51. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

 

ஜனனம் 51

 

நேற்று முதல் ரூபனிடமிருந்து அழைப்பு வரவில்லை. மகி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

 

காலை முதல் வேலை சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் கடுகடுத்த வண்ணமே செய்து கொடுத்தவளுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை.

 

“நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” என்று கேட்ட மகளை, “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்றவாறு முறைத்தார் ஜெயந்தி.

 

“சொல்லும்மா. யாராச்சும் வரப் போறாங்களா?” என்று மீண்டும் கேட்க, “சொல்ல மாட்டேன். போ” என்று விட்டார்.

 

“வந்தா பார்த்துக்கிறேனே. இவ்ளோ சமையல் எந்த மைசூர் மகாராஜனுக்கு?” யோசனையோடு வாசலுக்குச் சென்றவளோ அலைபேசியைப் பார்த்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.

 

ரூபனின் ஃபோட்டோவைப் பார்த்து “மூஞ்சைப் பாரு மூஞ்சை. முகத்தில் துளியும் கள்ளமில்லாத மாதிரி. ஆனால் என்னைக் காக்க வைக்கிறதே வேலையாப் போச்சு.

 

அப்பறம் வருவான் மகீஈஈனு ஏலம் போட்டுட்டு. இன்னிக்கு பேச வரட்டும். அவனுக்கு இருக்கு. ரொம்ப ஓவரா தான் இவனுக்கு இடம் கொடுத்துட்டோம் போல. கடிச்சுக் குதறனும் போல ஆத்திரம் வருது” இயன்றளவு முறைத்தாள்.

 

“எங்கே கடிச்சுக் குதறு பார்ப்போம்” எனும் குரலில் திரும்பியவளுக்கு திகைப்பு மேலிட்டது.

 

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான், அவளது நினைவுகளின் சொந்தக்காரன்.

 

“ரூ..ரூபன்” என்று அழைத்தாள்.

 

சொல்ல முடியாத மகிழ்வில் மனம் துடித்தது. அவனைக் கண்டவுடன் குத்தாட்டம் போடும் உள்ளத்தை அடக்த முடியவில்லை அவளால்.

 

“ரூ..ரூபன் இல்ல. ரூபன்” என்றவன், “மகி” அன்புடன் அழைத்தான்.

 

அவ்வழைப்பில் மீண்டும் முறைப்பைக் கையிலெடுக்க, “நேற்றில் இருந்து எங்கே போன? என் கூட பேசனும்னு தோணலயா? என் ஞாபகமே இல்லையா உனக்கு? இதைத் தானே கேட்கப் போற?” என்று கேட்டான் அவன்.

 

“தெரியுதுல்ல. அப்பறம் என்னவாம்? ஒரு வார்த்தை பேசினா பாக்கெட்ல பைசா குறையுமா? இங்கே வர்றீங்கனு கூட சொன்னீங்களா?” படபடவென பொரிந்து தள்ளினாள் மகிஷா.

 

“மகி மகி கூல். உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு வந்தேன். அண்ணி, உங்கம்மானு எல்லார் கிட்டவும் உனக்குத் தெரியக் கூடாதுனு கேட்டுக்கிட்டேன். என்னைப் பார்த்து எக்சைட்டாகி செல்லக் குட்டி சொல்லுவன்னு பார்த்தா, இப்படி நாய்க்குட்டி மாதிரி வள் வள்னு குரைக்கிற?” அவன் கேட்டது தான் தாமதம், பக்கத்தில் இருந்த குச்சியை வைத்து அவனை அடிக்கத் துரத்தினாள்.

 

“ஒரு நாள் முழுக்க உங்க குரல் கேட்காம நான் தவிச்சு போய் இருந்தேன். சர்ப்ரைஸ் தர வந்துட்டு நாய்க்குட்டி பட்டம் தர்றீங்களா? உச்களைஐஐ” அவனது முதுகில் அடிக்க,

 

“ஹேய் விடு மகி. வலிக்குது” என்றவனோ முகம் சுருக்கி “உனக்காக தானே பண்ணேன்? இப்படியா அடிப்ப?” என்றதும் அவளுக்கு மனம் இறங்கி விட்டது.

 

“இப்படி ஏதாச்சும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி மூஞ்சை வெச்சுக்கோங்க. இனி ஒரு தடவை இப்படி பண்ணுனீங்க, அடிச்சு துவைச்சு காயப் போட்றுவேன்” விரல் நீட்டியதும், “உத்தரவு மகாராணி” இடை வரை குனிந்தான் ரூபன்.

 

“வாங்க வாங்க தம்பி” அவனைக் கண்டு ஜெயந்தி உள்ளே அழைத்துச் செல்ல, “உங்க பொண்ணு என்னை ரொம்ப முறைக்கிறா ஆன்ட்டி. கை நீட்டி அடிக்க வேற செய்யுறா” போட்டுக் கொடுத்தான் அவன்.

 

“அவ எப்போவும் அப்படித் தான் தம்பி. அதுவும் இப்போ கொஞ்ச நாளா ஏதோ ஒன்னு உடம்புல புகுந்த மாதிரி ஆடிட்டு இருக்கா. இருபத்தி நாலு மணி நேரமும் ஃபோனை வெச்சுட்டு சுத்துறா” என்று ஜெயந்தி அவர் பாட்டிற்குச் சொல்ல,

 

“ம்மா! நான் தூங்குறேன், காலேஜ் போறேன், இதுக்கே பாதி நாள் போகுது. ஒரு வேலை செஞ்சா அதை டைம் கம்மி பண்ணி சொல்லுவீங்க. ஃபோன் விஷயத்தில் மட்டும் கூட்டி கூட்டி எப்போ பாரு அதுலனு சொல்லுவீங்க. நீங்க இப்படித் தான்” பொரிந்து தள்ளினாள் மகி.

 

“இதை மட்டும் வக்கனையா பேசு. இரண்டாவது அறையை ஒதுக்கி வெச்சிருக்கேன். அதை தம்பிக்கு காட்டு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றவாறு சமயலறைக்குச் சென்று விட்டார்.

 

“எதுக்கு அறையெல்லாம்?” அவள் தீவிர யோசனைக்குச் செல்ல, “ஹாஸ்பிடல் வர்க் முடியும் வரைக்கும் நான் உங்க வீட்டுல ஸ்டே பண்ண போறேன். ரூம் எடுத்து தங்கலாம்னு பார்த்தா உங்கப்பா இங்கேயே அனுப்பனும்னு அண்ணி கிட்ட சொல்லிட்டாங்க. அவங்களும் உறுதியா சொன்னதால வந்தேன்” என்று சொன்னவாறு அவள் பின்னே நடந்தான்.

 

“நான் என்னமோ வேண்டாம்னு சொன்ன மாதிரி இவ்ளோ விளக்கம் தர்றீங்க‌. தங்குறதா இருந்தா தாராளமா தங்கிக்கலாம். எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல” தோளைக் குலுக்கினாள் பெண்.

 

“உனக்கு ஜாலியா தானே இருக்கும்? என்னை அடிக்கடி பார்க்க கிடைக்கும்ல?” அவன் சிரிப்போடு கேட்க, “பார்த்து என்ன பண்ணுறதாம்? எனக்கு ஒன்னும் உங்களைப் பார்க்கனும்னு அவசியம் இல்ல. இவரைப் பார்க்கவும் பேசவும் தவமா தவம் கிடக்கிறோமாம்” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மகிஷா.

 

“உனக்கு எப்படியோ தெரியல. எனக்கு கெடச்ச வன் ஒப் த பெஸ்ட் சான்ஸ் இது. பக்கத்தில் இருந்தே பார்க்கலாம். உன் கூட பேசலாம். பேசிட்டே இருக்கலாம்ல?” அவன் குரலில் அளவில்லா ஆனந்தம்.

 

“பேய் கூட தான் பேசனும். நான்லாம் வர மாட்டேன். எனக்கு தோணுற நேரம் நீங்க பேச வர மாட்டீங்க. உங்களுக்கு தேவைன்னா மட்டும் நான் வரனுமா?” அவள் குரலில் கோபத்தோடு கலக்கமும் இருந்தது.

 

“சாரிடா மகி! நான் தான் சொல்லுறேன்ல. இனிமே பேசுவேன். உனக்கு எப்போ தோணுனாலும் என்னைக் கூப்பிடு. இப்படி உம்முனு மட்டும் இருக்காத. எனக்கு அப்சட் ஆகுது” 

 

“ஓகே ஓகே. நான் சிரிக்கிறேன். உம்முனு இருக்க மாட்டேன்” கடினப்பட்டு சிரித்தவளது கன்னத்தைப் பிடித்து, “மகி! ஸ்மைல் ப்ளீஸ்” என்றான்.

 

அவள் உதடுகள் அழகாக விரிய “சிரிக்க வெச்சுட்ட படவா” என்று சிரித்தவளை அன்புடன் நோக்கினான் ஆடவன்.

 

……………….

பாலர் பாடசாலை வேலையொன்றில் மூழ்கிப் போயிருந்தாள் ஜனனி.‌ புத்தகங்களில் எழுதிக் கொண்டிருந்தவள் தலை தூக்கி அகிலனைப் பார்த்தாள்.

 

நெடுநேரமாக அலைபேசியில் மூழ்கியிருக்கிறான். கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருப்பவனின் அருகில் சென்று அதனை எடுக்க, “இந்த கார்ட்டூன் மட்டும்” என்றான் கெஞ்சலுடன்.

 

“நோ அகி! ரொம்ப நேரம் பார்க்க கூடாது. அப்போலிருந்து நீ அதைத் தான் பார்க்கிற. கண்ணுக்கு சரியில்ல டா” என்க, முகம் சுருக்கினான் அவன்.

 

“இங்கே வா” அவனைத் தூக்கி மேசை மீது அமர வைத்தவளோ, “இந்த பட்டர்ப்ளைஸ் பாரு. இதோட கலர்ஸ் எல்லாம் சொல்லிக் காட்டு பார்ப்போம்” வண்ண வண்ண நிறங்களில் இருந்த வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டினாள்.

 

“நான் பார்க்கிறேன்” என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனுக்கும் தாள் ஒன்றில் வரைந்து கொடுக்க, ஆசையோடு நிறந்தீட்டினான். ஜனனிக்கு யுகியின் நினைவு வந்தது. அகியிடம் சொல்லிக் கொண்டு மற்றவனைத் தேடிச் சென்றாள்.

 

அவனோ அறையில் இருந்து, ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

 

“யுகி! இங்கே வா” என்று அழைக்க, “சொல்லுங்க” அவளருகில் வந்தாள்.

 

“நான் அகிக்கு கலர் பண்ண கொடுத்தேன். உனக்கும் எழுதி தர்றேன். வா” என்று அழைக்க, “நான் வர மாட்டேன். என்னைக் கூப்பிடாதீங்க” முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைபேசிக்குள் தலையைப் புதைக்க,

 

“பெரியவங்க சொல்லுறத கேட்கனும் யுகி. உன் நல்லதுக்கு தானே சொல்லுறேன். உன் டாடி சொல்லித் தந்ததை நீ மறக்க மாட்டல்ல. வாங்க கண்ணா” மென்மையான குரலில் சொன்னாள்.

 

“எல்லாரும் டாடி விஷயத்தை சொல்லியே சமாளிங்க. நான் வர்றேன்” ஃபோனை அணைத்து வைத்து விட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

 

“இது நல்லா இருக்கா?” என்று தனது தாளைக் காட்டினான் அகி.

 

“சூப்பர் செல்லம். அடுத்த பக்கத்திலும் பண்ணு” என்றவள் யுகனுக்கும் வரைந்து கொடுத்தாள்.

 

அகிலன் அவன் நிறந்தீட்டுவதைப் பார்க்க, அதனை மறைத்துக் கொண்டான். அகியும்‌ மறைக்க, “நான் பார்த்துட்டேன்” என்று உதட்டைச் சுளித்தான் யுகி.

 

இருவரின் செயலில் ஜனனிக்கு குறுநகை பூத்தது. கண்டும் காணாதது போல் அவளது வேலைகளைச் செய்தாள்.

 

இருவரும் நிறந்தீட்டி முடிக்க, “இது எப்படி இருக்கு ஜானு?” என்ற யுகனின் குரலில் சட்டென நிமிர்ந்தாள் அவள்.

 

அவனது ஜானு என்ற வழமையான அழைப்பு அவளுள் மகிழ்வை வாரி இறைத்தது. அதை அவனும் உணர்ந்தான். 

 

“அழகா இருக்கு செல்லம்” என்றவளோ, அதனை வாங்கி சரி அடையாளம் போட்டு நட்சத்திரம் எழுதிட அவன் முகத்தில் புன்னகை. அகிக்கும் அவ்வாறே செய்தாள்.

 

“இதை நாம இந்த சுவர்ல ஒட்டி வைக்கலாம்” என்று அவள் சொல்ல, இருவரும் தலையசைத்தனர்.

 

அவ்வாறே அவரவர் கைகளால் ஒட்ட வைத்தாள். இருவரது பெயரையும் எழுத, “சூப்பர் ஜானு” குதூகலமாக சொன்னான் அகி.

 

“நீ ஜானு சொல்லாத” முறைத்துப் பார்த்தான் யுகி.

 

“நீ சொல்லுற தானே? நானும் அப்படி தானே சொல்லனும்” மெல்லிய குரலில் சொன்னான் அகி.

 

“நான் தெரியாம சொல்லிட்டேன். ஆனால் நீ சொல்லக் கூடாது” அவன் கடுமையாக சொல்ல, அகியின் முகம் வாடியது.

 

“யுகி” என்று ஜனனி அழுத்தமாக அழைக்க, “இந்த அகி உங்க கூட இருக்கிறது எனக்குப் பிடிக்கல. எதுவுமே பிடிக்கல. எனக்கு அவனைப் பிடிக்கல” என்றான் யுகி.

 

அழ ஆரம்பித்து விட்டான் அகிலன். ஜனனிக்கு யாரைப் பார்ப்பது என்று புரியாத நிலை.

 

“அப்படி பேசாத யுகி. அவன் உன் தம்பில்ல. உன் கூடப் பிறந்தவன். நீ தானே பாசமா பார்த்துக்கனும்” என்று சொன்னவளோ மற்றவனை நெருங்கி, “அகி! அழாத அகி. யுகி சும்மா சொல்லுறான். உன்னை எல்லாருக்கும் பிடிக்கும்‌” என்று சமாதானம் செய்ய முயன்றாள்.

 

“உங்களுக்கு பிடிச்சிருக்கு. யுகிக்கு பிடிக்கல. அவருக்கும் பிடிக்கல” என்று அவன் சொல்ல, “யாரு அகி?” எனக் கேட்டவளுக்கு மனம் கலங்கியது.

 

“அதோ அவருக்கு” என்று அவள் பின்னால் கை காட்ட, திரும்பிப் பார்த்தவளுக்குக் கிடைத்தது சத்யாவின் தரிசனம்.

 

அகி அழ ஆரம்பிக்கும் போது வந்தவனுக்கு, அவனது இப்போதைய பேச்சில் குற்றவுணர்வு மனதைச் சுட்டது.

 

“அப்படிலாம் எதுவும் இல்ல அகிம்மா. உன்னை ஏன் அவங்களுக்கு பிடிக்காம போகனும்? நீ எங்களுக்கு உசுரு. இப்படி பேசக் கூடாது. நீ இந்த வீட்டோட பொக்கிஷம்” ஜனனி அவனது தலையை வருடிக் கொடுக்க,

 

“அன்னிக்கு என்னை நீங்க பொக்கிஷம்னு சொன்னீங்க. இப்போ அவனை சொல்லுறீங்கள்ல?” யுகன் அழுது கொண்டு எதிர் அறைக்கு ஓட, ஜனனி உடைந்து போனாள்.

 

சத்யாவின் முன்னால் வந்து நின்று அகிலன் சொன்ன விடயத்தில் அவன் மனம் நொறுங்கிப் போயிற்று.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!