💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 18
“என்னை விட்டு எப்போ போகப் போற?”
அவன் கேட்ட கேள்வி அவளுள்ளத்தில் ஆயிரமாயிரம் அதிர்வலைகளை உண்டு பண்ணியது.
“விட்டு போகப் போகனுமா? எதுக்கு?” அடி நுனி புரியாமல் கேட்டாள் காரிகை.
“ஓஓ! எப்போ விட்டுப் போகனும்னு இன்னும் யோசிக்கலயா? ஓகே. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. அப்பறமா யோசிச்சு சொல்லு” என்றவன் யுகனின் அருகில் சாய்ந்து கொள்ள, ஏன் இப்படிக் கேட்கிறான் என்று குழம்பி நின்றாள் அவள்.
அவனுக்குத் தன் மீதுள்ள அபிப்பிராயம் அவளுக்குத் தெரியாது அல்லவா? ஆகையால் குழம்பியவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, அவனுக்குத் தன்னை சிறிதும் பிடிக்கவில்லை என்று.
அடுத்து என்ன செய்வது? அவன் யுகனின் அருகில் உறங்கி விட்டான். ஆனால் அவள் எங்கு உறங்குவது என்று புரியாமல் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
கட்டிலில் சார்ந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்ததாகவும் தெரியவில்லை. கண்களை மூடிச் சாய்ந்திருக்க, விழித்திரைக்குள் இனியாவின் விம்பம் விழுந்தது.
அவனது கைப்பற்றியவளின் தோளில் இன்னொருவன் கை போட்டிருக்கும் காட்சி. அதை உதறித் தள்ளியவனுக்கு அடுத்து ஜனனியின் கழுத்தில் தாலி கட்டியது நினைவில் உதித்தது. அதை நினைக்கும் போது இலவச இணைப்பாக ராஜீவ்வின் கலங்கிய கண்களும் வலம் வந்தன.
எழுந்து பல்கோணிக்குச் செல்ல, அவனைப் பார்த்து விட்டு தரையில் அமர்ந்தவளுக்கு இருந்த களைப்பில் தூக்கம் போய் விட்டது.
பல்கோணியில் நெடுநேரம் குறுக்கும் மறுக்குமாக நடந்தான் சத்யா. பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவனுக்கு இந்தத் திருமணம் அனைத்தையும் நினைவுபடுத்துவது போல் இருந்தது.
“ஆஆஆஆஆ” தலையைப் பிடித்துக் கொண்டு பெருங்குரலெடுத்துக் கத்தித் தன் கோபத்தைச் சிறிது மட்டுப்படுத்திக் கொண்டு அறையினுள் நுழைந்தவனின் கண்களுக்கு விருந்தளித்தது, தரையில் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்த ஜனனி தான்.
“எவ்ளோ பெரிய விஷயத்தைப் பண்ணி ஒருத்தர் நம்பிக்கையை உடைச்சிட்டு இப்படி சுரணையே இல்லாம இருக்க இவளால எப்படி முடியுது?” இனியாவின் மீதிருந்த வெறுப்பில் ஒரு பாதி இவள் மீது தாவியது போல் இருந்தது அவனுக்கு.
யுகனின் அருகில் உறங்கியவனுக்கு நெடுநேரம் கழித்துத் தான் நித்திரை சென்றது.
அதே இரவில் மாரிமுத்துவின் வீட்டில் கலவரம் வெடித்தது. தம் வீட்டு வாயிலின் நின்று கொண்டு அழுத நந்திதாவை அவள் குடும்பத்தினர் வெற்றுப் பார்வை பார்த்தனர்.
“ஏய்! என்னை ஏமாத்திட்டல்ல டா நீ?” நந்திதாவின் அருகில் நின்ற எழிலின் ஷர்ட் காலரைப் பிடித்துக் கத்தினார் மாரிமுத்து.
“நான் உங்க பொண்ணைக் காதலிச்சது உண்மை. ஆனால் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னிக்கும் நெனச்சதில்ல ஐயா. உங்க சம்மதம் கேட்டு பண்ண இருந்தோம். ஆனால் அதற்குள் என்னென்னவோ நடந்துருச்சு” மிக நிதானமாக உரைத்தான் எழிலழகன்.
“பண்ணுறதைப் பண்ணிட்டு நல்லவன் வேஷம் போடாத. உனக்கு இந்த வீட்டைப் பார்த்துக் கொடுத்தது என் தப்பு. அதனால் தான் எதிரே இருந்துட்டு இவளை உன் கைக்குள் போட்டுக்கிட்ட” நந்திதாவைக் காட்ட, அவளோ விம்மி அழுதாள்.
“எதுக்கு டி அழுற நீ? உன்னை மாதிரி ஒருத்தியை பெத்ததுக்கு நான் தான் அழனும். அமுக்குணி மாதிரி இருந்துட்டு கடைசி நேரத்தில் கழுத்தறுத்துட்டியே” கோபமும் கண்ணீருமாகப் பேசினார் ஜெயந்தி.
“ம…மகி! நான்…” நந்திதா பேச வர, “உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு தெரிஞ்சு ஜானு எவ்ளோ தூரம் கெஞ்சிக் கெஞ்சி கேட்டா? அப்போவாச்சும் நீ சொல்லி இருக்கலாம்ல? ஆனால் இன்னிக்கு உனக்காக அவ போயிட்டா. விருப்பமே இல்லாத கல்யாணத்தை எங்களுக்காக பண்ணிக்கிட்டு அவ வாழ்க்கையை அர்ப்பணிச்சிட்டா” ஆதங்கத்துடன் மகிஷா கேட்ட போது அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.
நந்திதா சென்றது அவளது நண்பியின் ஹாஸ்டலுக்குத் தான். இதை அவளது நண்பி எழிலிடம் தெரியப்படுத்த அவன் இங்கு அழைத்து வந்தான்.
எழில் மூலமாக சத்யாவை ஜனனி திருமணம் செய்தது தெரிந்து அதிர்ந்து தான் போனாள் அவள். இப்படி நடக்கும் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை.
சத்யாவுக்கு இந்தத் திருமணத்தில் கொஞ்சமும் விருப்பம் இல்லையே. அப்படியிருக்க, அவனோடு ஜனனியின் வாழ்வு என்னாகும் என்று குற்றவுணர்வில் குறுகிப் போனாள்.
“எங்க மானத்தை வாங்கிட்டு இப்போ எதுக்கு வீட்டு முன்னால வந்து நிற்கிற? வெட்கம் கெட்டவளே” ஜெயந்திக்கு ஆத்திரம் தீரவில்லை.
ஆசை ஆசையாக வளர்த்த மகள், தன் இஷ்டத்துக்குத் திருமணம் செய்ததை எந்தத் தாயால் தாங்கிட முடியும்? ஓடுகாலி என்ற பட்டத்தை வாங்கி விட்டாள் அவள். ஆனால் இந்தப் பெயர் அவளுக்கு காலத்திற்கும் அவமானத்தைத் தேடிக் கொடுக்கும். அவள் மட்டுமல்ல, அவளுக்குப் பிறக்கும் குழந்தையும் இந்த அவப்பெயரால் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் புலம்பி என்ன பயன்?
தன் மகளின் எதிர்காலம் இனி எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வி ஜெயந்தியின் முன் பூதாகரமாகத் தோன்றி அச்சுறுத்தியது.
“நான் உங்க கூட..” என அவள் சொல்லும் போது, “உனக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது. எப்போ நீ இப்படியொரு காரியத்தை பண்ணிட்டுப் போனாயோ அப்போவே உனக்கும் எங்களுக்குமான உறவு அறுந்து போச்சு” கோபமாக உள்ளே சென்று விட்டார் மாரிமுத்து.
“அப்பாஆஆ” கதறி அழுதவளுக்கு, ஜனனி கேட்ட போதே சொல்லி இருக்கலாமோ என்று இப்போது தோன்றியது.
இப்போது யோசித்து என்ன பயன்? இது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் தானே?
எழிலழகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நொடி நேரம் யோசித்தவன் தனது வீட்டிற்குச் சென்றான். நந்திதாவுக்கு தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு.
நெடுவே தாயிடம் சென்றவன், “ம்மா! நான் என்ன பண்ணாலும் நீங்க ஏத்துப்பீங்களா?” என்று கேட்க, அவருக்கு புரிந்து விட்டது அவன் செய்யப் போகும் காரியம்.
அவருக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை தான். ஆனால் மகனுக்கு அவளைப் பிடித்துள்ளது என்பதால் எதுவும் பேசாமல் தலையசைத்தார்.
அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, பூஜையறையில் இருந்த தாலியை எடுத்துக் கொண்டு வெளியேற, அவன் தாய் அன்னம்மாள் வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“நந்திதா!” என்றழைத்தவன், அவள் திரும்பிப் பார்க்க அவளது கழுத்தில் தாலியைக் கட்டி தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.
“இனி நீ என் மனைவி நந்திதா. நீ என் கூட தான் இருக்கனும்” அவளது கையைப் பிடித்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அன்னம்மாள் மற்றும் ஜெயந்தி தம் பிள்ளைகளின் கல்யாணம் இப்படி நடந்ததை எண்ணிக் கலங்கி நின்றனர்.
மறுநாளும் விடிந்தது. சூரிய கதிர்கள் முகத்தைத் தொட்டுச் செல்ல, எழுந்து அமர்ந்தான் சத்யா. அப்படியே எழுந்து பாத்ரூம் சென்றவன் குளித்து முடித்து வெளியே வந்த போது ஜனனியைக் கண்டதும் தான் தனக்குத் திருமணமானதே நினைவுக்கு வந்தது.
ஒன்றன் பின் ஒன்றாக அனைத்துக் காட்சிகளும் வலம் வர, கோபம் எழுந்தது அவனுக்கு. யுகனைப் பார்க்க, அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் எழுந்தால் ஜனனி கீழே உறங்குவதைத் தாயிடம் சொல்லி விட்டால் அவ்வளவு தான் என்ற எண்ணம் அவனுள் பிறந்தது. சற்று யோசித்து விட்டு, அவளருகே குனிந்து “ஹேய் பொண்ணு” என அழைத்தான்.
அந்த சத்தத்திற்கு முழிப்பு வருமா அவளுக்கு? ஜனனி தூங்கினால் அவ்வளவு சீக்கிரம் எழ மாட்டாள். ஜெயந்தி தொண்டைக்குழி நீர் வற்றும் வரை கத்தினால் கஷ்டப்பட்டு எழுந்து கொள்வாள்.
“ஜனனி! ஏய் ஜனனி” சற்று சத்தமாக அழைக்க, அதற்கும் அவள் எழுந்தபாடில்லை.
“என்ன இப்படி தூங்குறா?” கடுப்பாக இருந்தது அவனுக்கு. அவனது சத்தத்தில் யுகன் அங்குமிங்கும் அசைய, செய்தறியாது திகைத்து நின்றான் சத்யா.
“ஜனனீஈஈஈ” என்று காதருகே குனிந்து அழைக்க, “அம்மா! இன்னும் கொஞ்சம்” மறுபுறம் திரும்பிக் கொண்டாள் அவள்.
“ஏய்! எழுந்திரு முதல்ல” வந்த கோபத்தில் அவன் கத்த, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் ஜனனி.
பயந்து போய் கொட்ட கொட்ட முழித்தவளுக்கு சத்யாவின் முகத்தை மனதினுள் உள்வாங்கி, நிகழ்காலத்தை கிரகிக்க ஒரு நிமிடம் எடுத்தது.
“எனக்கு தூக்கமா வருது. கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று அவனிடம் சொல்ல, “இவ்ளோ நேரமா என்ன தூக்கம்? யுகி எழ முன்னால ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று வெளியில் சென்று விட்டான்.
‘கொஞ்சம் நல்லவர் தான் போல’ மேகலையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவன் செய்த காரியம் அவளுக்கு சத்யாவை நல்லவனாகக் காட்டி விட்டது.
குளித்து விட்டு ஜெயந்தி கொடுத்து விட்ட சிவப்பு வர்ண சாரியை அணிந்து கொண்டு முடி சீவ, அப்போது தான் யுகன் கண் விழித்தான்.
“குட் மார்னிங் டாடி” எழுந்து அமர்ந்து கண்களைத் திறக்க, அவன் பார்வை வட்டத்தினுள் விழுந்தாள் ஜனனி.
“குட் மார்னிங் யுகி” இதழ் விரித்து புன்னகைத்தாள் அவள்.
“நீங்க என்ன பண்ணுறீங்க இங்கே? டாடி எங்கே போயிட்டார்?” தந்தையைத் தேட, அவளுக்கு முகம் சுருங்கியது.
ஏனென்றால் யுகன் எழும்பும் போது அவனுக்கு சத்யா இருக்க வேண்டும். வழமைக்கும் ‘குட் மார்னிங் யுகி கண்ணா’ என அவனிடம் அமர்ந்து கொள்வான் சத்யா. ஆனால் இன்று ஜனனி இருப்பதால் அங்கிருக்கப் பிடிக்காமல் சென்று விட்டான்.
“தெரியல யுகி. ரூம் விட்டு வெளியே போனார். பார்த்து சொல்லவா?” அவள் கேட்க, “டாடி வெளியே போனதே உங்களால தான். நான் போய் பார்க்கிறேன்” கோபமாக வெளியே சென்று விட்டான் அவன்.
ஜனனியும் அவன் பின்னால் செல்ல, சோஃபாவில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்த சத்யாவின் முன்னால் சென்று நின்றான் சின்னவன்.
“ஹேய்! குட் மார்னிங் யுகி கண்ணா” அவனது கன்னத்தைப் பிடிக்க, “ஏன் டாடி என்னை விட்டு வந்தீங்க?” கவலையோடு வினவினான் அவன்.
“அது வந்து யுகி..” பதில் சொல்ல முடியாமல் அவன் திணற, “இவங்களால தானே?” ஜனனியை நோக்கி கை நீட்டினான் யுகன்.
அவளுக்கோ திக்கென்றது. யுகன் தன்னோடு முன்பு நன்றாகத் தானே உரையாடினான். ஆனால் அவனது இந்தக் கோபமும் விலகலும் அவளை ஏனோ பாதித்தது.
“யுகி” சத்யா அதட்ட, அவன் அமைதியாக நின்றான்.
“இந்தாம்மா காஃபி” மேகலை ஜனனிக்குக் கொடுக்க, அவள் அதை வாங்கிக் குடித்தாள்.
“மருமகளை இவ்ளோ அக்கறையா பார்த்துக்க வேண்டாம். அப்பறம் உங்க தலை மேல உட்கார்ந்துடுவாங்க” தேவன் கிண்டலாகச் சொன்னவாறு வர, “அம்மா தலையில் யாரையும் ஏற விட்றுவோமா? உடனே தள்ளி விட்ற மாட்டோம்” என ரூபன் கூற,
“காஃபி போட்டு கொடுத்தா, தலையில் உட்கார்வேன்னு அர்த்தம் எடுக்கக் கூடாது. நாளையில் இருந்து நான் காபி போடுவேன், அப்பறம் எல்லாரும் மாறி மாறி போடனும்” என்றாள் ஜனனி.
“எங்களுக்கு நீ ஆர்டர் போடுறியா?” சத்யா கேட்க, “உங்களுக்கு போடத் தெரியாதுன்னா நானே போடுறேன்” சட்டென சொன்னவள், அவன் என்ன நினைப்பானோ என நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
நந்திதா, மகிஷாவோடு பேசுவது போல் விளையாட்டாக பேசி விட்டாள். இப்போது அதை நினைத்து படபடத்தது.
“நீங்க செம்ம அண்ணி” ரூபன் சிரிக்க, சத்யாவின் அனல் பார்வை அவளைத் தீண்டியது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி