🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 19
கண்களை மூடி தோட்டத்தில் இருந்த பூக்களை ஸ்பரிசித்த தேன் நிலாவுக்கு இதயம் இரட்டிப்பாக துடிக்கலானது. பூக்களின் வாசத்தையும் தாண்டி, அவளுக்குப் பரிச்சயமானதொரு வாசம் நாசியைத் தீண்டிச் சென்றது.
திடீரென்று அவள் கண்களைப் பின்னிருந்து மூடியது ஒரு கரம். அந்த வாசம் மிக அருகாமையில் வீச, அக்கரத்தின் தொடுதல் கூறியது அதன் சொந்தக்காரன் யாரென்று.
கையை விலக்கி, சடுதியில் திரும்பி “ராகவ்” எனும் கதறலோடு அவனை அணைத்துக் கொண்டாள் தேன் நிலா.
காற்றோடு கை வீசியவளுக்கு அவன் தட்டுப்படாமல் போனதன் காரணம் தான் என்ன? கனவில் வந்தவன் கைகளில் படுவானா? கண்களைத் தான் தொடுவானா?
ஆம்! அது தேன் நிலாவின் கனவு. நினைவில் மட்டுமன்றி கனவிலும் அவளை முற்று முழுதாக ஆட்கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.
🎶 இது கனவா நிஜமா
எண்ணம் அலை மோதுதே
இது வரையில் எனக்கிந்த உயிர் வேதனை 🎶
ராகவ் யூ.எஸ் சென்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது. நான்கு நாட்களும் நான்கு யுகங்களாகத் தோன்றின. ஒரு நிமிடத்தைக் கடப்பது ஒரு வருடத்தைக் கடப்பதாய் கனத்தது.
அவளது நினைவெங்கும், மனமெங்கும் அம்மாயவனே முழுதாக நிறைந்திருந்தான். எழுந்தவுடன் அவள் கரங்கள் அவனைத் தான் தேடும்.
அவன் பெரும்பாலும் அணியும் நிறத்தில் உடையணிந்து கொள்வாள். சாப்பிடும் போதும் அவனுக்கு பரிமாறுவது நினைவு வந்து அவளை வதைக்கும். அவனோடு சண்டையிட்ட பொழுதுகள், கோபப்பட்ட தருணங்கள் அனைத்தும் மின்னி மறையும்.
அதிலும் அவன் தந்த முத்தம், எதிர்பாராத அணைப்பு ஞாபகம் வரும் போது ஓய்ந்து போய் விடுவாள் வஞ்சி. புரியாத பிரியம் பிரியும் போது புரியும் என்பது இங்கு நூறு சதவீதம் உண்மையாயிற்று.
அவனைத் திருமணம் செய்தது முதல் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள். அவளுக்குத் தான் திருமணம் பிடிக்கவில்லை. அதை அடிக்கடி சொல்வதால் அவன் கோபப்படுவான். ஆனால் அவனாக ஒரு போதும் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே.
ஆனால் அவனது காதல்?
அதைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்த விழைந்தது ஆழ்மனம். காதல் இருந்தது. அதை அவனும் ஒப்புக் கொண்டான். இருந்தும் அக்காதல் இப்போது இல்லை என்பதாகத் தானே சொன்னான்.
அப்படியிருந்தும் அப்பெண்ணின் நினைவு அவனை மிருதுவாக மாற்றியதை அவளும் கண்கூடாகப் பார்த்தாள் அல்லவா? அந்நேசம் அவன் நெஞ்சோரம் இருப்பதும் உண்மை தான்.
அந்த விடயத்தில் மட்டும் குழம்பிய குட்டையாய் அவள் நிலை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. ராகவேந்திரனின் நிகழ்காலம் தேன் நிலா தான். அதை அவன் உணர்த்தியுள்ளான். அவளும் இந்நாட்களில் நன்கு அறிந்து கொண்டாள்.
இந்த நான்கு நாட்களில் நேரம் கிடைக்கும் போது அழைப்பான். ஆனால் பேசுவது என்னவோ சில நிமிடங்கள் தான். அவ்வேளையில் அவன் கண்களில் ஒரு வித வெறுமையை, ஏக்கத்தை உணர்வாள்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல், அவனது ஏக்கத்தை உணர அவளுக்கும் அவ் ஏக்கம் வந்தது காரணமாயிற்று.
கனவின் தாக்கத்தில் விழித்தவளை அவனது நினைவு அதிகம் வதைத்தது. அவனுக்கு அழைத்துப் பேசலாமா என நினைத்தாலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு அவனது தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்று சோர்ந்து போனாள்.
அவனது சர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டு தூக்கம் வரும் வரை போராடியவள் மணி ஐந்தைக் கடந்ததும் உறக்கத்தைத் தழுவினாள்.
நேரம் கழித்து எழும்பும் போது, மணி பத்தைத் தாண்டியிருந்தது. அவசரமாக ஆயத்தமாகி கீழே சென்றவள், “சாரி அத்தை! கொஞ்சம் தூங்கிட்டேன்” என மன்னிப்பை யாசிக்க,
“அடி போடப் போறேன். தூங்கினதுக்கு எல்லாம் சாரி கேட்பியா? இந்தா காபி” என காஃபியை நீட்ட, அமைதியாக வாங்கிப் பருகினாள்.
“இவ்ளோ கஷ்டமா இருக்குன்னா அவனை ஏன் போக விட்ட? வேணானு சொல்லி இருக்கலாமே” வாஞ்சையோடு கேட்டவருக்கு அவளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
துறுதுறுவென இருப்பவள் இப்போது மௌனமே உருவாய், சோகமே வடிவாய் காட்சியளித்தாள். மகனுக்கு அழைத்து வந்து விடுமாறு கூறினாலும் அவனால் வர முடியவில்லை என்றான்.
மரகதம் மார்கெட் செல்ல, பாஸ்கரனும் ஆஃபிஸ் சென்றிருந்தார். ஹாலில் அமர்ந்திருந்தவளுக்கு வாசலில் ராகவ்வின் குரல் கேட்பது போன்ற உணர்வு.
🎶 எனை அறியாமலே கால்கள் நடைபோடுதே
வலி கூட இந்நேரம் சுகமாகுதே 🎶
எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததுவோ வேகமாக ஓடிச் சென்று பார்த்தவளுக்கு அவன் இல்லை என்றதும் கண்களில் கண்ணீர் வழிந்தது.
வாயிற் கதவை மூடி விட்டு, அறையினுள் புகுந்து கட்டிலில் விழுந்தவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை.
“ரா.. ராகவ் வந்துடுங்க. என்னால முடியல. என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது. எனக்கு நீங்க வேணும்.. உங்க கூட பேசனும், நிறைய சண்டை போடனும்.என்னால நீங்க இல்லாம வாழ முடியாது” அழுகையினூடே கதறியவளுக்கு இதயம் அதிர்ந்து துடித்தது.
சொன்னதை மீண்டும் மீட்டிப் பார்க்கலானாள். அவன் இல்லாமல் வாழ முடியாதா?
அப்படியானால்?
அவனில்லாது வாழ முடியாது என்றால்? அவளது எல்லாமுமாக அவன் மாறி விட்டானா?
மாறியே விட்டான். அவளது இதயத்தின் ராஜாவாக மாறி விட்டான். அவன் இன்றி சுவாசிக்க முடியாமல் சுவாசத்தில் கலந்து விட்டான். அவன் அருகாமை வேண்டும் என்ற நிலையில் நேசத்தால் நிறைந்து விட்டான்.
நேசமென்றால் சாதாரண நேசமா?
இல்லவே இல்லை.. ஈடு இணையில்லா நேயமொன்று, நேசமின்றி உயிர் வாசமில்லை என்றளவு நினைவொன்று அவளுள் கருக்கொண்டு விட்டது. இந்நேசத்திற்கு பெயர் தான் என்ன?
🎶 தூரம் சென்ற பின்பு இதயம் சென்னது
இது தான் காதலா..? 🎶
காதல்!
ஆம், காதல் தான்.
காத்திருப்பில் கண்களோரம் நீர் கசிய வைத்து, பிரிவில் ஏக்கங்களை ஏராளம் தந்து, நினைவோடு கனவிலும் கச்சிதமாய்க் கலந்து, உணர்வுகளில் ஆத்மார்த்தமாய் உறவாடும் நேசத்திற்கு காதலன்றி வேறென்ன அர்த்தம் இருந்திட முடியும்?
🎶 சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்ககாமலே நெஞ்சில் புதைத்ததேன் 🎶
🎶 உன்னைக் கண்டேன்
காதல் கொண்டேன் தூக்கம் இழந்தேன்
என்னை மறந்தேன்
தேடும் உறவே
நொடியில் கலந்தாய் 🎶
புரிந்தது. அவன் மீது தனக்குள்ள காதல் நன்கு புரிந்தது. அவனது புகைப்படத்தைப் பார்த்த கண்களில் காதல் தெரிந்தது.
“அக்கா..!!” எனும் அழைப்பு கேட்டதும், துள்ளலுடன் வந்தவள் வாசலில் நின்றிருந்த துருவனைக் கண்டதும் அவனை அணைத்துக் கொண்டாள்.
“என்னாச்சுக்கா ஏன் அழுற?” அக்காவின் அழுகையில் திகைத்தவன் அவளை சோஃபாவில் அமர வைக்க, “எனக்கு அவரைப் பார்க்கனும் துருவா. என்னால இருக்க முடியாது டா. வந்து என் கூட சண்டை போடச் சொல்லு. பேசச் சொல்லு” ஏங்கி ஏங்கி அழுதாள் தேனு.
“ராகவ் அண்ணா இன்னும் அஞ்சு நாள்ல வந்துடுவார். நீ ஆசைப்படுற மாதிரி உன் கூட சண்டை போடுவார். நீ அவர் கூட பாக்ஸிங் ப்ராக்டிஸ் பண்ணி தான் யூ.எஸ் அனுப்பி வெச்சியோனு எனக்கு டவுட்டா இருக்கு”
“உண்மை தான். என்னால் தான் போனார். நான் சண்டை போட்டு போட்டு அவரை சலிக்க வெச்சுட்டேன். வந்தாலும் சண்டை போடத் தான் போறேன். நான் சொன்னா என்னை விட்டுப் போயிடுவீங்களானு கேட்டு” கண்ணீரைத் துடைத்தவாறு சொன்னாள்.
“அடடா அடடா. எங்கே மூஞ்சைக் காட்டுங்க பார்ப்போம். ஆனால் கோபம்னு சொல்லட்டு வெட்கப்படுற” என்று துருவ் அவளைப் பார்க்க, “போடா என்னால முடியாது. இந்தக் காதல் வந்தாலே இப்படியா? லூசுத்தனமா பண்ண வேண்டியதா இருக்கு” தன்னையறியாமலே சொல்லி விட்டாள்.
“என்ன? ஏதோ சொன்னியே இப்போ. காதல்னு கேட்டுச்சு. என் அருமை அக்கா வாயில் அந்த வார்த்தை வர்றது ரொம்ப அருமை இல்லையா?” அவளைக் கிண்டல் செய்யும் பணியை சிறப்புறவே மேற்கொள்ள,
“ரொம்ப பண்ணாத டா. உண்மையாவே காதல் தான். அந்த ரஷ்யாக்காரன் போனது தான் போயிட்டான், என் மனசையும் சேர்த்து பொட்டியைக் கட்டிட்டான். ரொம்ப மோசம்”
“ராகவ் அண்ணா நிலமை ரொம்ப மோசம். எல்லாத்துக்கும் அவரையே ப்ளேம் பண்ணுற பொண்டாட்டி அவருக்கு வாய்ச்சி இருக்கா. உங்க சைடு தவறையும் ஒத்துக்கனும் சிஸ்டர்” நக்கலாக சொன்னாலும், அவன் கூற்றில் இருந்த உண்மை அவளைச் சுட்டது.
“இனிமேலாச்சும் என் அக்கா முகம் ப்ரைட்டா காதல் தீபம் ஏற்றி ஜொலிக்குமானு பார்க்கிறேன்” அவள் நாடி பிடித்துக் கொஞ்சியவனோடு கதையளக்கத் துவங்கினாள் தேன் நிலா.
காதலை உணர்ந்த பின்னால் அவன் குரல் கேட்க இதயம் துடித்தது. ஆனால் அவன் அழைக்கவேயில்லை. இரண்டு நாட்களாயிற்று. அவன் சென்று இன்றோடு ஒரு வாரம் பூர்த்தியானது.
முற்றத்தைப் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் தேனு. இன்று எழுந்தது முதல் மனம் நிலையின்றித் தவித்திட, ஒரு வித யோசனையுடனே நின்றாள் தேனு.
“ராகவ் நம்ம கிட்ட சொல்லாம இன்னிக்கு இந்தியா வந்துட்டானாம். பஸ்ஸில் வந்திருக்கான்” என்று பாஸ்கர் சொல்வதைக் கேட்ட தேனுவின் கண்களில் மின்னல்.
ஓடோடிச் சென்று பாஸ்கரன் முன்னால் நின்று, “வந்துட்டாரா மாமா? அவர் வந்துடுவாரா?” என படபடப்புடன் கேட்க,
“அவன் வந்த பஸ் ஆக்சிடன்ட் ஆயிடுச்சாம் தேனு. காயப்பட்டவங்களை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்கனு அவன் நம்பரால கால் வந்துச்சு” என்று தழுதழுத்த குரலில் அவர் சொல்ல திக்பிரமை பிடித்தவள் போல் நின்றாள் தேன் நிலா.
“அய்யோ என் புள்ள எங்கிருக்கானோ? அவனுக்கு என்னாச்சு” மரகதம் கதறி அழத் துவங்க, தேனுவின் வீட்டினரும் வந்து விட்டனர். விடயம் கேள்வியுற்று அவள் பெற்றோர் கதிகலங்கிப் போக, தமக்கையின் நிலை கண்ட துருவனுக்கு மனம் தாங்கவில்லை.
பாஸ்கரனும் சுகுமாரனும் ஆக்சிடன்ட் நடந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
“அக்கா..” என்றழைத்தும் அவளிடம் பதில் இல்லை.
சுசீலாவும் “ஹேய் தேனு. தேனு” என உலுக்கினாலும் அவள் சுய உணர்வு பெற்றாள் இல்லை.
“ம்மா! அக்கா அதிர்ச்சியில் இருக்காங்க. கொஞ்ச நேரம் தனியா விடு” என்ற துருவனின் கூற்றை ஏற்று அவரும் மௌனமாகினார்.
சாவி கொடுத்த பொம்மை போல் அறையை நோக்கி நடை போட்டாள் பெண். ஒவ்வொரு அணுவும் ராகவ்! ராகவ்! என்று அவனுக்காகத் துடித்தது.
அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பியவளுக்கு மனதில் தெம்பில்லை. அவள் கண்களில் உயிரில்லை, அதே சமயம் ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை.
சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை விழிகளால் தழுவினாள். பல்வரிசை தெரிய சிரித்த கணவனின் முகம் அவள் மனதில் அடியாழம் வரை இறங்கி உயிர் வரை தொட்டது.
“காதலை உணர்ந்த உடனே இந்த நிலமையா?” என்று மட்டுமே கேட்டுக் கொண்டாள்.
நேரம் செல்லச் செல்ல அவளுக்கு தாங்க முடியா வேதனை. தரையில் அமர்ந்து கொண்டு அவனது ஷர்ட்டைக் கையில் பிடித்துக் கொண்டாள்.
அந்த ஷர்ட்டில் அவனது வாசனை அவளுள் பெரும் புரட்சியை ஏற்படுத்திற்று. அதனை மாரோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவளுக்கு அவனைப் பார்த்தால் போதுமென்ற நிலை.
எழுந்து நின்றவளது கால்கள் தளர்ந்து போக, துவண்டு விழப் போனவளை தாங்கிக் கொண்டது ஒரு கரம்.
அண்மையில் வீசிய வாசனையை நாசியால் நுகர்ந்த நொடி, “ரஷ்யாக்காரா! ரொம்ப வலிச்சுது டா” எனும் வார்த்தைகளோடு கண்களை மூடினாள் மங்கை.
“ஹனி மூன்” என்ற அழைப்போடு அவளை அணைத்துக் கொண்ட கணம் தானும் மயங்கி விழுந்தான் ராகவேந்திரன்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
2024-11-21