💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 17
பசுமை நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அசைந்தாடி பரத நாட்டியம் பயில, வெள்ளைக் கொக்குகள் வரிசையாய் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தன.
கார் கண்ணாடி வழியாக அக்காட்சிகளைப் பார்த்த ஜனனிக்கு பள்ளிப் பருவ நினைவுகள். பள்ளிக்கூடம் முடித்து வந்து நந்திதா, மகிஷா இருவருடனும் அந்த வயலுக்கு வந்து ஓட்டப்பந்தயம் நடாத்துவாள்.
அவர்கள் மூவருள்ளும் அப்படியொரு பிணைப்பு. நந்திதா அமைதியானவள். அதிகம் பேச மாட்டாள். ஜனனி தேவைக்கேற்ப பேசுவாள். மகிஷா அவர்களை விட அதிகம் பேசுவாள். நந்திதா, மகிஷாவுக்கு ஜனனி மீது அதிக பிரியம்.
தமக்கு எது வேண்டும் என்றாலும் அவளிடம் கேட்பார்கள். அவள் எதையும் யோசிக்க மாட்டாள். அவர்களுக்காக அப்பாவிடம் ஏச்சு வாங்கி, அம்மாவிடம் கெஞ்சிக் கொஞ்சி கேட்டதைக் கொடுத்து விடுவாள்.
தன்னிடம் எந்த இரகசியத்தையும் ஜனனி வைத்துக் கொண்டதில்லை. ராஜீவின் விடயத்தைக் கூட ஒன்று விடாமல் உரைத்தாள். ரகசியம் பேணுவது அவளுக்கு மிகவும் கடினமான விடயம் எனுமளவு அனைத்தையும் சகோதரிகளிடம் கொட்டித் தீர்ப்பாள்.
தன் சகோதரிகளும் அப்படித் தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்தாள். ஆனால் இன்று நந்திதா செய்த காரியத்தில் அவளது மனம் மிகவும் காயப்பட்டுப் போனது.
அவளுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பதை முகத்தை வைத்து தெரிந்து கொண்டு அவளிடம் எவ்வளவு கெஞ்சினாள். ஆனால் அவளுள் காதல் எனும் இரகசியம் இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
நந்திதா சென்றதில் திகைத்துப் போய் இருந்தவளுக்கு தந்தையின் மகிஷா மீதான பார்வை பேரிடியாகத் தான் இருந்தது.
அப்பார்வையைக் கண்டு மகிஷா பயந்து நடுங்கியதில் மனதில் பெரும் பிரளயம் வெடித்தது. அவள் வெறும் இருபது வயதுப் பெண். அதுவும் ஜனனியைப் பொறுத்தவரையில் அவள் குழந்தை போன்றவள்.
அப்படிப்பட்டவளை ஒருவனுக்கு மனைவியாக, அதுவும் நான்கு வயது சிறுவனுக்குத் தாயாக நினைக்க முடியவில்லை. தந்தைக்காக மகி தலையசைப்பாள் என்பது சர்வ நிச்சயம். ஆனால் அவளால் எவ்வாறு அதை சமாளிக்க முடியும்?
இவ்வளவையும் யோசித்து விட்டுத் தான் சத்யாவை மணக்க அவள் சம்மதம் கூறினாள். இதனால் மற்றவர் என்ன நினைப்பர் என்பதெல்லாம் அவளுக்கு அச்சமயம் தோன்றவில்லை. தங்கையின் வாழ்வைக் காப்பாற்ற அவளது வாழ்வைப் பணயமாகக் கொடுத்து விட்டாள்.
இதோ இப்பொழுது ஒருவரின் மனைவி எனும் அந்தஸ்தைப் பெற்று விட்டாள். அவளது மார்பில் தொட்டுத் தொங்கிய தாலி அதற்கு சான்று பகர்ந்தது.
இனி எனது வாழ்வு எப்படி இருக்கும்? ராஜீவை மறக்க முடியுமா? என்ற யோசனை வந்ததும் மனம் உருகியது. ராஜீவ்வின் கலங்கிய கண்கள் அவள் நினைவூஞ்சலில் ஆட்டம் போட்டன.
அனைத்திலும் மேலாக, இந்த சத்யாவின் மனநிலை எப்படி இருக்கும்? அவனுக்கு இந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை என்பது அவளுக்குத் தெரியும் அல்லவா? அவளுடன் வாழ மாட்டேன் என்று அவன் தன் வாயால் சொல்லி விட்டானே?
யோசிக்க யோசிக்க தலை சுற்றிப் போனது அவளுக்கு.
“அம்மாடி ஜனனி! என்னாச்சு? நீ ஓகே தானே?” மேகலை அவளைப் பார்த்துக் கேட்க, “ஹா ஓகே தான் ஆன்ட்டி” அவரிடம் தலையசைத்து விட்டு யன்னலினூடாக பார்வையைச் செலுத்தினாள்.
சத்யாவின் பார்வை அவளைத் தொட்டு மீண்டது. இந்தப் பெண்களால் எப்படித் தான் ஒருவரின் காதலை உடைத்து விட்டு இன்னொருவருடன் வாழ்வில் இணைய முடிகிறதோ?
வெறுப்போடு நினைவு கூர்ந்தான் அவன்.
“டாடி! பசிக்குது எனக்கு” வயிற்றைத் தடவியவாறு யுகன் சொல்ல, “சாப்பிடலயா நீ?” என்றதும் அவன் இல்லையென்று தலையசைத்தான்.
“நீங்க என்னை மறந்து போயிட்டீங்க டாடி. நீங்க ஊட்டுவீங்களானு பார்த்தேன். ஊட்டவே இல்லை” முகத்தைச் சுருக்கி மகன் கூற, சத்யா தன்னை நொந்து கொண்டான்.
இருந்த மனநிலையில் அவனைக் கவனிக்க மறந்து விட்டோமே என்று குற்றவுணர்வாக இருக்க, ஒரு ரோட்டுக் கடையில் வண்டியை நிறுத்தினான்.
“நீங்க வண்டியில் இருங்கம்மா. நான் யுகிக்கு சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்” என்று யுகனோடு இறங்கிக் கொள்ள, “இன்னொரு சாப்பாடு வாங்கி வா சத்யா” என்றார் மேகலை.
தலையசைத்து விட்டுச் சென்றவன் இரண்டு தட்டு வாங்கி வந்தான். ஒன்றை மேகலையிடம் நீட்ட அதை வாங்கி ஜனனியிடம் கொடுத்தார்.
“நீயும் ஒழுங்கா சாப்பிடலல்லமா. சாப்பிடு” என்று அவர் கூற, “எனக்கு வேண்டாம் ஆன்ட்டி. பசிக்கல” அவள் மறுப்புத் தெரிவித்தாள்.
“நான் சொல்லுறேன்ல. கொஞ்சமா சாப்பிடு”
“ப்ளீஸ் ஆன்ட்டி என்னால சாப்பிட முடியாது” அவள் மீண்டும் மறுக்க, சத்யாவுக்கு ஆத்திரம் பொங்கியது.
“வேண்டாம்னா விட்றுங்கம்மா. சிலர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டாங்க. அவங்க கிட்ட கெஞ்ச தேவையில்லை” என்று சொல்ல, “சத்யா” கண்டிப்பான குரலில் அழைத்தார் மேகலை.
அவன் சொன்னதைக் கேட்டு ஜனனிக்கு என்னவோ போல் ஆகி விட்டது. அவளுக்கு கார், வேன் எல்லாம் செட்டாகாது. இப்பொழுதே குமட்டுவது போல் இருக்க கடினப்பட்டு அமர்ந்திருந்தாள்.
