51. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 51

 

நெற்றியை விரலால் நீவி விட்டுக் கொண்டான் விஷ்வா. “இது எப்படி நடந்தது? நம்ம கம்பனி டீடேல்ஸ் எல்லாம் எப்படி குமார் கம்பனிக்கு போச்சு?” உள்ளுக்குள் கோபத் தீ பற்றி எரிந்தது.

 

வெளியில் கிளம்பி வந்தவனிடம் “சார் மீட்டிங் போக டைம் ஆச்சு” என்றான் பீ.ஏ.

 

“மீட்டிங் கேன்சல். எல்லாரும் கிளம்புங்க” ஆக்ரோஷமாகக் கத்தினான் அவன்.

 

தம் எம்.டியின் கோபத்தில் நெஞ்சுக்கூடு சில்லிட நின்றனர் சிப்பந்திகள். மித்ரனோடு இணைந்த பின்பு அவனது கோபத்தை முதல் முறையாகக் காண்கிறார்கள்.

 

“சா…சார் அது ரொம்ப முக்கியமானது” பி.ஏ வார்த்தைகளை இழுத்துப் பிடித்துக் கொண்டு சொல்ல,

 

“ஜஸ்ட் ஷட்அப்! அது எனக்கு தெரியாதா? நீ எனக்கு டீச் பண்ண வராத. கெட் லாஸ்ட்” என்று சீறினான்.

 

அதே நேரம் “விஷு” என்று வேகமாக வந்தான் மித்து.

 

“எங்கேடா போன இவ்ளோ நேரம்?”

 

“நான் ரெஸ்டாரன்ட் போயிட்டு வந்தேன் டா. என்ன ப்ராப்ளம்?” விடயத்தை அறிய முயன்றான் அவன்.

 

“ஓஹ்ஹோ இங்கே இத்தனை பிரச்சினையை வெச்சுக்கிட்டு நீ ஜாலியா ஊர் சுத்துறியா?” அவன் குரலில் இருந்த கோபமும் நக்கலும் இதயத்தைத் தாக்க அவனை நோக்கினான் மித்ரன்.

 

“விஷு! நான் என்னடா பண்ணுனேன்?”

 

“டாக்குமன்ட்டை ரெடி பண்ணித் தர சொல்லி எத்தனை நாள் கழிச்சு நீ தந்த. நேரத்துடன் தந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. உன்னோட கேர்லெஸ்ஸால இப்படி நிற்கிறேன்” நிதானத்தை முற்று முழுதாக இழந்திருந்தான் விஷ்வா.

 

“நீ… நீ இப்படி எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா மாப்ள?” தழுதழுத்த குரலில் கேட்டான் நண்பன்.

 

“எஸ்! தெரிஞ்சு தான் பேசுறேன் மித்ரன்” என்றிட, “டேய்ய்” தானும் பொறுமை இழந்து அவனது சர்ட் காலரைப் பற்றினான்.

 

“என்னடா சொன்ன மித்ரனா? அப்படிக் கூப்பிடும் அளவுக்கு நான் என்னடா பண்ணேன்? எதுக்கு நீ கோபமா இருக்கேனு கூட எனக்கு தெரியாது” மெதுவாகத் தான் பேசினான் விஷுவுக்கு மட்டும் கேட்கும்படியாக.

 

“முதல்ல கையை எடுடா எல்லாரும் பார்க்குறாங்க” தானும் அடிக்குரலில் சீறினான் விஷ்வா.

 

இவர்களது சண்டையைக் கண்டு மற்றவர்களுக்கு மாரடைப்பு வராத குறை தான். ஏனென்றால் இவர்கள் இப்படியா இருப்பார்கள்? ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பவர்களாயிற்றே இவர்கள்.

 

“நீயும் இத்தனை பேர் முன்னாடி தான் என்னை ஹேர்ட் பண்ணி பேசின விஷு” இன்னும் அவன் சர்ட்டில் இருந்து கையை எடுக்கவில்லை.

