அத்தியாயம் – 2
காஞ்சிபுரத்திலேயே பல வருடங்கள் இருந்த பின், சிவசாமிக்கு அவரின் ஊரில் உள்ள பள்ளியிலேயே ஹெட்மாஸ்டராக பதவி உயர்வுடன் மாற்றலும் கிடைக்க, இங்கேயே ஜாகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டனர். மஞ்சு அப்போது இருந்தே ஆரணிக்கும் செய்யாறுக்கும் இடையில் இருக்கும் ஊரில் வேலை பார்க்கிறார். தினமும் காரில் சென்று வருகிறார். இந்த ஊருக்கு வந்த போது தேவி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தாள். பாலகுமரன், மூன்றாம் வகுப்பு முடித்து இருந்தான், இரு பிள்ளைகளுமே அம்மாவை போல் தைரியமாக இருப்பார்கள். அதில் சிவசாமிக்கு மிக்க மகிழ்ச்சி.
சிவசாமியின் குடும்பம் பட்டு நெசவு, ஜவுளி வியாபாரம் என சற்று வசதி ஆனது. அவருடன் கூட பிறந்தது இரண்டு தங்கைகள்.
மூத்தவள் இந்திரா இவரை போலவே சாது. அவள் கணவன் கண்ணப்பன், விவசாயம் செய்கிறார். ஒரு பையன், இரண்டு பெண்கள் அவளுக்கு.
இரண்டமாவள் சௌந்தரி. அவள் கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். இரண்டு பெண்கள் அவளுக்கு. அனைவரும் நடந்து போகும் தூரத்தில் தான் இருக்கிறார்கள்.
அதே போல், பாலகணபதியின் வீடு அங்கேயே தான். ஆனால் அவரின் பெற்றோர், தம்பி என யாரும் இப்போது உயிரோடு இல்லை. ஏதோ சாபம் போல் அடுத்தடுத்து அனைவரும் இறந்து விட்டனர். சொத்தை எல்லாம் அவரின் சித்தப்பா எடுத்துக் கொண்டார். அன்று பெண் கேட்க வந்தது கூட கணபதியின் சித்தப்பா மகளின் பையனுக்கு தான். கணபதி இறந்த புதிதில் சொத்துக்காக மஞ்சுவிற்கு தொல்லைகள் கொடுத்து, அவர்கள் விரட்டி விட பல வேலைகள் செய்தனர். அப்போதே, சிவசாமி எங்களுக்கு அந்த சொத்தே வேண்டாம் என்று கூறி மஞ்சுவை கையெழுத்து போட்டுக் கொடுக்க வைத்து விட்டார்.
மஞ்சுவும் அந்த சொத்து, பணம் எதையும் எதிர்பார்க்கவில்லை. கணபதியே இருந்திருந்தால் கூட அந்த சொத்தை வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார் என்று அதை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. அவர் கையெழுத்து போட்ட பின் தான் மஞ்சுவை தொல்லை செய்யாமல் விட்டனர்.
இப்படியாக மஞ்சு, சிவசாமிக்கு மட்டுமே உரிமையாகி போனார். இதில் உள்ளுரில் இருக்கும் அத்தைகளின் பிள்ளைகள் தேவியுடனும், பாலாவுடனும் பழக இவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். மஞ்சுவோ, சிவசாமியோ யாரை பற்றியும் குழந்தைகளிடம் குறை பேசுவது இல்லை. அவர்களிடம் பழகும் உறவினர்களை அவர்களே புரிந்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர். இரண்டு அத்தைகளின் பெண்களுக்கும் தேவிக்கும் ஓரிரு வயது தான் வித்தியாசம் என்பதால் தேவி சட்டென்று அவர்களுடன் பழகி கொண்டாள். பாலா, சிறுவன் என்பதால் அனைவருக்கும் அவனை மிக பிடிக்கும். அதிலும் சௌந்தரிக்கு அண்ணன் மகன் மேல் கொள்ளை பாசம். தேவியை அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். இந்திரா எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டாள். சௌந்தரி, தன் பெண்களான, சத்யா மற்றும் வித்யாவிடம் தேவியுடன் அளவாக பழக வேண்டும் என்று மறைமுகமாக சொல்லியும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு தங்கள் மாமன் மகளின் அறிவு, நகைச்சுவை, தைரியம் அனைத்தும் பிடிக்கும். தேவியுடன் பொழுதை கழிக்கவே விரும்புவார்கள். ஆனால் சௌந்தரியின் கருத்தை அவளின் அக்காவின் சின்ன மகள் ஹேமா அப்படியே பிரதிபலிப்பாள். அவளுக்கு ஏனோ தேவியின் சூட்டிகையான குணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பொறாமையில் ஆரம்பித்து வெறுப்பில் வந்து நின்றது. ஹேமாவின் அக்கா சரண்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. அவளை எப்போதாவது தான் சந்திப்பார்கள் அனைவரும். அதனால் ஹேமா, சித்தி வீட்டில் தான் நிறைய நேரம் இருப்பாள். அவள் அண்ணன், சந்தோஷ். தேவியை விட நான்கு வயது பெரியவன்.
