விஷ்வ மித்ரன்
💙 நட்பு 39
“பளார்” என்ற சத்தத்தோடு தன் கன்னம் பழுக்கும் என்று நூறு சதவீதம் எதிர்பார்த்தாள் வைஷ்ணவி.
அத்தனை ஆவேசத்துடன் கோபக்கனல் வீசிற்று மித்ரனின் முகத்தில்.
ஆனால் சத்தம் ஏதும் கேட்காமல் இருக்கவே கன்னத்தைப் பொத்திய கையை அகற்றி கண்களைத் திறந்து பார்த்தாள் அவள்.
வலக்கையைப் பொத்தி இடது உள்ளங்களையில் குத்தி தன் கோபத்தை அடக்க முயன்று கொண்டிருந்தான் அண்ணன்.
ஆம்! கை ஓங்கினானே தவிர அறைய மனம் வரவில்லை.
சப்பென அறையக் கூறியது நண்பன் மீதான நேசம்.
அறைய விடாமல் தடுத்தது தங்கை மீதான பாசம்.
“எதுக்குண்ணா நிறுத்தினீங்க? அடிங்க எவ்ளோ வேணா அடிங்க. அவனுக்காக என்னையே அறையப் பார்த்தீங்கள்ள?” மீண்டும் ஆக்ரோஷமாகக் கேட்டாள் வைஷ்ணவி.
“ஆமா அறையத் தான் பார்த்தேன். தங்கச்சியா நண்பனானு வந்தால் அவன் தான் என்னிக்கும் முக்கியம். ஆனால் தப்பா சரியானு வந்தா நியாயத்தின் பக்கம் தான் நிற்பேன்”
“அப்படினா அவன் எந்த தப்பும் பண்ணலைனு சொல்லுறீங்களா?”
“எஸ்! நீ தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே பாப்பா”
“விஷயம் என்னனு கூட கேட்காமல் எப்படி என்னைத் தப்புனு சொல்லலாம்?” வெடுக்கென்று பிறந்தது வினா.
“விஷு எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு சொன்ன. அது முழுக்க முழுக்க தப்பு தானே? அவன் என் மாப்ள! எனக்கு போய் துரோகம் செய்வானா?” என்று கேட்டவன், “நீ சொல்லுற மாதிரி என்ன துரோகம் செய்தான்?” என விசாரித்தான்.
“அ…அவன் ஆரா..” என ஆரம்பித்தவளுக்கு இதற்கு மேலும் மறைக்கத் தோன்றாது அனைத்தையும் ஒப்புவித்தாள்.
அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிற்கலானான் மித்ரன். அந்த முகமறியா ஆராவின் மீது கோபம் பொங்கியெழுந்தது அவனுக்கு.
“ஏன் பேசாம இருக்கீங்க? உங்க ப்ரெண்டு ஆராவை லவ் பண்ணி இருக்கான். அதை உங்க கிட்டிருந்து மறைச்சு இருக்கான். நான் கேட்டா ஹனியைத் தான் எப்போவும் லவ் பண்ணுறேனு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் சவடாலா சொல்லுறான். இது எல்லாம் எவ்ளோ பெரிய தப்பு? இப்போவும் தப்பானவனுக்காக தப்பு பண்ணலனு வாதாடப் போறீங்களா? அவன் ஒரு ஃப்ராடு” என்று சொன்னதும்,
“ஜஸ்ட் ஸ்டாப் இட்” என சத்தமிட்டான் ஆடவன்.
அவனது கத்தலில் ஒரு நொடி பயந்து தான் போனாள் வைஷு. ஏதோ பேச வந்தவளை, “ஷ்ஷ்! பேசாத” என வாயில் விரல் வைத்துத் தடுத்தவன் பேசத் துவங்கினான்.
“அறிவு கெட்ட முட்டாள்! யார் சொன்னாலும் நம்பிடுவியா? ஆராவாம் ஆரா. அதை விடு. ஒருத்தர் பேச்சைக் கேட்டு சட்டுனு மாறும் அளவுக்கா உனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு?
எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் அவனைக் கல்யாணம் பண்ணியா? அவன் மேல உனக்கு அன்பு இல்லை அப்படி தானே? அவனை மனசார விரும்பித் தான் சம்மதம் சொன்னனு நெனச்சேன். சும்மா பொழுது போக்குக்காக ஓகே சொன்னியா?” கடுமையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“அண்ணா! எனக்கு விஷ்வா மேல பாசம் இல்லையா? அவன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்” நலிந்து போய் ஒலித்தது அவள் குரல்.
“வாய் வார்த்தையில் மட்டும் தான் வைஷு பிடித்தம். உனக்கு அவன் மேல அவ்ளோ பாசம் இருந்தால் இப்படி யாரோ ஒருத்தி சொன்னதைக் கேட்டு எல்லாம் உடனே சந்தேகப்பட்டு இருக்க மாட்ட”
ஏற்கனவே விஷ்வாவின் விடயத்தில் உடைந்து போயிருந்த மனம் அண்ணனின் கோபத்தில் மேலும் சிதைந்து போக, விழியோரம் முணுக்கென எட்டிப் பார்த்தது கண்ணீர்.
“சந்தேகம் இல்லைணா. ஆரா சொன்னது எல்லாம் உண்மையா இருந்துச்சே” தொண்டைக்குழி அடைக்கக் கூறினாள் காரிகை.
“ஓஓ! யாருன்னே தெரியாத ஆரா சொன்னதை நம்புற. உன் அண்ணன் மேல் நம்பிக்கை இல்லையா? ஆரா சொன்னது உண்மை. நான் சொல்லுறது பொய்யா?” என்றதும் பேச முடியாது திகைத்தாள் பெண்.
“பாப்பா! விஷ்வாவை சைட் அடிக்கிற பொண்ணுங்களை கூட எனக்குத் தெரியும். அவனை ஒரு பொண்ணு சைட் அடிச்சாலும் என் கிட்ட வந்து உடனே சொல்லிடுவான். அந்த சின்ன விஷயத்தையே சொல்லுறவன் ஒரு பொண்ணைக் காதலிச்சா அதை மறைப்பானா?
அவன் என் கிட்ட எதையும் மறைச்சதில்லை. ஆரானு ஒரு பொண்ணு அவன் லைஃப்ல வந்ததே இல்லை. அவனை விட அவன் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்னும் எனக்குத் தெரியும். நான் அடிச்சு சொல்லுவேன். விஷு எந்தப் பொண்ணையும் காதலிச்சது இல்லைனு எந்த பயமும் இல்லாமல் உன் தலை மேல சத்தியம் பண்ணவும் என்னால் முடியும்” அத்தனை தீர்க்கமாக கூறியவனின் பேச்சில் தன் மீது குற்றம் இருப்பதாய் உணர்ந்தாள் தங்கை.
“உங்க பேச்சை நான் நம்புவேன் சத்தியம் எல்லாம் பண்ணத் தேவையில்லை. ஆரா சொன்னதைக் கேட்டு முட்டாள் மாதிரி நடந்துக்கிட்டேன். எல்லா தப்பும் என் மேல தான்” என்றவள், “வி..விஷு என்னை டிவோஸ் பண்ணிட்டு அவளை கட்டிக்க போறதா சொன்னாள்” எனும் போதே கைகள் நடுங்கின.
“வைஷுமா காம் டவுன். ஆனாலும் எனக்கு உன் மேல அவ்ளோ கோபம் வருது.
ஒரு பொண்ணை லவ் பண்ணி இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணுவான். அப்பறம் அந்த பெண்ணை டிவோஸ் பண்ணி வாழ்க்கையைக் கெடுத்துட்டு காதலிச்ச பொண்ணு கூட ஓடி போவான். ச்சே! என் விஷுவை இவ்ளோ கேவலமா நெனச்சுட்டியே” பிடரியை அழுத்தமாகக் கோதிக் கொண்டான் அருள் மித்ரன்.
“எனக்கே என்னை நினைச்சா அருவறுப்பா இருக்குண்ணா. என் விஷுவைப் போய் எப்படி இப்படி நெனச்சேன்” நெற்றியில் அடித்துக் கொண்டாள் அவள்.
“ஆரா நம்பர் ஹனினு சேவ் பண்ணிருக்கு அதிலும் விஷு வேற ஹனியை லவ் பண்ணுறேன்று சொன்னதால இன்னும் நம்பிட்டேன். ஆனால் இப்போ தான் புத்தில உறைக்குது. அப்படி ஆராவையே ஹனினு சேவ் பண்ணி இருந்தாலும் அது ப்ரெண்ட்ஷிப்காக கூட இருக்கலாமே” தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டாள்.
அவள் கவலையிலும், குற்ற உணர்விலும் தவிப்பது புரிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் மித்து. அந்த முகமறியா ஆரா ஏன் இப்படிச் செய்தாள் என்று தெரியவில்லை.
“என்னை மன்னிப்பீங்களா அண்ணா?” அண்ணனின் கையைப் பற்றிக் கொண்டு கேட்டாள் வைஷு.
“என் கிட்ட எதுக்கு சாரி கேட்குற? நான் சொல்ல எதுவும் இல்லை. இப்போ உன் புருஷனா விஷு இருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் சொல்லுறது ஒன்னு தான். உறவுகளுக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அது தான் உறவுகளின் அச்சாணி. அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது இல்லையா வைஷு. நம்பிக்கை உடைஞ்சு போச்சுனா அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்.
விஷ்வாவும் நீயும் கணவன் மனைவி. இதற்குள் நான் என்னிக்கும் வர முடியாது;வரவும் கூடாது. இதைப் பற்றி நீ அவன் கிட்ட என்ன பேசுவியோ அது உன் இஷ்டம். கண்டிப்பா நான் எதையும் அவன் கிட்ட வாய் திறக்க மாட்டேன்.
நீயே ஒரு நல்ல முடிவு எடு. அந்த ஹனி தான் உன் ப்ராப்ளம்னா கொஞ்சம் ஆழமா யோசி. அவன் உன்னை வெறுப்பேத்த கூட சும்மா இல்லாத ஒரு பெயரை சொல்லி இருக்கலாம்”
விஷ்வா கூறிய ஹனி வைஷ்ணவி என்பதை அறிந்தாலும் அதை சொல்லவில்லை அவன். அவளாகவே விஷு வாயால் அறிந்து கொள்ளட்டும் என எண்ணிக் கொண்டான்.
“எனக்கு மனசு ஒரு மாதிரி இருக்குணா. எதை பத்தியும் நினைக்காமல் விஷுவை நா..நான் தப்பா நினைச்சுட்டேனே. அந்தளவுக்கு அறிவை அடகு வெச்சுட்டேனா? ரொம்ப கில்டியா ஃபீல் ஆகுது” வேதனை நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.
“பெருசா அலட்டிக்காத பாப்பா. எல்லாம் ஒரு காரணமாத் தான் நடக்கும். இப்படி நீ நெனச்சது இனிமேல் யாரையும் தீர விசாரிக்காமல் தப்பா நினைக்காமல் இருப்பதற்கு ஒரு பாடமாக இருக்கும். எந்த பிரச்சினை வந்தாலும் ஒருத்தர் சொன்னதைக் கேட்டோ, கண்ணால் பார்த்ததை வெச்சோ முடிவு செய்யக் கூடாது. நல்லா ஆராய்ந்து அது தப்பா இல்லையானு தெரிஞ்சுக்கனும்” அவளது தலையை வருடி விட்டுச் சென்றான் மித்ரன்.
அண்ணன் சென்றதும் கண்களை மூடிச் சாய்ந்தாள் வைஷு. உண்மை தானே? அளவில்லாத காதலை வைத்த விஷ்வாவை விட, ஏன் ஆராவை நம்பினோம் என்றிருந்தது.
“சாரி விஷு! உங்களைப் போய் துரோகம் அது இதுன்னு ரொம்ப தப்பா பேசிட்டேன். நீங்க எனக்கானவர்னு தெரிஞ்சும் சந்தோஷப்பட முடியாம உங்களை தப்பா நெனச்ச நினைப்பு கொன்னுக்கிட்டு இருக்கு” முழங்கால்களைக் கட்டிக் கொண்டு முனகினாள் பாவையவள்.
……………….
மாலைப் பொழுதில் ரோஹன் இல்லாத தனிமையைப் போக்க, பக்கத்து வீட்டுச் சிறுசுகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணி.
தானும் சிறு வயதில் மித்ரனுடன் ஓடியாடி மகிழ்வுடன் விளையாடியது நினைவுக்கு வர, முகத்தில் தானாக ஒட்டிக் கொண்டது புன்னகை. குற்றமறியா பிஞ்சு நெஞ்சத்துடன் வலம் வந்த அந்தக் காலம் இவளுக்கு மட்டுமல்ல யாவருக்கும் வாழ்வின் அழகிய பக்கமே!
காதோரம் கேட்ட, “பூ” எனும் பூவினும் மெல்லிய குரல் இதயத்தை மென்சாரலாய் வருடிக் கொடுக்க திரும்பியவள் முன் நின்றிருந்தான் ரோஹன்.
“என்னடா?” அவன் மார்பில் சாய்ந்து கொண்டவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் கணவன்.
“என்ன பண்ணுற பொண்டாட்டி” காதுமடலில் மீசை உரசக் கேட்டான்.
“குட்டிப் பசங்களை ரசிச்சுட்டு இருக்கேன் புருஷா”
“கொஞ்சம் காலம் தான். அப்புறம் நமக்குனு ஒரு குட்டிப் பொண்ணு வரப் போறா. பக்கத்தில் இருந்து ஒரு தாயாக அவளோட ஒவ்வொரு அசைவையும் ரசிக்கலாம்”
“ஆம்பளைங்க என்னிக்கு பையன் வேணும்னு கேட்கிறாங்க? எப்போவும் பொண்ணு தான். பொண்ணுனு முடிவே பண்ணிட்டியா?” செல்லக் கோபம் கொண்டாள் பூர்ணி.
“நோ எனக்கு பையன் தான்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான் ரோஹன்.
“இப்போது தான் பொண்ணு வருவானு சொன்ன. அதுக்குள்ள பையன்னு சொல்லுற. குழப்பாத ரோஹி” புரியாமல் நோக்கினாள் நங்கை.
“உடனே மண்டையை போட்டு பிச்சுக்காத. நான் சொல்லுறேன். நமக்கு முதல் குழந்தை பையன் தான். அடுத்தது…” என இழுத்தவனைக் கண்டு புருவம் இடுங்கியது மனைவிக்கு.
“அடுத்ததுன்னு ஒரு மார்க்கமா இழுக்குற. என்னவோ சந்தேகமா இருக்கே” யோசனையில் பூர்ணி.
“ஹி ஹி. அடுத்தது ஒரு பொண்ணு பெத்துக்கலாம்” என அவள் கழுத்தில் மூக்கை வைத்து உரசினான்.
“சரி தாராளமா பெத்துக்க” என்றவளுக்கு அதன் பின்பே பொறி தட்ட, “எதே? அடுத்தது பொண்ணா பெத்துக்கலாமா?” என்று காரசாரமாக முறைக்கத் துவங்கினாள்.
“ரைட்டு அப்போ உன் ஆசைப்படி அடுத்ததும் பையன் அதுக்கு அடுத்தது பொண்ணு ஓகேவா?” சில்மிஷமாகச் சிரித்தான் ரோஹன்.
“டேய் டேய் என்னமோ மார்கெட்ல விக்குற மாதிரி லிஸ்ட்டை நீட்டிட்டே போற. ரொம்ப இழுத்துட்டு போற இந்த வாயை டக்குனு கட் பண்ணிருவேன்” என வாயை வெட்டுவது போல் இரு விரல்களால் செய்கை செய்தாள் பூர்ணி.
சட்டென அவள் கையைப் பிடித்து விரலை வாயில் வைத்து மெலிதாகக் கடித்திட, “ஆவ்வ்” என சிணுங்கினாள் அவள்.
“உனக்கு பாவம் பார்த்து இடம் கொடுத்த மாதிரி இல்லை ஓவரா ரொமான்ஸ் மூடுக்கு போய்ட்ட”
“பக்கத்துல லட்டு மாதிரி பொண்டாட்டியை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?”
“சும்மா இருக்கனும். இல்லைனா அவ்ளோ தான். லட்டு வேணும்னா கடையில போய் வாங்கிக்க”
“அதுவும் இதுவும் ஒன்னா? இல்லையே. அது இனிப்பான லட்டு, இது அறுசுவைகளும் நிறைந்த லட்டு” என ரசனையுடன் சொல்ல,
“போடா நீ இன்னிக்கு சரி இல்லை” என அவனைத் தள்ளி விட்டு ஓடியவளை, “மெதுவாக. ஓடாதே பூ” என்று பின்தொடர்ந்து சென்றான்.
……………….
யோசனையுடன் இருந்த மித்துவைக் கண்டு அவன் அருகில் அமர்ந்தாள் அக்ஷரா. அவளைக் கண்டு மடியில் தலை வைத்தான் மித்ரன்.
அவனது மனம் ஏதோ ஒரு வகையில் தவிக்கின்றது எனப் புரிந்து கொண்டாலும் எதுவும் கேட்காமல் அமைதியாக அவன் தலை கோதி விட்டாள் அக்ஷு.
கண்களை மூடிக் கொண்ட மித்ரனால் வைஷு விஷ்வாவை தவறாக நினைத்த விடயத்தை இன்னும் கடந்து வர முடியவில்லை. அதிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவித்தான்.
சற்று நேரம் கழித்து தலை தூக்கி தன்னைப் பார்த்தவனைக் கண்டு, “ஆர் யூ ஓகே அருள்” மென்னகை பூத்தாள் பெண்ணவள்.
“எஸ் ஓகே” என்று சொன்னதும், தலையசைப்புடன் முடித்துக் கொண்டாள் அக்ஷரா.
“நான் டல்லா இருக்கேன்னு தெரிஞ்சு எனக்கு ஆறுதல் தந்தும் ஏன் காரணம் எதுவும் கேட்கல?”
“கேட்க தோணலை டா. சொல்லனும்னா நீயே சொல்லி இருப்ப. சொல்லலைனா அது எனக்கு தெரியுறது உனக்கு விருப்பம் இல்லைனு தெரியும். சோ கேட்கலை” சாதாரணமாகத் தோளைக் குலுக்கினாள்.
“தாங்க் யூ அம்முலு” தன்னவளின் முகம் பார்த்தவனை அவளின் புரிதல் நெகிழ வைத்தது.
“தாங்க் யூவாம் தாங்க் யூ. யாருக்கு வேணும் உன் தாங்க்ஸ்?” போலியாக முறுக்கிக் கொண்டாள் அவள்.
“ஓகே அதை வாபஸ் வாங்கிடுறேன். அதற்கு பதிலா இதை வெச்சுக்க” தலை தூக்கி எம்பி, அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான் மித்ரன்.
“இது நல்லா இருக்கே” முத்தமிட்ட இடத்தை வருடிக் கொண்டாள்.
“நல்லா இருக்கேனு வாயால் மட்டும் புகழக் கூடாது”
“அப்போ கையால் புகழவா?” என்று அவன் கன்னத்தில் வலிக்காமல் அடித்தாள் அக்ஷு.
“வேணாம். என்னை சுண்டி இழுக்கும் அந்த ரோஸ் உதட்டால் புகழ்ந்தா போதும்” என்றவன் பார்வை உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்திருக்கும் தன் இதயப் பெண்ணவளின் இதழ்களைச் சுற்றி ரீங்காரமிட்டது.
“ஓஹோ! அங்கே சுற்றி இங்கே சுற்றி இதில் தான் வந்து நிற்பாயே படவா” இம்முறை ஓங்கிய கையை பட்டெனக் கீழிறக்கி அவன் எதிராத சமயம் எச்சில் தெறிக்க முத்தம் வைத்தாள் அருளின் அழகு அம்முலு.
“வாவ் ஸ்வீட் கிஃப்ட்” என்றவன், “என் மனதை அரிக்கும் விஷயத்தை சொல்லனும்னு தான் தோணுது. ஆனாலும் ஒரு மாதிரி இருக்கு டி. உன் கிட்ட மறைக்குறேன்னு கோபப்படாத அம்முலு” என்றான் உட்சென்ற குரலில்.
“ஹேய் நீ இப்படிலாம் கில்டியா ஃபீல் பண்ணவே தேவையில்லை. உனக்குத் தெரிஞ்சால் அது எனக்கும் தெரிஞ்ச மாதிரி தான். அதனால் மறைக்கிறனு எதுவும் நினைக்க அவசியம் இல்லை” முறுவலுடன் அவனைப் பார்க்க, இன்னும் சோகமாவே நின்றிருந்தான் அவன்.
“இப்போ எதுக்கு டா உம்மணா மூஞ்சாட்டம் இருக்கே. காற்று போன பலூன் மாதிரி இருக்கு முகம்” கடுகடுத்தாள் கயல் விழி மங்கை.
“ஏன் அழகா இருக்கா? யாராவது இந்த முகத்தைக் கண்டு மயங்குவாங்களா?” புருவம் உயர்த்திக் கேட்டான் காளை.
“நிச்சயம் மயங்கிருவாங்க. மங்கி மாதிரி இருக்க முகத்தைக் காணச் சகிக்காமல் மயங்கியே விழுந்துருவாங்க” முகம் சுளித்தாள் அக்ஷரா.
“மங்கி இல்லை பிங்கி. எனக்கு காலேஜ் மேட் கவிதா ப்ரபோஸ் பண்ணும் போது லவ் யூ பிங்கி என்று தான் சொன்னாள்”
“டொங்கி மாதிரி இருக்குற உன்னை பிங்கினு சொன்னாளா? அவளுக்கு ரசனையே இல்லை. காதல் கத்திரிக்கா முத்திப் போய் அப்படி சொல்லி இருக்காள். இப்போ அவளுக்கு ரெண்டு பேபி இருக்கு.
அவ முன்னாடி போய் நான் தான் உன் பிங்கி என்று சொன்னா தலையை சொறிஞ்சுட்டு போடா சொங்கி அப்படினு ஏசிட்டு போவாள். உன்னை ஞாபகமே இருக்காது” கிண்டலாகச் சிரித்தாள் அக்ஷரா.
“அந்த சொங்கிக்காகவும் ஒருத்தி கவிதாவை வெளுத்து வாங்கி இருக்காளே உனக்கு தெரியுமா ராங்கி?” என அதை விட படு நக்கலாகக் கேட்டான் மித்ரன்.
அவன் தன்னைத் தான் சொல்கிறான் என்பது புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் அக்காதல் கள்ளி.
ஆம்! கவிதா மித்ரனுக்கு ப்ரபோஸ் செய்ததாக விஷ்வா வீட்டில் கதைத்ததில் பொங்கி எழுந்த அக்ஷரா மறு நாளே கவிதாவை வழி மறித்து கலாட்டா செய்து விட்டாள்.
“ஏய் நீ யாருடி அவனுக்கு ஐ லவ் யூ சொல்ல? அந்த வேர்டை அவனைப் பார்த்து சொல்லும் தகுதி எனக்கு மட்டும் தான் இருக்கு. ஹீ இஸ் மை மித்து! மை ஹார்ட்.
இனிமேல் அவன் கிட்ட ப்ரபோஸ் பண்ணுறேன்ற பேர்ல நெருங்கின உன் அப்பா கிட்ட சொல்லிருவேன். அப்பறம் உன்னால காலேஜ் பக்கம் கூட மூச்சு விட முடியாது” என எச்சரித்தது இன்றும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
தந்தை என்றால் பயந்து நடுங்கும் கவிதா அதன் பின் மித்துவின் பக்கமே செல்லாமல் தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்து விட்டாள்.
“ஈஈஈ அருளு! உனக்கு யார் இதைச் சொன்னது?” வாயைக் கன்னம் வரை இழுத்து இளித்து வைத்தாள் அக்ஷரா.
“கல்யாணத்துக்கு வர முடியலைனு யார் கிட்டேயோ என் நம்பர் எடுத்து நேற்று கால் பண்ணி கவிதா விஷ் பண்ணாள். அப்போ தான் என் ராங்கியோட மிரட்டல் கேஸ் வெளியே வந்துச்சு” சிரிப்பினூடு மனைவியை நோக்கினான் ஆடவன்.
“பின்ன? என் அருளுக்கு யாரோ ஒருத்தி ப்ரபோஸ் பண்ணா எனக்கு கோவம் வராதா?” செல்லக் கோபத்துடன் வினவினாள்.
“வரும் வரும். அவளை சொல்ல விடலல்ல. நீ சொல்லு ஐ லவ் யூ” ஆவலுடன் கேட்டான் மித்து.
“ஐ லவ் யூ அருள் மித்ரன்”
“நோ நோ! அருள் மித்ரன் இல்லை”
“அப்போ? விஷ்வ மித்ரனா?” கிண்டல் தொனியில் அவள்.
“விஷு பேரை சேர்த்தால் தான் அப்படி. நட்புக்கு விஷ்வ மித்ரன்! காதலுக்கு அக்ஷர மித்ரன்” கண்களைச் சிமிட்டிச் சிரித்தான் குறும்பு மித்ரன்.
“போடா என் லூசு மித்ரன்” அவனது மீசையைப் பிடித்து இழுத்தாள் மித்ரனின் அழகியவள்.
நட்பு தொடரும்…..!!
✒️ஷம்லா பஸ்லி