 

“எடுடா கையை. இங்கே நான் எம்.டி. தப்பு யார் மேல இருந்தாலும் அதைச் சுட்டிக் காட்ட வேண்டியது என்னோட வேலை” கோபத்துடன் கத்தினான் விஷ்வா.

 

மித்ரனுக்கோ அவன் யாரோ போல் பேசுவது வலிக்கத் தான் செய்தது. ஆனால் மற்றவர் முன் காட்சிப் பொருளாகவும் அவன் விரும்பவில்லை.

 

“உள்ளே வா” அவன் கையைப் பற்றி தரதரெவென இழுத்துக் கொண்டு கேபினை வந்தடைந்தான் மித்து.

 

“எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்த?” கையை பட்டென விடுவித்துக் கொண்டான் விஷ்வா.

 

“உனக்கு என்னாச்சு டா? ஏன் இந்த மாதிரி நடந்துக்கிற? வேணும்னே என்னை ஹேர்ட் பண்ணுறியா?” அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

 

“உன்னை எதுக்கு நான் ஹேர்ட் பண்ணனும்? அதுவும் வேணும்னே? உண்மையை தானே சொன்னேன். நீ டாக்குமென்டை தர டிலே பண்ணதால தான் இத்தனை ப்ராப்ளம்ஸ்”

 

“இல்லை நீ ஏதோ ப்ளான் பண்ணுற மாதிரி தோணுது. உனக்கு என்னை ஹேர்ட் பண்ண முடியாது. உன்னால என் மேல கோபப்பட முடியாது” உறுதியாகச் சொன்னான் நண்பன்.

 

“ப்ச் மித்து நான் சொல்லுறதைக் கேளு. நான் எதுக்கு ப்ளான் பண்ணனும்? நிஜமாவே இந்த விஷயத்தில் உன் மீது கோபம் வந்தது அதைக் காட்டிட்டேன். அவ்வளவு தான்” அவனுக்குப் புரிய வைக்க எத்தனித்தான்.

 

“என் மேல கோபம் வந்துச்சா? உன் மித்து மேல உனக்கு கோபமா? எப்படிடா உன்னால முடிஞ்சுது?” இயலாமையுடன் அவன்.

 

“என் பேச்சைக் காது கொடுத்துக் கேளு. இதை யார் பண்ணி இருந்தாலும் எனக்குக் கோபம் வந்திருக்கும். அதுவே உன் மேலேயும் வந்தது”

 

“அப்படினா அவங்களும் நானும் ஒன்னா? என்னையும் அப்படியான கண்ணோட்டத்தில் நீ பார்க்கிறாய் தானே?” வருத்தம் குரலில் இழையோடியது.

 

“நீ எதுக்குடா ஓவரா யோசிக்கிற? லீவ் இட் மாப்ள” அவன் தோள் தொட்டான்.

 

“வேண்டாம் நீ எதுவும் சொல்லாத. சத்தியமா என்னால இதை ஏத்துக்க முடியல டா. அப்படியே கோபம் இருந்தாலும் அதை அத்தனை பேர் முன்னாடி காட்டி இருந்திருக்க வேணாம். என்னைத் தனியா கூட்டி வந்து சொல்லிருக்கலாம்” திரும்பி நின்று தலை கோதினான் மித்து.

 

“நான் உன் விஷு டா. என்னை ம…” என்று கேட்க வர, “கேட்காத. மன்னிப்பு கேட்காத” கை நீட்டி தடுத்து விருட்டென வெளியேறினான் தோழன்.

 

“போடா போ. இந்த வெட்டிக் கோபம் எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கிறேன்” முறுக்கிக் கொண்டு நின்றான் விஷ்வஜித்.

 

பைக்கை அசுர வேகத்தில் செலுத்திய மித்ரனால் விஷ்வாவின் வார்த்தைகளை நினைக்க நினைக்க உள்ளுக்குள் கனன்றது. ஏன் இப்படிப் பேசினான்? அவன் நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன? யோசனைகள் அவனுள் குவிந்தன.

 

நேரத்துடன் வீட்டிற்கு வந்த மித்ரனைக் கண்டு, “என்னடா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?” எனக் கேட்டாள் அக்ஷரா.

 

“இல்லை சும்மா தான்” தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான் அவன்.

 

தோளைக் குலுக்கிக் கொண்டு சமயலறைக்குள் நுழைந்தவள் காஃபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.

 

அவனுக்கும் அது தேவையாக இருக்க அமைதியாக வாங்கிப் பருகினான். அவன் ஏதோ கவலையில் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அதைக் கேட்க நினைக்கவில்லை.

 

“யாராவது கால் பண்ணாங்களா உனக்கு?” என்று அவன் கேட்க, “யாராவதுன்னா யாரு?” பதிலுக்குக் கேட்டாள் பெண்.

 

அப்போது அவளது அலைபேசி அலற பேசி விட்டு வந்தவளிடம், “என்ன சொல்லுறான் உன் அண்ணன்?” என்று வினவினான்.

 

“என் அண்ணனா? விஷுவையா சொல்லுற?” புரியாமல் பார்த்தாள் அவள்.

 

“பின்ன? எனக்குத் தெரியாமல் உனக்கு வேறு யாராவது அண்ணன் இருக்கானா?”

 

“இல்லை. அவன் கால் பண்ணி உன் புருஷன் நிற்கிறானா என்று கேட்கிறான். நீ என்னனா என் அண்ணன்னு சொல்லுற. என்ன தான் நடக்குது?”

 

“அதை அவன் கிட்ட கேளு” சிலுப்பிக் கொண்டான் அவன்.

 

“ஹேய் லூசுப் பயலே! ரெண்டு பேரும் என்னை வெச்சு விளையாடுறீங்களா? சண்டை போடுற மாதிரி நடிச்சு என்னை சுத்தல்ல விடப் பார்க்காதீங்க. நான் உங்க ட்ராமாவை நம்ப மாட்டேன்” என்று முறைப்பை அள்ளி வீசினாள் அக்ஷு.

 

“நான் எதுக்குடி ட்ராமா பண்ணனும்? நிஜமாவே அவன் மேல கோபமா இருக்கேன்” இதற்கு மேலும் மறைக்க இயலாமல் அனைத்தையும் சொன்னான்.

 

திகைத்துப் போய் நிற்கலானாள் மனைவி. நண்பர்களுக்குள் சண்டையா?

 

“அண்ணா உன்னைத் திட்டினானா அத்தனை பேர் முன்னாடி? அவன் அப்படி பண்ணுறவன் கிடையாதே. உன்னை எங்க கிட்டேயே விட்டுக் கொடுக்க மாட்டான். அப்படி இருக்கும் போது ஏன் இப்படி?” தலையில் கை வைத்தாள் அவள்.

 

“உனக்கே இப்படினா எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஜாலியா ஊர் சுத்திட்டு வரியானு கேட்டுட்டான். அவனுக்காக ஸ்பெஷலா ஃபுட் ஆர்டர் பண்ணி அதை எடுக்க தான் ரெஸ்டாரன்ட் போனேன். ஆனால் இப்படி சொல்லிட்டான்” இதயத்தில் பெரும் வேதனை பெருகியது.

 

“சரி விடு டா! அவன் தெரிஞ்சே இப்படி பண்ணி இருக்க மாட்டான். ஏதாவது டென்ஷன்ல இருந்திருப்பான். ஃபீல் பண்ணாத” அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள் அக்ஷரா.

 

“ஐ கான்ட் அம்முலு! அவன் என்னை விட்டுப் போயிருவானோனு பயமா இருக்கு” அச்சமும் முகிழ்த்தது அவனிலே.

 

“ச்சீ வாயைக் கழுவு! இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படிலாம் நினைக்காத. எதுவும் ஆகாது. அவன் உன் விஷு! உன்னை ஹேர்ட் பண்ணுனது புரிஞ்ச உடனே உன்னைத் தேடி வருவான்” தன்னால் முடிந்தளவு ஆறுதல் கூறி அவனைத் தேற்றினாள் அக்ஷரா.