இப்போது தேவியும், சத்யாவும் கல்லூரி படிப்பை முடித்து இருந்தார்கள். சத்யாவிற்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். ஹேமாவும், வித்யாவும் கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்தார்கள். சந்தோஷ் அவர்களின் தொழில்கள் அனைத்தையும் கவனிக்கிறான். பாலா எட்டாம் வகுப்பு படிக்கிறான். சிவசாமிக்கும், மஞ்சுளாவிற்கும் இன்னும் சில காலம் இருக்கிறது ஓய்வு பெற.
தேவியின் வீட்டு வாசலில் சர்ரென்று வந்து நின்ற ஸ்கூட்டியில் இருந்து அந்த தெருவே அலறும்படி ஹார்ன் சத்தம் அலறியது.
“வரேண்டி மூதேவி!” கத்திக்கொண்டே வேகமாக வந்து வண்டியில் ஏறினாள் தேவி.
“வாடி பிதேவி!” அவளை வரவேற்றாள் தேவியின் நெருங்கிய தோழி ஸ்ரீதேவி. தேவி அவளை மூதேவி என்று கூப்பிட்டால், அவள் இவளை வம்பு செய்ய தேவியின் இனிஷியல் ஆன பாலா என்பதை வைத்து பி என்று அடைமொழி சேர்த்து மோசமாக கிண்டல் அடிப்பாள். தேவிக்கு சிவசாமி தன் வளர்ப்பு தந்தை என்ற உண்மை தெரியும். ஆனாலும் விவரம் தெரிந்ததில் இருந்து அவர் தானே அவளுக்கு அப்பா, பாலாவை பற்றி எதுவுமே தெரியாதே! அதனால் சிவசாமி தான் என்றும் தனது அப்பா என்று கூறிவிட்டாள்.
“எங்க அம்மா இருந்திருக்கணும் இப்போ!”
“மிஸ்ஸியம்மா வீட்டில் இல்லைனு தெரிஞ்சு தானே தெறிக்க விட்டோம்!” ஸ்ரீ மிகவும் கலகலப்பு மிகுந்தவள். அனைவரையும் கிண்டல் செய்வது தான் அவள் வேலையே. தேவிக்கே பெரிய போட்டி அவள்.
“இரு, எங்க அம்மா கிட்டே சொல்றேன்….”
“அதான் என்ன காப்பாத்த ஒரு புனித ஆத்மா உங்க வீட்டில இருக்காரே….”
“அடியே, எங்க அப்பா பாவம்டி… அவரையும் கிண்டல் அடிக்கிறியே”
“ஆமாடி, உங்ககிட்டே சிக்கி இருக்கும் போது அவர் பாவம் தான்”
“உன்னை திருத்தவே முடியாது….”
“நீ திருந்திட்டியா மச்சி? சொல்லவே இல்லை…”
“இன்னைக்கு இதுவே போதும், ஷாப்பிங் எல்லாம் வேண்டாம், வண்டியை திருப்பு” அவளை அடக்கும் மார்க்கம் தெரிந்தவளாக தேவி பேச,
“ஒக்கே! ஒக்கே! கூல் மச்சி…”
வண்டியை நேரே ஆரணிக்கு விரட்டினாள் ஸ்ரீ. அவர்கள் சத்யாவின் திருமணத்திற்கு தான் இப்போது இருந்தே ஷாப்பிங் பிளான் செய்கிறார்கள். இன்று முதலில் ஆரணியில் விண்டோ ஷாப்பிங் தான். என்ன எப்படி இருக்கிறது என்று. அதன் பின் காஞ்சிபுரம், வேலூர், சென்னை, பெங்களூர் என பல் பிளான் வைத்து இருக்கிறார்கள், பார்ப்போம் அவர்கள் திட்டம் எவ்வாறு நிறைவேறுகிறது என்று. கடைகள் ஏறி இறங்கி விட்டு, ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று கடைக்கு சென்றனர். அங்கே நண்பர்களுடன் அமர்ந்திருந்த குருவை கண்டதும்,
“இவனா? வாடி போலாம்” என்றாள் தேவி.
“அவனுக்கு தான் பல்பு கொடுத்திட்டியே, பாவம் அந்த கஷ்டத்தில நம்மளை கண்டா பையன் கொஞ்சம் அதிகமா பேசுறான். நீ கண்டுக்காத, நான் பார்த்துக்கிறேன்” என்றாள் ஸ்ரீ.
குருபரன், அவர்கள் ஊரில் கொஞ்சம் பிரசித்தி பெற்றவன். அவன் அம்மா ஆரணி அரசு மருத்துவமனையில் செவிலியர். இவர்கள் ஊரில் யாருக்கு, எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வார். அவரை பார்த்து வளர்ந்ததில், குருவும் அப்படியே. இவர்களை விட இரண்டு வயது பெரியவன்.
தேவி இந்த ஊருக்கு வந்த புதிதுலே அவளுக்கு காதல் சொல்லிவிட்டான் குரு. பதினொன்றாம் வகுப்பில் இருந்தவளுக்கு அவன் காதல் சொன்னது ஒன்றும் அதிர்ச்சி அல்ல. அவன் சொன்ன விதம் தான். அது இன்றும் அவள் நினைவில் இருக்கிறது. பள்ளி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி இருந்தது. ஸ்ரீயும் அவளும் அப்போதே நெருங்கிய தோழிகள் ஆகி விட்டனர்.
சனிக்கிழமை ஸ்ரீதேவி சனி பகவானுக்கு விளக்குப்போட வேண்டும் என்பது அவள் தாத்தாவின் கட்டளை. அதனால் உள்ளூர் கோயிலில் வாரா வாரம் போடுவாள். கடந்த நாலு வாரங்களாக அவள் கூட தேவியும். இருவரும் வளவளத்தப்படி விளக்கு போட்டு விட்டு, சாமியையும் கும்பிட்டு விட்டு, அந்த சின்ன பிராகாரத்தில் அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்த, இரண்டு நிமிடத்தில் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் குரு. ஸ்ரீக்கு அவனை நன்றாக தெரியும். அதனால்,
“என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள்.
“உன்கிட்ட ஒன்னும் பேச வரலை….நீ கொஞ்சம் அமைதியா வேடிக்கை மட்டும் பாரு” என்றவன்,
“ஹேய் பூரணி” என்றான்.
அவளை இன்று வரை யாருமே அப்படி அழைத்தது இல்லை. எதுவும் பேசாமல் அவனை குறுகுறுவென்று பார்த்தாள் தேவி. அவளிடம் எந்த பேச்சையும் எதிர்பார்க்காதவன், அவன் மனதில் இருந்ததை மடை திறந்த போல் கூற ஆரம்பித்தான்.
“இந்த குணா கமல், பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்கனு பாடும் போது, உடான்ஸ் விடுறாங்க, இந்த மாதிரி எல்லாம் எவனுக்கு டா லவ் வரும்னு நினைப்பேன், ஆனா உன்னை முதல் தடவை உங்க அப்பாவோட வண்டியில் பார்த்த அப்போ, சில வினாடி பார்த்த உன் முகத்தை மறக்கவே முடியலை. சரி, பொண்ணு ரொம்ப அழகா இருக்கு, அதான் பீல் ஆய்ட்டேன் போல, சரி ஆய்டுவேன்னு நினைச்சேன்…. ஆனா மறுபடி உன்னை உன் ஸ்கூல் வாசல்ல, அவ்ளோ கூட்டத்திலும் எந்த குழப்பமும் இல்லாம என் கண்ணு மனசும் உன்னை சட்டுனு கண்டுபிடிச்ச அப்போ கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்…. சரி வயசு கோளாறுனு அப்போவும் விட்டேன்…. ஆனா மூணாவது தடவை ஆரணியில் ஹாஸ்பிடல் வாசல்ல பார்த்த அப்போ, உனக்கு ஏதுமோனு பதறி, என்னோட முக்கியமான வேலையை விட்டுட்டு உன் பின்னாடியே வந்து நீ நல்லா தான் இருக்கேனு தெரியுற வரை எனக்கு இருந்த பதட்டம் எனக்கு தான் தெரியும். அதுக்கு அப்பறம் தான் எனக்கு நீதான், நீ மட்டும் தான்னு முடிவு பண்ணிட்டேன். சரி சொல்றதை கோயில்ல வைச்சு சொல்வோமேனு வந்துட்டேன்.” என்றான்.
அவன் ஏற்ற இறக்கமாக, கொஞ்சம் அவனையே கேலி போல் பேசி, கடைசியில் உணர்வுப்பூரமாக காதல் சொல்லியதை கேட்டு, ஸ்ரீதேவியே கொஞ்சம் பொறாமைப்பட்டாள்.
ஆனால், தேவி அமைதியாக, “சரி நீங்க பீல் ஆனீங்க, அதனால் என்கிட்ட வந்து சொன்னீங்க. நான் பீல் ஆனா சொல்றேன்” என்று கூலாக கூறி முடித்து விட்டாள்.
அதை தவறாகவே எடுத்துக் கொள்ளவில்லை குரு. “இது கூட எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. ஒன்னும் அவசரம் இல்லை. இப்போ கூட நான் ஏன் வந்து சொன்னேன் தெரியுமா, உனக்கு என்னை யார்னு தெரியாம இருக்க கூடாதுனு தான்” என்றபடி கிளம்பி விட்டான்.
அவன் அகன்றதும்,
“என்கிட்ட மட்டும் சொல்லி இருந்தான், நான் உடனே ஓகே சொல்லி இருப்பேன்…. ஏண்டி உனக்கு பிடிக்கலையா? ஆளும் நல்லா தான் இருக்கான். எவ்ளோ அழகா பேசிட்டு போறான்….” துடித்தாள் ஸ்ரீ.
“ஹேய் லூசு, நாம இப்போ தான் ஸ்கூல் படிக்கிறோம். இன்னும் படிச்சு, வேலைக்கு போய் பல பேரை பார்க்கும் போது நிறைய இந்த மாதிரி மனசு சலனப்படும். கொஞ்சம் நிதானமும் பொறுமையும் வேணும்டி, உண்மையான லவ்னா அது தானா நமக்கு புரியும். இப்போதைக்கு எனக்கு லவ் பண்ற ஐடியா எதுவுமில்லை.”
“கரெக்ட் தான்! இப்படி ஒரு அறிவாளி பிரண்ட் எனக்கு எப்படி டி?” ஸ்ரீ சிரிக்க,
“அதான்டி எனக்கும் புரியலை, நீ எப்படி டி எனக்கு பிரண்ட் ஆனே? மக்கு பிள்ளை அவள் என்பது போல் தேவி சிரிக்க, குரு சொன்னதை கேலி செய்வது போல்,
“எனக்கு நீ தான், உனக்கு நான் மட்டும் தான்!” என்று சொல்ல, இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
“என்ன தான் இருக்குமோ இப்படி கோயில்ல கூட பேசி கெக்கபிக்கேனு சிரிக்க?” அங்கிருந்த ஒரு வயதானவர் எரிச்சல் பட, இரண்டு பேரும் எஸ்கேப் ஆனார்கள் அங்கிருந்து.
அதன் பின் அவ்வப்போது ஊரில் பார்த்துக் கொள்வார்கள், அவன் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் யாரும் பொது வெளியில் அவனை வைத்து இவளை பேச மாட்டார்கள். மற்றபடி கிண்டல், கேலி எல்லாம் இருக்கும். தேவி, அடுத்த ஆறு மாதத்தில் துபாயில் வேலை கிடைத்து அங்கே சென்றான் குரு. செல்லும் முன் அவளை பார்க்க வந்திருந்தான்.
“எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லு!”
“எதுக்கு?”
“நான் தைரியமா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறோன்ல, அதுக்கு…”
“நான் இன்னும் ஓகே சொல்லலையே….”
“அதெல்லாம் சொல்லுவே, சொல்லாம எங்க போயிட போறே?”
“ஏமாற போறீங்க!”
“நீ ஸ்கூலை முடி, அப்பறம் பாரு என் லவ்சை!”
“ஓ, அப்படி, அப்போ கண்டிப்பா ஆல் தி பெஸ்ட் சொல்லணும் தான்” என்றவள், அழுத்தமாக “ஆல்
தி வெரி பெஸ்ட்” என்றாள்.
“நான் ரெண்டு வருஷம் வேலைக்காக துபாய் கிளம்புறேன், நல்லா படி, பை, உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றபடி கிளம்பினான்.
ஆனால் இரண்டு வருடம் என்றது நான்கு வருடமாக நீண்டது. அவன் வரும் போது தேவி கல்லூரி முடிக்க மூன்று மாதம் மட்டுமே இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தவனுக்கு நண்பர்கள் சொன்ன செய்தியில் சித்தம் கலங்காமல் இருந்தது ஆச்சரியம் தான். ஒரு வேளை அவன் அம்மா செய்த புண்ணியமாக கூட இருக்கலாம்.
அந்த செய்தி, தேவியும், அவள் அத்தை மகன் சந்தோஷும் காதலர்கள் என்பது தான். அவ்வப்போது அந்த உண்மையை ஸ்ரீயால் கூட நம்ப முடியாது. நீ எப்படிடி அவன் லவ்க்கு ஒத்துக்கிட்டே என்று புலம்புவாள்!
அந்த கேள்விக்கு தேவியாலும் தெளிவாக பதில் சொல்ல முடியாது. அவளையும் மீறி நடந்த விஷயம் அது!
Ennadhu adhukkulla ippdiyaaaa