இதில் சாப்பிட்டால் அடுத்த நிமிடமே அனைத்தும் வாந்தியில் வந்து விடும் என்பதால் தான் மறுத்தாள். ஆனால் சத்யா அதை வேறுவிதமாக புரிந்து கொண்டது மனதைத் துளைத்தது.
“டாடி! நீங்களும் ஒழுங்கா சாப்பிடல. இந்தாங்க” மகன் ஊட்டி விட, அவனும் அமைதியாக சாப்பிட்டான்.
அவர்களது பயணம் மீண்டும் ஆரம்பமானது. ஒரு மணி நேரத்தில் வீடு வந்து விட, ஏற்கனவே ரூபனும் தேவனும் அங்கு நின்றிருந்தனர்.
ரூபனின் கையில் ஆரத்தி இருக்க, “என்னடா ஆரத்தி எல்லாம் அதுக்குள்ள ரெடி பண்ணிட்டீங்களா?” சிரிப்போடு கேட்டார் மேகலை.
“அம்மாவுக்கு எதுக்கு சிரமம்னு நான் தான் எடுத்து வைக்க சொன்னேன்” தேவன் கண் சிமிட்ட, “நல்ல பசங்க” சிரித்தவாறு தட்டை வாங்கிக் கொண்டார்.
“சத்யா கூட சேர்ந்து நில்லு ஜனனி” என்று அவர் கூற, அவனது அருகில் சென்று நின்றாள்.
சத்யாவுக்கு இந்த சடங்குகள் எப்போது முடியும் என்றிருந்தது. யுகன் சத்யாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டு நின்றான்.
“நீ எதுக்கு நிற்கிற? இங்கே வா யுகி” நீலாம்பரி அழைக்க, “அவன் என் பையன். என் பக்கத்தில் நிற்க அவனுக்கும் எல்லா உரிமையும் இருக்கு” அழுத்திச் சொன்னான் அவன்.
“நான் என்னவோ அவனையும் பையனையும் பிரிக்க ப்ளான் போடுற மாதிரி சொல்லுறான்” மகளின் காதில் முணுமுணுக்க, “நீ வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்காம இரும்மா. அந்த ஜனனி முன்னாடி மானத்தை வித்துக்காத” என்றாள் நீரஜா.
ஆரத்தி எடுத்து முடித்ததும் தனது புகுந்த வீட்டில் வலது கால் தடம் பதித்து உள்ளே நுழைந்தாள் ஜனனி.
சத்யா யுகனை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று விட்டான். ஜனனி சோஃபாவில் அமர்ந்திருக்க, சொந்த பந்தங்களும் மெது மெதுவாகக் கலைந்து சென்றனர்.
இரவு ஏழு மணியானது. மேகலை சமையலறையில் இருக்க, ஹாலில் ரூபன், தேவன், ஜனனி மட்டுமே எஞ்சினர். தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் ஜனனி.
“அண்ணியாரே!” ரூபன் அவளை அழைக்க, சிந்தனை கலையவில்லை அவளுக்கு.
“அண்ணி” மீண்டும் கூப்பிட, திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
முதல் சந்திப்பில் திமிராக தன்னோடு பேசியவள், இன்று சோகமே உருவாக நிற்பதைப் பார்க்க ரூபனுக்கு மட்டுமல்ல தேவனுக்கும் கூட ஒரு மாதிரி இருந்தது.
“சொல்லுங்க ரூபன்” அவள் குரலில் சுருதி இல்லை.
“நீங்க தான் சொல்லனும். நீங்க எங்க வயசுன்னு ஃப்ரெண்ட் ஆக்கிக்க நெனச்சேன். ஆனால் அண்ணியாகிட்டீங்களே” அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வர முயன்றான் ரூபன்.
“நாம நினைக்கிற மாதிரி எப்போவும் நடந்துடாது. நாம எவ்ளோ போராடினாலும் எல்லாம் விதிப்படி தான் நடக்கும். அந்த நேரத்தில் நம்ம கைகள் கட்டப்பட்ட மாதிரி இருக்கும். நம்மளால எதுவும் பண்ணிட முடியாது” விரக்தியாக வந்தன, வார்த்தைகள்.
