💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 39
இரவின் அமைதியில் ஆழ்ந்திருந்தது மாரிமுத்துவின் இல்லம். கட்டில் மூலையில் வீற்றிருந்த அலைபேசி அலறவே பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் மகிஷா.
நேரம் பதினொரு மணியைத் தாண்டி இருந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படியே தூக்கம் போய் விட்டது.
“இந்த நேரத்தில் யாரு?” கண்களைத் திறவாமலே அலைபேசியை காதுக்குக் கொடுக்க, “ஹலோ மகி” எனும் பதற்றமான குரலில் கண்களைத் திறந்தாள்.
“என்னாச்சு? எதுக்கு இவ்ளோ படபடப்பா பேசுறீங்க? எதுவும் பிரச்சினையா?” கொஞ்ச நஞ்சமிருந்த தூக்கமும் தொலைந்தே போக அச்சத்தோடு வினவினாள் மகி.
“மகி மகி! ஹேய் கூல்” அவன் சொன்னதைக் கேட்டு, “எதுக்கு அவ்ளோ டென்ஷனா பேசுறீங்க? ஒன்னும் ப்ராப்ளம் இல்ல தானே?” இன்னும் நீங்காத பதற்றத்தோடு அவள்.
“நோ பேபி! எதுவுமே இல்ல. எல்லாம் ஓகே தான். நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு” என்று மெல்ல சொன்னதும், நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவளது படபடப்பு சற்றே மட்டுப்பட்டது.
“இனிமே இந்த மாதிரி பயம் காட்டாதீங்க”
“ஹேய்! பயம் காட்டுனது நான் இல்ல நீ. காலையில் இருந்து ஒரு கால் பண்ணுனியா? அப்போ எடுப்பா இப்போ எடுப்பானு பார்த்துட்டே இருந்தேன். நைட் வரை ஒரு மேசேஜ் கூட இல்ல. எனக்கு மனசே சரியில்ல. அதான் உடனே கூப்பிட்டேன்” அவன் குரல் அவளது மனதைப் பிசைந்தது.
“அச்சோ சாரி ரூபன்! காலேஜ் போயிட்டு வந்தேன். அப்பறம் அம்மா கூட வெளியே போனேன். படிக்க இருக்குனு புக் எடுத்துட்டு பெட்ல சாஞ்சேனா அப்படியே தூக்கம் போயிடுச்சு. நீங்க இவ்ளோ வெயிட் பண்ணி இருப்பீங்கனு நெனக்கல” என்றாள், ஒரு மாதிரியான குரலில்.
“ஓகே. இட்ஸ் ஓகே மகி! ஆனால் இனி இப்படி பண்ணாத” ரூபன் சொல்ல, “கண்டிப்பா! இனிமே பிசின்னா ஒரு மேசேஜாவது போட்டுடறேன். சரியா? ஆனால் நீங்க இப்படி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காதீங்க”
தனக்காகவும் ஒருவன், காத்து இருக்கிறான். தன்னை நினைத்து உருகிப் போகிறான். தன் நினைவில் வாழ்கிறான் எனும் உணர்வே அவளுள் ஆனந்தப் பூக்களை கொத்துக் கொத்தாக பூக்க வைத்தது.
தனக்கென ஒருவன் இருக்கிறான் என்பதே ஒரு அழகிய உணர்வு தானே? தன்னைப் பற்றிப் பரிமாறி, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து, அன்பைப் பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது அலாதி இன்பம் தான்.
“சரி. சாப்பிட்டியா?” அவன் கேட்ட போது தான் சாப்பிடவில்லை என்பதே நினைவுக்கு வந்தது.
“இல்ல. சாப்பிடல” என்று பதிலளிக்க, “சாப்பிடாம இருக்கக் கூடாது மகி. போ போய் சாப்பிட்டு வா” அவளை அனுப்பப் பார்க்க,
“நீங்க என்னை விரட்டுறீங்க” குற்றச்சாட்டை முன்வைத்தாள் மங்கை.
“அப்படி அனுப்பல்ல மா. நேரத்துக்கு சாப்பிடனும். சாப்பிடாம இருக்கிறது நல்லதில்ல” என்று சொல்ல, “டாக்டர் வாய் வேற எப்படிப் பேசும்?” முணுமுணுத்தவளுக்கு அவனோடு பேசுவதை நிறுத்தி விட்டுச் செல்ல மனமில்லை.
“போ மகி! நான் சொன்னா கேட்ப தானே?” அவனது அன்பான வேண்டுகோள் அவளைப் பணிய வைக்க, “ம்ம் ஆமா” என்றாள்.
“அப்போ சாப்பிட்டு வா. நான் வெயிட் பண்ணுறேன்” அழைப்பைத் துண்டித்தான் ரூபன்.
அவசரமாக சமயலறைக்குச் சென்று பார்க்க, அவளுக்கான உணவு, மேசையில் மூடி வைக்கப்பட்டிருந்தது. பசி இல்லா விட்டாலும் ரூபனின் வார்த்தைக்காக கடகடவென்று சாப்பிட்டாள்.
ஐந்தே நிமிடங்களில் திரும்ப அழைத்தவளிடம் “என்ன மகி இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட? சாப்பிட்டியா இல்லையா?” என்று கேட்டான்.
“சந்தேகமா கேட்காதீங்க. நெஜமா சாப்பிட்டேன். இப்படி கேட்பீங்கனு தெரிஞ்சா வீடியோ எடுத்து காட்டி இருப்பேன்” கடுப்போடு சொன்னவள், “இந்த மாதிரி டாக்டர் பசங்களை ஃப்ரெண்டா வெச்சுக்கவே கூடாது. டைமுக்கு சாப்பிடு அதைச் செய், இதைச் செய்யாதனு பேஷன்ட் மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க” என்றிட,
“ரொம்ப சலிச்சுக்காத. ஃப்ரெண்ட் ஆகிட்டல்ல. இனி காலத்துக்கும் என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. அப்படி ஒரு பந்தம் நமக்குள்ள வந்துட்ட மாதிரி தோணுது” என்ற ரூபனுக்கு மகி மற்ற பெண்கள் போல் இல்லாமல், வித்தியாசமான உணர்வைத் தந்தாள்.
நிறைய பெண் தோழிகள் அவனுக்கு இருப்பினும், அவர்கள் பேசினால் பேசுவான் அவ்வளவு தான். ஆனால் மகியோடு பேசு பேசு என்று ஒவ்வொரு அணுவும் நச்சரிக்கும்.
அவளோடு பேசாத தருணம் வாழ்வே வெறிச்சோடியது போல் தோன்றும். பேசும் ஒரு சில நேரங்கள் உலகையே மறக்கடிக்கும் வல்லமையோடு திகழும். அவளோடு பேசிக் கொண்டே இருந்தால் என்ன எனும் உணர்வு.
அவளுக்கும் அப்படித் தானே? ரூபனை நினைக்கையில் இதமான தென்றல் நெஞ்சை வருடிச் செல்லும். இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று திண்ணமாக எண்ணிக் கொண்டாள்.
“நாளையில் இருந்து நான் கொஞ்சம் பிசி ஆகிடுவேன். அவ்வளவா பேசக் கிடைக்காது. ஹாஸ்பிடல்ல வர்க் இருக்கு”
ரூபனின் பேச்சில் அவளுக்கு முகம் வாட, அதை உணர்ந்தது போல் “உடனே மூஞ்சை அப்படி வெச்சுக்காத. என்னால முடிஞ்சளவு நேரம் ஒதுக்கி உன் கிட்ட பேசுறேன் சரியா?” எனக் கேட்க,
“சரி. என் கிட்ட பேசாம மட்டும் இருந்துடாதீங்க” என்றவளுக்கு அவனோடு பேசாமல் இருப்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை.
………………
பட்சிகள் பகலவன் உதயம் கண்டு பறக்கத் துவங்க, துயில் கலைந்தெழுந்தான் சத்யா. எழுந்து அமர்ந்தவுடன் அவன் கண்கள் தரையை நோக்கின.
முன்பு எழுந்தாலும் சோம்பல் முறித்து விட்டு, யுகனின் அருகிலே சாய்ந்து கொண்டிருப்பான். என்று இன்னொரு திருமணம் செய்தானோ அன்று முதல் எழுந்து அமர்ந்தவுடன் அவன் மனதில் வந்து நிற்பது ஜனனி தான்.
அவள் கீழே தூங்குவதை யுகன் தாயிடம் சொல்லிக் கொடுப்பானோ என்ற பயத்தில் அவளை எழுப்புவதை வாடிக்கையாகக் கொண்டவனுக்கு அது இயல்பாகி விட்டது.
முன்பு போல் கடுப்பாக எல்லாம் எழுப்புவதில்லை. அவள் எழும்பும் வரை அருகில் குனிந்து ஜனனி என்று அழைத்துப் பார்ப்பான். நிச்சயம் எழும்ப மாட்டாள். முழங்கையைப் பிடித்து உலுக்கினாள் எழுந்து அமர்ந்து விடுவாள்.
இன்றும் அவளருகில் சென்றவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள் ஜனனி. வீட்டில் கட்டிலில் சொகுசாக உறங்கியவள் தன்னால் இப்படி கட்டாந்தரையில் குறுகிப் படுத்திருக்கிறாளே என்ற எண்ணம் மனதை வதைத்தது.
“ஜானு” என்றவாறு அவளது கையைப் பிடித்து உலுக்க, “இன்னும் கொஞ்ச நேரம் ஹிட்லர்” அவனது கையைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
‘அடிப்பாவி! ஹிட்லர்னு எப்படி பெயர் வெச்சிருக்கா பாரு’ முனுக்கென்று கோபம் எட்டிப் பார்த்தாலும், அந்த தூக்கத்திலும் அவள் தன்னை உணர்கிறாள் என்றதில் என்னவென்று அறியாத உணர்வு.
“எழுந்திரு ஜனனி! யுகி எழுந்துக்க போறான்” என்று மீண்டும் உலுக்க, கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
“குட் மார்னிங்” என்றவள் அவனை எப்படி அழைப்பது என்று யோசிக்க, “ஹிட்லர்” மீதி வார்த்தையை அவனே எடுத்துக் கொடுத்தான்.
“ஹான்! அதான் பொருத்தமான பெயர்” என்று சிரித்தவளுக்கு அப்பொழுதே அவன் சொன்னது புரிய, திரு திருவென விழித்தாள்.
‘இந்தாளுக்கு ஹிட்லர் நிக் நேம் தெரிஞ்சுருச்சா?’ உள்ளூர எழுந்த திகைப்பை மறைத்துக் கொண்டு, “யாரு ஹிட்லர்? உலகமகா யுத்தம் பற்றி படிச்சீங்களா? அதில் வந்த ஹிட்லர் உங்க மனசுல அழியாத இடம் பிடிச்சுட்டாரா?” எனக் கேட்டாள், முகத்தில் லிட்டர் கணக்கில் பால் வடிய.
“நீ யாருக்கோ நிக் நேம் வெச்சிருக்க போல. தூக்கத்தில் அதைச் சொல்லிட்ட. அந்தளவுக்கா அந்தாள் உன் மனசுல இடம் பிடிச்சிருக்கான்?” ஒன்றும் தெரியாத பாவனையில் கேட்டான் அவனும்.
“பின்ன உங்களை மாதிரியா? அந்த ஹிட்லர் பார்க்க டெரரா இருப்பான். அதைப் பார்த்து நான் பயந்துடுவேன்னு நெனப்பு. எனக்கு அவனைப் பார்த்தா துளியும் பயம் வராது. சரியான முட்டாப்பய” அவனுக்குத் தெரியாது என்ற எண்ணத்தில் வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.
‘முட்டாப் பயலா? அடிங்க. முட்டக் கண்ண விரிச்சுட்டு எனக்கே முட்டாள் பட்டம் தரியா?’ உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவன், “நான் கூட உனக்கு அந்த ஹிட்லரைப் பிடிச்சிருக்கோனு நெனச்சுட்டேன்” என்று வினவ,
“பிடிக்கும்னு இல்ல. பிடிக்காமலும் இல்ல. எனக்குப் பிடிச்ச யுகிக்குப் பிடிக்கும் என்பதால அவரையும் பிடிக்கும்” சிட்டாகப் பறக்க நினைத்தவளின் கையைப் பிடித்து, “யுகினு சொன்ன? அப்படினா அது நான் தானே?” புருவம் உயர்த்தினான்.
‘அடியே ஜானு! உனக்கு உன் வாயில தான் சனி’ மானசீகமாக தன்னைத் திட்டிக் கொண்டவள், “ஹீஈஈ! நீங்களே தான் அது. வர்றேன் ஹிட்லர்” அவன் பிடியிலிருந்து நழுவி பாத்ரூம் கதவை அடைத்துக் கொண்டாள்.
“வாயாடி” எனும் முனகலோடு யுகனின் அருகில் சரிந்து அவனது தலை வருட, “டாடி” அவன் கையைப் பிடித்துக் கொண்டான் மகன்.
சத்யாவுக்கு உள்ளம் அதிர்ந்தது. சற்று முன் ஜனனியும் இதே போல் அல்லவா செய்தாள்? அப்படியெனில் யுகனைப் போல் அவளும் தன்னோடு நெருக்கமாகி விட்டாளா?
இல்லை! இல்லவே இல்லை. அவள் மீது ஒரு நல்லுணர்வு அவ்வளவு தான். அதை மீறி எதுவும் வராது. வரவும் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டான் காளை.
காலையுணவை முடித்து விட்டு அனைவரும் கதையளந்து கொண்டிருந்தனர். ஜனனி அறையில் இருந்து ஜெயந்தியோடு பேசிக் கொண்டிருந்தாள்.
பேசி முடித்து விட்டு நிமிரும் போது யுகன் எங்கோ செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ரெடியாகி வந்த சத்யா “போகலாமா யுகி?” என்று கேட்க, அவன் பார்வை ஜனனி மீது படிந்தது.
“ஜானுவையும் கூட்டிட்டு போகலாம்” என்றவன், “டாடி கூட வெளியில் போய் ரொம்ப நாளாகுது. அதான் ஷாப்பிங் மால் போகலாம்னு கூப்பிட்டேன்” ஜனனியிடம் விளக்கமளித்தான்.
“ஓகே யுகி. நீங்க போயிட்டு வாங்க” என்றதும், சத்யாவின் பார்வை அவள் மீது படிந்தது.
“நான் கூப்பிட்டா வர மாட்டியா ஜானு?” யுகனின் முகம் சோர்ந்து போக, “வரலாம் யுகி” என்றவளது பார்வை சத்யா மீது திரும்பிற்று.
அவன் அழைக்கவில்லையே. தான் செல்வது அவனுக்குப் பிடிக்குமோ இல்லையோ என்ற கேள்வி அவளுக்கு.
“யுகி ஆசைப்படுறான்ல. வா போகலாம்” என்றவன் அழுத்தமாக அவளைப் பார்க்க, “டாடியே சொல்லிட்டார். சீக்கிரம் ரெடியாகிட்டு வா” துள்ளலுடன் ஓடினான் சிறுவன்.
“அவன் கூப்பிட்டா வர வேண்டியது தானே? அதென்ன என்னைப் பார்க்கிற பழக்கம்? யுகி என்ன நெனப்பான்?” ஜனனியைக் கடிந்து கொள்ள, “நான் உங்களைப் பற்றி நெனச்சேன். உங்களுக்கு பிடிக்காதோனு தான் சும்மா இருந்தேன்” அவளும் சற்றே கடுமையாகச் சொல்ல,
“என்னைப் பற்றி எதுக்கு யோசிக்குற? யுகியை மட்டும் பார்” என்றதும், “இதை ஞாபகம் வெச்சிக்கங்க. உங்களை யோசிக்காம நான் எது பண்ணுனாலும் ஒன்னும் சொல்லக் கூடாது” முறைப்போடு கதவை மூடினாள்.
“ரொம்பத் தான் பண்ணுறா” முணுமுணுப்போடு மகனைத் தேடிச் சென்றான்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி