் கத்துக்கனும்” என பூர்ணி சொல்ல,
ஓடிச்சென்று அவளுக்கு ஃப்ரெஷ் ஜூஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான். சும்மா பேச்சுக்கு சொன்னதைக் கேட்டு தனக்கு ஜூஸ் கொண்டு வந்திருப்பவனை இமைக்காமல் பார்க்க “எடு” என கண்களால் கூறி, கிளாசை நீட்டினான் அவன்.
இருபுறமும் தலையசைத்து அதை வாங்கி குடித்தவளுக்கு முகம் ஒரு மாதிரியாக, அவனோ “பூ என்னாச்சுடா?” என பதற்றமாக அவள் கன்னம் தட்டப் போனான்.
அவளோ அவன் மேலேயே வாந்தி எடுத்துவிட, அதைத் தன் கையில் வாங்கினான் பூர்ணியின் கணவன்.
……………..
இரவின் இருள் எங்கும் படர்ந்திருக்க நேரம் ஒரு மணியைத் தொட்டுவிட்டது. ஆயினும் உறக்கம் வராமல் தனது அறையில் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான் விஷ்வஜித்..
எதேர்ச்சையாக வந்தவன் தான். காபி ஷாப்பில் மித்ரனைக் கண்டதுமே விழிகள் பளிச்சிட அவனை நெருங்கியவனுக்கு கல்யாணத்தை நிறுத்துமாறு நீலவேணி கட்டளையிட்டதை கேட்டு அதிர்ந்தவன், அதனை சுதாரிக்கும் முன்பே இடியாய் வந்து விழுந்தது மித்ரனின் பிரிவுக்கு காரணமும் நீலவேணி தான் என்பது.
அப்போது இருந்தே மனம் நிலையில்லாமல் தவிக்க, இன்னுமே அவன் மனம் தெளிந்தபாடில்லை.
கண்களை மூடிக் கொண்டவனின் அலைபேசி அலற, தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வரவும் இந்த நேரத்தில் அழைப்பது யாராக இருக்கும் என்ற எண்ணம் அவனைச் சுழன்றடிக்க “ஹலோ” என்றான் அழைப்பை ஏற்று.
அவனது கம்பீரமான கணீர்க் குரலைக் கேட்டு கைகள் எல்லாம் உதற நின்றாள் எதிர்முனையில் இருந்த வைஷ்ணவி.
ஹரிஷுடன் கதையளந்து கொண்டு நேரம் செல்வதே அறியாமல் இருந்தவள் அறைக்கு வந்ததும் விஷ்வாவுக்கு அழைக்க நினைத்தாள்.
இந்த நேரத்தில் அழைப்பது முட்டாள்தனம் எனப் புரிந்தாலும் தன்னையே மீறி அழைத்தவள் அழைப்பு உடனே ஏற்றப்பட்டதும் அல்லாமல் அவனது வெண்கலக் குரல் குரலில் செய்வதறியாது நின்றாள்.
“ஹலோ! ஹூ இஸ் திஸ்?” என்று அவன் மீண்டும் கேட்க, “ஹ…ஹலோ” என்றாள் திணறலாக.
ஒரு பெண்ணின் குரல் அதுவும் இப்போது! “யார்னு சொல்லுங்க. இல்லன்னா ஃபோன் கட் பண்ணுங்க” என்றவன் குரலில் சிறு எரிச்சல்.
தன்னை நிலைப்படுத்திக் கொண்ட வைஷு “நான் வைஷ்ணவி பேசுறேன்” என்று பதிலளித்தாள் மெல்லிய குரலில்.
“வைஷ்ணவியா? அது யாரு” என்றவனுக்கு அவள் யார் என்பது மனதில் தோன்றவே இல்லை.
அவனது இப்பதிலில் உள்ளம் குமைந்து போனாள் பெண்ணவள். அவனுக்கு தான் யார் என்பதே நினைவில் இல்லையா என்று.
“விஷ்வா நான்..” என சொல்ல வரும்போதே, “பேபி நீயா?” என இடைமறித்தான் அவன்.
அவனது பேபி என்று அழைப்பில் ஆ’வென வாய் பிளந்தவள் “ம்ம்” எனக் கூற, “அன்னைக்கு க்ளப்ல என் கூட டான்ஸ் பண்ணியே அந்த வைஷு தானே” என ஆர்வமாகக் கேட்க,
“இதென்னடா புது வம்பாப் போச்சு?” என நினைத்தவள் “இல்ல” என்க அதுவோ அவனுக்குக் கேட்கவே இல்லை.
“ஓஹ் பேபி மா! உனக்கு எப்படி என் நம்பர் கிடைச்சுது? இருந்தாலும் என் மேல உனக்கு அவ்ளோ க்ரஷ் பார்த்தியா? ஐ காண்ட் பிலீவ் திஸ் டார்லிங். உன்னோட ஸ்வீட் வாய்ஸ் கேட்கறதுக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை” என அவன் ரசனையுடன் சொல்லச் சொல்ல, எதிர்ப் பக்கத்தில் இருந்தவளுக்கோ பிபி எகிறிக் கொண்டிருந்தது.
‘நல்லவன்னு பார்த்தா இப்படி வழிஞ்சல் கேஸா இருக்கானே. பேபிமாவாம் பேபிமா. அவள் தலையில தீயை வைக்க” என புலம்பிக் கொண்டாள் அவள்.
“ஹே என்னடா செல்லம் பேசாம இருக்கே? ஓஓ.. என் பேச்சை ரசிச்சு கேட்டுட்டு இருக்கியா? அவ்வளவு லவ்வா என் மேல” என்றிட,
‘ஆமாடா ரொம்ப ரொம்ப. லவ் இல்ல கொலைக்காண்டு. நான் யாருன்னு தெரியல. யாரோ ஒரு மேனாமினுக்கிய ஞாபகம் வச்சு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டே இருக்க. இருடா எனக்கும் ஒரு காலம் வரும்ல அப்போ வச்சுக்குறேன் உன்னை” அவனை மறுத்தெடுத்தாள் வைஷு.
விஷ்வா “பேபிமா! உனக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு கல்யாணம் பேசி இருக்கிற பொண்ணு ச்சே இல்ல இல்ல அந்த பிசாசு பேரும் வைஷ்ணவி தான். அவள் சரியான அராத்து, அடாவடி, கூமூட்டை, லொடலொட வாய்” என அர்ச்சித்தான்.
“எதே? நான் அராத்தா? அப்படின்னா என் பேரு உனக்கு ஞாபகம் இருக்கா டா. உன்கிட்ட நான் அன்னைக்கு பேசினது கரெக்ட் தான். அதுக்கு போய் ஃபீல் பண்ணி சாரி கேட்கலாம்னு நம்பர தேடி கண்டுபிடிச்சு கால் பண்ணேன் இல்ல? என் புத்திய செருப்பால அடிக்கணும்” என நொந்து போனாள்.
“பேபி மா” என அவன் மீண்டும் ஆரம்பிக்க, “டேய்ய்! மறுபடி மறுபடி பேபிமா கோதுமைமான்னே செருப்பு பிஞ்சிரும். நான் ஒன்னும் பேபிமாலாம் கிடையாது. உன் கூட டான்ஸ் பண்ண சிலுக்கு சரோஜாவும் கிடையாது” என கத்தினாள வைஷ்ணவி.
“நீ யாரு?” என அவன் கேட்டான்.
“நான் தான் விஷ்வாவோட வருங்கால பொண்டாட்டி. அதான் அந்த கூமூட்டை அடாவடி லொடலொட வாய்! அவளே தான்” என பல்லைக் கடித்தவள், இணைப்பைத் துண்டித்து ஃபோனைத் தூக்கிப் போட்டாள்.
அவள் யார் என்று குரலை வைத்து முதலிலேயே கண்டுபிடித்து விட்டவன் சிறிது விளையாடி பார்க்கத்தான் இவ்வளவு நேரமும் பேசினான் அவன்.
அவள் கடுப்பாக பேசியது செம கிக்காக இருந்தது இவனுக்கு.
இல்லாத க்ளப் வைஷ்ணவியை கொஞ்சும் போது அவளது முகம் சென்றிருக்கும் போக்கை கற்பனை செய்து பார்த்தவனுக்கு இதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர வெடித்துச் சிரித்தான் விஷ்வஜித்.
சற்றுமுன் இருந்த மனக்கவலைகள் எல்லாம் தூரச் சென்றிருக்க மனம் லேசான உணர்வு! “நவி” என்று அவள் நம்பரை சேவ் செய்துவிட்டு கட்டிலில் சரிந்து, இதழ் கடையோரச் சிரிப்புடன் தூங்கியும் போனான் லொடலொட வைஷுவின் வழிஞ்சல் கேஸ் விஷு!
நட்பு தொடரும்………!!
ஷம்லா பஸ்லி