“அது உண்மை. ஆனால் நம்ம நல்லதுக்காகக் கூட அது நடந்து இருக்கலாம்னு பிறகு ஒரு நாள் தோண வாய்ப்பு இருக்கு. சொல்லுறது ஈசி தான். ஆனால் நிலமை மாறும் வரை போராடுறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்” தேவனின் கூற்றை அவளும் ஆமோதித்தாள்.
“பேசாம நான் ஹாஸ்பிடல் போகாம, உங்களோட சேர்ந்து ஆலோசனை மையம் நடாத்தலாமானு யோசிக்கிறேன்” ரூபன் சொன்னதைக் கேட்டு இருவரும் முறைத்தனர்.
“உனக்கு இதுலேயும் கிண்டலா?” அவனது காலரைப் பிடித்து இழுக்க, “எத்தனை பிரச்சினை வருது? ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை. அதுக்காக அப்படியே உட்கார்ந்துட முடியுமா? அதை சுண்டல் சாப்பிடற மாதிரி எடுத்து இப்படி கிண்டல் பண்ணிட்டு போயிட்டே இருக்கனும்” என்று அவன் சொல்ல,
“மனநல வைத்தியர்னு நிரூபிக்கிறீங்களா?” சற்றே தெளிந்து புன்னகைத்தாள் ஜனனி.
“ஜனனி! சத்யாவை சாப்பிட கூட்டிட்டு வர்றியா?” என்று மேகலை கேட்க, “அவருக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு தான் போனார்” என்றான் ரூபன்.
“அப்போ நீங்க வாங்க” என்றழைக்க, மகன்கள் சென்று உட்கார்ந்தனர்.
“நீயும் வா” மருமகளை அழைக்க, “எனக்கு பசிக்கல ஆன்ட்டி” என்றாள் அவள்.
“அதென்ன ஆன்ட்டி ஆட்டுக் குட்டினு? அவங்க உங்களுக்கு அத்தை தானே?” ரூபன் கேட்க,
“சும்மா இருடா. அவளுக்கு எப்போ அப்படி கூப்பிடத் தோணுதோ கூப்பிடட்டும். நீ பெரிய மனுஷன் ஆகாம இரு” அவனது கன்னத்தில் மேகலை அடிக்க, அவள் புன்னகைத்தாள்.
மேகலையின் அன்பும் ரூபன் மற்றும் தேவனின் நட்பும் அவளுக்கு இதமாக இருந்தது. ஆனால் யுகன் மற்றும் சத்யா? யுகன் கூட சரி தான். ஆனால் சத்யா? அவள் வாழப் போவது அவனோடு தானே? என்னவாகப் போகிறது தனது வாழ்க்கை? என யோசிக்கலானாள்.
ஒரு தோசையை மட்டும் சாப்பிட்டவள் போதும் என்று எழும்பி விட, “நீ சத்யா ரூமுக்குப் போமா” அவளுக்கு சத்யாவின் அறையைக் காண்பித்தார்.
ஜனனிக்கு உள்ளுக்குள் உதறத் துவங்கியது. அங்கு எப்படிச் செல்வது? அவனை எப்படி எதிர்கொள்வது? என்னவென்று பேசுவது?
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது அவள் நிலை.
ஆனால் போய்த் தானே ஆக வேண்டும்? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
கட்டிலில் யுகன் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான். சத்யாவைக் காணாமல் அங்குமிங்கும் தேடியவளுக்கு அவன் இல்லாததில் பெருமூச்சொன்று கிளம்பியது.
அதே நேரம் பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வந்த சத்யா, ஜனனியைக் கண்டு புருவம் உயர்த்தினான்.
அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்க நிற்க, அடுத்து அவன் கேட்ட கேள்வியில் உறைந்து போனாள் மாது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி