💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 03
இரவு வானம் இருள் பூசிக் கொண்டிருக்க, பல்கோணியில் நின்று அதனை நோக்கினான் சத்யா.
வானின் நிலவு அவன் மனதை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லத் துவங்க, விழிகளோ அலைபேசியினுள் புகுந்தன.
அவனது மனதுக்கு அமைதி தருவது அந்த அலைபேசி தான். அதனுள் டவுன்லோட் செய்திருக்கும் ‘பிரதிலிபி’ தளத்தில் இருக்கும் கவிதைகளைப் படிப்பான்.
ஏனோ சிறு வயதில் இருந்து கவிதைகள் என்றால் அவனுக்கு அத்தனை பிரியம். இந்த வெறுமையான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்து போவது, கவிதை படிக்கும் நேரத்தில் மட்டுமே.
அதனைப் படிக்க நினைக்கும் போது, “டாடி” என்ற அழைப்போடு மடியில் வந்தமர்ந்தான் யுகன்.
“சொல்லு யுகி கண்ணா” அலைபேசியை தூர வைத்து விட்டு, அவனில் தன் முழுக் கவனத்தையும் குவிக்க, “நாம திரும்பி யூ.எஸ் போயிடலாமா? எனக்கு இங்கே இருக்க ஒரு மாதிரி இருக்கு” என்றவன் முகத்தில் ஒருவித பிடித்தமின்மை.
“பாட்டி, சித்தப்பா எல்லோரும் உன்னை நல்லா தானே பார்த்துக்கிறாங்க. இன்னும் டூ டேய்ஸ் போகட்டுமே” அவனது மனம் ஏனோ தாயின் அருகாமைக்கு ஏங்கியது.
“பாட்டியையும் நம்ம கூட கூட்டி போறியானு ரூபி கேட்டதுக்கு சித்தா கோவிச்சுக்கிட்டார் டாடி” கவலையோடு சொன்னான் சின்னவன்.
“நீ என்னை விட்டு இருப்பியா யுகி?” என்று கேட்டதும் இல்லையென தலையசைத்த மகனை நோக்கி, “அதே மாதிரி தான் தேவாவும். அவனுக்கு பாட்டினா உயிர். என்னை விட ரூபனை விட அவங்க கூட அவனுக்கு பாசம் அதிகம்.
சின்ன வயசுல நான் வீசுன க்ரிக்கெட் பேட் தெரியாத்தனமா அம்மா மேல பட்டுருச்சு. அதுக்கு தேவ் கோபப்பட்டு என்னை அடிக்க வந்துட்டான் தெரியுமா? தெரியாம கூட அம்மாவுக்கு எதுவும் நடக்கக் கூடாதுனு அவன் நினைக்கிறான்” தேவனின் நினைவில் அவனிதழ்களில் கசந்த முறுவல்.
“ஆனால் அவர் உங்க கூட இப்போவும் பேச மாட்டேங்கிறார். எனக்கு அதனால கஷ்டமா இருக்கு டாடி. அதனால தான் வீட்டுக்கு போகலாம்னு சொல்லுறேன். நீங்க கவலைப்பட்டா எனக்கும் கவலை வரும்ல?” தந்தையை அணைத்துக் கொள்ள,
“அப்படிலாம் இல்ல கண்ணா! தேவ்வால எனக்கு கஷ்டம் வராது. நீ இந்த மாதிரி அவன் கிட்ட பேசாத சரியா? உனக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்காக மத்தவங்களை ஹர்ட் பண்ணக் கூடாது புரிஞ்சுதா?” அவனது தலையைத் தடவிக் கொடுத்தான் சத்யா.
“புரிஞ்சுது. நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்” அவனது மடியில் சாய்ந்து கொண்டவனது தலையை வருடிக் கொடுக்க, சிறிது நேரத்தில் உறக்கத்தைத் தழுவினான் யுகன்.
அவனைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி போர்த்தி விட்டு அவனருகில் அமர்ந்தவன் சற்று நேரம் கவிதை படித்து விட்டுத் தூங்கிப் போனான்.
மறுபுறம் அவனது தம்பிகளோ ஒருவரை ஒருவர் முறைத்தவாறு நின்றிருந்தனர்.
“வேணாம் டா. இந்த விஷயத்தில் நீ தலையிடாத” என்று தேவன் முறைக்க, “உனக்கும் அண்ணனுக்குமான பிரச்சினை உங்களுக்குள்ள இருந்தா நான் தலையிட மாட்டேன். ஆனால் அம்மாவைப் பாதிக்கும் போது நான் கண்டிப்பா கேட்பேன்” அழுத்தமாக மொழிந்தான் ரூபன்.
“அம்மாவை நான் எதுவும் பண்ணல. அவரால தான் அவங்க இந்த நிலைமையில் இருக்காங்க”
“அந்த நிலமைக்கு அவர் காரணம்னா, இன்னிக்கு அவங்க விட்ட கண்ணீருக்கு நீயும் காரணமாகிட்ட தேவா. அம்மா மேல பாசமா இருக்கேனு பார்த்தா நீ அவங்களை அழ வைக்கிற.
சத்யாண்ணாவும் அம்மாவோட பிள்ளை. அவரை நீ காயப்படுத்துறதை அவங்க ஏத்துப்பாங்களா? ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்கிற?” ரூபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
தேவன் சற்று நிலை குலைந்து நின்றான். தன் அதீத கோபத்தால் தாயின் கண்ணீருக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என வருந்தினான்.
“இதோ பார் தேவா! அண்ணன் வாழ்க்கையை நெனச்சு அம்மா கவலைப்பட்டு ஒழுங்காம சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிறாங்க. அதனால நீ கோபமா இருக்கே. ஆனால் அவர் நிலமையை யோசி. அவரோட வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களைக் கடந்து எப்படி இன்னொரு வாழ்க்கையை உடனே ஏத்துக்க முடியும்?”
“உடனே இல்ல டா. ரெண்டு வருஷமாச்சு. அது கூட போதாதுன்னா என்ன செய்றது? என் அம்மாவை இழந்துடுவேனோனு பயமா இருக்கு” தேவன் மீண்டும் அதனையே கூற,
“ரெண்டு வருஷம் போதுமா ஒரு வாழ்க்கையை மறக்க? உனக்கு எங்கே தெரியப் போகுது இந்த பிரிவோட வலி?” கோபத்தில் கத்தி விட்டான் ரூபன்.
“பிரிவோட வலி எனக்கு தெரியாதா?” வலியோடு கேட்டவனின் மனதில் ஒரு பெண்ணின் வதனம் மின்னி மறைந்தது.
“தே..தேவா” அக்குரலில் தெரிந்த வேதனை இவனைத் தாக்க, அவனது தோளில் கை வைத்தான்.
“உனக்கும் அண்ணன் அண்ணன்னு அவர் தான் முக்கியம்ல? என்னைப் பற்றி யாரும் யோசிக்க வேணாம்” அவனது கையைத் தட்டி விட்டான்.
“உன்னைப் பற்றி தான் நாங்க எல்லாருமே யோசிக்கிறோம். நீ, நான், அம்மா, சத்யா, யுகி நாங்க அஞ்சு பேரும் ஒன்னு. ஒருத்தர் இல்லனா கூட நம்ம உறவு பூரணமடையாது டா” அவனை வலுக்கட்டாயமாக அணைத்துக் கொண்டான் ரூபன்.
அந்தக் குடும்பத்தில் உறவுகளை இணைக்கும் பாலமாக இருப்பவன் ரூபன். அனைவருடன் சுமுகமாக உரையாடுவான். யாவரும் ஐக்கியமாக இருப்பது அவனது ஆசை.
அடுத்த நாள் அவன் செய்த காரியத்தில், சத்யாவின் கோபத்தீக்கு இரையாகினான் ரூபன்.
……………..
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ஜனனி. அத்தனை களைப்பு அவளுக்கு.
ஒருவன் அவளது பின்னால் வந்து, “நம்பர் கொடுக்க முடியுமா?” என்று கேட்க, ஒன்றும் பேசாமல் நடந்தாள்.
அவன் விடாமல் தொடர்ந்து வரவே, நடையின் வேகத்தைத் துரிதப்படுத்தியவள், மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை.
அவளை மிகவும் நெருங்கி வந்து, “ஜானு” என கையைப் பிடிக்க வர, கையை வீசி விட்டாள் ஒரு அறை.
“ஜானு கீனுன்னே அடுத்த கன்னமும் பழுத்துரும். என் பாட்டுல தானே போறேன். உனக்கு என்னடா வந்துச்சு? ரோட்டுல ஒரு பொண்ணு போறதப் பார்த்தா நாக்க தொங்க போட்டுட்டு வந்துருவியோ? கொன்றுவேன் ராஸ்கல்” விரல் நீட்டி எச்சரித்து விட்டுச் சென்றாள்.
வீட்டினுள் வந்தவளுக்கு கோபம் தீரவில்லை. என்ன ஜென்மங்கள்? வீதியில் ஒரு பெண்ணைக் கண்டால் நெருங்கி வந்து உரசும் கூட்டமும் இந்த சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறது இல்லையா? பெண்கள் தைரியமாக இருந்தால் போதும் என்பது ஜனனியின் எண்ணம்.
“ஜானு! அப்பா கூப்பிடறார்” ஜெயந்தி அவளிடம் சொல்ல, “என்னப்பா?” அவரை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
“நீ இனிமே வேலைக்கு போக வேண்டாம்”
“என்னால முடியாதுப்பா. நான் போகனும்” ஒற்றை வரியில் பதிலளித்தாள் மகள்.
“என் மரியாதையை இல்லாம பண்ணனும்னே முடிவு பண்ணிட்டல்ல?” கோபத்தில் சிவந்த விழிகளை அவள் மீது நிலைநாட்ட,
“இன்னிக்கு நடந்த விஷயத்துக்கு மரியாதையை இழக்க வேண்டியது அந்த அயோக்கியன் தானே தவிர, நான் இல்ல. கையைப் பிடிக்க வந்தவனுக்கு கன்னத்தில் ஒன்னு கொடுத்துட்டு வந்துட்டேன். இதை உங்க எடுபிடிங்க சொன்னாங்கனு நான் வேலையை விட முடியாது” என்றவளை மற்ற இரு சகோதரிகளும் ஆச்சரியமாகத் தான் பார்த்தனர்.
“அப்பா கிட்ட இப்படியா பேசுவ ஜானு?” கணவன் கோபத்தில் மகளை எதுவும் சொல்லி விடுவாரோ என்ற அச்சம் ஜெயந்திக்கு.
“நான் தப்பா எதுவும் பேசலமா. உண்மையை சொல்லுறேன். என் உரிமையை கேட்கிறேன். அடுத்தவன் பண்ணுற தப்புக்கு நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்?
இன்னிக்கு இப்படித் தான். ஸ்கூல்ல ஒரு பையன் பின்னால வந்தா அப்பாமார் பயந்து போய் பொண்ணுங்களை ஸ்கூல் விட்டு நிறுத்திடுறாங்க. அது மட்டுமில்லாமல் அவளை சின்ன வயசுல கல்யாணமும் பண்ணி வெச்சிடுறாங்க.
கடைசியில் எதுவுமே பண்ணாத அந்தப் பொண்ணுங்க தன்னோட ஸ்கூல் லைஃப், படிப்பு, எதிர்காலம், இலட்சியம்னு அத்தனையையும் இழந்து எவ்ளோ ஏக்கங்களை உள்ளுக்குள்ள சுமந்து வெளியில் சிரிச்சுட்டு வாழுறாங்க தெரியுமா?” ஜனனிக்கு மனம் ஆறவில்லை.
“எனக்கு அடுத்தவன் வாழ்க்கை வரலாறு அவசியமில்ல. உன்னைப் பற்றிக் கேட்கிறேன். இப்போவாவது என் பேச்சைக் கேட்பியானு பார்க்கிறேன்” என்றவாறு சென்று விட்டார் மாரிமுத்து.
கவலையாக இருந்த தாயிடம் சென்று, “ஃபீல் பண்ணாதம்மா. அவரை நான் பார்த்துக்கிறேன். நீ கூலா இரு” என கன்னம் கிள்ளி விட்டுச் சென்றாள்.
“வெல்கம் மை டியர் ஃபயர் சிஸ்டர்” மகிஷா இடை வரை குனிந்து அவளை வரவேற்க, “சும்மா இரு டி. நானே செம்ம டயர்ட்ல வர்றேன். ரோட்டுல அவன், வீட்டுல அப்பானு பாடாப்படுத்துறாங்க. இப்படி உட்கார்” என்றிட மகி கட்டிலில் அமர்ந்தாள்.
“ட்ரெஸ் சேன்ஜ் பண்ணலனு திட்டலயா இன்னிக்கு?” நந்திதா கேட்க, “இன்னிக்கு ஒரு நாள் அவிஞ்ச முட்டையா இருக்கட்டும். ரொம்ப அப்செட்டா இருக்காள்ல” என்றவாறு தன் மடியில் தலை சாய்த்த ஜனனியின் தலையை வருடினாள் மகி.
“நாம இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப் போறோம்?” கவலையோடு கேட்டாள் நந்திதா.
“ஏன்க்கா அப்படி சொல்லுற? நான் எங்கேயும் போக மாட்டேன். வீட்டுல தான்” என்று விட்டாள் ஜனனி.
“வீட்டோட மாப்பிள்ளையா இருப்பாரா உன் ஆளு? அவங்கம்மாவை விட்டு வந்தா தான் ஆச்சரியம்” என மஹி கூற, “ப்ச்! அதைப் பற்றிப் பேசாத” அவள் முகம் வாடிப் போனது.
“காதல்னு சொல்லுற. ஆனால் அதைப் பற்றி பேச விட மாட்ற. என்ன தான் நடக்குது உங்களுக்குள்ள? நெஜமாவே காதலிக்கிறீங்கள்ல?” நந்திதா கேட்டதும்,
“நான் அவனை லவ் பண்ணுறேன்கா. ராஜ்னா எனக்கு உசுரு” தன்னவன் நினைவில் மூழ்கினாள் மங்கை.
“அப்பறம் என்ன? அவன் உன்னை லவ் பண்ணலயா?” மகிஷா மறு கேள்வி கேட்க, “அவனும் என்னை லவ் பண்ணுறான் மகி. ஆனால்..” என்று இழுக்க, “லவ் பண்ணுறீங்கனா உறுதியா லவ் பண்ணுங்க. ஆனா ஆவன்னாங்கிற பேச்சு வரக் கூடாது” என்றாள் இளையவள்.
“நீ என்னடி காதல் அகராதியை கரைச்சுக் குடிச்ச மாதிரி பேசுற. நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்ன?” ஆராய்ச்சியாக அவளை நோக்கினாள் ஜனனி.
“நான் லவ் பண்ணுறதா இருந்தா இந்த ஊரு பையனை தான் பண்ணனும். அப்படியே பண்ணி இருந்தா அடுத்த நிமிஷம் மாரிமுத்து சார் மீசையை முறுக்கிட்டு என் கையை முறிச்சுப் போட மாட்டாரு? நீங்க வேறக்கா” என அலுத்துக் கொண்டவள், “ஆனால் எனக்குனு வர்றவன் செமயா இருக்கனும்கா. கலகலன்னு பேசனும். ஜாலி டைப்பா இருக்கனும்னு நிறைய ஆசை இருக்கு” என்றாள், கண்களில் கனவு மின்ன.
“கண்டிப்பா. உனக்கு வெளியூர் மாப்பிள்ளை கிடைப்பான்னு தோணுது. பார்த்துட்டே இரு. உனக்கானவன் சீக்கிரமே வருவான்” என்ற ஜனனியின் மனதில் அவளவன் நினைவுகள்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
2024-12-07