💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 44
மேசையில் தலை வைத்துச் சாய்ந்திருந்தாள் மகிஷா. அவள் வதனத்தில் எதிர்பார்ப்பின் சாயல்.
எதிர்பார்த்துத் தானே காத்திருக்கிறாள்? ரூபனுக்கான அவளது காத்திருப்பு அதிகமாகவும், ஆழமாகவும் ஏற்படுவது போல் தோன்றிற்று அவளுக்கு.
நேற்று முழு நாளும் அழைக்கவில்லை. அவன் குரல் கேட்காத பொழுதுகள் அத்தனை உவப்பாக இருக்காதது போல் எண்ணம். இன்றும் அழைப்பானா? இல்லை, நானே அழைத்துப் பார்க்கவா என்று பட்டிமன்றம் நடத்தியவள் இரண்டாவது முடிவைத் தேர்ந்தெடுத்தாள்.
அழைத்து விட்டாள். நொடி நேர இடைவெளியின் பின்பு “மகி” எனக் கேட்டது அவன் குரல்.
அவ்வளவு தான். போன உயிர் வந்தது போல் உணர்ந்தாள் பெண்ணவள். ஒரு நாள் பேசாததற்கே இவ்வளவு தாக்கமா? மனம் கேள்வி கேட்பினும், அதைப் புறந்தள்ளியவளுக்கோ அவனோடு பேசுவது ஒன்றே தற்போது குறிக்கோளாக இருந்தது.
“ரூ..ரூபன்” அவ்வழைப்பில் தவிப்பு தொக்கி நின்றது.
“மகி சாரி மகி! நேற்றிலிருந்து கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். என்ன பண்ணுறதுனே தெரியாத அளவுக்கு இருந்ததால உன் கூட பேச முடியல. எதுவும் நெனச்சுக்காத டா. எதையோ இழந்துட்ட மாதிரி இருந்துச்சு. இப்போ உன் குரல் கேட்டதும் தான் பாதி உசுரு மீண்டு வந்த மாதிரி இருக்கு” அவளுக்கு இணையான தவிப்பு அவனிலும் இருந்தது.
“ஏன் ரூபன்? எதுவும் பிரச்சினை இல்லை தானே?” என்று அவள் கேட்க, “இல்ல. இப்போ ஓகே தான்” என்றவனுக்கு வீட்டு நிகழ்வுகளை அவளிடம் இப்போது விலாவாரியாக சொல்லத் தோன்றவில்லை.
அவன் சம்பந்தப்பட்ட விடயம் என்றால் மறைக்காமல் பகிர்ந்து இருப்பான். இருப்பினும், சத்யா பற்றிய விடயத்தை பகிர்வது அவனுக்கு சரியகப் படவில்லை என்பதால் விட்டு விட்டான்.
“சாப்பிட்டியா மகி?” அன்போடு அவன் வினவ, “இல்லை” என்றவளுக்கு அப்போது தான் பசி வருவது போல் இருந்தது.
“நேரத்திற்கு சாப்பிடனும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” சற்றே கண்டிப்புடன் கேட்க, “ஆமா. சாப்பிடுறேன். நீங்க பேசலனு எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. எடுக்கலாமா வேணாமான்னு யோசிச்சுட்டு தான் கால் பண்ணேன்” என்றாள் மெதுவாக.
“எதுக்கு யோசிக்கனும்? உனக்கு தோணுறப்போ கால் பண்ணு. ஹாஸ்பிடல் வர்க்ஸ் தவிர மத்த எப்போ என்ன வேலை இருந்தாலும் நான் பேசுவேன் சரியா? அதுக்காக உன் குட்டி மூளையை கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் இல்லை” மென்சிரிப்புடன் அவன்.
“நீங்க என்னை காக்க வெச்சிட்டு சிரிக்க வேண்டாம்” செல்லமாக கோபித்துக் கொண்டாள் மகிஷா.
“அன்னிக்கு நீ என்னை காக்க வெச்ச இல்லையா? அதுக்கான பழி வாங்கும் படலமா இதை நெனச்சுக்க. இப்படி கோவிச்சுக்கிட்டா நான் மன ஆறுதலுக்காக யார் கிட்ட பேசுறது?” கவலையோடு கேட்டான் அவன்.
“ஏன் யாரும் இல்லையா? ஹாஸ்பிடல் போனா நர்ஸ் பட்டாளமே உங்க கூட கடலை போட வெயிட்டிங்ல நிற்பாங்களாமே” முணுக்கென்று எட்டிப் பார்த்த கோபத்தில் அவள் கடுகடுக்க,
“நிற்பாங்க இல்ல மகி நின்னாங்க. அது ஒரு அழகிய காலம்னு சொல்லுற அளவுக்கு இப்போ எல்லாமே மாறிப் போச்சு. கடலையை விட்டு கறிவேப்பிலை போடவே இப்போ மனசு வர மாட்டேங்குது. ஹாஸ்பிடல்ல போய் எவளைப் பார்த்தாலும் என்னைக் கட்டிப் போட்ட குட்டிப் பொண்ண தான் நினைவு வருது” உதடு பிதுக்கினான் ரூபன்.
“அது யாரு குட்டிப் பொண்ணு? எனக்கே தெரியாத அளவுக்கு உங்களை கட்டிப் போட்டது யார்?”
“மாரிமுத்துவின் மூன்றாவது புதல்வி அவள். என் அண்ணன் மனைவி ஜான்சிராணி ஜனனியின் அன்புத் தங்கை. அவள் பெயர் மகிஷா” மன்னவன் பாணியில் அவன் சொன்னதைக் கேட்டு,
“டேய் டேய்! ரூபி” சில்லறைகள் சிதறியதைப் போல் அவள் சிரித்த சிரிப்பு, ரூபனின் உதட்டோடு இணைத்து உள்ளத்தையும் குளிர்வித்தது.
……………….
கோர்ட்டிற்கு சென்று வந்து இத்தோடு மூன்று நாட்கள் கழிந்து விட்டன. அந்த வீடு முன்பு போல் இல்லை என்பதை அங்கு நிலவிய அமைதி ஒன்றே பறைசாற்றப் போதுமானதாக இருந்தது.
ஜனனிக்கும் யுகிக்குமான உறவு மகிழ்வானதாக இல்லை. வழக்கம் போல் கதைத்துக் கொள்வர், கதை சொல்லி, விளையாடினாலும் அவர்களது முகத்தில் மலர்ச்சி இல்லை. முன்பு போல் நெருக்கமும் இல்லை.
யுகனும் சத்யாவும் வழக்கம் போல் இருந்தனர். யுகனைத் தவிர, சத்யா யாருடனும் கதைக்கவில்லை. குறிப்பாக மேகலையின் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்துக் கொண்டிருந்தான்.
இது மற்றவருக்குப் புரிந்தாலும் எதுவும் கேட்கவில்லை. இருப்பினும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அனைவருக்கும் கஷ்டத்தைத் தான் கொடுத்தது.
அறையினுள் அடைந்திருந்த சத்யாவிடம் வந்து நின்றாள் ஜனனி. அவள் தற்போது பாலர் பாடசாலையில் ஆசிரியையாக பணி புரிகிறாள். அங்குள்ள மலர் மொட்டுக்களின் கள்ளமில்லா சிரிப்பு அவளது மன வேதனைக்கு கொஞ்சம் இதம் தந்தது.
அவள் சத்யாவுடன் பேசுவதே இல்லை. இன்று எதற்காக வந்திருப்பாள் என்ற எண்ணத்தோடு அவளை நோக்க, “எத்தனை நாளைக்கு நீங்க பண்ணுன தப்பை மறைச்சு ஓடி ஒளிய போறீங்க?” சொல்ல வந்ததை பட்டெனப் போட்டு உடைத்தாள்.
“தப்பு.. நான் எதுவும் ப..பண்ணல” இறுதி வார்த்தையைக் கூறும் போது அவன் விழிகள் தரை நோக்கித் தாழ்ந்தன.
“உங்க பையன் விஷயத்தில் நீங்க பண்ணுனது சரினு என் கண்ணைப் பார்த்து சொல்ல முடியுமா?” அழுத்தமாகக் கேட்டாள் ஜனனி.
“அப்படி பண்ண வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கேன். இல்லனா நா.. நான் யுகி விட்டுக் கொடுத்த மாதிரி ஆகிடும். அவன் என்னை நம்புறான். நான் அவனுக்காக இருப்பேன்னு நினைக்கிறான். அவனோட விலகலை என்னால கொஞ்சம் கூட தாங்கிக்க முடியாது.
அவன் என்னை அன்னியமா ஒரு பார்வை பார்த்தா நான் செ..செத்தே போயிடுவேன். அவன்னா எனக்கு உசுரு. எனக்கு எல்லாமே அவன் தான்” கண்கள் கலங்க சொன்னவனது அருகில் அமர்ந்து,
“நான் அதை மறுக்கல. யுகி மேல நீங்க வெச்சிருக்கிற பாசத்தை நான் இல்லனு சொல்லல. அவனை உங்களை விட யாராலேயும் அதிகமா நேசிக்க முடியாது. அவன் உங்களுக்கு உசுருன்னு எனக்குத் தெரியும்” என்றவளுக்கு அவனது அன்பும், தவிப்பும் புரியவே செய்தது.
“ஜானு” அவள் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான் சத்யா.
அவனது கையில் மெல்லிய நடுக்கம். அன்று யுகனின் கையைப் பிடித்து அவளும் இதே போன்று அல்லவா செய்தாள்? அவள் யுகனிடம் ஆறுதல் தேடினாள். அப்படியெனில், சத்யா தன்னிடம் ஆறுதல் தேடுகிறானா?
அப்படியொரு கோணத்தில் யோசித்தவள், மறு நொடியே யோசிப்பதற்கு இது நேரம் இல்லை என்றுணர்ந்து, “யுகிக்காக இதைப் பண்ணுனதா சொல்லுறீங்க. ஆனால் உங்களால நிம்மதியா இருக்க முடியுதா? அத்தை முகத்தைப் பார்க்க முடியுதா? நார்மலா இருக்க முடியுதா?
இல்ல தானே? அப்படினா நீங்க பண்ணுனது தப்புனு உங்களுக்கே புரியுது. குற்றவுணர்ச்சியில் நொந்து வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கப் போறீங்களா? வேண்டாம். அதை சரி பண்ணிடுங்க. ப்ளீஸ்” கெஞ்சும் குரலில் கேட்டாள் காரிகை.
அவளது கைகளைப் பற்றிய கையை வெடுக்கென எடுத்துக் கொண்டான் கணவன்.
“நோ! என்னால முடியாது. இதை இத்தோட விட்று. நீ கேட்கிறதை என்னால பண்ண முடியாது” உறுதியாக மறுத்து விட்டான் அவன்.
“இதை பண்ணித் தான் ஆகனும்” என்றவளை முறைத்து, “ஏதாவது ஏடாகூடமா பண்ணே தொலச்சிருவேன்” என்று சொல்ல,
“அத்தைக்கு தெரிஞ்சா உங்களை தொலச்சிடுவாங்க. என் கிட்ட உங்க உருட்டல் மிரட்டல் எல்லாம் செல்லவே செல்லாது ஹிட்லர்”
“ஏய்ய்” அவன் எகிற, “இந்த ஏய் ஓய் சவுண்டு கேட்டு நான் அசர மாட்டேன். சரின்னு தோணுறத நான் பண்ணியே தீருவேன்” என்றபடி சென்றவளை கடுப்பாகப் பார்த்தான் காளை.
சிறிது நேரம் இருந்து விட்டு வாசலுக்குச் செல்ல, யுகனைக் காணாமல் “டேய்! யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான்.
“அண்ணி கூட வெளியில் போனானே. உனக்கு தெரியாதா?” எனும் பதிலில், அவனுள் ஒருவித படபடப்பு.
“அவ கூட எங்கே போனான்? என் கிட்ட சொல்லவே இல்ல” என்று சொன்னவனோ தலையை அழுத்தமாக கோதிக் கொள்ள, “இங்கே எங்கேயாச்சும் போயிருப்பாங்க. அதுக்கு ஏன் பதட்டமா இருக்க? வந்துடுவாங்க சத்யா” என்றவாறு அவனை ஏறிட்டார் மேகலை.