 

…………………….

இரவு பதினொரு மணியைத் தாண்டியும் வீடு வராத விஷ்வாவின் செயலில் சோர்ந்து போய் அவனுக்காக காத்திருந்தாள் வைஷ்ணவி.

 

அக்ஷரா அவளுக்கு அழைத்து ஆபிஸில் நடந்த விடயத்தைச் சொல்லி, விஷ்வாவிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்றும் சொல்லி இருந்தாள்.

 

அவளுக்கு மித்ரனை நினைக்க பாவமாக இருந்தது. விஷ்வாவுக்கு மித்ரன் மேல் எப்படி கோபம் வந்தது என்பது புரியாத புதிராகவே இருந்தது.

 

சிறிது நேரத்தில் வந்தவன் எதுவும் பேசாமல் அறையினுள் நுழைந்து ப்ரெஷ் ஆகி விட்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.

 

அவனைத் தேடிச் சென்றவளோ, அவன் புகைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “விஷு இது என்ன பழக்கம்?” என்று கேட்டாள்.

 

“என்னை எதுவும் கேட்காத நவி. ப்ளீஸ் போய் தூங்கு” அவளை அனுப்பி விட முயன்றான்.

 

“துங்குறதா இருந்தால் எப்போவோ தூங்கி இருப்பேன். உங்களுக்காக இவ்ளோ நேரம் காத்துட்டு இருந்தேன். சாப்பிட்டீங்களா?”

 

“ப்ச் சாப்பாடு ஒன்னு தான் குறைச்சல். உனக்கு பசிக்குதுன்னா போய் சாப்பிடு” என சற்று கடுமையாகச் சொல்லவும் மௌனமாகச் சென்று விட்டாள்.

 

புது ப்ராஜெக்ட்காக ஐம்பது லட்சம் வழங்கியதற்கு அத்தாட்சியாக அவன் கையொப்பம் இட்ட டாக்குமென்ட் காணாமல் போய் இருந்தது. அவன் வங்கியில் இட்ட பணமும் இல்லை. ரிசிப்டும் அதன் பிரதிகளும் கூட அந்த டாக்குமென்டோடு தான் இருந்தன.

 

இன்னும் மூன்று நாட்கள் அந்த டாக்குமென்டைச் சமர்ப்பிக்க கெடு கொடுக்கப்பட்டிருந்தது. அது மட்டும் கிடைக்கா விட்டால் ஐம்பது லட்சம் மீண்டும் செலுத்த வேண்டும்.

 

தலையில் இடி விழுந்தாற் போல் இருந்தது விஷ்வாவுக்கு. இந்த நேரத்தில் மித்ரன் தன்னைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்கிறான் என்று அவனது கோபம் பல மடங்கு அதிகரித்தது.

 

தனது இக்கட்டான நிலையை நண்பனுக்குத் தெரிவிக்கவில்லை என்பதும், தனது வார்த்தைகளே அவனை விலகிச் செல்ல வைத்தன என்பதையும் அவன் உணரவில்லை.

 

கையில் உணவுத் தட்டுடன் வந்த வைஷ்ணவியைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

“என்ன பார்வை? நீங்க வேணாம்னு சொன்னீங்கள்ள. உங்களுக்கு இல்லை எனக்காக கொண்டு வந்தேன்” என்று கூறி அவனருகே அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

 

காலையில் சாப்பிட்டதற்கு பிறகு எதுவும் சாப்பிடவில்லை. அவள் சாப்பிடுவதைப் பார்க்கும் போது பசி வந்தது.

 

வேறு வழி இல்லை என்று தட்டை நோக்கி கையை நீட்ட சட்டென அதை இழுத்துக் கொண்டாள் அவள்.

 

“ஏன்டி? கொலைப் பசியா இருக்கு” பாவமாகப் பார்த்தான் அவன்.

 

“வெட்டி பந்தா மட்டும் இருக்கு” புன்னகையுடன் ஊட்டி விட்டாள் நவி.

 

“பகல் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. எதுக்காக இப்படி சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்குறீங்க?” அவனை பரிவுடன் பார்த்தாள்.

 

“கேள்வி கேட்காத. பதில் சொல்லுற மூட் இல்லை” அவள் தோளில் சாய்ந்தான் காளை.

 

“ஆமா உங்களுக்கு எப்போ மூட் வரும்னு பார்த்து நான் கேள்வி கேட்கனுமா? போங்கப்பா”

 

“அது என்னடி மரியாதையா பேசுற?” 

 

“தெரியலையே! அப்படி பேச பிடிச்சிருக்கு. அதுக்காக எப்போதும் என்னங்க நொன்னங்கனு பேசிட்டு இருக்க மாட்டேன். கோபம் வந்தா மரியாதை பறந்துரும்”

 

“உனக்கு கோபம் எல்லாம் வருமா?” அவள் முகத்தை அண்ணாந்து நோக்கினான்.

 

“ஏன் கோபம் உங்களுக்கு மட்டும் உரித்தான சொத்து என்று எழுதி இருக்கா? எனக்கும் கோபம் வரும்” வெடுக்கெனச் சொன்னாள்.

 

“ஆமாமா! ஒரு தடவை என் மேல கோபப்பட்டு நல்ல வார்த்தைகள் கொஞ்சம் சொன்ன. இப்போ தான் ஞாபகம் வருது”

 

“அது அப்போ! இப்போ கோபம் வந்தாலும் இந்த மாயக்காரன் முன்னாடி அது மாயமா மறைஞ்சு போயிடுது” அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டாள்.

 

“ஹனி….!!” தேனினும் இனிமையாய் குழைந்து ஒலித்தது அந்த அழைப்பு.

 

“ஹ்ம்ம் சொல்லுங்க ஜித்து”

 

“எவ்ளோ கோபமா டென்ஷனா இருந்தேன் தெரியுமா? ஆனால் உன் அருகாமையில் இருக்கும் போது அதெல்லாம் என்னை விட்டுத் தூரமா போயிருச்சு”

 

“உங்களுக்கு கோபம் வந்தால் ஒன்னையும் யோசிக்க மாட்டீங்களா விஷ்வா?” 

 

“ம்ம் உண்மை தான். எனக்கு கோபம் வந்தால் கண்மண் எதுவும் தெரியாது. அதைக் கட்டுப்படுத்திக்க நினைக்கிறேன். ஆனால் முடியல டி” மித்ரனைப் பற்றி நினைத்துச் சொன்னான்.

 

“அது தப்பு இல்லையா? நியாயமான காரணங்களுக்காக கோபம் வரலாம் தப்பு இல்லை. ஆனால் நம்மளோட அதீத கோபம் நம்மளை நேசிக்கிறவங்களை பாதிக்காமல் பார்த்துக்கனும் இல்லையா?” அவன் தலையை வருடியவாறு உரைத்தாள் காரிகை.

 

“ஆமாம்” என்றவனுக்கோ நண்பனைக் காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது.

 

அவனுக்கு அழைத்தான். அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அழைத்தான். அவனும் துண்டித்துக் கொண்டே இருந்தான். இவனுக்கோ பொறுமை எல்லை மீறியது.

 

“என்னாச்சுங்க?” தன்னவனின் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு புரியாமல் கேட்டாள்.

 

“அவன் வேணும்னே பண்ணுறான். பேசினா பேச முடியாதா அவனால? ஓவரா போறான்” அவன் கைமுஷ்டி இறுகியது.

 

“அவன்னா யார்?” தெரிந்தும் தெரியாதது போல் வினவினாள் வைஷ்ணவி.

 

“வேற யாரு? அவன் தான் என் ப்ரெண்டுனு சொல்லுவானே மித்ரன். ராஸ்கல் என் கையில் சிக்கட்டும் அவனுக்கு இருக்கு” பல்லைக் கடித்தான் அவன்.

 

“அண்ணா என்ன பண்ணுனார்? அவர் பாவம் விஷு”

 

“நீ என்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்க? அவனையே பாவம் பார்த்துட்டு இரு” விடுவிடுவென கீழே சென்று விட்டான் விஷ்வா.

 

இவளுக்கோ அய்யோ என்று இருந்தது. இருவரும் வீணாக முரண்டு பிடிப்பதை உணர்ந்து கொண்டாள்.

 

உடனே அக்ஷராவுக்கு அழைக்க, “அங்கே என்ன நிலவரம்?” எடுத்த எடுப்பிலே கேட்டாள் அவள்.

 

“அண்ணா காலை ஆன்ஸ்வர் பண்ணலைனு கோபமா கத்திட்டு போயிட்டார் அண்ணி” என்றாள் வைஷு.

 

“இங்கே எதுக்குடி அவன் எனக்கு கால் பண்ணுறான் அப்படினு என் கிட்ட கேட்டு கேட்டு இருக்கான். இதுங்களுக்கு நடுவுல நாம என்னடி பண்ணுறது?” சலித்துக் கொண்டாள் அக்ஷரா.

 

“ஏதாச்சும் பண்ணியே ஆகனும் அக்ஷு இல்லனா சரிப்பட்டு வராது. ரெண்டு பேரையும் ஒரே இடத்திற்கு கூட்டிட்டு வந்தால் சரியாகும் என்று தோணுது” என்று யோசனை சொன்னாள்.

 

“எஸ் இது நல்ல ஐடியா. நாளைக்கு ஈவ்னிங் பீச் போகலாம். நீ விஷுவைக் கூட்டிட்டு வா. நான் உன் அண்ணனை இழுத்துட்டு வரேன்” என்கவும், “ஓகே டன்” என்றாள் நவி.

 

“லவ்வர்ஸை சேர்த்து வைக்கிற மாதிரி இருக்கு நம்ம நிலமை. நீ சாதாரணமாக நெனச்சுடாத வைஷு. இதுங்க ரொம்ப மோசம்”

 

“இதற்கு முன்னாடி இப்படி எதுவும் சண்டை வந்திருக்கா?” என்று கேட்டாள்.

 

“இல்லை. எப்போவும் என்னைத் தான் சண்டைக்கு இழுப்பானுங்க. அவனுங்களுக்குள்ளே எந்த சண்டையும் வந்ததில்லை. ஆச்சரியமான நண்பர்கள் இவங்க” என்றவள், “ஆனால் ஏன் இப்போ இப்படி பண்ணுறாங்கனு தெரியலை. யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போகலாமே” என்றாள் சோகமாக.

 

“விட்டுக் கொடுப்பதுன்னு வந்தா யார் விட்டுக் கொடுப்பதுன்னு சண்டை வருமளவுக்கு இருப்பாங்க. இப்போ ரெண்டு பேரும் விட்டுக் கொடுக்க மாட்றாங்களே!” நண்பர்கள் பிரிந்து இருப்பது இவர்களுக்கு பெருத்த துன்பத்தைக் கொடுத்தது.

 

“சரி இப்போ நாம ஃபீல் பண்ணுறோம். ரெண்டு தோஸ்தும் சேர்ந்துட்டாங்கனு வையேன் ஏன்டா ஃபீல் பண்ணோம்னு நம்மளை நினைக்க வெச்சிருவாங்க. அப்படிக்கு அடுத்தவனைக் கலாய்க்கிறதில் பரம சந்தோஷம்” மெலிதாகச் சிரித்தாள் அக்ஷரா.

 

“அதுவும் கரெக்டு. சரி அப்போ நாளைக்கு மீட் பண்ணலாம். விஷ்வா நாம இதற்குத் தான் போறோம்னு கண்டுபிடிச்சிட்டா வர மாட்டாரே”

 

“அந்தளவுக்கு அறிவாளி இல்லை அவன். நீ எதுவும் உளறிக் கொட்டாமல் கூட்டிட்டு வந்துரு”

 

“சரி ட்ரை பண்ணுறேன். எப்படியோ சேர்த்துட்டா போதும்” என அழைப்பைத் துண்டித்தாள் வைஷு.

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!