“அண்ணி வந்தாச்சா? ஏதோ அநாதை ஆசிரமத்துக்கு போறதா என் கிட்ட சொன்னாங்க” என்றவாறு வந்த தேவன் சத்யாவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட,
“ஆ..ஆசிரமமா? என்ன சொல்லுற?” தீச்சுட்டாற் போல் திடுக்கிட்டான் சத்யா.
தேவன் புருவம் சுருக்கிப் பார்க்க, “சொல்லு தேவா. வேற எதுவும் சொன்னாளா?” மீண்டும் கேட்டவனின் நடவடிக்கைகள் மூவருக்கும் வித்தியாசமாக இருந்தன.
“அண்ணி கையில் ஸ்வீட் பாக்ஸ் இருந்துச்சு. கொடுத்துட்டு வர போறாங்க போல” பொதுப்படையாக கூறினான் தேவன்.
‘வேண்டாம்னு சொல்லியும் இவ எதுக்கு இப்படி பண்ணிட்டு திரியுறா. யுகி மனசை நோகடிக்க இவளால எப்படி முடியுது? வரட்டும் அவ’ உள்ளுக்குள் கருவிக் கொண்டான் சத்யா.
“ஜனனி என் கிட்ட சொல்லிட்டுத் தான் போனா. அவ ஏதாச்சும் பண்ணுனா அதை நிதானமா யோசிச்சு பார்த்து முடிவெடுக்கனும்னு கேட்டுக்கிட்டா. கொஞ்ச நாளாக அவ பேச்சு புதிரா இருக்கு. அப்படி என்ன பண்ணப் போறானு எனக்கு தெரியல” என்ற மேகலையின் குரலை அடுத்து, “அத்தை” எனும் அழைப்பில் வாயிலை நோக்கினார்.
“ஹே யுகி டார்லு! எங்கடா ஊர் சுற்றிட்டு வந்த?” என்றவாறு நெருங்கி வந்த ரூபனின் பார்வை கூர்மையானது.
அவன் ரூபனை நோக்கிய பார்வையில் அன்னியத் தன்மை தெரிந்தது. அதே சமயம் சத்யாவின் கோபப் பார்வை ஜனனியைத் துளைத்தது.
“யு..யுகி” தேவனும் அப்பார்வை மாற்றத்தில் திகைத்து நிற்க, சின்னவனின் கை ஜனனியை இறுகப் பற்றியது.
அவனைப் பார்த்து “டாடி கிட்ட போ” என்று ஜனனி கூற, சத்யாவை யாரோ போல் மிரண்டு பார்த்தவனோ ஜனனியை நெருங்கிக் கொண்டான்.
“என்ன நடக்குது இங்கே? என்ன பண்ணிட்டு வந்த? என் யுகியை என்னடி பண்ணுன?” ஆக்ரோஷமாக சீறினான் சத்யா.
“யுகியை என்ன பண்ணப் போறேன்?” உள்ளூர எழுந்த அச்சத்தை மறைத்து அசராமல் கேட்டாள் மனைவி.
மொழியறியாத படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது போல் இருந்தது ரூபன், தேவன் மற்றும் மேகலைக்கு.
“யுகி தங்கம்” மேகலை அவனருகில் செல்ல எத்தனிக்க, அடுத்து நடந்த நிகழ்விலும், “சோ, உங்க யாருக்கும் இந்த யுகி வேணாம்ல?” ஆற்றாமையுடன் ஓங்கி ஒலித்த யுகனின் குரலிலும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டனர் அனைவரும்.
“கடைசியில் உனக்கு தேவையானத சாதிச்சுட்டல்ல” வெறுப்போடு ஜனனியைப் பார்த்த சத்யாவுக்கு, நந்திதாவை மணக்கவிருந்த சமயத்தில் தன்னைச் சந்தித்த வேளை ஜனனி தன்னிடம் கேட்ட வினா செவிப்பறையில் மோதியது.
அவள் கேட்டது இன்று நடந்து விட்டதல்லவா? அடுத்து என்ன நடக்குமோ எனும் கேள்வியுடன் தன் குடும்பத்தினரைப் பார்த்தான் சத்ய ஜீவா!
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி